Home Chittaranjani Chittaranjani Ch16 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch16 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

51
0
Chittaranjani Ch16 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch16 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch16 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 16 மணமகள் தேவை

Chittaranjani Ch16 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

பொழுது புலர வேண்டிய வேளையின் காரணமாக வானிலிருந்த சந்திரன் கர்ப்ப ஸ்திரீயின் முகம் போல் ஒளியிழந்து கிடந்த நேரத்தில், நக்ஷத்திரங்களும் எங்கோ ஒன்றாகத் தேடக்கூடிய நிலையில் மறைந்து கொண்டிருந்த சமயத்தில், மேலைக்கடலின் இயற்கையழகு கண்ணையும் மனத்தையும் பறிக்கும்படியாக இருந்த நேரத்தில், மந்தமான ஒளி எங்கும் பரவி நின்ற காலத்தில், அந்த இயற்கை அழகையும் அழிக்கக்கூடிய நிகழ்ச்சியின் விளைவாக எதற்கும் அசையாத நாகபாணன் கூட அதிர்ச்சியை அடைந்தான்.

கோட்டையிலிருந்து கொண்டு வரப்பட்ட மூட்டையிலிருந்து கௌதமிபுத்ரனுக்குப் பதில் காஷ்டானன் எழுந்ததையும், அடுத்து நடக்கப் போவது என்ன என்பதைத் தான் தீர்மானிக்கும் முன்பாக காஷ்டானன் கை கால்களை உதறிக் கொண்டு க்ஷத்ரபன்மீது பாய்ந்து அவன் குரல் வளையைப் பிடித்துவிட்டதையும், அடுத்த நிமிடம் க்ஷத்ர பனைக் கீழே தள்ளி காஷ்டானன் அவன் மீது உட்கார்ந்து குரல்வளையைத் திருக முயன்றதையும், க்ஷத்ரபன் மூச்சு திணறித் திண்டாடியதையும் கண்ட நாகபாணன் சில விநாடிகள் செயலற்று விட்டானானாலும், செயற்பட்ட போது மிகப் பயங்கரமாகச் செயல்பட்டான். தனது காலின் ஒரே உதையில் காஷ்டானனை க்ஷத்ரபன் உடலிலிருந்து அப்புறம் சென்று விழச்செய்தான். அடுத்துத் தனது இடது கையால் க்ஷத்ரபனின் இடது கையைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி வலது கையால் அவன் முகத்தில் ஓங்கிக் குத்தவே க்ஷத்ரபன் இரண்டு அடிகள் பின்னுக்குச் சென்று மல்லாந்து காஷ்டானன் பக்கத்தில் விழுந்தான்.

அப்பொழுதும் காஷ்டானன் தனது பக்கத்தில் விழுந்த க்ஷத்ரபனைப் பிடிக்கத் தனது கையை உயர்த்திய போது, “க்ஷத்ரபன்மீது அந்தக் கை விழுந்தால் அதை உடனடியாக வெட்டி விடுவேன்” என்று நாகபாணன் அதட்டவே, காஷ்டானன் தனது கொலை முயற்சியை விட்டு மெதுவாக எழுந்து நின்று க்ஷத்ரபனைக் கொலைப் பார்வையாகப் பார்த்தான். க்ஷத்ரபனும் மெதுவாகத் தனது பெரிய சரீரத்தைத் தூக்கிக் கொண்டு எழுந்து நின்று, “இத்துடன் இது முடியவில்லை, காஷ்டானா?” என்று சீறினான்.

“எந்தச் சமயத்திலும் உன்னைச் சந்திக்கச் சித்தமாயிருக் கிறேன்” என்று காஷ்டானனும் தனது உக்கிரத்தைக் காட்டினான்.

அவர்கள் இருவரும் சுயநிலைக்கு வருவதற்குள் நிதானத்தை அடைந்துவிட்ட மகாக்ஷத்ரபனான நாகபாணன், “உங்களிருவருக்கும் அந்தக் கஷ்டமிருக்காது” என்று மிக மெதுவாகச் சொன்னான்.

அந்த மெதுவான போக்கிலும் நாகம் சீறுவது போன்ற விஷம் இருப்பதைக் கவனித்த இருவர் முகத்திலும் பேய் அறைந்த அதிர்ச்சி தெரிந்தாலும், அதிலிருந்து முதலில் மீண்ட காஷ்டானன், “குற்றம் என்னுடையதல்ல” என்று சொற்களின் வேகத்தை அடக்கிக் கொண்டு பேசினான்.

“குற்றம் என்னுடையதுமல்ல. மகாக்ஷத்ரபர் உத்தரவைத் தான் நான் நிறைவேற்றினேன்” என்று க்ஷத்ரபன் தனது கட்சியை எடுத்துச் சொன்னான்.

நாகபாணன் அந்த இருவரையும் இகழ்ச்சியுடனும் வெறுப் புடனும் நோக்கிவிட்டு, முடிவில் க்ஷத்ரபனை நோக்கி, “இந்த ஆள் மாறாட்டம் எப்படி ஏற்பட்டது?” என்று வினவினான்.

“எனக்குத் தெரியாது” என்றான் க்ஷத்ரபன்.

அடுத்து காஷ்டானனை நோக்கினான் நாகபாணன். “இந்த மூட்டைக்குள் நானாக நுழைந்து கொள்ளவில்லை” என்று காஷ்டானன் சொன்னான்.

நாகபாணன் கண்கள் மீண்டும் க்ஷத்ரபன் மீது திரும்பின. “கட்டிலில் படுத்திருந்தவனைக் கட்டிக் கொணர்ந்தேன். படுத்திருந்தது யாரென்று தெரியாது. காஷ்டானன் யாரென்பதை அறிவிக்கவில்லை” என்று காஷ்டானனின் மீது குற்றம் சாட்டினான் க்ஷத்ரபன்.

“வாயில் துணி அடைத்திருந்தால் எப்படி என்னை அறிவித்துக் கொள்ள முடியும்? இங்கு வரும்போதும் வந்த பின்னும் எத்தனை தடவை முனகினேன். மூட்டையைத் திறந்து பார்க்கக்கூட க்ஷத்ரபனுக்கு மூளையில்லையா?” என்று கேட்டான் காஷ்டானன்.

நாகபாணன் க்ஷத்ரபனைப் புன்முறுவலுடன் நோக்கி விட்டு, “காஷ்டானா! இவன்தான் தெரியாமல் உன்னைக் கொண்டு வந்து விட்டான். ஆனால் நீ எதற்காக அவனைக் கொல்ல முயன்றாய்?” என்று காஷ்டானனை விசாரித்தான்.

காஷ்டானன் முகத்தில் மீண்டும் சினம் உதயமாயிற்று; “மகாக்ஷத்ரபரே! மூட்டையிலிருந்தபோது என் மாமனாராக வேண்டியவர் எத்தனை முறை என்னை உதைத்தார்? எத்தனை கேவலமாகப் பேசினார்! ‘மாப்பிள்ளையாகக் கனவு காண்பவன் கதியெல்லாம் இப்படித்தான்’ என்றார். ‘க்ஷத்ரபன் மாப்பிள்ளையாவது அத்தனை சுலபமா’ என்றார். நான் முனகினேன், நான் யாரென்பதை அறிவிக்க இன்னொரு முறை முனகினால் மூட்டைக்குள் கத்தியைப் பாய்ச்சி விடுவதாகப் பயமுறுத்தினார். பிறகு நான் முனகக் கூட இல்லை. மூட்டையிலிருந்து விடுதலையான பிறகு மாமனாருக்குச் சரியான பாடம் கற்பிப்பதென்று தீர்மானித்தேன். மற்றவை நீங்கள் அறிந்ததே” என்று தனது கதையை முடித்தான் காஷ்டானன்.

நாகபாணன் நீண்ட நேரம் மரக்கலத்தின் பாய்மரத்தில் சாய்ந்தபடியே சிந்தனையில் இறங்கினான். பிறகு கேட்டான். “காஷ்டானா! நீ எப்படி சாதவாகனன் கட்டிலுக்கு வந்து சேர்ந்தாய்?” என்று.

காஷ்டானன் முகத்தில் குழப்பம் தெரிந்தது. “திட்டமாகத் தெரியவில்லை. ஆனால் ஊகிக்க முடியும். நான் இரவு முற்றிய சமயத்தில் கோட்டை நந்தவனத்தில் நடந்து கொண்டிருந் தேன். ஏதோ சிந்தனையுடன் ஒரு புதரின் முன்பிருந்த சிறு மரத்தில் சாய்ந்து கொண்டிருந்தேன். மரத்தின் மீதிருந்து ஏதோ கல்லோ கட்டையோ விழுந்திருக்க வேண்டும். நான் மூர்ச்சையானேன். பிறகு என்னை நீங்கள் கட்டிலிலிருந்து தூக்கிப்படகில் கிடத்திய போது தான் சற்று சுரணை வந்தது” என்று நடந்ததை விவரித்தான் காஷ்டானன்.

நாகபாணன் காஷ்டானனை அருகில் வரச் சொல்லி அவன் தலையைப் பார்த்தான். நடுமண்டையில் பெரிய காயம் தெரிந்தது. ஆனால் அதன்மீது ஏதோ களிம்பும் பூசப் பட்டிருந்தது. அதைக் கண்ட நாகபாணன், “காஷ்டானா! நீ இப்பொழுது உயிருடனிருப்பது கௌதமி புத்ரனால். உன்னை மண்டையில் லாகவமாக அடித்துக் காயத்துக்குக் களிம்பும் போட்டு ரத்தத்தை நிறுத்திவிட்டான்” என்று சொல்லிவிட்டு, “உன்னைக் காப்பாற்ற மட்டும் கௌதமி புத்ரன் உனக்கு சிகிச்சை செய்யவில்லை. உன் மண்டையில் குருதி பெருகினால் உன்னைப் போர்த்தியிருந்த போர்வையில் ரத்தக்கறை தெரியும். அது என்னவென்று நாம் பார்ப்போம். பிறகு உண்மை விளங்கிவிடும். பிறகு அவன் தப்புவதும் குதிரைக் கொம்பு. இதை உணர்ந்தே மிக சாமர்த்தியமாக நடந்து கொண்டிருக்கிறான் சாதவாகனன். நாம் இப்பொழுது மகாபுத்திசாலியும் மகாவீரனுமான எதிரியுடன் போராடுகிறோம். இதை நீங்கள் புரிந்து கொள்வது நல்லது” என்று கூறினான். மேலும் சொன்னான்: “க்ஷத்ரபா! உடனடியாக நாம் சித்தரஞ்சனியின் திருமணத்தை நடத்திவிட வேண்டும். காஷ்டானனுக்கு அவளை மணமுடிக்க உடனே நாள் அறிவிப்போம்” என்று.

அத்துடன் தீர்க்க சிந்தனையுடன் நூலேணியில் இறங்கிக் கோட்டையை நோக்கிப் படகில் கிளம்பினான் மகாக்ஷத்ரபன். படகில் போகும் போதே அவனுக்குப் பலவித யோசனைகள் கிளம்பி அவன் சிந்தையைச் சிதற அடித்துக் கொண்டிருந்தன. ‘க்ஷத்ரபன் சித்தரஞ்சனி திருமண நாளையும் குறிப்பிட்டால் அதைத் தடுக்க சாதவாகனன் கண்டிப்பாய் வருவான். அவன் வரும்போது அவனை வரவேற்க நான் சித்தமாக இருப்பேன். எதற்கும் கோட்டையை அடைந்ததும் அவளைக் காவலில் வைக்கிறேன்’ என்று எண்ணிக் கொண்டே கோட்டையை அடைந்த நாகபாணன் சித்தரஞ்சனியை உடனடியாக அழைத்து வருமாறு பணிமக்களுக்கு உத்தரவிட்டான்.

சற்று நேரத்திற்கெல்லாம் வந்த பணிமகளொருத்தி, “நேற்றிரவு நதிக்கரை சென்ற சித்தரஞ்சனி திரும்பவில்லை” என்று அறிவித்தாள்.

“நதிக்கரையிலிருந்து திரும்பவில்லை?” நாகபாணன் சீறினான்.

“இல்லை.”

“எங்கு போனாள்?”

“அக்கரைக்குச் சென்றதாகப் படகோட்டி சொன்னான்.”

“யாரும் தேடவில்லை?”

“எங்கு போனாலும் அரசகுமாரியைத் தடை செய்ய வேண்டாமென்றும், விசாரிக்கவேண்டாமென்றும் தாங்கள் உத்தரவிட்டதாகச் சொன்னார்கள்.”

தான் அளித்த சுதந்திரத்தை சித்தரஞ்சனி நன்றாக உபயோகப்படுத்திக் கொண்டதை உணர்ந்த நாகபாணன் தனது வாழ்வில் முதன்முதலாகப் பூர்ணமான குழப்பத்தில் ஆழ்ந்தான். அன்று நீராடிய போதும், உணவருந்திய போதும் சிந்தனையிலேயே காலம் கழித்தான். எதிர்க்கரையிலிருந்து சென்றுவிட்ட மக்களுக்குப் பிசாசு பயம் இருக்கும் வரையில் தான் தனது திட்டத்துக்குப் பயனுண்டு என்பதை உணர்ந் திருந்தான். எப்படியும் கூடிய சீக்கிரம் எனது படைகளைத் தாபோல் பகுதியில் இறக்கிவிட்டாலொழியத் தனது சாம் ராஜ்யக் கனவு பலிக்காதென்பதையும் புரிந்து கொண்டதால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் தீர்மானித்தான். எப்படியும் சித்தரஞ்சனியைக் கோட்டைக்குக் கொண்டு வந்து விடுவது முக்கியம் என்ற முடிவுக்கும் வந்தான்.

அன்று மாலையில் இது சம்பந்தமான சிந்தனையில் ஈடுபட்டிருக்கையில், க்ஷத்ரபனும் காஷ்டானனும் மரக்கலத் திலிருந்து கோட்டைக்கு வந்து நாகபாணனைப் பார்த்துத் தலை வணங்கினார்கள். காஷ்டானன் சொன்னான், “மாமனார் என்னை மன்னித்துவிட்டார்” என்று.

“மாப்பிள்ளையும் என்னை மன்னித்து விட்டார்” என்றான்க்ஷத்ரபன்.

“இனி கல்யாணத்திற்கு நாள் வைக்கலாம்” என்றான் காஷ்டானன்.

நாகபாணனுக்கு உள்ளூர கோபம் வந்தாலும் அதை அடக்கிக்கொண்டு, “காஷ்டானா! உன்னை மாமனார் உதைத்ததைப் பற்றிக் கோபமில்லையா?” என்று வினவினான்.

“மூட்டைக்குள்ளிருப்பது நான் என்று தெரிந்திருந்தால் உதைத்திருக்க மாட்டார்” என்றான் காஷ்டானன்.

“க்ஷத்ரபா! உன்னை இவன் குரல்வளையைப் பிடித்துக் கொல்ல முயன்றானே?” என்று நாகபாணன் க்ஷத்ரபனை நோக்கிக் கேள்வி ஒன்றைத் தொடுத்தான்.

“அறியாமையால் ஆத்திரத்தில் செய்தார். ஆத்திரக் காரனுக்குப் புத்தி மட்டு” என்று வாதாடினான் க்ஷத்ரபன்.

சாதாரண சமயமாயின் யாருக்குப் புத்தி மட்டு என்று கேட்டு க்ஷத்ரபன்மீது பாய்ந்துவிடக் கூடிய காஷ்டானன் அன்று மௌனமாக நிலத்தில் பார்வையைச் செலுத்தி வெட்கத்துடன் நின்றான்.

அவன் நின்ற நிலையை நோக்கிய நாகபாணன், “மனைவிக்காக மாமனாரிடம் உதை வாங்கியதையும் பொருட்படுத்தாத வீரன் இந்த காஷ்டானன்” என்று உள்ளூர சொல்லிக் கொண்டான்.

அப்பொழுது மெதுவாக காஷ்டானன், “மகாக்ஷத்ரபரே! முகூர்த்த நாளை குறித்து விடலாமே?” என்று கேட்டான்.

”அதற்கு முக்கியமான ஒருவர் தேவை” என்றான் நாகபாணன்.

“ஜோஸ்யர்தானே! இதோ அழைத்து வருகிறேன்” என்றான் காஷ்டானன்.

”அவர் அத்தனை முக்கியமல்ல” என்றான் நாகபாணன்.

“தாரை வார்த்துக் கொடுக்க இதோதந்தை இருக்கிறார்” என்று க்ஷத்ரபனைக் காட்டினான் காஷ்டானன்.

“அவரைவிட முக்கியமானவர் வேண்டும்” என்றான் நாகபாணன்.

“மாமனாரைவிட முக்கியமானவரா!” வியப்பைக் காட்டினான் காஷ்டானன்.

“ஆம்.”

“யாரது அத்தனை முக்கியம்?”

“பெண்.”

“பெண்ணா?”

“ஆம்.”

“மணமகளா?”

“ஆம்.”

“அவளுக்கென்ன?”

“அவள்தான் தேவை. அவளைக் காணவில்லை” என்ற நாகபாணன் நகைத்தான்.

Previous articleChittaranjani Ch15 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch17 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here