Home Chandramathi Chandramathi Ch7 | Chandramathi Sandilyan | TamilNovel.in

Chandramathi Ch7 | Chandramathi Sandilyan | TamilNovel.in

64
0
Chandramathi Ch7 Chandramathi Sandilyan, Chandramathi Online Free, Chandramathi PDF, Download Chandramathi novel, Chandramathi book, Chandramathi free
Chandramathi Ch7 | Chandramathi Sandilyan | TamilNovel.in

Chandramathi Ch7 | Chandramathi Sandilyan | TamilNovel.in

சந்திரமதி – சாண்டில்யன்

அத்தியாயம் 7: அவள் கதை.

Chandramathi Ch7 | Chandramathi Sandilyan | TamilNovel.in

ராஜபுதனத்து ராட்சஸியெனப் பெயர் வாங்கிய சந்திரமதி தன்னை பிரபு என்று அழைத்ததும், கட்டளையிடுங்கள் என்று கூறியதும், அத்தனை தூரம் சரசத்துக்கு இடம் கொடுத்ததும், முந்திய இரவு நிலைமை மாறிவிட்டதென்றும், சொன்ன சொற் களின் முழு அர்த்தம் விளங்காததால், “விளங்கச் சொல் சந்திரமதி” என்று கேட்டான், தலை வணங்கி அவள் எதிரில் நின்றபடி.

அதுவரை அவன் தன்னைக் கட்டித் தழுவியதால் லேசாகச் சீர்குலைந்திருந்த தனது ஆடையைச் சரிப்படுத்திக் கொண்டு எழுந்து இரு முழங்கால்களையும் கட்டிய வண்ணம் உட்கார்ந்த சந்திரமதி, “இதில் விளக்குவதற்கு அதிகம் ஏதுமில்லை. நீங்களே ஊகித்துக் கொள்ளலாமே” என்று சொல்லித் தலை கவிழ்ந்தாள். அன்னை பூமியை நோக்கினாள்.

“பூமியை ஏன் பார்க்கிறாய்? தலை நிமிர்ந்து பேசு” என்று சாதாரணமாகக் கூறினான் சத்ருஞ்சயன்.

“தாயில்லாத அபலைக்குப் பூமிதான் அன்னை . சங்கடம் வரும்போது அன்னையை நோக்குவது பெண்களின் இயல்பு” என்றாள் சந்திரமதி .

சத்ருஞ்சயன் தாயில்லாத அந்தப் பெண்ணை அனுதாபத்துடன் நோக்கினான், சில விநாடிகள். பிறகு கேட்டான், “ஏன் பாசாங்கு செய்கிறாய், பயந்தவள் போல்? உன்னை ராட்சஸி என்று ராஜபுதனம் பூராவும் சொல்கிறதே? ” என்று அனுதாபத்தை உதறி மூர்க்கத்தனமாகக் கேட்டான்.

“மாற்றானுக்கு, என் பெண்மையைக் கவரலாம் என்று துணியும் கயவர்களுக்கு, நான் ராட்சஸி . என் கணவருக்கு நான் அடிமை” என்றாள் சந்திரமதி .

சத்ருஞ்சயன் உள்ளத்தில் சிறிது சாந்தி நிலவியது, மாற்றாருக்கு ராட்ஸசியென்று அவள் தன்னைச் சொல்லிக் கொண்டதில். இருப்பினும் கேட்டான், “அப்படியானால் உன் கணவர் யார்? ” என்று.

சந்திரமதி தலை குனிந்த வண்ணம் சொன்னாள், “இந்தக் கேள்வியைக் கேட்பவர், இத்தனை நேரம் என்னைத் தொட்டவர்…” என்று. இந்தப் பதில் சத்ருஞ்சயனைத் தூக்கிப் போடவே, “யார், நானா? ” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.

“அதில் இன்னும் சந்தேகமிருக்கிறதா? ” என்று சந்திரமதி கேட்டாள். “இத்தனை நேரம் நீங்கள் தொட்டுக் குலாவியதற்கு இடங்கொடுத்த என்னை வேசியென்று நினைக்கிறீர்களா? ” என்று கேள்வியில் மூர்க்கத்தனத்தைக் காட்டினாள் சந்திரமதி .

“சந்திரமதி!” துவங்கிய பேச்சை முடிக்க முடிய வில்லை சத்ருஞ்சயனால்.

சந்திரமதி மெல்லத் தனது தலையை உயர்த்தி அவனை வெறுப்புடன் நோக்கினாள். “நீங்கள் ராஜ புத்திரர்தானே? ” என்று வெறுப்புக் குரலிலும் துலங்கக் கேட்டாள்.

“இந்தச் சந்தேகம் ஏன் வந்தது உனக்கு? ” என்று சத்ருஞ்சயன் வினவினான், சீறிய அவள் கண்களும், குரலில் தெரிந்த வெறுப்பும் அவனுக்கு அச்சத்தை விளைவித்ததால்.

சந்திரமதி உடனடியாகப் பதில் சொல்லவில்லை. சொன்னபோது அவள் குரலில் உறுதி நிரம்பிக் கிடந்தது. “சலூம்ப்ரா வம்சத்தவரே! நேற்றிரவு நிகழ்ச்சிகளைச் சிந்தித்துப் பாருங்கள், சிந்திக்கும் சக்தியிருந்தால், ராஜபுத்திரர்கள் இல்லங்களில் புருஷன் பூஜை செய்யும்போது யார் பூஜா திரவியங்களை எடுத்துக் கொடுப்பார்கள்…”

“மனைவி . “

“உத்திரணியிலிருந்து நீரை எடுத்து ஊற்றும் உரிமை யாருக்கு? ”

“மனைவிக்கு…”

“புஷ்பார்ச்சனைக்குத் தட்டில் உதிரிப் புஷ்பங்களை வைத்துக் கொண்டு நிற்கக் கூடியவள் யார்? ”

“மனைவி” என்ற சத்ருஞ்சயன் பேச முடியாமல் தவித்தான். இத்தனையும் முந்திய நாள் இரவில் அவள் இல்லத்தில் நடந்திருக்கும் நிகழ்ச்சிகள். இது எப்படி தன் புத்தியில் ஏறாமல் போய்விட்டது என்று நினைத்து வியப்பெய்தினான்.

அவன் அப்படிக் குழம்பி நின்ற நிலையில் அவள் கணீரெனக் குரலை எழுப்பி, “ராஜபுத்திரரே! ஊரில் போகிறவர் வருகிறவர்களுக்கெல்லாம் தலையில் நீர் ஊற்ற நான் என்ன அடிமைப்பெண்ணா? அடிமைப் பெண்கள் கூட ராஜபுதனத்தில் கண்ட புருஷர்களை நீராட்ட வரமாட்டார்களே? உங்களை நீராட்டினேன். ஆடையெடுத்துக் கொடுத்தேன் உடுக்க. பூஜைக்கு உதவினேன். இத்தனையும் எதைக் குறிக்கிறது? நீங்கள் என்ன சுத்த அறிவிலியா? ” என்று சீறினாள்.

சத்ருஞ்சயன் அவள் கைகளைப் பிடித்துத் தூக்கி, “நான் அறிவிலிதான் சந்திரமதி, அறிவிலிதான். உன்னைப் பார்த்ததும் என் அறிவெல்லாம் எங்கோ ஓடி விட்டது. எனக்குப் புத்தி உண்டு, உன் முன்னிலையில் இயங்க மறுக்கிறது. கண்கள் இருக்கின்றன. பார்க்கமுடியவில்லை. என்னைக் கள்வனென்றாய் . இல்லை நான் கள்வனில்லை, குருடன்!” என்று கூறி விட்டு, நின்ற அவள் முன்பு மண்டியிட்டான்.

அவன் தலையைத் தனது கால்களில் இணைத்துக் கொண்ட சந்திரமதி அவன் தலைக் குழலைக் கோதி விட்டாள். “மனைவி முன்பு மண்டியிடுவது அழகா? ” என்று வினவினாள் குழைந்த குரலில்.

“மனைவி தெய்வ மங்கையானால் மண்டியிடுவது தவறல்ல . அடி சந்திரமதி! உன்னைத் தவறாக நினைத் ததற்காக என்னை மன்னித்துவிடு” என்று இணைந்த அவள் பருவத் தொடைகளில் தலையை உருட்டினான்.

அவன் தலையை அவள் தன் கால்களில் நன்றாக அழுத்திக்கொண்டு அவனைப் பெயர் சொல்லி அழைத்தாள். “சத்ருஞ்சயா! என்ன அழகான பெயர்! எத்தனை வீரமான பெயர்! நீ வருவாய் என்று எனது தத்தை முன்னமே ஊகித்து விட்டார். ராணாவுக்குப் பெண் கேட்டு இருவர் வந்து மானபங்கப்பட்டுச் சென்றதுமே சொன்னார் என்னிடம், ‘சந்திரமதி! இத்துடன் இந்தப் பெண் கேட்கும் படலம் நின்று விட்டது. இன்னும் யாராவது ஒருவன் வருவான். அநேகமாக எந்த விஷயத்திலும் தோல்வியை ஏற்காத சந்தன் சலூம்ப்ரா வருவான். அவன் எனது தோழன். ஆனால் மேவார் நன்மைக்கு முன்பு எங்கள் தோழமையை மதிக்க மாட்டான். அல்லது வேறு யாரையாவது அனுப்புவான்’ என்று சொன்னார். அப்பொழுது நாங்களிருவரும் எங்கள் பூஜா மண்டபத்தில் பேசிக் கொண்டிருந்தோம். திடீரென்று தந்தை வேதனையுடன் சொன்னார். ‘குழந்தாய், சலூம்ப் ராவுக்கு ஒருமகன் இருக்கிறான். அவனுக்கு உன்னைக் கொடுப்பதாக நான் முடிவு செய்து நீண்ட நாளாகிறது. நானும் சந்தனும் பால்யத்தில் செய்த சபதம் அது. எங்களிருவரில் ஒருவருக்குப் பெண் குழந்தையும், இன்னொருவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தால் அவர்களிருவருக்கும் மணம் முடித்து விடுவது என்று உறுதி செய்து கொண்டோம். அவனுக்கு மகன் பிறந்தான். எனக்கு நீ பிறந்தாய் . இருவருமே மனைவிகளை இழந்தோம், சிறுவயதில். பிறகு சலூம்ப்ரா போர்க்களம் சென்றுவிட்டான். அந்தக் குழந்தையை சதா புரவியில் வைத்துக்கொண்டு சந்தன் சுற்றுவதாகக் கேள்விப் பட்டேன். நீதான் அவன் மகனுக்கு மனைவியாக முடியும் என்றதால் பூரிப்படைந்தேன். இந்த ஒண் டாலா கோட்டையில் என்னிடம் போர்ப் பயிற்சி பெற, சாஸ்திர வித்தைகளை அறிய, பல ராஜபுத்ர வாலிபர்கள் வந்தார்கள். பலர் நல்ல வீரர்கள்; அழகர்கள். ஆனால் உன்னை வேறு யாருக்கும் கொடுக்க முடியவில்லை. எப்படியும் ஒருநாள் சத்ருஞ்சயன் உன்னைத் தேடி வருவான். அப்பொழுது அவனை ஏற்க நீ தயாராக இரு’ என்று தந்தை சொன்னார். வேதனை நிறைந்த தந்தையின் சொற்களைக் கேட் டேன். உன்னைத் தவிர வேறு யாருக்கும் என்னைக் கொடுப்பதில்லை என்ற முடிவையும் செய்து கொண்டேன். அந்தப் பூஜைக் கூடத்திலேயே நினைத் துப் பார்த்தேன், எப்படியிருப்பாயோ என்று. எப்படியும் விகாரமாயிருக்கக் கூடாது என்று ஹயக்ரீவ மூர்த்தியை, எங்கள் குலதெய்வத்தைப் பிரார்த்தித்தேன். சொல்லி வைத்தது போல் மறுநாளே நீ வந்தாய்…” என்ற சந்திரமதி தனது கதையைச் சிறிது நிறுத்தினாள். பிறகு சிரித்தாள். “உங்களை ஏகவசனத்தில் பேசுகிறது எத்தனை இன்பமாயிருக்கிறது? ” என்றும் சொன்னாள்.

சத்ருஞ்சயன் உள்ளம் பெரும் மகிழ்ச்சியில் இருந்ததால், “மேலே சொல் சந்திரமதி” என்று ஊக்கினாள்.

அவள் மேலும் தொடர்ந்தாள். கதையில் இம்முறை மரியாதையைக் கையாண்டாள். ‘உங்களைப் பார்த்ததுமே முக ஜாடையிலிருந்து தந்தை உங்களை அடையாளம் கண்டுபிடித்துக் கொண்டார். ஆ கையால் உங்களை அழைத்து வந்தார் எங்கள் இல்லத்துக்கு. பிறகு நடந்தது உங்களுக்குத் தெரியும். முதலில் உங்களுக்குத் தலையில் நீர் வார்க்கச் சொன்னதற்கு நான் மறுத்தேன். பிறகு தன்னந் தனியாக ஒரு பரபுருஷனுக்கு உடை கொண்டுபோகச் சொன்ன போதும் மறுத்தேன். ‘சொல்கிறபடி செய்’ என்று தந்தை கடிந்து கொண்டதால் அதற்கும் உட்பட்டேன். பூஜைக்கு உதவி செய்யச் சொன்னபோது திட்டமாக மறுத்தேன். ‘உங்களுக்கே இது அழகாக இருக்கிறதா? ” என்று வினவினேன். ‘உன் புருஷனுக்கு நீ செய்ய வேண்டிய கடமையைத்தான் செய்யச் சொல்கிறேன்’ என்றார் தந்தை, புருஷனா! கேட்டதுமே திக்பிரமை கொண்டேன். நீங்கள் யாரென்பதைச் சொல்ல வாளின் பிடியைக் காட்டினார் தந்தை. அப்பொழுதும் மறுத்தேன். வாளை யாராவது திருடி வந்திருக்க லாமென்று சொன்னேன். தந்தை நகைத்தார்.

‘சலூம்ப்ராவின் மகன் திருடனல்ல’ என்றார். வேறு வழியில்லாமல் பூஜைக்கு உதவினேன். பூஜையில் நான் உங்கள் உருவத்தை முழுவதும் பார்த்தேன். உங்கள் அளவான தேகம் வீரத்தைப் புலனாக்கியது. உங்கள் முகம் குழந்தை முகாமயிருந்தது. அது என் மனத்தை ஈர்த்தது. நான் தந்தையுடன் எதுவுமே பேசவில்லை. அன்று படுத்திருந்தபோது தனிமையில் நிகழ்ச்சிகளை நினைத்து நகைத்தேன், பைத்தியம் போல…” இந்த இடத்தில் சிறிது நிறுத்தினாள்.

“அந்த நகைப்பை நானும் கேட்டேன். சந்திரமதி! என்ன இன்பமாக நகைத்தாய்!” என்று கூறிய வண்ணம் எழுந்து அவளைத் தன்னை நோக்கி இழுத்தான் மெதுவாக.

“வேண்டாம். அந்திப் பொழுது வந்து விட்டது. விடுங்கள். புறப்படுவோம் வீட்டுக்கு” என்று அவள் சிறிது திமிறினாள்.

அவன் அந்தப் பொய்த் திமிறலை அடக்க முயன்று அவளை அப்படியே தூக்கிக்கொண்டு எதிரே முறிந்து விழுந்த கிளையை நோக்கி நடந்தான். “விடுங்கள் என்னை? ” என்று சற்று இரைந்தே சொன்னாள்.

அப்பொழுது மூன்றாவது ஒரு குரலும் புகுந்தது இடையே “விடு அவளை” என்று.

அவளை விடாமலேயே திரும்பினான். சத்ருஞ்சயன். கோட்டைக் காவலர் தலைவன் உருவிய வாளுடன் எதிரே நின்றுகொண்டிருந்தான்.

Previous articleChandramathi Ch6 | Chandramathi Sandilyan | TamilNovel.in
Next articleChandramathi Ch8 | Chandramathi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here