Home Avani Sundari Avani Sundari Ch11 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch11 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

76
0
Avani Sundari Ch11 Avani Sundari Sandilyan, Avani Sundari Online Free, Avani Sundari PDF, Download Avani Sundari novel, Avani Sundari book, Avani Sundari free, Avani Sundari,Avani Sundari story in tamil,Avani Sundari story,Avani Sundari novel in tamil,Avani Sundari novel,Avani Sundari book,Avani Sundari book review,அவனி சுந்தரி,அவனி சுந்தரி கதை,Avani Sundari tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari full story,Avani Sundari novel full story,Avani Sundari audiobook,Avani Sundari audio book,Avani Sundari full audiobook,Avani Sundari full audio book,
Avani Sundari Ch11 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch11 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

அவனி சுந்தரி – சாண்டில்யன்

அத்தியாயம் – 11 நெடுங்கிள்ளியின் பரிசு

Avani Sundari Ch11 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

பல எண்ணங்களுடன் பாவை அவனி சுந்தரியின் அறைக்கு வந்த புகாரின் புரவலன், பஞ்சணை வெறும் பஞ்சணையாகவே இருப்பதைக் கண்டதும், பல விநாடிகள் பிரமித்து நின்ற நிலையில் ஸ்தம்பித்து நின்றுவிட்டான். புலவரின் கட்டாயத் திருமணத்துக்குத் தான் ஒப்புக் கொள்ளப் போவதில்லையென்றும், அவள் சொந்த நாடு திரும்ப உத்தேசித்ததால் அன்றிரவே அவளை நகரை விட்டு வெளியே அனுப்ப ஏற்பாடு செய்யச் சித்தமாயிருப் பதாகவும் கூறவே, நலங்கிள்ளி நடுநிசியில் அங்கு வந்தானாகையால், தான் ஏதும் செய்ய வேண்டாத நிலை அங்கு உருவாயிருப்பதைப் பார்த்ததும் பிரமித்துப் போனான் என்றால், அதில் விந்தை என்ன இருக்கிறது?. அப்படிப் பிரமிப்பில் சில விநாடிகள் நின்ற அவன் நெஞ்சில் சிறிது ஏமாற்றமும்கூட உதயமாயிருந்தது. அவளை இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்றும், இடங் கொடுத்தால் அவளை ஸ்பரிசிக்க வேண்டும் என்றும், உள்ளூர அவன் நினைத்து அங்கு வந்ததால், அந்த உள் எண்ணத்திலும் மண் விழவே எது செய்வதென்று புரியாமல் திணறினான் நீண்ட நேரம்.

பிறகு வாயிலில் இருக்கும் காவலர் தனக்கு சாதாரணமாக வழிவிட்டதில் இருந்து, அவர்களுக்கும் அவள் மறைந்த விஷயம் தெரியாதென்பதை ஊகித்துக் கொண்ட நலங்கிள்ளி, அவள் எப்படித்தான் தப்பியிருப்பாள் என்பதை அறிய, அறையைச் சுற்றும் முற்றும் நோக்கினான். அறையின் ஒரு கோடியில் இருந்த பெரிய சாளரம் மொத்தமாகப் பெயர்க்கப்பட்டு தரையில் கிடத்தப்பட்டிருந்தது. அதைக் கண்டதும் அது முன்பு இருந்த இடத்தை அணுகி அதன் மீது காலை வைத்து எட்டி வெளியே நோக்கிய நலங்கிள்ளி, “அப்படியா விஷயம்?” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, அறையை விட்டு வெகு வேகமாக நடந்து. அரண்மனை வாசலுக்கு வந்து, அதைச் சுற்றி அந்த அறையின் நந்தவனத்தின் பகுதிக்கு வந்தான். பெயர்க்கப்பட்ட சாளரத்தின் இடம் இரண்டு பேர் நன்றாக நுழையக் கூடிய நிலையில் இருந்ததையும், சாளரத்துக்கு நேர் கீழே இரண்டு பெரிய கருங்கற்கள் ஒன்றின்மேல் ஒன்ருக அடுக்கப்பட்டிருந்ததையும் கண்டதும், அவனி சுந்தரி தப்பிய விவரம் அவனுக்குப் புரிந்துவிட்டாலும், அதைப் பற்றி விசாரித்தறிய மீண்டும் அறைவாசலுக்கு வந்தான்.

அரசன் இப்படி அறைக்குள் ஓடுவதையும், பிறகு வெளியே ஓடுவதையும், மீண்டும் திரும்பி வந்ததையும் பார்த்த காவலர். அந்தப் பரபரப்புக்கு என்ன காரணம் என்பதை அறியாமல் திகைத்து நின்ற சமயத்தில், நலங்கிள்ளி வினவினான், காவலன் ஒருவனை நோக்கி, “இன்றிரவு இங்கு யாராவது வந்தார்களா?” என்று.

“யாரும் வரவில்லை; போகத்தான் செய்தார்கள்” என்றான் காவலன்.

“யார் போனது?” என்று வினவினான் நலங்கிள்ளி சர்வ சாதாரணமான குரலில்.

“அரசகுமாரியின் காவலர்” என்றான் காவலன்.

“எப்பொழுது போனார்?”

“தாங்கள் வருவதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு”

“திரும்பி வரவில்லை?”

“இல்லை “

அதற்கு மேல் அவனை ஏதும் கேட்காமல், நலங்கிள்ளி மீண்டும் அரண்மனை வாயிலை நோக்கிச் சென்றான். அங்கிருந்த காவலனை ஒரு புரவியைக் கொண்டு வரச் சொல்லி, அதன் மீது வெகு வேகமாகத் தாவிப் புலவர் மாளிகைக்கு விரைந்தான்.

புலவர் மாளிகையை அடைந்ததும், புரவியில் இருந்து குதித்து வாயிற் கதவைப் படபடவென்று பலமாகத் தட்டவே. புலவரே கதவைத் திறந்து கையிலொரு விளக்குடன் மன்னனை நோக்கி, “நலங்கிள்ளி! என்ன விசேஷம் உள்ளே வா” என்று உள்ளே அவனை அழைத்துச் சென்று, கூடத்தின் நடுவிலிருந்த மஞ்சத்தில் அமர்ந்து கொண்டார். விளக்கை சற்று எட்ட வைத்துவிட்டு, மன்னனையும் அமரச் சொன்னார்.

“உட்கார நேரமில்லை” என்று பதட்டத்துடன் கூறினான் நலங்கிள்ளி.

“ஏன்? பறவை பறந்துவிட்டதோ?”, என்று வினவினார்
புலவர் புன்னகையுடன்.

“ஆம்”

“பூதலனை தனித்துச் சிறையில் வைத்தாயா?
“இல்லை. அவன் எப்பொழுதும் அவளைவிட்டு அகலுவது இல்லை”

“சரி. அரண்மனைக்கு ஒரு சாளரம் போயிற்று. அரசுக்கு ஒரு ஆயுதம் போயிற்று” என்ற புலவர், பெருமூச்செறிந்தார்.

நலங்கிள்ளியின் விழிகள் வியப்பால் மலர்ந்தன. “என்ன. சாளரத்தைப் பூதலன் பெயர்த்தது உங்களுக்குத் தெரியுமா?” என்று வினவவும் செய்தான், வியப்பு சொற்களிலும் ஒலிக்க..

“ஏன் தெரியாமல் என்ன? பூதலன் அரண்மனையையே பெயர்க்கவல்ல சக்தி வாய்ந்தவன். எத்தனை உரமான கட்டிடமா யிருந்தாலும் ஒரு சாளரத்தை அசைத்து எடுப்பது அவனுக்கு ஒரு பிரமாதமல்ல. சாளரத்தை நிதானமாக அசைத்து அசைத்து, இணைப்புக் கட்டிடத்தை உடையச் செய்து, மெள்ள சாளரத்தைக் கீழே கிடத்திவிட்டாள். பிறகு ஏதும் நடக்காதது போல் அரண்மனையை விட்டு வெளியே வந்து பாறைகளை அடுக்கி அரசகுமாரி சவுகரியமாக, நிதானமாக இறங்க ஏற்பாடு செய்திருக்கிறான். நானாகயிருந்தாலும், இதைத்தான் செய்திருப்பேன். ஆனால் பூதலன் உடல்வலு எனக்கில்லை” என்று, தாம் புஜபலமற்றிருப்பது பெரும் தவறுபோல் கூறினார் புலவர்.

ஒரு சந்தேகம் கேட்டான் நலங்கிள்ளி, “நமது அரண்மனைச் சாளரத்தை அசைத்து உடைக்கும் போது, கட்டிட விரிசல் சத்தம் காவலர் காதுகளில் விழுந்திருக்காதா?” என்று.

“விழுந்திருக்காது. பூதலன் அறைக் கதவைச் சாத்தித் தாளிட்டிருப்பான். அறை மிகப் பெரியது. சாளரம் அறை வாயிற் கதவில் இருந்து நீண்ட தூரத்தில் இருக்கிறது. சாளரத்தைப் பெயர்த்தவன் கூடியவரை சத்தத்தைக் குறைத்துத்தான் வேலையை முடித்திருப்பான்” என்று விளக்கிய புலவர். “நலங்கிள்ளி, இதில் உன் தவறும் கலந்திருக்கிறது” என்றார்.

“என் தவறு?”

“ஆம்!”

“என்ன தவறு புலவரே?”

“நீ பூதலனையும் இளவரசியையும் தனித் தனியாகக் காவலில் வைத்திருக்க வேண்டும். ஆனால்…”

“ஆனால்?”

“உன் அசிரத்தை என்று சொல்லமாட்டேன். அன்பு, அது ”தான் காதல், உன் எச்சரிக்கையை இளக வைத்துவிட்டது.”

இதைக் கூறிய புலவர் நலங்கிள்ளியை உற்று நோக்கினார் நலங்கிள்ளியின் கண்கள் அவர் கண்களைச் சந்திக்கச் சக்தியற்று நிலத்தில் தாழ்ந்துவிட்டன. புலவரே, அவனைச் சமாதானப்படுத்தத் தொடங்கி, “நலங்கிள்ளி! நடந்தது நடந்துவிட்டது. இனி என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்டார்.

“செய்ய என்ன இருக்கிறது புலவரே?” என்று பதிலுக்கு கேட்டான் நலங்கிள்ளி.

“அவளைப் பிடித்து வர வீரர்களை அனுப்பு. அவள் நாட்டை விட்டு, ஏன் இந்த நகர எல்லையை விட்டே அதிக தூரம் போயிருக்க முடியாது” என்றார் புலவர்.

“தங்கள் சித்தம்” என்று சொல்லித் திரும்பப் போன நலங் கிள்ளியை, புலவரின் “நலங்கிள்ளி! ” என்ற எச்சரிக்கைச் சொல் சற்றே நிற்கவும் வைத்தது, தலையைத் திருப்பவும் செய்தது.

“என்ன புலவரே?” என்று வினவினான் நலங்கிள்ளி.

“அவளைப் பிடித்து வர…” என்ற சொல்லைப் பாதியிலேயே வெட்டிய புலவர்,”நீயே போகப் போகிறாய்?” என்று முடித்தார்.

“ஆம்” என்றான் மன்னன்.

“வேண்டாம். மாவளத்தானை அனுப்பு” என்று ஆணையிட்டார் புலவர்.

“நான் போனால் என்ன?” என்று சற்றுக் கடுமையாகவே வினவினான் நலங்கிள்ளி.

“இந்தச் சமயம் புகாரின் மன்னன் தலைநகரை விட்டுக் கிளம்புவதற்கில்லை.”

“ஏன்?”

“ஒன்று நீ நெடுங்கிள்ளியாலோ, அவனி சுந்தரியாலோ சிறைப்படுத்தப்பட்டால், நாட்டின் நிலைமை பரிதாபமாகிவிடும். தவிரப் பதினாறாவது நாள் சடங்கு முடியும் முன்பாக நீ எங்கும் கிளம்புவதற்கு இல்லை” என்று திட்டவட்டமாக அறிவித்தார். புலவர். “அப்படிச் சொல்லும் மன்னவனை மக்களும் வெறுப்பார், கள்” என்று, இன்னொரு காரணத்தையும் சுட்டிச் சொன்னார், கோவூர் கிழார்.

நலங்கிள்ளியின் முகத்தில் ஏமாற்றம் பெரிதும் தெரிந்தது. அவன் மெல்ல வினவினான்: “அவள் எதற்காகச் சிறையில் இருந்து தப்பினாள்?” என்று.

புலவர் இதழ்களில் புன்முறுவல் அரும்பியது. “சிறையை விரும்பவில்லை” என்றார் பதிலுக்கு.

நலங்கிள்ளி பெருமூச்செறிந்தான். “ஆம் புலவரே, சிறையை யார்தான் விரும்புவார்கள்? அதை மட்டுமென்ன, நன்றி கெட்ட செய்கையை யார் விரும்புவார்கள்?” என்றும் கேட்டான் நலங் கிள்ளி.

புலவர் பதில் ஏதும் சொல்ல முடியாமல் தலையை ஆட்டினார். “என் உயிரை அவள் காப்பாற்றினாள். காரணம் எதுவாயிருந்தால் என்ன? உயிரைக் காப்பாற்றியது உண்மை, பதிலுக்கு அவளைக் காவலில் வைத்தோம். இதைவிட நன்றி கெட்ட செய்கை என்ன இருக்கிறது?” என்று வெறுப்புடன் கூறினான் நலங்கிள்ளி, பிறகு வெளியே விடுவிடுவென்று சென்று, புரவி மீது தாவி ஏறி, அரண்மனையை நோக்கிப் புரவியைக் காற்றிலும் கடுக ஏவினான். அரண்மனையை அடைந்ததும், தம்பி மாவளத்தான் அறைக்குச் சென்று. கதவைத் தடதடவென்று தட்டினான். அரைகுறைத் தூக்கத்துடன் கண்ணைத் துடைத்தவண்ணம் வெளியே வந்த தம்பி முழு சுரணை அடையும் முன்பாக, “தம்பி! அவனி சுந்தரி தப்பிவிட்டாள்” என்று கூறினான். பதட்டம் நிரம்பிய குரலில்.

சாட்டையால் அடிக்கப்பட்டவன் போல், அந்தச் சொல் லால் திடீரென உடம்பு கோபத்தால் நடுங்க, நன்றாக விழித்த மாவளத்தான், “என்ன! தப்பிவிட்டாளா?” என்று கேட்டான்.

“ஆம் தம்பி!”

“எப்பொழுது?”

“நள்ளிரவுக்குச் சற்று முன்பு.”

“இப்பொழுது நாழிகை”

“பதினெட்டுக்கு மேலாகிறது”

“இதுவரை நமக்குத் தெரியவில்லையா அவள் தப்பியது?”

“தெரியும். இருந்தாலும் புலவரிடம் தெரிவிக்க நான் போனேன்.

இதைக் கேட்ட மாவளத்தான் கோபத்தால் நகைத்தான். “சிறையிலிருந்தவர் காணவில்லையென்றால் வீரர்களை விட்டுத் தேடுவீர்களா? புலவரைப் போய் யோசனை கேட்பீர்களா? என்று வினவினான் இளையவன், ஏளனத்துடன்.

நலங்கிள்ளி அந்த ஏளனத்தை கவனிக்கவே செய்தான். இருப்பினும் அதைப் பற்றிக் கவலைப்படாமல், தம்பியை நோக்கிச் சொன்னான், “தம்பி! இது தனி மனிதன் விஷயமல்ல. நாடுகளைப் பற்றிய விஷயம். அவனி சுந்தரி அரச மகள். எப்பொழுது நமது நாடு பிளவுபட்டுப் பலவீனப்படும் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கன்னரன் மகள். சாதாரண மனிதர்களைப் பிடிப்பதுபோல் அவளைப் பிடிப்பதும் சிறையில் அடைப்பதும் தவறு. அதைச் செய்தோம், புலவரும் ஒப்புதல் தந்தால், இப்பொழுது அவள் தப்பிவிட்டதால், அதற்கும் என்ன செய்வது என்று அவரை யோசனை கேட்பது முறை.”

இதைக் கேட்ட மாவளத்தான் “சரி. அதற்குப் புலவர் என்ன சொன்னார்?” என்று வினவினான்.

“அவனி சுந்தரியை சிறைப் பிடித்துவர உள்ளை அனுப்பச் சொன்னார்” என்றான் நலங்கிள்ளி.

அதுவரை கோபத்துடன் இருந்த மாவளத்தான் சற்றுத் தளர்ந்தான். அவன் முகத்தில் வெறுப்பு மண்டியது. பெண்களைப் பிடித்து வருவதுதான் வீரனுக்கு அழகா?” என்று வினவவும் செய்தான் வெறுப்புக்கிடையே.

“நானே போயிருப்பேன்…” என்று தொடங்கினாள் நலங் கிள்ளி.

“அப்படிச் செய்திருக்கலாமே? இது இளவரசிக்கும் இஷ்ப மாயிருந்திருக்கும்” மாவளத்தான் சொற்களில் இகழ்ச்சி மண்டிக் கிடந்தது.

அதைக் கவனிக்கவே செய்தான் நலங்கிள்ளி. இருப்பினும் அதைப் பற்றிக் கவலைப்படாமல், “புலவர் ஒப்பவில்லை” என்று மட்டும் கூறினன்.

மாவளத்தான் நீண்ட நேரம் ஏதும் பேசவில்லை. “சரி அண்ணா போய் வருகிறேன்” என்று மட்டும் கூறி, மீண்டும் அறைக்குள் சென்றுவிட்டான்.

அடுத்த இரண்டு நாழிகைக்குள் எல்லாம் நான்கு புரவி வீரர்களுடன் புகாரை விட்டுக் கிளம்பிய மாவளத்தான், புகாரின் எல்லையைக் கடந்ததும், அங்கு பிரிந்த இரண்டு சாலைகளின் பக்கங்களில் இருந்த குடிசைகளுக்கு ஒரு வீரனை அனுப்பி, அரச குமாரியைப் பற்றி விசாரிக்கச் சொன்னான். அவர்களிடமிருந்து அரசகுமாரி உறையூர்ச் சாலையில் செல்லவில்லை என்பதை அறிந்து கொண்டு, சற்றுத் தள்ளியிருந்த ஆவூர்ச் சாலையில் சென்றான், துரிதமாக.

நன்றாக விசாலமாக இருபுறங்களிலும் பெரும் ஆலமரங்களை வரிசையாகக் கொண்ட ஆவூர் சாலை அன்று காலைப் பயணத்துக்கு மிக இன்பமாக இருந்தது. மெள்ள வந்த தென்றலிலும் அவ்வப்பொழுது தோன்றிய கருடேகங்கள் அளித்த குளுமையும் தேகத்துக்கு மிக இன்பமாயிருந்தும், உள்ளே இருந்த கவலையில், அவற்றை அனுபவிக்கச் சக்தியற்றவனானான் மாவளத்தான். இப்படி இயற்கையின் சுகத்தை வெறுத்துப் பயணம் செய்த மாவளத்தான், மறுநாள் மாலை சற்று தூரத்தில் தெரிந்த ஒரு சிற்றூரைக் கவனித்தான். அந்த ஊரில் சென்று விசாரித்தால் விஷயம் தெரியும் என்ற காரணத்தால் அங்குப் புரவியைச் செலுத்தினன். புரவி ஊருக்குள் புகுமுன்பே நடுத்தா வயதுள்ள ஒரு சிவ பக்தர் அவனைச் சந்தித்தார். சற்றுக் கண்ணை உயர்த்தி, “யார் மாவளத் தானா?” என்றும் விசாரித்தார்.
மாவளத்தான் சட்டென்று புரவியை நிறுத்தி, அவரைக் கூர்ந்து நோக்கினான். “தங்களை எங்கோ பார்த்திருக்கிறேன்” என்றான்.

“அதற்குள் மறந்துவிட்டாயா?” என்று வினவினார் அவர்.

அடுத்த விநாடி புரவியில் இருந்து குதித்த மாவளத்தான், அவருடைய அடிகளைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டான். “எங்கள் குருநாதரின் பிரதம சீடர் அல்லவா தாங்கள்? இளந்தத்தர் அல்லவா?” என்றும், பணிவு நிரம்பிய குரலில் கூறினான்.

“ஆமாம் தம்பி! இளந்தத்தன் தான்” என்று கூறிய புலவர் இளந்தத்தன், “ஆமாம், இந்தப் பக்கம் எங்கு வந்தாய்?” என்று வினவினார்.

மாவளத்தான் விஷயத்தை விளக்கினான்.

புலவர் இளந்தத்தன் சிறிது நேரம் சிந்தித்தார். “அப்படி இங்கு யாரும் வரவில்லை. எதற்கும் வீட்டுக்கு வா. உன் புரவியும் வீரர்கள் புரவியும் அலுத்திருக்கின்றன. சற்று இளைப்பாறிப் போகலாம்” என்றார்.

இளவரசன் என்ன அவசரப்பட்டும் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல், அவனையும் வீரர்களையும் வலுக்கட்டாயமாகத் தமது இல்லத்துக்கு அழைத்துச் சென்று, தமது சீடர்களைவிட்டு வீரர்களையும் புரவிகளையும் கவனிக்கச் சொல்லி, மாவளத்தானுக்குத் தாமே நேரில் சவுகரியங்களைக் கவனித்தார். நன்றாக நீராடி, உணவை முடித்துக் கொண்ட மாவளத்தான், சற்று இளைப்பாறியதும் இளந்தத்தனிடம் விடைபெற்றுக் கொண்டு, மீண்டும் வீரர்களுடன் சாலையை நோக்கிச் சென்றான்.

அவன் போவதை வாயிலில் நின்றே பார்த்துக் கொண்டிருந்த இளந்தத்தன், மீண்டும் உள்ளே சென்றதும், அவரது இல்லத்தின் இரண்டாவது கட்டிலிருந்து வெளியே வந்த நலங்கிள்ளி. “புலவரே, இந்தாரும் உமது பணிக்குப் பரிசு” என்று, தனது இடுப்பில் இருந்து ஒரு பொற்கிழியை எடுத்து நீட்டினான். அதைக் கையில் வாங்கித் தூர எறிந்த இளந்தத்தன், “எனது அரசத் துரோகத்துக்குப் பரிசு வேறா?” என்று சீறி, அந்தப் பொற்கிழியை விட்டெறிந்தார் தூரத்தில். அதில் இருந்த பொற்காசுகள் கூடம் எங்கும் சிதறின.

அவர் செய்கையைக் கண்ட நெடுங்கிள்ளி நகைத்தான். இடி இடியென. “இளந்தத்தா! காலம் வரும் உன்னைக் கண்டிக்க” என்று நகைப்புக்கிடையே சீறிவிட்டு, “டேய்! யாரங்கே? அவர்களை இழுத்துவா” என்று உத்தரவிட்டான். அவனது வீரர்களுக்கு இடையில் கைகள் பிணைக்கப்பட்ட அவனி சுந்தரியும், பூதலனும் வந்தார்கள். “உம் புறப்படச் சித்தம் செய்யுங்கள்” என்று உத்தர விட்டான் உறையூர் நெடுங்கிள்ளி.

Previous articleAvani Sundari Ch10 | Avani Sundari Sandilyan | TamilNovel.in
Next articleAvani Sundari Ch12 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here