Home Cheran Selvi Cheran Selvi Ch7 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch7 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

114
0
Cheran Selvi Ch7 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch7 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch7 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 7. ஸலீம்

Cheran Selvi Ch7 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

நள்ளிரவில் நந்தவனத்துக்குள் அந்த மனிதன் புகுந்து வந்தது, தான் குறுவாளை உருவிய சமயத்திலும் அச்சப்படாமல் அலட்சியமாக நின்றது, அவனுடன் வரும் படி அழைத்தது எல்லாமே விசித்திரமாயிருந்ததால் இளவழுதி தனது
குறுவாளை மீண்டும் கச்சையில் சொருகிக் கொண்டு, ‘ நீ யார்? இங்கு எப்படி வந்தாய்?” என்று வினவினான்.
வந்த மனிதன் லேசாக நகைத்தான். அந்த நகைப்பிலும் பெரும் சூழ்ச்சியும் தந்திரமும் இருந்ததாகத் தோன்றியது இளவழுதிக்கு. அந்த மனிதன் சொன்ன மறுமொழி இளவழுதியின் ஊகத்திற்குச் சான்றுகூட்டியது. “சரியான
கேள்விகளை நீ கேட்கவில்லை” என்று அந்த மனிதன் பதில் சொன்னான் நகைப்பின் ஊடே.
இளவழுதியும் தனது சாமார்த்தியத்தைக் காட்டினான். “சரியான கேள்வி எப்படியிருக்க வேண்டும்?” என்று வினவினான் குரலில் இகழ்ச்சியைக் காட்டி.
“என்னோடு வா என்று சொன்னேன்” என்று சுட்டிக் காட்டினான் அந்த மனிதன்.
“ஆம்” இளவழுதியின் பதிலில் வறட்சி இருந்தது.
“எதற்காக வரவேண்டும், எங்கு வரவேண்டும் என்று நீ கேட்டிருக்க வேண்டும்”,
“அப்படியா!”
“ஆம். அடுத்து என்னுடன் வந்தால் உனக்குப் பயன் உண்டு என்று சொன்னேன்,”
“சரி”
‘என்ன பயன் என்று கேட்டிருக்க வேண்டும்”
இளவழுதி அந்த மனிதனை உற்று நோக்கினான். “நீ சொன்ன கேள்விகளைக் கேட்டிருக்க வேண்டுமா?” என்று வினவினான் சர்வ சாதாரணமாக.
“ஆம்” என்றான் அந்த மனிதன்,
“நீ யாரென்று தெரியாமல் உன்னுடன் வந்திருக்க வேண்டும்!” என்று இன்னொரு கேள்வியையும் தொடுத்த இளவழுதி, “என்னை முட்டாளென்று நினைக்கிறாயா?” என்று வினவினான்.
பதிலுக்கு அந்த மனிதன் மெள்ள நகைத்தான் மீண்டும். “முட்டாள்களை நான் என்னுடன் சேர்ப்ப தில்லை” என்றும் சொன்னான் நகைப்புக்கிடையே.
“முன்பின் தெரியாத என்னுடன் இங்கு உரையாடுவது புத்திசாலித்தனமென்று நினைக்கிறாயா?”
“அதில் தவறில்லை. இரண்டு திருடர்கள் சந்திக்கும் போது ஒருவனை இன்னொருவன் நம்புவதும் உரையாடு வதும் தவறாகாது.”
“நான் திருடனா?”
“இது அரண்மனை நந்தவனம். இங்கு யாரும் வர அனுமதி கிடையாது. வருபவர்களை வெட்டிப் போட மன்னன் உத்தரவு திட்டமாயிருக்கிறது. அப்படியிருக்க நீ இங்கு வந்திருக்கிறாயென்றால் திருட்டுத்தனமாகத்தான் வந்திருக்க
வேண்டும். தவிர அரசகுமாரியிடம் நீண்ட நேரம் பேசியிருக்கிறாய். அதுவும் பகிரங்கமான விஷயமாயிருக்க முடியாது” என்று சொன்ன அந்த மனிதன், “நானும் இங்கு வந்தது யார் உத்தரவையும் கேட்டு அல்ல. திருட்டுத்தனமாகத்தான்
வந்திருக்கிறேன். இரு கள்ளர்கள் சந்திக்க இதைவிடத் தகுந்த இடம் கொல்லத்தில் கிடையாது. இந்த ஒரு இடத்தில் யாரும் வரமாட்டார்கள். வந்து நம்மைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள்” என்றும் கூறினான்.
“அப்படியானால் நீ சொல்ல வேண்டியதை இங்கேயே சொல்லலாமே” என்றான் இளவழுதி எந்த உணர்ச்சியையும் குரலில் காட்டாமல்.
“அது அபாயம். எந்த வினாடியிலும் இங்கு காவலர் சோதனைக்கு வரலாம். நான் இருக்குமிடந் தான் நமது திட்டத்துக்கு நல்லது” என்றான் அவன்.
“இப்பொழுது அகாலம். வரமுடியாது. வேண்டு மானால் நாளைக்கு சந்திக்கிறேன்” என்றான் இளவழுதி இவனை சற்று கவனிக்கத்தான் வேண்டும்’ என்ற நினைப்பில்.
“உன்னிஷ்டம்” என்று கூறிய அந்த மனிதன் “நாளை மாலை பெரிய கடைத்தெருவுக்கு வா. கடைத்தெருவில் நட்ட நடுவில் அராபியர் கடை இருக்கிறது” என்று இடத்தைச் சொன்னான்.
“அங்கு வந்து யாரைக் கேட்பது?” என்று வினவினான் இளவழுதி.
அந்த மனிதன் புன்முறுவல் கொண்டான். “நீ மிகுந்த அறிவாளி. மறைமுகமாக என் பெயரைக் கேட்கிறாய். சரி சொல்லிவிடுகிறேன். ஸலீம் என்று கேள். உன்னை உடனடியாக என்னிடம் அனுப்புவார்கள்” என்று கூறிவிட்டு,”எந்தக்
காரணத்தைக் கொண்டும் வராமல் இருந்து விடாதே. வந்தபின் புரிந்து கொள்வாய் உனக்கு என்னால் எத்தனை லாபமிருக்கிறது என்பதை” என்று கூறிவிட்டுச் சரசரவென்று நந்தவனத்தின் மரக்கூட்டத்தின் ஒரு பகுதியில் சென்று
மறைந்து விட்டான்.
அவனைத் தொடர்ந்து செல்லலாமா என்று ஒரு வினாடி யோசித்த இளவழுதி அது சரியல்ல என்ற முடிவுக்கு வந்தான். பலமான காவலுள்ள கொல்லத்து மன்னன் அரண்மனைக்குள் இஷ்டப்படி இரவில் வரக் கூடியவன் சாதாரண
மனிதனாயிருக்க முடியாதென்றும், அரசருக்கும் அறியாத ஏதோ பெருத்த சதி அரண்மனைக்குள்ளேயே நடக்கிறதென்றும் புரிந்துகொண்டதால் பாண்டிய நாட்டு வாலிபன் அந்த மனிதனைத் தடுக்காமலும் தொடர்ந்து செல்லாமலும்
வந்த வழியிலேயே திரும்பித் தனது அறைக்கு வந்து அங்கியைக் கழற்றி விட்டு, பஞ்சணையில் படுத்துக்கொண்டான். படுத்த வண்ணமே பலத்த யோசனையிலிருந்த அவன் மனமும் அதனால் விழித்துக்கொண்டிருந்த கண்களும்
இயற்கை தந்த அசதியால் அவனையும் மீறிக் மூடிக்கொண்டன. நித்திரை எனும் திரைக்குள் மெள்ள நுழைந்தான் அந்த வாலிபன்.
அப்படி நேரம் கழித்து, மூன்றாவது ஜாமத்தில் படுத்தும் வழக்கம்போல் உஷத் காலத்தில் விழித்துக் கொண்டான். விழித்ததும் படுக்கையில் கிடந்தபடியே வெளியிலிருந்து வந்த பறவைகளின் கில கிலா சப்தங்களையும்
அரண்மனையின் ஏதோ ஒரு பகுதியிலிருந்த அரசரை எழுப்ப மென்மையாக வாசிக்கப்பட்ட வீணையின் பூபாள ராக த்வனியையும் காதில் வாங்கிக் கொண்ட இளவழுதி இன்பப் பெருமூச்சு விட்டான். ஸ்வரமான சங்கீதத்தில் ஏதோ ஒரு
அப சப்தம் கலந்து ராகத்தையே வீணாக்கி விட்டது போல் முதல் நாளிரவில் கடைசியில் அந்த மனிதனைச் சந்திக்க நேரிட்டதைக் குறித்து இன்பம் நிறைந்த உஷத் காலத்திலும் சற்றே வருந்தினான் இளவழுதி. அந்த அபஸ்வரத்தைக் கலைக்க
மிக இன்பமாக அரண்மனையின் ஏதோ ஓர் இடத்திலிருந்து அப்பொழுது வாசிக்கப்பட்ட வீணையால் கூட முடியாததை நினைத்து, “உலக ரீதியே இப்படித் தான். எத்தனை பாலையும் வீணாக அடிக்க ஒரு துளி விஷம் போதும்” என்று
தனக்குள் சொல்லிக் கொண்டான்.
அந்த நினைப்புடன் பஞ்சணையிலிருந்து மெள்ள எழுந்து முதல் நாள் படுக்குமுன்பு கழற்றிய அங்கியைக் காரணமில்லாமல் பார்த்தான். பிறகு சாளரத்தை நோக்கி நடந்து வெளியே நந்தவனத்தை நோக்கிக் கண்களை ஓட்டினான்.
நந்தவனத்திலிருந்த மலர்களின் நறுமணத்தை இன்பமான குளிர்ந்த காலைக் காற்று ஏந்தி வந்தது. அதை நன்றாக இழுத்து சுவாசித்த இளவழுதி, அந்த மாளிகையைச் சுற்றி அப்பொழுதும் காவலில்லா ததைக் கவனித்து வியந்தான்.
“காவல் வீரர்களின் எச்சரிக்கைக் குரல் அரண்மனையின் வெளிப்புறத்தில் எங்கோ கேட்டுக் கொண்டிருந்ததே யொழிய அந்தப்புரப் பகுதியில் மட்டும் காவல் நடமாட்டம் அடியோடு இல்லாததைக் கண்டு வியந்தான். “எந்த ஊரிலும்
அந்தப்புரத்தில் தான் கட்டுக் காவல் அதிகமாயிருக்கும். இந்த ஊரில் விஷயம் தலைகீழ்ப் பாடமாயிருக்கிறது!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். “ஒரு வேளை இந்த மாளிகை அந்தப் புரத்தைச் சேர்ந்ததல்லவோ?” என்று
யோசித்தான். எப்படியும் அன்று மாலைக்குள் எல்லாவற்றையும் அறிந்துவிட முடியும் என்ற எண்ணத்தில் காலைக் கடன்களை முடிக்க அறையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த அலங்கார கூஜாவைக் கையில் எடுத்துக் கொண்டான்.
அந்தச் சமயத்தில் லேசாகக் கதவைத் தட்டி எச்சரிக்கை செய்து விட்டு உள்ளே நுழைந்த பணிப்பெண், “நீராட்டம் முதலியவற்றை முடிக்க வேறு இடம் இருக்கிறது. உத்தரவு கொடுத்தால் அழைத்துச் செல்கிறேன்” என்றாள்.
அந்தப் பணிப்பெண்ணும் மிக அழகாயிருந்தாள்.
கேரள நாட்டு வழக்கப்படி அவள் உடுத்தியிருந்த ஆடையும் மிக வெண்மையாயிருந்தது. “ அப்பா! கேரளமே அழகிகளுக்கு இருப்பிடம்” என்று வியந்த இளவழுதி “சரி, வழியைக் காட்டுங்கள்” என்றான் அந்தப் பணிப் பெண்ணை
நோக்கி.
அந்தப் பெண் புன்முறுவல் காட்டினாள். என் பெயர் சுந்தரி” என்றும் சொன்னாள்.
“சொல்லாமலே தெரிகிறது” என்றான் இளவழுதி.
“பாண்டிய நாட்டவர் எல்லோருமே சமார்த்திய சாலிகள்” என்று சொல்லி நகைத்த அந்தப் பணிப்பெண், “நான் பணிப்பெண் என்னைப் பெயர் சொல்லியே அழைக்கலாம்” என்றாள்.
அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவளைப் பின் தொடர்ந்த இளவழுதியை அந்த மாளிகையின் பின்புறமிருந்த நீராட்ட அறைகளுக்கு அழைத்துச் சென்ற சுந்தரி, “இந்த அறைகளில் சகல வசதிகளும் இருக்கின்றன. இதில் எதிலும் நீங்கள்
நீராட்டத்தை முடித்துக் கொள்ளலாம்” என்றாள். அந்த அறைகளில் ஒன்றில் நுழைந்து பல் துலக்கி நீராட்டத்தையும் முடித்துக் கொண்ட இளவழுதி, தனது பழைய ஆடையை அணிந்து கொள்ள முயன்ற சமயத்தில் பணிப்பெண்
வெளியிலிருந்து குரல் கொடுத்தாள், வேறு ஆடை கொண்டு வந்திருக்கிறேன்” என்று.
அரைகுறையாகக் கதவைத் திறந்து கையை நீட்டி அந்தப் பட்டாடையை வாங்கி இடுப்பில் கட்டிக்கொண்ட இளவழுதி, உள்ளேயே இருந்த கண்ணாடியில் திலகமும் இட்டுக் கொண்டு வெளியே வந்தான். அப்படி வந்தவவனுக்கு “அதோ
போகும் படிகளில் ஏறிச் சென்றால் முகப்புத் தாழ்வரைக்குப் போகலாம். அங்கு தானிருக்கிறது உங்கள் அறை. செல்லுங்கள்” என்று வழிகாட்டிய சுந்தரி, மீண்டும் பக்கத்து வாயிற்படியில் மறைந்தாள்.
அன்று காலை உணவுகளை சுந்தரியே கொண்டு வந்து பரிமாறினாள். “அரசர் உங்களை இன்னும் இரண்டு நாழிகைகளில் சந்திப்பார்”என்று கூறிச் சென்றாள். சூரியன் உதித்து நாலைந்து நாழிகைக்கெல்லாம் அரசரிடமிருந்து
அழைப்பு வரவே அவரைப் பார்க்கத் தனது உடையையும் வாளையும் அணிந்து புறப்பட்டான் இளவழுதி. அவனை அழைத்துச் சென்ற காவலன் அந்த மாளிகையிலிருந்து அரண்மனைப் பகுதியிருந்த வேறொரு பெரும் கட்டிடத்துக்கு
வந்தான். அங்கு கட்டுக்காவல் பலமாயிருந்தது. புரவி வீரர்கள் தூக்கிப் பிடித்த ஈட்டிகளுடன் எங்கும் உலாவிக் கொண்டிருந்தார்கள். அந்த கட்டிட வாசலைப் பார்த்ததும் அரண்மனையின் பிரதான வாயில் அதுவாகக் தானிருக்க
வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான் இளவழுதி.
வாயிலில் பெரும் தூண்கள் கம்பீரமாக எழுந்து நின்றன. இரு கேடயங்களும், இரு வாட்களும் வாயிலின் பெரும் கதவுக்கு இருபுறத்தில் காட்சியளித்தன. வாயிற்கதவுகளிரண்டும் கேரளத்தின் வயிரம் பாய்ந்த மரங்களால் செய்யப்பட்டு
வீரக் காட்சிகள் செதுக்கப்பட்டிருந்ததால் பார்வைக்குச் சிறிது அச்சத்தையும் கொடுத்தன. அந்த வாயிற் கதவை உருவிய வாளுடன் காத்து நின்ற காவலர், இளவழுதி வந்ததும் தலைவணங்கி வழிவிட்டனர். உள்ளே நுழைந்து சென்ற
இளவழுதி அந்த அரண்மனையின் பக்கப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
அவனுக்கு வழிகாட்டி வந்த காவலன் அங்கிருந்த மற்றொரு கதவைத் திறந்து, “உள்ளே செல்லலாம்.” என்று தலை தாழ்த்தி வெளியிலேயே நின்றுவிட்டான். உள்ளே சென்ற இளவழுதி அது வீரர்கள் வாட்பயிற்சி செய்யும் கூடமென்பதைப்
புரிந்துகொண்டான். அந்தப் பெரிய கூடத்தில் ஒரு மூலையில் நானாவித போர்க் கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. இடையில் சராயை மட்டும் அணிந்த இருவர் முனைந்து வாட்போரில் ஈடுபட்டிருந்தனர். அவ்விருவரில் ஒருவர்
சேரமன்னன் என்பதை அந்த நெடிய உயரத்தாலும் தோரணையினாலுமே புரிந்து கொண்டான் இளவழுதி. அரசருடைய கையிலிருந்த மெல்லிய நீண்டவாள் ஏதோ சர்ப்பம் போல் வளைவதையும், அரசனுக்கு எதிரே போராடியவனின்
பட்டையான கனமான வாளை அது அனாயாசமாகத் தடுப்பதையும் சுழற்றுவதையும் கண்ட இளவழுதி வியப்புடன் நின்றான்.! அரசர் இஷ்டப்பட்டால் எந்த வினாடியிலும் எதிரியின் வாளைப் பறந்துவிடச் செய்யலாமென்பதையும்
புரிந்து கொண்டான்.
அப்படி நினைத்த வண்ணம் நின்றிருந்த இளவழுதியைப் பார்த்துவிட்ட அரசர், “ஓ நீயா நல்ல வேளையில் வந்தாய்” என்று கூறி, “இவன் தான் நான் கூறிய பாண்டிய நாட்டு வாலிபன்” என்று எதிரே போராடியவனுக்கு
அறிமுகப்படுத்தினார்.
எதிரே போராடியவனைக் கண்டதும் பிரமை பிடித்து நின்றுவிட்டான் இளவழுதி பல வினாடிகள். இரவில் நந்தவனத்தில் சந்தித்த ஸலீமே அரசருடன் போராடியவனென்பதை அறிந்ததும் இளவழுதிக்கு ஏதுமே புரிய வில்லை. ஆனால்
ஸலீம் சிறிதும் பிரமிக்கவில்லை. வியப்பு நிரம்பிய விழிகளை அவன் மீது நிலைநாட்டி, “நீங்கள் தான் இளவழுதியா!” என்று விசாரித்தான் ஏதுமறியாதவன் போல.

Previous articleCheran Selvi Ch6 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch8 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here