Home Cheran Selvi Cheran Selvi Ch5 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch5 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

87
0
Cheran Selvi Ch5 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch5 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch5 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 5. சிவந்த முகம்! சீற்றம் மிகுந்த சொற்கள்!

Cheran Selvi Ch5 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

கடற்கரையில் தான் கண்ட பெண் தான் கொல்லத்து இளவரசி இளமதியென்பதையும், கதவருகில் அவளுக்கு ஆணையிட்டு நின்றவர்தான் கொல்லத்து மகாராஜா வென்பதையும் அறிந்ததால் வியப்பின் எல்லையை எட்டி விட்ட
இளவழுதி, மகாராஜாவை ஏற இறங்கப் பார்த்தான்.
சங்கிரமதீரனென்று தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டவனும், போரில் மட்டுமின்றி ராஜதந்திரத்திலும் இணையற்றவனென்று பெயர் பெற்றவனும், சமஸ் கிருதத்தில் ‘பிரதியும்னாப்யுதம்’ என்ற நாடகத்தை இயற்றியதால் பெரும்
பண்டிதனென்றும் மகாகவியென்றும் புலவர்களால் போற்றப் பெற்றவனுமான மகாராஜா ரவிவர்மன் குலசேகரன் படாடோபமான உடையேதும் அணியாமல் நின்றிருந்ததைக் கண்ட இளவழுதி, எளிமையும் அறிவும் இணைந்தோடும்
இயல்பைக் கண்டு பிரமித்தான். மகாராஜா ஆறடிக்குக் குறையாத உயரத்துட னும் சதைப்பற்று லேசாகவே உள்ள ஒல்லியான சரீரத்துடனும் இருந்தார். அகன்ற மார்பில் சங்கிலியிலிருந்து தொங்கியது ஒரு ஒற்றைப் பச்சைக் கல்லானாலும்
அது விளக்கொளியில் மின்னிய விதத்திலிருந்து அதைக் கொண்டு ஒரு அரசை விலைக்கு வாங்கலாமென்பதை இளவழுதி புரிந்துகொண்டான். தன் கையை இரும்பாகப் பிடித்த கையும் அதன் ஜோடியும் தொங்கிய விதத்திலிருந்து
மகாராஜாவின்கைகள் எந்த வினாடியிலும் உரப்பட்டு வாளை வெகு லாவகமாகச் சுழற்ற வல்லவையென்பதையும் அந்தப் பாண்டிய வாலிபன் தெரிந்து கொண் டான். மகாராஜாவின் அழகிய விசால முகமும், இள நகை உதிர்த்த செவ்விய
வலிய உதடுகளையும் கண்ட இளவழுதி. இளமதி மகாராஜாவை அப்படியே உரித்து வைத்திருக்கிறாள் என்பதை அறிந்துகொண்டான். இப்படி அவரை அளவெடுத்த பின்பே தான் சேரநாட்டு மன்னன் முன்பு நிற்பதை உணர்ந்து கொண்ட
இளவழுதி, மகாராஜாவை நோக்கிச் சிரம் தாழ்த்திக் கரங்களையும் குவித்தான். அப்படிக் கரங்களை குவித்த போது இளமதி பிடித்த கை அப்பொழுதும் வலித்ததால் சிறிது புருவங்களையும் சுளித்தான்.
அவன் நிலையைக் கண்ட மகாராஜா அன்புடன் சொன்னார் : “இளமதி அந்த வலியை ஒரு நொடியில் குணப்படுத்தி விடுவாள்” என்று.
மகாராஜாவின் சொற்கள் இளவழுதியின் வீரமனத்துக்கு ஒவ்வா திருக்கவே, “இளவரசியாருக்கு அந்தத் தொல்லையை அளிக்க நான் இஷ்டப்படவில்லை. அதை நானே சரிபடுத்திக்கொள்கிறேன்” என்று கூறினான் உணர்ச்சி ஏதுமற்ற
குரலில்.
ரவிவர்மன் குலசேகரனின் வலிய உதடுகளில் புன்முறுவல் படர்ந்தது. பெண்ணிடம் சிக்குண்டதை அவமானமாக நினைக்காதே இளவழுதி. அவள் சாதாரணப் பெண்ணல்ல” என்றார் மகாராஜா புன்முறுவலைத் தொடர்ந்து.
இளவழுதி இளமதியைத் திரும்பி ஒருகணம் பார்த்தான். பிறகு மகாராஜாவை நோக்கி, “ஆம் ஆம். இளவரசியார் சாதாரணப் பெண்ணல்ல” என்று கூறினான்,
‘நீ அவளது அழகைப் பற்றிச் சொல்கிறாய். அதைப் பற்றிச் சொல்லவில்லை நான்” என்றார் மகாராஜா மெள்ள நகைத்து.
“வேறெதைப் பற்றிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டான் இளவழுதி.
“அவள் திறமையைப் பற்றிச் சொல்கிறேன். அவள் ஒரு ராட்சஸி” என்று மகாராஜா சர்வ சாதாரணமாகச் சொன்ன தன்றி, “உன் கையைப் பற்றி அவள் திருகியதிலிருந்தே நீ அதைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும்” என்றும் தெளிவு
படுத்தினார்.
இந்தச் சமயத்தில் இடைபுகுந்த இளமதி “அப்பா!” என்று ஒரு சொல்லை உதிர்த்தாள் சீற்றத்துடன்.
மகாராஜா அதற்கு மசியவில்லை. “இளவழுதி இவளைக் கண்டால் எனக்கே பயம். இந்த நகரத்தில் சீனச்சேரி ஒன்றிருக்கிறது. அங்குதான் இவள் எப்பொழுதும் சுற்றுகிறாள். அவர்களிடமிருந்து நரம்புகளை அடிக்கும் வித்தையைக்
கற்றிருக்கிறாள். ஆகையால் இவளை நெருங்க எந்த ஆண் மகனும் பயப்படுகிறான். இவள் தனியாகப் போவதைக் கவனித்த இரு அராபியர் தொந்தரவு செய்ய முயன்று மூன்று நாட்கள் கையசையாமல் முடமாகப் படுத்துவிட்டார்கள்.
பிறகு இவளையே அனுப்பி அவர்கள் நரம்புகளைத் திருப்பச் செய்தேன் நான்” என்று விவரித்தார் கொல்லத்து அரசன் தமது மற்போர் திறமையை விளக்க.
மகாராஜா மகளின் திறமையை அளவுக்கு அதிகமாக விவரிப்பதாகத் தோன்றியது இளவழுதிக்கு. விளக்கொளியில் அப்பொழுதும் அபூர்வ அழகுடன் நின்றிருந்த இளமதியின் பால்வடியும் முகத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தான்
பாண்டிய வீரன். “இத்தகைய முகமுள்ளவள், இந்த மின்னல் கொடி, எப்படி அத்தனை கொடுமைகளை விளைவிக்க முடியும்?” என்று தன்னுள் வினவிக்கொண்டான் அந்த வாலிப வீரன்.
இவன் மனத்திலோடியது மகாராஜாவுக்கும் புரிந்திருக்க வேண்டும். ஆகவே வினவினார், “வீரனே! புலவர் யாரிடம் ஓலை கொடுக்கும்படி கூறினார்?” என்று.
“ இளவரசியாரிடம்” என்றான் இளவழுதி. எதற்காக மகாராஜா இதைக் கேட்கிறார் என்பதை அறியாமல்.
“மகாராஜா நானிருக்கிறேன், என்னிடம் ஓலை கொடுக்கச் சொல்லவில்லையா?”
“இல்லை!”
“ஏன்?”
“புரியவில்லை”
இதைக் கேட்ட மகாராஜா நகைத்தார். “காரணம் என்னைவிட இளவரசியை நம்புகிறார் புலவர். அவர் மட்டுமென்ன, என் அவைக்களப் புலவர்களும் இவளைத் தான் அதிகமாக நம்புகிறார்கள். என் பெண்கள் மகத்துவம் மகத்தானது”
என்றும் சொன்னார் மகாராஜா நகைப்பின் ஊடே.
இதற்கு இளவழுதி பதிலேதும் சொல்லவில்லை. “ என் பெண்களை மகாராஷ்டிரப் பெண்களைப் போல் பழக்கியிருக்கிறேன். அவர்களுக்குக் க குதிரையேற்றம், யானையேற்றம், வாட்போர் எல்லாம் தெரியும். எந்த நெருக்கடியையும்
சமாளிக்க வல்லவர்கள்” என்று மகாராஜாவே தமது பெண்களின் பெருமையை விவரிக்கலானார்.
இந்தப் பெண் பெருமைப் புராணத்துக்கு முடிவு கட்டத் தீர்மானித்த இளவழுதி, “அதை முன்னிட்டுத் தான் வீரபாண்டிய மன்னரைக் காக்க நிலமங்கையை அனுப்பினீர்களா?” என்று விசாரித்தான் இளவழுதி.
“ஆம். ஆனால் அவள் என் மகிவுகளுக்குப் பிறந்த வளல்ல. இருப்பினும் என் பெண், அவளில்லா விட்டால் சாயலில் சுந்தர பாண்டியன் வீரபாண்டியனைக் கொன்றிருப்பான். அவனை நிலமங்கை காப்பாற்றினாள். வீரதவளப்
பட்டணத்தில் அரசு கட்டிலிலும் ஏறினான் வீரபாண்டியன். இருந்துமென்ன, பாண்டிய நாட்டை அவன் காப்பாற்றவில்லை. அலாவுதீன் கில்ஜியின் நபும்ஸக படைத்தலைவன் மாலிக்காபூர் வந்ததும் மதுரையைக் காலி செய்து
மறைந்துவிட்டான்’ என்ற மகாராஜா ரவிவர்மன் குலசேகரன், “வரலாறு நான் நினைத்தபடி வளையவில்லை. மாலிக்காபூர் பாண்டிய நாட்டைச் சூறையாடினான். மதுரைக் கோவில்களையும் ராமேசுவரத்தையும் கொள்ளை
கொண்டான். ஸ்ரீரங்கநாதரையும் தூக்கிப் போய்விட்டான். தில்லையம்பலத்தின் திருக்கோயிலும் கொள்ளையிடப்பட்டது. *ஐந்நூற்றிப் பன்னிரண்டு யானைகள், ஐயாயிரம் குதிரைகள், ஐந்நூறு மடங்கு எடையுள்ள வைர
வைடூரியங்கள் கொண்ட தங்க நகைகள் இவற்றுடன் மாலிக்காபூர் டெல்லி திரும்பியிருக்கிறான். தமிழ் நாட்டில் இப் பொழுது பொன்னில்லை, மணியில்லை, எல்லாவற்றையும்விட மதமுமில்லை” என்று துயரத்துடன் கூறிப்
பெருமூச்சு விட்ட ரவிவர்மன் குலசேகரன் “இந்த நிலையை நாம் சீர்திருத்த வேண்டும்” என்றும் கடுமையுடன் சொன்னார்,
அதைச் சொன்ன மகாராஜாவின் கண்கள் கடுமைப்பட்டுவிட்டதை, இளவழுதி கவனித்தான். “இதில் நான் எப்படிச் சம்பந்தப்படுகிறேன்?” என்று வினவினான் இளவழுதி.
மகாராஜா அவனைக் கூர்ந்து நோக்கினார் ஒரு வினாடி. பிறகு சொன்னார் “உன் கேள்விக்குப் பதில் நீ கொண்டு வந்திருக்கும் ஓலையில் இருக்கும் என்று நம்புகிறேன். ஓலையை இளமதியிடம் கொடு, அவள் முடி வெடுப்பாள்
உன்னைப் பற்றி” என்று. அத்துடன் இளமதியையும் நோக்கி இளமதி விருந்தோம்பல் தமிழகத்தின் சிறந்த பண்பாடுகளில் ஒன்று. இந்த வீரனுக்கு நீயே போஜனம் செய்துவை” என்று கூறிவிட்டுத் திரும்பிச் செல்லக் காலடி எடுத்து
வைத்தார்.
“அப்பா!” என்ற இளமதியின் குரல் மகாராஜாவைத் தடுக்கவே அவர் தலையை மட்டும் திருப்பி, “என்ன இளமதி!” என்று வினவினார்,
“பணிப்பெண் யாரையாவது அனுப்புகிறேன்” என்றாள் இளமதி கெஞ்சும் குரலில்.
“எதற்கு?” என்றார் மகாராஜா.
“இவருக்கு உணவு பரிமாற. இவர் தேவைகளைக் கவனிக்க!’ என்றாள் இளமதி.
“வேண்டாம். நீயே கவனித்துக்கொள்” என்று கூறிய மகாராஜா தாழ்வரையில் நடந்து படிகளில் விடு விடு என்று இறங்கிச் சென்றுவிட்டார்.
தனிமையில் விடப்பட்ட இருவரும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டு சில விநாடிகள் மௌனமாக நின்றனர். இளமதியின் கண்களும் இளவழுதியின் கண்களும் இணைந்தன ஒரு வினாடி. பிறகு இளமதி தலை கவிழ்ந்தாள்.
“உணவுத்தட்டு அதோ இருக்கிறது” என்று எட்ட இருந்த ஒரு சிறு மஞ்சத்தைச் சுட்டிக் காட்டினாள்.
இளவழுதியின் உணர்ச்சிகள் அவன் வசம் இல்லை. மகாராஜாவின் போக்கும் உத்தரவுகளும் மிக விசித்தரமாயிருந்ததை நினைத்துப் பார்த்தான். பெண்ணைத் தன்னுடன் தனியாக விட்டதன்றி இளவரசியை தனக்கு உணவு பரிமாற
உத்தரவிட்டதையும் எண்ணி,’இப்படியும் ஒரு மகாராஜா இருப்பாரா?’ என்று வியந்தான். பிறகு எதும் பேசாமல் தனது வலது கை மணிக்கட்டைத் திருப்ப முயன்று முடியாததால் சங்கடப்பட்டான்.
அந்தச் சங்கடத்தை ஒரே வினாடியில் நீர்த்தாள் இளமதி. அவனை மெள்ள அணுகி அவன் மணிக்கட்டைப் பிடித்து ஏதோ நரம்புகளைச் சற்று அழுத்தி விட்டு விலகி நின்று, “இனி கை சரியாயிருக்கும்” என்றாள்.
அப்பொழுதும் அவள் தலை நிமிரவில்லை. இளவழுதி தான் படுக்க வேண்டிய பெரிய மஞ்சத்தில் அமர்ந்து உணவு தட்டிருந்த மஞ்சத்தைத் தன்னை நோக்கி இழுத்துக் கொண்டான். அப்பொழுது எட்ட நிற்க வில்லை இளமதி.
மஞ்சத்தருகே வந்து மேல் தட்டின் மூடியை எடுத்து சாளரத் தண்டை வைத்து, ஒரு மூலையி லிருந்த அலங்கார கூஜாவிலிருந்த நீரை ஒரு குவளையில் ஊற்றிக் கொடுத்தாள்.
“நானே உணவருந்துகிறேன். இளவரசியார் போகலாம்” என்றான் பாண்டிய நாட்டு வீரன்.
“மகாராஜாவின் உத்தரவு வேறுவிதமாயிருக்கிறது” என்று சொல்லிப் புன்முறுவல் கொண்ட இளமதி அவன் உணவருந்துவதைப் பார்த்துக்கொண்டே நின்றாள்.
அதிகப் பசியிருந்தாலும் சங்கோஜத்தாலும் எதிரில் பணிப் பெண்ணைப் போல் இளவரசி நின்றிருந்ததாலும் சிறிதளவே சாப்பிட்டு முடித்தான் இளவழுதி. அத்தட்டை எடுத்து அறை மூலையில் அவனே கொண்டுபோய் வைக்கவும்
செய்தான். “பாலைப் பிறகு அருந்துகிறேன். நீங்கள் செல்லலாம்” என்றும் கூறினான் இளவரசியை நோக்கி..
இளவரசி நகரவில்லை. மௌனமாக நின்று கொண்டிருந்தாள்.
“ஏன் நிற்கிறீர்கள்?’ என்று கேட்டான் சங்கடத்துடன் இளவழுதி.
“ஓலையை நீங்கள் கொடுக்கவில்லையே” என்றாள் இளமதி.
கச்சையில் சொருகியிருந்த ஓலையை எடுத்துக் கொடுத்தான் இளவழுதி.
ஓலையைப் புலவர் ஒரு சிறு மூங்கில் குழலில் அடைத்து நூலால் கட்டி அரக்கு முத்திரையும் வைத்திருந்தார். இளமதி அந்த மூங்கில் குழாயை எடுத்துக்கொண்டு அறையின் மூலையிலிருந்த பதுமை விளக்கிட.ம் சென்று அதன்
சுடரில் அரக்கை உருக்கினாள். பிறகு குழாயைத் திறந்து ஓலையை எடுத்துப் படித்தாள்.
படித்த அவள் முகம் குபீரெனச் சிவந்தது. அந்தச் சிவப்புடன் அவனை நோக்கித் திரும்பிய கண்களில் சீற்றம் மிதமிஞ்சித் துளிர்த்தது. “இதை நீங்கள் ஏற்கனவே படித்தீர்களா?’ என்று. இளவரசி கேட்ட கேள்வியில் உஷ்ண ஜ்வாலை
பெரிதும் வீசியது.
இளவரசியின் திடீர் மாற்றத்திலிருந்து அந்த ஓலையில் ஏதோ மர்மம் இருக்க வேண்டுமென்பதை மட்டும் புரிந்து கொண்ட இளவழுதி, “பிறர் ஓலையைப் படிக்கும் பழக்கம் எனக்கில்லை” என்று மட்டும் கூறினான். –
இளமதி அடுத்த வினாடி அந்த அறையில் நிற்க வில்லை. வேகத்துடன் நடந்தாள் வெளியே.

Previous articleCheran Selvi Ch4 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch6 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here