Home Chittaranjani Chittaranjani Ch13 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch13 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

51
0
Chittaranjani Ch13 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch13 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch13 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 13 தேவி பேசினாள்!

Chittaranjani Ch13 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

மூன்றாம் ஜாமத்தின் ஆரம்பத்தில் எதிரி மரக்கலத்தின் அறையிலிருந்து சித்தரஞ்சனியை மீட்டுக் கொண்டும், காஷ்டானனை அழைத்துக்கொண்டும் கீழே மிதந்திருந்த படகில் இறங்கி மகாக்ஷத்ரபனின் யுக்தியால் அவனிடம் சிக்கிக்கொண்ட கௌதமிபுத்ரன், அஞ்சன்வேல் நதியில் படகு சென்றபோதே நதியின் முகத்துவாரத்தையும், துறைமுக நிலையையும் கவனித்துக் கொண்டே சென்றான். வாசிஷ்டி நதியென்றும் அஞ்சன்வேல் நதியென்றும் பிரசித்தி பெற்ற அந்த மகாந்தியின் முகத்துவாரம் இக்கால கணக்குக்குச்சுமார் ஒரு மைல் அகலமிருந்தாலும் * அதன் முகத்துவாரத்தின் ஒரு பக்கத்தில் மணல் பெரிதாக ஒதுங்கியிருந்ததால் நதியின் அளவு சிறிது குறுகியிருந்ததையும் கவனித்த சாதவாகனன் தங்கள் படகு முகத்துவாரத்தைக் கடந்த உடன் பெரும் சத்தத்துடன் சீறி வந்த அலைகள் அந்த மணல் மேட்டை மறைத்துவிட்டதையும் பார்த்து ‘இது மிகவும் ஆபத்தான துறைமுகம், எந்தச் சமயத்திலும் யாரையும் ஏமாற்ற வல்லது’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். ‘பருவக் காற்றுகள், அவற்றையொட்டி எழும் அலைகள், இவற்றின் நுட்பங்களை அறிந்தவர்கள் மட்டுமே அஞ்சன்வேல் கோட்டையை அடைய முடியும்’ என்றும் எண்ணமிட்டான். இந்த எண்ணங்களுடன் அஞ்சன்வேல் கோட்டைக்கு வந்தவன் அக்கோட்டையை பலப்படுத்தியிருப்பது நாகபாணனின் வீரர்களேயென்பதையும் புரிந்து கொண்டான். ஆதி காலத்தில் கட்டப்பட்ட அஞ்சன் வேல் கோட்டை மிகச் சிறியதாக இருந்தபடியால் அதிலிருந்து தப்புவது அதிகக் கஷ்டமில்லை யென்பதையும், அப்படி கஷ்டமில்லாத நிலையிலிருந்து ஆபத்து விளைவிக்கும் நிலைக்கு அதைக் கொண்டு வந்திருப்பது மகாக்ஷத்ரபனின் படைபலமே யென்பதையும் உணர்ந்து கொண்டும் அதிலிருந்து தப்பும் மார்க்கத்தைச் சிந்தித்துக் கொண்டும் சென்ற சதகர்ணி அந்த இரவின் நான்காவது ஜாம ஆரம்பத்தில் அறையில் படுத்துக் கிடந்தபோதும் அதே சிந்தனையிலிருந்தான்.

இத்தகைய எண்ணங்களுடன் கோட்டையின் மாடி அறையில் படுத்துக் கிடந்த சதகர்ணி, கதவு மெதுவாகத் திறக்கப்பட்டதையும், தலைமுதல் கால் வரை பூர்ணமாகப் பெரிய துணியால் தன்னை மறைத்துக்கொண்ட ஓர் உருவம் ஓசைப்படாமல் கட்டிலை நோக்கி வந்ததையும், தனது கையில் ஓலையொன்றைத் திணித்துவிட்டுச் சென்றதையும் உணர்ந்து, தீர்க்கமான உறக்கத்திலிருப்பது போலவே நடித்தான். வந்த உருவம் அறையை விட்டுக் கதவைச் சாத்திக் கொண்டு சென்ற பின்பும் எழுந்திருக்காமல் படுத்தபடியே தனது வலது கையில் திணிக்கப்பட்ட ஓலையைப் பிரித்துச் சாளரத்திலிருந்து வந்த நிலவொளியில் அதைப் படித்தான். “நாளை இரவில் மகாக்ஷத்ரபர் மரக்கலம் அபராந்தாவை நோக்கிப் போகிறது. அதில் உங்களையும் அனுப்ப ஏற்பாடாகியிருக்கிறது” என்று எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்த கௌதமிபுத்ரன் நாளை இரவுக்குள் தப்பாவிட்டால் அப்புறம் தப்புவது குதிரைக் கொம்பு என்று எண்ணினாலும், ஒரு முழு பகலும் இரவில் ஒரு பகுதியும் இருப்பதை நினைத்து, ‘அதற்குள் ஆயிரம் நிகழ்ச்சிகள் விளையலாம்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். சாளரத்தின் மூலமாக எதிரே பெரிதாக எழுந்து நின்ற தாபோல் மலையையும் அதன் உச்சிகளையும் கவனித்தான். அஞ்சன் வேல் கோட்டைக்கு நேர் எதிர்க்கரையில் குத்து குத்தாக மலைப்பகுதி இருப்பதைக் கண்டு நதியில் குதித்து நீந்தினாலும் கரையின் குத்துக் கற்கள் மீது ஏறுவது மிக அபாயமென்பதையும் அறிந்தான். ஏதேதோ சிந்தனைக்குப் பிறகு ஏதோ முடிவுக்கு வந்தவனாய் மீண்டும் கட்டிலில் போய்ப் படுத்தவன் சிறிது நேரமாவது உறங்கும் நோக்கத்துடன் கண்களை மூடினான். உறக்கமும் அவனை மெதுவாக ஆட்கொண்டது.

சாதாரணமாகப் பொழுது விடிவதற்கு நீண்ட நேரம் முன்பே எழுந்திருக்கும் பழக்கமுள்ள சதகர்ணி அன்று விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தானாதலால் காலையில் அவனைச் சந்திக்க முயன்ற நாகபாணன் அவன் எழுந்திருக்க வில்லையென்பதைக் காவலரிடமிருந்து அறிந்ததும் தானே அவனைக் காண மாடி அறைக்கு வந்தான். அங்கு கட்டிலில் சிறிதும் கவலையின்றி உறங்கும் கௌதமிபுத்ரனைக் கண்டதும் மிதமிஞ்சிய வியப்புக்குள்ளானான். தன்னிடம் சிறைப்பட்டிருக்கும் சதகர்ணிக்குத் தூக்கம் எப்படி வந்தது என்பதை நினைத்து ஆச்சரியமடைந்த நாகபாணன் சதகர்ணியைத் தனது கையால் பிடித்து அசக்கினான். அதனால் சற்றே நித்திரை கலைந்த சதகர்ணி, “யார் எழுப்புவது?” என்று சீறி மறுபடியும் தலையைப் போர்த்திக் கொண்டு மறுபக்கம் திரும்பிப்படுத்தான். அதனால் வியப்பிலிருந்து கோபத்துக்குத் தாவிய மகாக்ஷத்ரபன் இன்னொரு முறை சதகர்ணியை அசைத்து, “சாதவாகனா! எழுந்திரு. இந்தக் கும்பகர்ணப் பழக்கம் மன்னர்களுக்கு உதவாது” என்று கூறவும் செய்தான்.

மகாக்ஷத்ரபனின் வலுவான கையால் பலமாக அசைக்கப்பட்டதாலும் அவன் சொற்களாலும் அப்பொழுதே எழுந்தவன் போல் பாசாங்கு செய்து கட்டிலில் உட்கார்ந்து கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டே கௌதமிபுத்ரன் கட்டிலில் பக்கத்தில் நின்ற நாகபாணனை நோக்கி, “சாக மன்னரே! நீங்களா என்னை எழுப்பினீர்கள்? அபசாரம், அபசாரம்!” என்று மன்னிப்புக் கேட்கும் பாவனையில் பேசினான்.

“சதகர்ணி!” சற்றுக் கடுமையாக எழுந்தது நாகபாணன் குரல்,

“மகாக்ஷத்ரபரே!” என்று கேட்டு நாகபாணனை நோக்கினான் சதகர்ணி.

“சுரியன் எழுந்து விட்டான்….” என்று நாகபாணன் நேரம் அதிகமாகி விட்டதை உணர்த்தினான்.

“நாம் தூங்குவதற்காக அவன் எழுந்திருக்காமலிருப் பானா? அவன் ஒரேயடியாக உறங்கி விட்டால் நீரும் நானும் உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் வாழ முடியுமா?” என்று சதகர்ணி கட்டிலில் உட்கார்ந்தபடியே கேள்வியை வீசிப் புன்முறுவலும் செய்தான்.

சதகர்ணியின் சொற்கள் நாகபாணன் வியப்பை உச்சிக்குக் கொண்டு போகவே அவன் கேட்டான், “நீர் பிராமணன் தானே?” என்று.

“அப்படித்தான் பிறந்தேன்” என்றான் சதகர்ணி.

“இப்பொழுது?”

“க்ஷத்திரியனாக மாறிவிட்டேன்.”

“அவ்வப்பொழுது ஜாதியை மாற்ற முடியுமா?”

“தொழிலை மாற்றிக் கொண்டால் ஜாதி தானாகவே மாறுகிறது. தொழிலை வைத்துத்தானே ஜாதி’ என்ற சதகர்ணி, “படிப்பு சொல்லிக் கொடுத்தால் பிராமணன், சண்டை போட்டால் க்ஷத்திரியன், வாணிபம் செய்தால் வைசியன்…” என்று சொல்லிக் கொண்டு போனவனைத் தடுத்த நாகபாணன், “உன் விவரணத்தைக் கேட்க நான் வரவில்லை” என்றான்.

“வேறு எதற்கு வந்தீர்கள்? ஓ! என்னை எழுப்ப வந்தீர்களா? மறந்துவிட்டேன். தூங்குபவர்களை எழுப்புவதற்கு இந்தக் கோட்டையில் உஷத்கால (விடியற்கால) வாத்தியங்கள் இல்லையா?” என்று கேட்டான்.

“இங்கு கேளிக்கைக்கு வரவில்லை நான். சங்கீதத்துக்கு இங்கு என்ன வேலை?” சீற்றத்துடன் வந்தது நாகபாணன் கேள்வி.

“ஓகோ! எதிர்க்கரையில்தான் வேலையா? ஏன் நாகபாணரே! சித்தரஞ்சனி இங்கு பாடினால் என்ன?” என்று விசாரித்தான்.

“இங்கு அதற்குத் தேவையில்லை.”

“ஏன்? நீங்கள் இருக்கிறீர்களே?”

“எதிர்க்கரையில் இருந்த மக்களைக் கிளப்ப அவள் பாடினாள். இங்கு நாங்கள் தானிருக்கிறோம். எங்களைக் கிளப்பயாராலும் முடியாது.” இதைச் சொன்ன நாகபாணன், “சரி சரி! காலைக்கடனை முடித்துக்கொள்” என்றான்.

“நான் நன்றாக நீராடிப் பழக்கம். நதியில் நீராட அனுமதிப்பீர்களா? இல்லை நான் தப்பி விடுவேனென்று அஞ்சுகிறீர்களா?” என்று வினவினான்.

இந்தக் கேள்வியில் விழுந்து விட்டான் மகாக்ஷத்ரபன். “சதகர்ணி! இந்த நாகபாணன் யாருக்கும் எதற்கும் அஞ்சுவதில்லை . இதை உலகம் அறியும். நதியில் நீராடினால் தப்பிவிடலாமென்று நினைக்காதே. நீ நதிக்குள் மூழ்கினால் உன்னைச் சந்திக்க எதிர்க்கரையிலும் எனது வீரர்கள் இருப்பார்கள். இக்கரையிலும் என் வீரர்கள் உன்னைக் கண்காணிப்பார்கள். அது மட்டுமல்ல…” என்று சற்றுப் பேச்சை நிறுத்தினான்.

“வேறு என்ன?” என்று கேட்டான் சதகர்ணி.

“சித்தரஞ்சனி அறையில் அடைத்து வைக்கப்படுவாள் நீ வரும்வரை.”

“நான் வராவிட்டால்?”

“அவளை காஷ்டானனுக்கு மணமுடித்து விடுவேன்.”

“அவள் என் மனைவி.”

“யார் சாட்சி?”

“சண்டிகாதேவி.”

“சண்டிகாதேவி பேசுவாளா?”

“அவசியம் வரும்போது பேசுவாள். பேசும்போது என்ன உத்பாதங்கள் உங்களுக்கு ஏற்படுமென்று சொல்ல முடியாது” என்றான் சதகர்ணி.

“உனக்கு?” என்று கேட்டான் மகாக்ஷத்ரபன்.

“பக்தர்களுக்கு எதுவும் ஏற்படாது.”

“நீ பக்தனா?”

“ஆம்.”

இதைக் கேட்டு நகைத்த நாகபாணன், “சரி சரி! போய் நீராடிவிட்டு வா. தப்ப முயன்று உயிரிழக்காதே. உன் தாய்க்கு நீ ஒரே பிள்ளை என்று கேள்வி. அவளுக்காகவாவது நீ உயிருடன் இருக்கவேண்டும்” என்று சொல்லிச் சென்றுவிட்டான் மகாக்ஷத்ரபன்.

அவன் சென்றதும் சில விநாடிகள் கழித்து உடையில் தன் கோடரியை மட்டும் மறைத்து எடுத்துக் கொண்டு கீழே சென்றவன் அங்கிருந்த காஷ்டானனைக் கண்டு, “காஷ்டானனா! நீ நீராடி ஆகிவிட்டதா?” என்று வினவினான்.

“நான் தூங்கு மூஞ்சியல்ல” என்றான் காஷ்டானன்.

“புரிகிறது, நன்றாக விழித்துக் கொண்டிருக்கிறாய்” என்ற சதகர்ணி, “சித்தரஞ்சனியைக் கூப்பிடு” என்றான்.

“நீ பார்க்கக் கூடாது அவளை!”
“ஏன்?”

“நான் அவளை மணம் செய்துகொள்ளப் போகிறேன்.”

“இன்றிரவு மரணத்தைவிட மோசமான நிலையில் இருப்பாய்” என்று கூறிய காஷ்டானன் அவனை விட்டுச் சென்றான்.

அதற்குப் பிறகு அங்கு நிற்காமல் நதிக்கரைக்குச் சென்றுவிட்ட சதகர்ணி நதியில் அமிழ்ந்தும் நீந்தியும் நீராடினான். பிறகு தான் உடுத்தியிருந்த ஆடைகளைப் பிழிந்து அணிந்துகொண்டு ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை இரைந்து சொன்னான் கோட்டை வரையில் கேட்கும் படியாக. அவன் கூச்சலைக் கேட்ட கோட்டையிலிருந்த வீரர்கள் உப்பரிகையிலிருந்தும் கோட்டை மாளிகையின் வாயிலிலிருந்தும் வேடிக்கை பார்க்கத் துவங்கினார்கள். சித்தரஞ்சனி இதனால் ஆங்காங்கு பேச்சும் குழப்பமும் ஏற்பட்டதால் சித்தரஞ்சனியும் வெளியில் வந்தாள். ஆற்றங்கரையில் உட்கார்ந்து கதிரவனை இரைந்து துதித்துக் கொண்டிருந்த சதகர்ணியைப் பார்த்த சித்தரஞ்சனி சிந்தனை மிகுந்தவளாய் ஆற்றங்கரைக்கு வந்து அவன் பக்கத்தில் நின்றாள். அவள் வந்ததைக் கவனித்த சதகர்ணி, “சித்தரஞ்சனி! வா! உட்கார். சண்டிகா தேவியைப் பற்றிப் பாடு” என்றான். அவள் உட்காரத் தயங்கியதும் கையைப் பிடித்து அவளை உட்கார வைத்து, “உம் பாடு” என்று சொன்னதுடன் நிற்கவில்லை அவன். தனது வலது கையை முஷ்டியாகப் பிடித்துக்கட்டை விரலுக்கிடையில் சிறிது துவாரம் விட்டு இடது கையால் முஷ்டியைப் பிடித்துத் தனது வாயால் துவாரத்தில் வலுவாக ஊத, குழலூதும் ஒலி கிளம்பியது பலமாக. அதில் சித்தரஞ்சனியின் பாட்டையே ஊதினான் சதகர்ணி. மிகுந்த ஆபத்தான சமயத்தில் அவன் எதற்காகப் பாட்டை ஊதுகிறான் என்ற நினைப்புடன் நின்றுகொண்டிருந்த சித்தரஞ்சனி அவன் ஊதலால் துன்பத்தையே அடைந்தாள்.

குழலூதிய பிறகு எழுந்த சதகர்ணி மேலும் பல விசித்திர செயல்களில் இறங்கினான். கோட்டை வீட்டுக்கு வந்ததும் சித்தரஞ்சனி கொடுத்த மாற்றுடையை அணிந்து கோடரியை மடியில் மறைத்துக் கொண்டு மகாக்ஷத்ரபன் இருக்கு மிடத்தைத் தேடிச் சென்றான். அவனை வரவேற்ற மகாக்ஷத்ரபன், “இன்றைக்கு மிகுந்த உற்சாகத்திலிருக்கிறாய்” என்றான்.

“உற்சாகமா!” என்று வினவினான் சதகர்ணி ஏதுமறியாதவன் போல.

“ஆம். சூரிய ஸ்தோத்திரம், பாட்டு எல்லாம் பலம். ஆமாம், குழலூதினாயே ஏது குழல்?” என்றும் விசாரித்தான்.

“கையே குழல்” என்ற சதகர்ணி அவன் முன்பே முஷ்டி பிடித்து ஊத ஆரம்பித்தான்.

“போதும் போதும் நிறுத்து” என்று நாகபாணன் கேட்டும் நிறுத்த மறுத்த சதகர்ணி, மகுடிபோல் ஊதி, “நீ நாகம் தானே? ஆடு நாகபாணா!” என்றும் கூறினான்.

மகாக்ஷத்ரபன் லேசாக நகைத்தான். அந்த நகைப்பில் கடுமை இருந்தது. அன்று அவன் வகுத்த திட்டம் பயங்கர மானது. அதிலிருந்து கௌதமிபுத்ரன் தப்ப முடியா தென்பதை நினைத்ததால் மிகுந்த அச்சத்தின் வசப்பட்டாள் சித்தரஞ்சனி. அன்றைய இரவின் பயங்கரத்தைத் தன்னால் தடுக்க முடியுமா என்றும் நினைத்தாள். தடுக்க முடியவில்லை அவளால். அன்றிரவில் முன்னதாகவே படுத்து உறங்கி விட்டான், சதகர்ணி. யாரும் தன்னை எழுப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டான். அன்று நள்ளிரவில் அவன் அறைக்குள் நுழைந்த இரு வீரர்கள் கட்டிலில் கிடந்தவன்மீது பெரிய போர்வையை வீசினார்கள். அடுத்து இருவரும் படுத்திருந்தவனை அந்தப் போர்வையிலேயே சுற்றிக் கயிறு கொண்டு கட்டினார்கள். படுத்திருந்தவன் முனகலை நிறுத்த மூச்சையும் அழுத்திப்பிடித்தான் ஒருவன். சதகர்ணியைக் கட்டிய அந்த மூட்டை நள்ளிரவு தாண்டியதும் அஞ்சன்வேல் நதியிலிருந்து படகில் பயணம் செய்தது முகத்துவாரத்தை நோக்கி.

படகு போவதைப்பார்த்துக்கொண்டு நதிக்கரையில் நின்ற தனது கைகளால் தாங்கிப் பிடித்தான். “சதகர்ணி! உனக்குச் சித்தரஞ்சனியுமில்லை. அபராந்தாவுமில்லை. இப்பொழுது உன் சண்டிகாதேவி பேசுவாளா பார்ப்போம்” என்று கறுவினான். தேவி பேசினாள்.

Previous articleChittaranjani Ch12 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch14 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here