Home Chittaranjani Chittaranjani Ch12 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch12 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

68
0
Chittaranjani Ch12 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch12 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch12 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 12 அஞ்சன்வேல் கோட்டை

Chittaranjani Ch12 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

காலம் அனுகூலமாயிருந்தாலொழிய மனிதன் போடும் எந்தக் கணக்கும் பலனளிப்பதில்லை. எந்தத் திட்டமும் உருப்படியாக நிறைவேறுவதில்லை என்ற உண்மையை கௌதமிபுத்ரன் அந்த இரவின் நிகழ்ச்சிகளிலிருந்து புரிந்து கொண்டான். எத்தனையோ திறமையுடன் தான் படகோட்டியைப் பொட்டிலடித்து அவனைப்படகில் படுக்க வைத்து அவன்மீது ஏறி உட்கார்ந்து கொண்டதன்றி அவன் தலைப்பாகையையும் தான் தரித்துக்கொண்டதால், மலைக்குச் சென்று வந்த எதிரி வீரர்களைத் தான் ஏமாற்றி விட்டதையும், இன்னொரு முறையும் அவனைப்பொட்டி லடித்துப் படகிலிருந்து பாய்மரக்கயிறு மூலம் மரக்கலத்தில் ஏறிக் குதித்துக் காஷ்டானனையும் சித்தரஞ்சனியையும் அழைத்து வந்ததையும் எண்ணி, இத்தனை திறமையுடன் சித்தரஞ்சனியை விடுவித்துங்கூட கடைசியில் நாக பாணனிடம் சிக்கிக்கொண்டதை நினைத்ததால் மனிதத் திறமை எதையும் சிதற அடிக்கக்கூடிய மகாசக்தி வேறொன்றிருப்பதை உணர்ந்து கொண்டான்.

சந்திரவெளிச்சம் இருந்தும் படகில் தான் படகோட்டியின் துணியைத் தலைப்பாகையாகச் சுற்றி மலையில் தன்னைத் தேடிப் பார்த்து வந்த வீரர்களை ஏமாற்றிய அதே வழியைப் பின்பற்றி மகாக்ஷத்ரபனான நாகபாணன் தன்னை ஏமாற்றி விட்டதையும் நினைத்துப் பார்த்து, ஒரே வித்தையை இருவர் கையாள முடியுமென்பதைப் புரிந்து கொண்டதாலும், தான் நிராயுதபாணி யாக்கப்பட்டிருப்பதை அறிந்து கொண்டதாலும் தனது நிலையை எடை போடத் துவங்கினான். சித்தரஞ்சனியை முன்னால் அனுப்பி காஷ்டானுக்குப் பின்னால் தான் மிகுந்த எச்சரிக்கையுடன் வந்தும் படகில் இறங்கிய சமயத்தில் தன்னுடன் லேசாக இழைந்த காஷ்டானன் தனது கோடரியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமென்றும், மரக்கல அறையில் சித்தரஞ்சனியின் தளைகளை அறுத்த பிறகு குறுவாளைப் படுக்கை மீது எறிந்துவிட்டதால் காஷ்டானன் அதை எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமென்றும் உணர்ந்து கொண்ட கௌதமிபுத்ரன், காஷ்டானனும், தான் எடை போட்டது போல் அத்தனை அறிவிலி அல்ல என்றும் புரிந்து கொண்டான். தனது முதுகில் ஊன்றப்பட்டிருந்த குறுவாள் காஷ்டானனுடைய குறுவாளேயென்பதில் சதகர்ணிக்குச் சந்தேகமில்லாததால் தன்னைத் திரும்பி நோக்கிய நாகபாணனைப் பார்த்து மெல்லப் புன்முறுவல் கொண்டான்.

அவன் தன்னைப் பார்த்துப் புன்முறுவல் செய்ததைக் கவனித்த நாகபாணன், சாதவாகனன் தைரியத்தை உள்ளூர மெச்சிக் கொண்டதன்றி, “கௌதமிபுத்திரா! உன் துணிவை நான் மிகவும் பாராட்டுகிறேன்” என்று கூறவும் செய்தான்.

இதைக்கேட்ட கௌதமிபுத்ரன், “மகாக்ஷத்ரபர், அபராந்தா என்ற சிறப்புப் பெயர் கொண்ட கொங்கணத்தை ஆளும் மகாராஜா, கேவலம் தலைப்பாகையணிந்து படகோட்டி வேஷம் போட முன்வந்தது எத்தனை விசித்திரம்” என்று நகைச்சுவையைக் காட்டினான்.

மகாக்ஷத்ரபனான நாகபாணனும் கௌதமிபுத்ரனுக்குச் சிறிதும் சளைக்காமல், “ஒரே வேஷம் இருவருக்கும் பொருந்துகிறது. ஆனால் கடைசியில் பலன் கிடைப்பது சாதவாகனருக்கல்ல. சாகர்களுக்குத்தான் கிட்டுகிறது. படகை மன்னர் இருவர் செலுத்தலாம் என்பதற்கு நாம் இருவருமே அத்தாட்சி. ஒரே ஒரு வித்தியாசம்…” என்று கூறியவன் வாசகத்தை முடிக்க வில்லை.

கௌதமிபுத்ரன் இதழ்களில் இளநகை அரும்பியது. “என்ன வித்தியாசமோ?” என்று வினவவும் செய்தான் புன்முறுவலின் ஊடே.

“மரக்கலத்துக்கும் கோட்டைக்கும் உள்ள வித்தியாசம்” என்றான் நாகபாணன். மேலும் விளக்கினான். “சாதவாகனா! நீ சித்தரஞ்சனியை விடுவிக்க மரக்கலத்தை நாடினாய். உங்களிருவரையும் அஞ்சன் வேல் கோட்டைக்குக் கொண்டு போக நான் முன்னதாகவே முடிவு செய்தேன். சித்தரஞ்சனி எப்பொழுது மரக்கலத்துக்குக் கொண்டு போகப்பட்டாளோ அந்தச் சமயத்திலிருந்து உன்னைக் கண்காணித்து வருகிறேன். நீ படகை ஓட்டி வந்ததை நான் மரக்கலத்திலிருந்தே கவனித்தேன். நீ மரக்கலத்தில் ஏறி உள்ளே சென்றதும் அடுத்து நீ சித்தரஞ்சனியுடன் வெளியே வருவாய் என்பதை அறிய பிரமாத அறிவு தேவையில்லை. நீ அறைக்குள் நுழைந்தவுடன் நான் இந்தப் படகை அவிழ்த்து மிதக்க விட்டுச் சித்தமாயிருந்தேன் உன் வருகையை எதிர்பார்த்து…”

இதைக் கேட்டு மகாக்ஷத்ரபன் சூக்ஷ்ம புத்தியை வியந்த கௌதமிபுத்ரன், “நான் அந்த இடத்தில்தான் இறங்குவே னென்பது எப்படித் தெரியும்?” என்று வினவினான்.

“மரக்கலத்தில் நான்கு நூலேணிகள் உண்டு. மூன்றை மறைத்து விட்டேன். ஒன்றை மட்டும் கண்ணுக்குப் புலப்படும்படி போட்டு வைத்தேன். அது கிடந்த இடத்துக்கு நேர் கீழே இருந்த சமுத்திர மட்டத்தில் நான் படகுடன் நின்றேன்” என்றான் மகாக்ஷத்ரபன்.

“முந்தியே திட்டமிட்டுத்தான் செய்திருக்கிறீர்கள் உங்கள் அலுவலை. ஆனால் உங்கள் திட்டத்தை அறிந்த காஷ்டானன் ஏன் உடனடியாக என்னைப் பிடிக்க ஏற்பாடு செய்யவில்லை?” என்று கேட்டான் சதகர்ணி.

“திட்டத்தை நான் காஷ்டானனுக்குச் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் நீ இப்பொழுது என்னிடம் சிக்கியிருக்க முடியாது” என்ற நாகபாணன், “சாதவாகனா! கோட்டைக்குச் சென்றபின் சில முடிவுகளை எடுக்கத் தீர்மானித்திருக்கிறேன். அவற்றுக்கு நீ இடைஞ்சலாக இல்லையென்றால் உன்னை உடனே விடுதலை செய்து அனுப்பி விடுகிறேன். என்னுடைய விரோதத்தைவிட எனது நட்பு உனக்குப் பயனளிக்கும்” என்று கோட்டையில் நடக்கக்கூடியது என்னவென்பதைப் பற்றிச் சிறிது சூசகமும் காட்டினான்.

மகாக்ஷத்ரபன் சொற்களைக் கேட்ட சதகர்ணி லேசாக நகைத்தான். “ஏன் நகைக்கிறாய் சாதவாகனா?” என்று வினவினான் நாகபாணன்.

“எந்தத் திட்டமும் காலத்தின் அனுகூலத்தையோ பிரதிகூலத்தையோ பொறுத்தது. இந்தச் சமயத்தில் காற்று உமது பக்கம் வீசுகிறது. எந்த விநாடியில் அது என் பக்கம் திரும்புமென்று சொல்லமுடியாது. நாம் திட்டம் தீட்டலாம். ஆனால் முடிவு காலத்தைப் பொறுத்தது. நமது கண்ணுக்குத் தெரியாத, அறிவுக்கும் எட்டாத ஏதோ ஒரு சக்தியைப் பொறுத்தது” என்று சொன்னான் கௌதமிபுத்ரன்.

“வேதாந்தம் பேசுகிறாய்” என்று ஏளனக் குரலில் சொன்னான் சாகனான நாகபாணன். “தவறென்ன?” என்று சாதவாகனன் வினவினான்.

“வேதாந்தம் பேசும் வயதல்ல இது.”

“வேதாந்தம் வயதைப் பொறுத்ததல்ல, சிந்தனையைப் பொறுத்தது. விவேகத்தைப் பொறுத்தது.”

“தர்க்கத்திலும் பரிச்சயம் இருக்கிறது உனக்கு.”

”மனித வாழ்க்கையே ஒரு பெரிய தத்துவம். அதன் ஓட்டமே சிறந்த தர்க்கம். ஒவ்வொரு மனிதன் காலமும் முன்னேற்றமும் சாதக பாதகங்களைச் சீர்தூக்கிப் பார்த்துத் தர்க்கித்து எடுக்கும் முடிவைப் பொறுத்திருக்கிறது” என்றான் சதகர்ணி.

சதகர்ணியின் பேச்சுத் திறமையையும் தர்ப்பத்தின் நுனியைவிடக் கூர்மையான புத்தியையும் உள்ளூர வியந்து கொண்ட நாகபாணன் அவனிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டிய அவசியத்தைச் சந்தேகமறப் புரிந்து கொண்டான். அதன் விளைவாக மேற்கொண்டு பேச்சுக் கொடுக்காமல், “காஷ்டானா! துடுப்புகளை நீ வாங்கிப் படகைச் செலுத்து. நான் சதகர்ணியுடன் பேசிக் கொண்டு வருகிறேன்” என்று கூறவே சதகர்ணியின் முதுகிலிருந்த குறுவாளை எடுத்தான் காஷ்டானன். இருப்பினும் தான் துடுப்பு தள்ளப் படகின் நடுவுக்குப் போய்விட்டால் சாதவாகனன் சித்தரஞ்சனியுடன் நெருங்கி உட்கார்ந்து விடுவானே என்று நினைத்துச் சிறிது தாமதித்தான். “வா இங்கே” என்று நாகபாணன் சுடுகுரல் அவனை நடுவுக்குச் செல்ல உந்தவே ஏதோ முணுமுணுத்துக் கொண்டு துடுப்புகளை வாங்கித் துழாவலானான் காஷ்டானன். மெள்ள “மாமா!” என்றழைக்கவும் செய்தான்.

“என்ன?” சுள்ளென்று வந்தது நாகபாணன் கேள்வி.

“சித்தரஞ்சனி…” முனகினான் காஷ்டானன்.

“அவளுக்கென்ன?”

“எனக்கு நிச்சயிக்கப்பட்டவள்.”

“ஆம். ஒரு வருஷத்துக்கு முன்பு.”

“நிச்சயதார்த்தத்துக்குக் காலாவதி உண்டா?”

“உலகத்தில் எல்லாவற்றுக்கும் உண்டு. அவனவன் சாமர்த்தியத்தைப் பொறுத்து.”

“நீங்கள் பேசுவது நியாயமல்ல.”

“இதில் நியாய அநியாயம் எங்கு வருகிறது?” “வேறு என்ன வரும்?” “சாமர்த்தியம். பெண்கள் மனத்தை ஈர்க்கும் கவர்ச்சி. இவற்றைப் பொறுத்தது பெண்ணின் இணக்கம்; சித்தரஞ்சனி யார் பக்கம் சாய்வாளோ?” என்று கூறிய நாகபாணன் பெரிதாக நகைத்தான்.
அந்த நகைப்பின் விளைவாகச் சினம் தலைக்கேற வேகமாகத் துடுப்புகளைத் துழாவினான் காஷ்டானன். படகு அஞ்சன்வேல் நதிக்குள் பிரவாகத்தை எதிர்த்து வேகமாகச் சென்றது. அதற்குமேல் படகிலிருந்த யாரும் பேசவில்லை. சமுத்திரத்தின் அலைகளும் அஞ்சன்வேல் நதியின் சிற்றலைகளுமே இரைந்துகொண்டிருந்தன.

படகு நதிப் பிரவாகத்தை எதிர்த்துச் செல்லச் செல்லத் துடுப்பு துழாவுவது சிறிது கஷ்டமாயிருந்ததால் துடுப்பி லொன்றைத்தானே பிடித்துத்துழாவலானான் நாகபாணன். இப்படி செலுத்தப்பட்ட படகிலிருந்து எதிரே தெரிந்த அஞ்சன் வேல் கோட்டையை நோக்கினான் கௌதமிபுத்ரன். இதே கோட்டை பிற்காலத்தில் மிகப் பிரசித்தி பெற்ற தென்றாலும் இக்கதை நிகழும் காலத்தில் சிறிய கோட்டை யாகவே இருந்தது. இருப்பினும் எதிரே எழுந்த தாபோல் மலையும் காடும், அஞ்சன்வேல் நதியென்ற வாசிஷ்ட நதியும் அதற்குச் சிறந்த அரண்களாக இருந்தபடியால் அப்படி சுலபமாக அடைய முடியாத கோட்டையாகவே காட்சியளித்தது. தவிரமகாக்ஷத்ரபன் அந்தக் கோட்டையைத் தனது வீரர்களால் பெரிதும் பலப்படுத்தியிருந்தான். தூரத்தே தெரிந்த கோட்டையில் அதிக விளக்குகள் எரியாததால் பெரிய பிசாசு நிற்பது போன்ற பிரமையை அளித்தது கோட்டைக் கட்டடம். படகு அதை நெருங்க நெருங்கப் பல காவல் வீரர்கள் நதிக்கரையோரம் நடமாடிக் கொண்டிருந் ததைப் பார்த்த கௌதமிபுத்ரன் கோட்டைக்குள் ஒரு முறை போய் விட்டால் தப்புவது கடினம் என்பதை உணர்ந்து கொண்டான். அந்தச் சமயத்தில் சித்தரஞ்சனியின்கை அவன் கையை நோக்கி நகர்ந்து அவனது சிறு கோடரியை அவன் கைகளில் திணிக்கவே அதைத் தந்திரமாகத் தனது ஆடையால் மறைத்துக் கொண்டான். கோடரியை எடுத்தது காஷ்டானன் அல்ல என்பது புரிந்ததால் மகிழ்ச்சியும், எடுத்தது சித்தரஞ்சனி என்பதால் தனிப்பட்ட உற்சாகமும் ஏற்பட்டது சதகர்ணிக்கு.

மெள்ள மெள்ளப் படகு கோட்டையை நெருங்கியதும் காஷ்டானனும் நாகபாணனும் படகைக் கரை சேர்த்தனர். படகிலிருந்து கரையில் தாவி இறங்கிய நாகபாணன், “சாதவாகனரே! பிராசீனமான இந்தக் கோட்டைக்கு வர வேண்டும். உமது வரவு நல் வரவாகட்டும்” என்று கூறித் தனது கையை நீட்ட சாதவாகனன் அவன் கையைப் பற்றிக் கரையில் இறங்கினான். பிறகு தனது கையை நீட்டிச் சித்தரஞ்சனியையும் கரையில் இறக்கியதும் நாகபாணன் அவர்களைக் கோட்டைக்கு அழைத்துச் சென்றான். அங்கிருந்து ஒரு மாடி அறையைச் சதகர்ணிக்குத் திறந்து விட்டு, “நேரம் ஓடிவிட்டது. சிறிது நேரம் உறங்குங்கள். காலையில் பேசுவோம்” என்று கூறிச் சித்தரஞ்சனியை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான்.

அறை நல்ல விசாலமாக இருந்தது. அதன் சாளரத்திலிருந்து தாபோல் மலைச்சிகரங்களையும் கடலலைகளையும் பார்க்க முடிந்தது. அப்படிப்பார்த்துக்கொண்டே நீண்ட நேரம் நின்ற சதகர்ணி அறைக் கோடியிலிருந்த கட்டிலில் சென்று படுத்துக் கண்ணை மூடினான். அப்படியும் உறக்கம் வராததால் சிந்தனை வசப்பட்டிருந்த சமயத்தில் அறைக்கதவைத்திறந்து கொண்டு உள்ளே வந்த ஓர் உருவம் கதவை மூடிவிட்டுக் கட்டிலை நோக்கி வந்ததும் சிறிது நேரம் அவன் உறக்கத்தைச் சோதித்து நின்றது. பிறகு அவன் கையொன்றில் எதையோ திணித்தது. குனிந்து பிறகு வந்தபடியே ஓசைப் படாமல் அறையைவிட்டுச் சென்றுவிட்டது. அது சென்றதும் கையில் திணிக்கப்பட்டதைக் கவனித்தான் சதகர்ணி. அது ஒரு முத்திரை ஓலை. முத்திரையைப் பிரித்துப் படித்தான். தான் பெரிய ஆபத்தில் சிக்கியிருப்பதை உணர்ந்தான் சதகர்ணி.

Previous articleChittaranjani Ch11 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch13 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here