Home Avani Sundari Avani Sundari Ch17 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch17 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

58
0
Avani Sundari Ch17 Avani Sundari Sandilyan, Avani Sundari Online Free, Avani Sundari PDF, Download Avani Sundari novel, Avani Sundari book, Avani Sundari free, Avani Sundari,Avani Sundari story in tamil,Avani Sundari story,Avani Sundari novel in tamil,Avani Sundari novel,Avani Sundari book,Avani Sundari book review,அவனி சுந்தரி,அவனி சுந்தரி கதை,Avani Sundari tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari full story,Avani Sundari novel full story,Avani Sundari audiobook,Avani Sundari audio book,Avani Sundari full audiobook,Avani Sundari full audio book,
Avani Sundari Ch17 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch17 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

அவனி சுந்தரி – சாண்டில்யன்

அத்தியாயம் – 17 பெண் அரசி

Avani Sundari Ch17 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

ஓலையில் கண்ட பாட்டை இளந்தத்தனை விட்டு இரைந்து படிக்கச் சொல்லிவிட்டு, அப்புலவன் பின்தொடர நெடுங்கிள்ளியின் நீதி மண்டபத்தை விட்டு மிக அலட்சியமாக வெளியேறிய கோவூர் கிழாரை, மன்னனோ மற்றவரோ தடைசெய்யவில்லை. அந்தப் பாட்டு அவர்களை அத்தனை தூரம் அச்சுறுத்தியிருந்தது. அந்தப் பாட்டில் புலவர் இப்படிக் கூறியிருந்தார் நெடுங் கிள்ளியை நோக்கி. .

“மன்னவனே! யானைகள் வெய்துயிர்த்து முழங்குகின்றன. குழந்தைகள் பாலின்றி அலறி அழுகின்றன. மகளிர் வெறுந்தலை முடிக்கின்றனர். வீடுகளில் கேட்கும் அழுகுரல் உன் அரண்மனை வரை கேட்கின்றது. உனக்கு ஈகைக் குணம் இருந்தால் எதிரிக்கு ஊரை விட்டுக் கொடு. வீரமிருந்தால் கதவைத் திறந்து வெளியேறி போர் செய். இரண்டும் செய்யாமல் நீ மறைந்து நடுங்கிக் கிடப்பது வெட்கப்படத்தக்கது.”

இந்தப் பாட்டு வெகு சீக்கிரம் நாடெங்கும் பரவிவிடும் என்றும், இதனால் தன்னைக் கோழை என்று எண்ணி மற்ற மன்னவர்களும் போருக்கு வந்துவிடுவார்கள் என்றும் எண்ணி நெடுங்கிள்ளியும் அஞ்சினான், அவன் அமைச்சரும் படைத்தலைவருங்கூட அஞ்சினர். கோவூர் கிழாரைச் சிறை செய்தாலோ, அவரிடம் மக்களுக்கும் படை வீரருக்கும் மிகுந்த பிரேமையில் பெரும் புரட்சி உள்நாட்டிலும் ஏற்பட்டு விடுமென்று அஞ்சிய நெடுங்கிள்ளி, புலவரும் அவர் சீடரும் சென்றதை பார்த்துக் கொண்டு ஏதும் பேசாமலே உட்கார்ந்திருந்தான், நீண்ட நேரம். பிறகு ஏதோ புரிந்து கொண்டது போல் தலையை அசைத்துவிட்டு, மண்டபத்தில் இருந்து உள்ளே சென்றான்.

நெடுங்கிள்ளியின் அரண்மனையில் இருந்து கிளம்பிய புலவர் கோவூர் கிழார், மிகுந்த துயரத்துடன் மாவளத்தான் பாசறைக்கு வந்து சேர்ந்தார். மாவளத்தான் அவரை ஏதும் கேட்கவில்லை. அவரையும் இளந்தத்தனையும் மாறிமாறிப் பார்க்கவே செய்தான் சில விநாடிகள். அவன் முகத்தில் தொக்கியிருந்த கேள்வியைக் கண்ட புலவரே பதில் கூறினார். “மாவளத்தான்! அநேகமாக நெடுங்கிள்ளி நாளைக்குப் போருக்கு வருவான் அல்லது சரணடைவான். இரண்டுக்கும் தயாராயிரு நான் கொடுத்த ஓலையைப் புகாருக்கு அனுப்பி விடு. உடனடியாக அதை நாட்டில் பரப்ப வேண்டாம்” என்றார்.

மாவளத்தான் புலவரை நோக்கிக் கேட்டான்: “நெடுங் கிள்ளி போருக்கு வரச் சம்மதித்தானா?” என்று.

“வரலாம்” என்றார் புலவர் துயரத்துடன்.

“இல்லையேல்?” மாவளத்தானிடம் இருந்து எழுந்தது இரண்டாவது கேள்வி.

“கோட்டையை உன்னிடம் ஒப்படைக்கலாம். முன்பேதான் சொன்னேனே” என்றார் புலவர்.

“எதனால்?”

“இந்தப் பாட்டை அவன் புறக்கணிக்க முடியாது.” “புறக்கணித்தால்…?”

“மாட்டான்”.

“என்ன அத்தனை நிச்சயமாகச் சொல்கிறீர்கள்?”

“நாங்கள் இருவரும் இங்கு உயிருடன் வந்திருப்பதே அவன் அச்சத்திற்கு அத்தாட்சி” என்று புலவர் சுட்டிக் காட்டினார்.

புலவர் கூறிய காரணம் சரியாயிருந்ததைப் பார்த்த மாவளத்தான், அவர் கூற்றை ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலை அசைத்தான். போருக்கான ஏற்பாடுகளையும் துரிதமாகச் செய்ய தனது இருப்பிடத்தில் இருந்து வெளியே சென்றான். அடுத்த அரை ஜாமத்திற்கு எல்லாம் படைகள் போருக்குச் சித்தமாக நின்றன. ஆனால் காலையில் விளைந்தது போரல்ல. யாரும் எதிர் பார்க்காத பெருவிந்தை! அந்த விந்தையை யாரும் எதிர்பார்க்க வில்லை. அதைப் பற்றி மாவளத்தான் எழுதிய ஓலையைப் புகாரில் இரண்டு நாட்களுக்குப் பிறகு படித்த நலங்கிள்ளிக்குக்கூட அது பரம விசித்திரமாயிருந்தது. சோழ மன்னர் யாரும் அதுவரை செய்யாத செய்கை அது.

புகாரின் தனது ஆஸ்தான அறையில், அந்த ஓலையை ஒரு முறைக்கு இரு முறையாகப் படித்தான் நலங்கிள்ளி. பிறகு அதை உடன் நின்றிருந்த அவனி சுந்தரியிடமும் காட்டினான். அவனி சுந்தரியும் அதைப் படித்து வியப்பு நிரம்பிய விழிகளை மன்னன் மீது நாட்டினாள். “நெடுங்கிள்ளி இரவோடு இரவாகச் சுரங்க வழியாக ஓடிவிட்டாராமே! மறுநாள் கோட்டைக் கதவைத் திறந்து கொண்டு தங்கள் தம்பி நுழைந்தபோது, கோட்டைக்குள் உறையூர் மன்னனோ, அவரது படைத் தலைவரோ, அமைச் சரோ இல்லையாமே?” என்றாள் வியப்புக் குரலிலும் ஒலிக்க.
“ஆம்” என்ற மன்னன் சிந்தனையில் இறங்கினான். –
“அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று அவனி சுந்தரி கேட்டதற்குக்கூட அவன் பதில் சொல்லவில்லை. பல விநாடிகள். பிறகு பதில் சொன்னபோது, வெறும் வெறுப்பு அவன் குரலில் மண்டிக்கிடக்கிறது. “இப்படி ஒரு சோழன் எங்கள் குலத்தில் பிறந்தது கிடையாது. ஆகவே உன் சபதத்தை ‘நிறைவேற்றுகிறேன்” என்றான் நலங்கிள்ளி, அவனி சுந்தரியை நோக்கி .

“என் சபதத்தையா!”

“ஆம். நெடுங்கிள்ளி, கிள்ளிவளவரைக் கொன்ற விதத்தை ‘நீ சொல்லவில்லையா?”

“சொன்னேன்.”

“அவன் தலையைக் கிள்ளிக் கொண்டு வரும்வரை நீ மணக்க முடியாது என்று கூறவில்லையா?”

“கூறினேன்.”

இதைக் கேட்ட நலங்கிள்ளி, எதிரே ஓலை கொண்டுவந்த தூதன் இருந்ததையும் மறந்து, கோபத்தால் அவனி சுந்தரியின் தோளை இறுகப்பிடித்து, “அவன் தலையை நானே கிள்ளிக் கொண்டு வருகிறேன்” என்று சற்று இரைந்தே கூறினான்.
அவனி சுந்தரியின் கண்களில் அச்சம் உதயமாயிற்று. “நீங்களா?” என்று கேட்டாள்.

“ஆம். நானே தான். இந்த மாதிரி ஒரு கோழையை இனி உயிருடன் விட்டு வைப்பது தவறு. என்னால் துரோகத்தைப் பொறுக்க முடியும். ஆனால் வஞ்சகக் கொலையையும், அதைவிட இழிய கோழைத்தனத்தையும் பொறுக்க முடியாதே! ஆகவே நானே போகிறேன் உறையூருக்கு” என்று சீறினான் நலங்கிள்ளி.

“உறையூரை முற்றுகையிடப் போகிறீர்களா?” என்று வினவினாள் அவனி சுந்தரி.

“அப்படியானால் இங்கு புகாரை யார் பாதுகாப்பார்கள்?”

“ஏன் தம்பி மாவளத்தானை அனுப்புகிறேன்.”

“அவர் வரும் வரை.”

“ஒருவரை நியமிக்கிறேன்.

இதைச் சொன்ன நலங்கிள்ளி, எட்ட நின்ற தூதனை நோக்கி, “டேய்! நீ சென்று அமைச்சரை அனுப்பு” என்று உத்தர விட்டான்.

அமைச்சர் வரும் வரை தனது ஆசனத்தில் – உட்கார்ந்து ஆழ்ந்த யோசனையில் இருந்த நலங்கிள்ளி, “அமைச்சர் பெரு மானே! நான் போர் முகக்குச் செல்கிறேன், நெடுங்கிள்ளியைக் கொல்ல. என் பயணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்றான் சர்வ சாதாரணமாக.

திடீரெனப் பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவை நோக்கிய ‘’அமைச்சர், “நேற்றுடன் கிள்ளிவளவர் அந்திமச் சடங்குகள் முடிந்துவிட்டன. நீங்கள் போகலாம். ஆனால்….” என்று இழுத்தார்.

“ஆனால் என்ன?” என்று வினவினான் மன்னன்.

“புகாரில் நீங்களும் தம்பியும் இல்லாமல் போவது… என்று இழுத்தார் அமைச்சர்.

“நான் சென்று தம்பியை அனுப்புகிறேன்.”

“அதுவரை?”

அவரை ஏறெடுத்து நோக்கினான் நலங்கிள்ளி ஒரு விநாடி. பிறகு சொன்னான், “இவள் பார்த்துக் கொள்வாள் தலைநகரை” என்று சொல்லி, அவனி சுந்தரியை நோக்கிக் கையையும் நீட்டினான்.

“இவர்களா! கன்னரத்து இளவரசியா!” என்று குழறினார். அமைச்சர்.

“ஆம்.” திட்டமாக வந்தது நலங்கிள்ளியின் பதில்.

“எதிரி நாட்டவள்” என்று மீண்டும் இழுத்தார் அமைச்சர்.

“இனி இந்நாட்டவர்”

“புரியவில்லை “

“இந்நாட்டு ராணி”

அமைச்சருக்கு, அரசனுக்கும் அவனி சுந்தரிக்கும் உள்ள உறவைப் பற்றி ஏற்கனவே இருந்த வதந்தி தெரிந்தே இருந்த படியால், அவர் மறுத்து ஏதும் பேசவில்லை. ஆனால் அது மக்களுக்குப் பிடிக்காத காரியம் என்பது மட்டும் அருக்குத் தெரிந்திருந்ததால், சற்றே தயங்கினார். இருப்பினும், மன்னன் சொல்லை மீற முடியாமல், ஆஸ்தான அறையில் இருந்து வெளியே சென்றார் ஏற்பாடுகளைச் செய்ய.

அமைச்சரின் தயக்கத்தைக் கவனிக்கவே செய்தான் நலங் கிள்ளி. அவனி சுந்தரிக்கும் தனது ஏற்பாடு இஷ்டமில்லை என்பதும் புரிந்திருந்தது அவனுக்கு. இருப்பினும் அதை எதையும் லட்சியம் செய்யாமல் ஒரே பிடிவாதமாக அவள் கையில் அரசி பலை ஒப்படைத்துவிட்டு, மறுநாள் கிளம்பினான் இரண்டு உபதளபதிகளுடனும், பத்துப் பன்னிரண்டு வீரர்களுடனும். அடுத்த பத்து நாட்கள் அவனிடமிருந்து செய்தி ஏதும் வரவில்லை. காரில், அமைச்சர்கள் உதவி கொண்டு அவனி சுந்தரி தனக்கு மன்னன் இட்ட பணியைத் திறம்பட நிறைவேற்றி வந்தாள்.

பத்து நாட்களுக்குப் பிறகு வந்த தூதன் ஒருவன், “மன்னர் நலங்கிள்ளி தமது படையுடன் உறையூரை ‘முற்றுகையிடச் சென்றுவிட்டார். இளையவர் இரண்டு நாட்களில் இங்கு வருவார்” என்று தெரிவித்தான். இரண்டு நாட்களுக்குப் பிறகு மாவளத்தான் புகார் வந்தான். ஆனால் அரசுப் பொறுப்பை அவன் ஏற்கவில்லை. அதைப் பற்றி அவனி சுந்தரி கேட்டபோது, பதிலும் சரியாகக் கிடைக்கவில்லை.

நலங்கிள்ளியின் ஆஸ்தான அறையிலேயே மாவளத்தானை அவள் சந்தித்தாள். “இளையவர் அரசுப் பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும்” என்று கேட்டாள்.

“அவசியமில்லை” என்றான் மாவளத்தான்.

“பெண் கையில் அரசு இருப்பது முறையல்ல” என்றான் அவனி சுந்தரி.

“எங்கள் நாட்டில் அது தவறாகக் கருதப்படுவதில்லை” என்றான் மாவளத்தான்.

அவள் என்ன மன்றாடியும் அவன் கேட்கவில்லை. “இது என். அண்ணன் இஷ்டம்” என்று மட்டும் திட்டமாகக் கூறிவிட்டான்.

ஆகவே, அரசுச் சுமையை அவனி சுந்தரியே தாங்கி வந்தாள், இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. நலங்கிள்ளியோ புலவரோ திரும்பவில்லை. போர் முனையில் இருந்து கிடைத்த செய்திகள் அவனி சுந்தரியின் இதயத்தில் மகிழ்ச்சியையும் இன்பத்தையும் ஒருங்கே விளைவித்தன.

Previous articleAvani Sundari Ch16 | Avani Sundari Sandilyan | TamilNovel.in
Next articleAvani Sundari Ch18 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here