Home Cheran Selvi Cheran Selvi Ch29 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch29 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

130
0
Cheran Selvi Ch29 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch29 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch29 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 29. புலவரின் பூஜை

Cheran Selvi Ch29 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

மறுநாள் புலவர் விநாயக பூஜையை மிக மும்முரமாகத் துவங்கினாரென்றால், அது சம்பிரதாயமான பூஜையாக இல்லை. சம்பிரதாயமாகத்தானிருக்குமென்று நினைத்து அரண்மனை நம்பூதிரி புலவரை அணுகி “விநாயக பூஜைக்கு
அருகம்புல், சந்தனம், விபூதி, பழங்கள் இவற்றை எங்கு கொண்டு வரட்டும்?” என்று வினவினார்.
அப்பொழுதுதான் குளிக்காமல் முழுகாமல் அஷ்டமுடி ஏரியை நோக்கிப் புறப்பட்ட புலவர் “கொண்டு வரட்டும் என்றால் நீரும் வரப்போவதாக உத்தேசமா?” என்று வினவினார்.
“அரண்மனைப் போத்தி இல்லாமல் பூஜை எப்படி நடக்கும்?” என்று நம்பூதிரி புலவரைக் கேட்டார்.
புலவர் அவரைச் சரியாகத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. “ஏன் எனக்குப் பூஜை செய்யத் தெரியாதோ? இருக்கிற தொல்லை போதாதென்று உம்மையும் கட்டி இழுக்க வேண்டுமாக்கும்?” என்று வெறுப்புடன் பதில் சொல்லிவிட்டுப்
பூஜை செய்ய சீக்கிரம் அரசகுமாரியை வரச்சொல்லும்” என்றார்.
“எந்த அரசகுமாரியை?” என்று சூடாகக் கேட்டார் நம்பூதிரி.
“ஓகோ! உங்கள் நாட்டில் பெண்கள் அதிகமோ? மறந்துவிட்டேன். சரி இளமதியை வரச்சொல்லும்” என்று கூறிவிட்டு நடக்க முற்பட்டார் புலவர்.
ஆனால் நம்பூதிரி விடுகிற வழியாகக் காணோம். “அரச குமாரிப் பெண்…” என்று ஆரம்பித்தார் ஆவேசத்துடன்.
“அப்படியா! நீர் பெரிய ஆராய்ச்சிக்காரர்” என்ற புலவரின் சொற்களில் கேலியும் வெறுப்பும் தாண்டவமாடின.
“அதற்காக அல்ல நான் சொல்வது” நம்பூதிரி கோபத்தைக் காட்டினார்.
“வேறு எதற்காக?”
“பெண்கள் பூஜை செய்யக் கூடாது”
“ஏன்?”
“அவர்களுக்கு அதிகாரமில்லை”
“யார் சொன்னது?”
“சாஸ்திரம்”
“பெண் போருக்குச் செல்லலாமா?”
“கூடாது. வீட்டைவிட்டு வெளிவரக் கூடாது”
“அதுவும்”
“சாஸ்திரம்”
புலவர் ஏதோ சொல்ல வாயெடுத்தார். பிறகு சட்டென்று மூடிக்கொண்டு நம்பூதிரியைக் கேலி ததும்பும் கண்களால் பார்த்தார். பிறகு சாஸ்திரத்தைப் பார்க்க இது சமயமில்லை. அரசகுமாரியை சீக்கிரம் வரச் சொல்லும்” என்று
கூறிவிட்டு வேகமாக நடந்து விட்டார்.
நம்பூதிரி நின்ற இடத்திலேயே நின்று புலவரை எரித்து விடுவதுபோல் பார்த்தார். அந்த சமயத்தில் அந்தப்புரத்திலிருந்து கிளம்பி நம்பூதிரியை அணுகிய இளமதி “ஏன் இங்கு நிற்கிறீர்கள் பட்டத்திரி?” என்று வினவினாள்.
நம்பூதிரி அவளை நோக்கி “இளமதி! அந்தப் புலவன் திமிரைப் பார்த்தாயா?” என்று கேட்டார்.
இளமதி நம்பூதிரியை பக்தி நிரம்பிய கண்களுடன் நோக்கினாள். ‘.ஏன்? உங்களிடம் ஏதாவது அபசாரப்பட்டு விட்டாரா?” என்றும் வினவினாள்.
நம்பூதிரியின் கண்கள் நெருப்பைக் கக்கின. “அபசாரமா! அவன் போட்டிருக்கிற விபூதியைப் பார்த்து ஏமாறாதே இளமதி! அவன் போடுவது வெறும் வேஷம். உண்மையில் நாஸ்திகன்” என்றார் நம்பூதிரி.
“என்ன சொன்னார்?” என்று கேட்டாள் அரசகுமாரி ஏதும் புரியாமல்.
“பூஜை செய்ய உன்னை வரச் சொன்னான். பட்டத்திரியான நான் வேண்டாமாம். பெண் பூஜை செய்வது சாஸ்திர சம்மதமல்ல என்றேன். ‘உன் சாஸ்திரத்தில் இடி விழ’ என்று வாயால் சொல்லவில்லை, ஆனால் அவன் பார்வையில் அது
பரிபூர்ணமாயிருந்தது” என்ற நம்பூதிரி யின் மூச்சு ஆத்திரத்தால் பெருமூச்சாக வெளிவந்தது.
“கோபிக்காதீர்கள் பட்டத்திரி. புலவர் வேடிக்கைக்காக ஏதாவது சொல்வார். நீங்கள் பூஜைக்கு சாமக்கிரியைகளை எடுத்துக்கொண்டு வாருங்கள்” என்று அவரை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு அரசகுமாரி அஷ்டமுடி
ஏரிக்கரையை நோக்கிச் சென்றாள்.
அதன் கரையில் புலவர் அவள் வரவை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார். அவள் வந்ததும் “படகில் ஏறிக் கொள்” என்றார்.
“கொஞ்சம் பொறுங்கள். பட்டத்திரியும் வந்து விடட்டும்” என்று கெஞ்சினாள் இளமதி.
“அவர் எதற்கு?” என்று புலவர் கேட்டார் வெறுப்புடன்.
“அரண்மனை சம்பந்தப்பட்ட பூஜை எதுவாயிருந்தாலும் அவர்தான் செய்வது வழக்கம். போனால் போகிறது, கொஞ்சம் அவருக்கு இந்த பூஜையை விட்டுக் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டாள் இளமதி.
புலவர் வேண்டாவெறுப்பாக சரியென்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினார். அந்த மலைச்சரிவில் பெரும் தட்டு, கூடை, மணி இவற்றுடன் நம்பூதிரியும் வந்துவிடவே மூவரும் படகில் ஏறிக் கொண்டு அக்கரையி லிருந்த
படைத் தளத்துக்குச் சென்றார்கள். அக்கரையில் இறங்கியதும் புலவர் யானைப் படை. இருந்த, திக்கை நோக்கி அவர்களை அழைத்துச் சென்றார். அங்கிருந்த பெரும் யானை ஒன்றுக்கு பூஜை செய்யும்படி நம்பூதிரி யிடம் கூறிவிட்டு
பட்டத்திரி! பூஜை அதிக அமர்க்கள மாக வேண்டாம். மெதுவாக கூடிய விரைவில் சத்தமில்லாமல் நடக்கட்டும்” என்றார் புலவர்.
“நீர் சொல்வது புரியவில்லை” என்றார் பட்டத்திரி தமது முன் குடுமியை உக்கிரத்துடன் ஆட்டி.
“அதோ அந்த மணியை ஓங்கி அடிக்க வேண்டாம். தவிர அதோ பெரிய தட்டு கொண்டு வந்திருக்கிறீரே அதையும் பெரிதாகத் தட்ட வேண்டாம்” என்றார் புலவர் நம்பூதிரியின் கையிலிருந்த இரண்டையும் சுட்டிக் காட்டி.
“மணியடித்தால் என்ன ஆகும்; தட்டைத் தட்டினால் உமக்கென்ன?” என்றார் நம்பூதிரி.
புலவர் அவரை உற்று நோக்கி “என் பூஜைக்கு அந்த ஒலிகள் இடையூறு” என்றார்.
“நீர் வேறு பூஜை செய்யப் போகிறீரா?” என்றார் நம்பூதிரி.
“ஆம். ஆனால் அது வேறு மாதிரி. நீர் மணியை அடித்தால் அந்த பூஜை கபலைடும்” என்ற புலவர் “வா! இளமதி” என்று அரசகுமாரியை அழைத்துக் கொண்டு சென்றார் யானைப்படையின் பெரும்பகுதி குழுமியிருந்த இடத்தை
நோக்கி.
யானைகள் பலபடி பல மரங்களில் கட்டப்பட்டிருந்தன, சில கட்டப்படாமலே ஆடிக்கொண்டு நின்றன. மாவுத்தர்கள் பலர் யானைகளை நாற்புறத்திலும் காத்து நின்றனர். யானைகள் தங்கள் சிறு கண்களால் புலவரையும்
அரசகுமாரியையும் உற்று நோக்கின. நூறு யானை களை மட்டும் ஒரு புறமாகத் திரட்டச் சொன்னார் புலவர் மாவுத்தர்களிடம். அடுத்த வினாடி மாவுத்தர்கள் பல திக்குகளில் ஓடிச் செய்த விபரீத சத்தங்களாலும் யாருக்கும் புரியாத
சொற்களாலும் நூறு யானைகள் ஒரு புறம் கூட்டமாக நின்றன. புலவர் அந்த யானைக் கூட்டத்துக்குள் தனிப்பட நுழைந்து ஒவ்வொரு யானைகளாகப் பரிசோதித்தார். பிறகு ஒரு யானை மீது ஏறிக் கொண்டு ஏதோ அதன் காதில்
சொல்லவே அந்த யானை அஷ்டமுடி ஏரியை நோக்கி நகர்ந்தது வேகமாக. அதை மற்ற யானைகள் தொடர்ந்தன, வரிசையாக. அஷ்ட முடியின் கரையை அடைந்ததும் அங்குசத்தால் லேசாக யானையின் மத்தகத்தைத் தட்டிய புலவர் அதை
ஏரியில் இறக்கி, கரையோரமாக இருந்த நீரில் துளையவிட்டார். அதை அடுத்த மற்ற யானை களும் ஏரியின் ஓரத்து வரிசையாகத் துளைந்தன. நீரை வாரி மேலே இரைத்துக் கொண்டன துதிக்கைகளால். பிளிறின, மகிழ்ந்தன. ஆனால் வரிசை
கலையாமல் விளையாடின. மீண்டும் யானைகளைக் கரைக்குக் கொண்டு வந்த புலவர் யானை மீதிருந்து கீழே இறங்கி தலைமை மாவுத்தனை நோக்கி, “இந்த நூறு யானைகள் இன்று புறப்படுகின்றன கிழக்கு நோக்கி” என்று
கூறினார்.
புலவர் யானைப் படையை அணிவகுத்ததையும் தாமே பட்டத்து யானையைச் செலுத்தியதையும் கண்ட இளமதி பெருவியப்படைந்து நின்றாள். மாவுத்தனுக்கு உத்தரவிட்டு அவனை நோக்கிப் புலவர் வந்ததும் சொன்னாள்.
‘புலவரே உம்மை வெறும் புலவர் என்று தான் இத்தனை நாளும் நினைத்திருந்தேன்” என்று.
“இப்பொழுது மட்டுமென்ன வெறும் புலவரில்லாமல் வெல்லம் போட்ட புலவரா?” என்று சிரித்துக் கொண்டு கேட்டார் புலவர்.
வெல்லம் போட்ட புலவரல்ல. மந்திரம் போட்ட புலவர்” என்றாள் இளமதி மதிப்பு நிறைந்த குரலில்.
“மந்திரப் புலவரா? என்ன சொல்கிறாய் இளமதி?” புலவரின் கேள்வியில் அசட்டை இருந்தது.
“ஆம் புலவரே! உமது உத்தரவுப்படி யானைகள் இயங்குகின்றன” என்றாள் இளமதி.
“அப்படி அவை கேட்காவிட்டால் யானைப் படையை நடத்த முடியாது” என்றார் புலவர்.
“அப்படியானால் நீங்கள் யானைப்படையை நடத்தப் போகிறீர்களா?”
“ஆம்”
“பழக்கமுண்டா?”
“தொட்டில் பழக்கம், விடமாட்டேனென்கிறது”
“தொட்டில் பழக்கமா;”
“பாண்டிய நாட்டு யானைப்படைத் தலைவரின் மகனாகப் பிறந்தேன். சிறிது காலம் அவர் பணியில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது” என்று அலட்சியமாகச் சொன்ன புலவர் “இளமதி! இப்பொழுது தான் ஒரு விஷயம்
புரிகிறது” என்றார்.
“எது புலவரே?”
“இளவழுதி உங்கள் யானைப்படையில் ஒரு யானையைக் கூடக் கேட்காமல் புரவிப் படையை மட்டும் அழைத்துச் சென்ற காரணம்.”
“படையை அவர் வரவழைக்கவில்லையே, தந்தை தானே வரவழைத்தார்,”
“ அவன் மனம் உன் தந்தைக்கு நன்றாகத் தெரியும். படைத் தலைவனான பிறகு ஒரே ஒரு முறைதான் இளவழுதி யானைத் தளத்தைப் பார்த்தான். பிறகு அந்தப் பக்கமே வரவில்லை. உங்கள் யானைப்படையில் குறையிருக்கிறது.
யானைகள் போருக்குச் சரிவரப் பழக்கப்படவில்லை. ஆகவே இளவழுதி புரவிப் படையிலும் காலாட் படையிலும் கருத்தைச் செலுத்தியிருக்கிறான். இது உன் தந்தைக்குத் தெரிந்ததால் அந்த இருவிதப் படையை மட்டுமே அவனுக்கு
வழங்கியிருக்கிறார்” என்று விளக்கிய புலவர் “இளமதி! நாம் யானைப் படையின் ஒரு பகுதியை அதாவது ஆயிரம் யானைகளை அழைத்துச் செல்வோம்” என்றார்.
“நமக்கு மட்டும் அது பலவீனமில்லையா?” என்று கேட்டாள்..
“இல்லை” நான் சமாளித்துக் கொள்கிறேன். தவிர மதுரையின் பெரும் கதவுகளை உடைக்க யானைகள் தேவை” என்ற புலவர் சற்று எட்ட இருந்த வீரனை நோக்கி “ஒவ்வொரு யானை மீதும் மாவுத்தனுடன் ஒரு வில் வீரன் ஏறி
வரட்டும்” என்று உத்தரவிட்டார்.
அந்த சமயத்தில் பூஜையை முடித்துக் கொண்டு தட்டுடன் வந்த நம்பூதிரி புலவரை நோக்கி “நீர் இன்னும் முழுகவில்லையா?’ என்றார்.
“இல்லை’ என்பதற்கு அடையாளமாய் தலையை அசைத்தார் புலவர்.
அரசகுமாரியை நோக்கினார் பட்டத்திரி. “இளமதி! நீயும் நீராடவில்லையா?’ என்று வினவினார்.
“இல்லை பட்டத்திரி” என்றாள் அரசகுமாரி வணக்கத்துடன்.
“உங்கள் இருவருக்கும் பிரசாதம் எப்படிக் கொடுப்பது?” என்று வினவினார் நம்பூதிரி.
“அரண்மனைக்கு எடுத்துப்போம். வந்து வாங்கிக் கொள்கிறோம்” என்றார் புலவர்.
“உங்கள் பூஜை முடிந்துவிட்டதா?” என்று கேட்டார் நம்பூதிரி புலவரை மடக்க.
“முடிந்து விட்டது” “முழுகாமலா?”
“என்னப்பன் வெளிவேஷத்தைப் பார்ப்பதில்லை. உள்ளத்தின் சுத்தத்தைப் பார்க்கிறான். அத்தனை நேரம் அவனைச் சேர்ந்தவர்களை ஏரியில் முழுக்காட்டினேன்” என்றார் புலவர்.
“இது தான் பூஜையா?”
“ஆம் “
“இல்லை, இது அணிவகுப்பு.”
“போர்ப் பூஜைக்கு அப்படியும் ஒரு பெயர் உண்டு” என்ற புலவர் எதிரே தோப்புக்குள் நுழைந்து கொண்டிருந்த யானைப்படையைப் பின் தொடர்ந்து சென்றார்.
அன்று மாலை ஆயிரம் யானைகள், நாலாயிரம் புரவிகள், பத்தாயிரம் காலாட்கள் இவை கொண்ட படையின் முன்னணியில் பெரும் யானையின் மீதமர்ந்திருந்த புலவரையும், புரவிப் படையின் முன்னணியிலிருந்த இளமதியையும்
ரவிவர்மனே வழியனுப்ப வந்தான்.
புலவர் மன்னனை வாழ்த்தினார். ‘சீக்கிரம் உன்னை யும் எதிர்பார்க்கிறேன் மன்னவா” என்றார்.
மன்னன் புன்சிரிப்புக் கொண்டான். “எந்தப் புறம் உமது படை நகரப்போகிறது?” என்று வினவினான் மன்னன்.
“மேற்குப் புறம்” என்றார் புலவர். “மேற்குப் புறமா!”
“ஆம் மன்னவா! மேற்குப் புறத்தில் கடல் தானிருக்கிறது. ஆனால் அத்திசையில் செல்வதாகப் போக்குக் காட்டிக் கிழக்குப் புறம் விரைந்திருக்கிறான் அஜ்மல்கான். நானும் அவன் வழியைப் பின்பற்றப் போகிறேன்” என்று புலவர்
வெறிபிடித்தவர் போல் நகைத்தார்.
மன்னவன் அவரை உற்று நோக்கினான். புலவர் மன்னவனை நோக்கி “நீ வடதிசைக்குச் செல்” என்றார்.
“எதற்கு?” என்று கேட்டான் மன்னன்.
புலவர் மன்னவனை அருகில் அழைத்து யானையிலிருந்து நன்றாகக் குனிந்து அவன் காதில் இரகசியமாக ஏதோ சொன்னார்.
அரசன் முகம் மிகவும் மலர்ந்தது. புரிந்து கொண்டதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான். அவன் அப்புறம் நகர்ந்ததும், படை நகர புலவர் சமிக்ஞை செய்தார். படை நகர்ந்துகொண்டிருந்த சமயத்தில் பட்டத்திரி விபூதி தட்டுடன்
வந்து “மகாராஜா பகவத் பிரசாதம்” என்றார். மகாராஜா திரும்பவில்லை. புலவரும் தனது மகளும் தலைமை வகித்துச் சென்ற படையைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றார்.
‘மகாராஜா! விநாயகப் பிரசாதம்” என்று கடுமையுடன் இரண்டாம் முறை கூறினார் நம்பூதிரி.
மன்னவன் திரும்பிப் பார்த்து அவர் கொடுத்த விபூதியை அரைகுறையாக நெற்றியில் இட்டுக்கொண்டு மீண்டும் படைகளை நோக்கிக் கண்களைத் திருப்பினான்.

Previous articleCheran Selvi Ch28 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch30 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here