Home Chittaranjani Chittaranjani Ch2 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch2 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

53
0
Chittaranjani Ch2 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch2 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch2 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 2 ஊர்ந்து வந்த மேகங்கள்

Chittaranjani Ch2 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி என்ற மோகினிப் பிசாசைப் பற்றியும் அது அடிக்கடி வெளியே தோன்றி பூமிக்குள் மறைந்து விடுவதைப் பற்றியும் தாய் கூறியதைச் சித்தத்தில் எண்ணி உள்ளூரச் சிரித்தபடியே தாபோல் துறைமுகத்தை நோக்கிப் பயணத்தைப் பிரதிஷ்டானாவிலிலிருந்து துவங்கிய கௌதமிபுத்ர சதகர்ணி, இரண்டு நாட்கள் இடைவிடாமல் இரவும் பகலும் பயணம் செய்து மூன்றாவது நாள் காலையில் தாபோல்துறைமுகத்துக்குச் சற்று முன்பிருந்த மலைக்காட்டுக் குடிசைக் கூட்டமொன்றுக்கு வந்து சேர்ந்தபோது, தாபோல் மலையை நெருங்க நெருங்க ஊர்களில் ஜன நடமாட்டம் குறைந்து வந்ததையும் கடைசியாகத் தோன்றிய குடிசைக் கூட்டத்தில் குடிசைகள் அதிகமிருந்தாலும் குடிசைகள் யாருமில்லாமல் வெறித்துக் கிடந்ததையும் கவனித்து அந்த நிலைமைக்குக் காரணம் எதுவாயிருக்கும் என்று உள்ளூர வினாவொன்றையும் எழுப்பிக்கொண்டு, புரவியை மலைச் சரிவிலேயே சிறிது நிறுத்தி அந்தக் குடிசைக் கூட்டத்தின் மீது தனது ஆராய்ச்சிக் கண்களை ஓடவிட்டான். அங்கிருந்த குடிசைக் கூட்டத்தில் அரவம் ஏதுமில்லாததையும் தனது புரவியின் குளம்படிகளைக் கேட்டதால் சற்று எட்ட இருந்து இரண்டு குடிசைகளிலிருந்து இரண்டு பூனைகளும், சில நரிகளும் வெளியே ஓடியதையும் கண்டான். காட்டு மரங்களிலிருந்து பறவைகள் சிலவும் சிறகடித்து மேலே பறந்ததையும் ஆனால் மனிதர் யாரும் தலை காட்டாததையும் கவனித்து, சிறிது நேரம் நின்ற கௌதமிபுத்ரன் அந்தக் குடிசைகளில் சற்றுப் பெரிதாயிருந்த குடிசையை நோக்கிப் புரவியைச் செலுத்தி, “யாரங்கே?” என்று இரைந்து குரல் கொடுத்தான்.

அவன் குரல் மலையில் எதிரொலி செய்ததேயொழிய யாரும் நீண்ட நேரம் பதில் கொடுக்காததால் புரவியை எதிரே தெரிந்த மலையை நோக்கித் திருப்ப முயன்ற சமயத்தில் குடிசை வாயிலைத் திறந்து வந்த ஒரு வயோதிகன், “யார் வேண்டும் உனக்கு?” என்று கௌதமிபுத்ரனை நோக்கி வினாவொன்றை வீசினான். அந்த வினாவில் வரவேற்பில்லை, மகிழ்ச்சியில்லை. வெறுப்பும் வருத்தமும் கலந்து கிடந்தன.

கௌதமிபுத்ரன் தனது புரவியில் இருந்த வண்ணமே திரும்பி அவனை நோக்கி, “நீண்ட தூரத்திலிருந்து வருகிறேன். *தாப்யாவுக்குப் போகப் பாதை எது என்று தெரியவேண்டும்” என்று மெதுவாக பதில் சொன்னான்.

வயோதிகன் முகத்தில் வருத்தத்தின் சாயை பூர்ணமாகப் படர்ந்ததாலும், புருவங்கள் மேலே ஏறியதாலும் அவன் நெற்றியில் தீட்டியிருந்த சந்தனக் கோடுகள் சிறிது சுருங்கின. “அங்கு நீ எதற்காகப் போக வேண்டும்?” என்று வினவினான் அந்த வயோதிகன் வருத்தம் குரலிலும் ஒலிக்க.

“தாபிலேசுவரரைத் தரிசிக்க வந்திருக்கிறேன்” என்று கூறிய கௌதமிபுத்ரன் புரவியிலிருந்து கீழே இறங்கினான்.

அவனை ஏற இறங்கப் பார்த்த அந்த வயோதிகன் தனது மீசை தாடிகளையும் சடைபோட்டுத் தொங்கிய தலைக் குழலையும் ஒருமுறை தடவி விட்டுக்கொண்டு, “தாபிலேசுவரரை எதற்காகத் தரிசிக்க வேண்டும்?” என்று வினாவினான் வெறுப்பு துலங்கிய குரலில்.

“ஆண்டவனைத் தரிசிக்கக் காரணம் வேண்டுமா?” கௌதமிபுத்ரன் வியப்புடன் வினவினான்.

“ஆம், இப்பொழுது வேண்டும். தாபிலேசுவரரை நம்பியிருந்த இந்த மலைக்குடிசைகளில் இருந்தவர் ஓடி விட்டார்கள். சென்ற ஆறு மாதங்களாகச் சுற்றுப்புறக் கிராமங்களில் யாரும் கிடையாது” என்றான் வயோதிகன்.

கௌதமிபுத்ரன் மேலும் பேச்சுக்கொடுத்து, “தாபிலேசு வரருக்குப் பிரசாதம்?” என்று கேட்டான்.

“உச்சிக் காலத்தில் மட்டும் நான் சென்று அபிஷேகம் செய்துவிட்டுச் சிறிது பிரசாதம் சமர்ப்பித்துவிட்டு வருகிறேன். அதை நான் சாப்பிட்டுக் காலம் கழிக்கிறேன்.”

“எல்லோரும் ஓடிவிட்ட பிறகு நீர் மட்டும் ஏன் இங்கு தங்கியிருக்கிறீர்?”

“நான் தாபிலேசுவரர் ஆலயத்தின் பரம்பரை பூஜாரி. எனது தந்தை கோயிலை என் கழுத்தில் கட்டி விட்டார். கோயிலைவிட்டு ஓட மனம் வரவில்லை. தவிர வாழ்க்கையிலும் எனக்கு ஆசையில்லை. அந்தப் பிசாசு அடித்துப் போட்டாலும் போடட்டும் என்றிருக்கிறேன். அந்தச் சனியன் பிடித்த பிசாசு என்னை அடிக்க மறுக்கிறது.”

“பிசாசா!” என்று ஏதுமறியாததைப் போல் கேட்டான் கௌதமிபுத்ரன்.

வயோதிகன் முகத்தில் வியப்பு தோன்றியது. “அதைப் பற்றி உனக்கு எதுவுமே தெரியாதா?” என்று விசாரித்தான் வயோதிகன் வியப்பு குரலிலும் துலங்க.

“தெரியாது” இதை சர்வசாதாரணமாய்ச் சொன்னான். கௌதமிபுத்ரன்.

“தாப்யா மலையில் ஒரு மோகினிப் பிசாசு உலாவுகிறது. நள்ளிரவில் பாடுகிறது. அந்தப் பாட்டைக் கேட்டவர் சித்தம் மயங்கிவிடுகிறது. அப்படியே சுரணையற்று விழுந்து விடுகிறார்கள். இரண்டொருவரை நான் எடுத்துவந்து சிகிச்சை செய்திருக்கிறேன். சிலர் என்ன ஆனார்களென்று தெரியவில்லை. அந்த மலைக்காட்டுக்குள் நுழைந்தவர்கள் மறைந்துவிட்டார்கள். திரும்பவில்லை” என்று சொன்ன வயோதிகன், “நீ அவசியம் தாபிலேசுவரரைத்தரிசிக்கத்தான் வேண்டுமா?” என்று வினவினான். “ஆம்” “அப்படியானால் இங்கே பக்கத்தில் அருவியிருக்கிறது. அதில் நீராடிவிட்டு வா, உச்சிக் காலத்தில் போவோம்.”

“நான் இப்பொழுதே போகிறேன். உச்சிக் காலத்தில் உங்களைக் கோயிலில் சந்திக்கிறேன்” என்று தனது புரவியில் ஏறச்சென்ற கௌதமிபுத்ரனை வயோதிகன் தடுத்து, “மகனே! நீ சிறியவன். இளங்கன்று பயமறியாது என்ற மூதுரைக்கு நீ சிறந்த சான்று. ஆனால் தனியாகப் போவது உசிதமல்ல” என்றார்.

ஆனால் அச்சமென்பதை அறவே அறியாத கௌதமி புத்ரன், “பூஜ்யரே! தங்களை நான் தாபிலேசுவரர் சந்நிதியில் சந்திக்கிறேன்” என்று கூறிவிட்டுப் புரவிமீது தாவி அதைத் தாபோல் மலைக்காட்டுப் பாதையில் நடத்தினான். சற்றுத் தூரத்திற்கெல்லாம் கண்ணுக்குத் தெரிந்ததாபோல் துறைமுகம் கண்ணைப் பறிக்கும் அழகுடன் விளங்கியது.
ஸஹ்யாத்ரி மலைத்தொடரின் ஒரு பகுதியும், நைமி சாரண்யம் போல் கடவுளே காடாக அமைத்துவிட்டதாக ஐதீகமுள்ள அந்தத் தாபோல் துறைமுகக் காடு மிக அடர்த்தியாயிருந்ததன்றிப் பெரும் மரங்களுடனும் புஷ்பச் செடி கொடிகளால் நிரம்பியதாகவும் காணப்பட்டதால் சில இடங்களில் புரவிமீது படுத்த வண்ணமே புஷ்பச்செடிகள் உடலில் உராயப் பயணம் செய்த கௌதமிபுத்ரன் மலைச்சரிவில் ஒதுக்குப்புறமாயிருந்த தாபிலேசுவரரின் சிறு கோவிலைக் கண்டான். அந்தக் கோவிலில் சிறு முகப்பு மண்டபத்தூண் ஒன்றில் புரவியைக் கட்டிவிட்டுச் சுற்று முற்றும் கண்களை ஓடவிட்டான்.

உயர்ந்து வானளாவிய மலைகளுக்கிடையில் வாசிஷ்டி நதியென்றும் தெற்குப் புறத்திலிருந்த அஞ்சன்வேல் கோட்டையின் காரணமாக அஞ்சன்வேல் நதியென்றும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற புண்ய நதியின் வடக்குப் பகுதியிலிருந்த துறைமுகத்தின் மீது தாக்கிய கடலலைகள் காலை வெயிலில் வெள்ளிப் பாளங்களைப் போல் காட்சி யளித்தன. வாசிஷ்டி நதியும் பச்சிமக் கடலில் (அரபிக் கடலில்) வேகமாகப் பாய்ந்து கலந்த காட்சி, யுவதியொருத்தி காதலனை அணுகும் ஆத்திரத்தைப் புலப்படுத்தியது. அந்த நதி மலைச்சரிவிலிருந்து உதிர்ந்த புஷ்பங்களைத் தனது நீரில் சுழலவிட்டு மலர்க்கிரீடங்களைச் சமைத்துக்கொண்டது தனி அழகை அந்த ஆற்றுக்கு ஏற்படுத்தியது. தவிர தாபோல் மலைக்காட்டிலிருந்த விருட்சங்கள் லேசாகக் காற்றில் அசைந்ததால் வண்ணமலர்களும் காய்ந்த சருகுகளும் சேர்ந்து விழுந்து வாழ்க்கை புஷ்பிப்பதோடு காயவும் செய்யும் என்ற தத்துவத்தை விளக்கின. இந்த அழகையெல்லாம் நீண்ட நேரம் பார்த்துக்கொண்டு நின்ற கௌதமிபுத்ரன் மலைச் சரிவில் இறங்கிச் சென்று வாசிஷ்டி நதியில் நீராடிப் புரவியில் தொங்கவிட்டிருந்த மான்தோல் பையிலிருந்து புத்துடை அணிந்து பையில் எப்பொழுதுமிருந்த சந்தனத்தையும் நெற்றியில் தீட்டிக்கொண்டான். பிறகு நதியில் மீண்டுமொரு முறை இறங்கிக் காலைக் கடனை முடித்துக்கொண்டு கோவிலுக்கு வந்து பத்மாசனம் போட்டுக்கொண்டு பிராணா யாமம் செய்தான். அவன் அனுஷ்டானங்கள் முடிவதற்கும் உச்சிக்காலம் வருவதற்கும், நேரம் சரியாயிருந்ததால் வயோதிக பூஜாரியும் கோவிலுக்கு வந்து சேர்ந்தார். கோவிலுக்குக் கதவு ஏதுமில்லாதிருந்ததால் அவர் நேராக உள்ளே சென்று அங்கிருந்த செப்புக்குடமொன்றை எடுத்து வந்து ஆற்றிலிருந்து நீர் மொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தார். பிறகு தான் கொண்டு வந்த மூட்டையிலிருந்த பிரசாதத்தைச் சுவாமிக்கு நிவேதனம் செய்தார். அதை கௌதமிபுத்ரனுக்கும் கொடுத்துத் தாமும் உண்டு விட்டுக் குடத்தில் மீதியிருந்த நீரை அந்த வாலிபனுக்கும் கொடுத்துத் தாமும் அருந்தினார். பிறகு மிகுந்த களைப்பினால் அப்படியே கோவில் வாயிலில் படுத்தார். “குழந்தாய்! இன்னும் நான்கு நாழிகைகள் நாம் இங்கு இருக்கலாம். பிறகு புறப்படுவோம்” என்று சொன்னார்.

“எங்கு சுவாமி?” என்று பயபக்தியுடன் கேட்டான் வாலிபன்.

“எனது குடிசைக்கு” இதைத் திட்டமாகச் சொன்னார் பூஜாரி.

“நான் வரவில்லை!” என்று பணிவுடன் கூறினான் கௌதமிபுத்ரன்.
“ஏன்?”

“ஒரு நள்ளிரவு சந்நிதியில் படுக்க வேண்டுமென்று எனது தாய் சொல்லியிருக்கிறாள்.”

“இரவு இங்கு படுக்க வேண்டுமா?”

“ஆம். அப்படித்தான் பிரார்த்தனை.”

“அந்தப் பிரார்த்தனையை விட்டுவிடு.”

“பிரார்த்தனையை எப்படி விட முடியும்?”

“ஒன்று பிரார்த்தனையை விடவேண்டும் அல்லது பிராணனை விடவேண்டும். எதைச் செய்யப்போகிறாய்?”

“சுவாமி! நான் என்றும் உயிருக்குப் பயந்தது கிடையாது. தவிர பிரார்த்தனை இத்துடன் முடியவில்லை.”

“வேறு என்ன பிரார்த்தனையோ?”

“சண்டிகாதேவியைத் தரிசிக்க வேண்டும்.”

இதைக் கேட்டதும் படுத்திருந்த பூஜாரி சரேலென எழுந்திருந்து அவனை நோக்கினார். “உனக்குப் பைத்தியம் ஏதுமில்லையே?” என்றார்.

“இல்லை ஏன்?” என்று வினவினான் கௌதமிபுத்ரன்.

“சண்டிகாதேவி ஆலயம் பாதாளத்திலிருக்கிறது” என்றார் பூஜாரி.

“இருந்தாலென்ன?”

“அதை, சித்தரஞ்சனியும் தரிசிக்கிறாள் ஒவ்வொரு நாளும் நள்ளிரவில்.”

“மோகினியா?”

“ஆம்.”

“மோகினியை நான் பார்க்கிறேன்!”

“பார்க்கலாம். பிழைக்க மாட்டாய்” என்று எச்சரித்தார் பூஜாரி.

“ஏன் பிழைக்கமாட்டேன்? என்னை என்ன செய்து விடும் மோகினிப் பிசாசு?” என்று கேட்டான் கௌதமிபுத்ரன் புன்முறுவலுடன்.

“உன்னை முறித்துப் போட்டுவிடும்” என்றார் பூஜாரி.

அவர் அச்சுறுத்த அச்சுறுத்த அந்தப் பிசாசைப் பார்த்துவிடுவது என்று தீர்மானம் செய்துகொண்டான் சாதவாகன வாலிபன். அவன் பிடிவாதத்தைப் பார்த்த பூஜாரி தனது மடியிலிருந்து விபூதியை எடுத்துக்கொடுத்து, “உன்னைத் தாபிலேசுவரன் காக்கட்டும்” என்று கூறிச் சென்றார். போகும் போது உள்ளூரச்சொல்லிக்கொண்டார், “நாளை உனது சடலத்தை எடுத்துச் செல்ல வருகிறேன்” என்று.

மாலை மெள்ள மெள்ள முற்றியது. மலையும் கடலும் நதியும் இணைந்த மாலை நேரக்காட்சி மனோகர மாயிருந்தது. அதைப் பார்த்துப் பரவசப்பட்டான் அந்த வாலிபன், “நள்ளிரவு வரட்டும். அந்த மோகினியைப் பார்க்கிறேன்” என்று உற்சாகத்துடன் காலத்தை ஓட்டினான் அவன்.

இரவும் முற்றியது. கடல் அலைகள் மீது மேகங்கள் ஊர்ந்து வந்து விண்ணை நோக்கிச் சென்றன.

Previous articleChittaranjani Ch1 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch3 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here