Home Avani Sundari Avani Sundari Ch8 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch8 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

65
0
Avani Sundari Ch8 Avani Sundari Sandilyan, Avani Sundari Online Free, Avani Sundari PDF, Download Avani Sundari novel, Avani Sundari book, Avani Sundari free, Avani Sundari,Avani Sundari story in tamil,Avani Sundari story,Avani Sundari novel in tamil,Avani Sundari novel,Avani Sundari book,Avani Sundari book review,அவனி சுந்தரி,அவனி சுந்தரி கதை,Avani Sundari tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari full story,Avani Sundari novel full story,Avani Sundari audiobook,Avani Sundari audio book,Avani Sundari full audiobook,Avani Sundari full audio book,
Avani Sundari Ch8 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch8 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

அவனி சுந்தரி – சாண்டில்யன்

அத்தியாயம் – 8 சங்கடப் பரிசு

Avani Sundari Ch8 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

செடி மறைவில் இருந்து தன்னை நோக்கி ஒருவன் வேலெறியத் தொடங்கியதை அறியாமல் இருந்த நலங்கிள்ளி, அவனி சுந்தரியின் இணையற்ற அழகிலும் நந்தவனத்தின் இன்பச் சூழ்நிலையிலும் சிக்கிக் கிடந்ததால், தன் கண்ணுக்கு எதிரே பளபளத்த பளிங்குத் தடாக நீரையே பார்க்கச் சக்தியிழந்து இருந்தானாகையால், பின்னால் நடக்க விருந்ததைப்பற்றி நினைக்கக் கூடத் திராணியில்லாமல், அவனி சுந்தரியின் இடையில் தனது கரத்தைச் செலுத்தியதும், அவள் நகைக்கவே செய்தாள்.

அந்த நகைப்பு நலங்கிள்ளிக்கு எரிச்சலைக் கொடுத்ததால் “எதற்கு நகைக்கிறாய்?” என்று வினவினான், கடுப்புடன் அவளை நோக்கி, ஆனால் இடக்கையை மட்டும் அவன் அழகிய இடையில் இருந்து நீக்கினான் இல்லை.

அவனி சுந்தரி அவனைத் திரும்பிப் பார்க்காமல், எதிரே யிருந்த வாவி நீரை மட்டும் பார்த்துக் கொண்டு சொன்னாள், “நீங்கள் முறை தவறி நடக்கிறீர்கள்” என்று.

“என்ன முறை தவறி நடந்துவிட்டேன்?” என்று வினவினான் நலங்கிள்ளி.

“நீங்களே சொன்னீர்கள், அரண்மனையில் பதினாறு நாட்கள் வரை காலமான மன்னனுக்குத் துக்கம் கொண்டாட வேண்டும் என்று” என்று. அவனி சுந்தரி சுட்டிக் காட்டினாள்.

“ஆம் சொன்னேன்.”

“இந்தக் குளத்துப் படிகளுக்கு வந்ததும், என்னைப் பலவந்த மாக உட்கார வைத்துக் கையைப் பிடித்துக் கொள்ளும்படிதான் நான் சொன்னேன்.”

“ஆம் சொன்னாய்”

“நீங்கள் கையைப் பிடித்துக் கொள்ளவில்லையே.

அப்பொழுதுதான் புரிந்தது நலங்கிள்ளிக்கு அவள் இடையில் தான் கையைச் செலுத்தியிருப்பது. அவசர அவசரமாகக் கையை இழுத்துக் கொண்டான். அதைக் கண்ட அவள் மெல்ல நகைத்தாள். “இங்கு வருவதே தப்பென்று கூறினீர்கள். வந்ததும் உங்கள் செய்கை துக்கத்துக்கு நேர் விரோதமாக இருக்கிறது. அரண்மனைக் காவலரில் யாராவது இந்த நிலையில் நம்மைப் பார்த்தால் என்ன ஆகும்?” என்று கேட்டாள்.

நலங்கிள்ளி சங்கடத்தால் அசைந்தான். கையைப் பிடித்துக் கொண்டு, “உன்னுடன் இங்கு உட்கார்ந்திருந்தால் யாரும் எதுவும் நினைக்க மாட்டார்களாக்கும்?” என்று சீறவும் செய்தான்.

“அதற்கே தவறாக நினைத்தால், இடையில் நீங்கள் கையை அனுப்பி அணைத்தால் என்ன நினைப்பார்கள்?” என்று கேட்டாள் அவனி சுந்தரி.

கொஞ்ச நஞ்சம் இருந்த நிதானத்தையும் அவள் பேச்சினால் கைவிட்டான் நலங்கிள்ளி. அதன் விளைவாக, மீண்டும் அவள் இடையில் கையைச் செலுத்தித் தன்னை நோக்கி அவளை இழுத்தான் பலவந்தமாக. “இப்பொழுது என்ன சொல்கிறாய்?” என்று கேட்கவும் செய்தான்.

“நான் போலிப் பலவந்தம் தான் செய்யச் சொன்னேன். உங்கள் பலவந்தம் உண்மையாகவே இருக்கிறது. கிள்ளிவளவர் உங்களை மன்னிப்பாராக” என்றாள் அவனி சுந்தரி.

ஆனால் நலங்கிள்ளி, கிள்ளிவளவனைப் பற்றியோ துக்கத்தைப் பற்றியோ நினைக்கும் நிலையில் இல்லை. அவள் இடையைச் சுற்றிச் சென்ற கை மன்மேலும் இறுகவே செய்தது. அந்த இறுக்கல் அவளுக்கும் தேவையாகவே இருந்தது. அத்தகைய ஸ்பரிசத்தை அதுவரை அறியாதவளும், வீராங்கனையுமான அவனி சுந்தரி, உணர்ச்சிப் பெருக்கால் துடித்தாள். அதன் விளைவாக, அவனது வலது கையைத் தன் கையால் பிடித்துக்கொண்டாள். விரல்களுடன் விரல்கள் பின்னி விளையாடின. முகங்கள் பரஸ்பம் திரும்பி நோக்கின. கண்கள் ஒன்றையொன்று கவ்வின. நேரம் சிறிது நீடித்திருந்தால் என்ன நேரிட்டிருக்குமோ சொல்ல முடியாது. அந்தச் சமயத்தில் ஏற்பட்ட பெரும் முனகல் அவர்கள் இன்ப நிலையைச் சரேலெனக் கிழிக்கவே, இருவரும் பிரிந்து உட்கார்ந்தார்கள் சட்டென்று.

அவனி சுந்தரி அடுத்த விநாடி எழுந்திருந்து, மன்னனையும் எழுந்திருக்கும்படி கூறினாள். எழுந்திருக்க இஷ்டமில்லாத நலங்கிள்ளி “எதற்கு?” என்று சுள்ளென்று எரிந்து விழுந்தான்.

அப்படி அவன் விழுந்ததன் காரணத்தைப் புரிந்து கொண்டதால், அவனை நோக்கிப் புன்முறுவல் கொண்ட அவனி சுந்தரி “வாருங்கள். அந்த முனகல் என்னவென்று பார்ப்போம்” என்று கூறிச் செடிகளின் மறைவிடத்தை நோக்கி நடந்தாள். அவளைப் பின் தொடர்ந்து நலங்கிள்ளி, செடி மறைவில் இருந்த காட்சியைக் கண்டு பிரமித்துப் போனான். அங்கு வேல் வீரனொருவன் கையில் வேலுடன் கீழே விழுந்து கிடந்தான், மூர்ச்சையாக. அவன் பக்கத்தில் பூதலன் நின்று கொண்டிருந்தான் அசட்டையுடன். கீழே விழுந்த வீரன் நிலையைப் பார்த்த அவனி சுந்தரி, “பூதலா! இவனைக் கொல்ல வேண்டாம் என்று சொன்னேனே” என்று கடிந்து கொண்டாள், பூதலளை நோக்கி ,

“கொல்லவில்லை. மூர்ச்சையாகியிருக்கிறான். இத்தனைக்கும் வேலெறிய முற்பட்ட சமயத்தில் கழுத்தை மாத்திரம் லேசாகத்தான் பின்புறத்தில் இருந்து பிடித்தேன், சுத்தப் பூஞ்சையாயிருக்கிறான்” என்று பூதலன் அலுத்துக் கொண்டான்.

நலங்கிள்ளிக்கு விஷயம் ஏதும் புரியாததால், அவனி சுந்தரியை நோக்கித் திரும்பி, “இது என்ன?” என்று விசாரித் தான்.

“இன்று உங்களைத் தீர்த்துக் கட்டும்படி நெடுங்கிள்ளி என்னிடம் கூறியிருந்தான்…” என்று இழுத்தாள் அவனி சுந்தரி.

“உன்னிடமா?” இந்தச் சொல் மிக வியப்புடன் உதிர்ந்தது நலங்கிள்ளியிடமிருந்து.

“ஆம்”

“அப்படியானால்?”

“நெடுங்கிள்ளி சொன்னபடி உங்களை நந்தவனத்துக்கு அழைத்து வந்தேன். உங்களிடம் அகப்பட்டுத் திணறினேன். அவன் அனுப்பியிருந்த வீரன் உங்கள் மீது வேலைக் குறிவைத் தான்…” அதற்கு மேல் ஏதும் சொல்லவில்லை, அவனி சுந்தரி. இருந்தாலும் புரிந்து கொண்டான் நலங்கிள்ளி.

“அவன் சொன்னதையும் செய்தாய். அது நடக்காமல் இருக்கவும் ஏற்பாடு செய்தாய். எதற்காக அவனி சுந்தரி ?” என்று வின வினான் நலங்கிள்ளி.

அவனி சுந்தரி உடனடியாகப் பதில் சொல்லவில்லை மன்னனுக்கு. “பூதலா! இவனை நெடுங்கிள்ளியின் அரண்மனை வாசலில் எறிந்து விடு. கொல்லாதே. ஆனால் விழிக்காதபடி பார்த்துக்கொள்” என்று கட்டளையிட்டாள் பூதலனை நோக்கி.

ஆதலன் அவளை நோக்கித் தலையை அசைத்துவிட்டுக் குழந்தையைத் தூக்குவது போல் அந்த வீரனைத் தூக்கிக் கொண்டு நடந்தான். அவன் சென்ற பிறகு, மன்னனை நோக்கித் திரும்பிய அவனி சுந்தரி, “இன்றுடன் உங்கள் ஆபத்து தீர்ந்து விட்டது. உங்கள் நாட்டுக்கு ஆபத்து தொடங்குகிறது” என்று கூறிப் பெருமூச்சும் எறிந்தாள்.

“விளக்கமாகச் சொல்” என்று கேட்டான் நலங்கிள்ளி.

“தனது கொலை முயற்சி பலிக்கவில்லை என்பதை இன்று இரவு புரிந்து கொள்ளுவான் நெடுங்கிள்ளி. அவன் முயற்சி உங்களுக்கும் தெரிந்து விட்டதைப் பறைசாற்றவே இந்த வீரனை நெடுங்கிள்ளி தங்கியிருக்கும் அரண்மனைக்கு எதிரில் எறியச் சொன்னேன். இவன் மூர்ச்சையுற்ற நிலையைக் கண்டதும் வேல் எறி படலம் முடிந்து விட்டதை அறிந்து, பறந்து விடுவான் தனது நகருக்கு நெடுங்கிள்ளி. தந்திரத்தால் தனது ஆசை பலிக்காதவன். நேர் எதிர்ப்பால் அதைப் பூர்த்தி செய்து கொள்ள முயலுவான். உங்கள் மீது வெகுசீக்கிரம் போர் தொடுப்பான்” என்று விளக்கினாள் அவனி சுந்தரி.

அதைக் கேட்ட நலங்கிள்ளி, சீரிய சிந்தனையில் இறங்கினான். பிறகு சொன்னான்: “நீ வந்த காரியம் நிறைவேறிவிட்டது” என்று.

“என்ன காரியம் அது?” சர்வ சாதாரணமாகக் கேட்டாள் அவனி சுந்தரி.

“சோழ நாட்டைப் பிளக்கும் காரியம்” என்றான் நலங்கிள்ளி. சொல்லிப் பெருமூச்சும் விட்டான்.

அவனி சுந்தரி நகைத்தாள். ” இத்தனை நாள் நீங்களும் நெடுங்கிள்ளியும் ஒன்றுபட்டு இருந்தீர்களா? இல்லை. கிள்ளி வளவரும் நெடுங்கிள்ளியுந்தான் இணைபிரியாதிருந்தார்களா? ஒருவேளை கிள்ளிவளவர் தம்பியிடம் அப்படி நேசம் வைத்திருந்தாலும், அதை குளமுற்றம் முறித்துவிட்டது. நான் இங்கு வருமுன்பே உங்கள் நாடு பிளந்துவிட்டது” என்று சுட்டிக் காட்டினாள் நகைப்பின் ஊடே.

அவள் சொன்னது அனைத்தும் உண்மை என்பதை நலங்கிள்ளி உணர்ந்து கொண்டானானாலும், அதை இன்னொரு நாட்டு இளவரசியிடம் ஒப்புக் கொள்ள மனமில்லாததால், பெருமூச் செறிந்தான். அதைக் கண்ட அவனி சுந்தரி, “நெடுங்கிள்ளியின் ‘தூதன் வேல் முதுகில் பாயாதது வருத்தம் போலிருக்கிறது மன்னருக்கு?” என்று ஏளனத்துடன் வினவினாள்.

அதைக் கேட்ட அவளை, ‘நீண்ட நேரம் உற்று நோக்கினான், நலங்கிள்ளி. அவள் விழிகளெனும் கூர்வேல்கள் அவனை நேரிடையாகவே தாக்கி அசைத்தன. அவள் பவள அதரங்கள் அவளை நிலைகுலையச் செய்தன அவள் உருவம் முழுவதற்கும் மெருகு கொடுத்த நிலவு அவன் மதியைச் சொல்லவொண்ணா நிலைக்கு இழுத்துச் சென்று கொண்டிருந்தது. இந்த அஸ்திவாரங்களில் இருந்து விடு வித்துக்கொள்ளச் சற்று அவளை விட்டு நகர்ந்து, அப்படியும் இப் படியும் நடந்தான்.

“மன்னர் உத்தரவை மீறி இந்த நந்தவனத்துக்குள் வருபவர்களுக்குப் புகாரில் தண்டனை உண்டென்று கேள்வி” என்று மயக்கம் தரும் ஒளியில் சொன்னாள் அவனி சுந்தரி.

“ஆம்” என்று சீறிக்கொண்டு, அவளை நோக்கித் திரும்பினான் நலங்கிள்ளி. அடுத்த விநாடி அவளைச் சரேலென்று இருகைகளாலும் நெருக்கிப்பிடித்து உதடுகளில் பலவந்தமாக முத்திரை ஒன்றையும் வைத்துவிட்டு, அந்த இடத்தைவிட்டு மிக வேகமாக அரண்மனையை நோக்கி நடந்தான் புகாரின் மன்னன்.

அவன் போகும் வேகத்தைப் பார்த்துக் கொண்டே நின்றாள் அவனி சுந்தரி, நீண்ட நேரம். ஏதோ காரணமாக அவள் கை. அவள் இதழ்களைத் தடவியது. “தண்டனை நன்றாயிருக்கிறது மன்னவா!” என்று மெள்ள முணுமுணுத்தாள். ஏதேதோ இன்ப வேதனைகளில் சிக்கிய வண்ணம், தனது இருப்பிடத்தை அடைய அரண்மனையின் ரகசிய வழியை நோக்கி நடக்கலானாள்.

Previous articleAvani Sundari Ch7 | Avani Sundari Sandilyan | TamilNovel.in
Next articleAvani Sundari Ch9 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here