Home Avani Sundari Avani Sundari Ch6 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch6 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

63
0
Avani Sundari Ch6 Avani Sundari Sandilyan, Avani Sundari Online Free, Avani Sundari PDF, Download Avani Sundari novel, Avani Sundari book, Avani Sundari free, Avani Sundari,Avani Sundari story in tamil,Avani Sundari story,Avani Sundari novel in tamil,Avani Sundari novel,Avani Sundari book,Avani Sundari book review,அவனி சுந்தரி,அவனி சுந்தரி கதை,Avani Sundari tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari full story,Avani Sundari novel full story,Avani Sundari audiobook,Avani Sundari audio book,Avani Sundari full audiobook,Avani Sundari full audio book,
Avani Sundari Ch6 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch6 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

அவனி சுந்தரி – சாண்டில்யன்

அத்தியாயம் – 6 விபரீத வேண்டுகோள்

Avani Sundari Ch6 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

தம்பி மாவளத்தான் சொன்ன செய்தியால், மிகவும் குழம்பிய மனதுடன் நலங்கிள்ளி நின்றிருந்தான். ஆனாலும், தம்பி சென்ற பின்பு ஓசைப்படாமல் தனது அறைக் கதவு திறந்ததையும், அதன்மூலம் அவனி சுந்தரி நுழைந்து கதவைச் சாத்திவிட்டதையும் கண்ட புகாரின் புதுமன்னன், வியப்பு நிரம்பிய விழிகளை அவள் மீது நிலைக்கவிட்டான்.

அவளை அறைக்கு வெளியே இருந்த காவலர்கள் எப்படி உள்ளே புகவிட்டார்கள், அவள் எதற்காக அத்தனை பத்திரமாக அரவம் செய்யாமல் திருடியைப் போல் உள்ளே நுழைய வேண்டும் என்பது போன்ற பல கேள்விகள் அவன் மனதில் எழுந்தன. அவற்றையெல்லாம் அவன் கேட்காமல், அவளை உற்றுப் பார்த்துக் கொண்டே நின்றான்.

அவள் சுந்தர வடிவம் அன்றைய காலை அலங்காரத்தில் கண்களைப் பறித்துக் கொண்டிருந்தது. அவள் அன்று ஒரு பச்சைச் சேலையை அணிந்து கொண்டிருந்ததால், அந்தப் பச்சை நிறம் அவள் கன்னக் கண்ணாடியில் பிரதிபலிப்பதாகத் தோன்றியது. நலங்கிள்ளியின் கூரிய கண்களுக்கு, அவள் அன்று புதிதாக அணிந்திருந்த மேகலாபரணத்தில் கற்கள் ஓரிரண்டே பதிக்கப் பெற்று இருந்தாலும், அவைகூட அவள் இயற்கை அழகைப் பன்மடங்கு அதிகப்படுத்தியிருந்தது. அவள் அழகிய கண்களே அவளுக்கு ஆபரணமாயிருக்க, எமற்ற ஆபரணங்கள் அவளுக்கு தற்காக என்று தனக்குள் வினவிக் கொண்டான், நலங்கிள்ளி.

புகார் அரசன் தன்னை அப்படி உற்றுப் பார்ப்பதைக் கண்டும். புன்சிரிப்பினால் பூக்கவில்லை, அவள் பூவிதழ்கள். கண்களிலுங்கூட. அதே வழக்கமான விஷமத்தைக் காணோம். தாமரை முகங்கூட, அந்த வழக்கமான மென்மையைக் கைவிட்டு மிகவும் கல்லாயிருந்தது. அன்று அவள் கதவில் சாய்ந்த வண்ணம் துவண்டு நின்ற நிலை, காமத்தை விளைவிக்கிறதா, கடினத்தை விளைவிக்கிறதா என்பதைப் புரிந்து கொள்ளச் சக்தியிழந்து நின்றன. மன்னனின் ஆராய்ச்சிக் கண்கள்.

நலங்கிள்ளியின் கண்கள் தன்மீது ஓடுவதைக் கண்டாலும், காணாதது போலவே அவள் பேச்சைத் துரிதமாகத் தொடங்கினாள்: மன்னவா! உங்கள் மகுடா பிஷேகத்துக்குப் புலவர் நாளை கழித்து மறுநாள், நாள் வைத்திருக்கிறார்” என்று குறிப்பிட்டாள்.

அந்தச் செய்தியை முதல் நாள் அன்றே புலவர் அத்தாணி மண்டபத்தில் அறிவித்து இருந்ததால், அதை எதற்காக மீண்டும் சொல்கிறாள் அவனி சுந்தரி என்பதை அறியாமல், நலங்கிள்ளி, சர்வசாதாரணமாகவே பதில் கூறினான், “ஆம்” என்று.

அவனி சுந்தரியின் அழகிய கண்கள் அவன் கண்களுடன் கலந்தன, ஒரு விநாடி. பிறகு அவள் உதடுகள் மலர்ந்து கேள்விகளை வீசின: “நீங்கள் பல கேள்விகளை என்னைக் கேட்க வேண்டும். ஆனால் கேட்கவில்லையே” என்று எழுந்தது, அவள் முதல் கேள்வி.

நலங்கிள்ளி அவள் கண்களை ஆராய்ந்து, அதில் சிக்கியிருந்த தனது கண்களை விடுவித்துக் கொண்டான், விநாடி நேரத்தில். “ஆம் கேட்கவில்லை” என்று கூறிப் புன்முறுவலும் கொண்டான்.

“ஏன்?” அவனி சுந்தரியின் கேள்வியில், மன்னனின் நிதானத் தைப் பற்றிப் பெரும் வியப்பு ஒலித்தது.

“விஷயங்களைச் சொல்வதற்காகக் கன்னரத்து இளவரசி வந்திருக்கிறீர்கள்” என்ற நலங்கிள்ளி, “ஏன் அங்கேயே நிற்க வேண்டும்? இப்படி அமருங்கள்” என்று, சற்று எட்ட இருந்த ஓர் இருக்கையை சுட்டிக் காட்டினான்.

மயிலென நடந்து, அந்த ஆசனத்தில் சென்று உட்கார்ந்தாள் அவனி சுந்தரி. “நீங்களும் உட்காருங்களேன்” என்றும் கூறினாள், நலங்கிள்ளியை நோக்கி.

“வேண்டாம். நிற்பதில் வசதியிருக்கிறது” என்று கூறிய நலங்கிள்ளி. சாரளத்தில் நன்றாகச் சாய்ந்து, தனது இரு கைகளையும் மார்பில் கட்டிக் கொண்டான். அவன் வாய் கேள்வி எதையும் கேட்காவிட்டாலும், கண்கள் கேள்விகளைக் கக்கின.

அவற்றைக் கவனிக்கவே செய்த அவனி சுந்தரி, “நான் உங்கள் காவலரை யெல்லாம் மீறி, எப்படி . இங்கு வந்தேன் என்பது உங்களுக்கு வியப்பாயிருக்கிறது?” என்று முதல் கேள் வியை அவளே வீசினாள்.

நலங்கிள்ளியின் இதழ்களில் புன்முறுவல் தவவழ்ந்தது. “இல்லை. அதில் வியப்பு எனக்கு ஏதும் இல்லை” என்று அவன் வாயிலிருந்து உதிர்ந்த சொற்களிலும், வியப்பொலி ஏதும் இல்லை.

“உண்மையாகவா?”

“ஆம்”

“விந்தையாயிருக்கிறதே!”

“விந்தை ஏதும் இல்லை. ஆனால் கண்கள் இருக்கின்றன.’

“கண்களா?”

“ஆம், என் கண்கள்! ” என்ற நலங்கிள்ளி நகைத்தான்.

அவனி சுந்தரியின் முகத்தில் வியப்பு அதிகமாக விரிந்தது. அதில் சந்தேகங்கூடக் கலந்து நின்றது. “புரியும்படி சொல்லுங்கள்” என்று வினாவினாள்.

“சொல்லவா? காட்டவா?” என்று கேட்டான் மன்னன்.

“எப்படிச் செய்தாலும் சரி” என்ற அவனி சுந்தரி, அவனை ஏறிட்டு நோக்கினாள்.

மன்னன் சாளரத்தைவிட்டு, அவளை நோக்கி மிகவும் நிதானமாகப் புலிநடை நடந்து வந்தான். அவள் அருகில் வந்ததும் ஒரு விநாடி யோசித்துக் கொண்டு நின்றான். பிறகு, அவள் இடத்தோளில் சரிந்து கிடந்த சேலையைச் சற்று மேலே சரேலெனத் தூக்கிவிட்டு, அவள் இடக்கையைத் தன் வலக் கையால் பற்றி எடுத்தான். அந்தக் கையைத் தனது இடக் கையில் வைத்து; விரல் களைப் பிரித்துச் சுட்டிக் காட்டினான்.

நலங்கிள்ளி தன்னைத் தொட்டதையோ, சரிந்த மேலாடையைத் தூக்கியதையோ, அவனி சுந்தரி லட்சியம் செய்யவில்லை. அவன் கூரிய அறிவை நினைத்து மேலும் வியப்பே அடைந்தாள். அவள் வியப்பைக் கண்டு அவன் விரலில் இருந்த பெரிய மோதிரம் கூட நகைத்தது. அது நகைத்ததா, அல்லது அதன் புலிமுகக் கண்கள் உக்கிரத்தால் உறுமினவா என்பதை விவரிக்க இயலாத ஒரு நிலை, அவள் மனதை ஆட்கொண்டது. அதனால் ஏற்பட்ட குழப்பம் அவள் முகத்தைக் குங்குமச் சிவப்பாக அடித்தது.

அப்பொழுதுதான் ஓர் ஆண் மகன் தன் கையைப் பற்றி நிற்ப தையும், அந்தப் பிடியும் இரும்புப் பிடியா இருப்பதையும் உணர்ந்தாள், அவள். அதனால் ஏற்பட்ட புதுவிதமான நெகிழ்ச்சியில், ஓர் ஆனந்தமும் கலந்து கொண்டதால், அவள் விவரிக்க இயலாத பல உணர்ச்சிகளால் பீடிக்கப்பட்டுத் தத்தளித்தாள். அதனால், சிறிது ஆசனத்தில் அசங்கவும் செய்தாள்.

அந்த நிலை நலங்கிள்ளியையும் ஓரளவு பற்றிக் கொண்டிருக்க வேண்டும். நடுங்காத அவன் கைகள் கூடச் சிறிது நடுங்கின.” என் கண்களைப் பற்றி இப்பொழுது என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான், புகார் மன்னன் மெல்ல நகைத்து.

“எதையும் பார்க்கத் தவறாத கண்கள்” என்று குழைந்து பேசினாள் கன்னரத்து இளவரசி. “எப்பொழுது கண்டு பிடித்தீர்கள்” என்றும் வினவினாள். மெல்ல மெய்யெல்லாம் புல்லரித்ததால்.

நலங்கிள்ளி அவள் கைகளை விடுவித்து, சற்று எட்டச்சென்று அவளைப் பார்த்து, “அவனி சுந்தரி! அன்று புலவரின் மாளிகையில் மன்னன் சடலத்தில் இரண்டு மர்மங்களை எங்களுக்கு காட்டினாய்” என்று துவங்கினான் உரையாடலை.

“ஆம்; ஒன்று கச்சைக் குழல்…”

“இரண்டாவது மன்னர் மார்பில் இருந்த பெரிய சிவப்பு மச்சம்.”

“அந்தக் குழல் சிறு மூங்கில் குழல்…” என்று இழுத்தான், நலங்கிள்ளி.

“ஆம்”

“யவன நாட்டு வாசனைத் திரவியங்களை வைக்கும் குழல்.”

“ஆம்! ஆம்”

“மன்னர். வாசனைத் திரவியம் விரும்பாதவர்…” இதைச் சொன்ன நலங்கிள்ளி, அவளை உற்று நோக்கினான்.

அவனி சுந்தரி பதில் ஏதும் சொல்லவில்லை. மவுனம் சாதித் தாள். நலங்கிள்ளியே மேற்கொண்டு சொன்னான். “ஆகையால், அதை மன்னரிடம் வேறு யாரோ கொடுத்திருக்கிறார்கள். கொடுத்தது மட்டுமல்ல, எழுத்தாணி கொண்டு “நெடுங்கிள்ளி, நெடுங்கிள்ளி” என்று இரண்டு இடங்களில் உறையூர் மன்னன் பெயரைப் பொறிக்கவும் செய்திருக்கிறார்கள். அந்தக் கையெழுத்து மன்னர். கையெழுத்துதான். ஆனால், ஓலைபொறிக்கும் எழுத்தாணியுடன் உறங்கும் பழக்கம் மன்னருக்குக் கிடையாது. ஆகையால் அதை வேறு யாரோ அவரிடம் கொடுத்திருக்கிறார்கள்.”

“இந்த இடத்தில் பேச்சை நிறுத்திய நலங்கிள்ளி, அவனி சுந்தரியை உற்று நோக்கினான். “ஆம்! நான் தான் கொடுத்தேன். அந்தக் குழலும் என்னுடையதுதான். வாசனைத் திரவியங்களை அறையில் தெளித்துவிட்டேன்” என்று விளக்கினாள். அவனி சுந்தரி.

“அதுவும் எனக்குத் தெரியும். மன்னரின் தளபதி நீங்கள் வந்த மறுநாள் இங்கு வந்ததும் சொன்னார். ஆனால், விவரங்கள் அவருக்குத் தெரியாது. மன்னர் இறந்து கிடந்த அறை முழுதும் வாசனை அடித்துக் கொண்டிருந்தது என்று கூறினார்” என்ற நலங் கிள்ளி, “அது மட்டுமல்ல; அன்று முதல் ஜாமத்தில் நெடுங்கிள்ளி, நீண்ட நேரம் மன்னனிடம் தனியாகப் பேசிக்கொண்டு இருந்ததாகவும், அவன் போகும் போது மன்னர் அறைக்கு வெளியே வந்து அவனை வழியனுப்பியதாகவும் சொன்னார்” என்றும் கூறினார்.

“வேறு என்ன சொன்னார்?” வறண்ட குரலில் வெளிவந்தது அவனி சுந்தரியின் கேள்வி.

“மறுநாள் காலையில் மன்னர் இறந்து கிடந்ததாகக் கூறினார்”

“வேறு எதுவும் அவருக்குத் தெரியாது?”

“தெரியாது”

அவனி சுந்தரி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு கேட்டாள். “மீதிக் கதை தங்களுக்குத் தெரிய வேண்டாமா?” என்று.

“சொன்னால் தெரிந்து கொள்ளுகிறேன்” நலங்கிள்ளியின் குரலில் வெறுப்பு ஒலித்தது பலமாக.

“சொல்லுகிறேன் கேளுங்கள், மன்னர் இறந்த நாள் மாலை தான் நான் குளமுற்றம் வந்து சேர்ந்தேன். நான் போக உத்தே சித்தது உறையூர். ஆதலால், குளமுற்றத்து ஊருக்குள் செல்லாமல், வெளியே ஒரு தோப்பில் தங்கினேன். இரவு மூண்டது. அதே தோப்புக்கு இருவர் வந்தார்கள். நானும் பூதலனும் இருந்த இடம் அடர்த்தியான பகுதியில் இருந்ததால், அவர்கள் இருவரும் எங்களைப் பார்க்க முடியவில்லை. நாங்கள் மட்டும் அவர்களைப் பார்க்க முடிந்தது, அவர்கள் பேச்சைக் கேட்கவும் முடிந்தது. வந்திருந்தவன் இன்னொருவனை, “மன்னா! மன்னா!” என்று அழைத்ததால், அவன் ஏதோ ஊர் அரசன் என்று தீர்மானித்தேன். அங்குதான் புகார் மன்னரைக் கொல்லப்போகும் முறையை விளக்கிக் கொண்டிருந்தான் நெடுங்கிள்ளி. “இந்த ஊசி முனையால் சிறிது குத்தினால் போதும், மரணம் நிச்சயம், ஆனால் ‘நிதானமான மரணம்தான். யாரும் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாது” என்றான். கூட வந்தவன் அதை ஆமோதித்து, “காரியம் முடிந்ததும் திரும்பிவிட வேண்டும் அரசே! இல்லையேல் பேராபத்து” என்றான் பிறகு மன்னன் சென்றான் புரவி ஏறி. நான் பூதலனை விட்டு இன்னொருவனைக் கட்டிப் போட்டேன். அவனைக் கொன்றுவிடுவதாகப் பயமுறுத்திவிட்டு, நானும் பூதலனும் அரண்மனைக்கு விரைந்தோம். அங்கு இருந்த உங்கள் படைத் தலவரை அணுகி, நான் மன்னரை உடன் பார்க்க வேண்டும் என்று மன்றாடினேன். உறையூர்த் தம்பி பேசிக் கொண்டு இருப்பதால் முடியாது என்று மறுத்து விட்டார் படைத்தலைவர்.” மன்னர் உயிருக்கு ஆபத்து” என்று கெஞ்சினேன். பதிலுக்குப் படைத் தலைவர் நகைத்தார். அப்படி அவர் நகைத்துக் கொண்டிருந்த போது, நெடுங்கிள்ளி அவசரமாக வெளிவந்து, புரவி ஏறிப் பறந்து சென்றான். நான் படைத் தலைவரையும் மீறி அரசர் அறைக்குள் ஓடினேன்….” இங்கு அவனி சுந்தரியின் குரல் தழுதழுத்தது.

“சொல்லுங்கள் மேலே….” என்றான் நலங்கிள்ளி.

“மன்னர் சயனத்தில் படுத்துக் கிடந்தார். நான் அவரை அணுகி, நான் யார் என்பதை அறிவித்து, எனது முத்திரை மோதி ரத்தையும் காட்டினேன். பிறகு கேட்டேன், “சற்று முன்பு வந்தவர் ஊசியால் ஏதாவது செய்தாரா?” என்று. மன்னர் மார்பைத் திறந்து காட்டினார். “எனக்கு சில நாளாகக் காச நோய் இருக்கிறது. அதற்குத் தம்பி வைத்தியம் செய்தான். அந்த ஊசிமுனை மருந்து என் நோயைத் தீர்க்கும் என்றான்” எனக் கூறினார். நான் கண்களில் இருந்து பொல பொலவென நீரை உதிர்த்தேன். விஷயத்தைக் கூறினேன். கிள்ளிவளவர் ஒரு விநாடி மலைத்தார். தனது மருத்துவரை வரவழைக்கும்படி கூறினார். மருத்துவர் வந்து பார்த்து, ‘ஊசிமுனை விஷம் கடும் விஷம் என்றும், மாற்று மருந்து இல்லை” என்றும் கூறினார். பிறகு மன்னர் எல்லோரையும் வெளியோ போகச் சொல்லிவிட்டு, என்னிடம் ஓர் ஓலை கேட்டார். நான் மடியில் இருந்த வாசனைக் குழலை எடுத்து வாசனைத் திரவியத்தை கீழே ஊற்றிவிட்டுக் கொடுத்தேன். என் மடியில் சதா இருக்கும் தங்க எழுத்தாணியையும் கொடுத்தேன். மன்னர் பஞ்சணையில் உட்கார்ந்து சாவதானமாக எழுதினார். பிறகு தன் கையில் இருந்த முத்திரை மோதிரத்தை எடுத்து, என் மோதிர விரல் சிறியதாயிருந்ததால் கட்டை விரலில் போட்டார். “மகளே! சோழ நாட்டைக் காப்பாற்றிவிடு” என்று உத்தரவிட் டார். பிறகு படைத் தலைவரை வரவழைத்து, நான் சொல்கிறபடி நடந்து கொள்ள உத்தரவும் இட்டார்.” இத்துடன் கதையை முடித்த அவனி சுந்தரி. முகத்தை மூடிக்கொண்டு, தேம்பித் தேம்பி அழுதாள்.

மீதிக் கதை நலங்கிள்ளிக்குத் தெரிந்தே இருந்ததால் அவன் ஏதும் பேசவில்லை. அவள் முதுகை ஆறுதலாகத் தடவிக் கொடுத்தான். அவள் அழுகை நின்றதும், அவனி சுந்தரி, அடுத்து என்ன செய்ய வேண்டும்?” என்று வினவினான்.

அவள் அவனை நீர்தோய்ந்த கண்களுடன் ஏறெடுத்து நோக்கினாள். பிறகு விடுத்தாள் ஒரு வேண்டுகோள். அந்த வேண்டுகோள் பெரும் விபரீதமாயிருந்தது.

Previous articleAvani Sundari Ch5 | Avani Sundari Sandilyan | TamilNovel.in
Next articleAvani Sundari Ch7 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here