Home Cheran Selvi Cheran Selvi Ch47 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch47 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

69
0
Cheran Selvi Ch47 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch47 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch47 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 47. தூதும் வசதியும்

Cheran Selvi Ch47 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

உறையூர் என்று இக்காலத்தில் அழைக்கப்பட்டு வரும் வீரதவளப் பட்டணத்தில் வீரபாண்டியனுடன் பட்டத்து ராணியாக முடி சூட்டப்பட்டவளும், வீர பாண்டியன் உயிரைத் தனது குறுவாள் வீச்சினால் பல முறை
காப்பாற்றியிருந்தவளுமான நிலமங்கை அன்று மதுரையின் ஆஸ்தான மண்டபத்தில் சிம்மாசனத்துடன் பதுமை போல் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தாள் இளவழுதி தூது சொல்ல முற்பட்டபோது. ஆனால் அவன் பாண்டியர் உள்
நாட்டுப் பூசலையும் வீரபாண்டியன் அவன் மூத்த சகோதரனான சுந்தரபாண்டியனை அரியணையிலிருந்து விரட்டி விட்டதையும் மறைமுகமாகச் சுட்டிக் காட்ட முற்பட்டபோது மெல்ல தனது பவளவாயைத் திறந்து பேசினாள்.
“சேரமான் தூதரே! பாண்டிய மன்னருக்கு அத்தகைய துர்பாக்கியம் அடிக்கடி ஏற்படுகிறது. அரியாசனத்தில் அமர்ந்து அறவழி ஆட்சியை நடத்த வேண்டிய அண்ணன் சுந்தரபாண்டியன் அரசுக்காகத் தந்தையைக் கொலை செய்தான்
என்பதை யறிந்ததும் அண்ணனையே எதிர்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அறத்தை நிலை நிறுத்த, பாண்டிய மன்னர் போர்க்கொடியை உயர்த்திய போது மாலிக்காபூரை சுந்தர பாண்டியன் உதவிக்கழைத்து மதுரையை அழித்த
பின்பு நாட்டைக் காக்கும் கடமையும் அவருக்கு ஏற்படுகிறது.ஆகவே பாண்டிய மன்னனாக மட்டுமின்றி நாட்டின் விரோதியாகவும் மாறிவிட்ட சொந்த அண்ணனைப் போரிட்டு விரட்டும் அவசியமும் ஏற்படுகிறது. உண்மை தான்
தூதரே! சுந்தர பாண்டியனும் பாண்டியன் தான். ஆனால் நாட்டை எதிரியிடம் காட்டிக் கொடுத்தவர்” என்று நிதானமாக நிலைமையை எடுத்துச் சொன்ன நிலமங்கை “அது கிடக்கட்டும். தாங்கள் இப்பொழுது எதற்காக
வந்திருக்கிறீர்கள்?” என்று ஒரு வினாவையும் தொடுத்தாள்.
கணவனுக்காகத் தர்க்கத்தில் இறங்கிய அந்தக் காரிகையின் தெளிவான சிந்தனையையும் சொற்களையும் உள்ளூரப் பாராட்டிய சேரன் படைத்தலைவன், தன்னை நோக்கி அவள் வீசிய கடைசிக் கேள்வி அம்பை சரிவர சமாளிக்க
முடியாமல் சில வினாடிகள் திணறினான். ஆனால் சமாளித்துக் கொண்டவுடன் பழைய இளவழுதியானான். அவன் இதழ்களில் மீண்டும் இளநகை அரும்பியது. முகத்தில் ஒரு கம்பீரமும் பிறந்தது. அவன் அடுத்துச் சொன்ன பதிலிலும்
அந்தக் கம்பீரம் தெளிவாகத் தெரிந்தது. “அம்மணி! வாதத்திறனால் நிலைமையை வெற்றிகொள்வது வேறு. உண்மையால் வெற்றி கொள்வது வேறு. நான் வந்திருப்பது உள் நாட்டுச் சண்டையைத் தவிர்க்க, மூட்ட அல்ல. நான் மாலிக்கா
பூரின் தூதனுமல்ல, குஸ்ரூகானின் நண்பனுமல்ல. தமிழகத்தில் கில்ஜி போராட்டத்தையும், ஆதிக்கத்தையும் அழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு தமிழ் மன்னன் தூதனாக வந்திருக்கிறேன். நான் பாண்டியன் தான். ஆனால்
தமிழன் என்பதையும் மறக்க முடிய வில்லை” என்றான் இளவழுதி நிதானமும் கம்பீரமும் இணைந்த குரலில்.
நிலமங்கையின் விழிகள் வியப்பால் மலர்ந்தன. தான் தொடுத்த வினாவுக்கும் அதற்குள் அடங்கிய பொருளுக்கும் திட்டமாகப் பதில் கூறிவிட்டானே இளவழுதி என்று நினைத்து அவன் அறிவை வியந்தாள். அதற்குப் பதிலும்
சொன்னாள், “சேரமான் படைத்தலைவரே! முச்சங்கங் களையும் பரம்பரையாகக் காத்த பாண்டிய அரசகுல வழித் தோன்றலைவிட தமிழபிமானமுள்ளவர் யாரும் நாட்டில் இருக்க முடியாது. சமஸ்கிருத சேரனிடம் பணி புரியும் யாருக்கும்
இது புரியாது.” இதைச் சொன்ன நிலமங்கையின் இதழ்களில் இளநகை அரும்பியது இகழ்ச்சிக் குறி கலந்து.
இளவழுதி அவள் மொழிப் பிரச்சினையை தேசநலப் பிரச்சினையுடன் பிணைந்து விட்டதைக் கண்டான். அதனால் அவளைச் சிறிது நேரம் உற்று நோக்கினான். பிறகு சொன்னான். “பாண்டிய அரசியார் உரையாடலில் வல்லவர்
என்பதைப் பற்றி முன்னமே கேட்டிருக்கிறேன். ஆனால் உள்ள நிலையைத் திரித்துச் சொல்ல அவசியமில்லை. சமஸ்கிருத சேரன் என்று சொல்வது சரியல்ல. பாண்டியர் தமிழர் என்பது எத்தனை தொன்மையோ அத்தனை தொன்மை சேரர்
தமிழர் என்பதும். அதுமட்டுமல்ல குஸ்ரூகானிடம் நட்புரிமை கொண்டிருப்பது தமிழ்க் காவலரான பாண்டிய மன்னரே தவிர சமஸ்கிருத சேரனல்ல. சமஸ்கிருதம் படித்ததால் சேரன் தமிழ்ப் பற்றை விட்டானில்லை. தமிழக எதிரிகளுடன்
இணைந்தானில்லை. தமிழகத்தைக் காக்க சமஸ்கிருத சேரன் தான் இப்பொழுது எழுந்திருக்கிறான். இப்போது தேவை எந்த மொழியை யார் பேசுகிறாரென்பதல்ல, எவர் இந்த நாட்டைப் பிறருக்கு அடிமைப் படுத்தாதிருப்பார் என்பது தான்”
என்று.
உரையாடல் இந்த நிலைக்கு வந்ததும் வீரபாண்டியன் குறுக்கிட்டான். “குஸ்ரூகானிடம் செய்த ஒப்பந்தத்தை முறித்துவிட்டேன். இப்பொழுது சேர மன்னர் எதை விரும்புகிறார்?” என்று வினவினான்.
இளவழுதி வீரபாண்டியனை நோக்கினான் சில வினாடிகள். “ஒப்பந்தப்படி தாங்கள் நடந்து கொள்ள வில்லையென்பது மன்னருக்குத் தெரியும்” என்றான்.
“குஸ்ரூகானும் அஜ்மல்கானும் பாண்டிய நாட்டிலிருந்து வெளியேறி விட்டார்கள்” என்று வீரபாண்டியன் சுட்டிக் காட்டினான்.
‘அதுவும் எங்களுக்குத் தெரியும்” என்று இளவழுதி ஒப்புக் கொண்டான்.
“அப்படியானால் இப்பொழுது போருக்கு அவசியம்?” என்று வினவினான் வீரபாண்டியன்.
“பாண்டிய நாட்டிலிருந்து விலகி விட்டார்கள். தமிழகத்திலிருந்து விலகவில்லை. காஞ்சியைத் தளமாகக் கொண்டு போரிடுவார்கள். இங்கு இஸ்லாமிய அரசை நிறுவ குஸ்ரூகான் திட்டமிடுகிறான்” என்றான் இளவழுதி வெறுப்பு
மண்டிய குரலில்.
வீரபாண்டியன் முகத்தில் சிந்தனை படர்ந்தது. “குஸ்ரூகான் மனத்தை தெளிவாக அறிந்திருக்கிறீர்” என்றான் சிறிது குழப்பத்துடன்.
“அறிய வாய்ப்பு இருந்தது” இளவழுதி இள நகை கொண்டான்.
“என்ன வாய்ப்போ?” சேரன் வியப்புடன் வினவினான்.
“குஸ்ரூகானிடம் சிறையிருந்தேன்.”
“சிறையிருந்தீர்களா?”
“ஆம்”
“சிறையிருந்தும் உயிரோடு வந்திருக்கிறீர்?”
“ஆம்”
“யார் விடுவித்தது உங்களை?”
“குஸ்ரூகான்.”
இதைக் கேட்டதும் வீரபாண்டியன் நிலமங்கை இரு வருமே திகைப்புடன் வியப்பும் அடைந்தார்கள்.
அடுத்து நிலமங்கையின் முகத்தில் இகழ்ச்சி சாயை பெரிதும் படர்ந்தது. ‘விடுதலை பெற எதை விற்றீர்கள்?” என்று வினவினாள் நிலமங்கை இகழ்ச்சி குரலிலும் ஒலிக்க.
இளவழுதியின் முகத்தில் ஒரு வினாடி சினம் தெரிந்து மறைந்தது. “விற்பனைக்கு என்னிடம் ஏது மில்லையே அரசி” என்றான் தன்னைக் கண்ணி மைக்கும் நேரத்தில் சமாளித்துக் கொண்டு,
நிலமங்கை விடவில்லை. “வாளிருக்கிறது, அதை சேரமானுக்கு விற்றீர்” என்றாள் பாண்டிய ராணி தனது தாக்குதலைத் தொடர்ந்து.
இந்தக் கேள்விக்குப் பிறகு இளவழுதி பெரிதும் நிதானமடைந்துவிட்டான். ஆகவே இளமுறுவல் ஒன்று அவன் இதழ்களில் தவழ்ந்தது. “பாண்டியனான நான் என் வாளை சேரனுக்கு விற்றேனென்று சொல்கிறீர்கள்?” என்றான் சர்வ
சாதாரணமாக.
“ஆம்” நிலமங்கை பதிலிறுத்தாள் குழப்பத்துடன்”
“நான் விற்றது கடுகளவு நீங்கள் விற்றது மலையளவு” என்றான் இளவழுதி.
“நாங்கள் விற்றதா?” என்று வினவினாள் நிலமங்கை.
“ஆம் அரசி, சேரன் மகளான நீங்கள் பாண்டியனுக்கு உங்கள் உடல், பொருள், ஆவி மூன்றையுமே விற்றுவிடவில்லையா? இது சேர நாட்டுக்குச் செய்த பெரும் துரோகமல்லவா?”
நிலமங்கை நிலத்தை நோக்கினாள். பிறகு வீர பாண்டியனைப் பக்கவாட்டில் நோக்கினாள். அந்த நிலையில் பதில் சொன்னாள் இளவழுதிக்கு. “சேரர் படைத்தலைவரே! நான் செய்தது விற்பனையல்ல; ஒரு மகா வீரருக்கு செய்த இதய
அர்ப்பணம்” என்றாள் பாண்டிய ராணி.
“என்னுடையதும் அத்தகைய அர்ப்பணந்தான். தமிழகத்தைப் பாண்டிய சகோதரர் பரஸ்பர விரோதத்தால் எதிரியிடம் அர்ப்பணித்ததால் எதிரியிடமிருந்து அதை மீட்க தமிழ் மன்னர் ஒருவர் முன்வந்ததால் அந்த மகாவீரருக்கு என் வாளை
அர்ப்பணித்தேன். இதுவும் இதயபூர்வமான அர்ப்பணந்தான் அரசி” என்று பதில் கூறினான் இளவழுதி.
திரும்பத் திரும்ப அவ்விருவர் விவாதமும் தன்னைச் சுற்றி சுழல்வதைக் கண்ட வீரபாண்டியன் அதற்கு ஒரு மற்றுப்புள்ளி வைக்கத் தீர்மானித்தான். ஆகவே நிலமங்கையைப் பேசாதிருக்கும்படி ஜாடை காட்டி ‘சேரர் படைத்தலைவரே!
உமது தூதைச் சொல்லும் என்றான்.
இளவழுதி நன்றாக நிமிர்ந்து நின்றான். “பாண்டிய மன்னரே! சேர மன்னன் குஸ்ரூகானிடம் போரிட்டுத் தமிழகத்தை எதிரிகளிடமிருந்து காக்க முயல்வதால் நீங்கள் போர்க்கோலம் துறந்து அவரிடம் சமாதானத்தை நாடும்படி
கூறுகிறார். போரைக் கைவிடுவது அல்லது போரிடுவது இரண்டில் எது என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டுமென்று தமிழக மாமன்னர் கருதுகிறார்” என்று தூது சொன்னான் இளவழுதி.
சேர மன்னனை இளவழுதி மாமன்னன் என்று குறிப்பிட்டதை வீரபாண்டியன் கவனிக்கத் தவறவில்லை. ஆகவே வினவினான் ‘சேரமன்னர் எப்பொழுது மாமன்னரானார்? வேறு எந்த நாடு அவர் குடைக்கீழ் இருக்கிறது?” என்று.
“என்று குஸ்ரூகானை எதிர்க்கத் தீர்மானித்தாரோ அன்றே மாமன்னர் ஆனார் சேர பூபதி. மாலிக்காபூரிடமும் குஸ்ரூகானிடமும் அடிபணிந்த அரசர் அவரிடமும் அடிபணிந்தது போலத்தான்” என்றான் இளவழுதி.
வீரபாண்டியன் அரியாசனத்தில் நிமிர்ந்து உட்கார்ந்தான். “சரணாகதி அல்லது போர், இதுதானே உமது தூதின் கருத்து” என்ற வீரபாண்டியன் குரல் கடுமையாக சபாமண்டபத்தில் ஒலித்தது.
“ஆம்” என்றான் இளவழுதி வறண்ட குரலில்.
“போர் என் முடிவு. இதைச் சொல்லும் சேரனிடம். நாளைக் காலை உங்களைச் சந்திக்கிறேன்” என்ற வீரபாண்டியன் எழுந்தான் அரியாசனத்திலிருந்து. நிலமங்கையும் உடன் எழுந்தாள்.
இளவழுதி பாண்டிய மன்னனுக்கு தலை தாழ்த்தினான். “நானிருப்பது வடக்கு வாசல்” என்று தெரிவிக்கவும் செய்தான்.
வீரபாண்டியன் முகத்தில் சினம் மறைந்து கம்பீரம் குடிகொண்டது. “உம்மிடம் யானைகளில்லை என் கதவுகளை உடைக்க” என்று கூறினான் பாண்டியன்.
“புலவரிடமிருந்து கடன் வாங்கிக் கொள்கிறேன்” என்றான் இளவழுதி.
“வேண்டாம்; கடன் வாங்க வேண்டாம். நானே வசதி செய்து தருகிறேன்” என்ற வீரபாண்டியன் இளவழுதி போகலாமென்பதற்கு அறிகுறியாகக் கையை நீட்டினான் வாயிலை நோக்கி.
மறுநாள் வீரபாண்டியன் சொன்னபடி செய்தான். கதிரவன் கிளம்பிய நேரத்தில் வடக்கு வாசலைத் திறந்து கொண்டு தனது புரவிப்படையுடன் வெகு வேகமாகப் பாய்ந்துவிட்டான் இளவழுதியின் படைமீது.

Previous articleCheran Selvi Ch46 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch48 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here