Home Cheran Selvi Cheran Selvi Ch9 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch9 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

91
0
Cheran Selvi Ch9 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch9 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch9 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 9. மர்மக் கடை

Cheran Selvi Ch9 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சற்றும் எதிர்பாரா தவிதமாக மகாராஜா கடைசியாக சொல்லம்பை வீசிச் சென்றதும் செயலற்று நின்று விட்ட பாண்டிய வீரனான இளவழுதி, தன்னை அப்படிக் கட்டி நிறுத்தி விட்டது மன்னன் வீசிய பிரம்மாஸ்திரமா அல்லது எதிரே நின்ற
இளமதியின் அங்கலாவண்யங்கள் வீசிய மோகனாஸ்திரமா என்பதை அறியாமல் பெரிதும் திணறவே செய்தான். பிரும்மாஸ்திரத்தில் கட்டுப்படுவதை விட மோகனாஸ்திரத்தில் கட்டுப்படுவதே சிறந்தது என்ற எண்ணத்தினாலோ
என்னவோ இளவரசியின் கண்களோடு தன் கண்களைக் கலக்கவிட்ட அந்த வாலிப வீரன், “மீதி விஷயங்களைத் தாங்கள் சொல்வதாக மகாராஜா கூறினாரல்லவா?” என்று மெதுவாக உரையாடலைத் துவங்கினான்.
இளமதி, வீணை மேடையிலிருந்து இறங்கி வந்து அவனிடமிருந்து சற்று எட்டவே நின்றாள். அவள் இறங்கி வந்த அழகும் நின்ற அழகுங்கூட இளவழுதியின் கண்களைப் பறித்தன. “கொழுகொம்பு இல்லாமல் கொடி நிற்க
முடியாதென்று சொல்வார்கள். இந்தக் கொடியால் நிற்கவும் முடியும், மேடையை விட்டு, தான் தாங்கிய மலர்களை மெள்ள அசைத்த வண்ணம் இறங்கவும் முடியும்” என்று இளவழுதி தனக்குள் சொல்லிக் கொண்டான். அவன் கண்கள்
அவளை விழுங்கி விடுவன போல் பார்க்கவும் செய்ததால் இளமதி தான் நின்ற இடத்திலேயே மெள்ள அசைந்தாள், தனது சங்கடமான நிலையைச் சீர்திருத்திக் கொள்வதற்காக மீதி விஷயங்களா?” என்று வினவினாள்.
“ஆம், மீதி விஷயங்கள்! அதாவது மகாராஜா அஜ்மல்கானைப் பற்றி சொல்லிய விவரங்கள் போக மீதி விஷயங்கள்” என்றான் இளவழுதி.
இளமதி நின்ற வண்ணமே சிந்தித்தாள். பிறகு இளவழுதியை நோக்கிச் சொன்னாள், “நீங்கள் நிற்க வேண்டாம். மேடை முகப்பில் உட்கார்ந்து கொளளுங்கள்” என்று.
“நான் சாதாரண வீரன். இளவரசியார் உட்காருவது தான் உத்தமம். நீங்கள் அமருங்கள்” என்று உபசரணைச் சொற்களை உதிர்த்தான் இளவழுதி.
இளமதி நகைத்தாள். “உங்களைச் சாதாரண வீரராக மதிக்கவில்லை அரசர். வாட்போரில் நிகரற்றவனென்று பெயர் வாங்கிய அஜ்மல்கானையே கொன்று விட இருந்தவரை சாதாரண வீரரென்று எப்படிச் சொல்வது? அதுமட்டுமல்ல வீரரே!
சாதாரண வீரர்கள் இந்த அந்தப் புரத்துக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அரசரையும் பெரிய மந்திரியையும் தவிர வேறு ஆண் மக்கள் இங்கு வர மாட்டார்கள்” என்று விளக்கினாள் நகைப்பின் ஊடே.
இளவழுதியின் முகத்தில் குழப்பம் தெரிந்தது. அத்தனை முக்கியமானவனா நான்?” என்று வினவினான் தயக்கத்துடன்.
“ஆம், இல்லாவிட்டால் புலவர் உங்களை இங்கு அனுப்பியிருக்கமாட்டார்” என்று சொன்ன இளவரசி யின் முகத்தில் என்ன காரணத்தினாலோ திடீரென செஞ் சிவப்பு படர்ந்தது.
இளமதியின் முகம் வெண் தாமரையிலிருந்து செந்தாமரையாக மாறி விட்டதைக் கவனிக்கவே செய்தான் இளவழுதி. இப்படித்தான் முந்திய இரவின் ஆரம்பத்தில் ஓலையைப் படித்ததும் அவள் முகத்தில் சிவப்பு மண்டியது என்பதையும்
நினைவுபடுத்திக்கொண்டான். ஆகவே அந்த ஓலை விஷயத்தைப் பற்றிக் கேட்க முற்பட்டு “புலவர் என்றதும் ஓலை விஷயம் நினைவுக்கு வருகிறது” என்றான் மெதுவாக.
“ஆம். நினைவுக்கு வரும்” என்று இளமதி சற்று விஷமமாகவே பேசினாள்.
ஓலையைப் பற்றிக் கேட்டபோது முந்திய இரவில் ஏற்பட்ட சீற்றம் இப்பொழுது இல்லை என்பதை உணர்ந்த இளவழுதி, “அது தான் நினைவுக்கு வரும். நான் நீண்ட தூரம் தாங்கி வந்த சொத்தல்லவா அது?” என்று கேள்வியும் பதிலும்
கலந்த ஒரு சொற்றொடரை வீசினான்.
“அந்த ஒலையில் எழுதியிருந்ததை அறிய விரும்புகிறீர்கள்?” என்றாள் இளமதி சற்று சங்கடத்துடன்.
“ஆம்”. இளவழுதியின் பதிலில் கட்டாயமிருந்தது.
இளமதியின் முகத்தில் சிந்தனை சிறிதே படர்ந்தது. அந்த சிந்தனையுட னே சொன்னாள், “ஒரு பகுதி உங்களைப் பற்றியது” என்று.
“இன்னொரு பகுதி?”
“என்னைப் பற்றியது”
“அப்படியா!”
“ஆம்”
“அதைச் சொல்லும்படி நான் கேட்பது நியாயமல்ல?”
“அல்ல”
“என்னைப் பற்றியதை அறியலாம்?”
“அறியலாம்” என்று சொன்ன இளமதி ஒரு அடி பின்னால் நகர்ந்து மேடை முகப்பில் அமர்ந்தாள் கால்களைத் தொங்கப் போட்ட வண்ணம். மடியில் இரு கைகளையும் போட்டுக் கொண்டு ஒன்றை இன்னொன்றால் பற்றிக்
கொள்ளவும் செய்தாள். அந்த நிலையில் தனது கைத்தாமரைகளை நோக்கிய வண்ணம் ஓலையின் விவரங்களைச் சொல்லலானாள், “வீரரே! சேர நாடு போரில் இறங்கும் நிலையிலிருக்கிறது” என்று பூர்வ பீடிகை போட்டாள்.
இளவழுதி பதிலேதும் சொல்லவில்லை. அரசகுமாரியே பேசட்டும் என்று மௌனமாகவே நின்றான் அவள் முகத்தைப் பார்த்த வண்ணம். அரசகுமாரி மேலும் சொன்னாள். “ஆகையால் நாங்கள் புலவருக்கு எழுதினோம். சேர
மன்னருக்கு அடுத்தபடியாக சேர நாட்டுப் படைகளை நடத்தி செல்லக்கூடிய திறமையான, துணிவுள்ள ஒரு தலைவன் வேண்டுமென்று. புலவர் அந்தப் பதவிக்கு உங்களைத் தேர்தெடுத்து அனுப்பியிருக்கிறார். உங்கள் அங்க
அடையாளங்கள் எல்லாவற்றையும் முன்னதாகவே எழுதியனுப்பியிருந்தார். நீங்கள் வரப்போகும் நாளையும், கடல் வழியாக வருவதையும் கூடத் தெரியப்படுத்தியிருந்தார். ஆகவே சென்ற மூன்று நாட்களாக நான் கடற்கரைக்கு
வந்துகொண்டிருக்கிறேன். முதல் இரண்டு நாள் நீங்கள் வராததால் மூன்றாவது நாள் சிறிது கவலையுடனேயே கடற்கரையில் உலாவினேன். நான் உங்களைக் கண்டு பிடிக்காவிட்டாலும் நீங்கள் என்னைக் கண்டுபிடித்தீர்கள்…”
இந்த இடத்தில் சிறிது பேச்சை நிறுத்திய இளமதி தலையைத் தூக்கி இளவழுதியை விஷமம் சொட்டும் கண்களுடன் நோக்கினாள்.
இளவழுதிக்கு எல்லாமே புதிராயிருந்தது, “பார்த்தவுடன் என்னைக் கண்டுபிடித்துவிட்டீர்களா?” என்று வியப்புடன் வினவினான்.
“ஆம்.”
“எப்படி?”
“உங்கள் முகவாய்க்கட்டைக்கு அருகிலுள்ள பெரும் வாட்காயத்தைப் புலவர் குறிப்பிட்டிருந்தார்.”
“ஓகோ!” என்ற இளவழுதி “அப்படியானால் நீங்களே என்னை அரண்மனைக்கு அழைத்து வந்திருக்கலாமே?” என்று கேட்டான்.
“அழைத்து வந்திருக்கலாம். ஆனால் உங்களை அசகாய சூரரென்பதற்கு, அத்தாட்சி காட்டியிருக்க முடியாது” என்றாள் இளமதி.
“சோதனை வைத்ததாகச் சொன்னீர்களே முன்பு அதுவா?”
“ஆம்”
“அதனால் தான் திட்டிவாசல் மூலம் வரும்படி சொன்னீர்களா?”
“ஆம்”
“இதெல்லாம் பழைய கதை. நான் கொண்டுவந்த ஓலையில் என்ன எழுதியிருந்தது?”
“உங்களை உடனடியாக சேனாதிபதியாக நியமிக்கும் படி எழுதியிருந்தது. உங்களை அறிமுகப்படுத்தியும் இருந்தது. நீங்கள் உக்கிரப்பெருவழுதியின் நேர்க்கிளையில் வந்தவரென்றும், உங்கள் உக்கிரம் உங்கள் மூதாதைக்கு
இருந்ததைவிடக் குறைவல்லவென்றும் புலவர் கூறியிருந்தார் ஓலையில். இத்தனை தான் உங்களைப் பற்றிய விஷயம்” என்றும் முடித்தாள் ஒரு வழியாக.
“உங்களைப் பற்றியும் ஏதோ எழுதியிருந்ததாகச் சொன்னீர்கள்…” என்று மெள்ளக் கிண்டிப் பார்த்தான் இளவழுதி.
அதைக் கேட்டதும் அரசகுமாரி சட்டென்று எழுந்து நின்றாள். “அதை வேளை வரும்போது பேசுவோம்” என்ற இளமதி, “நீங்கள் சென்று இளைப்பாறுங்கள். உணவுக் கூடத்துக்கு வரவேண்டிய சமயத்தில் சுந்தரியை அனுப்புகிறேன்”
என்ற இளமதி அவன் பதிலுக்குக் காத் திராமல், “சுந்தரி சுந்தரி!” என்று குரல் கொடுத்தாள்.
அதே அறையின் ஒரு மூலையிலிருந்த வண்ணச் சீலை ஒன்றின் மறைவிலிருந்து சுந்தரி வெளிவந்தாள். அவள் வருவதைப் பார்த்த இளவழுதி, அத்தனை நேரமும் தங்கள் உரையாடலை அவள் கேட்டுக் கொண்டிருந்தாளென்பதை
உணர்ந்ததால் கண்களில் லேசாக சீற்றத்தைக் காட்டினான். அதைக் கண்ட இருமங்கையரும் அவனை நோக்கிச் சிரிக்கவே செய்தார்கள்.
“பாண்டிய வீரருக்கு என்மேல் கோபமிருப்பது சகஜம்” என்றாள் சுந்தரி சிரித்த வண்ணம்
“உன் மேல் எனக்கு ஏன் கோபமுண்டாக வேண்டும்?” என்று சீறினான் இளவழுதி.
“நான் பானகத் துரும்பு” என்றாள் சுந்தரி. “நன்றாகக் கரைக்கப்பட்ட பானகத்தில் ஒரு துரும்பு இருந்தாலும், பானகத்தின் இனிப்பை ரசிக்கமுடியாமல் இடையில் நாக்கை இடறி இம்சைப்படுத்துவதில்லையா?” என்று விளக்கிய சுந்தரி,
இளவரசியின் முகத்திலும் சிவப்பேறுவதைக் கண்டு, “வீரரே! வாருங்கள் போவோம்” என்று அழைத்தாள்.
இளவழுதி தனது பார்வையை ஒரு வினாடி இளவரசியின் மீது செலுத்தினான். அடுத்த வினாடி சுந்தரியைத் தொடர்ந்தான். சுந்தரி ஏதும் பேசாமல் அவன் அறையில் அவனை விட்டுச் சென்றாள் சுந்தரி சென்றதும் அறைக் கதவைச்
சாத்திக் கொண்டு மஞ்சத்தில் விழுந்த இளவழுதி அன்று காலை நிகழ்ச்சிகளைத் திரும்பத் திரும்ப அலசிப் பார்த்தான். சேரமன்னன் பெரும் நுழை நரியென்பதும், அந்த அரண்மனைத் தலத்துக்குள் நுழையும் ஒவ்வொருவருடைய
நடவடிக்கைகளையும் இரவும் பகலும் கவனிக்க ஆள் வைக்கப்பட்டிருப்பதும் சந்தேகமறத் தெரிந்தது பாண்டிய வீரனுக்கு. இரவில் நந்தவனத்தில் தான் ஸலீம் என்ற அஜ்மல்கானைச் சந்தித்ததுகூட அரசருக்குத் தெரிந்திருக்கிறதென்றால்,
அரண்மனைப் பிராந்தியத்தில் யாரும் எதுவும் கண்காணிக்கப்படுகிற தென்பதும் புலனாயிற்று இளவழுதிக்கு. இளமதி சேரநாடு போரில் இறங்கும் தருவாயில் இருக்கிறதென்று கூறியதை பற்றியும் நினைத்துப் பார்த்தான், அந்த
வாலிபன். மாலிக்காபூர் எல்லாவற்றையும் ஒருவழியாகத் தீர்த்துக்கட்டிய பின் போரிட யாரிருக்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்து விடை காணாது தவித்தான். எதுவும் சீக்கிரம் வெளிப் பட்டுத்தான் ஆகவேண்டும் என்ற முடிவுக்கு
வந்ததால் போரையும் இதர சம்பவங்களையும் சிந்தையிலிருந்து ஒதுக்கிவிட்டு இளமதியின் அழகிய உருவத்தை அகத்தில் உலாவவிட்டான்.
அதனால் நேரம் போவது தெரியாமல் பஞ்சணையிலேயே படுத்துவிட்ட இளவழுதி சுந்தரி வந்து கதவை எச்சரிக்கையாகத் தட்டியபின்பே இந்த உலகத்துக்கு வந்தான்.
“பகல் போஜனத்துக்கு மன்னர் காத்திருக்கிறார்” என்று சொன்ன சுந்தரி அவனை அழைத்துக் கொண்டு மன்னரின் போஜன அறைக்குச் சென்றாள். அங்கு தங்கத் தாம்பாளங்களில் பரிமாறப்பட்ட அறுசுவை உண்டியை அரையும்
குறையுமாகச் சாப்பிட்ட இளவழுதியுடன் வேடிக்கையாகத்தான் மகாராஜா பேசினார். அரசாங்க அலுவலைப் பற்றியோ புலவர் அனுப்பிய ஓலையைப் பற்றியோ எதுவுமே பேசவில்லை அவர். அவ்விருவருக்கும் சுந்தரியும்
இளவரசியுமே உணவு பரிமாறினார்கள். ஏன் மற்ற பணிமக்கள் இல்லையா என்று கூட சிந்தித்தான் இளவழுதி. ஆனால் இளமதியே பணிப்பெண்களைப் போல அந்தக் கடமையைப் புரிந்ததுகூட அவளுக்குப் பொருத்தமாயிருந்ததை
இளவழுதி கவனித்தான். பரிமாறும்போது அவள் அவனை ஏறெடுத்துப் பார்க்காததையும் குனிந்த தலையுடன் பரிமாறியதையும் கண்ட இளவழுதி பாரதப் பெண்களுக்கு இயற்கையாக ஏற்பட்டுவிடும் பண்பாட்டை மனதுக்குள்
பாராட்டிக் கொண்டான்.
இப்படி உணவருந்து படலம் முடிந்ததும் மகாராஜா இளவழுதியை அழைத்துக் கொண்டு அரண்மனையைச் சுற்றியிருந்த இடங்களையும் பாதுகாப்பு வீரர்களையும் பாதுகாப்பு யந்திரங்களையும் காட்டினார். பாதி பாதுகாப்பு
பொறிகள் யார் கண்ணுக்கும் படாமல் மறைக்கப் பட்டிருந்தாலும் எந்த வினாடியிலும் அவை உயிர் பெற்று நகரக்கூடிய விதம் வைக்கப்பட்டிருந்ததையும், ஒரு சில வீரர்கள் சாதாரணமாகக் குறுக்கும் நெடுக்குமாக நடந்து
கொண்டிருந்தாலும் அவர்கள் பார்வையில் எச்சரிக்கை இருந்ததையும், கண்ணுக்குத் தெரிந்த வீரர்களைவிட மறைவிலிருக்கும் வீரர்கள் மிக அதிக மென்பதையும் ஊகித்த இளவழுதி, பெரிய இரும்புக் கவசத்தால் மகாராஜாவின்
அரண்மனை மூடப் பட்டிருக்கிறதென்பதைப் புரிந்து கொண்டான். அவன் கண்கள் ஓடுகிற இடங்களைக் கவனித்த அரசர் முகத்தில் பூர்ண திருப்திக்கான அறிகுறி படர்ந்தது. அந்த சமயத்தில் எதையோ பார்த்துக்கொண்டு மகாராஜா
கேட்டார்” இன்று மாலை நீ ஸலீமை சந்திக்கிறாயல்லவா?” என்று.

.
“அஜ்மல்கான்” என்று ஆரம்பித்த இளவழுதியை கையசைப்பினால் தடுத்த மகாராஜா, அவனை நாம் அறிந்ததாகக் காட்டிக் கொள்ள அவசியமில்லை. நாம் ஏமாந்துவிட்டதாகவே அவன் நினைத்துக் கொள்ளட்டும், அவன் எதைச்
சொன்னாலும் ஒப்புக்கொள். உனக்கு லஞ்சம் கொடுப்பான். சிறிது தர்க்கத்துக்குப் பிறகு ஒப்புக் கொள்” என்று பேசிக்கொண்டே நடந்தார்.
அப்படிப் பேசிக்கொண்டே. நந்தவனத்துக்கருகில் வந்துவிட்ட மகாராஜா ‘இனி நீ திட்டிவாசல் வழியே வரலாம். உனக்குத் தடையிருக்காது.. இன்றிரவும் இள மதியை நந்தவனத்திலேயே சந்தித்து ஸலீமை சந்தித்த விஷயங்களை அவளிடம்
சொல்லிவிடு” என்றார்.
இளவழுதிக்குத் தூக்கிவாரிப் போட்டது. “நான் இளவரசியாரைச் சந்தித்தது…” என்று இழுத்தான் சங்கடத்துடன்.
“இயற்கையாக சங்கீதத்தின் கவர்ச்சியே அதிகம் அத்துடன் இளமதியின் வசீகரமும் சேர்ந்து கொண்டால்…” என்று கூறிய மகாராஜா “உன் நிலை எனக்குப் புரிகிறது” என்றும் சொல்லி அவனை அழைத்துக் கொண்டு பழைய படி
அரண்மனை சேர்ந்தார்.
அதற்குப்பிறகு அவனை யாரும் சந்திக்கவில்லை. சுந்தரி கூட தலையைக் காட்டவில்லை அவன் அறையில். மாலையில் அவன் உடையணிந்து வாளணிந்து புறப்பட்டபோது யாரும் தடை செய்யவில்லை அவனை.
அரண்மனையிலிருந்து வெளிப்போந்து மலைப்பகுதியிலிருந்து இறங்கி நடந்தவண்ணமே பெரிய கடைத் தெருவுக்கு வந்தான். அங்கிருந்த கடைகளைப் பார்த்து நடுவிலிருந்த பெரிய அரபுக் கடையை அடையாளம் கண்டு பிடித்து
உள்ளே நுழைந்தான். கடையில் வாணிபம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்த ஒரு வயதான அரபு வணிகரிடம் ஸலீமைப் பார்க்க விரும்புவதாக அறிவித்தான். அவர் அவனுக்கு சலாம் செய்து கடையின் உட்புறத்துக்கு
அழைத்துச் சென்றார். உட்புறத்தில் இரண்டு பெரிய கட்டுகள் இருந்தன. இரண்டாவது கட்டை அணுகியதும் ஒரு அறையைக் காட்டி “அதில் இருங்கள்; ஸலீம் வருவார்” என்று சொல்லிவிட்டுப் பெரியவர் போய்விட்டார். அந்த அறையைத்
திறந்து கொண்டு உள்ளே சென்ற இளவழுதி அங்கு யாருமில்லாததைக் கண்டு விழித்தான். அந்தச் சமயத்தில் அவனுக்குப் பின்னாலிருந்த கதவு சட்டென்று சாத்தப்பட்டது. கூரிய வாளின் நுனி அவன் கழுத்தில் அழுந்தியது. “அசைய
வேண்டாம். அப்படியே நில்” என்ற எச்சரிக்கையும் தொடர்ந்தது. அதே சமயத்தில் எதிரேயிருந்த ஒரு திரைச்சீலையை அகற்றிக்கொண்டு சிரித்தமுகத்துடன் அஜ்மல்கானும் தோற்றமளித்தான்.

Previous articleCheran Selvi Ch8 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch10 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here