Home Cheran Selvi Cheran Selvi Ch40 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch40 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

125
0
Cheran Selvi Ch40 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch40 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch40 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 40. புகுந்தது இருவர், இருந்தவர் ஒருவர்

Cheran Selvi Ch40 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சிறை அறையில் அந்த சித்தினியைக் கட்டிப்பிடித்த படைத் தலைவன் கைகள் அவள் பூவுடலைப் பலமாக இறுக்கின. வெளியே தூரத்தில் மினுக்கு மினுக்கென்ற சிறு விளக்குக்கு எதிரே பெரிய கருங்கல் தூண் ஒன்று நின்றிருந்ததால்,
அவர்கள் இருவரும் தனித்திருந்த அறையில் அது லவலேசமும் படாமல் காரிருள் படர்ந்திருந்தது காரணமாக இளவழுதி சற்று அதிகமாகவே சரசத்தில் ஈடுபடத் தொடங்கினான். அவன் கையொன்று அவள் சரீரத்தை இறுகப் பிடித்திழுத்து
தன் மீது சாய்த்துக் கொண்டதென்றால் இன்னொரு கை அவள் லாவண்யச் சிறப்புகளைத் தேடிச் செல்லவே அரசகுமாரி உணர்ச்சி மிகுதியால் ‘உம்’ என்று மிருதுவான சப்தத்துடன் பெரு மூச்சொன்று விட்டாள். அந்த சப்தத்தில்
ஆவலிருந்ததே தவிர எதிர்ப்பு மருந்துக்குக்கூட இல்லாததால் இளவழுதி யின் கை இஷ்டப்படி சென்றது. கன்னம் கன்னத்தோடு இழைந்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு இதழ்கள் இதழ்களோடு பதிந்தன.
என்ன காரணத்தாலோ இளவரசி அதற்கு மேற்பட்ட சுதந்திரத்தை அளிக்கவில்லை அவனுக்கு. மெள்ள தன் இதழ்களை அகற்றி அவன் காதுக்கருகே கேட்டாள், “அடுத்த படி என்ன செய்வதாக உத்தேசம்?” என்று.
அந்த கேள்வியைக் காமத்தில் திளைத்திருந்த இளவழுதி தவறாகப் பொருள் கொண்டு, “என்ன கேட்கிறாய் இளமதி?” என்று அவன் பதிலுக்கு ஒரு கேள்வியை வீசினான்.
அந்தப் பதிலின் வாசகத்தைவிட அவன் குரலிலிருந்த ஒலி விபரீதமாயிருந்ததால் சற்று அவன் பிணைப்பிலிருந்து விலக முற்பட்ட இளமதி “கேள்வி சரியாகத்தானிருக்கிறது. ஆனால்…” என்று கூறினாள் வாசகத்தை முடிக் காமல் பாதியில்
விட்டு.
அப்படிச் சொற்களின் கோவை அறுந்ததைத் தவறாகப் புரிந்துகொண்ட இளவழுதி “என்ன ஆனால் இளமதி?” என்று கேட்டான். அவளை விலக விட வில்லை அவன் கைகள். அதிகமாக நெருக்கியே பிடித்தன.
இதனால் வலியெடுத்த உடலுக்கு அந்த வலியும் தேவையாயிருந்ததால் அவள் மெள்ள நகைத்தாள். “என் கேள்வி சரிதான்” என்று பழைய வாசகத்தைத் திருப்பினாள்.
“வேறு எது சரியில்லை?” என்று விசாரித்தான் இளவழுதி கையால் அவள் தோளை வருடி.
“புத்தி” என்ற இளமதி மேலும் நகைத்தாள்.
“புத்தியா! யார் புத்தி?” என்று இளவழுதி கேட்டான்.
“உங்கள் புத்தி தான்”
“என்ன அதற்கு?”
“கோணலாயிருக்கிறது”
“அப்படியென்ன கோணலைக் கண்டு விட்டாய்?”
“அடுத்தபடி என்ன செய்யப் போகிறீர்கள் என்று நான் கேட்டேன். இப்பொழுது என்ன செய்யப் போகிறீர்கள் என்று நான் கேட்டதாகப் புரிந்து கொண்டு…” என்ற இளமதி பேச்சை மேலேபேசமுடியாமல் தவித்தாள்.
அப்பொழுதுதான் இளவழுதிக்குப் புரிந்தது அவள் கேட்ட கேள்வியின் பொருள். சிறைப்பட்ட தனது அடுத்த நடவடிக்கை என்ன என்று அவள் கேட்கப் போக, தான் அதைத் தவறாக எடுத்துக்கொண்டு ஆவலை அத்து மீறச்
செய்துகொண்டதை எண்ணி அவனும் மெல்ல நகைத்தான்.
“என்ன நகைக்கிறீர்கள்?” என்று இளமதி கேட்டாள். தன்னைச் சிறிது அவன் கையிலிருந்து விடுவித்துக் கொண்டு.
“இளமதி?” என்று அந்த இருளில் மிக மெதுவாக அழைத்தான் அவளை.
“என்ன?” அவள் குரல் மிக ரகசியமாக ஒலித்தது.
“என் புத்தி கோணலானதல்ல…”
“அப்படியா!”
“ஆம், ஆனால் நீ அருகிலிருக்கும் போது”
“என்ன ஆகி விடுகிறதாம்?”
“கோணலாகி விடுகிறது”
“எல்லாப் பழியையும் என் மேல் போடுங்கள்”.
இதைச் சொன்ன இளமதி இன்பப் பெருமூச்ச விட்டாள். தன் அழகு அவனைப் பாதித்து விடுவதாக அவன் சொன்னதால் பெரும் பூரிப்படைந்தாள் அவள். ஆனால் அதை வெளிக்குக் காட்டாமல் மறைக்கவே மேற்படி பதிலைச்
சொன்னபோது குரலைச் சிறிது கடுமையாகவும் மாற்றிக் கொண்டாள்.
அது பொய்க் கடுமை என்பதை இளவழுதி அந்தக் கேள்வி உதிர்ந்ததுமே புரிந்து கொண்டான், அதனால் உள்ளூர நகைத்துக் கொண்டாலும் அதை வெளிக்குக் காட்டாமல் “பழி போடவில்லை இளமதி” என்றான்.
“என்னால் உங்கள் புத்தி கோணலாகி விடுகிறது என்பது என்னவாம்?” என்று கேட்டாள் அரசமகள்.
“சத்தியம்.”
“சத்தியமா”
“ஆம். இளமதி வேண்டுமானால் சத்தியத்தை உறுதி செய்து காட்டுகிறேன்.”
எப்படிக் காட்டுவீர்கள்?” என்று கேட்டாள் இளமதி
அடுத்த வினாடி படைத்தலைவனின் கரங்கள் அவளை வாரி அணைத்துக்கொண்டன. அப்படி அணைத்த வண்ணம் அவளை கையில் ஏந்தியபடியே எழுந்திருந்தான் அவன். மிக வேகமாகக் குனிந்து “இது சத்தியம், சத்யம், சத்யம்” என்று
மும்முறை முரட்டுத் தனமான தனது இதழ்களை அவள் இதழ்களுடன் பொருத்திப் பொருத்தி மீண்டான். அவளும் உணர்ச்சி மீறினாள். தனது இரு கைகளாலும் அவன் கழுத்தை இறுகக் கட்டி இழுத்தாள். அவன் உதடுகள் மூன்றாய்
முறை மீள முயன்றபோது அவள் உதடுகள் அவற்றை விட மறுத்தன, அவை விட்டபோது மெல்ல காதில் சொல்லொன்றை உதிர்த்தன “நிற்க வேண்டாம்” என்று –
அந்தச் சொல்லொன்று அதில் ஒலித்த பாவம் அவள் நிலையை சந்தேகத்துக்கு இடமில்லாமல் விளக்கி விட்டன. ஆனால் அவள் சுயநிலை இழந்த சமயத்தில் இளவழுதி தனது உணர்ச்சிகளை முழுவதும் மீட்டுக் கொண்டான். கடமை
உணர்ச்சி காம உணர்ச்சியை அறுத்தது. அதனால் அவளைத் தழுவிய வண்ணம், நின்ற நிலையில் சொன்னான் “இளமதி! இப்பொழுது உன் புத்தி கோணலாகி விட்டது!’ என்று.
“ஆம்” என்று ஒப்புக் கொண்டாள் இளமதி.
“என்ன ஆம்?” வியப்புடன் கேட்டான் படைத் தலைவன்,
“என் புத்தி கோணல் தான் படைத்தலைவரே…”
“என்ன இளவரசி!”
“எல்லாப் பெண்களுடைய புத்தியுமே இந்த மாதிரி சமயத்தில் கோணல் தான், அதனால்தான்…”
“சொல் இளமதி”
“ஆண்மகன் அயோக்கியத்தனத்தால் பல பெண்கள் சீரழிந்து போகிறார்கள்”
“ஆண்கள் மீது வீண்பழி சுமத்தாதே இளமதி”
இளமதி நகைத்தாள் இந்தப் பதிலைக் கேட்டு. “அபலைகளை இறுக்கி மதி இழக்கச் செய்யும் ஆண்கள் ரொம்ப யோக்கியர்கள் போலிருக்கிறது” என்று நகைப் பைத் தொடர்ந்து கூறவும் செய்தாள்.
அவளை மெள்ள தன் கைகளிலிருந்து இறக்கித் தரையில் நிற்க வைத்தான் படைத்தலைவன். அவள் உணர்ச்சிகள் பூர்ணமாக அவளிடம் திரும்பின. ஆகவே நிற்க வைத்துத் தழுவிய வண்ணம் சொன்னான் “இளமதி உணர்ச்சிகள்
மிகைப்படும் போது எந்த ஆணும் பெண்ணும் தம்தம் வசத்திலிருப்பதில்லை. தங்களை மீறிய சக்தியால் சுழற்றப்படுகிறார்கள். சில வேளைகளில் ஆண்கள் அக்ரமம் அதிகமாகிறது. பெண்கள் அக்ரமத்துக்கும் குறைவில்லை. ஆனால்
அதிகமாகப் பாதிக்கப்படுவது பெண் தான். அதனால் தான் பெண்ணைக் காக்கும் அவசியத்தைப் புராணங்கள் எல்லாமே சுட்டிக் காட்டுகின்றன. ஆகவே தவறு யாருடையதென்று சொல்ல முடியாது.”
இதற்குப் பிறகு இளவழுதி சில வினாடிகள் பேசவில்லை. பேசியபோது அவன் சொற்களில் துயரம் தோய்ந்து கிடந்தது. “இளமதி! இப்பொழுது நான் உன்னை விட்டுப் பிரிய வேண்டும்” என்று சொன்னான் படைத்தலைவன்.
“பிரிந்து போகப் போகிறீர்களா?” என்று வியப்புடன் வினவினாள் சேரன் மகள்.
“ஆம் இளமதி”
“எப்படி?”
“வழி இருக்கிறது?”
“ஏது வழி? எங்கிருக்கிறது? சிறைதான் பூட்டப்பட்டிருக்கிறதே”
இதைக் கேட்ட இளவழுதி நகைத்தான் மெதுவாக. “இளமதி! இது பாண்டியர் அரண்மனை என்பதை மற வாதே” என்று சொன்னான் நகைப்பு, குரலிலும் ஊடுருவ.
“அது தெரியும் எனக்கு” என்றாள் இளமதி.
“இங்கு சந்திக்கும்படி புலவர் ஓலை அனுப்பினார் எனக்கு”
“அதை தந்தை முன்பே சொன்னீர்கள்”
“வருவதற்கு வழியை அவர் சொல்லவில்லை”
மெள்ள உண்மை புரியலாயிற்று இளமதிக்கு.
“அப்படியா?” என்று மட்டும் கேட்டாள் அவள்.
“ஆம். இந்தக் கோட்டையின் மந்திராலோசனை இந்தப் பாதாள மண்டபத்தில் நடப்பது வழக்கம். இது புலவருக்குத் தெரியும்.”
“புரிகிறது சொல்லுங்கள்”
“இங்கு சந்திக்கச் சொன்னதும் இடத்தைப் புரிந்து கொண்டேன். நான் பாண்டியன். எனக்கு எங்கள் கோட்டை மர்மங்கள் தெரியாதிருக்குமா?” இதைச் சொன்ன இளவழுதி மேலும் தொடர்ந்தான். நான் இங்கு வந்ததும் மண்ணில்
புரவியுடன் மறைந்துவிட்டதை நீ எப்படியோ பார்த்திருக்கிறாய். இல்லாவிட்டால் நீ இங்கு வந்திருக்கப் பிரமேயமில்லை. எப்படிப் பார்த்தாய், எப்பொழுது பார்த்தாய், என்பது எனக்கு விளங்கவில்லை. ஆனால் நான் அப்படி இறங்கியதால்
தான் நீயும் என்னைத் தொடர்ந்திருக்கிறாய்…”
இளவழுதி மேலும் பேசியிருப்பான். ஆனால் இடைமறித்தாள் இளமதி “உங்களைப் பார்த்தது கஷ்டமென்று நினைக்கிறீர்களா?” என்று.
“ஆமாம்”.
மிக ரகசியமாக வந்திருப்பதாக உங்கள் எண்ணமா?”
“ஆமாம், அதில் என்ன தவறு?”
“என்ன தவறா? உங்களுக்குப் புத்தி லவலேசம்கூட இல்லை.”
“உன்னைப் பார்த்தால் அதை இழந்து விடுகிறேன். என் குற்றமல்ல அது.”
“சரி அந்தப் பல்லவி போதும். ஆமாம், ரகசிய மந்திராலோசனைக்கு வரும்போது பாட்டென்ன வேண்டிக் கிடக்கிறது?” என்று எரிந்து விழுந்தாள் இளமதி.
“நீ கேட்டாயா என் பாட்டை?”
“கேட்டேன். பரவசப்பட்டேன். நல்ல வேளை நான் மட்டும் கேட்டேன். வீரர்கள் கேட்டிருந்தால் விபரீதம் நடந்திருக்கும்”
“இப்பொழுது என்ன குறைந்து விட்டது. சிறையிலிருக்கிறேன்.”
“நானாயிருந்தால் உங்கள் கைகால்களைச் சங்கிலியால் பிணைத்திருப்பேன்.”
“உனக்கு அது தேவையில்லையே. சங்கிலியைவிட பலமான கயிறுகள் உன் வடிவழகில் இருக்கின்றனவே.”
இளமதிக்கு எரிச்சல் அதிகமாயிற்று. “பாட்டை சமய சந்தர்ப்பம் தெரியாமல் பாடக்கூடாது. புரிந்து கொள்ளுங்கள்” என்றாள் இளமதி.
“புரிந்துகொண்டேன் இளமதி. ஆனால் வருந்தவில்லை. நான் பாடியிராவிட்டால் நீ என்னைக் கவனித்திருக்கப் போவதில்லை. கவனித்திருக்காவிட்டால் இங்கு வரப் போவதில்லை. நானும் சுரங்கக் காவலருக்குக் கட்டளையிட்டு
வந்திருக்க மாட்டேன்”, என்ற வெடியைத் தூக்கி வீசினான் இளவழுதி.
திகைத்தாள் இளமதி. “நீங்கள் காவலருக்கு உத்திரவிட்டீர்களா?’ என்று கேட்டாள்.
“இல்லாவிட்டால் கதவு எப்படித் திறந்தது உனக்கு?” என்று வினவினான் இளவழுதி.
அப்பொழுதுதான் அந்தக் கதவைத் திறக்கவும் முடவும் காவலர் உண்டு என்பதை உணர்ந்தாள் இளவரசி. அதனால் திக்பிரமை கொண்டு கேட்டாள் “என்னை எப்பொழுது பார்த்தீர்கள்?” என்று.
“நீ சாளரத்திலிருந்து என்னைப் பார்க்க முடியு மானால் நான் உன்னைப் பார்ப்பது கடினமா?” என்று வினவிய இளவழுதி “நீ இந்தக் கோட்டைக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அறிந்த நான், உன்னைப் பற்றி
நினைக்காமலா வருவேன். வரும் போது என் கண்கள் மூடியா இருக்கும்?” என்றும் சொன்னான்.
இளவழுதியின் புத்தி கூர்மையும் கண்ணின் திறனையும் கண்ட இளமதி பெரிதும் வியப்புக்குள்ளானாள். “நான் உங்களைப் பார்த்திராவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்றாள் இளவரசி.
“இளமதி! நீ இந்தக் கோட்டையில் இருக்கிறாய் என்று தெரிந்து வந்திருக்கும் நான் உன்னைக் காணாமல் போய் விடுவேனென்று நினைக்கிறாயா? இந்தக்கோட்டையைப் பற்றி உன் தந்தைக்குச் சிறிதளவு தான் தெரியும். இந்தக்
கோட்டையின் எந்த அறைக்கும் நான் போக முடியும். ஆகையால் உன்னைக் காண்பது ஒரு கஷ்டமல்ல எனக்கு. உதாரணமாக இந்தச் சிறையிலிருந்து வெளி யேறப் போகிறேன். அதை யார் தடுக்க முடியும்” என்று கேட்டான் இளவழுதி.
அறையைச் சுற்றும் முற்றும் நோக்கினாள் இளமதி. சுற்றிலும் பலமான பாறாங்கல் சுவர்கள். இவற்றை எப்படி அகற்ற முடியும் என்று அவள் சிந்தித்துக் கொண்டிருந்த போதே பக்கத்துச் சுவரொன்றில் தோளைக் கொடுத்துப்
பலமாக அழுத்தினான் இளவழுதி. சுவர் கட கடவென்றும், கரகரவென்றும் பலவித ஒலிகளை கிளப்பிக் கொண்டு அகன்றது. அப்படி அகன்ற இடத்தில் தோன்றியது ஒரு பாதை. “வருகிறேன் இளமதி சரியான சந்தர்ப்பத்தில்
சந்திக்கிறேன்,என்று உன் தந்தையிடம் சொல்” என்று கூறிவிட்டுப் பாறைகள் இடைவெளி கொடுத்த இடத்தில் நுழைந்து விட்டான் இளவழுதி. இளமதியும் அவனுடன் செல்ல முயன்றாள். சுவர் மீண்டும் மூடிக் கொண்டது. அதைப்
பலவிடங்களில் தொட்டுப் பார்த்தாள், கருங்கல் தான் தெரிந்தது. பெருமூச்செறிந்த வண்ணம் அந்தச் சுவரின் அடியிலேயே தரையில் உட்கார்ந்து விட்டாள். சோகமோ, உறக்கமோ சொல்ல முடியாது. அவன் கண்கள் தாமாக மூடின.
அப்படியே தரையில் சாய்ந்தாள் இளமதி. சிறையில் புகுந்தது இருவரானாலும் இருந்தது ஒருவர் என்ற காரணத்தினால் தூரத்தே இருந்த சிறு விளக்குக் காற்றில் தன் சுடரை ஆட்டி நகைத்தது.

Previous articleCheran Selvi Ch39 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch41 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here