Home Cheran Selvi Cheran Selvi Ch25 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch25 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

115
0
Cheran Selvi Ch25 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch25 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch25 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 25. பைங்கிளிக்குப் பட்டுக்கயிறு

Cheran Selvi Ch25 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

மறுநாள் முழுவதும் மன்னன் மிகுந்த உற்சாகத்துடனிருந்தான். அதைக் கவனித்த புலவருக்கும் அரசகுமாரிக்கும் ஏதும் புரியவில்லையாகையால் அதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று மட்டும் தீர்மானித்தனர். முதல் நாளிரவு
தாங்கள் இருவரும் படைத்தலைவன் மீது, குற்றம் கூறிய பிறகும், போர்த்திட்டச் சீலையைக் காட்டிய பிறகும் மன்னன் அதை ஒரு பொருட்டாக மதிக்காதிருந்ததே அவர்களுக்குப் பெருவியப்பாயிருந்ததால், மறுநாள் காலையில் மன்னன்
கட்டளைப்படி சீலையை படைத்தலைவனிடம் சேர்ப்பித்தபோது அவன் அதை சர்வ சாதாரணமாக வாங்கிக் கொண்டதும், மன்னன் அன்று படைத் தலைவனை அளவுக்கு அதிகமாகவே உபசாரம் செய்யத் தொடங்கியதும் அவர்கள்
வியப்பை பன்மடங்கு உயரச்செய்தது. காலையிலேயே எழுந்திருந்த மன்னன் வழக்கமாகச் செய்யும் வாட் பயிற்சியைப் படைத்தலைவனுடனேயே நடத்தியதும், சிற்றுண்டியை அவனுடன் தனித்தே உண்டதும் புலவர் காதுக்கு வரவே அவர்
கோபத்தின் வசப்படவே செய்தார். அதற்குப்பிறகு அரசமகள் சமுத்திரபந்தனிடம் பாடம் கேட்கத் துவங்கிய சமயத்தில் அரசன் இளவழுதியுடன் அங்கு தோன்றி கவிஞர் சொல்லிக் கொடுத்த நாடகமான பிரத்யும்னாப்யு தயத்தின்
நுட்பங்களைப் படைத்தலைவனுக்கு எடுத்துச் சொல்லியது அங்கிருந்த புலவருக்கு எரிச்சலை உள்ளூரப் பெரிதும் தூண்டி விட்டது. ஆனால் ரவிவர்மன் புலவருடைய எரிச்சலையும் அதனால் ஏற்பட்ட முகபாவத் தையும் லட்சியம்
செய்யாமல் இளவழுதியிடமே பேசிக் கொண்டிருந்தான். ‘இந்த இடத்தில் தான் பிரத்யும்னன் பிரபாவதியைச் சந்திக்கிறான். அந்தக் காதல் கட்டத்தில் இந்தக் கவிதையை எழுதியிருக்கிறேன்” என்று விளக்கி “இளமதி! அந்த இடத்தைச் சிறிது
வீணையில் வாசித்துக் காட்டு” என்று புதல்விக்கும் உத்தரவிட்டான். இளமதி புலவரை நோக்கினாள். “புலவருக்கு இந்த நாடகம் தெரியாது மகளே! வேண்டுமானால் கவீசுவரரை சந்தேகம் கேட்டுக்கொள்” என்று கூறினான் சேரர்
பெருமான்.
இப்படிப் புலவரை மட்டந்தட்டியதால் பெருமை பொங்கிய உள்ளத்துடன் சமுத்திரபந்தன் வியாக்கியானத்தைக் கொஞ்சம் அதிகப்படியாகவே சொல்லி, அலங்கார சாஸ்திரத்துக்கு அரசன் கவிதை எத்தனை அழகாக ஒட்டுகிறது
என்பதையும் விளக்கினான். அடுத்து இளமதி அந்தக் கவிதையை வீணையில் வாசித்தபோது அப்படியே உருகினான் சமுத்திரபந்தன். அரசனும் அவள் வாசிப்பை சிலாகித்து “இளவழுதி! நமது இளமதி மட்டும் என் வயிற்றில் பிறந்திருக்கா
விட்டால் பழையபடி தனது பீடமாகிய வெள்ளைத் தாமரையிலேயே அமர்ந்திருப்பாள்” என்று கூறி அவள் சரஸ்வதியின் அவதாரம் என்பதைச் சுட்டிக் காட்டினான்.
இளவழுதி அந்தப் பாராட்டுதலை ஒப்பும் பாவனையில் தலையை ஆட்டினாலும் அவன் நினைப்பு சங்கீதத்திலும் இல்லை, மன்னன் இயற்றிய கவிதையிலுமில்லை, சமுத்திரபந்தன் வியாக்கியானத்திலுமில்லை. பிரத்யும்னனைவிட
அப்பொழுது படைத்தலைவன் அஜ்மல் கானையே நினைத்துக் கொண்டிருந்தான். அவன் நினைப்பு வேறு எங்கோ திளைத்திருப்பதைக் கண்ட புலவர் மன்னனை நோக்கி, “மன்னா! இசையறிவு, அனுபவம், ரசிப்புத்தன்மை இவை
எல்லோருக்கும் அமைவ தில்லை” என்று இடக்காகச் சுட்டிக்காட்டினார்.
அவர் சொன்ன தன் பொருளைப் புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ளாதது போலவே பாசாங்கு செய்த மன்னன் ரவிவர்மன் “உண்மை புலவரே! நாங்கள் வருகிறோம்” என்று கூறிவிட்டு “இளமதி பாடம் நடக்கட்டும் இன்று
பிற்பகல் என்னை வந்து பார்” என்று மகளை நோக்கிப் புன்முறுவல் செய்துவிட்டுப் படைத் தலைவனுடன் சங்கீத மண்டபத்தை விட்டு வெளியேறினான். பிறகு படைத் தலைவன் பின் தொடர கோட்டைப்பகுதிகளை முற்றும் சுற்றிய
பிறகு அரண்மனை நந்தவனத்துக்கு வந்து சேர்ந்தான். அங்கிருந்த மரங்களின் அடர்த்தியான பகுதிக்கு வந்ததும் சிறிது நின்று, “இளவழுதி! நீ தயாரித்த சீலையைப் பார்த்தேன்” என்றான் அமைதியாக.
படைத்தலைவன் அரசன் உரை கேட்டு பதட்டம் ஏதும் அடையவில்லை. ‘சீலை உங்களுக்குத் திருப்தியளித்திருக்கும் என்று நம்புகிறேன்” என்று பதில் கூறினான்.
“திருப்தி, பரமதிருப்தி” என்றான் மன்னன் உற்சாகத்துடன்.
“எதிரியைச் சிறிது திசை திருப்ப வேண்டியிருந்தது…” என்று இழுத்தான் படைத்தலைவன்.
“புரிந்து கொண்டேன்” என்றான் ரவிவர்மன்.
“இன்று விளக்கு வைத்ததும் கடற்கரைக்குப் போகலாமென்று இருக்கிறேன்” என்று அறிவித்தான் படைத்தலைவன்.
“அஜ்மல்கான் விருப்பப்படி” என்று மன்னனும் சொன்னான்.
“ஆம்”
“அப்படியே செய். ஆனால் உனக்கு அதில் ஆபத்து ஏதும் ஏற்படாதே?”
“நாட்டின் நலனைவிட உயிர் முக்கியமல்ல மன்னவா, தற்சமயம் ஆபத்து ஏதும் ஏற்பட நியாயமில்லை.”
இதைக் கேட்ட ரவிவர்மன் படைத்தலைவன் தோளில் கை வைத்தான் ஆறுதலாக. “இளவழுதி! பாண்டிய வம்சத்தில் பிறந்த நீ சேர நாட்டுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராயிருக்கிறாய். ஆனால் புலவரின் சந்தேகத்துக்கும்
ஆளாகியிருக்கிறாய், சீலையில் நீ இட்டிருக்கும் அந்தக் கோடுகள் உன் கை வண்ணம். அசல் சீலைக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாதென்பதை அவர் உணரவில்லை. என் மகளின் சந்தேகத்துக்கும் நீ ஆளாயிருக்கிறாய்?” என்றும் கூறினான்
வருத்தத்துடன்.
இளவழுதி மன்னன் குரலிலிருந்த வருத்தத்தைக் கவனிக்கவே செய்தான். ஆனால் சிறிதும் வருத்தமற்ற குரலில் கூறினான். ‘ மன்னவா! இந்து சமுதாயத்தின் நலம் பாதுகாப்பு இவற்றுக்காக தாங்கள் பாடுபடுகிறீர்கள், சேர நாட்டு
விஸ்தரிப்பு மட்டும் தங்கள் நோக்கமல்ல யென்பதை நான் உணர்வேன். அந்தப் பெரு நோக்கத்தில் சேவையில் நானும் பங்கு கொள்கிறேன், அவ்வளவுதான்” என்ற இளவழுதி “இன்றிரவு அஜ்மல்கானை நமது படைத்தளத்துக்கு
அழைத்துச் செல்லட்டும்” என்றான்.
“அவன் எப்படித் துணிவுடன் வருவான்?” என்று வினவினான் அரசன்.
‘இன்று எனக்குத் தனது படைபலத்தைக் காட்டுவதாகக் கூறிக் கடற்கரைக்கு வரச் சொல்லி இருக்கிறான். அவன் படை எதுவும் இங்கு கிடையாதென்பது தங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். ஆகையால் என்னைச் சிறை செய்து
என் உடையில் அவன் வரவே திட்டமிடுகிறான். அவன் திட்டத்தில் நான் தெரிந்தே சிக்கிக் கொள்கிறேன். அவன் வந்தால் இளமதி அவனை அழைத்துச் செல்லட்டும்’! என்றான் இளவழுதி.
மன்னன் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாகத் தலையசைத்தான். பிறகு படைத்தலைவனுடன் மீண்டும் கோட்டைப் பகுதிகளில் சுற்றினான். கடைசியாக இருவரும் சர்வசாதாரணமாகப் பிரிந்து செல்ல படைத் தலைவன் தனது
அறையை நாடித் தாளிட்டுக் கொண்டான். நீண்ட நேரம் அந்த அறைக் கதவு சாத்தியே கிடந்தது. சுந்தரி வந்து உணவருந்த அழைத்த போது கூட படைத்தலைவன் கதவைத் திறக்காமல் உணவைத் தனது அறைக்கே அனுப்பும்படி
கூறினான். உணவுத் தட்டை அவள் கொண்டு வந்தபோது, கதவை அரைவாசி மட்டும் திறந்து தட்டை வாங்கிக் கொண்டு அவளைப் போய்விடப் பணித்தான்.
அன்று மாலை படைத்தலைவனுக்கு வேண்டிய உடைகளையும் ஆயுதங்களையும் அணிந்து அரண்மனைப் பகுதியிலிருந்து வெளிப்போந்த இளவழுதி கோட்டையின் திட்டி வாசலுக்கு வந்து அதைத் தாண்டியதும் அடுத்த காட்டுப்
பகுதியில் நுழைந்து “இளமதி! இளமதி” என்று அழைத் தான்.
மரக்கூட்டத்திலிருந்து வெளி வந்த இளமதி, “நான் இங்கிருப்பேனென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று வினவினாள். அவள் குரலில் துன்பமுமில்லை, மகிழ்ச்சியுமில்லை. இரண்டுங் கெட்டானான ஏதோ ஒரு ஒலி இருந்தது.
படைத்தலைவன் அவளுக்குப் பதில் கூறவில்லை. அவளைத் தன்னிடம் இழுத்துக் கொண்டான். அவள் கையை எடுத்துத் தன் மார்பில் வைத்து..இது சொல்லிற்று” என்று கூறினான்.
“இதயமா!” என்று கேட்டாள் இளமதி.
“ஆம்,” படைத்தலைவன் குரல் சர்வ சாதாரணமா யிருந்தது.
“இதயம் அத்தனை நுட்பமாகப் பேசுகிறதா?”
“அதற்குத்தான் அந்த சக்தி உண்டு. உன் இதயத்தை நானறிவேன் இளமதி. நான் ஆபத்தை நோக்கிச் செல்லும் போது உன் இதயம் உறங்காது,
உன் சிந்தையும் சலனமற்று இருக்காது” என்று கூறிய படைத்தலைவன் “இளமதி! நம் இருவருக்கும் ஒரு பாக்கியமிருக்கிறது. ஒரு சமுதாயத்தைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம், நல்ல காரியம் எதிலும் ஆபத்து கலந்து
தானிருக்கும். அதைப்பற்றிக் கவலைப் படுவதில் அர்த்தமில்லை. தவிர இந்தப் பணியில் எனக்கு அதிக ஆபத்தும்இல்லை. உன்னையும் புலவரையும் போல் அஜ்மல்கானும் என்னிடம் சந்தேகப்படுகிறான். ஆனால் என்னைக் கொல்வதில்
அவனுக்கு நஷ்டமிருக்கிறது. ஆகவே அதைச் செய்ய மாட்டான். நான் சொல்வதை நம்பு. நான் கூறியது போல் இதோ நான் தரித்திருக்கும் உடையில் வரும் அஜ்மல்கானை படைத்தளத்துக்கு அழைத்துப்போ. நாளை மாலை உன்னை
நிச்சயமாக சந்திக்கிறேன்” என்று கூறிவிட்டு அவள் நெற்றியில் தனது உதடுகளைப் பொருத்திவிட்டு மலைச்சரிவில் விடுவிடு வென்று நடந்து சென்று விட்டான். அவன் புரவியில் கூட செல்லாமல் கால் நடையாகவே சென்றதைக் கண்ட
இளமதி துன்பப் பெருமூச்சு விட்டாள். பிறகு இதயத்தைத் துன்பம் சூழ அரண்மனையை நோக்கிச் சென்றாள்.
அவளை விட்டுப் பிரிந்த இளவழுதி விளக்கு வைத்து இரண்டு நாழிகைக்குப் பிறகு கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். படகுகள் வரிசையாக இழுத்து விடப்பட்டிருந்த இடத்தை நாடி ஒவ்வொரு படகாய் பார்த்துக் கொண்டே சென்றான்.
பல படகுகளைத் தாண்டிச் சென்றதும் தனியாக இருந்த ஒரு படகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஒரு அராபியன் சட்டென்று எழுந்து உட்கார்ந்து “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று வினவினான். பிறகு படைத்தலைவன் உடையைக்
கண்டதும் எழுந்து வணங்கி ‘வாருங்கள்” என்று கூறி மணலில் முன்னால் நடந்தான். கடற்கரையைத் தாண்டியதும் ஒரு மரத்தடியில் இரு புரவிகள் கட்டப்பட்டிருந்தன. ஒரு புரவியில் படைத்தலை வனை ஏறச்சொல்லி இன்னொரு
புரவியில் தான் ஏறி புரவியை கொல்லம் நகரத்தின் வடக்குப் பகுதியை நோக்கிச் செலுத்தினான். ஒரு நாழிகைப் பயணத்துக்குப் பிறகு நகர எல்லையிலிருந்த ஒரு சிறு மலைக்காட்டுக்குள் நுழைந்தான், அந்தக் காட்டில் ஆளரவம்
ஏதுமில்லை. ஒரே ஒரு கூடாரம் மட்டுமிருந்தது. அந்தக் கூடாரத்துக் குள் படைத்தலைவனை செல்லச் சைகை காட்டிய அரா பியன் வெளியே நின்றுவிட்டான்.
படைத்தலைவன் எதிர்பார்த்தபடியே எல்லாம் நடந்தது. அங்கு அஜ்மல்கான் இல்லை. பதிலுக்கு இரு முரட்டு அராபியர்கள் இருந்தார்கள். உள்ளே நுழைந்ததும் அவன் கழுத்தையும் மார்பையும் கூரிய வாட்கள் தடவின. அடுத்த வினாடி
அவன் கச்சையிலிருந்த வாள் உருவப்பட்டது. அவன் உடலை இரு அராபியரும் இழுத்துக் கயிறுகளால் பிணைத்தார்கள். பிறகு அவனைக் கீழே தள்ளி உருட்டினார்கள். இதற்கெல்லாம் ஏதோ முரண்டு கொடுப்பதுபோல் இளவழுதி
பாசாங்கு செய்தானே தவிர எந்தவித சண்டையிலும் ஈடுபடவில்லை. தன்னை அவர்கள் கட்டித் தரையில் உருட்டிய பிறகு “நான் யாரென்பதை நீங்கள் உணரவில்லை. நான் சேர நாட்டுப் படைத்தலைவன். ஸலீமின் உத்தரவின் மேல் இங்கு
வந்தி ருக்கிறேன். என்னை இப்படி நடத்தியதற்கு உங்கள் உயிரை ஸலீம் வாங்கி விடுவார்” என்று சீறினான் இளவழுதி.
பதிலுக்கு இருவரும் நகைத்தார்கள். ஒருவன் காலால் இளவழுதியை உதைக்கவும் செய்தான். பிறகு இருவரும் வெளியே சென்றனர் நகைத்துக் கொண்டே. சிறிது நேரத்திற்கெல்லாம் இன்னொருவன் உள்ளே வந்து அவன் வாயில்
மதுவைப் புகட்டினான் வலுக்கட்டாயமாக. அத்துடன் கண்களை மூடினான் இளவழுதி.
அதே இரவில் இரண்டாம் ஜாமத்தில் படைத்தலைவன் உடையில் அஜ்மல்கான் அஷ்டமுடி ஏரிக்கரைக்கு வந்தான். அங்கு இளமதி தயாராகப் படகுடன் காத்திருந்தாள். வந்தவனை “படைத்தலைவரே! ஏதும் பேசவேண்டாம். உங்களை நான்
அழைத்துப்போக வந்திருப்பதுயாருக்கும் தெரியாது. நாம் வழக்கமாக சந்திக்கும் இடத்துக்கே போய் விடுவோம்” என்று மிக மெதுவாகக் கூறினாள்.
அஜ்மல்கானும் தலையசைத்து விட்டுப் படகில் அவளுக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டான். இளமதி படைகைச் செலுத்தி அக்கரை சேர்ந்தாள். படகிலிருந்து குதித்ததும் எதிரேயிருந்த தென்னை மரச்சோலையில் புகுந்தாள்.
அங்கிருந்து முந்திரி மரக் கூட்டத்தின் இருட் டுக்கு வந்தாள். அவளைப் பூனை போல் பின் தொடர்ந்த அஜ்மல்கான் இருட்டடித்த பகுதிக்கு வந்ததும் அவள் முகத்தில் தனது குறுவாளை அழுத்தினான். “அரசகுமாரி? நான்
படைத்தலைவனல்ல” என்றான்.
‘யார் நீ?” அரசகுமாரியின் கேள்வியில் திகில் இருந்தது.
“யாராயிருந்தாலும் கவலைப்படாதே. உனக்கு அபாயம் ஏதுமில்லை. படைகள் இருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்” என்றான் அஜ்மல்கான்.
“படைத்தலைவர் உடையில் எப்படி வந்தாய்?”
“நண்பர்கள் உடை மாற்றிக் கொள்வதில் தவறென்ன?”
இதைக் கேட்ட இளமதி சீற்றம் காட்டினாள். பிறகு பேசாமல் முன் நடந்து ஒருதோப்பின் முகப்புக்கு வந்தாள். ‘இங்கிருந்து படைப்பிரிவுகளைப் பார்க்கலாம். ஆனால் விவரமாகப் பார்க்க வேண்டுமானால் புலவர் அனுமதி வேண்டும்”
என்றாள்.

.
“புலவர் எங்கிருக்கிறார்?”
“அதோ அந்தக் கூடாரத்தில்” என்று ஒரு கூடாரத்தைக் காட்டினாள் இளமதி.
“சரி நீ முன்பு செல். திரும்பி பாராதே. குரல் எதுவும் கொடுக்காதே! கொடுத்தால் உடனடியாகப் பிணமாகி விடுவாய்” என்று அவள் முகத்தில் குறுவாளைச் சிறிது அதிகமாகவே அழுத்தினான் அஜ்மல்கான்.
இளமதி ஏதும் பேசாமல் முன்னே நடந்தாள். கூடாரத்து வாசலுக்கு வந்ததும் வெளியே நின்று “நீங்கள் உள்ளே போகலாம்” என்றாள்.
“நீ செல் முன்னால்” அஜ்மல்கான் உத்தரவில் கண்டிப்பு இருந்தது.
இளமதி கூடாரத்துக்குள் நுழைந்தாள். அஜ்மல்கானும் நுழைந்தான். உள்ளே ஒரு பெரிய பீடத்தில் மான்தோலை விரித்து உட்கார்ந்திருந்தார் புலவர்.
அவர் முன்னால் அஜ்மல்கான் நின்றான். “புலவரே! என்னைப் புரிகிறதா?” என்று வினவினான் துணிவும் வெற்றி ஒலியும் நிரம்பிய குரலில்.
‘நீயா?” என்று புலவர் வாயைப் பிளந்தார்.
“ஆம். உமது படைகளில் பாதியைப் பார்த்தேன்.”
“யார் காட்டியது?”
“அரசகுமாரி!”
“அடிபாவி!”
“அவள் குற்றமல்ல. எனது குறுவாளுக்கு அஞ்சினாள்.”
“இப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்கிறாய்? என்று புலவர் நடுக்கத்துடன் வினவினார்.
“இவளைக் கட்டிப் போட்டு என்னுடன் வாருங்கள்” என்றான் அஜ்மல்கான்.
“எதற்கு?” என்று வினவினார்.
“மீதிப் படைகளைக் காட்ட’ என்ற அஜ்மல்கான் “எனக்கு நேரமில்லை தாமதிக்க. உம், சீக்கிரம் கட்டுங்கள் இவளை’ என்று கூறிச் சற்று எட்ட இருந்த பெரும் பட்டுக் கயிற்றையும் காட்டினான், “பைங்கிளியைப் பிணைக்கப் பட்டுக்
கயிறுதான் தகுதி” என்ற அஜ்மல்கான் குரூரமாக நகைத்தான்.

Previous articleCheran Selvi Ch24 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch26 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here