Home Cheran Selvi Cheran Selvi Ch10 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch10 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

136
0
Cheran Selvi Ch10 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch10 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch10 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 10. சீலையின் கதை

Cheran Selvi Ch10 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

மாலை முதிர்ந்து விட்டதால் ஏற்றப்பட்டிருந்த அரபு விளக்கு ஒன்று கூரையிலிருந்து தொங்கிய காரணத்தால் அவ்வறையில் மங்கலான வெளிச்சம் வீசிக் கொண்டிருந்தாலும், அந்த வெளிச்சத்தில் லேசாகச் சிரித்துக் கொண்டு திரை
மறைவிலிருந்து வெளிவந்த அஜ்மல்கானின் வெண் பற்கள் கூட சிறிது பயங்கரத்தைக் காட்டியதாலும், பின்னால் கத்தியை கழுத்தில் அழுத்தியவன் சற்று அதிகமாகவே கத்தியின் நுனியை அழுத்தத் தொடங்கியதாலும் எச்சரிக்கை
அடைந்து விட்ட இளவழுதி, அந்த எச்சரிக்கையை சிறிதும் முகத்திலோ செயலிலோ காட்டவில்லை.
“அராபியர்கள் நண்பர்களை வரவேற்கும் முறை இதுதானா?” என்று அவன் அஜ்மல்கானை நோக்கி கேட்ட கேள்வியிலும் கோபத்தின் ஒலி இருந்ததேயொழிய எச்சரிக்கையின் நிதானம் இல்லை.
அஜ்மல்கான் அந்த கோபத்தை கவனித்தாலும் கவனிக்காதது போலவே நடந்துகொண்டான். “நீங்கள் நண்பர் என்பது ஊர்ஜிதமான பின்பு நடத்தப்படும் முறை முற்றும் மாறாக இருக்கும்” என்ற அவன் பதிலிலும் அசாதாரணத்
தொனி ஏதுமில்லை,
இளவழுதி சினத்தின் அறிகுறியாக புருவங்களைச் சிறிது சுளித்து “நான் நண்பன் என்று நினைக்காமற் போனால் இங்கு ஏன் என்னை அழைத்தீர்கள்? உங்களை நண்பனாக நான் நினைக்காவிட்டால் நான் தனித்து இங்கு வர
முட்டாளென்ற நினைப்பா உங்களுக்கு!” என்ற கேள்வியை வெறுப்பும் சினமும் கலந்த குரலில் வினவினான்.
அஜ்மல்கான் மெள்ள நகைத்தான். நண்பன் நண்பனைக் கொல்ல முயற்சிப்பதில்லை” என்றும் சொன்னான் நகைப்பின் ஊடே.
உரையாடல் வளரவே இளவழுதி மிக சகஜமாகப் பேசத் தொடங்கினான். “உங்களை நான் எப்பொழுது கொல்ல முயன்றேன்?” என்று கேட்டான்,
“இன்று காலை, வாட் பயிற்சியின் போது” அஜ்மல்லின் சொல்லில் பழய அசட்டை போய் சீற்றம் புகுந்தது.
“வாட் பயிற்சியின் போதா?”
“ஆம்”
“வாட்பயிற்சி எங்கே நடந்தது?”
“விளையாடுகிறாயா இளவழுதி?”
“இல்லை ஸலீம். வாட்பயிற்சியைப் போராக்கியது நீ. அதில் தற்காப்புக்கு எந்த வீரனும் முயல்வது அவசியம்” என்று அஜ்மல்கானைப் போலவே ஏக வசனத்தில் இறங்கினான் இளவழுதி.
அஜ்மல்கான் முகத்திலிருந்து ஏற்றம் மறைந்து சிறிது திருப்தி நிலவியது. “உண்மை. இன்று காலை நான் சிறிது நிதானம் தவறிவிட்டேன். அதுவும் உன் போர்த்திறமையின் விளைவு தான். நீ மிக நன்றாகப் போரிடுகிறாய் இளவழுதி”
என்று பாராட்டவும் செய்தான்.
இளவழுதி அந்தப் பாராட்டுதலை ஏற்கவுமில்லை மறுக்கவுமில்லை. ஆனால் ஒரு கேள்வி மட்டும் கேட்டான். “இப்பொழுது நாம் சந்திப்பது நண்பர்கள் என்ற முறையிலா, விரோதிகள் என்ற முறையிலா?” என்று.
“அது உன்னைப் பொறுத்தது” என்றான் அஜ்மல்கான்.
“உன்னையும் பொறுத்தது. நண்பர்களை வரவேற்கும் முறை இதுவல்ல” என்று பின்னாலிருந்த வீரனைக் கையால் காட்டினான் பாண்டிய வீரன்,
“நண்பன் என்று தெரிந்த பின்பு அவன் இங்கிருக்க மாட்டான்” என்று சொன்னான் அஜ்மல்கான்.
இதைக் கேட்ட இளவழுதி மெள்ள நகைத்தான். “இந்த ஒருவனைக் கொண்டு என்னை மடக்கிவிட முடியுமென்று நினைக்கிறாயா?” என்று வினவினான் நகைப்பின் ஊடே.
“இல்லை. அப்படி நினைக்கவில்லை” என்ற அஜ்மல் கான் தனது இரு கைகளையும் லேசாகத் தட்டவே திடீரென அந்த அறையின் பக்கச் சீலைகள் இரண்டு அகன்றன. அவை மறைத்திருந்த இடத்தில் இருபுறத்தி லும் சுமார் எட்டு வீரர்கள்
வளைவான வாட்களைத் தாங்கி நின்று இளவழுதியைக் கொலைப் பார்வையாகப் பார்த்தார்கள்.
அவர்கள் மீது அலட்சியப் பார்வையொன்றை ஓட. விட்ட இளவழுதி “இப்பொழுது உன்னை உண்மை யாகவே பாராட்டுகிறேன்” என்று கூறினான்.
“எதற்கு?”
“என்னைப் பிடிக்க இத்தனை பேர் வேண்டுமென்று நீ நினைத்ததற்காக”
“அப்படி நினைக்கவில்லை நான்”
“வேறு எப்படி நினைத்தாய்?”
இதற்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை அஜ்மல்கான். “இது ஒரு வணிகஸ்தலம். இந்த இடத்தில் வாள் சத்தம் கேட்டால் வெளியிலிருப்பவர்கள் கிலி அடையலாம். என்ன நடக்கிறதென்று பார்க்க முயலலாம். வேண்டாத மனிதனைச்
சட்டென்று வெட்டிப் போட்டு விட்டால் சத்தம் கேட்காது” என்ற அஜ்மல்கான் வாய்விட்டு மெள்ள நகைத்தான். அந்தச் சிரிப்பில் மிகுந்த குரூரமிருந்தது.
அந்தச் சிரிப்பையோ அதில் ஒலித்த குரூரத்தையோ சிறிதும் சட்டை செய்யாத பாண்டிய வீரன் “அப்படியானால் ஏன் தாமதிக்கிறாய் ஸலீம்!” என்று வினவியதன்றி ஸலீம் என்ற சொல்லைச் சிறிது அழுத்தியும் உச்சரித்தான்.
அந்த உச்சரிப்பை அஜ்மல்கானும் கவனித்ததால் அவன் சிரிப்பு மறைந்தது உதடுகளில். கண்களில் சந்தேகம் நிலவியது. ஆனால் சந்தேகத்தை அவன் சிறிதும் வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் பேச முற்பட்டு, “நீ இறப்பதால் எனக்கு
லாபமில்லை, இருப்பதால் லாபமிருக்கிறது” என்றான்.
“ஆகையால் எனக்கு உயிர்ப் பிச்சையளித்திருக்கிறாய்?” என்று வினவினான் இளவழுதி.
“ஆம்”
உன் லாபத்தில் எனக்குப் பங்கு உண்டா?”
“உண்டென்று அரண்மனை நந்தவனத்தில் சந்தித்த போதே சொன்னேன்.”
“என்ன லாபம்?”
“பணம்!” என்ற அஜ்மல்கான் “சரியாக நடந்து கொண்டால் ஒரு அரசு கூட கிடைக்கலாம்!”
இந்த வாசகத்தை அஜ்மல்கான் முடிப்பதற்கும் எதிர்பாராத திருப்பம் இந்த அறையில் ஏற்படுவதற்கும் சரியாயிருந்தது. தொடர்ச்சியாகப் பேச்சுக் கொடுத்ததால் வாட்களை உருவி நின்ற வீரர்கள் அசட்டை அடைந்து விட்டதை ஓரக்
கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த இளவழுதி, சட்டென்று ஒரு முறை குனிந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரே பாய்ச்சலாக அஜ்மல்கானை நோக்கிப் பாய்ந்தான். அடுத்த வினாடி அவன் வாள் அஜ்மல்கானை ஊட்டியைத் தடவிக்
கொண்டிருந்தது. “டேய் உங்கள் வாட்களைக் கீழே போடுங்கள்” என்று இருப்புச் சலாகை தட்டப்படுவது போன்ற தொனியில் வெளிவந்த அவன் சொற்கள் அறையில் திக்பிரமையையும் மௌனத்தையும் விளைவித்தன. “என் வாள்
உங்கள் போல் கைக்கு அலங்கார மல்ல. தெரியாமல் பின்புறத்திலும் அழுந்தவில்லை. ஒரே அழுத்து, ஸலீமின் உயிர் வானை நோக்கிப் பறந்துவிடும்” என்றும் நெருப்புத் துண்டங்களைப் போல் அடுத்த சொற்கள் உதிர்ந்தன.
அஜ்மல்கான் நரிக்கண்கள் எரிச்சலுடன் சுற்றிலுமிருந்த வீரர்களைக் கவனித்தன. “உங்கள் கையிலென்ன வாளைப் பிடித்திருக்கிறீர்களா? தீவட்டி பிடித்திருக்கிறீர்களா? தலையில் இருப்பது என்ன களிமண்ணா?” என்று
உதடுகளிலிருந்து உதிர்ந்த சொற்களில் ஏளனமும் இருந்தது.
அவன் சொற்களின் பொருளைப் புரிந்துகொண்ட வீரர்கள் வாட்களைக் கீழே போட்டார்கள். அவர்கள் வாட்களைக் கீழே போட்டதும் தன் வாளையும் உறையில் போட்ட பாண்டிய வீரன், அஜ்மல்கான் இடுப்பிலிருந்த வாளையும்
அவிழ்த்து சற்று எட்ட இருந்த உயர்ந்த பீடத்தில் வைத்தான். “இனி நீங்கள் போகலாம். அணி வகுத்து நின்று என்னை வரவேற்றதற்கு நன்றி” என்றும் கூறினான் வீரர்களை நோக்கி.
அவன் குரலிலிருந்த இகழ்ச்சியைக் கவனிக்கவே செய்தான் அஜ்மல்கான். இருப்பினும் அதைக் கவனி யாதது போலவே “சொல்வது உங்கள் காதில் விழ வில்லை?” என்றும் மிரட்டவே வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக அந்த அறையைவிட்டு
வெளியேறினார்கள் கடைசி வீரன் வெளியேறியதும் இளவழுதி அந்த அறையின் கதவைத் தாளிட்டு விட்டு அஜ்மல்கான் இருந்த விடத்திற்கு வந்து “இனி நாம் நண்பர்களாகப் பேசலாம்” என்று கூறவே அஜ்மல்கான் இளவழுதிக்கு ஒரு
ஆசனத்தைக் காட்டி தானும் அவனுக்கு எதிரே அமர்ந்து கொண்டான். இருவருக்கும் இடையிலிருந்த மதுக்குப்பியைச் சுட்டிக்காட்டி “இது சிறந்த அரபு நாட்டு மது. அருந்துகிறீர்களா?” என்று உபசரித்தான்.
“இப்பொழுது அவசியமில்லை” என்று கூறிய இளவழுதி, “இனி நாம் விஷயத்துக்கு வருவோம்” என்றான்.
அஜ்மல்கான் அந்த சில வினாடிகளில் தனது உணர்ச்சிகளையெல்லாம் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து சர்வ சாதாரணமாகப் பேச முற்பட்டு ‘நீ யாரென்பது எனக்குத் தெரியும்” என்றான்.
“இந்த ஊருக்கே நேற்று மாலைதான் வந்தேன். அதற்குள் நான் இத்தனை பிரபலப்பட்டு விட்டது எனக்குப் பெருமையளிக்கிறது” என்றான் இளவழுதி பதிலுக்கு.
அதற்கு நேரிடையாகப் பதில் சொல்லவில்லை அஜ்மல்கான். ‘நீ இங்கு வந்த காரணமும் எனக்குத் தெரியும். உன்னை அனுப்பிய புலவரையும் எனக்குத் தெரியும்” என்று சுட்டிக் காட்டவும் செய்தான்.
இளவழுதியின் இதழ்களில் புன்முறுவல் அரும்பியது. “அப்படியானால் நான் ஏதும் சொல்லத் தேவையில்லை” என்றான் இளவழுதி.
“தேவையில்லை” என்ற அஜ்மல்கான் “எந்த மனிதனுக்கும் ஆசை உண்டு” என்று குறிப்பிட்டான்.
“ஆம் அது இயற்கை”
“ஆசை மூன்று விதப்படும்.”
“மூன்று விதம்!”
“ஆம். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை, இவற்றில் ஆசைகள் எல்லாமே அடங்கி விடுகின்றன.”
இதைக் கேட்ட இளவழுதியின் புன்முறுவல் நன்றாகவே விரிந்தது. அவன் வதனத்தில், “இன்னொரு ஆசையும் எங்களுக்கு உண்டு” என்று கூறினான், பாண்டிய வீரன்.
“இவற்றுக்கு மேலும் ஒரு ஆசை இருக்கிறது?”
“இருக்கிறது.”
“என்ன ஆசை அது?”
“வீர சொர்க்கம். வீரர்கள் ஆசைப்படுவது.”
அதைக் கேட்டதும் சிந்தனையிலிறங்குவது போல் பாசாங்கு செய்து தனது முகவாய்க்கட்டையின் குறுந்தாடியையும் தடவிக் கொண்டான் அஜ்மல்கான். அப்படித் தடவிய வண்ணம் சொன்னான் “முதல் மூன்று ஆசையும் உனக்கு
இல்லாவிட்டால் நான்காவதாக நீ விரும்பும் ஆசையும் கிட்டும்” என்று. அத்துடன் பயங்கரமாக நகைத்தான்.
அஜ்மல்கான் பேய்ச் சிரிப்பையும் நகைச்சுவையுடன் கலந்த மிரட்டலையும் கவனித்த இளவழுதி முகத்தில் வருத்தத்தைப் படரவிட்டுக் கொண்டு “வீர சொர்க்கம் கண்ணுக்குத் தெரிவதில்லை. கண்ணை மூடிய பின்பு எது
கிடைக்குமோ யார் கண்டது?” என்றான் போலி வருத்தத்துடன்,
“பலே பலே” என்று உற்சாகப்பட்ட அஜ்மல்கான் ‘நீ புத்திசாலி” என்று பாராட்டினான் இளவழுதியை.
“மகிழ்ச்சி” என்றான் இளவழுதி,
“முதல் மூன்று ஆசை உனக்கு இருக்கிறது?”

.
“இருக்கிறது.”
“மூன்றையும் தர என்னால் முடியும்.”
“நீ சாதாரண வணிகன் தானே?”
“ஆம் அரசியலும் ஒரு வியாபாரந்தான். அந்த வியாபாரத்துக்கு நீ தயாரா?” என்று வினவினான் அஜ்மல்கான்.
“பயன் தருவதானால் நான் தயார்” என்றான் இளவழுதி,
“அஜ்மல்கான் தனது ஆசனத்தில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான். “பயன் நீ கனவிலும் நினைக்க முடியாத பலன் இளவழுதி. பொன்னாசை! இப்பொழுது ஆயிரம் மோஹராக்கள்! அதைப் போல பத்து மடங்கு. பிறகு பெண்!
இந்த நாட்டு இளவரசி, அவளைவிட அழகியை நீ காண முடியாது. மண்! பாண்டிய நாட்டு அரசபீடம். அதற்கு மேல் என்ன இருக்கிறது?” என்று மூடிய கண்களைத் திறக்காமலே ஜபம் செய்வது போல் வார்த்தைகளை உதிர்த்தான்
அஜ்மல்கான். அந்த சமயத்தில் விளக்கொளியில் அவன் முகத்தில் பயங்கரச் சாயை ஒன்று படர்ந்தது.
அதைக் கண்டும் காணாதது போல் இளவழுதி கேட்டான். “இத்தனையும் உன்னால் கொடுக்க முடியும்?” என்று.
“முடியும். காரியம் முடிந்த பின்பு.” அஜ்மல்கான் கண்களை மூடிய வண்ணமே பேசினான்.
“என்ன காரியம் அது?”
“ரவிவர்மன் அழிவு.”
“கொலையா?”
“ஆம்!” என்ற அஜ்மல்கான் கண்களைத் திறந்தான். “அந்தப் பணி உன் கையால் நிறைவேற வேண்டும்” என்று சொல்லிப் பற்களைக் கடித்தான். பிறகு பைத்தியம் போல் நகைத்தான். “அஞ்சாதே, உடனடியாக அல்ல.. சமயம் வரும்போது
நானே சொல்கிறேன். ரவிவர்மன் அழிவில் உன் அதிர்ஷ்ட ம் உயரும். இது சகஜம். எப்பொழுதும் ஒருவன் அழிவில் இன்னொருவன் உயருகிறான்” என்றும் சொன்னான், அந்தப் பயங்கர நகைப்புக்கிடையே.
இளவழுதி சற்று சிந்தித்தான். “இந்த உயர்ந்த பணியை எப்பொழுது துவங்க வேண்டும்?” என்று விசாரித்தான்
பதிலுக்கு அஜ்மல்கான் எழுந்திருந்து திரைமறைவில் சென்று ஒரு சீலையுடன் திரும்பி வந்தான். அதை எதிரேயிருந்த மஞ்சத்தில் விரித்தான். “இப்பொழுது இதைப் பார்” என்றும் சொன்னான் இளவழுதியை நோக்கி.
இளவழுதி அந்தச் சீலையை நோக்கிப் பெரும் பிரமிப்படைந்தான். சீலை சொன்ன கதை பயங்கரக் கதை; தமிழகத்தின் அழிவுக் கதை.

Previous articleCheran Selvi Ch9 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch11 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here