Home Chittaranjani Chittaranjani Ch14 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch14 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

43
0
Chittaranjani Ch14 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch14 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch14 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 14 அசரீரி

Chittaranjani Ch14 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

கௌதமிபுத்ர சதகர்ணியைப் போர்வையைப் போர்த்திக் கயிறு கொண்டு மூட்டையாகக் கட்டிப் படகில் அனுப்பி விட்டதால் பெரிய தொல்லையொன்று தீர்ந்து விட்டதென்ற உற்சாகத்திலிருந்த நாகபாணன், சித்தரஞ்சனி மயக்கமுற்றுத் தன் கைகளில் சாய்ந்துவிட்டதைக் கண்டதும் ஒரு விநாடி அனுதாபத்தின் வசப்பட்டாலும், ‘போர்க் காலங்களில் இத்தகைய விபரீதங்கள் சகஜம்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். ஆகவே சற்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு சித்தரஞ்சனியைத் தனது இரு கைகளில் தாங்கிய வண்ணம் கோட்டை வீட்டை நோக்கி நடந்து அங்கிருந்த தோழிகளிடம் சித்தரஞ்சனியை ஒப்படைத்து அவளைக் கவனிக்குமாறும், அவளுக்குச் சுரணை வந்ததும் அவளுடைய தந்தையானக்ஷத்ரபனை விட்டு அவளுக்கு ஆறுதல் சொல்லச் செய்யுமாறும் பணித்தான்.

சித்தரஞ்சனியைத்தாங்கிப் பிடித்து அழைத்துக் கொண்டு அவளது அறைக்குச் சென்று அங்கிருந்த பஞ்சணையில் அவளைப் படுக்க வைத்த பணிப்பெண்களில் ஒருத்தி அவள் முகத்தில் குளிர் நீர் தெளிக்க, இன்னொருத்தி அருகில் உட்கார்ந்து தனது முந்தானையால் விசிறத் தொடங்கினாள். இந்தச் சைத்தியோபசாரங்களால் சிறிது நினைவு திரும்பிய சித்தரஞ்சனி ஒருமுறை அருகிலிருந்த பணிப்பெண்களை நோக்கித் திருதிருவென விழித்துவிட்டு, “படகு என்ன வாயிற்று?” என்று வினவினாள்.

“மரக்கலத்தை நோக்கிச் சென்றுவிட்டது. இன்னும் இரண்டு நாழிகைக்குள் மரக்கலத்தை அடைந்துவிடும்” என்றாள் ஒரு பணிப்பெண்.

“மரக்கலம் எப்போது புறப்படுமாம்?” என்று இன்னொரு கேள்வியையும் வீசினாள் சித்தரஞ்சனி.

“எனக்குத் தெரியாது” என்று முந்தானையால் விசிறிய பணிப்பெண் சொன்னதன்றி, “அம்மணி! நீங்கள் மிகவும் பலவீனமாயிருக்கிறீர்கள். மீதி இரவை விழித்துக் கழிக்க வேண்டாம். சற்று உறங்குங்கள்” என்றும் கூறினாள்.

சித்தரஞ்சனி அவளுக்கு பதிலேதும் சொல்லாமல், பஞ்சணையிலிருந்து எழுந்து சற்றுச் சமாளித்துக் கொண்டு தட்டுத் தடுமாறி சாளரத்தை நோக்கி நடந்து அதன்மூலம் வெளியே நோக்கினாள். எதிரே தாபோல் மலைக்காடும், அதை ஒட்டி ஓடிய வாசிஷ்ட நதியும், அது கடலில் கலந்த முகத்துவாரமும் தெளிவாக அவள் கண்களுக்குத் தெரிந்தன. கடலில் எட்ட நின்று காற்றில் ஆடி நின்ற மரக்கலம் ஓரளவு கண்ணுக்குப் புலப்பட்டாலும், மரக்கலப் பக்கப் பகுதிகள் நிலவிலும் திட்டமாகவோ தெளிவாகவோ, தெரியா விட்டாலும், கௌதமிபுத்ரனைத் தாங்கிய படகு மட்டும் சிறிது தெரிந்ததன்றி, கப்பலிலிருந்து தொங்கவிடப்பட்ட இரு கயிறுகளில் பெரிய நீண்ட மூட்டையொன்று பிணிக்கப்பட்டு ஏற்றப்பட்டதும் புலனானதால் கண்ணைத்தனது இரு கைகளாலும் இறுக மூடிக்கொண்ட சித்தரஞ்சனி, ‘சண்டிகா தேவி! நீதான் அவரைக் காப்பாற்ற வேண்டும்’ என்று உள்ளூரப் பிரார்த்தனையும் செய்தாள். அடுத்து எதையோ நினைத்துக்கொண்டு அந்த அறையிலிருந்து வெளியேற முயன்று கதவை நோக்கி வேகமாகச் சென்றாள். வாயிற் படியில் கைகளைப் பக்கத்துக் கட்டைகளில் ஊன்றி அவள் தந்தை க்ஷத்ரபன் நின்று கொண்டிருந்தான். “எங்கே இவ்வளவு அவசரமாகப் போகிறாய்?” என்று சற்று கடுமையாகவே விசாரித்தான்.

“மரக்கலத்துக்குப் போகப் போகிறேன்” என்றாள் சித்தரஞ்சனிதந்தையை அலட்சியமாக ஏறெடுத்து நோக்கி.

“யாரைப் பார்க்கவோ?” என்று சற்றுச் சினத்துடன் விசாரித்தான் க்ஷத்ரபன்.

“என் கணவரை.” சித்தரஞ்சனி இதையும் மிக அலட்சியமாகச் சொன்னாள்.

“நான் உன் தந்தை.” நினைப்பூட்டினான் க்ஷத்ரபன்.

“வளர்ப்புத்தந்தைதானே?”

“இருந்தாலென்ன?”

“பெற்ற பாசமிருக்காது. நீங்கள் அன்று என்னை வாசிஷ்டி நதி முகத்துவாரத்தில் அறைந்த பின்பு அதை நன்றாகவே உணர்ந்து கொண்டேன்.”

“இப்பொழுதும் அந்த அறை கிடைக்காதென்பது என்ன நிச்சயம்?”

“கிடைக்கலாம். அதைப்பற்றிக் கவலையில்லை” என்று சித்தரஞ்சனி சொன்னதும் கையை ஓங்கிக்கொண்டு வந்த க்ஷத்ரபனை, “க்ஷத்ரபா! பெண்ணாயிருந்தாலும் வளர்ந்த பின்பு தொட்டு அடிக்கும் பழக்கம் தர்ம விரோதமானது” என்ற சொற்களைக் கேட்டுத் திரும்பிய க்ஷத்ரபன் அச்சத்திற்குள்ளானான். பின்னால் நின்ற மகாக்ஷத்ரபனான நாகபாணன், “க்ஷத்ரபா! பெண்களை அன்பினால் வளைக்க வேண்டும். அடியினால் முடியாது. சரி, நீ கிளம்பு” என்றான்.

“எங்கு போக?” என்று வினவினான் க்ஷத்ரபன்.

“மரக்கலம் புறப்படு முன்பு கௌதமிபுத்ரனை ஒருமுறை பார்த்துப் பேசுவோம்” என்றான் நாகபாணன்.

“பேசுவதற்கு என்ன இருக்கிறது?” என்று வினவினான் க்ஷத்ரபன்.

“வா சொல்கிறேன்!” என்று அவனை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற நாகபாணன் வாயிற்படியில் சற்றே திரும்பி, “சித்தரஞ்சனி! பொழுது விடிந்ததும் நீ சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் போகலாம். கௌதமி புத்ரனுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. எதிரியானாலும் தைரியசாலி. வீரன். அவனுக்குத் தீங்கு எதுவும் விளைவிக்க நான் இஷ்டப்படவில்லை. ஆனால் இந்த இடத்திலிருந்து அவனை அகற்றாவிட்டால் இத்தனை நாட்கள் திட்டம் போட்டுத்தாபோல் மலைப்பகுதியிலிருந்த மக்களை விரட்டி தமது படைகளை இறங்கச் செய்த ஏற்பாடு தவிடு பொடியாகிவிடும். நமது நலனையும் சிந்தித்துப் பார்” என்று கூறிவிட்டுச் சென்றான்.

சித்தரஞ்சனியை இப்படிச் சமாதானப்படுத்திவிட்டு க்ஷத்ரபனை அழைத்துக்கொண்டு வெளியே வந்த நாகபாணன், “க்ஷத்ரபா! மரக்கலத்துக்குப் போய் வந்ததும் நாளைக்கு உன்னிஷ்டப்படி காஷ்டானனுக்குச் சித்தரஞ் சனியை மணமுடித்துக் கொடுத்து முடித்துவிடுகிறேன். கவலைப்படாதே” என்று கூறிவிட்டு, “நீ போய் மரக்கலத்தில் கௌதமிபுத்ரனைச் சரியான காவலில் வைத்துவிட்டு வா. நான் பொழுது விடிந்ததும் வந்து அவனுடன் பேசிய பிறகு மரக்கலம் புறப்படட்டும்” என்றான்.

“நீங்களும். வருவதாகச் சொன்னீர்களே?” என்று கேட்டான் க்ஷத்ரபன்.

“இங்கு சில அலுவல்கள் இருக்கின்றன. அவற்றை முடித்து விட்டு வருகிறேன்” என்று நாகபாணன் சொல்லி விட்டு, “நீ புறப்படு! எதிரிக்கு எந்தவிதத் தீங்கும் கூடாது. நினைவிருக் கட்டும்” என்று எச்சரிக்கை செய்தும் அனுப்பினான்.

நாகபாணனுக்குத் தனது எதிரியிடம் ஏற்பட்ட கருணைக்குக் காரணம் புரியாமலும், அதைப்பற்றிக் கசந்து கொண்டும் க்ஷத்ரபன் புறப்பட்டான், வாசிஷ்டி நதியின் படகுத் துறையை நோக்கி. அங்கிருந்த படகொன்றை எடுத்துக்கொண்டு துடுப்புகளை வேகமாகத் துழாவி மரக்கலத்தை நோக்கிச் சென்றான்.

மகாக்ஷத்ரபரும் க்ஷத்ரபரும் சென்ற பிறகு தோழிகளை அனுப்பிவிட்டு மீண்டும் பஞ்சணையில் படுத்த சித்தரஞ்சனி தூக்கம் வராததாலும் துன்பம் நெஞ்சை அழுத்தியதாலும் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாள். விடிவதற்கு நாலைந்து நாழிகைகள் இருக்கும்பொழுது எழுந்திருந்து வாசிஷ்டி நதியை நோக்கிச் சென்றாள். அவளைத் தடை ஏதும் செய்யவேண்டாமென்று நாகபாணன் உத்தர விட்டிருந்ததால் யாரும் அவளைத் தடை செய்யவில்லை. நேராக நதிக்கரைக்குச் சென்ற சித்தரஞ்சனி நதியில் இறங்கி நீராடினாள். பிறகு அங்கிருந்த படகுக்காரன் ஒருவனை அழைத்துத் தன்னை எதிர்க்கரையில் விட்டுவிடும்படி பணிக்கவே அவன் மறுமொழி ஏதும் சொல்லாமல் படகை அவிழ்த்து அவள் ஏறியதும் துடுப்புக்களைக் கொண்டு படகைத் துழாவி எதிர்க்கரைக்குச் செலுத்தினான். எதிர்க் கரையை அடைந்ததும் ஈரச் சேலையுடனேயே மலையில் ஏறிச் சென்ற சித்தரஞ்சனி நேராகச் சண்டிகையின் குகை இருப்பிடம் சென்றாள். அங்கிருந்த செடிகளிலிருந்த மலர்களில் இரண்டைத் தலையில் சொருகிக்கொண்டு இன்னும் சில மலர்களை எடுத்து மடியில் கட்டிக்கொண்டு பாறையை நகர்த்திக் குகைப்படிகளில் இறங்கிச் சென்றாள். சண்டிகையின் சந்நிதானத்தை அடைந்ததும் அங்கு அம்மன் காலடியில் இருந்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் தீட்டிக் கொண்டு நன்றாக மண்டியிட்டுத் தலை தரையில் தொட வணங்கினாள். பிறகு மண்டியிட்ட நிலையிலேயே கண்களை இறுக மூடிக்கொண்டு சண்டிகையைத்துதித்தாள். தேவியின் தோத்திரங்களை மனத்திலேயே நீண்ட நேரம் ஸ்மரித்த பிறகு, “தேவி! உன் முன்பு சாதவாகனருக்குத் திருமணமான என்னை வேறொருவனுக்கு மணமுடிக்க ஏற்பாடு நடக்கிறது. இது உன் திருவுளத்துக்குச் சம்மதந்தானா?” என்று இரைந்து கேட்டாள்.

“தேவி! நீ பேசக்கூடியவள் என்று அவர் சொன்னாரே! ஏன் வாளாவிருக்கிறாய்? நீ கல்லானாலும் கடவுள்தானே! அநீதிகள் நடக்கும் போது நீ எப்படி வாயை மூடிக் கொண்டிருக்கலாம். பேசு தாயே” என்று இரைந்து கேட்டாள் சித்தரஞ்சனி. அடுத்துப் பழைய அதே சித்தரஞ் சனியை மெதுவாக இசைக்கவும் தொடங்கினாள். அந்த இசையின் விளைவாகவோ என்னவோதிடீரென்று பெரும் காற்றொன்று எங்கிருந்தோ கிளம்பியது. அதன் வேகத்தால் குகையின் ஒரு பகுதி ஊழியின் பெரு ஊதல்போல் ஊதவும் தொடங்கியது. திடீரென்று குகை வாயிலிருந்து புஷ்பங்கள் சில காற்றால் கொண்டுவரப்பட்டுப் படிகளிலும் சந்நிதி முன்பும் சிதறப்பட்டன.

இதனால் குகை வாயிலைத் தான் வழக்கப்படி மூடவில்லையென்பதை உணர்ந்த சித்தரஞ்சனி திரும்பி நோக்கினாள். வாயில் திறந்தது திறந்தபடியிருந்தாலும் அங்கு யாரும் காணவில்லை. இருப்பினும் அதைப்பற்றிக் கவலைப் படாத சித்தரஞ்சனி மீண்டும் தேவியை நோக்கிக் கண்களில் நீர் சுரக்க வேண்டினாள். “தேவி! அவரை மரக்கலத்திலிருந்து எப்படியாவது நீதான் தப்ப வைக்க வேண்டும். என்ன காரணமென்று எனக்கே புரியவில்லை. இத்தனை ஆபத்திலும் எனக்கு மனக்கலக்கம் ஏதுமில்லை. என் மனம் கல்லாகி விட்டதா? அவர் துன்பத்தினால் ஏன் என் மனம் சலித்துச் சிதறவில்லை ?” என்று ஏக்கம் நிறைந்த குரலில் வினவினாள்.

அந்தச் சமயத்தில் அசரீரியொன்று ஒலித்தது, “உன் கணவனுக்கு ஆபத்து ஏதுமில்லை. நீ நினைக்கும்போது உன்னிடம் வருவான்” என்று.

வியப்பினாலும் வியப்பினால் ஏற்பட்ட அதிர்ச்சி யினாலும் சிலையென உட்கார்ந்தபடி இருந்துவிட்ட சித்தரஞ்சனி நாற்புறமும் திரும்பிப் பார்த்தாள். எங்கும் யாரையும் காணோம். பேசியது தேவியாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததால், “சண்டீ! நீ கல்லல்ல, கல் உருவத்தில், எங்களுக்காகக் குடி கொண்டிருக்கும் ஜகன்மாதா. உன் கடாட்சம் இருந்தால் ஆகாதது என்ன இருக்கிறது? அவரை எப்படியும் நல்லபடி என்னிடம் அனுப்பிவை” என்று மன்றாடினாள். அந்த நினைப்புடனும் நிச்சலமான பக்தியுடனும் மீண்டும் படிகளில் ஏறி மேலே வந்தாள். மேலே வந்ததும் காற்றிலாடிய மரங்கள் பலபல வென அவள் தலைமீது பூமாரி பொழிந்தன. தனது ஈரச் சேலையை உலர்த்திக் கொள்ள ஒருபுறமாகப் பக்கத்திலிருந்த செடிகளின் மறைவுக்குப் போன சித்தரஞ்சனி மெதுவாகச் சேலையின் ஒரு பகுதியை மட்டும் இறுகச் சுற்றிக் கொண்டு இன்னொரு தலைப்பைக் கட்டிவிட இடம் பார்த்தாள். அந்தத் தலைப்பின் நுனியை மறைவிலிருந்த கையொன்று பற்றிச் சற்று மேலே இருந்த மரக்கிளையில் கட்டிவிட்டது. அடுத்துத் தொடர்ந்த நிகழ்ச்சி அவளைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியதா? பரவசத்துக்கு உள்ளாக்கியதா? அவளுக்கே புரியவில்லை, அந்த ஈர ஆடையுடனிருந்த அழகியைப் பின்புறமிருந்து கௌதமிபுத்ரன் அணைத்த பின்புதான் அவள் உண்மையை ஓரளவு உணர்ந்தாள். உணர்ந்தது அவள் மட்டுமல்ல, மரக்கலத்தில் நாகபாணனும் உணர்ந்து கொண்டான். சண்டிகாதேவியின் சித்தம் எப்படியெல்லாம் பலன் தரும் என்பதும் மகாக்ஷத்ரபனுக்கு விளக்கமாகவே புரிந்தது.

Previous articleChittaranjani Ch13 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch15 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here