Home Avani Sundari Avani Sundari Ch2 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch2 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

60
0
Avani Sundari Ch2 Avani Sundari Sandilyan, Avani Sundari Online Free, Avani Sundari PDF, Download Avani Sundari novel, Avani Sundari book, Avani Sundari free, Avani Sundari,Avani Sundari story in tamil,Avani Sundari story,Avani Sundari novel in tamil,Avani Sundari novel,Avani Sundari book,Avani Sundari book review,அவனி சுந்தரி,அவனி சுந்தரி கதை,Avani Sundari tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari full story,Avani Sundari novel full story,Avani Sundari audiobook,Avani Sundari audio book,Avani Sundari full audiobook,Avani Sundari full audio book,
Avani Sundari Ch2 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch2 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

அவனி சுந்தரி – சாண்டில்யன்

அத்தியாயம் – 2 இதோ அத்தாட்சி

Avani Sundari Ch2 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

மயன் செதுக்கிவிட்ட சித்திரப்பாவையென அழகெல்லாம் திரண்டு நின்ற பெண்தான் அவனிசுந்தரி என்பதைக் கேட்டதும் வாலிபனான நலங்கிள்ளி விவரிக்க வொண்ணா வியப்பில் ஆழ்ந்தான். கவிஞர்கள் வர்ணிப்புக்கும் அப்பாற்பட்ட கவர்ச்சியுடன் காட்சியளித்த அந்தக் காரிகையைப் பற்றிப் புலவர் சொன்னது எல்லாம் உண்மையாக இருக்க முடியுமா என்ற சந்தேகங்கூட, அவளைப் பார்த்ததும் ஏற்பட்டது அந்த வாலிபனுக்கு. ஆகவே அவன் நீண்ட நேரம் அவளைத் தன் கண்களால் துருவித் துருவிப் பார்த்தான்.

பால்வடியும் குழந்தையின் முகம் போலக் களங்கம் சிறிதும் தோன்றாத அந்த முகத்தின் அழகு அவன் உள்ளத்தை அப்படியே கொள்ளை கொண்டது. லேசான சலனமுற்ற கண்கள் மருண்ட மானின் விழிகளை அவன் நினைவுக்குக் கொணர்ந்தன. அவன் இதயத்தைக் கவ்வவும் செய்தன. நீண்ட தூரப் பயணத்தை அறிவிக்கும் வகையில் அவள் பிறை நுதலில் துளிர்த்திருந்த நாலைந்து வியர்வைத் துளிகள் கூட, முத்துக்களைப் போல அழகுக்கு அழகு செய்தன. காற்றில் அலைந்து அந்த முத்துக்களில் வளைந்து பதிந்து கிடந்த இரண்டு மூன்று முடியிழைகள், இயற்கை ஏதோ அலள் நுதலுக்குச் சித்திரம் தீட்டிய பிரமையை உண்டாக்கின.

நுதலுக்கு மேலேயிருந்த கரிய கூந்தல் நன்றாக எடுத்துப் பின்னப்பட்டு வைர மாலை யொன்றால் சுருட்டிக் கட்டப்பட்டு இருந்தது, பிறைச் சந்திரனை மறைக்க முயலும் நீருண்ட மேகத்தை நினைவுபடுத்தியது. நுதலுக்குக் கீழே கரேலென்று இயற்கை வரைந்திருந்த விற்புருவங்கள், தங்கள் அம்புகள் குறிதவறாதவை என்பதைக் காட்டுவதற்காக ஒரு முறை மேலே இறங்கின.

காதல் அம்புகளை வீசிய சலன விழிகளில் ஏதோ ஒரு சிரிப்பும் ஆழமும் இருந்தன. விழிகளை வகுத்து நின்றது போலும், இணைக்கவிடாத கரைபோலும், தெரிந்த அழகிய நாசி. அதிகக் கூர்மையும் இல்லை, சப்பையும் இல்லை. எந்த அளவில் இருக்க வேண்டுமோ அந்த அளவில் இருந்தது.

அந்த நாசியில் இருந்து விரிந்த செழித்த மாம்பழக் கன்னங்களில் திட்டாகத் தெரிந்த குங்குமச் சிவப்பு அவள் நாணத்தால் ஏற்பட்டதா அல்லது இயல்பே அப்படியா என்று நிர்ணயிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியிருந்தது.

அந்த அழகிய கன்னங்களை இணைத்துக் கிடந்த பவள உதடுகளில் இருந்த ஈரமும், அவை சற்றே விலகியிருந்ததால் உள்ளே தெரிந்தும் தெரியாமலும் இருந்த இரு முத்துப் பற்களும், அவை உதடுகளா அல்லது அமுதம் சிந்தும் சுரபியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின.

இதழ்களுக்குக் கீழேயிருந்த முகவாயும் அதற்குக் கீழே இறங்கிய சங்குக் கழுத்துமே மயக்கத்தைத் தந்தனவென்றால். கழுத்திற்கும் கீழே அளவோடு எழுந்த அழகுகள் இரண்டு, துறவிகளையும் அலைக்கழிக்கும் திறன் தங்களுக்கு உண்டென நிமிர்ந்து திமிறியே நின்றன.

அவள் நீண்ட மலர்க் கைகளில் ஒன்று கதவைப் பற்றியிருந்ததால் இருப்பது பொய்யோவென ஐயுறும்படியிருந்த சிற்றிடை சிறிது ஒருபுறம் தள்ளிக் கிடந்ததன் காரணமாக, அதற்கு அடுத்த பெரும்பகுதி ஒன்று தனியாகத் தள்ளி நின்றது. அவள் ஏதோ நாட்டிய பாணியொன்றைக் கையாளுவதாகப் பிரமை ஊட்டியது. ஒரு காலை இன்னொரு கால் மீது மாற்றி வைத்து அவள் நின்ற நிலை கூட மலைக்கத்தக்கதாகவே அமைந்திருந்தா அப்படி ஒரு கால் மீது இன்னொரு கால் பாவி நின்றதால், அவள் அழகிய வாழைத் தொடைகள் இணைந்து விட்டதால் இடையே அகப்பட்டுக் கொண்ட மெல்லிய அவள் சேலை, எத்தனையோ மனோ தர்மங்களுக்கு இடங்கொடுத்தது.

இப்படி அவளை அணு அணுவாக ஆராய்ந்த சோழன் நலங்கிள்ளி, “இந்த அழகியிடம், இந்தக் குழந்தை முகத்திடம், என்ன ‘தவறு இருக்க முடியும்? புலவர் எதற்காக இல்லாத பொல்லாத கற்பனையெல்லாம் செய்கிறார்?” என்றே நினைத்தான்.

புலவர் பெருமானான கோவூர் கிழார், நலங்கிள்ளியின் பார் வையையோ அவன் முகத்தில் ஏற்பட்ட மாறுதலையோ கவனிக்கத் தவறவில்லை என்றாலும், அந்த நிலையில் தான் சொல்லக் கூடியது ஏதுமில்லையென்பதை உணர்ந்தார். விதி ரூபத்தில் வந்து மதிமயக்கும் அந்த மாயை நலங்கிள்ளியைச் சூழ்ந்து வருவதைத் தம்மால் தடுக்க முடியாது என்பதையும் புரிந்து கொண்டார். ஆகவே இருக்கும் நிலையைச் சீர்படுத்திக் கொள்ள, “உள்ளே வரலாம். ஏழைப் புலவன் இருப்பிடத்தின் கதவுகள் யாருக்கும் திறப்பவை” என்று கூறினார்.

அவர் சொற்களைக் கேட்டதும், அரச தோரணையில் அவருக்கும் தலைவணங்கினாள், அவருக்கு எதிரே அமர்ந்து தன்னை அணு அணுவாக எடை போட்டுக் கொண்டிருந்த வாலிபனுக்கும் தலை வணங்கினாள், அவனிசுந்தரி. பிறகு மெல்ல அவ்விருவரையும் நோக்கி நடந்தும் வந்தாள்.

அவள் நடந்தபோது அவள் எடுத்து வைத்த அடி ஒவ்வொன்றிலும் அழகு அள்ளிச் சொரிவதைக் கண்டான் வாலிபனான நலங்கிள்ளி. காலசைவு அவள் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் எத்தனை அசைவுகளை, திருப்பங்களை, எழுச்சிகளின் விளம்பரங்களைத் தெரியப்படுத்துகின்றன என்பதைப் பார்த்த நலங்கிள்ளி, அந்த நடைக்கும் அசையாத மார்பின் தன்மையை மட்டும் கண்டு, சிலப் பதிகாரத்தின் ஆரம்பச் செய்யுள் எத்தனை உண்மையானது என்று நினைத்தான். அவனியின் மார்புக்கு மலைகளை உவமை சொன்னதும், நதிகளை மலைகளாக இளங்கோ விவரித்ததும் எத்தனை உண்மை என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். “அதோ அவள் மார்பில் அசையும் இரு முத்து மாலைகளே வளைந்தோடும் நதிகளைப் போலத்தானே இருக்கின்றன?” என்று தனக்குள் சிலப்பதிகார ஆசிரியரை சிலாகித்தான். இத்தனை நினைப்பிலும் தான் சிலா கித்தது சிலப்பதிகார ஆசிரியரையோ அவர் கவிதையையோ. அல்ல என்பதையும், எதிரே எழில் குலுங்க வந்த பிரத்தியட்ச தேவதையே என்பதையும் அவன் உணரவும் செய்ததால், உள்ளுக்குள் சிறிது வெட்கத்தைக்கூட அடைந்தான்.

மெல்ல மெல்ல நடந்து வந்த அவனிசுந்தரி, நலங்கிள்ளியை நேரே நோக்கா விட்டாலும், பக்கவாட்டில் வீசிய ஒரு பார்வையிலேயே அவன் மன நிலையை உணர்ந்து கொண்டாள்.”எப்பேர்ப்பட்ட வீரனும் பெண்ணைப் பார்த்தால் விழுந்துவிடுகிறான்” என்று தனக்குள்ளே சொல்லிச் சிரித்துக் கொண்டாள். அந்த ஒரு பார்வையில் கிடைத்த நலங்கிள்ளியின் வீர முகம் தன் மனதை எதற்காக அப்படி அல்லல்படுத்துகிறது என்பதை நினைத்துப் பார்த்து உள்ளூர வியப்பும் கொண்டாள். எந்த ஆண் மகனுக்கும் இடங்கொடாத தன் மனம், நெடுங்கிள்ளியைத் துச்சமாகத் தூக்கி எறிந்த தன் உள்ளம், இந்த வாலிபனை மட்டும் உதாசீனப்படுத்தவோ உதறித் தள்ளவோ சக்தியற்று விட்டதை நினைத்து சிறிது அஞ்சவும் செய்தாள், அந்த அஞ்சுகம். அந்த அச்சத்தில் உள்ளம் நிலைகுலைந்தது என்றாலும், தான் வந்த பணியை நினைத்துத் தன்னை சிறிது கடினப்படுத்திக் கொண்டாள்.

அவள் தந்தை அவளுக்கு இட்ட உத்தரவு அந்த சமயத்தில் அவள் உள்ளத்தில் பெரிதாக எழுந்து நின்றது. கன்னர நாட்டு மாளிகையின் அந்தரங்க அறையில் அமைச்சர்கள் முன்னிலையில் “அவனிசுந்தரி! பெரும் பணியை முன்னிட்டு நீ சோழ நாடு செல்கிறாய் என்பதை மறவாதே! எந்தச் சோழ நாட்டின் வலிமையால் நமது நாடு வலிமை இழந்ததோ, எந்த சோழர்களின் வீரத்தை உலகம் பறைசாற்றுவதால் நம் வீரத்தின் ஒளி குன்றிக் கிடக்கிறதோ, அந்த சோழ நாட்டை இரண்டாகப் பிளந்துவிடு. அதற்காக உன்னைப் பலியிட்டுக் கொள்வதானாலும் தவறு இல்லை. செல் பெண்ணே” என்ற தந்தையின் உத்தரவு அவள் இதயத்துக்குள் பெரிதாக ஒலித்தது.

இத்தனை விவகாரங்கள் உள்ளத்தை நிரப்ப நடந்து வந்து புலவருக்கு எட்டவே நின்ற அவனி சுந்தரி,. “புலவர் பெருமான் பெருமை எங்கள் நாடு வரை எட்டியிருக்கிறது. தங்களைக் காணக் கொடுத்து வைத்தது எனது பாக்கியம்” என்று மிக அடக்கத்துடன் கூறிளை.

புலவர் பெருமான் உடனடியாக அவளுக்குப் பதில் ஏதும் கூறவில்லை. உறையூரில் இருந்தவள் இங்கு எதற்காக வந்து இருக்கிறாள் என்று உள்ளூரக் கேட்டுக் கொண்டார். அதுவும் யாரும் அறியாமல், எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல், உறையூரில் இருந்து புகாருக்கு எப்படி அவள் வரமுடிந்தது என்பதும் வியப் பாயிருந்தது, புலவருக்கு. ஆகவே, கன்னரத்து இளவரசியை ஏறெடுத்து நோக்கிவிட்டுச் சொன்னார்,”கன்னர நாட்டு இளவரசியின் பெருமையும் இந்த நாட்டை எட்டியிருக்கிறது” என்று.

அவர் சொற்களில் அடக்கமிருந்தது. ஆனால் அவற்றில் ஒலித்தது புகழ்ச்சியா இகழ்ச்சியா என்பது மற்றவர்களுக்குப் புரியாதிருந்தாலும் அந்த சூட்சமத்தை அவனி சுந்தரி கண்ணிமைக்கும் நேரத்தில் புரிந்து கொண்டாள். மெல்லப் புன்னகையும் கொண்டாள். “பெருமையா சிறுமையா புலவரே?” என்று வினவவும் செய்தாள் புன்னகையின் ஊடே.

புலவர் கண்களில் புத்தொளியொன்று திடீரெனத் தோன்றி மறைந்தது. “இளவரசியிடம் என்ன சிறுமை இருக்க முடியும்?” என்று கேட்டார், ஏதும் புரியாதது போல.

இளநகையை நீக்கித் துன்பநகை கொண்ட கன்னர நாட்டு இளவரசி கூறினாள், “புலவர் பொய் சொல்லக்கூடாது” என்று.

“என்ன பொய் சொல்லிவிட்டேன்?” என்று எரிச்சலுடன் அதுவரை இருந்த நிதானத்தைக் கைவிட்டுக் கேட்டார் புலவர்.

“சோழ நாட்டைப் பிடிக்க ஒரு சனியன் வந்திருப்பதாக நீங்கள் கூறவில்லையா சற்று முன்பு” என்று கேட்டாள் அவனி சுந்தரி துன்பம் தோய்ந்த குரலில்.

“அது…அது…” என்று குழறினார் புலவர்.

“உண்மைதான் புலவரே! நான் சோழ நாட்டைப் பிடிக்க வந்த சனியன் தான். சந்தேகம் வேண்டாம்” என்றாள் அவனி சுந்தரி, துயரத்திலும் கம்பீரம் குன்றாமல்.

“அது ஆத்திரத்தில் சொன்ன வார்த்தை….” என்று சமா. தானம் சொல்ல முயன்றார், புலவர்.

சமாதானம் தேவையில்லை என்பதைக் குறிப்பிடக் கையைச் சிறிது அசைத்த அவனி சுந்தரி, “புலவரே! நீர் சொன்னது முற்றிலும் உண்மை. சோழ நாட்டைப் பிடிக்கவந்த சனியன் தான் நான். இன்றுடன் சோழ நாடு இரண்டாகப் பிளக்கிறது” என்று கூறவும் செய்தாள்.

இதைக் கேட்ட புலவர் சரேலென ஆசனத்தில் இருந்து துள்ளி எழுந்தார். அவர் எழுந்ததால் நலங்கிள்ளியும் எழுந்தான். ” என்ன சொல்கிறாய் மகளே?” என்று கேட்டார் பீதி தொனித்த குரலில், கோவூர்கிழார்.

“இன்றில் இருந்து சோழ நாடு இரண்டுபடுகிறது. அதற்கு அத்தாட்சியும் கொண்டு வந்திருக்கிறேன்” என்ற அவனி சுந்தரி. “பூதலா! பூதலா! ” என்று சற்று இறைந்து கதவை நோக்கிக் கூவினாள். அடுத்த விநாடி பயங்கர மீசையுடனும் ராட்சத உரு ‘வத்துடனும் ஒரு வீரன் உள்ளே நுழைந்தான் கையில் ஓர் உடலை தாங்கி.
அந்த உடலைக் கண்ட புலவர் பெருமானும், நலங்கிள்ளியும் பேரதிர்ச்சி கொண்டு, பேசும் திறனை அறவே இழந்து, சிலைகள் போல நின்றுவிட்டார்கள் பல விநாடிகள். பயங்கர மவுனம். அந்தக் கூடத்தை ஆட்கொண்டது.வெளியே கடலில் இருந்து எழுந்த பெருங்காற்று ஊழிக்காற்றுபோல் “ஊ”வென இறைந்து கூச்சல் இட்டது. சோழ நாட்டில் பிரளயம் ஏற்பட்டுவிட்டதைக் கோவூர் கிழார் மட்டுமல்ல, நலங்கிள்ளியும் உணர்ந்து கொண்டான்..

Previous articleAvani Sundari Ch1 | Avani Sundari Sandilyan | TamilNovel.in
Next articleAvani Sundari Ch3 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here