Home Chittaranjani Chittaranjani Ch19 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch19 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

49
0
Chittaranjani Ch19 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch19 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch19 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 19 உயர்ந்த புகை மண்டலம்! விளைந்த திருமணம்!

Chittaranjani Ch19 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

விற்களில் வாளிகளைப் பூட்டி ஐம்பது வீரர்களால் திருமணக் கூட்டத்தை அச்சுறுத்தி நிறுத்திவிட்டு, அடுத்துச் செய்ய வேண்டிய காரியங்களுக்கு உத்தரவையும் பிறப்பித்து விட்டு மிகுந்த அலட்சியமாகத் திரும்பிச் சென்றுவிட்ட நாகபாணனைப் பார்த்துக் கொண்டே தாபிலேசுவரர் கோவில் படிகளில் சித்தரஞ்சனியின் கையைப் பிடித்து வண்ணம் சிலையென நின்றுவிட்ட கௌதமிபுத்ரன், க்ஷத்ரபன்படிகளில் இறங்கி வந்து சித்தரஞ்சனியின்கையைத் தனது கையிலிருந்து விடுவிக்கக் கையை வைத்ததும், “க்ஷத்ரபா! கையை எடு!” என்று உக்கிரமான குரலில் கூறினான். அத்துடன் அங்கிருந்த திருமணக் கூட்டத்தை நோக்கி, “மலைவாசிகளே! எனக்காக இந்த வீரர் கூட்டத் துக்கு நீங்கள் பலியாக வேண்டாம். சமாதானமாகச் சென்றுவிடுங்கள்” என்று அவர்களுக்கும் உத்தரவிடக் கூட்டமும் மெள்ளக் கலையத் தொடங்கியது.

சாதவாகனன் இப்படி தன்னைத் தானே நிராதரவாக்கிக் கொண்டதைக் கண்ட க்ஷத்ரபன் எப்படியும் சித்தரஞ் சனியைத் தனது வீரர்களைக் கொண்டு சிறை செய்து அழைத்துப் போய்விடலாம் என்ற தைரியத்தில் அவள் கையை விடுதலை செய்து, “சித்தரஞ்சனி! இனி நீ யார் வலுக்கட்டாயமுமில்லாமல் வந்து விடலாம். பழைய மாப்பிள்ளையையே உனக்கு மகாக்ஷத்ரபர்மணமுடிப்பார்” என்று சற்று கர்வத்துடன் கூறினான்.

அத்தனை விபரீத நிலையிலும் ஆபத்திலும் கௌதமி புத்ரன் புன்முறுவல் கொண்டு, “க்ஷத்ரபரே! உமது மகளுக்கு இரண்டு மாப்பிள்ளைகள் உண்டா?” என்று வினவினான்.

“இரண்டு மாப்பிள்ளைகளா! ஒருக்காலும் கிடையாது” என்று திட்டமாகச் சொன்னான் க்ஷத்ரபன்.

“பழைய மாப்பிள்ளையென்று யாரையோ சொன்னீர் களே” என்றான் கௌதமிபுத்ரன்.

“சொன்னேன்.”

“அப்படியானால் பழைய மாப்பிள்ளை புது மாப்பிள்ளை என்று இருவர் ஆகாதா?”

இதைக் கேட்டதும் கோட்டையிலிருந்து வந்த வீரர்கள் கொல்லென்று சிரிக்கவே, அவர்களை முகத்தில் உஷ்ணம் விரிய நோக்கிய க்ஷத்ரபன், “இங்கு சிரிப்புக்கு இடமில்லை. செயலுக்குச் சித்தப்படுங்கள்” என்றான்.

செயலுக்கு அவர்கள் சித்தமானார்களோ இல்லையோ கௌதமிபுத்ரனும், சேனாதிபதியும் ஒரே சமயத்தில் செயல்பட்டார்கள். க்ஷத்ரபனுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே சேனாதிபதியுடன் நயன பாஷையில் இறங்கிய சாதவாகன வாலிபன், சித்தரஞ்சனியின் இடையில் கையைச் செலுத்தி அவளை அரைத் தூக்காகத் தூக்கிக் கொண்டு கோவிலின் பிரகாரத் திண்ணைக்குத் தாவி விட்டான். சாதவாகனன் செயல்படத் துவங்கியதும் சேனாதிபதி வஜ்ரபாகு பிரகாரத் திண்ணைத் தூணில் சாய்ந்து கொண்டிருந்த காஷ்டானனைமின்னல் வேகத்தில் கையைப் பிடித்துத் தூக்கிப் பாதுகாப்பாகத் தனக்கு முன்பாகப் பிடித்துக் கொண்டான்.

அப்பொழுது பேசினான் மிக உக்கிரமான குரலில் சாதவாகனன், “யார் அம்பைத் தொடுத்தாலோ, குறுவாளை எறிந்தாலோ முதலில் பழைய மாப்பிள்ளை பலியாவான்” என்று. அவனது சொற்களின் காரணத்தைப் புரிந்துகொண்ட சேனாதிபதி மெள்ள நகர்ந்து சாதவாகனனுக்கும் சித்தரஞ்சனிக்கும் முன்பாக நின்று வீரர்கள் வாளிகளுக்குப் பலியாக காஷ்டானனை அடிக்கடி அசைத்துக் காட்டினான். மெள்ள காஷ்டானன் காதில் குனிந்து, “உனக்கு ஆபத்து ஏதுமில்லை, பேசாமல் இரு” என்று மந்திரமும் ஓதினான்.

அந்த நிலையில் காஷ்டானன் தனது மாப்பிள்ளைப் பதவியை மறந்தான், நாகபாணனை மறந்தான், உயிர் ஒன்றே பிரதானமென்று அந்த நினைவிலேயே இருந்ததால் பலிக்குச் செல்லும் கிடாவைப்போல் தலையை ஒரு முறை ஆட்டிச் செயலற்று நின்றான். அப்பொழுதும் கோட்டை வீரர்கள் வாளிகளை எய்யச் சித்தமாக நிற்கவே, “அம்பு வீசாதீர்கள். மகாக்ஷத்ரபர் என்னைக் கொல்ல உத்தரவிடவில்லை” என்று கூவினான்.

திருமணத் தருணத்தில் முதல் திருப்பத்தால் ஏற்பட்ட மகிழ்ச்சியையும் துணிவையும் முற்றும் எதிர்பாராத இரண்டாவது திருப்பத்தால் இழந்த க்ஷத்ரபன், “சாதவாகனா! இந்தச் சாகசத்தால் நீதப்பிவிட முடியுமென்று நினைக்காதே. சித்தரஞ்சனியையும் காஷ்டானனையும் அனுப்பிவிடு. உன்னை நான் சிறை செய்யவில்லை” என்று சமரசம் பேச ஆரம்பித்தான்.

“க்ஷத்ரபரே! என்னையும் சேனாதிபதியையும் சிறை செய்து மரக்கலத்துக்குக் கொண்டு போகாமல் நீர் அஞ்சன்வேல் திரும்பினால் உம்மை மகாக்ஷத்ரபர் என்ன செய்வாரென்பது உமக்கே தெரியும். ஆகவே இந்தத் திருப்பத்தை அவரிடம் சொல்லிப் பரிகாரம் கேளும்” என்று சொல்லிக் கொண்டே பின்னால் நகர்ந்து கோவில் வாயிற் படியைத் தாண்டிவிட்டான். பழைய மாப்பிள்ளையை இழுத்துக் கொண்டு சேனாதிபதியும் உட்புறம் சென்றதும் கோவிற் கதவு பெரும் சத்தத்துடன் வேகமாக மூடப்பட்டது.

இப்படி தந்திரமாகச் சாதவாகனன் அந்தச் சமயத்துக்குத் தப்பிவிட்டாலும் கோவிலைச் சுற்றி முற்றுகையிட்டு அவனை வெளிவரச் செய்துவிட முடியுமென்ற எண்ணத்தால் வீரர்களைக் கோவிலைச் சூழ்ந்து கொள்ளச் சொல்லி உத்தரவிட்டான் க்ஷத்ரபன். பிறகு தான் மட்டும் கோவில் படிகளில் ஏறி கதவைப் பலமாகத் தட்டி, “சாதவாகனா! கதவைத் திறந்துவிடு. இல்லையேல் கதவை உடைத்து உட்புகுந்து விடுவேன்” என்று இரைந்தான்.

கோவில் கதவில் பூட்டின் பெரிய துவாரத்தின் மூலம் உள்ளிருந்து பதில் வந்தது. “முட்டாள்! கோவில் கதவை இடிப்பது தெய்வத்துக்குச் செய்யும் அபசாரமாகும். அந்த அபசாரத்துக்கு இந்த மலைவாசிகளும் சுற்றுப்புறமுள்ள கிராமவாசிகளும் உன்னையும் உனது வீரர்களையும் ஒழித்துக் கட்டிவிடுவார்கள். ஏற்கனவே பொய்ப் பிசாசைக் காட்டியதற்காக கிராமங்களில் கொந்தளிப்பு இருக்கிறது. பேசாமல் போய்விடு. திருமண நேரம் நெருங்கிவிட்டது” என்று கௌதமிபுத்ரன் குரல் துவாரத்தின் மூலம் ஒலித்தது.

திகைத்து நின்றான் க்ஷத்ரபன். கௌதமிபுத்ரன் சொற்களில் உண்மை இருந்ததைப் புரிந்துகொண்டான். சற்று திரும்பிக் காட்டைப் பார்த்தான். சண்டி ஹோமாக்கினியின் புகை ஆகாயமளவில் எழுந்து மலை உச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட க்ஷத்ரபன், கௌதமி புத்ரன் திட்டமிட்டுத் தங்களுக்கு எதிரே மலைமக்களையும் அடுத்த கிராமவாசிகளையும் கிளப்பிவிட்டதை நினைத்து,

“என்ன இருந்தாலும் எதிரி மகா சூக்ஷ்ம புத்தியை உடையவன்” என்று அவனைப் பற்றி வியந்தான். கோவில் கதவை இடித்தால் பெரும் விபரீதமும் மக்கள் விரோதமும் ஏற்படும் என்ற நினைப்பால் கதவுக்கருகிலேயே நின்று விட்டான்.

சற்று நேரத்திற்கெல்லாம் உள்ளிருந்து பெருத்த குரலில் யாரோ மந்திரங்களை உச்சரித்தார்கள். உள்ளிருந்து புகையும் வெளியே வந்தது சிறிது. என்ன நடக்கிறது உள்ளே என்பதை அறிய கதவின் பூட்டுத் துவாரத்தின் மூலம் உள்ளே நோக்கினான் க்ஷத்ரபன்.

உள்ளே முன் மண்டபத்தில் தாபிலேசுவரர் சந்நிதிக் கெதிரில் சிறிது தீ மூட்டப்பட்டிருந்தது. சேனாதிபதி பக்கத்தில் உட்கார்ந்து அக்னியில் சுள்ளிகளை இட்டு நெய்யையும் சிறிது ஊற்றி மந்திரங்களைப் பெரிதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அவனுக்குப் பக்கத்தில் காஷ்டானன் உட்கார்ந்து தனது தலையில் எழுந்த முண்டை தடவிக் கொண்டிருந்தான். அவன் கழுத்திலும் ஒரு மாலை போடப்பட்டிருந்ததால் அவன் மாப்பிள்ளைத் தோழனாக் கப்பட்டதை க்ஷத்ரபன் புரிந்து கொண்டான்.

சேனாதிபதி உபாத்தியாயராகி மந்திரங்களைச் சொல்ல அக்னியை வலம் வந்த கௌதமிபுத்ரன் சித்தரஞ்சனியின் கையில் கங்கணம் கட்டி அவளுக்கு மாலையும் சூட்டினான். அக்னி சாட்சியாகவும் தாபிலேசுவரர் சாட்சியாகவும் கோவிலுக்குள்ளே கிரமப்படி விவாஹம் நடப்பதைக் கண்ட க்ஷத்ரபன் அதற்கு மேலும் பொறுக்காமல் நடப்பது நடக் கட்டுமென்று கதவைப் பலமாக உடைக்கத் தீர்மானித்தான். தாபிலேசுவரர் கோபத்தைவிட மகாக்ஷத்ரபர் கோபம் கொடியது என்ற காரணத்தால் எந்தப் பாதகத்துக்கும் துணிந்த க்ஷத்ரபன், “இடித்துத் தள்ளுங்கள் கதவை. பிறகு தாபிலேசு வரருக்கு இதைவிட நல்ல கதவைச் செய்து சமர்ப்பித்துப் பெரும் செலவில் கும்பாபிஷேகமும் செய்து வைப்போம்” என்று வெறி பிடித்தவன் போல் கூவினான் வீரர்களை நோக்கி.

முதலில் சற்று பயந்து தயங்கிய வீரர்கள் க்ஷத்ரபனுக்குப் பயந்து அவன் கட்டளையை நிறைவேற்றக் கூட்டமாக வந்து தங்கள் தோள்களால் கதவை இடிக்கத் தொடங்கி அதற்குக் கதவு இடங்கொடாது போகவே இரண்டு பெரும் பாறைகளைத் தூக்கி வந்து கதவை உடைக்க முதல் பாறையை மோதியதுமே பிரளயம் விளைந்தது கோவில் முன்பாக.

உள்ளேயிருந்து துவாரத்தின் வழியாக பெரிதாகக் குழல் போல் ஊதினான் கௌதமிபுத்ரன். அடுத்த விநாடி அவன் புரவி எங்கிருந்தோ பாய்ந்து வந்தது. திடீரென மரங்களின் மறைவுகளிலிருந்து மலைக்கற்கள் சரமாரியாக வீரர்கள் மீது விழுந்தன. பெருங்கூட்டம் எங்கிருந்தோ மலைப்பாதையில் வரும் பேரரவம் கேட்டது. அந்தப் பேரரவத்தை அடுத்துக் கோவிலின் பெருங்கதவு திறக்கப்பட்டு அதனருகில் நின்ற க்ஷத்ரபன் கழுத்தில் வாளின் நுனி ஊன்றப்பட்டது. கோட்டை வீரர்கள் வாளிகளை ஒருமுறை பிரயோகித்து இரண்டாவது முறை நாண்களில் அம்புகளைப் பூட்டிக் கொண்டே கோவில் வாயிலை நெருங்கிய சமயத்தில் வாயிற்கதவு திறக்கப்பட்டு உள்ளிருந்து வீசப்பட்ட காஷ்டானன் உடல் வேகமாக வீரர்களை நோக்கிப் பறந்து வந்தது. காஷ்டானனைச் சில வீரர்கள் பிடித்து இறக்கி விட்டதும் பூர்ண போருடை அணிந்து கௌதமிபுத்ரனும் சேனாதிபதியும் வாட்களை ஏந்தி வெளியே வந்தனர்.

காஷ்டானன் வெளியே வந்து விழுந்ததாலும் க்ஷத்ரபன் சேனாதிபதியின் வாள் நுனியில் திணறியதாலும் போருக்குச் சித்தமாக வாளை உருவி சாதவாகனன் பிரளய காலருத்திரன் போல் நின்றதாலும் செய்வதறியாமல் நின்ற வீரர்களை நோக்கிய கௌதமிபுத்ரன், “க்ஷத்ரபரை விடுதலை செய்கிறேன். அவரையும் பழைய மாப்பிள்ளையையும் அழைத்துக் கொண்டு கோட்டைக்குச் செல்லுங்கள். நாளைக்கு மறுநாள் நான் நாகபாணனைச் சந்திப்பதாகக் கூறுங்கள். இனி நீங்கள் செல்லலாம்” என்றான்.

மரங்களின் மறைவிலிருந்து பெரும் கூட்டமொன்று மீண்டும் வந்தது. அது திருமணக்கூட்டமல்ல. சிலர்கைகளில் கல்லும் மரக்கட்டைகளும் மற்றும் சிலர் கைகளில் வெட்டுக் கத்திகளுமிருந்தன. அவர்கள் முகங்களில் கொலைக்குறி இருந்தது. வில்லோ, அம்போ, வாட்களோ, பாதிப்பேரை அழித்தாலும், மிச்சம் பாதிப்பேர் தங்களை அழித்து விடுவார்களென்பதைப் புரிந்து கொண்ட க்ஷத்ரபன், வீரர்களைத் தன்னுடன் வரும்படி சைகை செய்து முன்னே சென்றான். அவனைத் தொடர்ந்தான் காஷ்டானன். அவனை எரிச்சலுடன் பார்த்த க்ஷத்ரபன், “எதற்கு என் பின்னால் வருகிறாய்?” என்று சீறினான்.

“நான் உங்கள் மாப்பிள்ளையாக வேண்டியவன்.”

“இல்லை.”

“இல்லையா?”

“இல்லை. நீ என்னைப் பிடித்த சனியன்” என்று கூறி விட்டு வேகமாக நடந்தான் க்ஷத்ரபன்.

அவர்கள் சென்றதும் சித்தரஞ்சனியைத் தனது புரவியில் ஏற்றிவிட்டுக் கடிவாளத்தைத் தான் பிடித்துக் கொண்டு சண்டிகாதேவியின் குகைக் கோவிலை நோக்கி நடந்தான் கௌதமிபுத்ரன்.

Previous articleChittaranjani Ch18 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch20 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here