Home Cheran Selvi Cheran Selvi Ch30 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch30 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

87
0
Cheran Selvi Ch30 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch30 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch30 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 30. எதிர்பாராத சந்திப்பு

Cheran Selvi Ch30 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

கொல்லத்திலிருந்து பதினையாயிரம் படைகளுடன் புறப்பட்ட பாண்டியனான இளவழுதி கடல் வழியையும் நேராய பெருவழி எனப்படும் சேரர் பெருஞ்சாலையையும் புறக்கணித்துக் கிழக்கிலிருந்த மலைப்பகுதிகளிலும் அடர்ந்த
காடுகளிலிருந்த முரடான வழிகளிலும் படையை நடத்திச் சென்றான். படைகள் தங்கவோ உணவு கொள்ளவோ மாலைவரையில் அவகாசம் கொடுக்காத சேரர் படைத்தலைவன் இருள் சற்று கவிந்ததும் மலைச் சாரல் ஒன்றில்
படைகளைத் தங்கவைத்தான். உணவு கொள்ளவும் இளைப்பாறவும் விடியற்காலை வரையில் அவகாசம் கொடுப்பதாகவும் படைகளுக்கு அறிவிக்கும்படி வீரர்கள் இருவருக்கு உத்தரவிட்டான். பிறகு பலபத்ரனுடன் தானும்
புரவியை விட்டிறங்கி அருகிலிருந்த ஒரு அருவிக்கு பலபத்ரனும் ராஜாவும் பின் தொடரச் சென் றான். அங்கு முதலில் ராஜாவைக் குளிப்பாட்டி, கால்களையும் முதுகையும் உருவிவிட்டு, வீரனொருவனை அதற்குத் தீனியும்
கொண்டுவரச் சொல்லி தன் கையாலேயே தீனியும் வைத்தான். “இதை வீரர்கள் செய்வார்களே!” என்று பலபத்ரன் ஆட்சேபித்ததற்கு துணைத் தலைவரே! தனது புரவி, வாள் இரண்டையும் எந்த வீரனும் தானே கவனிப்பது நல்லது” என்று
சொல்லிவிட்டு ராஜாவுக்கு உபசரணையை முடித்து விட்டுத் தானும் நீராடிப் புத்தாடை புனைந்து அருவிக் கரையிலேயே பலபத்ரனுடன் உணவருந்தினான். உணவருந்திக் கொண்டே பலபத்ரனைக் கேட்டான், “துணைத்தலைவரே!
என்னைத் திடீரென்று படைகளுடன் புறப்பட அழைத்தது மன்னன் உத்தரவாயிருக்கும். ஆனால் எத்தனை படை வேண்டும், எப்படி வேண்டும் என்பதைக் கேட்கவில்லையே” என்றான்.
எதிரே நடப்பட்டிருந்த பந்தத்தின் வெளிச்சத்தில் பலபத்ரன் கண்கள் பளபளத்தன. “அதை அரசரே தீர்மானித்துவிட்டார்” என்று கூறினான் பலபத்ரன்.
“எத்தனைப் படையை நாம் அழைத்துச் செல்கிறோம்?” என்று வினவினான் படைத்தலைவன்.
“புரவிப்படை எட்டாயிரம், காலாட்படை ஐயாயிரம்” பலபத்ரன் தயக்கமின்றிப் பதில் சொன்னான்.
“யானைப்படை?”
“கிடையாது.”
“இதைத் தீர்மானித்தது யார்?”
“யார் தீர்மானிக்கத் தகுந்தவரோ அவர்தான்”
இதற்குப் பிறகு சிறிது நேரம் மௌனம் சாதித்தான் இளவழுதி. பிறகு “மன்னர் என் எண்ணத்தை எப்படியோ புரிந்துகொண்டிருக்கிறார்” என்று சிறிது உரக்கவே சொன்னான்.
பதிலுக்கு பலபத்ரன் தலையை மட்டும் ஆட்டினான். ஏதும் பேசவில்லையாதலால் இளவழுதியே பேசினான். “உங்கள் யானைப்படை அத்தனை திறம் படைத்ததல்ல. அதுவுமில்லாமல் அதிகமான யானைப்படையை அழைத்துச்சென்ற
படைத் தலைவர்களெல்லாம் தோல்வியே அடைந்திருக்கிறார்கள். கோட்டைகளின் கதவுகளைப் பிளக்க யானைகள் பயன்படலாம். ஆனால் எதிரிகள் அம்பு வீசினாலோ வேலை வீசினலோ யானைகள் நம்மீது திரும்பி நமது
படைகளைத்தான் அழிக்கும். ஆகையால்தான் நான் புரவிப் படையை விரும்புகிறேன். காலாட் படையும் துரிதமான போருக்குச் சிறந்தது’ என்று விளக்கினான்.
“உங்கள் கருத்து இப்படித்தான் என்று மன்னரே சொன்னார். ஆகையால் இவ்வகைப் படை உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது” என்றான் பலபத்ரன். அத்து டன் ஒரு சந்தேகமும் கேட்டான். “நேரான வழியிருக் கும்போது இந்த
மலைவழியில் ஏன் படைகளை அழைத்து வந்தீர்கள்?” என்று.
இளவழுதி எழுந்திருந்தான் உட்கார்ந்த நிலை நீங்கி. “பலபத்ரரே! இந்த வழியில் படை ரகசியமாகச் செல்ல முடியும். நாம் திடீரென்று எதிரியின் மீது இறங்கி போர் தொடுக்க முடியும். எதிர்பாராத தாக்குதலில் எந்த எதிரியும் நிதான
மிழக்கிறான். தவிர வேறொரு காரணமுமிருக்கிறது” என்று கூறினான் இளவழுதி.
அவனுடன் எழுந்துவிட்ட பலபத்ரன் கேட்டான் “என்ன காரணம்?” என்று.
“சரித்திர காரணம்”
“சரித்திர காரணமா?”
“இந்த வழியில் தான் பாண்டிய மன்னர்கள் வந்து சேர நாட்டை வெற்றி கொண்டார்கள் முன்பு” என்ற இளவழுதி “ அந்த வழியை நான் பின்பற்றுகிறேன் வேறொரு காரணத்திற்கு. அப்பொழுது பாண்டியர் படை இந்த வழி வந்து சேரரை
வெற்றி கொண்டது. இப்பொழுது பாண்டியனான நான் பாண்டியரை எதிர்க்க சேர நாட்டுப் படையை அதே வழியில் அழைத்துச் செல்கிறேன்” என்று கூறி வருத்தம் தொனித்த சிரிப்பையும் வெளியிட்டான். அடுத்தபடி ஏதும் பேசாமல்
“வாருங்கள் துணைத்தலைவரே” என்று பலபத்ரனை அழைத்துக் கொண்டு மலையின் ஒரு உச்சிக்குச் சென்று படுத்துக் கிடந்த தனது படையைப் பார்த்தான். பிறகு பலபத்ரனை நோக்கி ‘ துணைத்தலைவரே! ஏழாயிரம் காலாட்படை,
புரவிப் படைக்குப் பின்னால் வர வேண்டாம். புரவிப் படைக்கு நட்ட நடுவில் வரட்டும். புரவிப்படையின் எட்டாயிரத்தை இரு பிரிவுகளாகப் பிரித்து ஒரு பிரிவுக்கு நீங்களும் இன்னொரு பிரிவுக்கு நானும் தலைமை தாங்குவோம்”
என்றான்.
இந்தப் புதிய அணிவகுப்புக்குக் காரணம் கேட்பவன் போல பலபத்ரன் இளவழுதியை ஏறெடுத்து நோக்கி னான். “போர் நிகழும் போது புரிந்து கொள்வீர்” என்றான் இளவழுதி பலபத்ரன் பார்வையின் பொருளைப் புரிந்து
கொண்டு,
அதற்குமேல் பலபத்ரன் காரணம் ஏதும் கேட்கவில்லை. படைத்தலைவன் ஆணைப்படி படையைப் பிரிக்கவே மறு நாள் புதிய அணிவகுப்பில் படை’ நகர்ந்தது அடுத்த இரண்டு நாளும் நிதானமாகப் பயணம் செய்தான் இளவழுதி.
அடிக்கடி மலை வழியின் ஒரு புறத்துக்குப் புரவியை தட்டி விட்டு ஆங்காங்கிருந்த சரிவுகளின் உயரத்தில் நின்று வடகிழக்குப் புறத்தில் எதையோ எதிர் பார்த்து நோக்கினான். அவன் செய்கைகள் மிக வினோதமாக இருந்ததையும்
படையை அவன் அடியோடு கவனிக்காமல் அடிக்கடி புரவியில் ஏறிக் காட்டுக்குள் மறைந்து விட்டதையும் கண்ட பலபத்ரன் பெரிதும் குழம்பினான். சுமார் பத்து நாள் பயணம் இப்படி நடந்த பிறகு படை திடீரென வடக்கு நோக்கித்
திருப்பப்பட்டது. அதுவரை பொறுமையாயிருந்த பலபத்ரன் “படைத்தலைவரே! தாங்கள் எதையோ எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது” என்று துவங்கினான் ஒரு நாள்.
அதுவும் ஒரு இரவு. மலைச்சரிவின் முடிவுக்கு அநேகமாகப் படை வந்து விட்டது. அந்தச் சரிவில் ஒரு மரத்தடி யில் உட்கார்ந்திருந்த படைத்தலைவன் பலபத்ரனை நோக்கி “ஆம்” என்றான்.
“யாரையாவது எதிர்பார்க்கிறீர்களா?”
“ஆம்”
“யாரை”
“தூதுவனை”
“தூதுவனையா!”
“ஆமாம்”
“யாரிடமிருந்து”
“மன்னரிடமிருந்து”
இதைக் கேட்ட பலபத்ரன் மிகவும் வியப்படைந்து “மன்னன் எதற்காக நமக்கு தூது அனுப்பப் போகிறார்?” என்று விசாரித்தான்.
“அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிவிக்க” என்றான் இளவழுதி.
“அவர் என்ன செய்ய வேண்டும்? போராடப் போவது : நாமல்லவா?” என்று கேட்ட பலபத்ரன் குரலில் வியப்பு மிதமிஞ்சி ஒலித்தது.
“அவர் ஆணைப்படி, இஷ்டப்படிதான் இந்தப் படை நகர்கிறது. ஆகவே அவர் தான் அடுத்து நடக்க வேண்டியதைச் சொல்ல வேண்டும். நமது துணைப்படை எந்தப் பக்கம் வருகிறது என்பது யார் தலைமையில் வருகிறது என்பது தெரிய
வேண்டும் எனக்கு” என்ற இளவழுதி சட்டென்று எழுந்திருந்து “ராஜா! ராஜா!” என்று கூவ, ராஜா ஒரு மரத்தின் மறைவிலிருந்து ஓடி வந்தது. அதன் மீது தாவி ஏறிய இளவழுதி “பலபத்ரரே! ஒன்று எனக்கு நிச்சயமாகத் தெரியும் மன்னர்
பெரிய பொம்மலாட்டம் நடத்துகிறார். அதில் நாம் பொம்மைகள்; அவர் விரல் கயிறுகள் நம்மை இயக்குகின்றன. ஆனால் நான் பொம்மையாயிருக்க விரும்பவில்லை. எனக்கு சொந்த யுக்தி உண்டென்பதையும் காட்ட இஷ்டப் படுகிறேன்.
இப்பொழுது போகும் நான் நாளை இரவுக்குள் திரும்பாவிட்டால் நீங்கள் படைகளை இதே அணி வகுப்பில் மதுரையை நோக்கி அழைத்துச் செல்லுங்கள், நான் மதுரைக்கு முன்பே உங்களைக் கலந்து கொள்கிறேன்” என்று கூறி
ராஜாவைத் தட்டி விட்டான்.
அங்கிருந்து புறப்பட்ட படைத்தலைவன் மீண்டும் சிறிது கிழக்கில் திரும்பி மலைவழியே சென்று வடக்கே திரும்பினான். அன்று இரவு முழுதும் பயணம் செய்ததும் மலையின் மற்றொரு அடர்த்தியான பகுதிக்கு வந்து சேர்ந்து சுற்று
முற்றும் நோக்கினான். அப்படி அவன் நோக்கிக் கொண்டிருக்கையில் ஒரு புரவியின் குளம்படி, மெள்ளக் கேட்டது. அது காதில் விழுந்ததும் ராஜாவை ஒரு மரத்தடியின் மறைவுக்குப் பின்னடையச் செய்த இளவழுதி அதன்
மறைவிலேயே காத்திருந்தான் அப்புரவி வரும்வரை. அத்தனை இருட்டிலும் தூரத்தே வந்த வீரனின் தோற்றம் ஓரளவு நிலவின் மங்கலான வெளிச்சத்தில் புலப்படவே “அநேகமாக அவன் தான்” என்று கருவிக் கொண்டான் இளவழுதி.
சற்று தூரத்தில் வந்த புரவி வீரனோ இளவழுதி நினைத்தபடி துரிதமாகவோ நேராகவோ வரவில்லை. பத்தடிக்கு ஒருமுறை நிதானித்தும் சுற்று முற்றும் பார்த்துமே வந்தான். அப்படி வந்தவன் இளவழுதியிருந்த மரத்தடிக்கு வந்ததும்
புரவியிலிருந்து குதித்து இருளில் மறைந்து பின்புறமாக நிதானமாக வந்தான். அவன் அருகில் வரட்டுமென்று காத்திருந்த இளவழுதி அவன் அருகில் வந்ததும் புரவியிலிருந்து ஒரே பாய்ச்சலாக அந்த வீரன் மீது பாய்ந்து அவனைக் கீழே
தள்ளி அவன் மார்பு மீது காலை வைத்து அழுத்தி உட்கார்ந்து கொண்டு “அஜ்மல்கான், இப்பொழுது சொல் நீ போகும் இடத்தை அங்கு காத்திருக்கும் படைகளின் பலத்தையும் சொல்” என்று மெள்ளக் கேட்டான்,
அஜ்மல்கான் வாயைத் திறக்காது போகவே அவன் மீதிருந்து எழுந்திருந்து அவனை அப்படியே இறுக்கப் பிடித்து சற்று வெளிச்சத்துக்கு அழைத்து வந்த இளவழுதி “இப்பொழுது பேசு” என்று உலுக்கினான்.
உலுக்கிய வேகத்தில் அந்த வீரன் தலைப்பாகை இழே விழுந்தது. அப்பொழுதுதான் வீரன் முகம் இளவழுதிக்குத் தெரிந்தது. “நீயா!” என்று பிரமை பிடித்த சொற்களை உதிர்த்த இளவழுதி பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான தால் பேச நா
எழாமல் பல வினாடிகள் சொல்லும் செயலுமற்று நின்ற நிலையில் நின்று விட்டான்.
தலைப்பாகை அகற்றப்பட்டதால் பெரும் குழல்கள் அவிழ்ந்து விழ அவன் எதிரே நின்றிருந்தாள் சேரன் செல்வி. அந்த ஆண் வேடத்தில் கூட அவள் அழகு சிறிதும் குறையவில்லை என்பதை இளவழுதி புரிந்து கொண்டான். அவளைக்
கீழே தள்ளி அவள் மீது எத்தனை முரட்டுத்தனமாக உட்கார்ந்தோம் என்பதை நினைத்துப் பெரிதும் வருந்தினான் படைத்தலைவன். ஆகவே மெல்ல சுரணையை வரவழைத்துக் கொண்டு வினவினான் எங்கு போகிறாய்?” என்று.
“உங்களைத் தேடித்தான்” என்ற அரசகுமாரியின் பதில் தங்கு தடையின்றி வந்தது.
“எதற்காக?” என்று கேட்டான் இளவழுதி.
இதற்கு இளமதி நேரடியாகப் பதில் சொல்லவில்லை. “நீங்கள் எங்கு போகிறீர்கள்?” என்று கேட்டாள்.
“புலவரைத் தேடி” என்றான் இளவழுதி.
“என்னைத் தேடி அல்லவே?” என்று கேட்டாள் இளமதி.
“நீ புலவருடன் வருவது எப்படித் தெரியும் எனக்கு?” என்று கேட்டான் இளவழுதி.
“அப்படியானால் இது எதிர்பாராத சந்திப்பு”என்ற இளமதி சற்று எட்டச் சென்று தரையில் உட்கார்ந்தாள், இளவழுதியும் அவள் பக்கத்தில் உட்கார்ந்தான், அப்பொழுது அரசகுமாரி சொன்னாள். “உங்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி
கொண்டு வந்திருக்கிறேன்” என்று
“என்ன செய்தி” என்று வினவினான் இளவழுதி.
இளமதி விவரிக்கலானாள்.

Previous articleCheran Selvi Ch29 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch31 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here