Home Cheran Selvi Cheran Selvi Ch14 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch14 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

98
0
Cheran Selvi Ch14 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch14 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch14 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 14. மந்திர ஓலை

Cheran Selvi Ch14 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

பளிங்கு சுனைப்படியில் பாண்டிய நாட்டு வாலிபன் இழுத்து அணைத்த நிலையில், சுற்றிலும் மோகனாகரமாக முழுமதி பளிச்சென்று வீசிய நிலவில், மெல்லிய தென்றல் மேலே தவழ்ந்து உள்ளிருந்த மோகாக்கினியை அதிகமாக
விசிறவிட்டதால் உணர்ச்சிகள் எழுப்பிய அலைகளின் சுழலில் சிக்கிக் கிடந்த அரசகுமாரி இளமதி, அவன் மார்பில் புதைந்த முகத்தை அகற்றாமலேயே தன் சோகக் கதையை, மெள்ள மெள்ளச் சொன்னாள். “பாண்டிய நாட்டு வீரரே! என்
நிலையை நான் அறியாமலே உங்களுக்கு அதிக இடங் கொடுத்து விட்டேன். நான் யாராலும் தொடத்தகாதவள். தெய்வத்துக்கு உரியவள். ஓராண்டுக்கு முன்பாகவே என் தந்தை என்னை பல்லவ காஞ்சியின் வரதராஜனுக்கு அர்ப்பணம்
செய்துவிட்டார். அப்படி அர்ப்பணிக்க வைத்தவர் ஆசார்யர் சமுத்திரபந்தன்.” என்று திகைக்கும்படி தனது நிலையை அறிவித்தாள் அரசகுமாரி.
இதைக் கேட்ட இளவழுதி பிரமித்துப் போனான். “என்ன! வரதராஜப் பெருமாளுக்கு உன்னை அர்ப்பணித்து விட்டாரா அரசர்?” என்று பிரமிப்பு குரலில் துலங்கக் கேள்வியையும் வீசினான். அந்தக் கேள்வியைத் தொடர்ந்து அவன்
கைகள் அவளை அதிகமாக இறுக்கின பெருமாளிடமிருந்து காப்பாற்ற முயல்வன போல.
“ஆம்” என்றாள் இளமதி பதிலுக்கு. பதிலைச் சொல்லி தன் முகத்தை அவன் அகன்ற மார்பில் சற்று அதிகமாகவே புதைத்துக் கொண்டாள்.
இளவழுதி இளநகை கொண்டான் சிறிது நேரம். அதைத் தொடர்ந்து வினவினான், “இளமதி! வரதராஜப் பெருமாளுக்குத்தான் பெருந்தேவித் தாயார் இருக்கிறாரே நீ எதற்கு?” என்று.
இளமதி தனது தலையைச் சிறிது நிமிர்த்தி அவனைப் பார்த்தாள். “வீரரே! பெருமாளுக்கு பிராட்டி ஒருத்தி மட்டும் இல்லை. ஸ்ரீ, பூ, நீளாதேவிகள் என மூவர் இருக்கிறார்கள்” என்று சுட்டிக் காட்டினாள்,
இளவழுதி அதை ஆமோதிப்பதற்கு அறிகுறியாக அவளது தலையைத் தனது கையொன்றால் கோதினான்,
“நான்காவதாக நீ எதற்கு?” என்று வினவினான் சிறிது எரிச்சலுடன்.
இளமதி தலையைச் சிறிது கவிழ்த்துக் கொண்டு சொன்னாள் “அவர்கள் செய்ய முடியாததை நான் செய்ய முடியும் என்று சமுத்திரபந்தன் எதிர்பார்க்கிறார்?” என்று.
இளவழுதிக்கு ஏதும் புரியவில்லை.. “சமுத்திரபந்தனா! அந்தக் கவியா!” என்று வினவினான் கோபத்துடன்.
“ஆம்” என்றாள் இளமதி.
“அவனைக் கொன்றுவிட்டால் இந்தத் தொல்லை நீங்கி விடுமே” என்றான் பாண்டிய வாலிபன்.
“நீங்காது. பெரிய ஒரு நன்மைக்காக என்னை ஆசார்யர் வரதராஜனுக்கு அர்ப்பணம் செய்யச் சொன்னார். அதற்குத் தந்தையும் ஒப்புக்கொண்டார். பெரியதொரு ஹோமத்தை சமுத்திரபந்தன் அதற்காகவே செய்தார். இந்த வேணாட்டின்
அந்தணர் பலரும் அதற்கு வந்து மந்திரங்களை ஓதினார்கள். அவர்கள் முன்பு நான் ஆண்டவனுக்கு அளிக்கப்பட்டேன்” என்று இளமதி உணர்ச்சி ததும்பச் சொன்னாள். “அந்த ஹோமம் முஸ்லிம்கள் ஆதிக்கத்தைத் தென்னகத்திலிருந்து
அகற்றுவதற்காகச் செய்யப்பட்டது. மாலிக்கா பூர் செய்த அநீதிகளால், அழிவால், மனம் சிதைந்திருந்த என் தந்தை சேர நாட்டு மன்னர் அதை ஒப்புக்கொண்டார். யாக முடிவில் நரபலி கொடுக்கவேண்டும்” என்றார் ஆசார்யர். அதற்கு
இசையவில்லை தந்தை. ‘இல்லாவிட்டால் உன் இதயத்துக்கு மிகவும் இஷ்டமானதைக் கொடு’ என்றார் ஆசார்யர். தந்தை என்னைப் பார்த்தார். ஆசார்யர் என் பெயரை உச்சரித்து நெய்யைக் கொண்டு ஹோமாக்கினியை ஜொலிக்கக்
செய்தார். இன்று முதல் இவள் பெருமாளுக்குச் சொந்தம்’ என்றும் பெருங்குரலில் அறிவித்தார்.
அதற்கு மற்ற அந்தணர்கள் ‘ததாஸ்து’ (அப்படியே ஆகுக) என்று சொன்னார்கள். அன்று முதல் நான் தேவ கன்னியானேன். அன்றைக்கு மறுநாள் மாலிக்காபூர் வடக்கே புறப்பட்டு விட்டதாகச் செய்தி கிடைத்தது.என் கதியும்
நிர்ணயமாயிற்று” என்று தனது கதையைச் சொன்ன இளமதியின் கண்களில் நீர் அருவியாக ஓடியது.
இளமதியை அணைத்த கைகளை இளவழுதி மெள்ள நீக்கினான். அவளைத் திருப்பித் தனது மடியில் படுக்க வைத்தான். அவளது அழகிய உடலுக்குக் குறுக்கே அவன் வலது கை பாய்ந்து கிடந்தது. நிலவில் அவள் எழில் ஆயிரம் மடங்கு
அதிகமாகத் தெரிந்தது. அவள் கண்களிலிருந்து ஓடிய அருவியின் துளிகள் முத்துக்களைப் போல பளபளத்தன. அவற்றைத் தன் கையால் துடைத்தான் இளவழுதி, பிறகு சொன்னான், அவளை நோக்கிக் கடுமையான குரலில் “இளமதி
என்னை நன்றாகப் பார்” என்று.
அவள் கண்கள் அவன் கண்களைச் சந்தித்தன. அவன் சொன்னான் “இளமதி! இந்த பைத்தியக்காரத் தனத்திலிருந்து நீ விடுபட வேண்டும்” என்று.
“எந்தப் பைத்தியக்காரத்தனத்திலிருந்து?” அவள் உதடுகள் மெதுவாக உதிர்த்தன சொற்களை.
“நீ ஏதோ சொன்னாயே மாலிக்காபூரை ஓட்ட ஹோமம் என்று, அதிலிருந்து.”
“அதைப் பைத்தியக்காரத்தனமாக இங்குள்ள யாரும் நினைக்கவில்லை.”
“மலையாளத்தில் மந்திரவாதிகள் அதிகம் என்று தெரியும் எனக்கு. ஆனால் மந்திரம் மிகப் புனிதமானது. ஹோமமும் அப்படித்தான். அதை மாலிக்காபூரை விரட்டும் காரியங்களுக்கு உபயோகப்படுத்துவது கிடையாது.
தெய்வங்களைப் பெண்ணைக் கொடுத்தும் நமது பக்கம் இழுக்க முடியாது. அப்படி இழுக்க முடியுமானால் இந்த உலகத்தில் அத்தனை அநீதிகள் நிகழ முடியாது. எதிரிகளை அழிப்பதற்கு நமது முயற்சியும் கடமை உணர்ச்சியும்
வேண்டும். அந்த முயற்சியை, உணர்ச்சியைக் கொடு என்று ஆண்டவனைக் கேட்கலாம். எல்லாவற்றையும் நீயே செய் என்பதில் அர்த்தமில்லை. அர்த்தமிருந்தால் என்னை இங்கே நீங்கள் வர வழைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
கண்ணனே போர்க்களத்தில் அர்ஜுனனுக்குக் கடமையைத்தான் போதித்தானென்பதை நினைவில் வைத்துக்கொள்” என்று உணர்ச்சி பெருகக் கூறிய இளவழுதி குனிந்து தனது உதடுகளால் அவன் வழவழத்த கன்னத்தை லேசாகத்
தடவினான். “இதற்காக கடவுள் என்னைக் கொன்றாலும் கொல்லட்டும்” என்றான்.
இளமதியின் உள்ளமும் நிலைகொள்ளாமல் தவித்தது. தேவகன்னி அப்பொழுது மனித கன்னியாகவே இருந்ததால் இளவழுதியின் வலதுகை இடையை நன்றாக ஒரு முறை அமுத்திக் கொடுத்ததைக்கூடத் தடைசெய்ய வில்லை.
“இதுவும் ஒரு சொப்பனம், நிலைக்காதது” என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். அவள் கண்களை மூடிக் கொண்டாள், உள்ளே தன் நிலையை கவனிக்க. மூடிய கண்களில் இளவழுதியே தெரிந்தான். புறத்திலும் அகத்திலும் தெரிந்த
அவன் உருவத்தால் பெருமூச்சு விட்ட இளமதி, சரேலென்று அவன் மடியில் புரண்டு குப்புறப் படுத்தாள். முகத்தை அவன் காலில் புதைத்துக் கொண்டாள். ஆனால் விசும்பவில்லை. அவள், விசுவத்திலே இதைவிட இன்பமில்லை என்று
நினைத்ததால்.
இளவழுதியின் இடது கை அவள் பின்புறக் கொண்டையைச் சிறிது அசைத்து சரிப்படுத்தியது. வலது கை இடையை விட்டுச் சற்று அகன்றது. இளமதி நெகிழ்ந்தாள் இன்ப வேதனையால். அந்த வேதனை தாங்காததால் சட்டென்று
புரண்டு எழுந்து அவன் எதிரேயிருந்த கீழ்ப்படியில் உட்கார்ந்து கொண்டு “வீரரே அத்துமீறிப் போகிறீர்கள்” என்றாள் கடையிதழில் தோன்றிய சிறு நகையுடன்.
“ஒருவர் அத்துமீறினால் இன்னொருவரும் மீற வேண்டிய நிலை ஏற்படுகிறது” என்றாள் இளவழுதி கால்களைக் குத்திட்டு உட்கார்ந்து, இரு கைகளாலும் முழந்தாள்களைக் கட்டிய வண்ணம்.
“நீங்கள் சொல்வது புரியவில்லை” என்றாள் இளமதி.
“உன் தந்தை உன்னைத் தெய்வத்துக்கு அர்ப்பணித்தது உலகத்துக்கு ஒவ்வாத செய்கை, அத்துமீறிய நடவடிக்கை. அதற்குப் பதில் இது” என்று எதிரேயிருந்த அவள் தோள் மீது கையை வைத்தான் இளவழுதி.
“என் தந்தை செய்தது நாட்டு நன்மைக்காக, இந்து மதத்தின் நன்மைக்காக” என்றாள் இளமதி.
“இந்துமதத்தின் நன்மையை அப்படிக் காப்பாற்ற முடியாது இளமதி. அதை வீரத்தால் காக்க வேண்டும். கத்தியைக் கத்திதான் தடுக்கமுடியும். மந்திரத்தில் மாங்காய் விழாது. தவிர உன்ன தமானவை நமது தர்ம சாஸ்திரங்கள். மந்திரங்களை
அல்ப காரியங்களுக்குப் பயன்படுத்தவும் கூடாது. அப்படிப் பயன்படுத்த முடியுமானால் இப்பொழுது நாம் அஜ்மல்கானிடம் பயப்பட அவசியமில்லை. அவனை வேவு பார்க்க உன் தந்தை என்னை அனுப்பவும் தேவையில்லை”
என்றான் இளவழுதி,
இதைக் கேட்டதும் சட்டென்று சுயநிலை அடைந்தாள் இளமதி. “ஆம், ஆம், மறந்துவிட்டேனே. அஜ்மல்கான் சொன்னதைக் கேட்டுக் கொள்ளத்தான் தந்தை என்னை அனுப்பினார்” என்றாள் அரசகுமாரி.
இளவழுதி நடந்ததையெல்லாம் நிதானமாக விரிவாக அவளுக்கு எடுத்துச் சொன்னான். அதைக் கேட்ட அரசகுமாரி தீர்க்காலோசனையில் ஆழ்ந்தாள். “அவன் இஷ்டப்படி நாம் படைகளை நடத்தினால் தமிழ்நாடு பூர்ணமாக தில்லிக்கு
அடிமைப்பட்டுவிடும்” என்று சொன்னாள் கடைசியாக.
“ஆம்” என்றான் இளவழுதி.
“சரி; இதை அரசரிடம் சொல்கிறேன்” என்றாள் இளமதி.
சொல், கவியிடமும் சொல். அஜ்மல்கானையும் ஹோமத்தால் ஜெயிக்கலாம்” என்றான் இளவழுதி இகழ்ச்சியுடன். இதைச் சொல்லி எழுந்தான் பாண்டிய வாலிபன்.
இளமதியும் எழுந்தாள். “வாருங்கள். அரசர் காத்திருப்பார்” என்று கூறினாள்.
“நான் எதற்கு வரவேண்டும்? விஷயத்தை உன்னிடம் சொல்லத்தான் மன்னர் உத்தரவிட்டார்’ என்றான் இளவழுதி.
“அப்படியா!”
“ஆம்”
சிறிது சிந்தித்தாள் அரசகுமாரி. பிறகு சொன்னாள்.
“ஏதாவது காரணமில்லாமல் தந்தை எதுவும் செய்யமாட்டார். எதற்கும் வாருங்கள் தந்தையைப் பார்க்கலாம்” என்றாள்.
இதற்கு மேல் ஏதும் சொல்லாமல் அவளுடன் நடந்தான் இளவழுதி. இளமதி அவனை மன்னன் பள்ளியறைக்கே அழைத்துச் சென்றாள். அங்கு மன்னனுடன் கவிச்வரனான சமுத்திரபந்தனும் உட்கார்ந்திருந்ததை வெளியிலிருந்தே
இருவரும் கவனித்தார்கள்.
“அவன் இளவரசியைத் தனியாக அழைத்துச் சென்று விட்டான்” என்று சமுத்திரபந்தன் சீறியது அவர்கள் காதில் விழுந்தது.
“அதனாலென்ன?” என்றார் ரவிவர்மன்.
“அவள் தெய்வப்பிரசாதம்” என்றான் கவி.
“ஆமாம்”
“அதை அந்த வாலிபன் தொடலாமா?”
தெய்வப் பிரசாதத்தை மனிதர் ஏற்பதில்லையா?”
“மன்னா!”
“ஆசார்யா!”
“இது உனக்குத் தகுதியல்ல!”
“எது?”
“தெய்வத்துக்கு அர்ப்பணித்ததை மனிதன் அணுக அனுமதி அளிப்பது.”
ரவிவர்மன் நகைத்தான் மெதுவாக. ‘ஆசார்யரே! நீர் என் மகளை இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அவள் இஷ்ட விரோதமாக யாரும் அவளைத் தொட முடியாது” என்றும் கூறினான் நகைப்பின் ஊடே.
“அவளிஷ்டப்பட்டால்?” என்று சீறினான் கவி.

.
“நாம் யாரும் தடுக்க முடியாது” என்று முத்தாய்ப்பு வைத்த அரசர் “நான் தான் அவளை அனுப்பினேன் அவனைச் சந்திக்க” என்றும் சொன்னார்.
“நீயா மன்னா?”
“ஆம். நானே தான்”
“ஏன்? மன்னா! ஏன்?” என்றான் கவி சமுத்திர பந்தன்.
“இந்த ஓலையைப் படியும்” என்ற அரசன் ஒரு ஓலையை நீட்டினான் கவியிடம். அந்த ஓலையைப் படித்த கவியின் முகத்தில் சொல்லவொண்ணா பிரமிப்பு விரிந்தது.
அந்த சமயத்தில் இளமதி பாண்டிய வாலிபனுடன் உள்ளே நுழைந்தாள். கவி அவர்களையும் பார்த்து ஓலையையும் பார்த்தான். ஓலை ஏதோ நெருப்புத் துண்டம் போல் அவன் கையைச் சுட்டிருக்க வேண்டும். அதை அரசர்
பஞ்சணையில் போட்டுவிட்டு மூவரையும் முறைத்துப் பார்த்துவிட்டுக் கடுங்கோபத்துடன் வெளியே நடந்தான் சமுத்திரபந்தன்.
அந்த ஓலையைச் சுட்டிக் காட்டிய அரசன் “இளவழுதி! நீயும் அதைப் படிக்கலாம்” என்றான். நான்
இளவழுதி அதைக் கையில் எடுத்தான். வேண்டாம். அதைப் படிக்க வேண்டாம்” என்று அச்சத்துடனும் குழப்பத்துடனும் கூவினாள் அரசகுமாரி. இப்படிப் பலரையும் குழப்ப வைத்த அந்த ஓலையில் என்ன மந்திர மிருக்கிறதென்பதைப்
பார்க்க அதைப் – பிரித்தான் இளவழுதி. மந்திரம் அவன் மதியையும் மயக்கியது.

Previous articleCheran Selvi Ch13 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch15 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here