Home Chittaranjani Chittaranjani Ch18 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch18 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

156
0
Chittaranjani Ch18 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch18 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch18 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 18 திருமணத் தருணம்

Chittaranjani Ch18 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

நல்லதும் பொல்லாததும் கர்மவினையால் விளைகின்றன. நல்லது ஏற்படும்போது மனிதன் தனது சாமர்த்தியத்தினால் ஏற்பட்டதாக நினைக்கிறான். தனது சக்திக்கு அப்பாற்பட்டுப் பொல்லாதது விளையும் போது, அதற்குக் காலம், விதி என்ற சொற்களை உபயோகப்படுத்துகிறான். தன் சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஊழ்வினையால் அனைத்தும் ஏற்படுகின்றன என்ற ஞானமோ, எதற்கும் காரண காரியங்கள் உண்டு என்ற நினைப்போ மனிதனுக்குக் கிடையாது. சில வேளைகளில் தன்னால் எதையும் மாற்றிவிட முடியும் என்ற ஆணவமும் மனிதனுக்கு ஏற்படுகிறது. அப்படித்தான் காஷ்டானனும் நினைத்தான். தன்னுடனும் க்ஷத்ரபனுடனும் வந்திருக்கும் வீரர்களைக் கொண்டு, சித்தரஞ்சனியின் திருமணத்தை எப்படியும் தடுத்துவிடலாம் என்ற தைரியத்தில் ‘அவள் என் மனைவி’ என்று கூச்சலிடும் துணிவையும் பெற்றான். மனிதன் இஷ்டப்படி சகலமும் நடப்பதனால், காஷ்டானன் தன்னுடன் வந்திருந்த வீரர்களைக் கொண்டும் க்ஷத்ரபன் அழைத்து வந்த வீரர்களைக் கொண்டும் நிலைமையை அடியோடு மாற்றியிருக்கலாம். ஆனால் தெய்வ சித்தம் முற்றும் மாறாக இருக்கவே, கௌதமிபுத்ரனால் சேனாதிபதி என்று அழைக்கப்பட்டவன் கையிலிருந்த பெரிய மணி, காஷ்டானன் தலையில் வேகமாக இறங்கவே, திடீரெனப் பக்திவசப்பட்டவன்போல் காஷ்டானன் தரையில் குப்புற விழுந்து, கர்ப்பக் கிரகத்தை நோக்கி நமஸ்காரம் செய்யும் பாவனையில் செயலற்றுக் கிடந்தான்.

சேனாதிபதியின் இந்தச் செய்கையை அடுத்து க்ஷத்ரபனும் அவனது வீரர்களும் தங்கள் வாட்களை உருவுவதற்கு முன்பாக, சேனாதிபதி ஒரே எட்டில் க்ஷத்ரபனை அடைந்து அவன் அங்கியைக் கையால் பற்றித் தன்னிடம் இழுத்துக் கொண்டு மணியையும் அவன் தலைக்குமேல் ஓங்கி, “க்ஷத்ரபன் உயிரோடு உங்களுக்குத் தேவையானால் வாட்களைக் கீழே போடுங்கள். பூஜை முடிந்ததும் சண்டையிடத் தேவைக்குமேல் சந்தர்ப்பம் தருகிறேன்” என்ற சேனாதிபதி க்ஷத்ரபனிடமிருந்த வாளையும் குறுவாளையும் எடுத்துத் தனது கச்சையில் செருகிக் கொண்டான். இந்தத் திடீர் மாற்றத்தால் வாட்களைக் கீழே போட்ட வீரர்களைச் சற்று ஒதுக்குப்புறமாக நிற்கச் சொல்லிவிட்டு அந்த வாட்களைப் பொறுக்கிக் கோவில் திண்ணையில் வைக்கும்படி அந்த வீரர்களில் ஒருவனுக்கு உத்தரவிட்டான்.

காஷ்டானன் தரையில் விழுந்து கிடந்ததாலும் க்ஷத்ரபன் கதியும் அதோகதியாயிருந்தபடியாலும் சாக வீரர்கள் சேனாதிபதி இட்ட பணிகளை ஒழுங்காக நிறைவேற்றவே, தாபிலேசுவரர் கோவிலுக்கு முன்பு அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. சேனாதிபதி க்ஷத்ரபனைப் பிடித்த வண்ணமே காஷ்டானனை எழுப்புமாறும் அவனுக்குச் சைத்தியோபசாரங்கள் செய்யுமாறும் அவன் வீரர்களுக்கே உத்தரவிட்டான். அதையொட்டி இருவீரர்கள் காஷ்டானனை மெதுவாகத் தூக்கி உட்கார வைத்துத் தலையைப் பரிசோதித்து அதில் காயம் ஏதும் ஏற்படாததைப் பார்த்துப் பெரும் வியப்படைந்து, “தலையில் காயம் ஏதுமில்லை” என்று கூறினார்கள் சேனாதிபதியை நோக்கி.

“சுபமான கல்யாணச் சமயத்தில் ரத்தம் சிந்த நான் இஷ்டப்படவில்லை. லேசான அதிர்ச்சியே காஷ்டானனுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தூணில் அவனைச் சாத்தி வையுங்கள்; உள்ளிருந்து அபிஷேக ஜலம் வரும். அதனால் கண்களைத் துடைத்தால் மாப்பிள்ளைத் தோழன் சுயநினைவு அடைவான்” என்று சொன்னான் சேனாதிபதி.

அந்தச் சமயத்தில் உள்ளிருந்து கௌதமிபுத்ரன் குரல் கொடுத்தான், “வஜ்ரபாகு!” என்று.

“மன்னவா! இங்கு இருவர் சிறைப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் நினைவிழந்து கிடக்கிறார். இவர்களை விட்டு எப்படி வருவேன்? தாங்களே இங்கு வருவது நல்லது” என்றான் சேனாதிபதி வஜ்ரபாகு.

“அவர்கள் ஆயுதங்களைக் கோயிலுக்குள் வைத்துவிட்டு அவர்களை விடுதலை செய்துவிடு. அவர்களும் இந்தச் சுபமுகூர்த்தத்தில் பங்கு கொள்ளட்டும்” என்று கௌதமி புத்ரன் உள்ளிருந்தே உத்தரவிட சேனாதிபதி க்ஷத்ரபனைத் தனது பிடியிலிருந்து விடுதலை செய்தான். “க்ஷத்ரபரே! நான் விட்டுவிட்டதால் நீங்கள் தப்பிவிடலாமென்று நினைக்க வேண்டாம். நீங்கள் மன்னர் அனுமதியில்லாமல் இந்தத் தாபோல் மலையைக் கடக்க முடியாது” என்று எச்சரித்து விட்டு, க்ஷத்ரபன் வீரர்களில் ஒருவனை நோக்கி, “அந்த வாட்களை எடுத்துக் கோவிலுக்குள் அடுக்கு” என்று உத்தரவிட்டான்.

சேனாதிபதி வஜ்ரபாகு, கௌதமிபுத்ரன் ஆணைப்படி க்ஷத்ரபன் மீதிருந்த பிடியைத் தளர்த்தினானேயொழிய சேனாதிபதி எந்த சமயத்திலும் மணியால் க்ஷத்ரபன் மண்டையை உடைத்துவிடுவானென்ற அச்சத்தில் எதிரி வீரர்கள் சேனாதிபதியின் சொற்களைக் கட்டளைகளாகவே ஏற்று நடந்து கொண்டனர். உள்ளே சந்நிதியிலிருந்த கௌதமிபுத்ரன் தாபிலேசுவரர் மீது புஷ்பங்களையும் வில்வ பத்ரங்களையும் இறைத்து வேதகானம் செய்துவிட்டு முடிவாகத் தீபாராதனையைக் காட்டிவிட்டு வெளியே வந்தபோது, வாயிலில் இருந்த நிலையைக் கவனிக்காமல் தூரத்தே பெண்களும் ஆண்களும் பெருங்கூட்டமாகப் புடைசூழ வந்துகொண்டிருந்த சித்தரஞ்சனியைக் கவனித் தான்.

மலையின் மனோகரச் சூழ்நிலையில், மரமல்லி மரங்கள் உதிர்த்திருந்த நீண்ட புஷ்பங்கள் விரித்திருந்த நடை பாவாடையில் நடந்து, கதிரவன் கிளம்பிவிட்டதால் மரக் கூட்டத்தையும் பிளந்து கொண்டு விழுந்திருந்த கம்பிக் கிரணங்கள் ஆங்காங்கு மேலே விழுந்ததால் புதுப்புதுக் கோடுகள் தவழும் அழகில் புகுந்து, காட்டு மலர்களைக் கொண்டு விட்டுவிட்டுத் தொடுக்கப்பட்ட மாலையைக் கழுத்தில் அணிந்து பாதத்திலிருந்து இரண்டு புதுச் சிலம்புகள் ஒலிக்க, இடை துவள, உடல் அசைய, சித்தினி ஜாதிப் பெண்ணைப்போல் சித்தரஞ்சனி நடந்துவந்த ஒய்யாரத்தில் மதிமயங்கி நின்றான் கௌதமிபுத்ரன்.

அன்று சித்தரஞ்சனி திருமணத்துக்கென்று படாடோப மான புடவை ஏதும் கட்டவில்லை. தங்க ஆபரணங்களையும் காணோம். தலைக்குழலை அவள் கொண்டையிட்டுப் புஷ்பச் சரங்களால் சுற்றியிருந்த அழகும், கழுத்திலிருந்த மாலை அவள் நடையில் அசைந்து அசைந்து மார்பு இரண்டையும் தொட்டுக் காட்டிக் காட்டிப் புரண்ட சிங்காரமும், இயற்கையாகவே தீட்டியது போலிருந்த கண்களும், நகைகளை அர்த்தமறச் செய்தாலும் காதில் மட்டும் இரண்டு சிறு குண்டலங்களை அவள் அணிந்திருந்தாள்.

அவள்தாபிலேசுவரர் கோவிலை ஏறெடுத்துப் பார்க்காமல் தரையை நோக்கியே நடந்து வந்ததால் கோயில் முகப்பி லிருந்த காட்சி எதையும் அவள் கவனிக்கவில்லை. அவளைச் சூழ்ந்து வந்த மங்கையரும் மற்ற ஆண் மக்களும் அந்த மலைவாசிகளைப்போல இருக்கவே இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?’ என்று க்ஷத்ரபன் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். மணியடிப்பட்டு விழுந்த காஷ்டானன் கூட கௌதமிபுத்ரன் தெளித்த அபிஷேக நீரால் சுயநிலை அடைந்தாலும், நடுத்தலையில் எழும்பியிருந்த இடத்தைத் தடவிப்பார்த்துக்கொண்டு, தூர வந்த கூட்டத்தைக் கோயில் தூணில் சாய்ந்த வண்ணம் பார்த்துப் பார்த்துப் பொருமிக் கொண்டிருந்தான்.

கூட்டம் மெள்ளக் கோவிலை அணுகியதும் கௌதமி புத்ரன் சேனாதிபதியை நோக்கி, “க்ஷத்ரபருக்கும் காஷ்டானனுக்கும் அபிஷேக தீர்த்தத்தைக் கொடும்; உள்ளே வெள்ளி வட்டிலில் வைத்திருக்கிறேன்” என்று கூறிவிட்டுப் பட்டு வேஷ்டியும் உத்தரீயமுமாக வெளியே வந்து நின்று கொண்டான். அப்பொழுது க்ஷத்ரபனைப் பார்த்து, “க்ஷத்ரபரே! அதோ வரும் கூட்டம் இந்த மலையிலிருந்த சிறு கிராமங்களைச் சேர்ந்தவர்களில் ஒரு சிறு பகுதி. சிறிது சிறிதாக இந்த மலைக் கிராமங்களுக்கு மக்கள் மீண்டும் வந்து கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னான்.

க்ஷத்ரபன் முகத்தில் திகில் படர்ந்தது. “அப்படியானால் பிசாசு…” என்று ஏதோதுவங்கினான்க்ஷத்ரபன்.

”அதற்குத்தான் இரண்டு நாட்களாக சண்டிஹோமம் நடக்கிறது. அதோ பாருங்கள். சண்டி குகைப் பக்கத்திலிருந்து ஹோமப்புகை ஆகாயமளாவிச் செல்கிறது” என்று தூரத்தே சுட்டிக் காட்டினான் சேனாதிபதி.

தூரத்தே எழுந்த பெரும்புகையைக் கவனித்த க்ஷத்ரபன் மகாக்ஷத்ரபனின் தந்திரத்தை கௌதமிபுத்ரன் உடைத்து விட்டதைச் சந்தேகமறப் புரிந்து கொண்டான். சித்தரஞ் சனியைச் சூழ்ந்து வந்த பெண்கள் மலைவாசிகளாதலால் தலையிலும் கழுத்திலும் மாலைகள் அணிந்திருந்தார்கள். மலை ஜாதிகள் திருமணச் சமயங்களில் பாடும் பாட்டையே பாடிக் கொண்டும் வந்தார்கள். அந்தப் பாட்டின் கடுமையிலும் ஒரு சுகமிருந்தது. அவர்கள் கைகளில் போட்ட தாளங்களிலும் லயசுத்தமிருந்தது. ஆடியது பெண்கள் மட்டுமல்ல, பின்னால் வந்த ஆண்களும் ஆடிக் கொண்டு வந்தார்கள்.

அவர்கள் உற்சாகத்தைக் கண்ட க்ஷத்ரபன் அந்தத் திருமணத்தை எப்படியும் தடுக்க வேண்டுமென்று உறுதி கொண்டானானாலும் வழி தெரியாமல் திருதிருவென்று விழித்தான். காஷ்டானனுக்கு மயக்கம் நன்றாகத் தெளிந்து விட்டதால் அவனும் எழுந்துகொண்டான். அந்தக் கோவிலை அணுகும் வரையில் நிலத்தை நோக்கி நடந்து வந்த சித்தரஞ்சனி வாயிலை அடைந்ததும் தலையை நிமிர்ந்து நோக்கிப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானாள். தனது வளர்ப்புத் தந்தையும் தன்னை அடைய மனக்கோட்டை, கட்டிய காஷ்டானனும் வாயிலின் இருபுறங்களிலும் நின்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தாலும், அவர்கள் இருவருக்கும் மத்தியில் கௌதமிபுத்ரன் வாயிற்படியைத் தலையால் தொட்டு விடுபவன்போல் நின்றிருந்ததைக் கவனித்ததும் அதிர்ச்சியை உதறிக்கொண்டு தாபிலேசுவரர் கோவில் வாசலை நோக்கி நடந்தாள். அவளைச் சூழ்ந்து வந்தவர்களும் கோவில் முன்பாகப் பரவலாக நின்றார்கள்.

“தேவி! இங்கு உன்னை யாரும் தடுக்க முடியாது. படிகளில் ஏறி வா” என்றான் கௌதமிபுத்ரன்.

‘சித்தரஞ்சனி! படியில் காலை வைக்காதே. உன் தந்தை உத்தரவிடுகிறேன்” என்றான் க்ஷத்ரபன்.

“இவனை நீ மணந்தால் மகாக்ஷத்ரபர் உன்னை லேசில் விடமாட்டார்” என்று எச்சரித்தான், காஷ்டானன்.

இவற்றால் சிறிது சஞ்சலப்பட்ட சித்தரஞ்சனி என்ன செய்வதென்று அறியாமல் நின்ற இடத்திலேயே நின்று தனது மான்விழிகளை நாற்புறமும் செலுத்தினாள். அவளுக்குத் துணிவை அளிக்கக் கௌதமிபுத்ரனே படிகளில் இறங்கி வந்து, அவள் கையைப்பிடித்து, “சித்தரஞ்சனி! அஞ்சுவதற்கு ஏதுமில்லை. வா உள்ளே” என்று அழைத்துச் செல்ல முயன்றான்.

அவள் இரண்டாவது படியில் காலை வைக்கு முன்பு, “கௌதமிபுத்ரா! இன்னும் ஓர் அடி எடுத்து வைத்தாலும் பிணமாகி விடுவாய். மணக்கோலம் பிணக்கோலமாகி விடும்” என்று எச்சரிக்கைக் குரலொன்று ஒலித்தது.

அதைத் தொடர்ந்து கோயிலின் பக்கத்திலிருந்து வெளியே வந்து நாகபாணன் தனது கையிலிருந்த குறுவாளைக் கௌதமிபுத்ரன் இதயத்தை நோக்கிக் குறி வைத்திருந்தான். அடுத்த கோவிலுக்குப் பின்னாலிருந்தும் முன்னாலிருந்த மரங்களின் மறைவிலிருந்தும் விற்களில் வாளிகளைப் பூட்டிய ஐம்பது வீரர்கள் தோன்றினார்கள்.

நாகபாணனின் எச்சரிக்கைக் குரலைக் கேட்டதுமே சித்தரஞ்சனி துடித்துப் போனாள். அதிர்ச்சியும் அச்சமும் காரணமாகத் தன்னியல்பாகக் கௌதமிபுத்ரனை அணைத் தாள். அவனோ நிலைமையின் ஆபத்தை உணர்ந்திருந்த போதிலும் சித்தரஞ்சனியின் ஆலிங்கனத்தால் சிறிதளவு சிலிர்த்துப் புன்முறுவலும் செய்தான்.

நாகபாணன் கௌதமிபுத்ரன்மீது வைத்த கண்களை வாங்காமலே கூறினான்: “புனிதமான இந்த ஆலயத்துக்கு முன்பாக ரத்தம் சிந்த நான் விரும்பவில்லை. ஆகையால் எந்த நடவடிக்கையிலும் இறங்க வேண்டாம்” என்று. அத்துடன் வீரர்களை நோக்கி, “உங்கள் வாட்களை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று அதட்ட வீரர்கள் கோவிலுக்குள் புகுந்து தங்கள் வாட்களை ஏந்தி வந்தார்கள்.

நாகபாணன் அடுத்து உத்தரவிட்டான்: “சித்தரஞ்சனி! பேசாமல் கோட்டைக்குத் திரும்பு. இன்று உனக்குத் திருமணம் நிச்சயமாக நடக்கும். நான் தேர்ந்தெடுக்கிற மாப்பிள்ளைக்கு” என்று.

நாகபாணன் வில்லவர்கள் கணைகளைப் பூட்டி நிற்க, க்ஷத்ரபனும் காஷ்டானனும் மற்ற வீரர்களுடன் வாட்களை ஏந்திப் போருக்குச் சித்தமாக, மெள்ள அந்தக் கூட்டம் கோயிலை நெருங்கியது. சில நிமிடங்களில் திருமணக் கூட்டம் ஒருபுறமாக ஒதுக்கப்பட்டது. சித்தரஞ்சனியின் கையை கௌதமிபுத்ரன் கையிலிருந்து பிரிக்க நெருங்கிய க்ஷத்ரபன் அவள் கையைப் பிடித்துப் பலவந்தமாக இழுக்க முயன்றான்.

“க்ஷத்ரபா! சாதவாகனனையும் அவன் சேனாதிபதியையும் நமது மரக்கலத்தில் ஏற்றிவிடு. மற்றவர்கள் கோட்டைக்கு வரட்டும்” என்று உத்தரவிட்டுத் திரும்பினான் நாகபாணன். போருக்குப் பழக்கப்பட்ட ஐம்பது வீரர்களுக்கு முன்பாக மலைஜாதி மக்கள் ஏதும் செய்ய முடியாதென்பதையும், தான் எடுக்கும் எந்த நடவடிக்கையும் வீண் ரத்தக் களறியாக முடியுமென்பதையும் கௌதமிபுத்ரனும் உணர்ந்து கொண்டதால் எந்தச் செயலிலும் இறங்காமல் நின்றான்.

Previous articleChittaranjani Ch17 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch19 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here