Home Cheran Selvi Cheran Selvi Ch39 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch39 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

142
0
Cheran Selvi Ch39 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch39 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch39 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 39. சிறையும் இனிக்கும்

Cheran Selvi Ch39 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரமன்னன் முடிவைக் கதவிடுக்கின் வழியாக உள்ளே பார்த்துக் கொண்டிருந்த சேரன் செல்வி கேட்டதும் ஓரளவு சஞ்சலமும் பெருமளவு சங்கடமும் கொண்டாள். தன் தந்தை அரசின் நன்மையை முன்னிட்டு, மக்கள் நன்மையை
முன்னிட்டு, எதையும் செய்ய வல்லவர் என்பது அவளுக்குத் தெரிந்திருந்ததால் இளவழுதியை அவர் நிச்சயம் சிறை செய்வார் என்பதை சந்தேகமற இளமதி உணர்ந்திருந்தாள். அப்படி அவர் படைத்தலைவனைச் சிறை செய்யும் பட்சத்தில்
அவனுக்கும் அரசருக்கும் உள்ள நல்லுறவு கெட்டுப் போய்விடுமென்பதிலோ, அதன் காரணமாக தன் மீதும் அவனுக்கு வெறுப்பு ஏற்படுமென்பதிலோ அவளுக்குச் சிறிதும் ஐயமில்லை. ஆகையால் நிலைமையை சீர்படுத்த தான்
உள்ளே நுழையலாமா என்றுகூட யோசித்தாள். ஆனால் இளவழுதி அதற்கு இடமோ அவகாசமோ அளிக்கவில்லை.
தன்னை சிறை செய்வதாக அரசன் கூறியதும் அதற்குப் புலவர் ஒப்புதல் தந்ததும் இருந்த இடத்திலேயே சிறிது அசைந்தான் இளவழுதி. “இது தான் தங்கள் முடிவா?” என்று அவன் கேட்ட போது அவன்குரலில் எந்தவிதச் சஞ்சலமும்
இல்லை. குரல் திடமாகவும் ஏதோ முடிவுக்கு அவன் வந்து விட்டதை தொனிப்ப தாவும் அமைந்திருந்தது.
ரவிவர்மன் ஈட்டிக்கண்கள் உள்ளேயிருந்த விளக்கொளியில் அபரிதமாக ஜொலித்தன. அவன் சற்று நிமிர்ந்து நின்றபோது அரச தோரணை நூற்றுக்கு நூறு தெரிந்தது. “வேறு முடிவுக்கு வழியிருந்தால் நீயே சொல்லலாம்” என்ற
ரவிவர்மன் குரலில் உறுதி பரிபூர்ணமாக ஒலித்தது. “இளவழுதி! இது சேரர் போர் மட்டுமல்ல. இந்து மதத்தைக் காக்கவும் நமது கலை தெய்வீகப் பொக்கிஷங்களான கோவில்கள் மீண்டும் இடிபடாதபடி காக்கவும் இந்தப் போர்
நடக்கிறது. இதற்கு உபத்திரவம் விளைவிக்கும் எவரும் நமது கலாச்சாரத்துக்கு ஊறு விளைவிக்கிறார்கள். இப்பொழுது நான் கடமையிலிருந்து சிறிது வழுவினால், நீ என் மகளின் காதலனாயிற்றே என்பதற்காகச் சிறிது தயங்கினால்,
இந்தப் போரின் முடிவு பரம விபரீதமாயிருக்கும். எந்தக் கடமையை முன்னிட்டு நான் என் மருமகனான வீர பாண்டியனையும் முறியடிக்கத் தீர்மானித்து விட்டேனோ, அதே கடமையை முன்னிட்டு என் மகளுக்கு நாளை மாலை
சூடவேண்டிய உன்னையும் சிறை செய்வதைத் தவிர வேறு வழியில்லை. சத்தியங்களிலும் மீறக் கூடிய சத்தியங்கள் உண்டு. பெரிய இந்து சமுதாயத்தின் நலனை முன்னிட்டு குஸ்ரூகானிடம் நீ இட்ட சத்தியத்தை மீறுவது தவறாகாது. இது
தர்ம சாஸ்திரம்’ என்று மன்னன் வலியுறுத்தினான்.
இளவழுதி ஒருமுறை மன்னனையும் புலவரையும் மாறி மாறிப் பார்த்தான். முடிவாகச் சொன்னான்: “மகாராஜா! மக்களைக் காப்பாற்ற பட்டத்து இளவரசன் என்ற முறையில் தனது கடமையைச் செய்ய ராமபிரானே சத்தியத்தை
மீறவில்லையே. அதுவும் அவன் செய்த சத்தியமல்ல அது. தந்தை ஏதோ ஒரு காலத்தில் செய்து கொடுத்த சத்தியம். அதுவும் சிறிய தாயாரின் வாயால் வந்த ஆணை. அதையே மீறவில்லையே ஆண்டவன். அவனுக்கு தர்மசாஸ்திரம்
தெரியாதா அல்லது கடமை யைத் தான் அவன் உணராதவனா?”
இளவழுதியின் வார்த்தைகளைக் கேட்ட மகாராஜாவின் முகத்தில் எந்தவித மாறுதலும் இல்லை.”காலம் நிலைமையை மாற்றுகிறது. தவிர நாம் பகவானல்ல. அவன் உதாரணத்தை நாம் கடைப்பிடிப்பது இயலாத காரியம். எல்லோரும்
ராமர்களாகி விட்டால் ராமராஜ்யம் இந்த நாட்டில் தொடர்ந்திருக்கும். ஆனால் தொடரவில்லை என்பதைப் பார்க்கிறோம். பிறகு ஏற்பட்ட ராஜதந்திரங்கள் வேறு. ராமாயண ராஜதந்திரங்களுக்கும், மகாபாரத ராஜதந்திரங்களுக்கும் பின்னால்
வந்த சாணக்கியன் ராஜதந்திரங்களுக்கும் பல வேறுபாடுகள் உண்டு” என்று அறிவித்த சேரமன்னன் “இளவழுதி! உன் வாளை எடுத்து என்னிடம் கொடு” என்று கையை நீட்டினான்.
“வாளையா கேட்கிறீர்கள்?” என்று வினவினான் இளவழுதி.
“ஆம்”
“அதைவிட என் உயிரைக் கேட்கலாமே”
“அவசியமானால் அதையும் கேட்பேன்”
அதுவரை வாளாவிருந்த புலவர் உரையாடலில் தலையிட்டார். “இளவழுதி! மகனே!” என்ற அவர் குரலில் துயரம் இருந்தது!
“குருநா தா!” இளவழுதி அவர்மீது. கண்களைத் திருப்பினான்.
“நீ வைத்திருப்பது உன் வாளல்ல” என்றார் புலவர்.
“உம்?” சந்தேகத்துடன் கேட்டான் இளவழுதி.
“அரசர் கொடுத்த வாள், உன் பதவியை முன்னிட்டு”
“ஆம்”
“பதவி உன்னிடமிருந்து அகற்றப்படுகிறது.”
“அதனால்?”
“அதனால் வாளை அரசனிடம் கொடுத்துவிடு.”
இதற்கு மேல் இளவழுதி பதிலேதும் சொல்லவில்லை. பேசாமல் வாளை உருவி அரசனிடம் நீட்டினான். அதை மன்னன் கையில் வாங்கிக் கொண்டதும் வினவினான் படைத் தலைவன், “இப்பொழுது பதவி இழந்து விட்டேன் ஆகையால்
நான் போகலாமா?” என்று.
“எங்கு?” அரசன் கேள்வியில் சற்று சினம் துளிர்த்தது.
“குஸ்ரூகானிடம்”
“என் போர்த்திட்டத்தை நீ உணர்ந்திருக்கிறாய். தாக்கும் இடங்களை இப்பொழுது தான் உனக்குக் காட்டினேன்.”
“ஆம் காட்டினீர்கள்.”
“என் போர்த்திட்டத்தைப் புரிந்து கொண்ட நீ எதிரியிடம் சென்றால் எங்கள் கதி என்ன ஆகும்?”
“எதிரியிடம் உங்களைக் காட்டிக் கொடுத்து விடுவேனென்று நினைக்கிறீர்களா?”
“நீயாகக் காட்டிக் கொடுக்க மாட்டாய். ஆனால் நீ காட்டிக் கொடுக்கும் நிலைமையை குஸ்ரூகான் எப்படி யாவது சிருஷ்டிப்பான்.”
“எப்படி சிருஷ்டிப்பான்?”
“எனக்குத் தெரியாது. குஸ்ரூகான் மிகுந்த அறிவாளி. உன்னை இப்பொழுது எப்படி ஆணையால் கட்டுப்படுத்தி உனக்கு உதவமுடியாதபடி செய்து விட்டானோ, அவ்விதம் உன்னிடமிருந்து போர் ரகசியத்தைக் கக்கவும் வழி
வகுப்பான்” என்ற சேர மன்னன் “என்னுடன் வா இளவழுதி” என்று அழைத்துப் பின்பக்கம் திரும்ப முயன்ற சமயத்தில் வெளிக்கதவு திறந்ததைப் பார்த்த மன்னன் வியப்புற்றுப் பழையபடி திரும்பி, திரும்பியபடியே நின்றான்.
இளமதி மிக மெதுவாக உள்ளே நுழைந்தாள், மன்னனையும் நோக்கினாள், புலவரையும் நோக்கினாள். “தந்தையே! தங்கள் முடிவு இதுதானா?” என்றும் கேட்டாள் மிக வரண்ட குரலில்.
உடனடியாகப் பதில் கூறவில்லை சேரமன்னன். பேசிய போது கேள்விக்குப் பதிலும் சொல்லவில்லை. “நீ எப்படி, வந்தாய் இங்கே?” என்று கேட்டான் அதிகாரக் குரலில்.
‘நேற்று நீங்கள் சொன்னது நினைவுக்கு வந்தது” என்றாள் சேரன் செல்வி.
“எது மகளே?” சேரன் கேள்வியில் சீற்றம் இருந்தது.
“இந்தப் பழைய கோட்டையில் பல விசித்திரங்களிருப் பதாகக் கூறினீர்கள்.”
“ஆமாம்”
“அதைப்பற்றி நினைத்துக்கொண்டே சாளரத்தில் உட்கார்ந்து இருந்தேன். அப்பொழுது ஒரு கீதம் காற்றில் வந்தது. கீதத்தைத் தொடர்ந்து, ஒரு புரவியும் ஒரு வீரனும் வந்தார்கள். சற்று தூரத்தில் மண்ணில் இறங்கி மறைந்தார்கள்.
நாமும் இறங்க முடியுமா என்று பார்க்க அந்த இடத்தை நாடினேன். இங்கு வந்தேன் முடிவில் – ஆனால்…”
“ஆனால் என்ன?”
“மாளிகை விசித்திரத்தைவிட இங்கு அதிக விசித்திரத்தைக் கண்டேன். இங்கு படைத்தலைவரும் மன்னரும் மோதுகிறார்கள். மன்னர் தமது படைத்தலைவரைச் சிறை செய்கிறார். இதற்கு மேல் படைத்தலைவர் மனோபாவம்
எப்படியிருக்குமென்பதை விவரிக்கத் தேவையில்லை. இப்படி நாம் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வதைத்தான் எதிரி எதிர்பார்க்கிறான்” இதை மிக மெதுவாகச் சொன்னாள் அரசகுமாரி.
சேரமன்னன் முகத்தில் லேசாகச் சினம் துளிர்த்தது. “இது அரசாங்க விஷயம்…” என்று கூறினான். ஆனால் வாசகத்தை முடிக்கவில்லை.
“அதில் தாங்கள் என்னை ஈடுபடுத்தி நீண்ட நாளாகிறது” என்றாள் இளமதி.
“அது தவறு என்பதை இப்பொழுது புரிந்து கொண்டேன்” என்றான் அரசன்.
“எப்படியோ?”
“இவனுக்குப் பரிந்து பேச வந்திருக்கிறாய்”
“இல்லை.”
“வேறென்ன?”
இளமதி தந்தையை உற்று நோக்கிச் சொன்னாள்: “தந்தையே! உங்களுக்குக் கடமையிருப்பது போல் மற்றவர்களுக்கும் இருக்கிறது. இவர் குஸ்ரூகானிடம் ஆணையிட்டது என்னை விடுவிக்க. ஆகையால் அந்த ஆணை என்னையும்
கட்டுப்படுத்தும். நீங்கள் அவரைச் சிறை செய்வதானால் என்னையும் சிறைசெய்ய வேண்டும்”
சொற்களை சிறிதும் தயக்கமின்றி உதிர்த்தாள் சேரன் மகள். சேரமன்னன் புதல்வியை உற்று நோக்கினான் சில வினாடிகள். பிறகு புலவரைப் பார்த்து “இப்பொழுது நான் என்ன செய்யட்டும்?” என்று வினவினான்.
புலவர் மிகவும் திண்டாட்டத்திலிருந்ததை அவர் முகம் சந்தேகமற நிரூபித்தது. “அரசகுமாரியின் சொற்களைப்பற்றி நீங்கள் கவலைகொள்ள அவசியமில்லை. அது ஒரு பேதையின் பிதற்றல். காதலால் கருத்தழிந் திருக்கிறாள் இளமதி”
என்று புலவர் சொன்ன போது அவர் குரலில் தெம்பு இல்லை, சினமும் குழப்பமும் பலவீனமும் கலந்திருந்தன.
மன்னன் சிறிது சிந்தித்தான். “சரி இளமதி! நீ சொல்வதிலும் நியாயமிருக்கிறது” என்றான் சிந்தனைக்குப் பிறகு.
“நன்றி” என்றாள் சேரன் மகள்.
“உன்னையும் இவனுடன் சிறையில் வைக்கிறேன்” என்றான் ரவிவர்மன்.
“மன்னவா!” புலவர் குரல் எரிச்சலுடன் இடை புகுந்தது.
“என்ன புலவரே?” அரசன் சர்வ சாதாரணமாக வினவினான்.
“இளமதி உன் மகள்.”
“ஆம்”
“அவளையும் சிறை செய்கிறாயா?”.
“இப்பொழுது நடக்கும் போருக்கு யார் யார் இடைஞ்சலோ அவர்கள் அத்தனை பேரையும் சிறை செய்வேன்.” இதை, சந்தேகத்துக்கு இடமின்றிச் சொன்னான் ரவிவர்மன்.
புலவர் முகத்தில் வியப்பு பெரிதும் விரிந்தது “மன்னவா! எந்த விதிக்கும் ஒரு விலக்கு உண்டு” என்று கெஞ்சினார்.
“அந்த விலக்கு என் மகள் என்கிறீர்?” மன்னன் கேள்வியில் வெறுப்பு இருந்தது.
“ஆம்”
“ஏன்?”
“ரத்த சம்பந்தம்”
“இது ரத்தத்தைச் சிந்தும் சமயம் புலவரே. பல பேர் ரத்தத்தைச் சிந்துவதால், உறவுகளை உடைப்பதால், பெரிய லட்சியங்கள் நிறைவேற்றப்படுகின்றன” என்று திட்டவட்டமாகக் கூறிய ரவிவர்மனைக் கோப விழிகளுடன் நோக்கினார்
புலவர்.
“குருநாதரே! இதில் நீங்கள் தலையிட வேண்டாம்” என்றான் இளவழுதி இடைமறித்து.
“அதனால் பாதகமில்லை. நான் ஒருவன் தான் பாக்கியிருக்கிறேன், மன்னன் சிறை செய்வதற்கு” என்றார் புலவர்.
“அப்பா! குருநாதரையும் சிறை செய்வீர்களா?” என்று கேட்டாள் இளமதி சினத்துடன்.
“என் தாய், தந்தை யாராயிருந்தாலும் சிறை செய்வேன், நாட்டையும் மதத்தையும் காக்க. குரு அவர்களுக்கு அடுத்தபடிதான்” என்று விளக்கினான் மன்னன்.
அத்துடன் பேச்சு முடிந்துவிட்டதற்கு அறிகுறியாகக் கையை அமர்த்தி “யாரங்கே” என்று குரல் கொடுத்தான். அவனுக்குப் பின்னால் இருளடர்ந்த பாகத்தில் ஒரு கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சுமார் நான்கு காவலர் இருளிலிருந்து
வெளிச்சத்துக்கு வந்தனர். “அந்த இரு வரையும் சிறையில் அடைத்து வையுங்கள்” என்ற அரசன் ஆணை அந்த சுரங்கக் கட்டிடத்தின் சுவர்களில் பயங்கரமாக எதிரொலி செய்தது. காவலர் இளவழுதியையும் இளமதியையும் நெருங்கினர்.
இளவழுதி எந்த எதிர்ப்பையும் காட்டாமல் காவலரை நோக்கி நடந்தான்.
இளமதியும் தொடர்ந்தாள் படைத்தலைவனை. மன்னன் புலவரை நோக்கினான். “தாங்கள் விருப்பம் எப்படியோ?” என்று கேட்டான்.
புலவர் பதில் சொல்லவில்லை. தீவிர யோசனையில் இருந்தார். “நன்றி புலவரே! நீர் உமது கடமையைப் புரிந்து கொண்டுவிட்டீர்” என்று மன்னன் கூறிவிட்டு உட்புறமாக நடந்து சென்றான். புலவர் மட்டும் அங்கிருந்த மேடையில்
உட்கார்ந்து அரசன் விட்டுப் போன சீலையைக் கையில் எடுத்துக்கொண்டு அதை ஆராய்ந்து கொண்டிருந்தார் நேரம் போவது தெரியாமல். பிறகு தலை தூக்கி அரசன் சென்ற வழியைக் கவனித்தார். “ரவிவர்மா! உன்னைப்போல் கடமை
உணர்ச்சி நிரம்பியவன் பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறைதான் தோன்றுகிறான். ஆண்டவன் உனக்கு சகல சௌபாக்கியத்தையும் அளிக்கட்டும்” என்று சற்று இரைந்தே சொன்னார்.
சிறிது நேரத்துக்குப் பிறகு பாதாளச் சிறையில் அடைக்கப்பட்ட இளவழுதியும் இளமதியை நோக்கி அதே கருத்தைச் சொன்னான். “தந்தையை நினைத்து சீற்றமடையாதே இளமதி. இந்த மாதிரி கர்மவீரர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு
ஒருமுறை கூட பிறப்பதில்லை. அவரால் சிறைப்படுத்தப்பட்டதே நமக்குப் பெருமை” என்றான்.
இளமதி சிறிது நேரம் பேசவில்லை. “அடுத்து என்ன செய்வதாக உத்தேசிக்கிறீர்கள்” என்று வினவினாள் சிறிது சிந்தனைக்குப் பிறகு.
“இளமதி….” இளவழுதி அவள் பெயரை மெள்ள உச்சரித்தான்.
“என்ன படைத்தலைவரே?” என்று கேட்டாள் இளமதி.
“அப்படி அழைக்காதே. படைத் தலைவர் பதவி போய் விட்டது.”
“பின் எப்படி அழைப்பது?”
“எப்படி அழைக்கவேண்டுமோ அப்படி, நாம்…”
“உம்.”
“தனித்துவிடப்பட்டிருக்கிறோம். அதுவும் ஒரே அறையில்…”
“அப்படியா!”
“இருப்பவர் இருந்தால் சிறையும் இனிக்கும்” என்று கூறிய இளவழுதியின் கண்களில் காமம் பெருக்கெடுத்து ஓடியது. அவன் வலிய கரங்கள் அவளைப் பற்றின.

Previous articleCheran Selvi Ch38 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch40 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here