Home Cheran Selvi Cheran Selvi Ch11 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch11 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

84
0
Cheran Selvi Ch11 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch11 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch11 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 11. நெகிழ்ச்சியின் அதிர்ச்சி

Cheran Selvi Ch11 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

அறையின் இருளைக் கிழித்த அரபு விளக்கின் வெளிச்சத்தில், எதிரேயிருந்த மஞ்சத்தில் விரிந்து கிடந்த சீலை சொன்ன கதையை முதல் கண்ணோட்டத்திலேயே புரிந்து கொண்ட பாண்டிய வீரன், அதை உற்றுக் கவனிக்க கவனிக்க
விவரணத்துக்கும் அப்பாற்பட்ட பிரமிப்பையும் வியப்பையும் அடைந்தான். நன்றாக முனை சீவப்பட்ட கோழி இறகால் கடுக்காய் கொண்டு காய்ச்சிய நல்ல கறுப்பு மையால் சீலையில் இழுக்கப் பட்டிருந்த கோடுகளும் புள்ளிகளும்
அம்புகளும் சித்திரங்களும் பெரிய போர்க் கதையைச் சொல்வதைப் புரிந்து கொண்ட இளவழுதி ஒவ்வொரு கோட்டிலும் புள்ளியிலும் தனது வலது கை ஆள்காட்டி விரலை வைத்து ஏதோ மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
தவிர சீலையின் கோடுகளுக்கு இடையிடையே வரையப்பட்ட புரவிக் கூட்டமும் மலைப்பகுதிகளுங்கூட அவன் சிந்தனையைக் கிளறியதால் தலையை இருமுறை தானாகவே ஆட்டிக் கொண்டான்.
இளவழுதியின் கை விரல் ஓடிய முறையையும், அது அழுந்திய இடங்களையும் எதிரே நின்ற வண்ணம் கவனித்த அஜ்மல்கானின் நரிக்கண்களில் சந்துஷ்டி நன்றாகவே விரிந்தது. அதன் விளைவாக ஏற்பட்ட உற்சாகத்துடன்
சொன்னான், “இளவழுதி! சேரர் படைகளுக்கு தலைமை வகிக்க உன்னை ஏன் புலவர் அனுப்பினாரென்பது இப்பொழுது எனக்கு மிக நன்றாகத் தெரிகிறது” என்று.
அஜ்மல்கான் சொற்களைக் காதில் வாங்கிய பிறகும் கண்களைச் சீலையிலிருந்து எடுக்காத இளவழுதி தலை குனிந்த வண்ணமே “ஏன்” என்று ஒரு ஒற்றைச் சொல் கேள்வியை மட்டும் வீசினான்.
அஜ்மல்கான் இதழ்களில் குரூரப் புன்முறுவல் ஒன்று படர்ந்தது. “சேர, பாண்டிய, சோழ, நாடுகளில் உன்னை விடச் சிறந்த தந்திரசாலி கிடையாது. போர்த்தந்திரங்களை அறிந்தவனும் கிடையாது. இதைப் புலவர் நன்றாக
அறிந்துகொண்டிருக்கிறார்” என்று பதிலிறுத்தான் அஜ்மல்கான் புன்முறுவலின் ஊடே.
இளவழுதி தனது ஆள்காட்டி விரலை சீலையில் ஒரு புள்ளியின் மீது அழுத்திக்கொண்டே தலையைத் தூக்கி அஜ்மல்கானை நோக்கினான். “அது உனக்கு எப்படித் தெரிந்தது?” என்று வினவினான் பாண்டிய வாலிபன் குரலில்
எந்தவிதக் கிளர்ச்சியையும் காட்டாமல்.
“உன் விரலைப் பார்” என்ற அஜ்மல்கான் சீலையில் அழுத்தப்பட்டிருந்த விரலைச் சுட்டிக் காட்டினான்.
“அது ஆள் காட்டி விரல், அதற்கென்ன?” என்று வினவினான் இளவழுதி ஏதும் அறியாதவன் போல.
“அது ஆள்காட்டி விரல் மட்டுமல்ல, இடங்காட்டி விரல்.” இதைச் சொன்ன அஜ்மல்கானின் முகம் நன்றாகவே மலர்ந்தது. அந்த மலர்ச்சியில் குரூரம் பெரிதும் இணைந்திருந்தது.
“இடங்காட்டி விரலா!” போலி வியப்பைக் காட்டினான் இளவழுதி.
“ஆம். இப்பொழுது உன் விரல் ஊன்றியிருக்கும் இடம் மதுரை, பாண்டிய நாட்டுத் தலைநகர்.”
“ஆம். அது மட்டுமல்ல; இதற்கு முன்பு அந்த விரல் தாமதித்து நின்ற இடம் வீரதவள பட்டணம் அங்கிருந்து காஞ்சி வழியிலும் நகர்ந்தது”.
“நன்றாகக் கவனித்திருக்கிறீர்கள்.”
“எதையும் ஊன்றிக் கவனிப்பது என் தொழில்.”
இந்த சமயத்தில் இருவர் கண்களும் கலந்தன ஒரு வினாடி. பிறகு கண்களை அகற்றிச் சீலைமீது கண்களை ஓட்டிய அஜ்மல்கான் “இளவழுதி! இதிலுள்ள சித்திரங்களை நீ ஆராய்ந்ததைக் கண்டேன். உனக்குக் கலை அறிவு நிரம்ப
இருக்கிறது” என்று பாராட்டவும் செய்தான்.
“ஓவியக்கலை போர்க்கலையுடன் இணையும்போது என் மனம் அதில் ஈர்க்கப்படுகிறது” என்றான் இளவழுதி அஜ்மல்கான் முகத்தில் வைத்த கண்களை அகற்றாமலே.
“இரண்டும் இந்தச் சீலையில் இருக்கின்றனவா?” என்று கேட்டான் அஜ்மல்கான்.
“ஆம். நல்ல ஓவியனின் திறமையைச் சித்திரங்களில் காண்கிறேன். அவை அமைந்திருக்கும் இடங்களில் போர்க்கலையைக் காண்கிறேன்.”
“நல்லது நல்லது.”
“இதை வரைந்தவன் பெரிய மேதையாயிருக்க வேண்டும் அது மட்டுமல்ல.”
“வேறு என்ன?”
“ரசிகனாகவும் இருக்கவேண்டும்”
“அப்படியா!”
“சந்தேகமில்லை. அது தவிர, இந்தத் தமிழகத்தை அணு அணுவாக அறிந்தவனாகவுமிருக்க வேண்டும்,”
இதைக் கேட்ட அஜ்மல்கான் இளவழுதியின் தோளில் கையை வைத்தான். “புகழ்ச்சி உச்சியை எட்டுகிறது. இத்தனைக்கு நான் தகுதியல்ல” என்றான்,
இளவழுதியின் கண்களில் சிறிது வியப்புடன் மதிப்பும் கலந்தது. “நீயா இதை எழுதினாய்? உன் கையாலேயே எழுதினாயா?” என்று கேட்டான் மரியாதை தொனித்த குரலில்.
“இந்த ஏழையின் கைவண்ணந்தான் இது” என்ற அஜ்மல்கான், “இளவழுதி! இந்தச் சீலையில் கண்டபடி போர் நடந்தால் என்ன ஆகும்?” என்று கேட்டான்.
“தமிழகம் சுதந்திரமிழக்கும், டில்லி சுல்தானுக்கு அடிமையாகும்” என்றான் இளவழுதி உணர்ச்சி ஏதுமற்ற வறண்ட குரலில்.
அஜ்மல்கான் இதை மறுத்துக் கூறவில்லை. “இதற்கு நீ ஒப்புக்கொள்கிறாயா?” என்று மட்டும் கேட்டான் திட்டமான குரலில்.
“ஒப்புக்கொள்ளாவிட்டால்”
“அறைக்கதவு திறக்கப்படும். எனது வீரர்கள் உன்னை கண்ட துண்டமாக இங்கேயே வெட்டிப் போடுவார்கள்.”
“அதற்கு முன்பு உன்னை நான் வெட்டிவிட்டால்?”
“அப்பொழுதும் உன் கதியில் மாறுதலிருக்காது அதுமட்டுமல்ல…”
“உம்”
“இந்தச் சீலையின் பிரதி ஒன்று மாலிக்காபூரிடம் இருக்கிறது. இன்னும் பதினைந்து நாட்களில் சேர மன்னன் படை இங்கிருந்து நகராவிட்டால் காஞ்சிக்கு வடக்கே முகாம் செய்திருக்கும் மாலிக்காபூர் மீண்டும் தமிழகத்தின் மீது
திரும்புவார். விளைவை நான் விவரிக்க வேண்டியதில்லையென்று நினைக்கிறேன்” என்ற அஜ்மல்கான் குரூரமாக, மெதுவாக நகைத்தான்.
இளவழுதிக்குத் தமிழகத்தின் கதி நன்றாகப் புரிந்தது. அதை வெளியிட்டும் சொன்னான் “ புரிகிறது புரிகிறது”என்று.
“நகரங்கள் அழியும். கொஞ்ச நஞ்சம் மிஞ்சி யிருக்கும் சொத்து சுதந்திரம் போய்விடும். அவற்றைக் காப்பது உன் கையிலிருக்கிறது” என்று சொன்னான் அஜ்மல்கான்.
“என்னமிடருந்து என்ன எதிர்பார்க்கிறாய்?” இளவழுதியின் குரலில் சீற்றம் துளிர்த்தது.
“சீற்றத்துக்கு இது சமயமல்ல. அமைதியான சிந்தனை தான் தேவை. நீ சரியாக நடந்து கொண்டால்…”
“அதாவது நீ சொல்கிறபடி?”
“ஆம். பாண்டிய மகுடம் உன் தலையில் திணிக்கப்படும். டில்லிக்குக் கப்பம் செலுத்தினாலும் மற்றபடி உள் நாட்டில் அமைதியும் சந்துஷ்டியும் நிலவும். மக்கள் உன்னைப் போற்றுவார்கள்” என்றான் அஜ்மல்கான்.
“இதற்குப் பதிலாக” என்று இழுத்தான் இளவழுதி.
“அரசன் கொடுக்கும் பதவியை ஏற்றுக் கொள். இந்த சீலை காட்டும் வழிகளில் சேரமன்னன் படைகளை அழைத்து வா” என்று அஜ்மல்கான் கூறினான்.
“அழைத்து வந்தால் ஆங்காங்கு வழியில் நீ வைத்திருக்கும் பொறிகளால் சிறிது சிறிதாகப் படை அழிக்கப்படும். மதுரை சேருமுன்பு உன் கையால் சேர மன்னர் சிறையிலிருப்பார். அல்லது…” என்று வாசகத்தை
முடிக்காமல் விட்டான் இளவழுதி.
“கொல்லப்படமாட்டார் கொல்லத்து அரசர், அறிவுடன் நடந்துகொண்டால்” என்ற அஜ்மல்கான் குரலில் அப்பொழுதே வெற்றியொளி இருந்தது.
இதற்கு நீண்ட நேரம் பதில் சொல்லவில்லை இளவழுதி. அவன் மனத்தில் ஏதேதோ எண்ணங்கள் எழுந்து உலாவின. பல நிமிட மௌனத்துக்குப் பிறகு ஆசனத்தை விட்டு எழுந்திருந்தான், அஜ்மல்கானை உற்று நோக்கினான் தனது
கூரிய கண்களால். “உன் திட்டத்துக்கு ஒப்புக் கொள்கிறேன்” என்றான்.
இதைக் கேட்டதும் அஜ்மல்கான் நெருங்கிய அராபிய முறையில் இளவழுதியை இருமுறை மாறிமாறித் தழுவினான். பிறகு “உன் நாட்டை நீ காத்துவிட்டாய்.
உனக்கு இனி பணம், பதவி, மகிழ்ச்சி எதிலும் குறைவிருக்காது” என்று கூறிய அஜ்மல்கான் மீண்டும் திரை மறைவுக்கு நடந்து சென்று ஒரு பட்டுப்பையுடன் திரும்பி வந்தான். “இதில் ஆயிரம் மோஹராக்கள் இருக்கின்றன” என்று
சொல்லி அதை இளவழுதியிடம் நீட்டினான்.
இளவழுதி அதைக் கையில் வாங்கவில்லை. “இதை நான் எடுத்துச் சென்றால் அரசன் ஒற்றர்கள் என்னை சோதித்தால் சந்தேகம் ஏற்படும். நீயே வைத்துக்கொள். இங்கு யாராவது நம்பிக்கையானவரிடம் நான் வந்து எத்தனை மோஹரா
கேட்கிறேனோ அதைக் கொடுக்க ஏற்பாடு செய்” என்று கூறினான்.
அஜ்மல்கான் இதழ்களில் மகிழ்ச்சிப் புன்னகை நன்றாகவே விரிந்தது. “நீ நல்ல அறிவாளி. இதைத் தான் நான் உன்னிடம் எதிர்பார்த்தேன்” என்றான் அஜ்மல்கான். பிறகு அறைக்கதவை அவனே திறந்து வாயில் வரையில் கொண்டு வந்து
விட்டு விடை பெற்று மீண்டும் உள்ளே சென்றான்.
அரபு நாட்டுப் பெருங்கடையிலிருந்து வெளிப் போந்த இளவழுதி சிந்தனை மிகுந்தவனாய் அரண்மனையை நோக்கி நடந்தான். இரவு நன்றாக ஏறி விட்டதால் கொல்லமா நகர் ஜாஜ்வல்யமாகக் காட்சி அளித்தது. வலை மீதிருந்த
அரண்மனைப் பகுதியைச் சுற்றி எரிந்த விளக்குகள் அதற்குத் தீபமாலையைப் போட்டிருந்ததால் ஏதோ ஆபரணத்தைப் பூண்ட யௌவன ஸ்திரீயைப் போல் காட்சியளித்தது. எங்கும் மக்களின் அரவமும் தூய கடலலைகளின்
பேரரவமும் கலந்து இரைச்சலிலும் இன்பத்தை விளைவித்துக் கொண்டிருந்தன. நகரத்தின் பொலிவைக் கவனித்துக் கொண்டே அரண்மனைச் சுவர்களண்டை வந்து திட்டி வாசலில் நுழைந்து உள்ளே சென்ற இளவழுதியை வாயில்
காவலர் யாரும் அன்று தடுக்கவில்லை. தலை தாழ்த்தி அவனுக்கு வழிவிட்டனர். நந்தவனத்தை அவன் அடைந்த பொழுது இளமதி அதன் ஆரம்பச் செடிகளின் அருகிலேயே நின்றிருந்தாள். அவளை நோக்கியதும் சட்டென்று நின்றான்
இளவழுதி.
அரசகுமாரி நந்தவனத்தின் முகப்பில், முகத்திலடித்த விளக்குகளின் ஒளியில், அழகெல்லாம் திரண்டு நின்றிருந்தாள். அன்று அவள் கட்டிய சேலை வெப்பாயிருந்ததால் “நேற்று கலைமகளைக் கண்டேன். இன்று திருமகளைக்
காண்கிறேன்” என்று இளவழுதி தன் மனத்துக்குள் சொல்லிக் கொண்டான். அந்த சிவப்புச் சேலை அவளுக்குப் பொருத்தமாயிருந்ததில் அவன் வியப்படையவில்லை. நல்ல அழகுக்கு எதுதான் பொருத்தமாயிருக்காது என்று
நினைத்தான் இளவழுதி. அன்பு ததும்பும் அழகிய கரு விழிகள் இளவழுதியின் வீரக் கண்களைத் தைரியமாகச் சந்தித்தன. அவள் முகத்துக்கு அழகு செய்யவே ஏற்பட்டது போல் உதடுகளில் பிறந்து முகத்தில் விரிந்த மந்தகாசச் சாயை
அவனை உன்மத்தம் கொள்ளச் செய்தது. கழுத்திலாடிய சிறிய கெம்புமாலை சிவப்புச் சேலைக்கு ஒத்திருந்தது. அது தவழ்ந்த இடங்கள். அழகிலும் எழுச்சிகள் உண்டு என்பதைச் சுட்டிக் காட்டின. அவனைக் கண்ட அரசகுமாரி
“உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்” என்றாள் சங்கீதக்குரலில்.
இளவழுதியின் கண்கள் சிவந்து தெரிந்த அவள் இடையில் பதிந்தன. “தந்தை அனுப்பினாரா?” என்று மெதுவாகவும் சற்று சந்தேகத்தால் தளர்ந்த குரலிலும் கேட்டான்.
“ஆம்” என்ற இளமதி “வாருங்கள்” என்று கூறி விட்டுச் சரேலெனத் திரும்பி நந்தவனத்தை நோக்கி நடந்தாள்.

.
அவளைப் பின் தொடர்ந்த இளவழுதி, பின்னால் தெரிந்த சங்குக் கழுத்தையும், நடையில் அசங்கிய தோள்களையும் துவண்டு துவண்டு உடலை அசக்கிய இடையின் மனோகரத்தையும் பருகிக் கொண்டே. சென்றான். அப்படிச் சிறிது
தூரம் நடந்ததும் மரக்கூட்டத்தின் மற்றொரு பகுதியில் யாரோ வரும் அரவம் கேட்கவே முன்னாள் சென்ற இளமதி சட்டென்று நின்றாள். அப்படி எதிர்பாராதவிதமாக அவள் சட்டென்று நின்றதாலும், நெருக்கமாகவே பின்பற்றி இளவழுதி
நடந்ததாலும், அவள் சரீரம் சட்டென்று அவன் மீது தாக்கவே அவளைத் திடப்படுத்த அவள் இருதோள்களையும் தன் கைகளால் பற்றினான் பாண்டிய வீரன்.
அவன் உணர்ச்சிகள் அசுர வேகத்தில் சுழன்றன. அரச மகளின் சமீபமும், அழகிய பூவுடல் தன் மீது பட்டு விட்டதால் ஏற்பட்ட உணர்ச்சிகளின் பெருக்கும் அந்த வாலிபனை நிலை குலையச் செய்தன. இளமதியின் முதுகுப்புறம்
முழுவதும் தன் உடலுடன் இணைந்து விட்டதால் இன்ப வேதனை அவன் உள்ளத்தை அள்ளிச் சென்றது. இருக்கும் நிலை மறந்தான் இளவழுதி. ஏற்றத் தாழ்வையும் மறந்தான். அவளை அளவுக்கு அதிகமாக இறுகப் பிடித்தான். தலையை
குனிந்து “வருவது யார்?” என்று அவள் செவியில் மெதுவாகக் கேட்ட சமயத்தில் அவன் இதழ்கள் அவள் கன்னத்தைத் தடவின. பாவை அவள் பதிலேதும் சொல்லவில்லை. மௌனமாகச் சற்று நெகிழவே செய்தாள். நெகிழ்ச்சி அவனுக்கு
மேலும் இன்ப அதிர்ச்சியையே தந்தது. உணர்ச்சிக் கடல் என்று ஒன்று உண்டென்றால் அதில் இருவருமே மூழ்கிக் கிடந்தனர்.

Previous articleCheran Selvi Ch10 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch12 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here