Home Cheran Selvi Cheran Selvi Ch43 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch43 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

66
0
Cheran Selvi Ch43 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch43 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch43 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 43. புதிய தளபதி

Cheran Selvi Ch43 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

இளவழுதியின் சொற்களைக் கேட்டதும் பாம்பு கடித்தவனைப் போல் பெரிதும் பதறிவிட்ட அஜ்மல்கான் சில வினாடிகள் செயலையும் பேச்சையும் இழந்து விட்டாலும், பிறகு மெள்ள சமாளித்துக் கொண்டு “என் துரோகமா?” என்று
வியப்பைக் குரலில் சிரமப்பட்டு வர வழைத்துக் கொண்டு வினவினான் இளவழுதியை நோக்கி.
அவன் உள் கிலியையும் வெளி வியப்பையும் கவனிக்கத் தவறாத இளவழுதி புன்முறுவலை உதடுகளில் படரவிட்டுக் கொண்டு உட்கார்ந்த நிலையில் தன் முழங்கால்களையும் இரு கைகளால் கட்டிக்கொண்டு “ஆம். உன் துரோகம்
குஸ்ரூகானை சேர மன்னனிடம் காட்டிக்கொடுத்தது” என்று விளக்கினான்.
“பொய். முழுப்பொய். நான் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை. நீ தப்புவதற்காக நவாபிடம் நீ தான் இந்தப் புரட்டைச் சொல்லியிருக்கிறாய்” என்று குரலில் உதறலும் சீற்றமுமாகக் கலந்து இரைந்தான் அஜ்மல் கான்.
இளவழுதியின் அனுதாபக் கண்கள் அஜ்மல்கானை ஏறெடுத்து நோக்கின நன்றாக. “இல்லை. நான் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை குஸ்ரூகானிடம், இது சத்தியம்” என்றான் கடைசியாக,
அஜ்மல்கான் அச்சத்தால் பெருமூச்சுவிட்டான். “வேறு யார் சொன்னது?” என்றும் கேட்டான்.
“நீ தான்” என்றான் சேரர் படைத்தலைவன்.
“நானா!”
“ஆம்.”
“மரணத்தை நானாகத் தேட எனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது?”
“மரணத்திலிருந்து தப்ப பொய்களைச் சொன்னாய் அதை குஸ்ரூகான் நம்பவில்லை. இதோ பார் அஜ்மல் கான், குஸ்ரூகான் அறிவு தீட்சண்யமானது. யாரையும் அரை நிமிடத்தில் எடை போடுகிறது” என்ற இளவழுதியும்
அனுதாபப் பெருமூச்சுவிட்டான்.
இளவழுதியின் சொற்களை மட்டுமின்றி அவன் அனுதாபப் பெருமூச்சையும் கவனித்த அஜ்மல்கான் விழிகளில் விரிந்தது பயமா சினமா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு அரைகுறையான பயங்கரப் பார்வை கண்களில்
உதயமாயிற்று. ‘குஸ்ரூகான் மூளை அப்படி என்ன எடைபோட்டுவிட்டது?” என்று வினவிய அஜ்மல்கான் சொற்களில் கடுமை ஒலித்தது. கையிலிருந்த குறுவாளை சற்று புரட்டிப் பார்க்கவும் செய்தான் அவன்.
இளவழுதி அதைப் பார்த்து நகைத்தான். “குஸ்ரூகான் இப்படி யோசித்திருக்கலாம்…” என்று சொன்னான் நகைப்பு ஒலித்த குரலில்.
“எப்படி?” அஜ்மல் கேள்வியில் உஷ்ணம் அதிகப்பட்டிருந்தது.
“சேர மன்னன் நரம்பை அழுத்தி உன் கைகால்களைச் செயலற்றுப் போகும்படி செய்துவிட்டானல்லவா?” என்று கேட்டான் படைத்தலைவன்.
“ஆம்” என்று பதில் சொன்னான் அஜ்மல்கான்.
“அதை குஸ்ரூகானிடம் சொன்னாயா?”
“சொன்னேன்”
“சரி; திரும்ப அவற்றை சேரமன்னன் சரி செய்து விட்டதாகச் சொன்னாயா?”
“இல்லை. சொல்லவில்லை.”
“அதை மறைத்திருக்கிறாய்.”
“மறைக்கவில்லை. சொல்ல வேண்டிய சந்தர்பபம் ஏற்படவில்லை.”
“சந்தர்ப்பம் தேவையில்லை. உன் கைகால்களுக்கு சுவாதீனத்தை ஏன் அளித்தான் ரவிவர்மன் என்ற கேள்வியைக் குஸ்ரூகானே கேட்டுக் கொண்டிருப்பார். பதிலையும் அவரே சொல்லிக் கொண்டிருப்பார். கேள்வி பதிலில் அவர் சூரர்.”
இதைக் கேட்டதும் இடிகேட்ட அரவம்போல் நடுங்கினான் அஜ்மல்கான். அவன் முகம் வெளுத்து வியர்வை அரும்பியது. புத்தியில் யோசனைகள் பல வலம் வருவதை அவன் பார்வை நிரூபித்தது. அவன் குழப்பத்தையும் அச்சத்தையும்
அதிகமாக்க இளவழுதி குஸ்ரூகானை நீ நவாப் என்று அழைக்கிறாயல்லவா?” என்று ஒரு கேள்வியை வீசினான்.
“ஆம் அழைக்கிறேன்” என்று ஒப்புக்கொண்டான் அஜ்மல்கான்.
“எத்தனை நாட்களாக?” இளவழுதியின் இரண்டாவது கேள்வி உடனடியாகப் பிறந்தது.
இரண்டாவது கேள்வி அஜ்மல்கானை அசர வைத்தது “சில நாட்களாக என்றான் தடுமாறிய குரலில்.”
“சில நாட்களாக அப்படி அழைக்க வேண்டிய அவசியம்?” வினவினான் இளவழுதி மீண்டும்.
அஜ்மல்கான் பதிலேதும் சொல்லவில்லை. இளவழுதி தொடர்ந்தான். “காரணத்தை நானே சொல்ல முடியும்.
யோசித்துப் பார். அலாவுதீன் கில்ஜியின் முதல் அடிமை பிரியமானவன் மாலிக்காபூர்…” என்று இழுத்தான் இளவழுதி.
“ஆம்…” வெகு துரிதமாகப் பதில் வந்தது அஜ்மல் கானிடமிருந்து.
“அடுத்தபடி குஸ்ரூகான்.”
“ஆம்.”
“அப்படியிருக்க மாலிக்காபூர் தன்னை நவாப் என்று அழைத்துக் கொள்ளவில்லை. இங்கு அரசு அமைக்கவும் முயலவில்லை. வந்தான், படையெடுத்தான், அழித்தான், கொள்ளையடித்தான், போய்விட்டான். அவ்வளவு தான்…..
“ஆம்.”
“ஆனால் அவனுடன் வந்த குஸ்ரூகான் இங்கு தங்கி விட்டார். முடிந்து போன போரை இங்குள்ளவர்களைக் கொண்டு மீண்டும் துவங்கியிருக்கிறார். கொள்ளையிடவில்லை, கோவில்களை இடிக்கவில்லை.”
“ஆம்.”
“ஏன்?” என்று கேட்டான் இளவழுதி துரிதமாக.
“புரியவில்லை” என்றான் அஜ்மல்கான்.
“புரிகிறது உனக்கு. சொல்ல அஞ்சுகிறாய். குஸ்ரூகான் இங்கு அரசு ஒன்றை நிறுவ முயல்கிறார். அரசு நிறுவ முயலும் யாருக்கும் அந்த நாட்டின் மக்கள் ஆதரவு வேண்டும். அதைச் சம்பாதிப்பது முக்கியம் என்றுதான் அவர் நாச
வேலையில் இறங்கவில்லை. அவர் இங்கு அரசு அமைத்து நவாபாக இஷ்டப்படுகிறார்…” என்று சொன்ன இளவழுதி எழுந்தான் உட்கார்ந்த நிலையிலிருந்து. “அஜ்மல்கான்! குஸ்ரூவின் ராஜ்ய ஆசையை நீ புரிந்து கொண்டு விட்டாய்.
அதனால் அவரை நவாப் என்று அழைக்கத் தொடங்கிவிட்டாய். எந்த சாதாரண அறிவுக்கும் இது புலனாகும். குஸ்ரூகானின் கூரிய அறிவுக்கு இது புலனாகாது என்று நினைக்கிறாயா?” என்று வினவினான். அஜ்மல்கானை நோக்கி
ஒரு அடி எடுத்தும் வைத்தான்.
“நில் அங்கே! நில் அப்படியே!” என்று கூவினான் அஜ்மல்கான். கையிலிருந்த கத்தியையும் நீட்டினான் அச்சுறுத்த.
இளவழுதி அந்தக் கத்தியை வெறுப்புடன் பார்த்தான். பிறகு நகைத்தான் பெரிதாக.
“நகைக்காதே. நீ சொல்வதெல்லாம் பொய். நவாப் என்னிடம் பூரண நம்பிக்கை வைத்திருக்கிறார்” என்ற அஜ்மல்கான் கத்தியுடன் பின்னுக்கு நகர்ந்தான்.
“அஜ்மல்கான்!” இளவழுதியின் குரல் பயங்கரமாக ஒலித்தது கூடாரத்தில்.
இதைக் கேட்ட அஜ்மல்கான் சட்டென்று பின்னடைவதை நிறுத்திக் கொண்டான். “என்ன!” என்று கேட்கும் முறையில் புருவங்களை மட்டும் உயர்த்தினான்.
இளவழுதி கடுமையான ஒலியை அகற்றி சர்வ சாதாரணமான குரலில் வினவினான் “நீ இங்கு நீண்ட நாளாக இருக்கிறாயல்லவா?” என்று.
“ஆம். இருக்கிறேன்” என்று அஜ்மல்கான் பதில் சொன்னான், படைத்தலைவன் கேள்விக்குக்குக் காரணம் புரியாமல்.
“எங்கள் கிராமங்களில் அம்மன் கோவில் திருவிழாக்கள் உண்டு.”
“தெரியும்.”
“அவற்றில் கிடா வெட்டு உண்டு.”
“உண்டு”
“வெட்டப் போகும் கிடாவுக்கு மரியாதை அதிகமாக நடக்கும். அதற்கு மஞ்சள் நீராட்டமுண்டு. மாலை அணிவிப்பார்கள்…”
“ஆமாம்…”
“அந்த ஆட்டுக்கிடா நீதான்,” இதைச் சொன்ன இளவழுதி சிறிது நகைத்து விட்டு மேலும் தொடர்ந்தான்: “உன்னைக் குஸ்ரூகான் உபதளபதியாக்கியது, மரியாதை காட்டும்படி மற்றவர்களுக்கு உத்தரவிட்டது, எல்லாம் உன்னை
ஒழித்துக் கட்டத்தான்’
இதைக் கேட்டதும் நடுங்கிய அஜ்மல்கான் கூடாரச் சீலையை விலக்கிக் கொண்டு வெகு வேகமாக வெளியே சென்றான். வெளியே சென்றவன் தன் கூடாரத்துக்குச் சென்று தனது பெரிய வாளை எடுத்து இடைக் கச்சையில் கட்டிக்
கொண்டான். அத்துடன் வெளியே சென்று தனது புரவி கட்டியிருந்த இடத்தை மிக மெதுவாக அணுகி அதை மெள்ள அவிழ்க்கவும் முற்பட்டான். அந்தச் சமயத்தில் எங்கிருந்தோ தோன்றிய குஸ்ரூகான் “யார்? உபதளபதியா? இந்த
நேரத்தில் எங்கு பயணம்?” என்று சர்வ சாதாரணமாகக் கேட்டான்.
சிலை போல் நின்றான் அஜ்மல்கான். பாதி அவிழ்த்த புரவிக் கயிற்றை அப்படியே தரையில் விட்டான். திரும்பி குஸ்ரூகானை நோக்கி “தளத்தைப்பார்வையிடலாமென்று நினைத்தேன்” என்றான்.. கூடிய வரையில் நடுக்கத்தைக்
காட்டாமல் இருக்கவும் முயன்றான்.
“அஜ்மல்! உன் கடமை உ.ணர்ச்சி என்னைப் பரவசப் படுத்துகிறது. நானும் உடன் வருவதில் உனக்கு ஆட்சேபணை இல்லையே?” என்று வினவினான் குஸ்ரூகான் புன்முறுவல் செய்து.
“நீங்கள் எதற்கு நான் தான் பார்க்கிறேனே” என்றான் அஜ்மல்கான்.
குஸ்ரூகான் புன்முறுவல் அதிகமாக விரிந்தது. “பட்டத்தைக் கைவிட்டு விட்டாய்” என்று புன்முறுவலில் வருத்தத்தின் ஒலியைக் கலந்து பேசினான் குஸ்ரூகான்.
இடிந்து நின்றான் அஜ்மல், “எந்தப் பட்டத்தைக் குறிப்பிடுகிறீர்கள்?” என்று கேட்டான் சலனம் நிரம்பிய குரலில்.
“நவாப் பட்டம். நான் நவாபாயிருக்கத் தகுதியில்லையா?”
“உங்களைவிட யாருக்குத் தகுதியிருக்கிறது?”
“அதுதான் பார்த்தேன். என்னை திரும்பி வந்தது முதல் நவாப் என்று அழைத்த நீ பட்டமில்லாமல் அழைக்கிறாயே என்று விசனப்பட்டேன். நல்ல வேளை நீ என்னைச் சரியாக உணர்ந்து கொண்டிருக்கிறாய்” என்று கூறிப் புன்முறுவல்.
கொண்ட குஸ்ரூகான் “யாரங்கே? எனக்கொரு புரவி கொண்டுவா” என்று ஆணையிட., வந்த புரவி மீது ஏறிக் கொண்டு “உபதளபதி! வாருங்கள் தளத்தைப் பார்வையிடுவோம்” என்று கூறி விட்டுத் தனது புரவியைத் தட்டி
விட்டான். அஜ்மல் கானும் தனது புரவிக் கயிறுகளை மீண்டும் கையிலேந்திக் கொண்டு புரவியில் ஏறி குஸ்ரூகானைத் தொடர்ந்தான்.
படைவீரர் பல இடங்களில் உறங்கிக் கொண்டிருந்தாலும் காவலர் விழிப்பும் எச்சரிக்கையும் கடுமையாக இருந்தது. ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் யாரென்பதை அறிந்த பின்னரே காவலர் அவர்கள் செல்ல வழி விட்டார்கள். இப்படி
நீண்ட நேரம் படைப்பிரிவுகளைப் பார்வையிட்ட பிறகு தளத்தின் ஒரு மூலையில் புரவியை நிறுத்திய குஸ்ரூகான் “படை அமைப்பு எப்படி உப தளபதி?” என்று வினவினான்.
“நல்ல திட்டத்துடன் அமைந்திருக்கிறது நவாப்’ என்றான் அஜ்மல்கான்.
இந்தப் பதிலைக் கேட்ட குஸ்ரூகான் மகிழ்ச்சிச் சாயை முகத்தில் பெரிதும் படரவிட்டுக் கொண்டான். “நவாப்! உம்… நல்ல வார்த்தை! நல்ல வார்த்தை! அஜ்மல்! மனிதன் உள்ளத்தை நீ புரிந்து கொள்ளும் அளவுக்கு யாரும்
புரிந்துகொள்ள முடியாது” என்று பாராட்டவும் செய்தான் மகிழ்ச்சி நிரம்பிய குரலில். அத்துடன் சொன்னான் “ அஜ்மல்! உன்னிடம் ஒரு உதவி வேண்டும்” என்று.
“ஆணையிடுங்கள் நவாப்” என்றான் அஜ்மல்கான் குழப்பத்துடன்.
“செய்வாயா?”
“நவாப் உத்தரவிட்டுச் செய்யாமல் பிழைக்க முடியுமா?”
“அப்படி பயந்துகொண்டு செய்யப்படுவது உதவி அல்ல அஜ்மல்!”
இதைக் கேட்டதும் ‘நவாப் நவாப்” என்று கெஞ்சினான் அஜ்மல்கான்.
“என்ன அஜ்மல்?”
“நீங்கள் பேசுவது விசித்திரமாயிருக்கிறது.”
“விசித்திரங்கள் நடக்கும் காலத்தில் நாம் ஜீவிக்கிறோம்.”
“ நவாப்! புதிர் போடாதீர்கள். கட்டளையிடுங்கள்.”
“கட்டளையா! இடுகிறேன் அஜ்மல். அதைக் கட்டாயம் நீ ஏற்க வேண்டும்.”
“மறுப்பது மதியீனம் நவாப். சொல்லுங்கள். என் தலையைக் கொடுத்து நிறைவேற்றுகிறேன்” என்று கெஞ்சினான் அஜ்மல்.
குஸ்ரூகான் ஒரு வினாடிதான் யோசித்தான். “அஜ்மல்! நான் பதினைந்து நாட்கள் இங்கிருக்கமாட்டேன்” என்று கூறினான் முடிவில்.
“நவாப்!” அச்சம் ஒலித்தது அஜ்மல்கானின் குரலில்.
குஸ்ரூகான் உபதளபதியின் அச்சத்தைக் கவனித்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. “அந்தப் பதினைந்து நாள் எனக்குப் பதில் நீ தளபதியாயிருக்க வேண்டும்” என்றான்.
“நவாப்”
“பதில் பேசாதே.”
“காலையில் தான் உபதளபதியாக்கினீர்கள்…?”
“இரவில் தளபதி. இதிலென்ன தவறு” என்ற குஸ்ரூகான் “தளபதி என்ற முறையில் நீ செய்ய வேண்டிய முதல் வேலை…” வாசகத்தை முடிக்கவில்லை.
“என்ன நவாப்?”
“இளவழுதியை ஒழித்துவிட வேண்டும்.”
“உத்தரவு நவாப்” என்றான் அஜ்மல்.
பிறகு இருவரும் தங்கள் கூடாரங்களை நோக்கிச் சென்றார்கள். மறு நாள் காலை இளவழுதியை அழைத்து வரக் காவலரை ஏவினான் அஜ்மல்கான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் கூடாரத்துக்கு ஓடி வந்த காவலர் “இளவழுதியைக் காணவில்லை” என்று அறிவித்தார்கள்.
“சரி வா நவாபிடம் சொல்வோம்” என்று கிளம்பி னான் அஜ்மல்கான் அவசரமாக.
“அவரையும் காணோம்” என்றான் ஒரு காவலன்.
“என்ன!” அஜ்மல்கான் இரைந்தான்.
இருவரும் மறைந்து விட்டார்கள் தளபதி!” இன்னொருவன் பதில் பணிவுடன் வந்தது.

Previous articleCheran Selvi Ch42 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch44 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here