Home Chittaranjani Chittaranjani Ch11 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch11 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

45
0
Chittaranjani Ch11 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch11 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch11 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 11 காத்திருந்தவன்! நேற்று வந்தவன்!

Chittaranjani Ch11 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

இரவின் மூன்றாம் ஜாமத்தில், எதிரேயிருந்த தாபோல் மலைக்காட்டு துஷ்டமிருகங்களின் கர்ஜனை தவிர வேறு எந்த அரவமும் கேட்காத பயங்கரச் சூழ்நிலையில், மரக்கலக் காவலனையும் மீறி யாரும் மரக்கலத்தை அணுகுவதோ அதில் ஏறுவதோ நடக்காத காரியமென்று தீர்மானத்திலிருந்த யௌவன வீரன், சித்தரஞ்சனி எதிர்பார்த்தது சொப்பனமல்ல வென்பதைச் சர்வ சாதாரணமாக உணர்த்திய வண்ணம் அறைக்கதவில் சாய்ந்து நின்ற கௌதமிபுத்ரனைக் கண்டதும் அவன் பெரும் வியப்பே அடைந்தாலும், பீதியைச் சிறிதும் அடைந்தானில்லை. சதகர்ணியின் குரலைக் கேட்டுச் சரேலெனத் திரும்பிய அந்த வாலிபன், “நீ யார்? இங்கு எப்படி வந்தாய்? சிங்கத்தின் வாயில் தானாகத் தலையை விட்டு மடிய அத்தனை விரக்தி எப்படி வந்தது?” என்று விடுவிடு என சொற்களை உதிர்த்தான். இத்தனைக்கும் அவன் எந்தவிதப் பதற்றத்தையும் காட்டாமலே ஏதோ குற்றவாளியை விசாரிக்கும் நீதிபதியைப் போலவே நின்றான்.

கௌதமிபுத்ரன் கதவுமீது சாய்ந்த நிலையிலிருந்து சற்றும் அசையாமலே, “என் துணிவைப்பற்றி இன்று வரை யாரும் சந்தேகப்பட்டதில்லை. சிங்கத்தின் வாயில் தலையை விடுவதென்றால் சிங்கம் யார் என்பதையும் பொறுத்திருக்கிறது” என்றான் நிதானமாக.

அவன் நிதானத்தையும், அவன் பதில் சொன்னதைத் தொடர்ந்து உதடுகளில் விரவிய புன்முறுவலையும் கவனிக்கவே செய்த சாக வாலிபன், “நீ இருக்கும் நிலை உனக்குப் புரியவில்லையா? புரிந்துதான் அசட்டுத்துணிவைக் காட்டுகிறாயா?” என்று வினவினான்.

“யார் நிலை யாருக்குப் புரியவில்லையென்பது தர்க்கத் துக்கு உரிய விஷயம்” சதகர்ணி சொற்களை இழுத்தான்.

“இதில் தர்க்கத்துக்கு என்ன இருக்கிறது? இப்பொழுது கூட நான் ஒரு குரல் கொடுத்தால் இம்மரக்கலத்திலுள்ள காவலர் உன்னை வெட்டிப் போடுவார்கள்” என்று சுட்டிக் காட்டினான் அந்த வாலிபன்.

“அதில் இரண்டு கஷ்டங்கள் இருக்கின்றன. முதலில் உன் குரல் வெளிப்படவேண்டும்.”

“வெளிப்பட என்ன தடை?”

“உயிர் இருந்தால்தானே குரல் கொடுக்க முடியும்?”

“உயிர் இப்போது எங்கு போய்விடும்?”

“இதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. சாஸ்திரங் களே இதற்குப் பதிலைத் தேடிக்கொண்டிருக்கின்றன. ஒன்று நிச்சயம் நீ குரல் கொடுக்க முற்படுமுன் உனது உடலிலிருந்து உயிர் ஓடிவிடும். பிறகு அது எங்கு போகிறது, என்ன செய்கிறது என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது” என்ற சதகர்ணி, “காஷ்டானா!” என்று அந்த வாலிபனை அழைத்தான்.

அந்த ஒரு சொல் அந்த வாலிபனுக்குப் பேரதிர்ச்சியை அளித்திருக்கவேண்டும். “என்னை உனக்கு முன்பே தெரியுமா?” என்று வினவினான் அதிர்ச்சி ஒலித்த குரலில். “ஏன் தெரியாது. நீ சாக இனத்தவனல்லவா?”

“ஆம்”

“நான் சாகா இனத்தவன், சதகர்ணி.”

அந்த வாலிபன் கல்லாய்ச் சமைந்து நின்றான். “கௌதமி புத்ர சதகர்ணியா?” என்று அதிர்ச்சியின் விளைவாகச் சிறிது குளறினாலும் விநாடி நேரத்தில் தன்னைச் சமாளித்துக் கொண்டு, “கௌதமிபுத்ரா! நீ இங்கு வந்திருப்பது தெரிந்தால் உடனடியாக வெட்டப்படுவாய். வந்த மாதிரியே தப்பி ஓடிவிடு” என்று கூறினான்.

கௌதமிபுத்ரனைப் பற்றி காஷ்டானன் கேள்விப் பட்டிருந்தாலும், அவன் தாபோல் மலையில் இருப்பதைப் பற்றி மகாக்ஷத்ரபர் அறிவித்திருந்ததால் அதை உணர்ந்திருந்தாலும் அவன் இன்றுவரை சாதவாகனனை நேரில் பார்த்த தில்லையாகையால் சித்தரஞ்சனியின் உதவிக்கு வேறு யாரையோ சதகர்ணி அனுப்பியிருக்க வேண்டுமென்றே நினைத்திருந்த காஷ்டானன், வந்திருப்பவன் கௌதமி புத்ரனே என்பதை அறிந்ததும் அச்சத்திற்கே உள்ளானான். தான் தப்பி ஓடிவிடச் சொன்ன பிறகும் சதகர்ணி இடித்த புளியைப்போல் நின்ற இடத்தை விட்டு அசையாததைக் கண்டு, “ஏன் நிற்கிறாய்? உன்னைப் பேராபத்து சூழ்ந்திருக்கிறது. பொழுது விடிந்ததும், மகாக்ஷத்ரபரும், க்ஷத்ரபரும் இங்கு வருவார்கள். வந்த பின்பு நீ இங்கிருந்து அசைய முடியாது. ஆகவே இப்பொழுதே போய்விடு” என்று வலியுறுத்தினான்.

“நான் மன்னன்’ என்று சுட்டிக்காட்டினான் சதகர்ணி.

“அதனாலென்ன?” என்று காஷ்டானன் கேட்டான்.

“குற்றவாளியைத் தண்டிக்காமல் நான் போக முடியாது.”

“யார் குற்றவாளி?”

“நீதான்” என்ற சதகர்ணி, “காஷ்டானா! சித்த ரஞ்சனி இந்த மரக்கலத்தின் மீது ஏறி வந்ததும் அவள் இடையைப் பிடித்து அழைத்துப் போனாய். தவிர இந்த அறைக்கு வந்ததும் ஏற்கனவே தறிக்கப்பட்ட கைகால் தளைகளுக்குப் பதில் வேறு கயிறு கொண்டு அவளைப் பிணைத்துக் கட்டிலில் தள்ளியிருக்கிறாய். அவளைத் தொட்டதற்கே உன்னைக் கொன்றிருப்பேன். அவளைக் கைகால்களைக் கட்டி இந்தக் கட்டிலில் தூக்கிப் போட்டதற்கும் உன்னைக் கொல்ல வேண்டும். ஒரு மனிதனை ஒரு தடவைக்கு மேல் கொல்ல முடியாதாகையால் உனக்கு என்ன தண்டனை விதிக்கலாமென்று எனக்கே புரியவில்லை” என்ற கௌதமிபுத்ரன், “காஷ்டானா! அறையின் அந்த மூலைக்குச் செல்” என்று கூறி ஓர் எட்டில் அவனை அடைந்து அவன் கச்சையிலிருந்த குறுவாளை எடுத்துக்கொண்டான். அடுத்து அவனை அறை மூலைக்குத் தள்ளி விட்டு, அந்தக் குறுவாளால் சித்தரஞ்சனியின் தளைகளை அறுத்துப் போட்டான். பிறகு அவளைத் தூக்க முயன்ற சமயத்தில் “அவளைத் தொடாதே!” என்று கூவினான் காஷ்டானன்.

“ஏன் தொடக்கூடாது?” என்று வியப்புடன் கேட்டான் சதகர்ணி.
“அவள் என்னை மணக்க வேண்டியவள்” என்றான் காஷ்டானன்.

“அப்படியென்ன கட்டாயம்?” என்று சதகர்ணி வினவினான் ஏளனக் குரலில்.

“எங்கள் திருமணத்தை நிச்சயித்து ஓராண்டுக் காலம் ஆகிவிட்டது” என்றான் காஷ்டானன்.

“இவளை மணக்க உனக்குத் தகுதி கிடையாது.”

“என் தகுதிக்கு என்ன குறைச்சல்?”

“இந்தச் சித்தினியை நீ எப்படி ஓராண்டு காலம் மணக்காமல் விட்டுவிட்டாயோ, அப்பொழுதே உனக்குத் திருமணத் தகுதி போய் விட்டது. தவிர….” சற்று நிறுத்திக் காஷ்டானனை நோக்கினான் சதகர்ணி.

“தவிர? வேறு என்ன?”

“நீ காலங் கடத்தியதால் ஏற்பட்ட தவறு.”

“என்ன தவறு?”

லேசாக நகைத்த கௌதமிபுத்ரன், “தமிழில் ஒரு பழமொழி உண்டு” என்றான்.

“பழமொழியா! இப்பொழுது பழமொழிக்கென்ன அவசரம்?” என்று கேட்டான் காஷ்டானன்.
“நிலைமைக்குப் பொருத்தமாயிருக்கிறது. “காத்திருந் தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போனான்’ என்பது பழமொழி. நீ காத்திருந்தவன், நான் நேற்று வந்தவன். காதலில் காத்திருப்பதைப் போலப் பைத்தியக்காரத்தனம் வேறில்லை” என்ற சதகர்ணி, “சித்தரஞ்சனி! வா என்னுடன்” என்று கூறி அவளைக். கட்டிலிலிருந்து இறக்கி அவள் இடையில் தனது இடது கையைச் செலுத்தித் தன்னுடன் இழுத்துக் கொண்டான்.

அதைக் கண்ட காஷ்டானன் உறுமினான். “காஷ்டானா! அறிவுடன் நடந்துகொள். என் கச்சையிலிருக்கும் கட்டாரி உன் உயிரைக் கண்ணிமைக்கும் நேரத்தில் முடித்துவிடும். கதவை ஓசைப்படாமல் திற. காவலரைப் படுக்கும்படி உத்தரவிடு. பிறகு நூலேணியை நீயே தொங்கவிடு. நானும் சித்தரஞ்சனியும் இறங்கிப் படகை அடையுமுன்பு எந்தவிதச் சைகை செய்தாலும் வாயைத் திறந்தாலும் பிணமாகி விடுவாய். நான் உன் பின்னாலேயே நெருங்கி வருவேன். எந்தவித அலுவலிலும் அனாவசியமாக இறங்காதே. உனக்கு நல்ல காலம் இருக்கிறது. அதை வீணாக அழித்துக் கொள்ளாதே” என்று சொன்ன சதகர்ணி அந்த அறையிலிருந்த விளக்கை ஊதிவிட்டான். சித்தரஞ்சனியைத் தனக்குப் பின்னால் வரும்படி அவள் கையை அழுத்தி ஜாடையால் கூறிவிட்டுக் கதவை மெதுவாகத் திறந்து, “முன்னால் செல்” என்று காஷ்டானன் காதில் ஓதினான் மெதுவாக மந்திரம் ஓதுவது போல்.

காஷ்டானன் மெதுவாக வெளியே தலையை நீட்டிப் பார்த்தான். மரக்கலத் தளத்துக் கோடியில் மாலுமிகள் பலர் படுத்து நன்றாக உறங்கிக்கொண்டிருந்தார்கள். நிலவின் வெளிச்சத்தில் காவலர் கும்பகர்ண சகோதரர்களாகி விட்டதைக் கண்ட சதகர்ணி மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். சாக வாலிபனும் எந்தவித சப்தமும் இன்றி மெதுவாக அந்தப் பெரும் மரக்கலத்தளத்தில் நடந்து, அங்கிருந்த நூலேணியை ஓசைப்படாமல் இறக்கினான். “இனி இறங்கலாம்” என்று சொன்ன காஷ்டானனை, ‘நீ முதலில் இறங்கு” என்று கூறியதன்றி வலுக்கட்டாயமாக இறக்கவும் செய்தான். அவனை அடுத்துத்தானும் இறங்கினான். பிறகு சித்தரஞ் சனியையும் இறங்கச் சொல்ல அவளும் மெதுவாக வரவே அவளைத் தூக்கி அங்கிருந்த படகில் இறக்கி விட்டான். “நான் வந்த படகைவிட இது பெரிதாயிருக்கிறது” என்று சிலாகித்த சதகர்ணி, “துறை முகத்துக்கு விடு படகை” என்று கூறினான். அந்தப் படகில் பெரிய முண்டாசு ஒன்றைக் கட்டிக்கொண்டு சற்றே குளிர் இருந்ததால் பெரிய போர்வையால் உடலை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்த படகோட்டிதுடுப்புகளைத் துழாவப்படகு விரைந்தது.

துடுப்புகளைத் துழாவுபவன் ஒருவனேயென்பதையும் அவன் நல்ல பலசாலியென்பதையும் துடுப்புகளை அவன் துழாவிய வேகத்திலிருந்தே புரிந்துகொண்ட சதகர்ணி, சிறிது தூரம் படகு சென்றதும், தாபோல் மலைப்பகுதியை விட்டு வேறு வழியில் செலுத்தப்படுவதைக் கண்டு, “படகைத் திருப்பு. துறைமுகத்துக்குப் போ” என்ற உத்தரவிட்டான்.

அவன் உத்தரவைக் காதில் வாங்காத படகோட்டி அஞ்சன்வேல் நதியை நோக்கிப் படகைச் செலுத்தினான். அதனால் வெகுண்ட கௌதமிபுத்ரன் தனது கச்சையில் கையை வைத்தான் கோடாரியை எடுக்க, கோடாரி கச்சையில் இல்லை. தான் நிராயுதபாணியாகி விட்டதைப் புரிந்து கொண்ட சதகர்ணி, “படகோட்டி! இப்படித்திருப்பு” என்று உத்தரவிட்டான். அதே சமயத்தில் சதகர்ணியின் முதுகில் குறுவாளொன்று ஊன்றப்பட்டது. படகோட்டியும் திரும்பினான் சதகர்ணியை நோக்கி, திரும்பியவன் முகத்தில் வெண் நிலவு பூர்ணமாய் விழுந்தது. அந்த முகம் நாகபாணன் முகம்!

Previous articleChittaranjani Ch10 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch12 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here