Home Cheran Selvi Cheran Selvi Ch21 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch21 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

69
0
Cheran Selvi Ch21 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch21 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch21 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 21. இன்பக் கவிதையில் இடைச் செருகல்

Cheran Selvi Ch21 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

தன் அன்றிரவின் அர்த்தஜாமச் சந்திரன் தெள்ளிய நிலவு அஷ்டமுடி ஏரியை வெள்ளிமயமாக அடித்திருந்தது. சந்திரன் அகன்றதும் மறைந்து விடக்கூடிய அந்த வெள்ளி மனித வாழ்வைப் போலவே சாசுவதமல்ல என்பதை நிரூபிக்க
இஷ்டப்பட்டவன் போல வாயுதேவன் தென்றலை ஏரியின் மீது சிறு அலைகளில் பிரதிபலித்த சந்திரனை இப்படியும் அப்படியும் அலையவிட்டதன்றி ஏரியின் நடுவில் படகில் நகைத்துக் கொண்டு படுத்துக் கிடந்த இளவழுதியையும்,
இளமதியையும் ஏளனம் செய்ய ஏரி அலைகளை படகின் பக்க பலகைகளில் மோதவிட்டு ‘களுக் களுக்’ என்ற சிரிப்பொலியையும் கிளப்பி விட்டான். ஆனால் இளமதியோ, இளவழுதியோ சூழ்நிலையைக் கவனிக்கும் நிலையில்
இல்லாததால் படகு ஆடிக் கொண்டிருந்ததையோ ஏரி அலைகள் சற்றே பெரிதாகத் தொடங்கியதையோ பார்க்க மறுத்தார்கள். உலகத்தில் தாங்கள் பார்க்கக்கூடியவை பரஸ்பரம் தங்களைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்ற
நினைப்பால் ஒருவரையொருவர் நோக்கி நகைத்துக் கொண்டார்கள். கண்களைக் கண்கள் கவ்வி நிற்க சிரித்த இதழ்களை மீண்டும் குவித்துப் பொய்க் கோபம் காட்டி “நீங்கள் செய்வது சரியாயில்லை” என்றாள் இளமதி.
இளவழுதியின் இதழ்களில் இள நகை அரும்பி நின்றது. “சொன்னால் தெரிந்து கொள்கிறேன்” என்ற அவன் சொற்களில் ஒரு சீடனுக்குள்ள பரிவு இருந்தது சிறிது விஷமமும் இருந்தது.
“எதைச் சொல்ல வேண்டுமென்கிறீர்கள்?” என்று இளமதி கேட்டாள் முகத்தை ஒருபுறமாகக் காட்டி.
அப்படி அவள் திரும்பியதால் ஒரு கன்னத்தின் செழுமை முழுதும் எழுந்து உட்கார்ந்த இளவழுதியின் கண்ணுக் கெதிரே தெரிந்தது. அந்தக் கன்னத்தின் மீது விழுந்த வெண்மதிக் கிரணங்கள் அதை முழு வெண்மை யாக அடிக்கவில்லை.
அதில் வெட்கச் சிவப்பு மண்டி விட்டதன் விளைவாக அந்தக் கனனத்தின் மீது தனது வலது கையை வைத்தான் இளவழுதி. அவன் இடது கை வழ வழத்த அவள் இடையை இம்சை செய்து கொண்டிருந்தது. “நான் செய்வது சரியாயில்லை
என்றாயே இளமதி” என்றான் இளவழுதி அந்தக் கன்னத்தை லேசாக அழுத்திய வண்ணம்.
“ஆம் சொன்னேன்” திரும்பிப் படுத்த நிலையில் அவனை ஏறெடுத்துப் பார்க்காமலே சொன்னாள் இளமதி.
“சரியாக எதைச் செய்வது எப்படிச் செய்வது என்று சொன்னால் திருத்திக்கொள்கிறேன்” இளவழுதி.
“ஓஹோ…” இளமதியின் ஒலியில் ஆயிரம் அர்த்தமிருந்தது.
“என்ன ஓஹோ….?”
“புரியவில்லையா?”
“இல்லை.”
“எனக்குப் புரிகிறது.”
“என்ன புரிகிறது?”
“உங்கள் எண்ணம்”
“என் எண்ணமா?” போலி ஆச்சரியம் அவன் கேள்வியில் இருந்தது- உண்மை உணர்ச்சி வெள்ளம் உள்ளூரப் பாய்ந்து கொண்டிருந்தது. இடையிலிருந்த இடது கையின் துஷ்டத்தனம் இடையுடன் நிற்கவில்லை. அந்தக் கையைத் தனது
வலது கையால் பிடித்து நிறுத்தினாள் இளமதி. இடது கை அவள் வசமாகி விட்டதால் இளவழுதியின் வலது கை அவள் கன்னத்தைவிட்டுக் கீழே இறங்கியது. அப்படி அவன் கை இறங்க, குரலும் இறங்கியது. முகம் அவளை நோக்கி இறங்கி
அவள் சந்திரமுகத்தை அணுகியது. “என் எண்ணத்தில் தவறு இருக்கிறதா?” என்ற அவன் வலிய உதடுகள் அவள் இதழ்களுக்கருகில் நெருங்கி முணுமுணுத்தன.
காதுக்குத்தான் கேட்கும் சக்தி இருக்குமென்று சொல்லுவார்கள். ஆனால் அந்த நேரத்தில் அந்த அழகியின் உணர்ச்சிகள் ஊசி முனையில் நின்றதால் உதடும் செவியாகி அவன் சொன்னதை வாங்கிக் கொண்டது. “எண்ணத்தைப் பற்றித்
தெரியவில்லை எனக்கு. ஆனால் உங்கள் செயல் சேனாதிபதியின் செயலாயில்லை” என்று சொல்லி லேசாக நகைத்தாள் இளமதி.
“சேனாதிபதி என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்ட இளவழுதியின் இடது கை, அவள் இடைக்குக் கீழிருந்த மலரெழுச்சியின் வழவழப்பில் அவள் கையை நெரித்தது. பிறகு அவள் கையையும் இழுத்துக்கொண்டு நகர்ந்தது.
“சேனாதிபதி இதைத்தான் செய்யக்கூடாது” என்று முணுமுணுத்தாள் இளமதி.
இளவழுதி பதில் சொல்லவில்லை. அவளை நோக்கிக் குனிந்து முகத்தை அவள் கன்னத்துடன் இழைத்தான். “நான் இப்போது நிராயுதபாணி” என்று முணுமுணுத்தான் அவள் காதில், அவள் காதை அவன் உதடுகள் லேசாகத்
தடவின.
இளமதி உணர்ச்சியால் அசைந்தாள். “நிராயுத பாணியா?” என்றாள் மெதுவாக.
“ஆம்.”
“உம்!”
“நீ அப்படி இல்லை!”
“வேறு எப்படியோ!”
“உன்னிடம் படைக்கலங்கள் இருக்கின்றன.”
“வியப்பாயிருக்கிறதே, நான் ஆயுதமேதும் கொண்டு வரவில்லையே!”
“தனியாகக் கொண்டுவரத் தேவையில்லை.”
“நீங்கள் சொல்வது…”
“புரியவில்லை. சரி புரியவைக்கிறேன். இதோ இரண்டு வேல்கள்…” என்றான் இளவழுதி.
“கண்கள்” என்றாள் இளமதி.
“இதயத்தில் பாய்கின்றன, மிகக் கூரியவை” என்ற இளவழுதி, “இதோ இரண்டு விற்கள்” என்று வளைந்த புருவங்களைத் தொட்டான்.
அவனை மயக்கமுற்ற கண்களால் நோக்கினாள் இளமதி. “விற்கள் போதுமா? தொடுக்கக் கணைகள் வேண்டாமா?” என்று முணுமுணுத்தாள் தன் தலையைத் தூக்கி அவன் காதுக்கருகில் தனது செம்பருத்தி இதழ் களைக் கொண்டு
போய்.
அவன் இரு கைகளும் அவள் இடையைச் சுற்றி அவளை லேசாக எடுத்தன. அப்படி அரைகுறையாக அவள் நிமிர்ந்து அவன் கைகளில் ஊசலாடிய நிலையில் அவன் சொன்னான்: “இளமதி! கணைகளுக்கா உன்னிடம் குறைவு? உன்
உடல் பூராவிலும் உள்ள மலர்க்கணைகள் பூராவும் பாய்ந்தால் என் உடல் சல்லடைக் கண்கள் ஆகுமே” என்று. அத்துடன் கண்ணெதிரே எழுந்து நின்ற இரு மொட்டுக்களையும் கவனித்துப் பெருமூச்சு விட்டான்.
“உடல் சல்லடைக் கண்கள் ஆகுமா?” என்று தழு தழுத்த குரலில் கேட்டாள் இளமதி.
“ஆம்.”
“அப்படியானால் நீங்கள் இந்திரன்.”
“இந்திரனா?”
“ஆம் ஆயிரம் கண்கள் உங்கள் உடலிலும் இருக்கும்.”
“இந்திரனாயிருக்க நான் இஷ்டப்படவில்லை இளமதி.”
“ஏனோ…?”
“நான் இந்திரனானால், நீ அகல்யையாக வேண்டும்…” என்ற இளவழுதி நகைத்தான்.
இளமதியின் முகத்தில் சினம் துளிர்த்தது. “ஓகோ! அத்தனை தூரத்துக்கு வந்துவிட்டீர்களா?” என்று அவள் சொல்லி வெளியிட்ட கோபமூச்சிலும் அழகிருந்தது.
இளவழுதி அவளைச் சமாதானப்படுத்த அவள் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்தான். “இளமதி… நீ ஒருநாளும் ரிஷிபத்தினி ஆகமாட்டாய், நானும், இந்திரனாக மாட்டேன். நமது உறவு தூய்மையாயிருக்கும்” என்று அங்கேயே
முணுமுணுத்த அவன், இதழ்களை மேலும் ஆழப் புதைத்தான் வழவழத்த சங்குக் கழுத்தில். அவன் தலையைப் பிடித்து மெள்ள உயர்த்தினாள் இளமதி. “கடமையை மறந்துவிட்டீர்கள்” என்றும் நினைவுபடுத்தினாள்.
“எந்தக் கடமையை?” என்று கேட்டான் இளவழுதி.
“அதிலும் சந்தேகம் வந்துவிட்டதா? எத்தனைக் கடமைகள் இருக்கின்றன?” என்று கேட்டாள் இளமதி.
“எத்தனையோ இருக்கின்றன இளமதி, உன்னிடம் மை, மன்னரிடம் கடமை, புலவரிடம் கடமை, நாட்டுக் மை பல இருக்கின்றன.”
“சேனாதிபதி கடமை…?”
“அதுவும் இருக்கிறது.”
“அதற்கு இந்த நட்டநடு ஏரிதான் இடமா?”
இதைக் கேட்ட இளவழுதி நகைத்தான். “நானா இங்கு படகை நிறுத்தச் சொன்னேன். நீதானே துடுப்புகளைத் துழாவவில்லை!” என்றான் இளவழுதி நகைப்பின் காடே.
இளமதி முகத்தை அசைத்தாள். கழுத்தில் புதைந்த அவன் இதழ்களுக்கு அது மிக இன்பமாயிருந்தது. அந்த நினைவில், அவளும் கழுத்தை அவன் உதடுகளுக்குச் சற்று அதிகமாகவே அழுத்திக் கொடுத்தாள். “துடுப்பை எப்படி
துழாவுவதாம்? என்று மிக மெதுவாகக் கேள்வியைத் தொடுத்தாள்.
“கையால்” என்று இளவழுதி கழுத்துக்குச் சேதி சொன்னான்.
“கைகளைத்தான் இரும்புப்பிடியாகப் பிடித்தீர்களே…?”
“நானா…?”
“வேறு யார் இருக்கிறார்கள் இங்கே…”
“அதனால்”
“கையைப் பிடித்தால் துடுப்பை எப்படித் துழாவுவது? சரி, கையை எடுத்துக் கொள்ளலாமென்றால் துடுப்புக்களையும் எடுத்து உள்ளே வைத்துவிட்டீர்கள். பிறகு?….”
“பிறகு…?”
“நான் சொல்ல வேண்டுமாக்கும்?”
அவள் சொல்லத் தேவையில்லையென்பதை உணர்ந்து கொண்ட இளவழுதி, துடுப்புக்களை மட்டுமின்றி இளமதியையும் தான் படகுக்குள் கிடத்தி விட்டதையும் மோகினி போல் படகில் படுத்துக்கிடந்த அவளைக் கண்கொட்டாமல்
நீண்டநேரம் பார்த்துக் கொண்டிருந்ததையும் திரும்பவும் எண்ணிப் பார்த்தான். அப்பொழுது வெகு அவஸ்தையுடன் இளமதி அசைந்தபோது அவள் நெளிவே அபிநயமாக இருந்ததையும் நினைத்துப் பார்த்தான். அதற்குப் பிறகு.
காரணமில்லாமல் இருவரும் நகைத்ததையும் எண்ணிப் பெருமூச்சு விட்டான்.
இளமதி அவன் கண்களில் விரிந்த பழைய கனவையும் பெருமூச்சில் புதைந்து வெளிவந்த இச்சைகளின் வேகத்தையும் உணர்ந்தாள். அந்த சமயத்தில் அந்த இருவருக்கும் ஏற்பட்ட சங்கடத்தை அகற்ற சந்திரன் வெளிச்சத்தை மறைப்பதே
சரியென்று நினைத்த காற்றுத் தேவன் ஒரு சிறிய கரிய மேகமொன்றை ஏவி வெண்மதிக்குத் திரையிட்டான்.
திரை அரைகுறைத் திரை. ஆனால் மயக்கத்தையும் துணிவையும் தரும் நிலையை அது சிருஷ்டிக்கவே அடுத்த வினாடி இளமதி இளவழுதியின் நெருங்கிய பிணைப்பிலிருந்தாள். உணர்ச்சிகள் விரைந்தன. உடல்கள் இழைந்தன.
அப்படியே நீடித்திருந்தால் விளைவு ஒரே விளைவாகத்தான் இருந்திருக்கும். ஆனால் நல்லவர்களைக் காக்கும் இயற்கை அப்பொழுது ஒரு கை கொடுக்கத்தான் செய்தது. திடீரென்று எழுந்த ஒரு பெரும் கடற்காற்று, படகை பலமாக
ஆட்டியது இருமுறை. கவிழ்ந்துவிடும் நிலைமையிலிருந்த படகை, சரேலென எழுந்த இளமதி துடுப்புக்களை எடுத்து தானப்படுத்தினாள். அப்படியும் படகு நிதானப்படவில்லை. திடீர், திடீர் என்று எழுந்த அந்தக் காற்று படகை
எங்கேயோ அடித்துச் சென்றது. ஏரியின் அலைகள் கடல் அலைகளாயின. படகு உயர எழுந்து எழுந்து தாழ்ந்தது. அடுத்த ஒரு எழுச்சியில் படகு சரேலென்று கவிழ்ந்தது. அஷ்டமுடி அலையில் தூக்கி எறியப்பட்ட இருவரும் எதிர்க் கரையை
நோக்கி நீந்தினார்கள். இளமதியின் கைகள் களைத்தால் தன் கையை கொடுக்க அவளுக்கு வெகு அருகில் நீந்தினான் இளவழுதி. ஆனால் சேரன் செல்விக்கு அவன் உதவி தேவை இல்லாதிருந்தது. அனாயாசமாக நீந்தி இளவழுதிக்கு
முன்பே அக்கரை ஏறி நின்றாள் அவள். இளவழுதி கரை ஏற ஒரு கையையும் நீட்டினாள்.
அவள் கரம்பற்றிக் கரை ஏறிய இளவழுதி நீர் சொட்டச் சொட்ட நின்ற இளமதியைப் பார்த்தான். நீரில் நனைந்ததால் அவள் ஆடை உடலோடு உடலாக ஒட்டி நின்று அவள் எழில்களைப் பட்டவர்த்தனமாகக் காட்டிக் கொடுத்தது.
“இந்த உடை. களைப் பிழிந்து கொள்ள வேண்டும் இப்படியே நான் அரண்மனை போக முடியாது” என்றாள் இளமதி.
“சரி… பிழிந்து கொள்” என்றான் இளவழுதி.
“உங்களுக்குப் புத்தி லவலேசமும் இல்லை” என்றாள் இளமதி.
“அது நடு ஏரியிலே பறிபோய்விட்டது” என்றான் இளவழுதி.
“இந்த அசட்டுப் பேச்சு கிடக்கட்டும். அப்புறம் போங்கள், நான் அந்தப் புதருக்கருகில் ஆடையைப் பிழிந்து உலர்த்திக் கொள்கிறேன்” என்று எட்ட இருந்த புதரைச் சுட்டிக்காட்டினாள் இளமதி.
அந்த நிலையில் இளமதி மனோகரமாயிருந்தாள். நெற்றியில் ஒட்டிக் கொண்டிருந்த தலைக்குழல்கள் சில அவள் முகத்துக்குத் தனி அழகைக் கொடுத்திருந்தது. உடம்பில் ஒட்டிவிட்ட ஆடை அதன் பணியை விபரீத மாகச் செய்து
கொண்டிருந்ததால் அவள் எழுச்சிகளும் சுழற்சிகளும் இளவழுதியின் புத்தியை அப்படியே அபகரித்துக் கொண்டன. ஆகவே அவள் திரும்பிப் புதரை நோக்கி நடந்த போது பின்னழகுகள் அசைந்த அழகை அவன் கண்களால் பருகிக்
கொண்டே நின்றான். பிறகு அவனும் அடுத்திருந்த மரத்தின் மறைவை நாடினான்.
அடுத்த சில வினாடிகளில் புதரின் மறைவிலிருந்து அவள் கச்சைகளும், சராயும் புதருக்குமேல் வந்து விழுந்து புதரை மறைத்தன. அவன் சராயும் அந்தப் புதரில் வந்து படுத்துக் கொண்டது. இதையெல்லாம் கவனித்துக்
கொண்டிருந்த இளவழுதி புதர் மறைவில் அரச்மகள் இருந்த கோலத்தைப் புரிந்து கொண்டான். அந்த நினைப்பால் பெருமூச்சு விட்டு மரத்தின் மறைவில் தனது உடைகளையும் களைந்து பிழிந்து காற்றில் உலர்த்தினான்.
அந்த மனோரம்மியமான நிலை அப்படியே நீண்டிருக்கும் வேறொருவன் அங்கு தலை நீட்டாதிருந்தால். அவர்கள் ஏகாந்தத்தை உடைக்கக் கூப்பிடு தூரத்தில் மலைச்சரிவில் மெள்ள ஒரு சிறு விளக்கு மங்கியதாகத் தெரிந்தது. பிறகு
ஆடி ஆடிக்கொண்டே இளமதி இருந்த புதர் இருந்த திசையில் வரத் துவங்கியது. புதர் அருகே வருமுன் அந்த விளக்கு திடீரென அணைக்கப்பட்டது. “இளமதி…. இளமதி….. உன்னைத்தான்” என்ற குரல் மெதுவாக ஒலித்தது. குரலில்
குழைவு இருந்தது. இளமதியிடம் அந்தக் குரலுக்குடையவன் பெரும் அன்பை வைத்திருந்தான் என்பதை அவன் அழைத்த மாதிரியிலிருந்தே இளவழுதி உணர்ந்து கொண்டான். தனது உன்னத இன்பக் கவிதையில் இப்படியும் ஒரு இடைச்
செருகலா என்ற நினைப்பினால் சிறிதளவு சீற்றமும் எழுந்தது இளவழுதியின் இதயத்தில்.

Previous articleCheran Selvi Ch20 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch22 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here