Home Chittaranjani Chittaranjani Ch1 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch1 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

78
0
Chittaranjani Ch1 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch1 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch1 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 1 பாடும் பறவை

Chittaranjani Ch1 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

பாரத நாட்டின் தக்ஷிணபாரதத்தின் மேல்திசை அரணான ஸஹ்யாத்திரியிலிருந்து சற்றுத் தள்ளி நாசிக்யா நகரத்துக்கும் சிறிது மேற்கில் கோதாவரி நதி தீரத்திலிருந்த சாதவாகனப் பேரரசின் தலைநகரான ‘பிரதிஷ் டானாவின் பெரிய அரண்மனையின் மேல் உப்பரிகையில் உட்கார்ந்திருந்த ராஜமாதா மகாராணி பாலஸ்ரீ, சாதவாகனர்களின் மூதாதையான சிமுகன் காலத்திலிருந்த பேரரசையும் பிறகு குறுகிவிட்ட அன்றைய அரசையும் எண்ணிப் பார்த்துப் பெருமூச்செறிந்தாள். அங்கிருந்தபடியே தூரத்தே பெரிதாக எழுந்து நின்ற மேற்கு மலைத்தொடரையும், அப்பொழுதும் நிதானமாக ஓடிக் கொண்டிருந்த கோதாவரி நதியையும் மாறி மாறிப் பார்த்து இந்தப் புண்ய மலையும், புண்ய நதியும் இருந்தும் அரசைக் காக்க ஹிந்துக்களால் முடியவில்லையே என்று நினைத்தாள். சாதவாகனப் பேரரசின் க்ஷணதசையை யோசித்துப் பெரியவர்கள் சம்பாதிக்கும் பெரும் சொத்துக்களை அழிப்பதுதான் அடுத்து வரும் குழந்தைகளின் கடமை போலிருக்கிறது என்ற நினைப்பால் சிறிது மனம் கலங்கவும் செய்தாள். வெளிநாட்டவர் சதா ஹிந்துஸ் தானத்தின் மீது வெற்றி கொண்டு சீரழிப்பதே பாரதத்தின் சரித்திரமாவதை எண்ணிப் பெரும் வேதனைக்குள்ளான ராஜமாதா பாலஸ்ரீ, சாகர்கள் படையெடுத்து சாகஸ்தான் ஒன்றை ஸிந்துநதி முகத்துவாரத்தில் நிறுவிவிட்டதையும், முதல் சாதவாகன மன்னர்கள் நிறுவிய பெரும் சாம்ராஜ்யத்தில் முக்கால்வாசியைக் கபளீகரம் செய்துவிட்டதையும் நினைத்து, ‘அந்தப் பிராந்தியங்களை மீண்டும் மீட்பது எப்போது? யார் மீட்பார்கள்?’ என்று தன்னைத்தானே கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அவள் உட்கார்ந்திருந்த உப்பரிகை மேல்தளத்தின் படிகளில் ஏறி வந்த வாலிபனொருவன் பாலஸ்ரீஉட்கார்ந்திருந்த இடத்தை நோக்கி நடந்து வந்தான்.

சுமார் ஆறடிக்கும் மேலான உயரத்துடனும் உறுதியான நடையுடனும் தன்னை நோக்கி வந்து தனது மைந்தனை மிகுந்த அன்பும் பெருமையும் நிறைந்த கண்களுடன் பார்த்த மகாராணி பாலஸ்ரீ, சாதவாகனர்களின் பழைய சாம்ராஜ்யம் அவன் காலத்தில் ஒருவேளை திரும்பவும் அமைக்கப் படலாம் என்று நினைத்தாள். கௌதமிபுத்ர சதகர்ணி என்ற பெயரைத்தாங்கிய அந்த வாலிபனின் அழகிய முகத்தில் சதா ஒரு சிந்தனையும் கண்களில் அவன் எதையோ எதிர்பார்ப்பது போன்ற சாயையும் விரிந்து கிடந்தன. அவன் கைகள் நீண்டும் உறுதியுடனும் இருந்ததையும், நடையில் ஒரு திடமும் விசாலமார்பில் பல காயத்தழும்புகளும் காணப்பட்டதையும் கவனித்த ராஜமாதா, அவன் காலத்தில் சாதவாகனர்களுக்கு ஏதாவது விடிமோட்சம் ஏற்படும் என்ற நம்பிக்கையும் கொண்டாள். அவன் அன்று மேலங்கி எதையும் அணியாமல் கழுத்தில் ஓர் ஆரமும் காதுகளில் இரண்டு சிறு பொன் வளையங்களையும் அணிந்து, நெற்றியில் திலகத்தையும் பிறைச்சந்திரனைப் போல் தீட்டியிருந்ததால் அவன் முகத்தில் பிரும்ம தேஜஸ் ஜொலித்துக்கொண்டிருந்தது. பிரும்ம குலத்தவரானாலும் சாதவாகனர் தங்களைத் துரோணர் போலும் பரசுராமனைப் போலும் க்ஷத்திரிய அலுவல்களுக்கு மாற்றிக்கொண்டதால் அந்தக் குலத்தவனான அந்த வாலிபன் முகத்தில் அழகுடன் வீரக்களையும் படர்ந்து கிடந்தது. ஏற்கனவே சில சின்னஞ்சிறு போர்களில் ஈடுபட்ட கௌதமிபுத்தரன் ‘பெரும் போர்களை நாம் ஏன் மேற்கொள்ளக்கூடாது’ என்ற யோசனையிலுமிருந்தான். அங்கி ஏதும் அணியாது இடுப்பிலிருந்த மூலக்கச்ச வேஷ்டியுடன் தாயை நோக்கி வந்த சமயத்திலும் அவன் இடையில் சின்னஞ்சிறு கட்டாரியொன்றைச் சொருகியிருந் தான்.

ஏதோ சிங்கம்போல் நடந்து வந்த மகனின் கோலத்தையும் இடையிலிருந்த கட்டாரியையும் நோக்கிய ராஜமாதா பாலஸ்ரீ புன்முறுவலுடன் மைந்தனை வரவேற்றாள். “மகனே! இதென்ன அந்தண வேடமா, க்ஷத்திரியர் வேடமா?” என்று புன்சிரிப்புடன் ஊடே வினா ஒன்றையும் கிளப்பினாள்.

“இரண்டும் சேர்ந்தது” என்று பதில் சொன்னான் கௌதமிபுத்ரன்.

“இரண்டும் சேருமா?” என்று பாலஸ்ரீ வினவினாள் லேசாக நகைத்து.

“பரசுராமன் விஷயத்திலும் துரோணர் விஷயத்திலும் சேருமானால், எனது மூதாதைகளுக்கும் சேருமென்றால் எனக்கு என் சேரக்கூடாது?” என்று கேட்டான் அந்த வாலிபன். மேலும் அவனே சொன்னான், “தாயே! முன்பு வசிஷ்டர் தமது தண்டத்தை ஊன்றி விசுவாமித்திரன் கணைகளை விழுங்கச் செய்ததைப்போல் தவ பலமுள்ள அந்தணர் யாரும் இப்பொழுது கிடையாது. கால மாறுதலில், பெரும் படையெடுப்புகள் நாட்டில் ஏற்படும்போது அவசியத்தை முன்னிட்டு வர்ணங்கள் மாறுகின்றன. சாதவாகனர் அன்று எழுந்திராவிட்டால் வெளிநாட்டார் இந்த நாட்டை என்றோ விழுங்கியிருப்பார்கள். இன்று நமதுcசாம்ராஜ்யம் க்ஷணித்ததற்கு நம் பலமும் போரிடும் சக்தியும் குறைந்ததுதான் காரணம்’ என்று விரிவாகவே பேசிய கௌதமிபுத்ரன், “தாயே! இத்தனை நேரம் ஏதோ சிந்தனையில் ஈடுபட்டிருந்தாயே, எந்தக் கோட்டையைப் பிடிக்க யோசித்துக் கொண்டிருந்தாய்?” என்றும் கேட்டான்.

பாலஸ்ரீசிறிது சிந்தித்துவிட்டு, “மகனே! சாதவாகனர்கள் இழந்த கோட்டைகளை, நிலப்பகுதிகளை எப்படிப் பிடிக்கலாம் என்று யோசனை செய்துகொண்டிருக்கிறேன். அந்தச் சமயத்தில் நீ வந்தாய்” என்று மெதுவாகப் பேசினாள். மேற்குத்தொடர்ச்சி மலையைச் சுட்டிக்காட்டிய ராஜமாதா, “அந்த மலையைப் போல் உயர்ந்திருந்த நமது பேரரசு இன்று மடுவாகத் தாழ்ந்துவிட்டது. அதற்கு நீ என்ன செய்யப் போகிறாய்?” என்று கேள்வியும் எழுப்பினாள்.

கௌதமிபுத்ர சதகர்ணி தாய் சுட்டிக் காட்டிய மலையையும் நோக்கி, கோதாவரியையும் நோக்கிவிட்டு, “தாயே! வெகு சீக்கிரம் உன் இதயம் குளிரும். நமது நாட்டுப் பகுதிகளைப் பிடித்த சாக இனத்தினரையும், யவனர்களையும், பஹ்லவரையும் வெகு சீக்கிரம் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி விடுகிறேன்” என்று சொன்னான். அவன் குரலில் உணர்ச்சி பரிபூரணமாக ஒலித்தது.

மைந்தன் பேச்சினால் பூரிப்படைந்த அந்த வீரத்தாய் “அதற்கு என்ன செய்யப் போகிறாய் மகனே?” என்று வினவினாள்.

“படை திரட்ட உத்தரவிட்டிருக்கிறேன். வெகு சீக்கிரம் இந்த மேற்கு மலைக்கு அப்புறம் உள்ள *அபராந்தாவில் இருப்பேன்” என்று கூறிய கௌதமிபுத்ரன், “தாயே! அதைப்பற்றி உன்னைக் கலந்து பேசத்தான் வந்தேன்” என்றான். * வடக்கு கொங்கணம்

அவனை உட்காரும்படி ராஜமாதா கைகாட்ட அவள் காலடியில் உட்கார்ந்தான் கௌதமிபுத்ரன். “மகனே! உன் இச்சையும் என் ஆசையும் நிறைவேறப் படைபலம் மட்டும் போதாது. தெய்வ பலமும் வேண்டும்” என்றாள் தனது காலடியில் உட்கார்ந்த மகன் தலைமீது தனது கையை வைத்து ஆசீர்வதிக்கும் முறையில்.

அந்த வாலிபன் தாயைக் கேள்வி கேட்கும் பாவனையில் ஏறிட்டு நோக்கினான். தந்தைக்குப் பிறகு தனக்குத் தந்தையுமாகி வில்வித்தை, வாள்வித்தை அனைத்தும் போதித்த அந்த வீரமாதாவைப் பார்க்க, அவள் விதவைக் கோலங்கண்டு அவன் மனம் நெகிழ்ந்தது. “அம்மா! உன்னை விட இன்னொரு தெய்வம் இருக்கிறதா? மாத்ரு தேவோ பவ என்று வேதம் உன்னைத்தானே முதலில் தெய்வமாகச் சொல்லிற்று?” என்று கேட்டான் அந்த வாலிப வீரன்.

”தாய், தந்தை, குரு கண்கண்ட தெய்வங்கள். கண்ணுக்குப் புலப்படாத ஆத்மாவுக்கு மட்டும் புலப்படும் தெய்வமும் உண்டு மகனே. அவற்றையும் கண்ணுக்குக் காட்டத்தான் விக்ரகங்கள் இருக்கின்றன. அத்தகைய ஒரு தெய்வத்தின் சக்தி உனக்கு வேண்டும்” என்று ராஜ மாதாவின் கண்கள் பிரதிஷ்டான நகரத்தை விட்டு எங்கோ கனவுலகில் சஞ்சரித்தன. கனவில் பேசுவது போலவே பேசமுற்பட்ட பாலஸ்ரீ, “மகனே! நமது மூதாதைகளான சிமுகனும், கிருஷ்ணனும், முதல் சதகர்ணியும் புஜபலத்தோடு தெய்வபலத்தையும் நம்பித்தான் சாதவாகனப் பேரரசை நிறுவினார்கள். அவர்கள் வழிபட்ட தெய்வத்தை நீயும் வழிபட்டு உன் போர் முரசைக் கொட்டு. வெற்றி நிச்சயம். உன் தாய் தனது வாழ்நாளிலேயே மீண்டும் அந்தப் பெரிய சாம்ராஜ்யத்தைப் பார்த்துவிட்டுப் பிராணனை விடுவாள்” என்று உணர்ச்சியுடன் கூறினாள்.

தனது மூதாதைகளின் வெற்றிக்கு ஏதோ தெய்வபலம் காரணம் என்று தாய் சொன்னதைக் கேட்டு வியப்படைந்த கௌதமிபுத்ரன், ”அம்மா, அது எந்த தெய்வம்? எங்கிருக்கிறது?” என்று வினவினான்.

அதுவரை உட்கார்ந்திருந்த மகாராணி பாலஸ்ரீ எழுந்து நின்று கொண்டு, “மகனே! எழுந்து கம்பீரமாக நிற்கும் இந்த ஸஹ்யாத்ரி (மேலை) மலைத் தொடரைப் பார். இங்கிருந்து சற்றுத் தெற்கே கொங்கணத்தின் வழியாகப் போனால் பூமிக்குக் கீழே கோவில்களை உடைய *தாபிலேசுவர் என்ற துறைமுகமிருக்கிறது. இந்தத் துறைமுகத்தில்தான் ஆதிகாலம் தொட்டு அராபியர்களும், யவனர்களும் இதர நாட்டவரும் வந்து வாணிபம் செய்தார்கள். இது முன்பு அமராவதியென அழைக்கப்பட்டது. அங்கு காட்டு ரூபத்தில் தெய்வம் காட்சியளிப்பதாக ஒரு ஐதீகம் உண்டு. இப்பொழுதும் அங்கு பாதாளக் கோவில்கள் பல இருக்கின்றன. ஆனால் தாபிலேசுவரர் கோவில் மலைமீதே இருக்கிறது. அந்த இடத்துக்குப் போ. தாபிலேசுவரரையும் பாதாளத்திலுள்ள சண்டிகா தேவியையும் தரிசித்து வந்து போருக்குப்புறப்படு” என்று ஆவேசத்துடன் கூறினாள்.

தாயின் உத்தரவுப்படி அன்றே புறப்படத் தீர்மானித்தான் கௌதமிபுத்ரன். தனது பெரும் புரவிக்குச் சேணமிட்டுக் கட்டாரியும் வாளும் தரித்து, தாயின் திருவடி தொட்டுப் புறப்பட முயன்ற மகனுக்கு ஓர் எச்சரிக்கையும் விடுத்தாள் பாலஸ்ரீ. “மகனே! நான் சொல்வதை விளையாட்டாக நினைக்காதே. அந்த மலைக் காட்டில் அடிக்கடி பிசாசுகள் உலாவுவதாகக் கேள்வி. எதற்கும் எச்சரிக்கையுடனிரு” என்று கூறினாள்.

வியப்பு நிறைந்த விழிகளைத் தாயின்மீது திருப்பிய கௌதமிபுத்ரன், “என்ன அம்மா! பிசாசா?” என்று குரலிலும் வியப்பு ஒலிக்க வினவினான்.

“ஆம் மகனே! அங்கு ஏதோ ஒரு மோகினிப் பிசாசு உலாவுவதாகவும், அடிக்கடி அது தரைக்கு மேலே வந்து பூமிக்குள் போய் விடுவதாகவும் வதந்தி இருக்கிறது. அது பொய்யாகவும் இருக்கலாம். எதற்கும் எச்சரிக்கையாக இரு” என்றாள்.

“இதை நீ நம்புகிறாயா?” என்றான் கௌதமிபுத்ரன்.

“நான் முதலில் நம்பவில்லை. ஆனால் வதந்தி நாளாக நாளாக வலுக்கிறது. அந்தப் பிசாசுக்கு ஒரு பெயரும் சொல்கிறார்கள்” என்றாள் பாலஸ்ரீ.

“பெயரா!” கௌதமிபுத்ரனின் வியப்பு உச்சிக்குச் சென்றது.

“ஆம் மகனே, பெயரும் விசித்திரமாயிருக்கிறது?”

“என்ன பெயர் அம்மா?”

”சித்தரஞ்சனி!”

“ஏதோ ராகத்தின் பெயர் போலிருக்கிறதே?”

“ஆம். அது சில இரவுகளில் அர்த்த ஜாமத்தில் பாடுமாம். அதைப் பாடும் பாவை என்றும் சொல்கிறார்கள்.”

பிரமித்து நின்றான் கௌதமிபுத்ரன். “அம்மா! அந்தப் பிசாசு அழகாகவும் பாடுவதாகவும் இருந்தால் அதை நான் பிடித்து வருகிறேன்” என்று கூறி நகைத்துக் கொண்டே புரவிமீது தாவினான்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த நகைப்பு மறைந்தது. அந்தப் பாடும் பாவையைப் பார்க்கவும் கேட்கவும் செய்தான் கௌதமிபுத்ரன்.

Previous articleAlai Arasi Ch50 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch2 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here