Home Avani Sundari Avani Sundari Ch18 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch18 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

71
0
Avani Sundari Ch18 Avani Sundari Sandilyan, Avani Sundari Online Free, Avani Sundari PDF, Download Avani Sundari novel, Avani Sundari book, Avani Sundari free, Avani Sundari,Avani Sundari story in tamil,Avani Sundari story,Avani Sundari novel in tamil,Avani Sundari novel,Avani Sundari book,Avani Sundari book review,அவனி சுந்தரி,அவனி சுந்தரி கதை,Avani Sundari tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari full story,Avani Sundari novel full story,Avani Sundari audiobook,Avani Sundari audio book,Avani Sundari full audiobook,Avani Sundari full audio book,
Avani Sundari Ch18 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch18 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

அவனி சுந்தரி – சாண்டில்யன்

அத்தியாயம் – 18 பஞ்சணைப் பிரவேசம்

Avani Sundari Ch18 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

நலங்கிள்ளி மாற்றானுடன் செருச் செய்யச் சென்ற இரண்டு மாதங்களும் இரண்டு ஆண்டுகளைப் போல் தோன்றின கன்னரத்து இளவரசியான அவனி சுந்தரிக்கு. ஆவூரில் இருந்து தப்பி உறையூருக்குச் சென்றுவிட்ட நெடுங்கிள்ளியை வெற்றி கொண்டதும், நலங்கிள்ளி வந்துவிடுவான் என்று அந்த இரண்டு மாதங்களும் கனவுகண்டு கொண்டிருந்தாள் அவன். உறையூரிலும் நெடுங்கிள்ளி போருக்கு வராமல், கோட்டைக்குள் அடைபட்டுக் கிடந்தான் என்பதையும், அவனை வெளியே இழுக்க நலங்கிள்ளி செய்த முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை என்றும் வந்த செய்திகள் அவள் மனச் சுமையை அதிகப்படுத்தின. ஒரு சமயம், புலவர். கோவூர் கிழார் இரண்டு சோழர்களையும் சமாதானப் படுத்துவதற்காகச் செய்த பிரயத்தனமும் பயனற்றுப் போயிற்று என்ற செய்தி அவளைத் திடுக்கிடச் செய்தது. “ஒருவர் தோற்பினும், தோற்பதும் குடியே” என்று புலவர் பாடி, “உங்களில் யார் தோற்றாலும் தோற்பது சோழர் குடிதான்” என்று சுட்டிக் காட்டியும், நெடுங்கிள்ளி போரை நிறுத்தவுமில்லை, கோட்டைக் கதவைத் திறக்கவும் இல்லை என்று கிடைத்த செய்தி, அவள் மனதை உடைத்தது. இந்தப் போர் இரு மன்னரில் ஒருவரை விழுங்கிவிடும் என்ற திட்டமான எண்ணம் அவள் இதயத்தில் உருவாகி, அவளைச் சித்திரவதை செய்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் அவள் புகாரை ஆண்டு வந்தாள். ஆட்சியில் அவள் பெரும் திறமையைக் காட்டியும், இரண்டு விஷயங்கள் அவள் இதயத்தைச் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தன. எதிரி நாட்டு இளவரசியான தான் இன்னொரு நாட்டை ஆள்வது எத்தனை பைத்தியக்காரத்தனம் என்று அவள் நினைத்தாள். தவிர அந்த ஆட்சியை மக்கள் விரும்பமாட்டார்களாததால், அதில் தான் நீடித்திருப்பது அத்தனை உசிதமா என்ற எண்ணமும் அவள் மனதில் ஓங்கி நின்றது. இதை ஒருநாள் மாவளத்தானிடமும் கேட்டுப் பொறுப்பை அவன் மீது தள்ளிவிட நினைத்தாள். அரசாங்க அறையிலேயே அவனை அழைத்து அவனிடம் சொன்னாள்: “தம்பி! நான் அரச பீடத்தில் இருப்பது தகுதியல்ல; நான் பெண்; அதுவும் அயல் நாட்டவள். ஆகவே, பொறுப்பை நீங்கள் ரற்றுக் கொள்ள வேண்டும்” என்று.

மாவளத்தான். தங்கு தடையின்றிப் பேச முற்பட்டு, அரசி! நீங்கள் எதிரி நாட்டவராயிருக்கலாம். ஆனால் புகாரை ஆள மன்னர் உங்களைப் பணித்திருக்கிறார். அந்த ஆணையை நாம் மீற முடியாது” என்று கூறினான்.

“அண்ணன் ஆணைக்கு உட்படவேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கலாம். எனக்கில்லையே?” என்று சுட்டிக் காட்டினாள் அவனி சுந்தரி.

மாவளத்தான் இதழ்களில் இளநகை அரும்பியது. “அதற்கு வாய்ப்பு இருந்தது, அது கடந்துவிட்டது” என்று கூறினான் இளநகையின் ஊடே.

“எப்பொழுதிருந்தது வாய்ப்பு?” என்று வியப்புடன் வின வினாள் கன்னரத்து இளவரசி.

“இரண்டு மாதங்களுக்கு முன்பு.”

“இரண்டு மாதங்களுக்கு முன்பா?”

“ஆம். நான் ஆவூரில் இருந்து திரும்பி வந்த நாளன்று.”

“அன்று என்ன வாய்ப்பு இருந்தது எனக்கு?”

“அன்று உங்களை அரசாள மன்னர் பணித்ததாகக் கூறினேன். நீங்கள் மறுத்துத் தங்கள் நாட்டுக்குத் திரும்பியிருக்கலாம். அப்படிச் செய்யவில்லை. அரசை ஏற்றீர்கள். அரசுக்கு ஒரு குணமுண்டு. லேசில் ஒருவரிடம் வருவதில்லை; வந்தால் லேசில் போவதுமில்லை” என்று விளக்கினான் மாவளத்தான், மெல்ல நகைத்து.

அவனி சுந்தரிக்குப் பதில் என்ன சொல்வதென்று தெரியாத தால் தயங்கினாள். பிறகு கேட்டாள், “உறையூர் விஷயம் எப்படி இருக்கிறது?” என்று.

ஒரு இடியை எடுத்து வீசினான் மாவளத்தான். “உறையூரில் இருந்தும் நெடுங்கிள்ளி தப்பி ஓடிவிட்டான். மன்னர் உறையூரை கைப்பற்றிவிட்டார்” என்று கூறினான்.

இதைக் கேட்ட அவனி சுந்தரி, ஒரு விநாடி மகிழ்ந்தாள் இனி நலங்கிள்ளி வந்துவிடுவார் என்ற நினைப்பினால். அந்த மகிழ்ச்சியையும் போக்கடித்தான் மாவளத்தான். “உறையூரைக் கைப்பற்றியதோடு மன்னர் நிற்கவில்லை. நெடுங்கிள்ளியைத் துரத்திச் சென்றிருக்கிறார்” என்றும் தெரிவித்தான் தம்பி.

அவனி சுந்தரியின் மலர்ந்த முகம் குவிந்தது சோகத்தாலும் கோபத்தாலும். அப்படியானால் புலவர் எங்கே?” என்று கேட் டாள். இரண்டும் குரலில் ஒலிக்க.

“இதோ வந்துவிட்டேன்” என்று கூறிக்கொண்டே புலவர் ‘அந்த அறைக்குள் நுழைந்தார். அவர் வந்ததும் அரியணையில் இருந்து எழுந்த அவனி சுந்தரியை உட்காரப்பணித்து, தானும் ஒரு ஆசனத்தில் அமர்ந்தார். “அவனி சுந்தரி! எதற்கும் அயராத உன் மனமும் சினத்தின் வசப்பட்டுவிட்டதே” என்று விளையாட் டாகப் பேசினார்.

“நான் இருக்கும் நிலையில் நீங்கள் இருந்தால் தெரியும்?” என்றாள் அவனி சுந்தரி.

“உன் நிலைக்கு என்ன?” என்று வினவினார் ஏதும் அறியாத வர் போல.

“இன்னொருவர் நாட்டை ஆள்கிறேன்” என்று அவள் சுட்டிக் காட்டினாள்.

“அந்த நாட்டுக்குடையவன் ஆணையால்” என்றார் புலவர், பதிலுக்கு.

“அது ஒழுங்கான ஆணையல்ல.”

“ஏன்?”

“மக்கள் வெறுக்கும் ஒருத்தியை அரியணையில் இருத்துவது ஒழுங்கல்ல.”

“அதைத் தீர்மானிக்க வேண்டியவன் இங்கில்லை.” “அவரது குருநாதர் நீங்கள் இருக்கிறீர்கள்?”

“நான் என்ன செய்ய முடியும் அரசு விஷயத்தில்?”

இதைக் கேட்ட அவனி சுந்தரி எழுந்திருந்தாள் ஆசனத்தை விட்டு. “புலவரே! நீர் செய்யாதது இந்த அரசில் என்ன இருக்கிறது? இந்த அரசியல் என்ன, தமிழகத்தில் தான் என்ன இருக்கிறது? உமது பாட்டைக் கண்டு மன்னர்கள் அஞ்சுகிறார்கள். ஒரே பாட்டினால் நெடுங்கிள்ளியை ஆவூரில் இருந்து விரட்டி விட்டீர்கள்…” என்று ஏதோ சொல்லிக் கொண்டே போன அவனி சுந்தரி, உணர்ச்சிப் பெருக்கால், வாசகத்தை முடிக்காமல் விட்டாள்.

புலவர் அவளைப் பரிதாபத்துடன் பார்த்தார். சோகப் பெரு மூச்சு ஒன்றும் விட்டார். பிறகு மெள்ளச் சொன்னார்: “மகனே! போர்களை விளைவிக்க அல்ல கவிதை ஏற்பட்டது. அமைதியையும் சந்துஷ்டியையும் இறைவழிபாட்டையும் அளிக்க ஏற்பட்டது கவிதை. ஆனால், என் பாட்டு அமைதியை அளிக்கவில்லை, சமாதானத்தை ஏற்படுத்தவில்லை. சோழர்கள் சண்டையிடக் கூடாது என்று நான் பாடியும், நெடுங்கிள்ளியைத் துரத்திச் சென்றிருக்கிறான், நலங்கிள்ளி. கவிதை பலிக்கவில்லை. பெண்ணே, புலவன் அதனால் தான் திரும்பிவிட்டான்.”

இதைக் கேட்ட அவனி சுந்தரி சிறிது உலாவினாள் அறையில் பிறகு சட்டென்று நின்று கேட்டாள், “புலவர் பெருமானே! அடுத்த போர் எங்கு நடக்கும்?” என்று.

தங்கு தடையின்றி வந்தது புலவரின் பதில். “வடபுலத்தில் என்றார் புலவர்.

“வடபுலத்திலா?”

“வடபுலத்தில் எங்கே?

“கரையாறு என்ற இடத்தில்”,

“அங்கா ஓடிவிட்டார் நெடுங்கிள்ளி”

“ஆம்”

“ஏன்?”

புலவர் அவனி சுந்தரியை ஏறெடுத்து நோக்கினார். மகளே!! இங்கு என்ன ஆதரவு இருக்கிறது நெடுங்கிள்ளிக்கு. ஆவூரும் போயிற்று ! உறையூரும் போயிற்று! இனி வடபுலத்தில் தான் அவன் ஆதரவு தேடவேண்டும். ஆகவே அங்கு ஓடியிருக்கிறான். ஆனால் ஒன்று நிச்சயம். அவன் எங்கு ஓடினாலும் நலங்கிள்ளி அவனைக் கொல்லாமல் விடமாட்டான்” என்று திட்டவட்டமாக அறிவித்துப் பெருமூச்சு விட்டார்.

“ஏன்?” காரணம் தெரிந்தும் தெரியாததுபோல் கேட்டாள் அவனி சுந்தரி.

“காரணம் உனக்கே தெரியும்”

“எனக்கா!’
“ஆம்”

“எப்படி?”

“காரணமே நீதானே.” இதைச் சொன்ன புலார் விடுவிடு என்று எழுந்து நடந்துவிட்டார் அறையை விட்டு. மாவளத்தானும் அவரைத் தொடர்ந்தான்.

அவனி சுந்தரி இடிந்து அரியணையில் நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்துவிட்டாள். அவள் மனம் அலைகடல் துரும்பு எனப் பல வழிகளில் தூக்கி எறியப்பட்டுத் திண்டாடிக் கொண்டு இருந்தது. இந்த மன உளைச்சலில் இருந்த அவள், ஒரு மாதத்தை பல்லைக் கடித்துக் கொண்டு கடத்தினான். ஆனால் வேதனை அவள் உடலைப் பெரிதும் உருக்கியிருந்தது. அவரைப் புலவரோ, மாவளத்தானோ யாருமே நெருங்கவில்லை. அந்த நிலையில் ஒருநாள் தீர்மானத்துக்கு வந்துவிட்ட அவனி சுந்தரி, பூதலனை அழைத்து. “பூதலா! நம் பயணத்துக்குச் சித்தம் செய். இன்றிரவு யாரும் அறியாமல் புறப்படுகிறோம்” என்றாள்.

பூதலன் அவளுக்குப் பதிலேதும் சொல்லாமல், அசையாமல் நின்றான். தான் எதைச் சொன்னாலும் தலைவணங்கிச் சென்றுவிடும் பூதலனின் நிலைகண்ட அவனி சுந்தரி வியப்பின் வசப்பட்டுக் கேட்டாள். “பூதலா! நான் சொல்வது உன் காதில் விழவில்லையா?” என்று.

“விழுந்தது” என்றான் பூதலன் தனது அசுர தேகத்தை அசைத்து.

“பின் ஏன் நிற்கிறாய்?” என்று வினவினாள் இளவரசி கோபத்துடன்.

“அரசர் ஆணையை மீற முடியாது” என்றான் பூதலன்.

“எந்த அரசர்?”

“புகார் அரசர்.”

“அவர் ஆணையா!” வியப்பு எல்லை மீறியது அவனி சுந்தரிக்கு.

“ஆம். ஆவூர்ப் போருக்குச் செல்லும் முன்பு என்னை அழைத்து, “பூதலா! பெரிய அபாயத்தில், பொறுப்பில் விட்டுச் செல்கிறேன் அவனி சுந்தரியை. அவளைக் காப்பது உனது கடமை. இந்த அரண்மனையை விட்டு அவளை வெளியே விடாதே” என்று ஆணையிட்டார்” என்று விளக்கினான் பூதலன்.

அரசகுமாரியின் ஆச்சரியம் எல்லையைத் தொட்டது. அத்துடன் சினமும் சேர்ந்து கொண்டது. “நீ யாருக்குப் பணிமகன்?” என்று வினவினாள் சீற்றத்துடன்,

“தங்களுக்குத்தான்.”

அப்படியானால், அரசர் உத்தரவை நீ ஏன் ஏற்க வேண்டிடும்?”

“உங்கள் நன்மைக்காக.”
“என்ன நன்மை?”

“என்ன இருந்தாலும் உங்களுக்கு அயல்நாடு. நீங்கள் ஆள்வதை மக்கள் விரும்பவில்லை. வெளியே சென்றால் விபத்து இருக்கிறது மக்களிடம் இருந்து. உங்களை நான் கூடக் காப்பாற்ற முடியாது.

“அப்படியானால் இந்த அரண்மனை?”

“இதில் பாதுகாப்பு இருக்கிறது.”

“எப்படி?”

“மாவளத்தார் உங்களைக் கண்ணைக் காப்பது போல் காத்து வருகிறார்.”

இதைக் கேட்டதும் அவனி சுந்தரியின் சினம் தலைக்கு ஏறி யது. “சரி நீ போ” என்று அவனை அனுப்பிவிட்டு, கதவைத் தாளிட்டுக் கொண்டு நாலைந்து ஓலை நறுக்குகளை எடுத்துக் கொண்டு விளக்கண்டை சென்று மடமடவெனக் கோபத்தால் எழுத்தாணி துரிதமாக ஓட எதையோ எழுதி முடித்தாள். பிறகு அதை ஒரு குழலில் போட்டு தனது முத்திரையைப் பொறித்தாள். பிறகு வெகு வேகமாக ஒரு சீலையை எடுத்துத் தலையில் இருந்து கால் வரை போர்த்திக் கொண்டு விளக்கை ஊதிவிட்டாள். அடுத்தபடி அடிமேலடி வைத்து அறைக் கதவை நோக்கிச் சென்றாள். அங்குச் சென்றதும் ஒரு விநாடி நின்றாள். அதுவரை திறந்து இருந்த அறைக் கதவு எப்படி மூடிக்கொண்டது என்று நினைத்து. கதவை இழுத்துப் பார்த்தாள். கதவு வெளியே தாளிடப்பட்டு இருந்தது. “யார் தாளிட்டது? யாரங்கே?” என்று இரு முறை அழைத்தாள். யாரும் பதில் சொல்லவில்லை. திடீரென அவளுக்குப் பக்கத்திலிருந்து யாரோ மெள்ள நகைத்தார்கள். அந்த நகைப்பைத் தொடர்ந்து வலிய இரு கைகள் அவள் உடலைச் சுற்றி வளைத்து நெறுக்கின.

அவனி சுந்தரி மலைத்து நின்றாள். நெருங்கிய கைகள் யாருடையவை என்பது அவளுக்குச் சந்தேகமற விளங்கியது. அப்படி ஏற்பட்ட அறிவு அவளை எங்கோ வேறு உலகத்துக்கு அழைத்துச் சென்றது. “கரையாறு…” என்று ஏதோ சொல்ல முயன்றாள்.

“தொலைவில் இருக்கிறது; கட்டில் அங்கேயிருக்கிறது” என்று மிக மெதுவாகக் கூறிய நலங்கிள்ளி, அவளை அழைத்துக்கொண்டு போய் மெள்ளப் பஞ்சணையில் உட்கார வைத்துத் தானும் உட்கார்ந்தான். உட்கார்ந்த நிலையிலும் அணைப்பிலிருந்து அவளை விடு விக்கவில்லை புகாரின் மன்னன்.

“எப்பொழுது வந்தீர்கள்?” என்று கேட்டாள் அவனி சுந்தரி.

“இப்பொழுதுதான் வந்தேன்” அவன் உதடுகள் கன்னத்தில் புதைந்தன.

“கரையாறு என்ன ஆயிற்று?’

“எதிர்பார்த்தபடி நடந்தது. உனக்கு வேண்டியதைக் கொணர்ந்து இருக்கிறேன்.”

“என்ன அது?”

“நெடுங்கிள்ளியின் தலை. அதைப் புலவர் மாளிகையில் வைத்திருக்கிறேன்.”

அவனி சுந்தரியின் மார்பு ஒரு முறை எழுந்து தாழ்ந்தது. “அண்ணன் கொலைக்குப் பரிகாரம் செய்துவிட்டீர்கள்” என்றாள்.

“இல்லை. சுயநலத்தைப் பூர்த்தி செய்துகொண்டு விட்டேன்” என்றான் நலங்கிள்ளி.

“சுயநலமா?”

“என்ன அது?”

“கிள்ளிவளவரைக் கொன்றவன் தலையைக் கிள்ளிக் கொணரி பவனைத்தான் மணக்க முடியும் என்று நீ சபதம் செய்திருப்பதாகப் கூறவில்லையா?”

“ஆம்”

“கிள்ளிக் கொணர்ந்துவிட்டேன்.”

அவனி சுந்தரி பதில் பேசவில்லை. அவன் அணைப்பில் இருந்து விடுவித்துக் கொண்டு விளக்கை ஏற்றினாள் மீண்டும். தான் எழுதி முத்திரை வைத்திருந்த ஓலைக்குழலை நலங்கிள்ளியிடம் நீட்டினாள். குழலில் இருந்து ஓலைகளை எடுத்துப் படித்தான் நலங்கிள்ளி அதில் பின்வருமாறு எழுதியிருந்தாள்:

“அன்பரே! நான் சோழ நாட்டைப் பிளக்க வந்த சனியன். இதைப் புலவரே முதல் நாள் அவர் மாளிகையில் சொன்னது நினைவு இருக்கலாம் உங்களுக்கு. ஆனால் நடந்தது வேறு. உங்கள் நாட்டை ஒற்றுமைப்படுத்தினேன். கரையாற்றில் நெடுங்கிள்ளி தோற்றுப்போவார். பிறகு சோழ நாடு முழுமையாக ஒரு நாடாக இணைந்து பழைய சாம்ராஜ்ஜியத்தின் பேரரசராக நீங்கள் ஆவீர்கள். இதில் எனக்குத் திருப்திதான். இருப்பினும், மக்கள் என்னை வெறுக்கிறார்கள். ஆகவே அவர்களுக்குத் தகுந்த ராணியை நீங்கள் அளிப்பது நல்லது. யாரை நீங்கள் மணந்தாலும், என் மனம் உங்களை மறக்காது. புகாரை மறக்காது; பளிங்குச்சுளையை மறக்காது. வருகிறேன்.

உங்கள்
அவனி சுந்தரி”

இதை மவுனமாகப் படித்தான் நலங்கிள்ளி, ஒரு முறைக்கு இருமுறை, கடைசியில் அவளை நோக்கினான். “அவனி சுந்தரி! நீ போவதானால், எனக்கும் இங்கு வேலையில்லை. நானும் வருகிறேன் உன்னுடன்” என்றான் முடிவாக.

“என் மன்னவா! கூடாது அது. உங்களுக்குக் கடமை இருக்கிறது.”

“என்ன கடமை?”

“அரசுக் கடமை.”
“காதல் கடமை என்ன ஆவது?”

“அது இரண்டாம் பட்சம்.”

“இரண்டாம் பட்சமாயிருந்தால் தமிழ்ப் புலவர்கள் எல் லாம் அதைப் பற்றி ஏன் பாடியிருக்கிறார்கள்?”

“பாட்டு வேறு; நடைமுறை வேறு.”

“புலவர்கள் வாக்கு அப்படி இல்லை. தெய்வீகமானது. காதலும் தெய்வீகமானது. தெய்வீகத்தை அரசுக்காகத் தியாகம் செய்ய எனக்கு இஷ்டமில்லை. புகாரை ஆள மாவளத்தான் இருக்கிறான்.”

இதைச் சொன்ன நலங்கிள்ளி, அவனி சுந்தரியை நெருங்கி மீண்டும் முரட்டுத்தனமாக அணைத்தான். அவள் இதழ்களிலும் வெறியுடன் அவன் இதழ்கள் இணைந்தன.

அவனி சுந்தரி புகாரை விட்டுச் சொர்க்கத்துக்குப் போனாள். மெள்ளத் தன் இதழ்களை விடுவித்துக் கொண்டு “நீங்கள் வந்தது. தெரியவில்லையே! நகர முரசுகள் முழங்கவில்லையே!” என்றாள் மிக மிருதுவான குரலில்.

“நாளைக்குத்தான், பட்டணப் பிரவேசம்” என்றான், நலங் கிள்ளி.

“அப்படியானால்?”

“இன்று பஞ்சணைப் பிரவேசம்” என்று சொன்ன நலங் கிள்ளி, அவளைப் பஞ்சணையில் தள்ளினான்.

அடுத்து எதுவும் நடந்திருக்கும்.

ஆனால் திடீரெனக் கதவு தட்டப்பட்டது. நலங்கிள்ளி மிகுந்த சினத்துடன் கதவைத் திறந்தான். வெளியே நின்ற மாவளத்தான், “பட்டணப் பிரவேசம், மகுடாபிஷேகம், திருமணம் மூன்றையும் நாளைக்கே வைத்துக் கொள்ளலாம் எனப் புலவர் சொல்லச் சொன்னார்” என்றான்.

“சரி போய் வா” என்று கூறிவிட்டு, மீண்டும் கதவை அடைத்தான் நலங்கிள்ளி.

பஞ்சணைக்கு மறுபடியும் வந்த அவளை அணைத்த அவனி சுந்தரி, ஒருநாள் பொறுங்கள்” என்று வேண்டிக் கொண்டாள்.

“ஏன்?” அவன் கேட்டான் உணர்ச்சிகளை அடக்க முடியாமல்.

“பொறுத்தார் பூமி ஆள்வார்”

“அவ்வளவுதானா?”

“இல்லை”

“உம்?”

“என்னையும் ஆள்வார்” என்று கூறி அவள் நகைத்தாள். அந்த நகைப்பு அவனுக்குப் பொறுமையை அளிக்கவில்லை, அவசரத்துக்கே அடிகோலிற்று.

முடிந்தது

Previous articleAvani Sundari Ch17 | Avani Sundari Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch1 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here