Home Cheran Selvi Cheran Selvi Ch15 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch15 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

125
0
Cheran Selvi Ch15 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch15 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch15 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 15. அஷ்டமுடிக்கு அக்கரையில்

Cheran Selvi Ch15 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

மனித வாழ்வில் சில நிகழ்ச்சிகள் ஏற்படும்போது அவை ஏன் ஏற்படுகின்றன என்பது அவனுக்குப் புரிவதில்லை. புரியாதபோது ஆஸ்திகர் அதை ஆண்டவன் சித்தம் என்று சொல்கிறார்கள். நாஸ்திகர் அதை கண்ணுக்குப்
புலப்படாத ஒரு சக்தி என்று சொல்கிறார்கள். இரண்டுமல்லாமல் இரண்டுங் கெட்டானாயிருப்பவர்கள் விதி என்று பழியை அந்த ஒற்றைச் சொல்லின்மேல் போடுகிறார்கள். எப்படிச் சொன்னாலும் அந்த நிகழ்ச்சி அவன் எண்ணத்தை
மீறியதாக இருக்கிறது. சிந்தனையால் அளவிட முடியாமல் இருக்கிறது. பரிகாரம் காண முடியாத காரணத்தால் அந்த சமயங்களில் மனிதன் கோட்டான் மாதிரி விழிக்கிறான், அப்படித்தான் விழித்தான் ரவிவர்மன பள்ளியறையில் மந்திர
ஓலையைப் படித்த பாண்டிய வீரன் இளவழுதியுங்கூட..
அது அவன் கொண்டுவந்த ஓலைதான். புலவர் எழுதி முத்திரை பொறித்த ஓலையேதான். அந்த ஓலை அவன் இடைக் கச்சையிலே பாண்டிய நாட்டிலிருந்து சேர நாட்டுக்குப் பயணம் செய்த ஓலைதான். ஆனால் ஓலையின் தன்மை
அப்படி மிக விசித்திரமாக இருக்கும் என்று மட்டும் இளவழுதி சொப்பனத்திலும் நினைக்கவில்லை யாதலால் சிறிது நேரம் ஓலையைக் கையில் பிடித்தபடியே நின்றான். இவ்வளவு இன்ப ஓலையைத் தான் தாங்கி வந்தது தனக்கே தெரியாமல்
போயிற்றே என்று நினைத்த இளவழுதி ‘குங்குமம் சுமந்த கழுதை’ என்ற தமிழ் மொழிக்கு எத்தனை அர்த்தமிருக்கிறது என்பதையும் எண்ணிப் பார்த்து ஒரு புன்முறுவலையும் இதழ்களில் தவழவிட்டுக் கொண்டான். தவிர அந்த
ஓலையைப் படித்த முதல் நாளன்று அரசகுமாரி முகம் சிவந்து சினத்தின் வசப்பட்டு ஓடிவிட்ட காரணமும் அவனுக்கு அந்த இரவில் அரசர் பள்ளியறையில் தெள்ளெனத் தெரிந்தது.
புலவர் அந்த ஓலையில் தெளிவாகப் பல விஷயங்களை எழுதியிருந்தார்: “இதைக் கொண்டுவரும் இளவழுதி மகாவீரன். எனக்குத் தெரிந்த யுத்த தந்திரங்கள் அனைத்தையும் இவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். இவனைக்
கொண்டு உன் படைகளை இஸ்லாமியப் படைகளுக்கெதிராக நடத்து. எப்படியும் நமது தமிழகத்தை நாசத்தினின்றும் காப்பாற்ற முயற்சி செய். கோவில்களை அழியாமல் காக்க இவன் பேருதவியாயிருப்பான். இப்படி எதிரிப் படைகளை
வடக்கே விரட்டிய பின்பு. இவன் சேவைகளுக்கு சன்மானமாக உன் மகள் இளமதியை இவனுக்குக் கொடுத்துவிடு. இதனால் சேரர் பாண்டியர் ஒற்றுமையும் ஏற்படும். தென் திசையில் பலமான ஒன்றுபட்ட சக்தி ஏற்பட்டால், பிளவுகளும்
பூசல்களும் மறைந்தால் வடக்கத்தி ஆதிக்கம் திரும்பத் திரும்ப நம்மேல் ஏற்படாது. அதற்கு இளமதி, இளவழுதி திருமணம் ஒரு பலமான பயனுள்ள சக்தி. நான் சொல்வதை நிறைவேற்றத் தவறாதே. அங்குள்ள அரைகுறைப் பண்டிதர்களும்,
அபிசார ஹோமம் செய்பவர்களும் கூறும் குறுக்கு வழிகளை நம்பாதே. ஹோமப் புகையால் தென் திசைக்கு நாம் திரைபோட முடிந்தால் வடக்கிலிருந்து இங்கு யாரும் வந்திருக்க மாட்டார்கள். ஹோமம் செய்யாததை வாள் செய்யும். ஒரே
காப்புக் கடவுளான திருவனந்தபுரத்தில் அனந்த சயனம் புரியும் உன் குலதெய்வத்திடம் பொறுப்புகளை ஒப்படைத்து வீரனாகப் பணியாற்று. அதற்கு ஒரு கருவி இந்தப் பாண்டிய இளைஞன். அவனை என் ஆசிகளுடன்
அனுப்புகிறேன்.
“புலவன்”
இந்தக் கடிதத்தை ஒரு முறைக்கு இருமுறையாகப் படித்த இளவழுதி, கவி சமுத்திரபந்தனுக்கு ஏற்பட்ட சினத்தின் காரணத்தை சம்பூர்ணமாகப் புரிந்து கொண்டான். சேரநாட்டு கவிஞன் எண்ணத்துக்கும் பாண்டிய நாட்டுப் புலவர்
நோக்குக்கும் தீவிர வித்தியாசமிருப்பதைப் புரிந்துகொண்ட இளவழுதி ஓலையை மீண்டும் மன்னனிடம் கொடுத்து விட்டு இளமதியை நோக்கினான்.
இளமதி தலை கவிழ்ந்து மிகவும் சங்கடப்பட்டு நின்று கொண்டிருந்தாள். அப்படி தலை கவிழ்ந்த நிலையிலும் சற்று எட்ட இருந்த பெரும் குத்துவிளக்கின் வெளிச்சம் அவள் வழவழக் கன்னத்தில் விழுந்ததால் அவள் தந்தக்
கன்னத்துக்கு மெருகு கொடுப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியிருந்தது. அப்படி ஒரு பக்கத்தைத் தங்க மயமாக அடித்த விளக்கொளி அடுத்த பக்கத்தில் பாய முடியாவிட்டாலும் அந்தப் பகுதி எப்படியிருக்க முடியு மென்பதை
ஊகிக்க இடம் கொடுத்தது. ஒடிந்து சாய்ந்த இடை ஏதோ ஒரு புதுவித ஓவியத்தை நினைவுபடுத்தியது. இடை.யை முன்னும் பின்னும் அணைத்திருந்த எழில்கள் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் இந்திர போகத்தை நினைவுபடுத்தின.
அதனால் இளவழுதியின் அசையாத சித்தத்தையும் சிறிது அசைத்தன. ஆனால் மன்னனும் உடனிருக்கிறானென்ற காரணத்தால் இளவழுதி தனது ஆராய்ச்சியை அதிகமாக நடத்தாமல் “இந்த ஓலை உங்களைப் பெரிதும்
சங்கடப்படுத்தியிருக்க வேண்டும்” என்று சொன்னான்.
அரசன் அதை ஆமோதிப்பதற்கு அடையாளமாகத் தலையை அசைத்தான். “ஒரு வடமொழிக் கவியும் தென்மொழிப் புலவரும் மோதும்போது இடையிலிருப்பவர் பாடு சங்கடந்தான்” என்று கூறினான் தீர்க்க சிந்தனை ஒலித்த
குரலில்.
இளவழுதிக்கு மன்னன் நிலை நன்றாகப் புரிந்திருந்தது. ஆகவே மன்னனுக்குச் சிறிது சமாதானமாகவும் அனுகூலமாகவும் பேசினான். “புலவர் எழுதியது முழுவதையும் நீங்கள் அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டிய
அவசியமில்லை” என்று கூறினான்.
ரவிவர்மன் இளவழுதியைக் கூர்ந்து நோக்கினான் சில வினாடிகள். “கவி சொன்னதையும் அப்படியே எடுத்துக்கொள்ள அவசியமில்லை” என்று தெரிவித்தான் சில கணங்களுக்குப் பிறகு.
“அப்படியானால் யாகத்தில் செய்த உறுதியைக் கைவிடத் தீர்மானித்துவிட்டீர்களா?” என்று வினவினான் இளவழுதி சிறிது வியப்புடனும் நம்பிக்கையுடனும்.
“இதில் எதுவும் நானோ நீயோ கவியோ புலவரோ என் மகளோ தீர்மானிக்க முடியாது.” அரசன் பதிலில் உறுதி இருந்தது.
“வேறு யார் தீர்மானிப்பது?” இளவழுதியின் கேள்வியில் சிறிது ஆவல் தொனித்தது.
“வரதன்?”
“வரதனா?”
“ஆம், காஞ்சி வரதன்”
“பெருமாளைச் சொல்கிறீர்களா?”
“வேறு யாரைச் சொல்ல முடியும்? இவள் காஞ்சி வரதனுக்கு அர்ப்பணிக்கப்பட்டாள். அவன் இவளை என்ன செய்கிறானென்பது யாருக்குத் தெரியும்? யாருக்குப் புரியும்?” என்று கேட்ட ரவிவர்மன் “ராமானுஜரைப் பற்றிக்
கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்றும் வினவினான்.
“எந்த ராமானுஜர்?” என்று குழப்பத்துடன் கேட்டான் இளவழுதி.
“வைணவத்துக்கு உயிர் கொடுத்தவர். அவர் தன்னை வரதனுக்கு அர்ப்பணித்துக்கொண்டார். வரதனை இசையால் மயக்கிய வரரங்கன் என்ற பெரியார் ராமானுஜரை வரதராஜனிடமிருந்து இசைப் பரிசாகப் பெற்றார்” என்றான்
ரவிவர்மன்,
இதைக் கேட்ட இளவழுதி பிரமித்து நின்றான். “என்னைப் பாடச் சொல்கிறீர்களா?” என்றும் வினவினான்.
இல்லை என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினான் அரசன். “பாட்டினால் தான் வரதனை இசையவைக்க வேண்டுமென்பதில்லை. சேவையினாலும் இசைய வைக்கலாம். நாம் இறங்கும் போர் கோவில் களைக் காக்க வல்லது.
இணையிலா சேவைக்கு உனக்கு பரிசு கிடைக்காமலா போகும்?” என்று அரசன் விளக்கினான். அத்துடன் மேற்கொண்டு அந்தப் பேச்சிற்கு முடிவும் கட்ட “இளைஞனே கேள்!. வரதன் என்ற பெயரே வரம் கொடுப்பவன் என்ற
பொருளுடையது. அவனை இஷ்ட தேவதையாக உடையவன் எதையும் பெறுகிறான். கருணை வள்ளலான பகவானிடம் தொண்டு செய்தவர் யாரும் வீணானதில்லை. ஆகவே அவன் தலையில் பாரத்தைப் போட்டுக் கடமையைத்
துவங்குவோம்” என்றான். அத்துடன் இளமதியை நோக்கி “பெண்ணே! நீ உன் அறைக்குப் போ, நாங்கள் பேச வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன” என்றும் உத்தரவிட்டான்.
அந்த உத்தரவுக் இணங்க இளமதி அந்த அறையை விட்டு அகன்றாள். “கதவை சாத்திக் கொண்டு போ” என்று அரசன் கட்டளையிட அப்படியே கதவையும் சாத்தினாலும் போகுமுன்பு தன் கடைக் கண் அம்பு ஒன்றையும்
இளவழுதியின் மீது வீசி விட்டுப் போனாள்.
அறைக் கதவு மூடியதும் அரசன் முகத்தில் கவலைக் குறி படர்ந்தது. “இளவழுதி? இப்படி உட்கார்” என்று தனது பஞ்சணையைச் சுட்டிக் காட்டினான் ரவிவர்மன்.
“மன்னர் நிற்கையில்……” என்று இழுத்தான் இளவழுதி.
சம்பிரதாயத்துக்கு இப்பொழுது சமயமில்லை. அவசியமும் இல்லை. நாட்டைப் பாதிக்கும் விஷயங்கள் நமக்கு முன் நிற்கின்றன” என்று கூறிய அரசன் பள்ளியறைக் கோடிக்குச் சென்று அங்கிருந்த பேழை யிலிருந்த ஒரு மடித்த
வெள்ளைத் துணியை எடுத்து வந்தான். அப்பொழுதும் நின்று கொண்டிருந்த பாண்டிய வீரனைத் தோளைப் பிடித்து அழுத்தி உட்காரவைத்துத் தீரனும் அவனுக்கு எதிரே பஞ்சணையில் அமர்ந்தான்.
அமர்ந்ததும் கையிலிருந்த வெள்ளைத் துணியைப் பஞ்சணைமீது விரித்தான். ‘இதைப் பார் பாண்டிய வீரனே” என்றும் இளவழுதியை நோக்கிக் கூறினான்.
இளவழுதியின் கண்கள் விரித்த வெள்ளைத் துணியின் மீது நிலைத்தன. நிலைத்த கண்கள் நிலைத்தபடி நின்றன. விவரிக்க முடியாத அதிர்ச்சி பாண்டிய வீரன் இதயத்தைச் சூழ்ந்துகொண்டது. அந்த வெள்ளைத் துணியில் இருந்த
கோடுகளும் புள்ளிகளும் அஜ்மல்கான் தனக்குக் காட்டிய சீலையில் இருந்ததைப் போலவே இருந்தன. “இந்தச் சீலை மட்டும் வெள்ளையில்லாமல் அந்தப் பட்டுச் சீலையாயிருந்தால் அரசர் அதைக் களவாடிக்கொண்டு வந்தாரென்றே
சொல்லுவேன்” என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டான்.
அவன் மனத்திலோடிய எண்ணத்தை அரசனும் புரிந்துகொண்டிருக்க வேண்டும். ஆகவே சொன்னான் “வீரனே! அஜ்மல்கான் செய்த ஒரே தவறு என்னை ஏமாற்றிவிடலாம் என்பதுதான். அவனுடைய ஒவ்வொரு அசைவும் எனது
ஒற்றர்களால் கவனிக்கப்படுகிறது என்பதை அவன் உணரவில்லை. இப்பொழுதுள்ள வேணாட்டு மன்னன் ரவிவர்மன் உறங்கவில்லை. நன்றாக விழித்துக்கொண்டிருக்கிறான். அதனால்தான் வெற்றியை நிலைநாட்டத்
தீர்மானித்திருக்கிறான், அஜ்மல்கான் வீரன், தந்திரசாலி; வீரத்தை வீரத்தால் எதிர்கொள்வோம். தந்திரத்தைத் தந்திரத்தால் சந்திப்போம்” என்று உணர்ச்சி ததும்பக் கூறினான் ரவிவர்மன் குலசேகரன்,
அரசன் உணர்ச்சி இளவழுதியையும் தொத்திக் கொண்டிருக்க வேண்டும். ‘மன்னா! நான் உங்கள் அடிமை. உத்தரவிடுங்கள்” என்று கூறினான்.
மன்னன் அத்தனை உணர்ச்சியிலும் புன்முறுவல் கொண்டான். “எனக்கு அடிமைகள் தேவையில்லை. சாதனை புரியும் வீரர்கள் தேவை. அதற்காக உன்னை வரவழைத்தேன். நாளை முதல் நீ என் படைத்தலைவனாவாய். இன்னும் ஒரே
வாரத்தில் சேரன் படை நகரும் எதிரிகளைச் சந்திக்க, அழிக்க” என்று புன்முறுவலின் ஊடே கூறிய மன்னன், “இப்பொழுது இந்தச் சீலையைப் பார். அஜ்மல்கான் சீலைக்கும் இதற்கும் ஏதாவது வேறு பாடு இருக்கிறதா?” என்று வினவினான்.
“இல்லை மன்னா! இம்மியளவுகூட வித்தியாசமில்லை “ என்றான் இளவழுதி,
“நன்றாக உற்றுப்பார்”
“பார்த்தேன்”
“வித்தியாசம் ஏதுமில்லை?”
“இல்லை “
“அடியோடு இல்லை?”
“இல்லை “
“இப்பொழுது பார்” என்று கூறிய அரசன் சீலையைக் கையிலெடுத்து விளக்கொளி வந்த திசையில் தூக்கிப் பிடித்தான். விளக்கொளி சீலையை ஊடுருவியதால் சீலை சட்டென்று பளபளத்தது. சீலைக்குக் குறுக்கே புதிதாகப் பல
கோடுகள் தங்க நிறத்தில் ஓடின. அந்தக் கோடுகளைக் கண்ட இளவழுதி இணையிலா பிரமிப்புக்கு உள்ளானான். சேரமன்னன் மந்திரவாதியா, தந்திரசாலியா, ரசவாதியா என்று புரியவில்லை இளவழுதிக்கு. அந்தப் புதுக்கோடுகள்
புதுக்கதையை வலியுறுத்தின.
அஜ்மல்கானின் திட்டத்துக்குப் பெரும் மாற்றுத் திட்டம் அமைக்கப்பட்டிருப்பதை இளவழுதி உணர்ந்து கொண்டான். அவனது பிரமிப்பைக் கலைக்க அரசன் சொன்னான். “இளவழுதி! இதே மாதிரி சீலை ஒன்றை உனக்கு நாளை
கொடுக்கிறேன். நாளைக் காலையில் நாமிருவரும் அஷ்டமுடி ஏரியின் அக்கரைக்குச் செல்கிறோம்” என்று அரசன் கூறி “இனி நீ போகலாம் உன் அறைக்கு” என்றான்.
“ஏரிக்கு அப்புறமா?” என்று கேட்டான் இளவழுதி.
“ஆம்”
“எதற்கு?”
“நாளைக்குப் புரிந்துகொள்வாய்’ என்ற அரசன் அதற்கு மேல் ஏதும் பேசாமல் எழுந்து போய் அறைக் கதவைத் திறந்தான்.
இளவழுதியும் எழுந்து மன்னனுக்குத் தலைவணங்கி அறையைவிட்டுக் கிளம்பி தன் அறைக்கு வந்து சேர்ந்தான். வந்தவன் பஞ்சணையில் படுத்தும் ஏதோ யோசித்த வண்ணம் கூரையைப் பார்த்துக் கொண்டிருந் தான். “நாளை
என்ன தான் மன்னர் காட்டப்போகிறார்’ என்று தன்னைப் பல முறைக் கேட்டுக் கொண்டும் ஏதும் புரியவில்லை அவனுக்கு. மறுநாள் புரிந்தபோது ஏற்பட்ட பிரமிப்பு அவனை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. அவனைச் சுற்றி எழுந்தது
சொப்பனத்திலும் நினைக்க முடியாத காட்சி.

Previous articleCheran Selvi Ch14 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch16 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here