Home Avani Sundari Avani Sundari Ch5 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch5 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

58
0
Avani Sundari Ch5 Avani Sundari Sandilyan, Avani Sundari Online Free, Avani Sundari PDF, Download Avani Sundari novel, Avani Sundari book, Avani Sundari free, Avani Sundari,Avani Sundari story in tamil,Avani Sundari story,Avani Sundari novel in tamil,Avani Sundari novel,Avani Sundari book,Avani Sundari book review,அவனி சுந்தரி,அவனி சுந்தரி கதை,Avani Sundari tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari full story,Avani Sundari novel full story,Avani Sundari audiobook,Avani Sundari audio book,Avani Sundari full audiobook,Avani Sundari full audio book,
Avani Sundari Ch5 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch5 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

அவனி சுந்தரி – சாண்டில்யன்

அத்தியாயம் – 5 மர்மங்கள் பல!

Avani Sundari Ch5 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

புகாரின் இணையிலா மன்னனும் மூதாதையுமான கரிகால் பெருவளத்தானின் பெயரில் கடைப்பகுதியான “பெருவளத்தான்” என்ற சொல்லை, “மாவளத்தான்” என்று சற்று மாற்றிவைத்த காரணத்தாலோ என்னவோ, மகாவீரனாக விளங்கிய தம்பிக்கு சிறிது முன்கோபமும் அவசர புத்தியும் உண்டு என்பது நலங்கிள்ளிக்குத் தெரிந்தேயிருந்தது. தவிர, அவன் சதா பகடையாடுவதும், அப்படிப் பகடையாடிய ஒரு சமயத்தில் ஒரு புலவர் மீது சினம் கொண்டு பகடைக்காய்களை அவர் முகக்தில் வீசியெறிந்து விட்டதையுங்கூட’ மக்கள் பேசிக் கொண்டு இருந்தார்கள். எனவே, அவன் சொல்லுவது எதையும் சற்று நிதானமாகவே கேட்க எண்ணங்கொண்ட நலங்கிள்ளி, “நிதானமாகவே சொல் தம்பி! என்னதான் நடந்துவிட்டது?” என்று வினவினான்.

மாவளத்தான் நலங்கிள்ளியளவு உயரம் இல்லாவிட்டாலும், அவன் கண்களும் முகமும் நலங்கிள்ளியின் கண்களையும் முகத்தையும் போலவே அழகாகவும் துடிப்பாகவும் இருந்தன. அவன் நீண்ட கைகளில் நிறையக் காணப்பட்ட தழும்புகள் அவன் யாருடனாவது சதா வாள் பயிற்சி செய்து கொண்டு இருப்பவன் என்பதையும், அதனால் ஏற்படும் காயங்களை அறவே இலட்சியம் செய்யாதவன் என்பதையும் நிரூபித்தன. முகத்தில் வளைந்துகிடந்த முரட்டுக் குழல்களைத் தள்ள அவன் தலையை சிறிது ஆட்டிக் கொண்டதிலும் கம்பீரமும், துடுக்குத்தனமும் இருந்தன. அந்தத் துடுக்குத்தனத்துடன் அவன் பேசினான்: “உங்களைத் தீர்த்துக் கட்ட அரண்மனையில் சதி நடக்கிறது” என்று.

“அப்படியா?” நலங்கிள்ளியின் கேள்வியில் அப்பொழுதும் நிதானம் இருந்தது.

“ஆம்” என்றான் மாவளத்தான்.

“யார் செய்கிறார்கள், சதி?”

“யாருக்குத் தங்களைக் கொல்வதால் பயன் இருக்கிறதோ அவர்கள் தான்.”

”யார் அவர்கள்?”

“நெடுங்கிள்ளியும் அந்தப் பெண்ணொருத்தி வந்திருக்கிறாளே அவளும்” என்று கூறிய மாவளத்தான் உடல், சிறிது கோபத்தால். துடித்தது.

இதைக் கேட்ட பின்புதான் நலங்கிள்ளி சிறிது சுரணையைக் காட்டினான். மிகுந்த பிரமிப்புடன், “உண்மையாகவா?” என்றும் வினவினான்.

“ஆம் அண்ணா! முற்றிலும் உண்மை ” என்றான் மாவளத் தான்.

நலங்கிள்ளி சில விநாடி மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு கேட்டான் தம்பியை நோக்கி, “தம்பி! இதில் இந்த இருவருக்கும் என்ன பயன் இருக்க முடியும்? என்னைக் கொன்றால் புகாரை ஆள நீ இருக்கிறாய். ஆகையால் அடுத்த தாயாதியும் பகைவனுமான நெடுங்கிள்ளிக்குப் பயன் ஏதும் இல்லை. அந்த கன்னர நாட்டுப் பெண்ணுக்கும் என்னைக் கொல்வதால் எந்தவித லாபமும் இல்லை. அவளுக்கு சோழ நாட்டு மக்கள் முடிசூட்டப் போகிறார்களா என்ன?” என்று.

மாவளத்தான் அண்ணனைக் கூர்ந்து நோக்கினான். பிறகு கேட்டான் “என்னையும் தீர்த்துவிட்டால்?” என்று.

இதைக் கேட்ட நலங்கிள்ளி சற்று இரைந்தே நகைத்தான். “மாவளத்தான்! இதென்ன கொலைக்களமா? ஒவ்வொருவராக நெடுங்கிள்ளி பிடித்துக் கொல்ல, இல்லை. இது அவன் இருப்பிடமா, நம் இருவரையும் வெட்டுப்பாறைக்கு அனுப்ப? அது கிடக்கட்டும், அந்தப் பெண்தான் என்ன செய்யமுடியும்? நம் இருவரையும் ஒன்று சேர்த்து மருந்து வைத்துக் கொன்றுவிட முடியுமா?” என்று வினவினான், நகைப்பின் ஊடே.

மாவளத்தான் நகைக்கவில்லை. “அத்தனை நேரான திட்டம் அல்ல அண்ணா, திட்டம் மறைமுகமாகவும் கடுமையாகவும் இருக்கிறது” என்று கூறி, மேலே விளக்கவும் முற்பட்டான், “நேற்று இரவு நான் தற்செயலாக நமது நந்தவனத்துக்குப் போனேன். அண்ணன் இறந்துவிட்ட நிலை குறித்து குழம்பிய மனதுடன் சென்றேன். ஆகையால் முதலில் எதையும் கவனிக்கவில்லை. பிறகு திடீர் என நான் இருந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் காலவம் கேட்டது. சட்டென்று ஒரு மரத்தின் இருளில் ஒதுங்கினேன். சற்று நேரத்தில் அங்கு அந்தப் பாதகன் நெடுங்கிள்ளி வந்தான். எட்ட இருந்த செடிகளுக்கு அருகில் நின்று ஓரிரண்டு பூக்களைக் கொய்து முகர்ந்தான். அப்பொழுது ஒரு சிரிப்பொலி கேட்டது. “மன்னர் பூவின் நறுமணத்தை ரசிக்கிறார் போலிருக்கிறது” என்ற சொற்களும், அதைத் தொடர்ந்தன. அந்தச் சொற்களைத் தொடர்ந்து, அவனி சுந்தரி, அந்தப் பூச்செடியின் மறைவில் இருந்து வெளியே வந்தாள்.”

இங்கு சற்றுப் பேச்சை நிறுத்தினான் மாவளத்தான், உணர்ச்சிப் பெருக்கால். “மேலே சொல்” என்ற நலங்கிள்ளியின் சொற்கள் அவனைத் தூண்டவே, அவன், மேலும் சொன்னான்: “அவ்னி சுந்தரியைக் கண்டதும் நெடுங்கிள்ளி அவள் தோள் மீது கையை வைக்கப் போனான். “தொடாதே” என்று மிகக் கடுமையுடன் எச்சரித்தாள் அவள். அந்தச் சொற்களில் இருந்த உஷ்ணத்தால். எந்தப் பாதகச் செயலுக்கும் அஞ்சாத நெடுங்கிள்ளியே அசைந்து, , உயரத்தூக்கிய வலக் கையைக் கீழே போட்டான். பிறகு அவள் மிகக் கம்பீரமாகவே கேட்டாள்: “இங்கு எதற்கு என்னை வரச் சொன்னீர்கள்?” என்று. பிறகு அவர்களுக்குள் உரையாடல் இப்படி நிகழ்ந்தது.

“காரணமாகத்தான் வரச் சொன்னேன்” என்றான் நெடுங் கிள்ளி.

“என்ன காரணம்?” அந்தப் பெண் சர்வசாதாரணமாகக் கேட்டாள்.

“புகாரில் மூவரில் ஒருவன் இறந்தான்” என்றான் நெடுங் கிள்ளி.

“ஆம், கொல்லப்பட்டான்” என்றாள் அவனி சுந்தரி.

“என்ன! கொல்லப்பட்டானா?” என்று கேட்டான் நெடுங்கிள்ளி. அவன் வார்த்தையில் போலி நடுக்கம் இருந்தது.

“அப்படித்தான் கோவூர் கிழார் கருதுகிறார்” என்றாள் அந்தப் பெண்.

“அந்தப் புலவன், பெரிய அதிகப் பிரசங்கி.”

“ஆம், ஆம். உண்மையை எப்படியோ கண்டுபிடித்து விடுகிறார்.”

“அவராகக் கண்டுபிடித்து விடுகிறாரா? கண்டுபிடிக்க நீ உதவினாயா?”

“நான் எப்படி உதவ முடியும்?”

“ஏன் முடியாது? குளமுற்றத்தில் நடந்தது தான் உனக்குத் தெரியுமே.”

“இருக்கலாம். ஆனால் மன்னன் சடலத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நான் கொண்டு வந்திருக்கும் போது, என்னைத்தான் புலவர் கொலைகாரியென்று நினைக்கிறார்.” .

“என்னை நீ காட்டிக் கொடுக்கவில்லையே:

“காட்டிக் கொடுத்திருந்தால், உங்கள் கொலைகாரர்கள் என்னை சும்மா விடுவார்களா?’

“கொலைகாரர்களா?”

“உங்களுடன் வந்திருக்கும் நூறு பேர்”

” அதுவும் தெரியுமா உனக்கு?”

“நன்றாகத் தெரியும்” என்றாள் அவனி சுந்தரி.

“இங்கு சிறிது தயங்கிய நம் அருமை உறையூர் அண்ணன், மேலும் அந்தப் பெண்ணை விசாரிக்க முற்பட்டு, “எப்படி அறிந் தாய்?” என்று வினவினான்” என்று, மேலும் சொன்னான் மாவளத்தான்.

“கன்னர நாட்டில் இருந்து நான் தனியாக வரவில்லை. என்னுடன் பூதலன் வந்திருக்கிறான். அவனுக்குக் கண்கள் ஆயிரம் உண்டு” என்று உணர்த்தினாள், அவனி சுந்தரி.

“என்னை நீ காட்டிக் கொடுத்து விடுவாயா?” என்று நடுக் கத்துடன் கேட்டான், நெடுங்கிள்ளி.

“ஒருக்காலும் மாட்டேன். நீங்கள் இல்லாவிட்டால் கன்ன ரர் லட்சியம் எப்படி நிறைவேறும்? உங்களைப் போன்ற ஒரு நல்ல பிள்ளை சோழர் குடும்பத்தில் பிறக்காவிட்டால், எங்கள் திட்டம் எப்படிக் கைகூடும்” என்று வினவினாள் அவள்.

அவள் தன்னைப் பார்த்து நகைக்கிறாள் என்பதை அறிந்தும், நெடுங்கிள்ளி அதற்காக சினம் கொள்ளவில்லை. “அவனி சுந்தரி! என் திட்டங்களுக்கு மட்டும் நீ உதவி செய்; அப்புறம் நெடுங்கிள்ளி யார் என்பதை உணருவாய்” என்றான்.

“இப்பொழுதே உணர்ந்துதான் இருக்கிறேன்” என்றாள் அவனி சுந்தரி.

“உன்னை என் பட்டத்தரசி ஆக்குகிறேன்.

“ஏற்கனவே இருப்பவள்?”

அவள் உறையூரை ஆள்வாள்; நீ புகாரை ஆள்வாய்.”

“இருவரையும் சேர்த்து நீங்கள் ஆள்வீர்கள்” இதைச் சொன்ன அவள், நகைத்தாள்.

நெடுங்கிள்ளியின் சீற்றம் அதிகமாயிற்று. தன் உடையில் இருந்த குறுவாளைத் தட்டிக் காட்டினான். அதைப் பார்த்த அவள் மீண்டும் நகைத்து “குறுவாளாலோ நேர் போரிலே கொல்வது உங்கள் வழக்கம் அல்லவே வீரரே! அதை ஏன் தட்டிக் காட்டுகிறீர்கள்?” என்று வினவினாள்.

நெடுங்கிள்ளி பதில் சொல்லவில்லை உடனே. சிறிது தாம தித்துவிட்டு, அவள் காதில் குசுகுசு வென்று ஏதோ சொன்னான். அவளும் தலையாட்டினாள். “இதை மாத்திரம் செய்துவிடு; உனக்கு எது வேண்டுமானாலும் தருகிறேன்” என்றான்.

சரியென்பதற்கு அடையாளமாக அவள் தலையை ஆட்டி னாள். அதற்குப் பிறகு நெடுங்கிள்ளி அவ்விடத்தை விட்டு வெகு வேகமாகச் சென்றுவிட்டான். பிறகு ஓர் அதிசயம் நடந்தது. அந்தப் பெண் கையை மெல்லத் தட்டினாள். சற்று தூரத்தில் இருந்து அந்தப் பூதம் வெளிவந்தது… இந்த இடத்தில், சற்று பேச்சை அரைகுறையாக விட்ட மாவளத்தான், அண்ணனை நோக்கினான்.

தம்பி அதுவரை சொன்ன கதையை பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த நலங்கிள்ளி, “பூதலனா…. என்று வினவினான். “ஆம்” என்றான் மாவளத்தான்.

“அவனி சுந்தரி அவனிடம் என்ன சொன்னான்?”

“ஏதும் சொல்லவில்லை. நெடுங்கிள்ளி சென்ற திசையைக் கையால் சுட்டிக் காட்டினாள்.

“பிறகு?”

“அந்த ராட்சதன் நெடுங்கிள்ளி சென்ற வழியை நோக்கி நடந்தான்.”

“பிறகு?”

அந்தப் பெண் நமது நந்தவனத்தின் பளிங்கு மண்டபத்துக்கு வந்தாள். அதில் உட்கார்ந்து இருந்தாள் நீண்ட நேரம். பிறகு எழுந்திருந்து, அரண்மனையை நோக்கி நடந்தாள்.”

“இவ்ளவுதானே?”

“ஆம்”

நீண்ட நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான் நலங்கிள்ளி. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து, “தம்பி! மர்மம் பலமாயிருக்கிறது. எதற்கும் புலவரை அழைத்து வா, யோசனை கேட்போம்” என்றான்.

ஆனால் அவர்கள் இருவருக்கும் இருந்த குழப்பத்தால், அந்தச் சுரங்க அறையின் இன்னொரு சாளரத்தின் அருகில் ஒட்டி நின்று, அவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஓர் உருவத்தை இருவருமே கவனிக்கவில்லை.

மாவளத்தான் அறையை விட்டு வெளிவந்ததும் அந்த உருவம் மறுபுறம் இருந்த சுவரில் பதுங்கிக் கொண்டது. அவன் சென்றதும், அரசனின் அந்தரங்க அறைக்குள் ஓசைப்படாமல் நுழைந்தது. நுழைந்து கதவையும் சாத்திக் கொண்டது.

Previous articleAvani Sundari Ch4 | Avani Sundari Sandilyan | TamilNovel.in
Next articleAvani Sundari Ch6 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here