Home Avani Sundari Avani Sundari Ch1 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch1 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

62
0
Avani Sundari Ch1 Avani Sundari Sandilyan, Avani Sundari Online Free, Avani Sundari PDF, Download Avani Sundari novel, Avani Sundari book, Avani Sundari free, Avani Sundari,Avani Sundari story in tamil,Avani Sundari story,Avani Sundari novel in tamil,Avani Sundari novel,Avani Sundari book,Avani Sundari book review,அவனி சுந்தரி,அவனி சுந்தரி கதை,Avani Sundari tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari full story,Avani Sundari novel full story,Avani Sundari audiobook,Avani Sundari audio book,Avani Sundari full audiobook,Avani Sundari full audio book,
Avani Sundari Ch1 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch1 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

அவனி சுந்தரி – சாண்டில்யன்

அத்தியாயம் – 1 திறந்த கதவில் தெரிந்த ஓவியம்

Avani Sundari Ch1 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

விலங்கு பகையல்லாது கலங்கு பகையறியாத” பூம்புகார் நகரத்தின் அந்தப் பழைய பொற்காலம் பறிபோய்விட்டதை உணர்த்தவே, கீழ்த் திசைக் கடல் குமுறி எழுந்து ஓ வென்று ஊழிக்கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது. அதைப் பட்டினப் பாக்கத்தின் அரச வீதியில் இருந்த தமது மாளிகைக் கூடத்தில் இருந்தே காதில் வாங்கிக் கொண்ட புலவர் கோவூர் கிழாரின் மனதில் இருந்த வேதனையை முகத்தில் காட்டுவதற்கு ஏற்பட்டது. போல், “கொடுங்கான் மாடத்”தில் இருந்த யவனர் சித்திர விளக்கு, நன்றாகச் சுடர்விட்டு எரிந்து கொண்டு இருந்தது. புலவர் பெருமான், சிறிது நேரம் அந்தத் தீபத்தை உற்று நோக்கிவிட்டு, சற்று எட்ட இருந்த சாளரத்தை நோக்கிச் சென்று வெளியே கண்களைச் செலுத்தினார். கடல்கோள் விளைவித்த நாசம் புலவரின் கண்களுக்குத் தெளிவாகவே தெரிந்தபடியால், அவர் மனதின் வேதனை முகத்தில் மட்டும் தெரியாமல் நாசி மூலம் பெருமூச்சாகவும் வெளிவந்தது.

புகாரின் பாதி இடங்களை கடலரசன் விழுங்கிவிட்டபடியால் அதன் முகப்புப்புறப் பெரு மதில்களும் கரையோரப் பரதவர் குடியிருப்புகளும் மற்றப் பெரும் கட்டிடங்களும் பாதி இடிந்தும் இடியாமலும் விகாரக் காட்சி அளித்தன. “கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே” என்ற விதிக்கு இணங்க. தங்கள் கம்பீரத்தை மட்டும் தளர்த்தாமல், ஒரு காலத்தில் தாங்கள் அடைந்து இருந்த பெருமையை அவை வெளிப்படுத்திக் கொண்டிருந்ததைக் கண்ட புலவர், அந்த நிலையிலும் அம்மாநகரின் கடற்புறமும் நகர்ப்புறமும் சிறிது பயங்கரத்தையே அளித்ததைக் கவனித்தார்,

இந்த நொந்த நிலையில் அக்கூடத்தின் கதவு திறக்கப்பட்டதையோ, அதன் மூலம் நுழைந்த ஒரு வாலிபன். “புலவர் பெரு மானே. புலவர் பெருமானே” என்று இரு முறை அழைத்ததையோ அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சாளரத்துக்கு வெளிப்புறத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

உள்ளே வந்த இளைஞன் மூன்றாம் முறை புலவர் பெருமாளை அழைக்காமல் அவரைப் பார்த்தபடியே நின்றான், பல விநாடிகள். அவன் நின்ற நிலையிலேயே அரச தோரணை இருந்தது. அவன் விசாலமான அழகிய முகத்தை சற்றே பக்கங்களில் மறைத்துத் தொங்கிய கருமையான தலைக்குழல் பகுதிகள் அந்த முகத்துக்கு ஒரு கம்பீரத்தையும் அளித்தன. இரண்டொரு சமயங்களில் அந்தக் குழல்கள் காற்றில் விலகியதால், காதுகளில் துலங்கிய மகர வளையங்கள் இரண்டும் அவன் முகத்தைத் திருப்பிய சமயத்தில் அசைந்த விதத்தில் கூட ஒரு கண்ணியம் தெரிந்தது. விசாலமான நெற்றியில் அவன் வாள் போல் தீட்டியிருந்த திலகமும், ஈட்டிக் கண்களும் ஈட்டிகளால் உடலில் ஏற்பட்டிருந்த சில தழும்புகளும் அவன் வீரத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன. அவற்றின் குரு ரத்தைத் தணிக்கவோ என்னவோ, அவன் அரும்பு மீசையின் கீழேயிருந்த அழகிய உதடுகளில் ஒரு கம்பீரப் புன்முறுவல் சதா தவழ்ந்து கொண்டிருந்தது.

புலவரை மூன்றாவது முறை அவன் கூப்பிடாவிட்டாலும் கூடத்தின் ஒரு மூலைக்கு. அவன் நடந்து சென்ற தோரணையிலும் கால்கள் பரவிய உறுதியிலும் ஒரு தீர்மானமும் திடமும் இருந்தன. பெரியவரை, அவரது சிந்தனையில் இருந்து இழுக்கக் கூடாது என்ற காரணத்தால் அந்த வாலிபன் காலரவம் கேட்காமல் பூனை போல் நடந்து சென்று ஒரு மாடத்தில் இருந்த ஓலைச் சுவடியையும், விளக்கையும் எடுத்து இன்னொரு மாடத்தில் இருந்த இருக்கையில் வைத்தான். புலவர் உட்காருவதற்கு வேண்டிய புலித்தோல் ஒன்றையும் அவரது இருக்கையில் விரித்துவிட்டு, அந்த ஆசனத்துக்கு எதிரில் கையை மார்பில் கட்டிக் கொண்டு மவுனமாக நின்றான்.

தீபம் இடம் மாறியதால், திடீரென்று தமது பக்கத்தில் இருந்த ஒளி மறைந்த காரணத்தால் புலவர் கோவூர்கிழார் சட்டென்று திரும்பினார். கூடத்தின் நடுவில் நின்று கொண்டு இருந்த இளைஞனைப் பார்த்துத் திகைத்து, “நீ வந்து எத்தனை நேரமா கிறது?” என்று வினவினார், கவலை ஒலித்த குரலில்.

இளைஞன் இதழ்களில் புன்முறுவலை நன்றாக விரியவிட்டான். ஒரு விநாடி. பிறகு பதில் சொன்னான், “அதிக நேரமாகவில்லை” என்று.

மேற்கொண்டு புலவர் கேள்வி ஏதும் கேட்கவில்லை; ஆசனத்தில் இருந்த ஓலைச்சுவடியையும் பார்த்து விளக்கையும் நோக்கினார். அவர் நோக்கு பிறகு இளைஞனின் இடையிலும் நிலைத்தது. அதில் வழக்கமாக இருந்த வாள் இல்லை. அதற்குப் பதில் நீண்ட எழுத்தாணி ஒன்று விலை உயர்ந்த கற்கள் பதித்த பிடியுடன் காணப்பட்டது. அதைக் கண்ட புலவர், நகைத்தார், பெரிதாக.

இளைஞன் புலவரை நோக்கித் தலை தாழ்த்தி வணங்கினான் ஒரு முறை! பிறகு கேட்டான் “ஆசிரியர் நகைக்கும் காரணம் புரியவில்லையே?” என்று.

“வாளைக் காணோம்” என்றார் புலவர்.

“ஆம்.”

“பதிலுக்கு எழுத்தாணி இருக்கிறது.”

“ஆம்!’’

“அது இருக்கும் இடத்தில் இது இருக்கக் காரணம்?”

“அதைவிட வலிமை வாய்ந்தது; அது செய்யும் தொழிலை ‘நிரந்தரமாக்குவது.”

ஆசிரியர் தமது சீடனை உற்று நோக்கிவிட்டுச் சொன்னார்: “நலங்கிள்ளி! இப்பொழுது சோழநாட்டுக்குத் தேவை புலலர் கள் அல்ல; வீரர்கள்”.

நலங்கிள்ளியின் முகத்திலும் புன்முறுவலின் சாயை மறைந்து சற்றுத் துன்பரேகை படர்ந்தது. “புலவர் பெருமானே! வாள் சாதிப்பது அதிகமல்ல. அதை நீங்கள் இதுவரை நோக்கிக் கொண்டிருந்த நாற்புறமும் நிரூபித்திருக்கிறது. புகாரின் முகப்புப் பகுதி புறக்கண்களில் இருந்து மறைந்துவிட்டது. ஆனால், அகக் கண்களில் இருந்து மறையாத, காலத்தால் அழிக்க முடியாத காட்சிகளைத்தானே நீங்கள் பாடம் சொல்லிக் கொடுக்கிறீர்கள்? அவற்றை எழுதி வைத்த புலவர்கள் சிறந்தவர்கள் அல்லவா!” என்று வினவினான், சோழனான நலங்கிள்ளி.

புலவர் ஆம் என்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்தார். பிறகு சற்று எட்டச் சென்று ஒரு மாடத்தில் இருந்த தமது தலைப்பாகையை அணிந்து கொண்டு கூடத்தின் மத்திக்கு வந்து ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். இளவரசனும் மேற்கொண்டு பேச்சுக் கொடுக்காமல் ஓலைச்சுவடிகளை எடுத்துக் கொண்டு விளக்கின் பக்கத்தில் அடக்கமாக அமர்ந்து, இடைக்கச்சையில் இருந்த எழுத்தாணியையும் உருவிக் கையில் பிடித்துக் கொண்டான்.

புலவர் சற்று நேரம் கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் இறங்கினார். பிறகு கண்களைத் திறந்து எதிரே அடக்கத்துடன் உட்கார்ந்திருந்த சீடனைக் குனிந்து நோக்கி, “இளவரசனே!. நேற்று எதுவரை எழுதியிருக்கிறாய்?” என்று வினவினார்.

“என் மூதாதையர் கரிகாற் பெருவளத்தார் தோள் வலி தீர எதிரிகளை வென்ற கதை வரை எழுதியிருக்கிறேன்” என்றான், நலங்கிள்ளி.

“சரி, மேற்கொண்டு எழுதிக்கொள்” என்ற புலவர் மனப் பாடத்தில் இருந்ததை அலட்சியமாக உதிர்க்கத் தொடங்கினார். “வடவர் வாடக் குடவர் கூம்பத் தென்னவன் திறல்கெட” என்ற பட்டினப்பாலைப் பகுதியை மறுபடியும் சொல்லிவிட்டு, வடநாட்டு அரசர்களையும், சேரமானையும், பாண்டியனையும் கரிகாலன் முறியடித்த வரலாற்றை விளக்கலானார். இப்படி அவர் சுவடியின் உதவியின்றி மனப்பாடத்திலேயே பாடம் சொல்வதைக் கேட்டு நலங்கிள்ளி வியப்பின் வசப்பட்டாலும், எழுதுவதை நிறுத்தாமல் எழுத்தாணியைத் துரிதமாக ஓட்டிக் கொண்டே சென்றான். புலவரும் மடை திறந்தது போல் பட்டினப்பாலைப் பகுதிகளைச் சொல்லிக் கொண்டு சென்றவர், திடீரென ஒரு பகுதியில் நிறுத்திவிட்டு, “நலங்கிள்ளி ஒரு முக்கிய விஷயம் மறந்து விட்டேன்” என்றார்.

இப்படி, திடீரென்று கிழாரின் உரை நின்றதால் எழுத்தாணியும் நின்று விடவே, தனது ஈட்டிக் கண்களை புலவரை நோக்கி உயர்த்திய நலங்கிள்ளி “என்ன விஷயம் ஆசிரியரே?” என்று வினவினான் சிறிது கவலையுடன், ஏதோ முக்கிய காரணம் இல்லாமல் பாடத்தைப் பாதியில் ஆசிரியர் நிறுத்தமாட்டார் என்ற நினைப்பால்.

புலவர் உடனடியாகப் பதில் சொல்லாமல் சிறிது சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு அவராக விஷயத்தைச் சொல்லாமல், “நெடுங்கிள்ளியிடம் இருந்து செய்தி ஏதாவது வந்திருக்கிறதா?” என்று கேட்டார்.

“இல்லை, ஏதும் வரவில்லை” என்றான் நலங்கிள்ளி, எதற்காகப் புலவர் கேட்கிறார் என்பதை உணராமல்.

“எனக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது” என்ற கோவூர் கிழார். தனது மடியில் இருந்த ஓர் ஓலையை எடுத்து நலங்கிள்ளியிடம் கொடுத்தார்.

நலங்கிள்ளி அதைப் பிரித்துப் படித்தான். பிறகு ஏதும் புரியாமல் புலவரை ஏறெடுத்து நோக்கினான்.

“என்ன எழுதியிருக்கிறது அதில்?” என்று வினவினார், புலவர்.

நலங்கிள்ளி ஓலையின் மீது கண்களை ஓட்டி, “நெடுங்கிள்ளியின் அரண்மனைக்கு அவனி சுந்தரி வந்திருக்கிறாள்” என்று சற்று இரைந்தே படித்தான். ஆனால், அவன் முகத்தில் குழப்பமே இருந்தது.

“இன்னும் புரியவில்லையா உனக்கு?” என்று வினவினார் புலவர்.

“புரியவில்லை. யார் இவள் அவனிசுந்தரி?”

“கன்னர நாட்டவள்”

“இருந்தால் என்ன?”

“நிகரற்ற அழகுடையவள்”

அப்படியா!”

“அது மட்டுமல்ல…”

“வேறு என்ன?”

“சோழ நாட்டைப் பிடிக்க வந்த சனியன்”

இதைக் கேட்ட நலங்கிள்ளியின் முகத்தில் வியப்பு மலர்ந்தது.

“சற்று விரிவாகத்தான் சொல்லுங்களேன்” என்று கேட்டான் பணிவுடன் புலவரை நோக்கி.
“பிறகு சொல்கிறேன், எழுது” என்று பணித்த புலவர், பட்டினப்பாலையை மேலும் சொல்ல, இளவரசன் எழுதிக் கொண்டே போனான்.

அந்தச் சமயத்தில் அந்த மாமணிக் கூடத்தின் பக்கக் கதவு லேசாக திறக்கப்பட்ட ஒலி கேட்டு பாடம் சொல்வதை நிறுத் ‘தாமலே கண்களை அந்தப்புறம் திருப்பிய கோவூர் கிழாரின் முகத் தில் மிதமிஞ்சிய திகில் படர்ந்தது.

அவர் கண்களுக்கு எதிரே கதவை ஒரு கையால் பிடித்த வண்ணம் நின்றிருந்தாள் ஓர் அழகி. அவளைக் கண்டதால் அவர் உதடுகள் அடைத்துப் போனாலும், நலங்கிள்ளி மட்டும் தனது முகத்தை உயர்த்தவில்லை. புலவர் வாயில் இருந்து வார்த்தைகள் ஏதும் சில விநாடிகள் வராது போகவே “புலவர் பெருமானே! ” என்று அழைத்துத் தலையை சற்றே நிமிர்ந்தான். அவர் கண்களை அவன் கண்களும் தொடர்ந்தன. பாதி மட்டும் திறந்த கதவை ஒட்டி நின்ற அழகிய ஓவியம் அவனைத் திக்பிரமையடையச் செய்தது. “இது யார் புலவரே?” என்று வினவவும் செய்தான் பிரமையின் விளைவாக.

வெறுப்புடனும் பயத்துடன் உதிர்ந்தன புலவர் வாயில் இருந்து சொற்கள். “இவள் தான் அவனிசுந்தரி”.

Previous articleIlaya Rani Ch12 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in
Next articleAvani Sundari Ch2 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here