Home Cheran Selvi Cheran Selvi Ch42 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch42 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

113
0
Cheran Selvi Ch42 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch42 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch42 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 42. துரோகம்

Cheran Selvi Ch42 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

குஸ்ரூகான் எதிர்பார்த்தபடி எதுவுமே நடக்கவில்லை அந்த சந்தர்ப்பத்தில், இளவழுதி வாளை அவன் கழுத்தில் பாய்ச்சவுமில்லை, திரும்பி உறையில் போடவுமில்லை. அவன் வாள் குஸ்ரூகான் கழுத்தை மட்டும் தடவி நின்றது. தலை
குஸ்ரூகான் காது பக்கமாக வளைந்தது. “குஸ்ரூகான் உன் வீரர்களை அழைத்து என்னைக் கைது செய்துவிடு” என்று காதுக்கருகே முணு முணுத்தன இளவழுதியின் உதடுகள். அவன் சொற்களில் ரகசியம் மட்டுமல்ல, ஏதோ மிகப்
பெரிய பொருளும் புதைந்திருப்பதாகத் தெரிந்தது குஸ்ரூகானுக்கு. “எதற்காக இந்த நாடகம்” என்று குஸ்ரூகான் இளவழுதியின் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொன்னான்.
“இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது. சிறை செய்த பின்பு நானிருக்குமிடம் வா. சொல்கிறேன்” என்று குஸ்ரூகான் காதில் மந்திரம் ஓதினான் சேரர் படைத்தலைவன்.
அடுத்தபடி குஸ்ரூகான் குரல் இடிபோல முழங்கியது “யாரங்கே?’ என்று. அந்தக் குரலை அடுத்து வந்த காவலரிடம் “இவனைச் சிறையிலடையுங்கள்’, என்று குஸ்ரூகான் உத்திரவிட இளவழுதியின் கழுத்தைப் பின் புறத்தில் இரண்டு
வாட்கள் தடவின. “வாளைக் கீழே போடு. இல்லையேல் பிணமாகி விடுவாய்” என்று உத்தரவும் பயமுறுத்தலும் குஸ்ரூகான் வீரர்களிடமிருந்து எழுந்தன.
அவர்கள் கோமாளித்தனத்தை குஸ்ரூகானால் தாங்க முடியாததால் “சேரர்படைத் தலைவரே வாளைக் கொடுப்பார். வீண்மிரட்டல் வேண்டாம்” என்று சினத்துடன் அவன் கூறியதன்றி இளவழுதியின் வாளைத் தனது வலது கையை
நீட்டித் தானே வாங்கிக் கொண்டான். பிறகு வீரர்களை நோக்கி “இவரை அடுத்திருக்கும் தனது கூடாரத்தில் காவலில் வையுங்கள். இவரை என்னைத் தவிர யாரும் பார்க்கக்கூடாது. நினைவிருக்கட்டும்” என்றும் உத்திரவிட்டான்.
இளவழுதியைக் கைது செய்து கொண்டு வீரர்கள் சென்றதும் குஸ்ரூகான் தீவிர சிந்தனையில் இறங்கினான். திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு அஜ்மல் கானை வரவழைத்தான் தனது கூடாரத்துக்கு. “அஜ்மல் உனக்கு
மகிழ்ச்சியான செய்தி இருக்கிறது” என்றான்.
“என்ன செய்தி நவாப்?” என்று விசாரித்தான் அஜ்மல்கான்.
“இவைழுதியைக் கைது செய்து விட்டேன். இப்பொழுது அவன் என்னிடம் சிறையிருக்கிறான்” என்று பதில் சொன்னான் குஸ்ரூகான்.
இதைக் கேட்டதும் அஜ்மல்கானின் முகத்தில் ஒரு வினாடி ஏமாற்றத்தின் சாயை உதயமாகி மறைந்தது. பிறகு மகிழ்ச்சியை முகத்தில் படரவிட்டுக் கொண்டு வினவினான் அஜ்மல்கான் “எப்பொழுது மகாராஜா?” என்று.
குஸ்ரூகான் அஜ்மல்கான் முகத்தில் முதலில் ஏற்பட்ட ஏமாற்றச் சாயலையோ பிறகு ஏற்பட்ட மகிழ்ச்சி மாறு தலையோ கவனிக்கத் தவறவில்லை. ஆகவே சர்வ சாதாரணமாகச் சொன்னான் “சற்று முன்பு” என்று.
“சற்று முன்பா!” அஜ்மல்கான் முகத்தில் வியப்பு விரிந்தது
“ஆம்”
“எப்படி?”
“அவனே இங்கு வந்து சிக்கிக் கொண்டான்”
“இந்தக் கூடாரத்துக்கு வந்தா?”
“ஆம். என்னைக் கொல்லக்கூட துணிந்தான்”
இதைக் கேட்ட அஜ்மல்கான் முகத்தில் கிலி படர்ந்தது. “உங்களைக் கொல்லவா? இந்தப் பட்டப் பகலிலா நவாப்? கில்ஜியின் படைத்தலைவரையா” என்று கிலி குரலில் ஒலிக்க வினவினான்.
குஸ்ரூகான் மஞ்சத்திலிருந்து எழுந்திருந்து அஜ்மல்கான் அருகில் வந்து அவன் தோள் மீது கையை வைத்தான் அன்புடன். “கொல்ல வருபவன் காலநேரம் கவனிப்பதில்லை. எதிரியின் பதவியைக் கவனிப்பதில்லை. நாம் எத்தனை
ராஜியக் கொலைகளைப் பார்த்திருக்கிறோம். மன்னர்கள் கொல்லப்படுவதில்லையா சதிகாரர்களால்?” என்ற குஸ்ரூகான் “அஜ்மல்/ இவனை என்ன செய்யலாம்?” என்று வினவினான்.
நவாப் அனுமதி கொடுத்தால் என் கையாலேயே இவனை வெட்டி விடுகிறேன்” என்றான் அஜ்மல்.
“பாவம் அஜ்மல். சேரன் செல்வி இவன் மீது உயிராயிருக்கிறாள்” என்று குஸ்ரூகான் அனுதாபத்துடன் கூறினான்.
“போர் என்று வரும்போது காதலைப் பற்றியோ பிறர் ஆசாபாசங்களைப் பற்றியோ கவனிப்பதில்லை நவாப்” என்று அஜ்மல்கான் உபதேசித்தான்.
குஸ்ரூகான் முகத்தில் சந்துஷ்டி பிறந்தது.
“உண்மை அஜ்மல்! படைத்தலைவனை வெட்டிப் போட வேண்டியது தான். அதை நாளை கவனிப்போம்” என்ற குஸ்ரூகான் அஜ்மல்கானுக்குப் போக அனுமதியளித்தான். அஜ்மல்கான் கூடாரத்தை விட்டு வெளியேறியதும்
கூடாரவாயில் படுதாக்களிடம் வந்து நின்று கொண்டான் குஸ்ரூகான். படுதாவைச் சிறிது திறந்து வெளியே நோக்கவும் செய்தான். நோக்கியவன் தன் உதடுகளில் ஒரு குரூரப் புன்முறுவலையும் படரவிட்டுக் கொண்டான்.
அன்று பகல் முழுவதும் குஸ்ரூகான் மிகவும் குதூகலத்திலிருந்தான். மறைவில் வைத்திருந்த தனது படைகளை வெளி வரச்சொல்லி அணிவகுத்துப் பார்வையிடவும் செய்தான், அந்தப் பணியில் அஜ்மல்கானையும் சேர்த்துக்
கொண்டு, “எனக்கு ஏதாவது நேர்ந்தால் அஜ்மல் படைகளை நடத்திச் செல்லுவார்” என்றும் படைப் பிரிவுகளுக்கு அஜ்மல்கானை அறிமுகப்படுத்தி வைத்தான். அஜ்மல்கான் ஏற்கனவே குஸ்ரூவின் வலது கை போலிருக்க, புதிதாக இந்த
அறிமுகம் எதற்கு என்று படைவீரர் களுக்குப் புரியவில்லையென்றாலும் யாரும் அதைப் பற்றிக் கேட்கவோ ஆட்சேபிக்கவோ இல்லை.
அஜ்மல்கான் மட்டும் புதுப்பதவியை ரசித்ததாகத் தெரியவில்லை. அவன் முகத்தில் மேலுக்கு மகிழ்ச்சியிருந்தாலும் அதில் பெரும் கவலையும் கலந்திருந்தது. அந்தக் கவலையுடனே அன்று அணிவகுப்பையும் பார்த்தான்.
குஸ்ரூகானின் அளவுக்கு மீறிய உபசாரத்தையும் ஏற்றான். பகல் மறைந்த பின்பும் அவன் கவலை மறையாததால் இரவில் சரியாக உணவும் அருந்தவில்லை. தனது கூடாரத்தை விட்டு நகராமல் ஏதேதோ யோசனையிலிருந்தான்.
குஸ்ரூகானின் மன ஆழத்தை அவனால் அறியமுடியவில்லையென்றாலும், குஸ்ரூகானுக்குத் தன் மீதிருந்த நம்பிக்கை பறந்து விட்ட தென்பதைப் புரிந்து கொண்டான் அஜ்மல்கான். அதற்குக் காரணம் மட்டும் அவனுக்கு
விளங்கவில்லை. ஒரே ஒரு சந்தேகம் பலமாக எழுந்தது உள்ளத்தில். ஆனால் அதற்குக் காரணமில்லையென்பது திட்டமாகத் தெரிந்ததால் சிறிது ஆசுவாசமும் அடைந்தான் புதிய உபதளபதி. அதனால் சற்று நிம்மதி ஏற்பட்ட மனத்துடன்
கூடாரத்தின் வெளியே உலாவச் சென்றான்.
அப்பொழுது இரவு நன்றாக ஏறிவிட்டதால் ஆங்காங்கு எரிந்து கொண்டிருந்த பந்தங்களைத் தவிர வேறு வெளிச்சம் ஏதும் படைத்தளத்தில் இல்லை. ஆகவே உடலை ஒரு போர்வையால் போர்த்தி மறைந்து அப்படியும் இப்படியும்
மரங்களடர்ந்த இருளில் நடந்த வண்ணம் இளவழுதி சிறையிருந்த கூடாரத்துக்கு வந்தான். கூடாரத்தருகில் வந்ததும் உள்ளே செல்ல முயன்ற அவனை இரு காவலர் தடுத்து “உள்ளே யாரும் செல்ல அனுமதியில்லை” என்றார்கள்.
அஜ்மல்கான் தனது தலையிலிருந்த முக்காட்டை எடுத்து முகத்தைக் காட்டினான். “இப்பொழுது என்ன சொல்கிறீர்கள்?” என்று வினவினான் அதிகாரத்துடன். அவன் யாரென்பதை அறிந்ததும் ஒரு வினாடி திகைத்த காவலன்,
“எசமான்! எங்களை அச்சுறுத்திப் பயனில்லை. யாரையும் அனுமதிக்க வேண்டாமென்று நவாபின் திட்டமான உத்தரவிருக்கிறது” என்றான்.
“நான் குஸ்ரூகானுக்கு அடுத்தபடி. பதவி வகிப்பவன். இதை நவாப் சொல்லவில்லை இன்று?” என்றான் அஜ்மல்கான் குரலில் உஷ்ணத்தைக் காட்டி,
“யாரையும் என்பதில் தாங்களும் அடங்கியிருக்கிறீர்கள்” என்று இன்னொரு காவலன் சுட்டிக் காட்டினான்.
“முட்டாள்! நான் நவாபின் உத்தரவின் மேல் தான் வந்திருக்கிறேன். விடு வழியை” என்று கூறிக்கொண்டு காவலரை விலக்கித் தள்ளிவிட்டுக் கூடாரத்துக்குள் புகுந்து விட்டான், புதிய உபதளபதி அஜ்மல்கான்.
கூடாரத்துக்குள் ஒரு ஓரத்தில் தரையில் இளவழுதி படுத்து நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான்.
அவனை சில வினாடிகள் உற்றுப் பார்த்துக்கொண்டே நின்றிருந்த அஜ்மல்கான் அவனருகில் சென்று அவனை அசைத்து எழுப்பினான். படுத்தபடியே கண் விழித்த இளவழுதி கேட்டான். “யார் எழுப்புவது இந்த நேரத்தில்?” என்று.
“உஷ் பேசாதே” என்று ரகசியமாகக் கூறிய அஜ்மல்கான், “எழுந்திரு” என்று கையால் அவனை மீண்டும் உலுக்கினான்.
“வேண்டாவெறுப்பாக எழுந்து உட்கார்ந்த இளவழுதி கண்களைக் கசக்கிக் கொண்டு “நீயா!” என்று வியப்புடன் வினவினான்.
“ஆம், நாளை உன்னை வெட்டிவிட உத்தரவாயிருக்கிறது” என்றான் மெதுவாக.
“அது இயற்கைதானே” என்றான் சேரர் படைத்தலைவன்.”
“இயற்கையா?” அஜ்மல்கான் ரகசிய சொற்களிலும் வியப்பு ஒலித்தது.
“ஆம். நான் குஸ்ரூகானைக் கொல்ல முயன்றேன். அதற்கு அவர் தோடாவா செய்து போடுவார். வெட்டத்தான் வெட்டுவார்” என்றான் இளவழுதி அசட்டையாக.
இதைக் கேட்டதும் அஜ்மல்கான் அசந்து போனான். இருப்பினும் அதை வெளிக்குக் காட்டாமல் “உனக்கு வாழ்க்கை வெறுத்துவிட்டதா?” என்று வினவினான்.
“எப்பொழுதும் வீரன் மடியத் தயாராயிருக்க வேண்டும்” என்று பதில் சொன்னான் படைத்தலைவன்.
“தயாராயிருக்க வேண்டுமே தவிர மடியவேண்டிய அவசியமில்லை” என்ற அஜ்மல்கான், தன் மடியிலிருந்து ஒரு சிறு பிச்சுவாவை எடுத்து நீட்டி “இந்தக் கூடாரத்துக்குப் பின்னால் காடு இருக்கிறது, காவல் இல்லை. சீலையைக் கிழித்துத்
தப்பிவிடு” என்றான்.
இளவழுதி அஜ்மல்கான் நீட்டிய பிச்சுவாவைக் கையில் வாங்கவில்லை. “எனக்கு எனது வாள் வேண்டும். அதை விட்டு நான் பிரியமுடியாது. அதைக் கொண்டு வா” என்று அடம் பிடித்தான்.
“அது முடியாது. குஸ்ரூகானிடம் இருக்கிறது உன் வாள்”
“அது இல்லாமல் நான் வெளியேற முடியாது” என்று மேலும் பிடிவாதத்தைக் காட்டினான் இளவழுதி.
அதுவரை நிதானமாயிருந்த அஜ்மல்கானுக்கு ஆத்திரம் அதிகமாயிற்று. “உன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள இஷ்டமில்லாத உன்னைக் கண்டால் எனக்கு வியப்பாயிருக்கிறது” என்றான் அஜ்மல்கான்.
அப்பொழுது கேட்டான் இளவழுதி ‘உன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள உனக்கு இஷ்டமா?’ என்று.
“என் உயிருக்கு இப்பொழுது என்ன ஆபத்து வந்து விட்டது?”
“காலை முதலே ஆபத்திலிருக்கிறது.”
“என்ன!” அஜ்மல்கான் முகத்தில் விவரிக்க இயலாத பயம் விரிந்தது.
இளவழுதியின் கண்கள் அவனைப் பரிதாபத்துடன் பார்த்தன. “குஸ்ரூகானுக்குத் தெரியும்” என்றான் இளவழுதி.
“என்ன தெரியும்?” அச்சம் அதிகமாயிருந்தது அஜ்மல்கான் கேள்வியில்.
“உன் துரோகம்” என்றான் இளவழுதி,

Previous articleCheran Selvi Ch41 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch43 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here