Home Cheran Selvi Cheran Selvi Ch38 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch38 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

108
0
Cheran Selvi Ch38 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch38 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch38 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 38. மண்ணில் திறந்த கதவு

Cheran Selvi Ch38 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

பாண்டிய வம்சம் போலவே பாழடைந்து கிடந்த அந்தப் பழைய கோட்டையில் விசித்திரங்கள் பல இருக்கின்றன என்று தந்தை சொன்ன விசித்திரங்களில் அந்த நள்ளிரவு இசையும் ஒன்றாயிருக்குமோ என்று நினைத்தாள் இளமதி.
அதன் விளைவாக கோட்டையில் மட்டுமின்றி கோட்டைக்கு வெளியிலும் விசித்திரங்கள் பல இருக்கவேண்டுமென்ற முடிவுக்கும் வந்தாள். அந்த இசை வரும் திசையில் சென்று அதை சோதித்து விட்டால் தான் என்ன என்ற எண்ணமும்
இளமதியின் இதயத்தில் ஒரு வினாடி உதயமாயிற்றென்றாலும் அந்த எண்ணத்தை அவள் விலக்கியே கொண்டாள். “குரல் அவர் குரல் தான், ஆனால் இவ்வளவு இனிமையாக சாஸ்திர முறைப்படி அவர் பாட முடியுமென்பது எனக்குத்
தெரியாதே” என்று தனக்குள் சொல்லிக் கொண்ட இளவரசி மேற்கொண்டு எண்ண அலைகளை உள்ளுக்குள் நடமாடவிடாமல் சாளரத்துக்கு அப்புறம் திரும்பி, காற்றில் வந்த இசையைக் காதாரப் பருகினாள்.
இசைக்குடையவன் குரல் மந்தரத்தில் கரகரத்துப் பேசினாலும் அந்த கரகரப்பு அந்த மலைப்பகுதியின் திடத்தைப் போல் திடமாக நின்று சாரீரத்துக்குத் தனி மெருகைக் கொடுத்திருந்தது. கண்ணனைத் துதிபாடும் அந்த
சுலோகத்துக்கு மதுரமூட்டிய அந்த மந்தரஸ் தாயியை தனது உணர்ச்சிகள் அத்தனையாலும் அள்ளிப் பருகிய அரசகுமாரி, எந்த முரட்டுச் சூழ்நிலையிலும் எந்த முரட்டுக் குரலும் சாஸ்திரப்படி பக்குவப்பட்டு இயங்கினால் அதற்கு ஒரு
தனி வேகம், தனி திராணி, தனி வசீகர சக்தி இருப்பதை எண்ணி சுயநிலை இழந்தாள்.
அப்படி அவள் இசையில் மெய்மறந்து மூழ்கிக் கிடந்த சமயத்திலும், அந்த இசை தழுவியது தனது மூதாதையான குலசேகரர் இயற்றிய முகுந்தமாலை என்பதை நினைத்ததால் பெருமிதம் கொண்டாள் அரசகுமாரி. “அந்திம தசையில் என்
எண்ணங்கள் எப்படி நிலை குலைந்து போகுமோ தெரியாது. கபவாத பித்தங்களில் தொண்டை அடைத்துக் கொள்ளும்போது உன் நாமத்தை எப்படிச் சொல்லுவேன். ஆகவே என்னுடைய மனமாகிய ராஜஹம்ஸம் இப்பொழுதே உன்
திருவடித் தாமரை எனும் கூட்டுக்குள் பிரவேசிக்கட்டும்” என்று கண்ணனை அழைக்கும் அந்தப் பாட்டின் தன்மையுடன் கரகரத்த அவன் கம்பீர சாரீரம் எப்படிச் சேர்ந்து கொள்கிறது என்றும் பரவசப்பட்டாள் இளமதி. அவள் அதற்குமேல்
சிந்தனையைக் கைவிட்டாள். இசையின் வசப்பட்டாள். நெடுந்தூரத்திலிருந்து கேட்ட அந்த இசையும் மெள்ள மெள்ள அந்தக் கோட்டையை அணுகி வந்தது.
விருத்தத்துக்குத் தாளமில்லையென்றாலும் அவன் பாடிய அந்த சுலோகத்துக்கு ஒரே சீரான தாளமும் இரு குளம்புகள் போட்டு வந்தது இளவரசியின் காதில் விழவே அவள் எழுந்து சாளரத்தின் பக்கச் சுவரைப் பிடித்துக் கொண்டு
நின்றாள். இசையும் குளம்படிகளும் மெள்ள மெள்ள அருகில் வந்தன அந்தச் சாளரத்தை நோக்கி. எட்ட ஒரு மனிதன் உருவமும் புரவியின் உருவமும் அவள் கண்ணுக்குத் தெரியவே அவள் இதயம் எதிர்பார்ப்பினால் மெள்ளத்
துடிக்கலாயிற்று. ஆனால் அந்தத் துடிப்பு நீடிக்கவில்லை. திடீரென பெரும் ஏமாற்றத்துக்கே இடம் கொடுத்தது. அணுகி வந்தவன் திடீரென மெள்ள மெள்ளத் தரைக்குள் இறங்கினான். அவனுடன் அந்தப் புரவியும் இறங்கியது. இருவரும்
மெள்ளத் தரைக்குள் சென்று மறைந்தனர். அத்துடன் இசையும் அடங்கியது.
இளமதியின் உள்ளத்தில் பெருத்த சந்தேகங்கள் எழுந்து உலாவலாயின. “நான் கண்டது பிரமையா?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். “கேட்டதும் பிரமைதானா? யாரும் பாடவே இல்லையா” என்று கூட வினவிக்
கொண்டாள். “இல்லை. உண்மையாகவே பார்த்தேன். கேட்டேன்” என்று தன்னைத் தானே திடப்படுத்திக் கொண்டாள். “நான் பார்த்தது பாண்டிய நாட்டு வீரர் தான் சந்தேகமில்லை” என்று கூறிக் கொண்டு தந்தையை விசாரித்து
விடலாமென்று வெளிப்பக்கம் செல்லக் காலெடுத்து வைத்தாள். அந்த சமயத்தில் ஒரு செம்பில் பாலை எடுத்துக் கொண்டு சுந்தரி உள்ளே நுழைந்தாள். எங்கு கிளம்புகிறீர்கள் அரசகுமாரி?” என்று கேட்கவும் செய்தாள் வியப்புடன்.
பதிலுக்குக் காத்திராமல் இடது கையில் ஏந்தி வந்த சிறு விளக்கை மூலையில் வைத்துவிட்டு “இந்தப் பாலை அருந்துங்கள்” என்று செம்பை மன்னன் மகளிடம் நீட்டினாள்.
மன்னன் மகள் பாலை அருந்தும் நிலையில் இல்லை. அங்கு யாராவது வந்தார்களா சற்று முன்பு?” என்று வினவினாள் சுந்தரியை நோக்கி. யார் அரசகுமாரி?”
“அவர் தான், பாடியவர்”
“சங்கீத வித்வானா?”
“அவர்களுக்கெல்லாம் மேற்பட்டவர்.”
“பெயர்?”
“பெயர் சொல்லமாட்டேன்”
“ஏன்?” என்ற சுந்தரி சற்று யோசித்துவிட்டு “ஓகோ அப்படியா!” என்றாள்.
“என்னடி அப்படியா?” என்று சீறினாள் அரசகுமாரி.
“படைத்தலைவரைக் குறிப்பிடுகிறீர்கள். ஆகையால் பெயரைச் சொல்ல இஷ்டப்படவில்லை” என்றாள் சுந்தரி.
இளவரசி அத்தனை கோபத்திலும் புன்முறுவல் கொண்டாள். “சுந்தரி! அவர் இத்தனை அழகாகப் பாடு வாரென்று எனக்குத் தெரியாது” என்று குழைந்த குரலில் கூறவும் செய்தாள்.
“அவ்வளவு நன்றாகப் பாடுகிறார்?”
“ஆம், சுந்தரி”
“நீங்கள் கேட்டீர்கள்?”
“ஆம்”
“எங்கே?”
“இங்குதான்”
“இந்தக் கோட்டையிலா?”
“இல்லை சற்று தூரத்தில் காட்டில்.”
சுந்தரி சிறிது சிந்தித்தாள். “அவர் ஏன் காட்டிலிருந்து பாடவேண்டும்? இங்கு வந்தாலென்ன?” என்று கேட்டாள்.
“இந்தச் சாளரத்தை நோக்கித்தான் வந்தார்” என்றாள் அரசகுமாரி. மீண்டும் சாளரத்தின் மூலம் நோக்கினாள்.
“இதை நோக்கியா?’ சுந்தரியின் கேள்வியில் சந்தேகம் ஒலித்தது.
“ஆம் சுந்தரி”
“கிட்டே வந்தாரா?”
“இல்லை.”
“பின் எப்படி?” சுந்தரி வார்த்தைகளை குழப்பத்துடன் உதிர்த்தாள்.
“திடீரென்று தரையில் மறைந்துவிட்டார்.”
“அவரா!”
“அவர் மட்டுமல்ல…”
“வேறு யார்?”
“புரவியுங்கூட”
“இருவரும் தரையில் மறைந்துவிட்டார்கள்”
சுந்தரி அரசகுமாரியை உற்றுப் பார்த்தாள். “அரச குமாரி! இந்தப் பாலை அருந்துங்கள்” என்றாள்.
“பால் வேண்டாம்.”
“புரிகிறது; அரசகுமாரி”
“என்ன புரிகிறது?”
“செவிக்குணவு பருகிவிட்டீர்கள். வயிற்றுக்குத் தேவையில்லை என்கிறீர்கள்.”
“சுந்தரி! நீ திருக்குறள் புலி என்று நினைத்துக் கொள்ளாதே”
“நான் கனவுப் புலியும் அல்ல.”
“சுந்தரி!”
“அரசகுமாரி! வீண் பிரமை உங்களுக்கு. ஏதோ கனவு கண்டிருக்கிறீர்கள். இந்த வயதில் அது சகஜம். பேசாமல் பாலை அருந்திப் படுத்துக் கொள்ளுங்கள்” என்றாள் சுந்தரி.
தான் சொன்னதை சுந்தரி அடியோடு நம்பவில்லையென்பதை அரசகுமாரி புரிந்து கொண்டாள். யார் கேட்டாலும் நம்பமுடியாத விந்தை அது என்பதையும் புரிந்து கொண்டாள். ஆகவே “சுந்தரி! பாலை வைத்து விட்டுப்போ.
பிறகு அருந்துகிறேன்” என்றாள்.
சுந்தரி பதிலேதும் சொல்லாமல் பாலை அந்த அறையில் மூலையில் வைத்து விட்டுச் சென்றாள். அவள் சென்றதும் பாலை எடுத்து மடமடவெனப் பருகினாள் அரசகுமாரி. மீண்டும் சாளரத்தை நோக்கிச் சென்று வெளியே தலையை
நீட்டினாள். நக்ஷத்திரங்கள் அளித்த வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சம் எதுவும் தெரியவில்லை. வெளிச்சம் அத்தனை குறைவாயிருந்தாலும் தான் கண்டது இளவழுதிதான் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை இளவரசிக்கு. ஆகவே
ஏதோ ஒரு முடிவுக்குவந்து மெள்ள தனது சேலையை இறுக்கிக் கட்டிக் கொண்டு சாளரத்தின் மேடையில் உட்கார்ந்து மெள்ள மெதுவாகத் தரையில் இறங்கினாள். கடைசியில் கால் எட்டாததால் ‘தட்’ என்று தரையில் குதித்தாள்.
குதித்த பின்பு மெள்ள அடுத்திருந்த மரக்கூட்டத்தின் ஊடே நடந்து சென்றாள். சிறிது தூரம் நடந்ததும் சற்று நின்று யோசித்துவிட்டு எந்த இடத்தில் மனிதனும் புரவியும் மறைந்தார்களோ அந்த இடத்தை நோக்கி மிக மெதுவாக
நடக்கலானாள். அந்த இடத்தை அடைந்ததும் பிரமை பிடித்துப் பல வினாடிகள் நின்று விட்டாள். தரை கட்டாந்தரையாயிருந்தது. இளவழுதியோ, ராஜாவோ மறைந்ததற்கு அறிகுறி ஏதுமேயில்லை. சுந்தரி கூறியது போல் தான் கண்டது
ஒரு வேளை பிரமையாயிருக்குமோ வென்று கூட சந்தேகப்பட்டாள்; அந்த சிந்தனையில் அந்த இடத்தைச் சுற்றி இரண்டு மூன்று முறை நடந்தவள் சட்டென்று ஒரு இடத்தில் நின்றாள்.
மற்ற இடத்தில் உதிர்ந்த மா இலை பழுப்புகளோ சருகுகளோ அந்த இடத்தில் இல்லை. இடம் சமீபத்தில் நன்றாகச் சுத்தம் செய்யப்பட்டிருந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டன. அங்கு ஏதோ ஒரு தனிப்பட்ட மர்மக் கதவு இருக்க
வேண்டுமென்று ஊகித்துக் கொண்ட இளமதி தரையைத் தனது கால்களால் மும்முறை தட்டினாள். கீழ்ப்புறமிருந்து உலோகமிருந்த ஒலிவரவே சிறிது விலகி நின்று அடுத்த இடத்தை ஆராய்ந்தாள். ஏதும் தெரியாது போகவே மீண்டும்
இரு முறை அந்த இடத்தை உதைத்தாள். திடீரென்று அந்த இடம் அசையவே சற்று எட்டச் சென்று நின்றாள் அரசகுமாரி. தரை மெள்ள வாயைப் பிளந்தது, பெரியவாயில் அகலத் துக்கு வழியையும் காட்டியது. அந்த வாயிலுள்ளிருந்து ஒரு
தீபத்தின் வெளிச்சமும் தெரியவே அதை நோக்கி நடந்த அரசகுமாரி கீழே படிகள் ஓடுவதையும் அவை ஒரே சீராக இருந்ததையும் கவனித்தாள். ஆகவே அந்த அகலமான படிகளில் இறங்கியும் சென்றாள். அந்தப் படிகள் கோவில்
படிகளைப்போல் மிக விசாலமாயிருந்தன. அந்தப் படிகளின் உச்சிக்கதவை யார் திறந்தார்களென்று சுற்றும் முற்றும் பார்த்தாள் இளமதி. யாரும் தெரியாமல் போகவே படிகளில் இறங்கி நடந்தாள். சுமார் இருபது படிகள் நடந்ததும்
பெரியதொரு மண்டபம் அவள் கண்களுக்குப் புலனாயிற்று. மண்டபத்தின் நடுவில் ஒரு சின்னஞ் சிறு குளம் இருந்தது. குளத்தருகே நின்றிருந்தது ராஜா.
அந்தக் காட்சியைப் பிரமிப்புடன் பார்த்த அரச குமாரி குளத்தைச் சுற்றிலும் பாறைச்சுவர் அமைக்கப்பட்டிருந்ததையும் அதற்கு அப்புறத்தில் ஓர் அறை இருந்ததற்கு அடையாளமாகக் கதவுதெரிந்ததையும் பார்த்தாள், மெள்ள நடந்து.
புரவியிடம் சென்ற அரசகுமாரி அதன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். அவளைக் கண்ட மகிழ்ச்சியில் அது கனைக்கத் தொடங்கியதால் அதன் வாயை மூடிக் கனைப்பை நிறுத்தினாள். பிறகு அதைத் தட்டிக் கொடுத்துப்
பேசாமலிருக்கும்படி கையால் வாயைப் பொத்திக் காட்டி எதிரேயிருந்த அறையை நோக்கிப் பூனை போல் நடந்து கதவை மிக லேசாகத் திறந்தாள் சிறிதளவு. அது கொடுத்த சின்னஞ்சிறு இடை வெளியில் உள்ளே உற்று நோக்கினாள்.
உள்ளே ஒரு பெரிய கருங்கல் திண்ணையைச் சுற்றி மூவர் நின்றிருந்தனர். திண்ணையின் நடுவில் ஒரு பெரிய சீலை பரப்பப் பட்டிருந்தது. அதை மூவரும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தபோது நட்ட நடுவில் மற்ற இருவருக்கும்
முன்பாக நின்றிருந்த ரவிவர்மன் குலசேகரன் தனது கையிலிருந்த குறுவாளின் நுனியால் சட்சட்டென்று மூன்று இடங்களைச் சுட்டிக் காட்டினான்.
மற்ற இருவரும் தலைகளை மட்டும் அசைத்தனர் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக. கடைசியாக மன்னர் கேட்டார் “இளவழுதி! நீ எதிரியிடமிருந்து தப்ப மறுக்கிறாயா?” என்று வினவினார்.
“ஆம்” என்றான் இளவழுதி.
“என்ன ஆம்?” என்று புலவர் சீறினார்.
“வாளின் மீது ஆணை வைத்திருக்கிறேன் நான் தப்புவ தில்லையென்று.”
“அந்த ஆணை உன்னைக் கட்டுப்படுத்தாது” என்றான் ரவிவர்மன்.
“ஏன்?” இளவழுதியின் கேள்வியில் உக்கிரமிருந்தது.
ரவிவர்மன் சிறிது சிந்தித்து விட்டுச் சொன்னான் “குஸ்ரூகான் உன்னிடம் நாடகமாடியிருக்கிறான். உண்மையில் அஜ்மல்கான் சிறைப்படுத்தப்படவில்லை. இளமதியின் விடுதலைகூட ஒரு தந்திரம்தான்” என்று.
“இருக்கலாம் மன்னவா! ஆனால் பாண்டியர்கள் ஆணை தவறாதவர்கள். எதிரியின் துர்குணத்திற்காக நமது குணத்தைப் பாழாக அடித்துக் கொள்வது பைத்தியக்காரத்தனம்” என்றான் இளவழுதி.
“அப்படியானால் நீ ஏன் இங்கு வந்தாய்?” என்று கேட்டான் ரவிவர்மன்.
“புலவர் ஓலைப்படி வந்தேன்” என்றான் இளவழுதி.
“புலவர் இப்பொழுது ஆணையிடுகிறேன், இங்கிருந்து திரும்பாதே. சேரர் படைத்தலைவன் என்ற முறையில் உன் கடமையைச் செய்” என்று புலவர் கூறினார்.
“இப்பொழுது நான் போக வேண்டும். போகாமலிருக்க முடியாது. ஆணை என்னைக் கட்டுப்படுத்துகிறது. அங்கு சென்ற பின்பு நிலைமை இருக்கிறபடி நடந்து கொள்வேன். குஸ்ரூகானிடம் சொல்லி விடுகிறேன். உன் தந்திரம்,
சொல் மாற்றம் என் ஆணையை அவிழ்த்து விட்டது என்று. பிறகு என்னை. அவன் கட்டுப்படுத்த முடியாது” என்றான் இளவழுதி.
“கட்டுப்படுத்த அவசியமில்லை” என்றார் புலவர்.
“ஏன்?” இளவழுதி கேட்டான் சர்வசாதாரணமாக.
“உன் தலையை வெட்டி விடுவான் குஸ்ரூகான்” என்றார் புலவர்.
அந்த சமயத்தில் ரவிவர்மன் கேட்டான் புலவரை நோக்கி வேறு வழியிருக்கிறதா புலவரே?” என்று.
“இல்லை” வருத்தத்துடன் விடையிறுத்தார் புலவர்.
ரவிவர்மன் குரல் மிக நிதானமாக ஒலித்தது அந்த அறையில் இளவழுதியை நோக்கி. “இளவழுதி! இந்த நிலையில் உன்னைச் சிறை செய்வதைத் தவிர வேறு வழியில்லை” என்றான் சேரமன்னன் உணர்ச்சி சிறிது மற்ற குரலில்.

Previous articleCheran Selvi Ch37 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch39 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here