Home Chittaranjani Chittaranjani Ch10 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch10 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

55
0
Chittaranjani Ch10 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch10 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch10 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 10 சொப்பனமல்ல!

Chittaranjani Ch10 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

முந்திய இரவில் இல்லாமல் மறுநாள் கருக்கல் வேளையில் மந்திர ஜாலத்தால் சிருஷ்டிக்கப்பட்டது போல் மேலைக் கடலில் திடீரென்று தோன்றிய மரக்கலத்தைக் கண்டு சிறிதும் வியப்படையாத கௌதமிபுத்ர சதகர்ணி, அதன் தோற்றம் எதிரிகளின் மனசஞ்சலத்தையும், பீதியையும் வெளிப்படுத்து வதாக எண்ணினான். பிசாசு பயத்தைக் காட்டித் தாபோல் துறைமுகவாசிகளை விரட்டிவிட்ட சாகர்கள் தலைவன், பிசாசுகதையைத்தான் துண்டித்து விட்டதால் ஏற்படக்கூடிய விளைவைச் சமாளிக்கவே இந்தப் புதிய போர்க்கலத்தை துறைமுகத்தருகில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறான் என்று தீர்மானித்த கௌதமிபுத்ரன், வெகு சீக்கிரம் மேலும் மரக்கலங்கள் வருமானால் தாபோல் மலையில் போர் வீரர்கள் இறக்கப்பட்டு அது எதிரிகளின் போர்ப்பாசறையாக மாறிவிடும் என்ற முடிவுக்கு வந்தான். தான் பூஜாரியிடம் சொல்லியனுப்பியுள்ள செய்தியைத் தாபோலிலிருந்து வெளியேறிவிட்ட மக்கள் நம்பி உடனடியாகத் திரும்பினால் தாபோல் எதிரியின் தளமாவது சிறிது சிரமப்படும் என்றும் சதகர்ணி எண்ணினான். ஆனால் மக்களை அவர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையிலிருந்தும் பீதியிலிருந்தும் திடீரென மாற்றுவது அத்தனை சுலபமல்லவென்பதையும் அவன் உணர்ந்திருந்ததால், தான் துணிகரமான செயலில் இறங்கினா லொழிய எதிரி தனது படைகளைத் தாபோல் மலைப் பகுதியில் இறக்குவதைத் தடை செய்ய முடியாதென்றும் திட்டமாக அறிந்திருந்தான்.

இந்த எண்ணங்களுடன் புதிய கப்பலை நோக்கி விரைந்த படகை உற்று நோக்கினான். சித்தரஞ்சனி படகில் நடுவில் உட்கார்ந்திருந்ததையும் அவளுக்கு இருபுறத்திலும் இரு சாக வீரர்கள் ஆயுதந்தாங்கி அமர்ந்திருந்ததையும், படகைத் துடுப்புக்களைத் துழாவிக்கொண்டு படகின் முன்புறத்திலும் பின்புறத்திலும் உட்கார்ந்த இருவரும் மிக துரிதமாகத் துடுப்புகளைத் துழாவியும் அன்று கருக்கலில் இருந்த கடல் கொந்தளிப்பில் அலைகளைச் சமாளித்துக்கொண்டு படகு முன்னேறுவது சிறிது கஷ்டமாக இருந்ததையும் கவனித்த சதகர்ணி எதிரிக்கு இயற்கை சிறிது இடைஞ்சலாக இருப்பதை நினைத்துச் சிறிது முறுவலும் கொண்டான்.

இந்த எண்ணங்களில் அவன் திளைத்திருக்கையில் தனது கைகளிரண்டையும் தூக்கிக்காட்டிப் படகிலிருந்த வீரர்களிடம் சித்தரஞ்சனி ஏதோ சொல்ல முயன்றதையும், அப்பொழுது அவள் கைகளிரண்டும் கயிறு கொண்டு பிணைக்கப்பட்டிருப்பதையும் கண்ட கௌதமிபுத்ரன் படகு கவிழ்ந்தால் அவள் நீந்தித்தப்ப முடியாதென்பதை உணர்ந்து அவள் உயிரைப் பற்றிச் சிறிது கலக்கமும் அடைந்தான். ஆனால் அத்தகைய விபத்து ஏதும் ஏற்படாமல் படகு மெள்ள மெள்ள அலைகளைத் தாவித்தாவிப் புதிய மரக்கலத்தை அடைந்ததைக் கவனித்த சதகர்ணி ஆசுவாசப் பெருமூச்சு விட்டுப் புதிய மரக்கலத்தை விட்டுத் திரும்ப எத்தனித்த சமயத்தில் புதிய மரக்கலத்தின் தளத்தில் ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சி அவன் முகத்தை மீண்டும் கடலை நோக்கித் திருப்பியது.

புதிய மரக்கலத்தின் தளத்தின் முனைக்கு வந்து படகிலிருந் தவர்கள் ஏறிவர நூலேணியைத் தொங்க விட்டவன் சாதாரண வீரனுமல்ல, க்ஷத்ரபனோ, மகாக்ஷத்ரபனோ, இருவரும் அல்ல. ஆஜானுபாகுவும் யௌவன வயதை உடையவனும் வீரக்களை பொருந்தியவனும், இடையில் ஒரு குறுவாளைத்தவிர வேறு எதையும் அணியாதவனுமான ஒரு வீரனே நூலேணியைத் தொங்கவிட்டான். கைகள் கட்டப்பட்டிருந்ததால் நூலேணியில் ஏற முடியாத நிலையைக் கைகளைத் தூக்கி சித்தரஞ்சனி விளக்கியதும் அவன் ஏதோ சைகை செய்ய அவள் கைத்தளைகளைப் படகிலிருந்த வீரனொருவன் குறுவாள் கொண்டு தரித்துவிட இருகைகளையும் சிறிது சரிப்படுத்திக் கொண்டு சித்தரஞ்சனி நூலேணி மீது அனாயாசமாக ஏறிச்சென்றாள். அவள் நூலேணியின் உச்சியை அடைந்ததும் அந்த வாலிபன் அவள் கைகளைப் பிடித்து அரைவாசி தூக்கிவிட்டுப் பிறகு இடையைப் பற்றித் தனக்கும் மேலே தூக்கிப் பிடித்து அவளைத் தனது கண்களால் விழுங்கிய பிறகே தளத்தில் இறக்கினான். பிறகு அவள் இடையை ஆதரவுடன் அணைத்த வண்ணம் அவளை மரக்கலத்தின் தளத்தின் நடுவுக்கு அழைத்துச் சென்றான். அடுத்து அந்த வாலிபனும் சித்தரஞ் சனியும் கண்ணுக்கு மறைந்துவிடவே கௌதமிபுத்ரன் தீர்க்க சிந்தனையுடன் மீண்டும் மலைமீது ஏறிச் சென்றான்.

அப்பொழுது நன்றாகப் பொழுது விடிந்துவிட்டபடியால் தாபோல் மலைக்காடு மிகுந்த அழகுடன் காட்சியளித்தது. மரங்களிலெங்கும் புஷ்பங்கள் புஷ்பித்துக்குலுங்கின. அவற்றின் கிளைகள் சில கடலை நோக்கிக் காற்றில் தலையாட்டியதைக் கண்ட சதகர்ணி அவை சித்தரஞ் சனியைத் திரும்பக் கரைக்கு அழைப்பதாக மனத்தில் நினைத்து அதன் விளைவாக உவகையும் கொண்டான். முதல் நாளிரவில் குகைக்கதவை மூடியதும் பிறகு திறந்ததும் பூஜாரிதானென்பதைத் திண்ணமாக அறிந்திருந்த சதகர்ணி பூஜாரி வாளாவிருக்கமாட்டானென்பதும் துரிதமாகச் செயல்படுவானென்றும் திட்டமாக நம்பினான். அதன் விளைவாகத் தனது புரவியில் ஏறி அஞ்சன்வேல் நதிக்கரையை அடைந்து புரவியையும் நீராட்டித் தானும் நீராடித் திரும்பி வந்து புரவிக்குத் தீனி வைத்துத் தானும் அங்கிருந்த காய் கனிகளை அருந்தி பூஜாரியின் வரவை எதிர்நோக்கியிருந்தான்.

பூஜாரி நடுப்பகல் தாண்டிய பிறகே வந்து சேர்ந்தார். வந்ததும் வராததுமாகத் தாபிலேசுவரருக்கு அபிஷேகம், பூஜை முதலியவற்றை முடித்து நிவேதனம் சமர்ப்பித்து அதில் தனக்கும் சிறிது பிரசாதம் கொடுக்க அதை உண்ட சதகர்ணி, “பெரியவரே! போன காரியம் என்னவாயிற்று?” என்று வினவினான்.

பூஜாரி முகத்தில் பெரும் துயரச்சாயை படரவிட்டுக் கொண்டார். “பிசாசு போய்விட்டதை யாரும் நம்பவில்லை. நான் சொல்வது சுத்தப்புரட்டு என்று சொல்கிறார்கள். யாரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப மறுக்கிறார்கள்” என்றார் பூஜாரி.

“நான் யாரென்பதைச் சொன்னீரா?” என்று வினவினான் சதகர்ணி.

“சொன்னேன்.”

“அதற்கு என்ன சொல்கிறார்கள்?”

“மோகினிப் பிசாசின் கையில் நீங்கள் சிக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்…”

“பெரியவரே! அவர்களைப் பிசாசு ஏதுமில்லை என்று நம்பச் செய்ய வழியே கிடையாதா?” என்று வினவினான்.

“இருப்பதாகத் தெரியவில்லை” என்றார் பூஜாரி.

தீவிர சிந்தனையில் ஆழ்ந்த கௌதமிபுத்ரன் நீண்ட நேரம் ஏதும் பேசவில்லை. கடைசியாக ஒரு தீர்மானத்துக்கு வந்து, “பெரியவரே! இந்த க்ஷத்ரபர்களை நான் சமாளித்துக் கொள்கிறேன். நீர் என் தலைநகரத்திற்குச் சென்று வாரும். எனது தாயாருக்கு ஒரு கடிதம் தருகிறேன். அதைக் கொடுத்தால் எங்கள் வீரர்கள் சிலரை உம்முடன் அனுப்புவார்கள். அவர்களை அழைத்து வாரும்” என்றான்.

பூஜாரி சிறிது சிந்தனையில் இறங்கிவிட்டு, “நான் இங்கிருந்து போகமுடியாது” என்றார் முடிவாக.

“ஏன்?” வியப்புடன் வினவினான் சதகர்ணி.

“தாபிலேசுவரர் பூஜையை விட்டு நான் போக முடியாது” என்றார் பூஜாரி.

“பூஜையை நான் செய்கிறேன்” என்றான் சதகர்ணி.

“உங்களுக்குப் பூஜை செய்ய அருகதை கிடையாது. இது என் பரம்பரை தர்மம். இவருக்கு நான் தான் பூஜை செய்யவேண்டும்” என்று திட்டமாகச் சொன்ன பூஜாரி அங்கேயே இரவு வரையில் தங்கிவிட்டு இராக்கால பூஜையையும் முடித்துக்கொண்டு கிளம்பினார். “எதற்கும் நாளை பூஜையில் சந்திப்போம்” என்று கூறிச் சென்று விட்டார்.

அவர் சென்றதும் மிகவும் குழம்பிய மனத்துடன் சிறிது நேரம் கோவிலின் முகப்புத் திண்ணையில் உட்கார்ந்திருந்த கௌதமிபுத்ரன் மெதுவாகக் கடற்கரையை நோக்கிச் சென்றான். கடற்கரை முகப்பிலிருந்த பாறைகளில் மறைந்து உட்கார்ந்த வண்ணம் கடலில் நின்ற மரக்கலத்தையே நோக்கிக் கொண்டிருந்தான். இரண்டாவது ஜாமம் முடிந்ததும் புதிய மரக்கலத்தில் எந்தவித நடவடிக்கையும் காணோம். அதில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளும் அணைக்கப்பட்டன. அப்படி அணைக்கப்பட்டாலும் நன்றாய்க் காய்ந்த நிலவின் விளைவாக அந்த மரக்கலத்தில் நடந்து கொண்டிருந்த மாலுமிகள் நன்றாகவே கண்ணுக்குத் தெரிந்ததைக் கண்ட கௌதமிபுத்ரன் இரவும் பகலும் மரக்கலம் காக்கப்படுவதால் மகாக்ஷத்ரபனும் க்ஷத்ரபனும் ஏதோ புது நிகழ்ச்சியை எதிர்பார்க்கிறார்களென்பதைப் புரிந்து கொண்டான். ஆனால் அது என்ன ஆபத்தாயிருக்கும் என்று நினைத்து விடை காணாத சதகர்ணி அந்த மரக்கலத்தில் சித்தரஞ்சனி எங்கிருப்பாள், எப்படியிருப்பாள் என்று சிந்தித்தான். அவளது இடையைப் பிடித்து அழைத்துப் போனவன் யார்? அவனுக்கும் சித்தரஞ்சனிக்கும் என்ன உறவிருக்கும்? இப்படியெல்லாம் சிந்தித்த கௌதமிபுத்ரன் எப்படியாவது அந்த மரக்கலத்தை அணுகத் தீர்மானித்த சமயத்தில் அஞ்சன்வேல் நதியில் படகொன்று வரவே அதிலிருந்து இரண்டு வீரர்கள் இறங்கி மலைக்காட்டுக்குள் வந்தார்கள்.

அவர்கள் மலைக்காட்டுக்குள் வந்து தாபிலேசுவரர் சந்நிதியை நோக்கிச் செல்வதைக் கண்ட சதகர்ணி மெதுவாகத் தனது மறைவிடத்தை விட்டு வெளியே வந்து படகை நோக்கிச் சென்றான். அதில் துடுப்புகளைச் சித்தமாக வைத்துக்கொண்டிருந்த படகோட்டிக்குப் பின்னால் மெதுவாகப் படகில் ஏறி, “உம்! படகை விடு” என்றான். படகை விட்டுப்போன இருவரில் ஒருவர் மட்டும் வந்ததாக எண்ணிய படகோட்டி, “இன்னொருவர் எங்கே?” என்று கேட்டான்.

“பிறகு வருவார்” என்று மெதுவாகச் சொன்னான் சதகர்ணி.

குரல் வித்தியாசப்பட்டதால் சந்தேகத்துடன் திரும்பிய படகோட்டியின் பொட்டில் கோடாரியின் பிடிபலமாகத்தாக்கவே படகோட்டி அப்படியே படகில் விழுந்தான். அவனது தலைப்பாகையை எடுத்துத் தனது தலையில் சுற்றிக்கொண்ட கௌதமிபுத்ரன் படகில் உட்கார்ந்திருந் தான் மற்ற இருவர் வருகைக்காக. சிறிது நேரத்திற்கெல்லாம் வந்த அந்த இருவரும் படகில் ஏறிக்கொண்டு “படகை செலுத்து, பட்சி பறந்து விட்டது” என்று கூற கௌதமிபுத்ரன் வேகமாகத் துடுப்புகளைத் துழாவினான்.

படகு மரக்கலத்தை நோக்கி விரைந்து கொண்டிருக் கையில் இருவரில் ஒருவன் கேட்டான். ”சாதவாகனன் எங்கே போய் விட்டான்?” என்று.

“யாருக்குத் தெரியும். அவன் கோவிலிலோ சுற்றுப் புறத்திலோ காணோம். அவன் புரவியுமில்லை” என்றான் மற்றவன்.

“அவன் எங்கும் போக முடியாது. விரைவில் நம்மிடம் சிக்குவான்” என்றான் முதலில் பேசியவன்.

அந்தச் சமயத்தில் சதகர்ணியால் பொட்டில் அடிக்கப் பட்டு நினைவு தப்பிக்கிடந்த படகோட்டியைப் படகின் முகப்பில் விட்டு அவன்மீது சதகர்ணி அமர்ந்திருந்தாலும் இரு வீரர்கள் கவனம் மரக்கலத்தின் மீதிருந்ததாலும் அவர்கள் சந்தேகம் ஏதுமில்லாமலே பயணம் செய்தார்கள். மரக்கலத்தைப் படகு அணுகிய சமயத்தில் படகோட்டிக்குச் சிறிது ஸ்மரணை வந்து அவன் முனகவே இரு வீரர்களும் “யார் முனகுவது?” என்று விசாரிக்கவே, “நான்தான். இந்தக் கடற்காற்று என் விலாப்பக்கத்தைச் சிறிது பிடித்திருக்கிறது” என்று முக்கி முனகி சதகர்ணி பதில் சொல்லவே அவர்கள் மேற்கொண்டு கேள்வி ஏதும் கேட்காமல் மரக்கலத்தைப் படகு அணுகியதும் குரல் கொடுக்க நூலேணி வந்தது. நூலேணியில் ஒருவர் பின்னொருவராக ஏறியதும், “நீ போகலாம் கோட்டைக்கு” என்று வீரன் ஆணையிடப் படகை மறுபக்கம் திருப்பிக் கரையை நோக்கிச் சிறிது தூரம் சென்ற சதகர்ணி மீண்டும் படகை மரக்கலத்தை நோக்கித் திருப்பினான்.

இரவின் மூன்றாம் ஜாமம் நெருங்கிவிட்டதால் மரக்கலத்தில் அதிக சத்தம் ஏதும் கேட்கவில்லை. அலைகளின் ஓசையைத் தவிர வேறு சப்தம் எதுவும் காணோம். பட கோட்டி முகத்தில் சிறிது கடல்நீரை அள்ளித் தெளித்து எழுப்பிய சதகர்ணி, “நீ படகைக் கோட்டைக்கு ஓட்டிச்செல்” என்று கூறினான்.

“என்னைப் பொட்டில் யாரோ அடித்தார்கள்” என்று முனகினான் படகோட்டி.

“அவன் ஓடிவிட்டான். நீ போதலைவர் காத்திருப்பார்” என்று கூறினான்.

“ஆம், ஆம் அவரைக் காக்க வைக்கக்கூடாது. அந்த இன்னொரு வீரர்…” என்று ஏதோதுவங்கினான்.

”நூலேணியில் ஏறிப்போய் விட்டார்” என்ற சதகர்ணியின் குரலைக் கேட்டதும், “உன் குரல் புதிதாக இருக்கிறதே…” என்றான் படகோட்டி.

அடுத்து அவன் பேசவில்லை, கோடாரி இன்னொரு முறை பொட்டில் சம்பந்தப்பட்டதால். மறுமுறை படகோட்டி சுரணையற்றதும் படகை மரக்கலத்தைச் சுற்றிச் செலுத்தினான் சதகர்ணி. மரக்கலத்தின் ஒரு பக்கப்பலகையில் பாய் மரக்கயிறு ஒன்று விழுந்து கிடந்ததைக் கண்டதும் அதை மெதுவாகப் பிடித்து இழுத்துப் பார்த்தான். அது மேலே நன்றாகப் பிணைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதைப் பிடித்துக்கொண்டு பலகை மீது தொத்தி ஏறினான். தளத்தருகே வந்ததும் மெதுவாகத் தளத்தின் மீது கண்களை ஓடவிட்டுத் தூரத்தே இருந்த காவலர் அறியாமல் மெதுவாக ஏறித் தளத்துப் பலகையில் ஓசைப்படாமல் இறங்கிப் படுத்துவிட்டான்.

தளத்தில் சுமார் நாலைந்து காவலரே இருந்ததாலும் அவர்களும் அலுத்துத் தளத்தின் ஒரு மூலையில் உட்கார்ந்து பேச முற்பட்டதாலும் மெதுவாக எழுந்து நடந்த சதகர்ணி தளத்தின் நடுவிலிருந்த தலைவன் அறையை நாடிச் சென்றான். உள்ளே யாரோ பேசும் குரல் கேட்டுக் கதவிடுக்கின் வழியாக உள்ளே நோக்கினான். அங்கே அவன் கண்ட காட்சி அவனை உலுக்கி விட்டது. அங்கிருந்த பஞ்சணையில் கைகால்கள் பிணைக்கப்பட்டுச் சித்தரஞ்சனி கிடந்தாள். “கௌதமிபுத்ரனைப் பற்றி எண்ணிப் பயனில்லை. அவன் உதவிக்கு வரமாட்டான்” என்று கட்டிலுக்கு எதிரே நின்ற வாலிபன் கூறினான். அவன் குரலில் ஏளனம் ஒலித்தது.

“கண்டிப்பாய் வருவார். வந்தால் உன் கதி அதோ கதிதான்” என்றாள் சித்தரஞ்சனி படுக்கையில் கிடந்த வண்ணம்.

“அப்படி என்ன அக்கறை உன்னிடம் அவனுக்கு?” என்று கேட்டான் அந்த வாலிபன்.

“அவர் என் கணவர்” என்று சித்தரஞ்சனியின் முகத்தில் மகிழ்ச்சிச்சாயை விரிந்தது.

“உன்…. என்ன?”

“கணவர்…. என்னைக் கைவிடமாட்டார்.”

“சொர்ப்பனம் காண்கிறாய்!”

“சொப்பனமல்ல” என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்து கதவைச் சாத்திவிட்டு அதன்மீது சாய்ந்து நின்றான் சதகர்ணி.

Previous articleChittaranjani Ch9 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch11 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here