Home Chittaranjani Chittaranjani Ch21 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch21 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

92
0
Chittaranjani Ch21 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch21 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch21 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 21 அன்னையின் ரக்ஷை! அக்கினிப் பரீட்சை !

Chittaranjani Ch21 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

திருமண தினத்தன்று இரவில் எந்தப் பெண்ணும் என்ன இன்பநிலையை எதிர்பார்ப்பாளோ அதை எதிர்பார்த்த சித்தரஞ்சனி கௌதமிபுத்ரன் பதிலால் பெரும் ஏமாற்றத் தையே அடைந்தாள். சண்டி ஹோமத்திற்குப் பிறகு தாபிலே சுவரர் கோவிலுக்கு வந்து உணவருந்திய பிறகு கோவில் உள்மண்டபத் தூணில் சாய்ந்தவண்ணம் கௌதமிபுத்ரன் ஏதோ தீவிர யோசனையில் இறங்கிவிட்டதைக் கண்ட புதுமணப் பெண்ணான சித்தரஞ்சனி அந்த யோசனை தன்னைப் பற்றியதாகத்தான் இருக்கும் என்ற மனப்பூரிப்பில் என்ன யோசிக்கிறீர்கள் என்று வினவியதும், குறிப்பறிந்து சேனாதிபதியும் அப்புறம் சென்றுவிட்டதையும் கவனித்ததும் தனது கையை அவனது கையோடு இனைத்துக் கொண்டாள். ஆனால் இரவுதான் எதிர்பார்த்தது போல் இருக்காது என்றும், பெருத்த அபாயத்தை எதிர்பார்ப்பதாகவும் சதகர்ணி சொன்னதும் ஏமாற்றத்தையும், ஏமாற்றத்தால் ஏற்பட்ட துன்பத்தையும் அடைந்த சித்தரஞ்சனி, “என்ன அப்பேர்ப் பட்ட அபாயம்?” என்று கேட்டதும் அவன் சொன்ன பதில் அவளைத் திகைக்க வைத்தாலும் அவள் அவன்மீது சாய்ந்து கொண்டு சொன்னாள், “நாகபாணனை நீங்கள் அளவுக்கு அதிகமாக எடை போடுகிறீர்கள்” என்று.

“இல்லை, சித்தரஞ்சனி! க்ஷஹரத இனத்தைச் சேர்ந்த நாகபாணன் அபராந்தா முழுவதையும் மகாராஷ்டிரத்தையும் கைப்பற்றியிருப்பவன். அவனைக் குறைவாக எடை போடுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். எத்தனையோ வெற்றிகளைக் கண்டிருக்கும் நாகபாணன் இந்த ஒரு தோல்வியைக் கண்டு அஞ்சமாட்டான். ஆகையால் நாம் எச்சரிக்கையுடனிருக்க வேண்டும்” என்று கூறிய சதகர்ணி மீண்டும் கண்களை மூடி சிந்தனையில் ஆழ்ந்தான்.

அப்படியும் மனம் சமாதானப்படாததால் அவன் கையுடன் தனது கையை மேலும் பிணைத்துக் கொண்ட சித்தரஞ்சனி, “முதல் கோணல் முற்றும் கோணல் என்றொரு தமிழ்ப் பழமொழி உண்டு” என்றாள்.

“தெரியும் எனக்கு” என்றான் சதகர்ணி.

“முதல் நாளே ஏற்படும் வாழ்க்கைத் தடங்கல் மேலும் தொடர்ந்தால்?” என்று கேட்டாள் சித்தரஞ்சனி.

“தொடராது.” இதைத் திட்டமாகச் சொன்னான் சதகர்ணி.

“அதை எப்படி அத்தனை திட்டமாகச் சொல்கிறீர்கள்” என்று சித்தரஞ்சனி வினவினாள்.

“அபராந்தாவுக்கும் மகாராஷ்டிரத்துக்கும் தக்ஷிண தேசம் முழுமைக்குமே நான் சக்கரவர்த்தியாக வேண்டும் என்று என் தலையில் எழுதியிருக்கிறது” என்ற சதகர்ணி, “அதுமட்டு மல்ல சித்தரஞ்சனி, என் தாயின் ஆசையும் லக்ஷியமும் அதுதான்” என்று அழுத்திச் சொன்னான்.

“உங்கள் தலையெழுத்தை நீங்கள் பார்க்க முடியாது. உங்கள் தாயின் ஆசையும் நிறைவேறுமென்பது என்ன நிச்சயம்? ஆசை நிராசையானால்?” என்று கேட்டாள் சித்தரஞ்சனி. அவள் குரலில் துன்பம் தோய்ந்து கிடந்தது.

கௌதமிபுத்ரன் மெல்ல புன்முறுவல் கொண்டான். “சித்தரஞ்சனி! சந்தேகம் மனிதனின் முதல் சத்ரு. தவிர என் தாயின் வாக்கு தெய்வ வாக்கு. அவள் சொன்னது இதுவரை பொய்யானதில்லை. என் தந்தை போர்க்களத்தில் இறப்பார் என்று அவள்தான் சொன்னாள். இந்தப் பிசாசு விஷயத்தை ஆராய என்னை அனுப்பியவரும் என் தாய்தான். இதோ என்னிடமிருக்கும் இந்த ரக்ஷையைப் பார்” என்று கச்சையில் பத்திரப்படுத்தியிருந்த ரக்ஷையைக் காட்டினான்.

“இது என்ன செய்யும்?” அதைக் கையில் வாங்கி வைத்துக்கொண்டு திருப்பித் திருப்பிப் பார்த்தாள் சித்தரஞ்சனி.

“ரக்ஷிக்கும். அதனால்தான் ரக்ஷை என்று சொல்கிறோம்” என்றான் சதகர்ணி.

“என் தாயின் பெயர் கௌதமி பாலஸ்ரீ” என்றும் சொன்னான்.

“அதனாலென்ன?”

“பெயருக்குத் தகுந்த சக்தியுள்ளவள், பாலா உபாசினி. சக்தியை உடையவள். அவள் கையினால் ரக்ஷை வாங்கிக் கொள்ள எத்தனையோ வீரர்கள் பிரதிஷ்டானாவுக்கு வருகிறார்கள். சாகர்களின் முன்னேற்றம் தடைப்பட்டதற்கு என் தாய்தான் என்று பிரதிஷ்டானாவில் அனைவரும் நம்புகிறார்கள். அவளைச் சாதாரணமாக நினைக்காதே. அவள் தெய்வம்” என்று தாயை நினைத்து உணர்ச்சிவசப் பட்டான் கௌதமிபுத்ரன்.

சித்தரஞ்சனி அதற்குமேல் கேள்வி எதுவும் கேட்க வில்லை, கேள்வி எதுவும் பயன்படாது என்ற காரணத்தால். கண்களை மறுபடியும் மூடிவிட்ட சதகர்ணி நீண்ட யோசனைக்குப் பிறகே கண் விழித்தான்.

சித்தரஞ்சனி சித்தரஞ்சனி அதற்குமேல் ஏதும் பேசவில்லை. தூணில் அவன் பக்கத்தில் தானும் சாய்ந்து அவன் உடலுடன் தனது உடல் உராய சிந்தனை வசப்பட்டு உட்கார்ந்திருந்தாள். கண்ணை விழித்ததும் அவளைத் திரும்பிப் பார்த்த கௌதமிபுத்ரன் சித்தரஞ்சனி அருகில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, “சித்தரஞ்சனி! இன்றிரவில் நல்ல நிலவிருக்கும்” என்றான்.

அவன் எதற்காக அதைச் சொல்கிறான் என்பதை அறியாத சித்தரஞ்சனி “நீங்கள் பேசுவதெல்லாம் புதிராக இருக்கிறது. நிலவிருக்கும், இருந்தால் என்ன? அதனால் நமக்கென்ன பயம்?” என்று கேட்டாள்.

“நாம் தூங்காதிருக்கலாம். நிலவில் பயணம் செய்யலாம். எத்தனையோ விதமாக இன்பமாக இரவைக் கழிக்கலாம்” என்றான் சதகர்ணி.

சித்தரஞ்சனி பதிலேதும் சொல்லாமல் மௌனமாக உட்கார்ந்திருந்தாள். அந்தச் சமயத்தில் தலை நீட்டிய சேனாதிபதி, “புரவிகள் சித்தமாயிருக்கின்றன” என்று பணிவுடன் தெரிவித்துக் கொண்டான்.

“இன்னும் நேரமிருக்கிறது. சந்தியாகால பூஜை முடியட்டும்” என்றான் சதகர்ணி, “சித்தரஞ்சனி! எனது பட்டுகளை எடுத்து வை. நான் நீராடிவிட்டு வருகிறேன்” என்றான்.

“இதுதான் என் வேலையா?” என்று சீறினாள் சித்தரஞ்சனி.

“பூஜைக்கு உதவுவது மனைவியின் முக்கிய கடமை” என்று சுட்டிக் காட்டினான் சதகர்ணி.

“பூஜை பாத்திரங்களைத்துலக்கட்டுமா? மணியை சுத்தம் செய்யட்டுமா?” என்று எரிச்சலுடன் கேட்டாள் சித்தரஞ்சனி.

“பாத்திரம் மணி எல்லாம் சேனாதிபதியின் பொறுப்பு” என்று கௌதமிபுத்ரன் சொல்லிவிட்டு, “சேனாதிபதி! இங்கு நீ கவனித்துக் கொள்” என்று எச்சரித்துவிட்டுத் தனது வாளை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான் சதகர்ணி.

கௌதமிபுத்ரன் மலைப்பகுதியில் கிளம்பிக் கொண்டிருந்த அதே சமயத்தில் நாகபாணனும் அஞ்சன்வேல் கோட்டை யிலிருந்து கிளம்பிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனைத் தொடர முற்பட்ட காஷ்டானனை நோக்கிய நாகபாணன், “எங்கு வருகிறாய்?” என்று வினவினான் எரிச்சலுடன்.

“தாங்கள் எங்கு போகிறீர்கள்?” என்று காஷ்டானன் வினவினான்.

“போகும்போது எங்கே போகிறேனென்று கேட்கக் கூடாது என்று உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்.”

“கேட்காவிட்டால் நீங்கள் போகுமிடத்தைத் தெரிந்து கொள்வது எப்படி?” என்று காஷ்டானனும் கேட்டான்.

பகலில் காஷ்டானன் காட்டிய முட்டாள்தனத்தை எண்ணிப் பார்த்த நாகபாணன் சினத்தின் எல்லையை அடைந்தான் அந்த மாலை நேரத்தில். பகல் காட்சி அப்பொழுதும் அவன் கண் முன்னால் நின்று கொண்டிருந்தது. க்ஷத்ரபன் காஷ்டானன் பின் தொடர ஐம்பது வீரர்களுடன் படகுகளில் திரும்பியதையும், அந்த வீரர்களில் சிலர் காயமடைந்து தள்ளாடி வந்ததையும் கோட்டை மீதிருந்தே கவனித்த நாகபாணன் தனது முயற்சி தோல்வியடைந்ததைப் புரிந்து கொண்டதால் வேகமாகக் கீழே இறங்கி வந்தான். க்ஷத்ரபன் தன்னை அணுகியதும் அணுகாததுமாக, “எங்கே சித்தரஞ்சனி? எங்கே சாதவாகனன்?” என்று வினாக்களை வீசினான்.

“தப்பி விட்டார்கள்” என்றான் க்ஷத்ரபன்.

“நீ அழைத்துப்போன ஐம்பது வீரர்கள்…” வாசகத்தை முடிக்கவில்லை நாகபாணன். முடிக்காத நிலையே அவன் வெறுப்பையும் சினத்தையும் காட்டியது.

க்ஷத்ரபன் பேசுமுன்பு காஷ்டானன் முன் வந்து, “அங்கு நடந்தது வீரர் போரல்ல” என்றான்.

“வேறென்ன போர்?” நாகபாணன் குரல் சாந்தமாயிருந்தது. அது மயானத்தின் சாந்தத்தை ஒத்திருந்தது.

“கிராமவாசிகள் எதிரியின் துணைக்கு வந்தார்கள். மரங்களின் மறைவிலிருந்தும் பெரும் கற்களை வீசினார்கள். பல வீரர்களின் மண்டைகள் உடைந்தன” என்று காஷ்டானன் விளக்கினான்.

“நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?”

“சேனாதிபதி தான் தப்ப என் உதவியைப் பெற்றுக் கொண்டான்.”

“உன் உதவியைப் பெற்றுக் கொண்டானா?”

“ஆம். தான் தப்ப என்னைத் தனக்கு முன்பாகப் பிடித்துக் கொண்டான். அதனால் வில்லவர் வாளிகளை எய்ய வில்லை.”

“ஓகோ!”

“பிறகு நான்…”

“இல்லை. சதகர்ணி என்னை மாப்பிள்ளைத் தோழனாக ஆக்கிக் கொண்டான்.”

“மாப்பிள்ளை யார்?”

“அவர்தான்.”

இதைக் கேட்டதும் பயங்கரமாக நகைத்த நாகபாணன், “நன்று நன்று” என்று நகைப்பின் ஊடே சிலாகிக்கவும் செய்தான்.

பிறகு சொன்னான் அவனுக்கும் ஒதுங்கி நின்ற க்ஷத்ரபனுக்கும், “இன்னும் ஒரே ஒரு சந்தர்ப்பம் தருகிறேன். சதகர்ணியையும் சித்தரஞ்சனியையும் கூட்டிக் கொண்டு வா. அதில் நீங்கள் தோல்வியடைந்தால் உங்களைத் தூக்குப் போட்டு விடுவேன்’ என்று உறுமிவிட்டு, “இரவு கோட் டையில் எனது அறைக்கு வாருங்கள்” என்று உத்தரவிட்டு நடக்க முற்பட்டவனை க்ஷத்ரபன், “அந்த சண்டிஹோமம் மக்களின் பயத்தை அகற்றி விட்டது” என்று மெதுவாக சமாதானம் சொல்லத் துவங்கினான்.

“சண்டிஹோமம் அதற்காக மட்டும் ஏற்பட்டதல்ல. அந்தப் புகை யமப்புகை. க்ஷத்ரபா! கடற்கொள்ளைக்காரர்கள் தாங்கள் இருப்பிடத்தை சகாக்களுக்குத் தெரியப்படுத்தவும் இம்மாதிரி புகை கிளப்புவார்கள். அதைத்தான் செய்கிறான் சதகர்ணி. யாரையோ அழைக்கப் பார்க்கிறான். அது யார்? தனி மனிதனா! தனிப் படையா? எனக்குப் புரியவில்லை. ஆனால் நாம் சீக்கிரம் சாதவாகனனை அழிக்காவிட்டால் அவன் நம்மை அழித்துவிடுவான்” என்று சொன்ன நாகபாணன் நேரே ஆற்றங்கரையை நோக்கிச் சென்றான். அங்கிருந்து ஒரு படகை எடுத்துக் கொண்டு தானே துடுப்புகளைத்துழாவி தனது கப்பலுக்குச் சென்றான்.

அன்று இரவின் ஆரம்பத்தில் திரும்பிக் கோட்டைக்கு வந்த நாகபாணன் தனது அறைக்கு க்ஷத்ரபனையும் காஷ்டானனையும் வரவழைத்து சாதவாகனனை அழிக்கப் பயங்கரத் திட்டமொன்றை விளக்கினான். “நன்றாகக் கேளுங்கள். கௌதமிபுத்ரன் கிராமவாசிகள் அனைவரையும் மலைப்பகுதியில் குடி யேற்றி விட்டால் நான்கு நாட்களில் நான் இங்கு எதிர்பார்க்கும் நமது மரக்கலங்களில் வரும் நமது படைகளை நாம் மலைப்பகுதியில் இறக்கி தளம் அமைக்க முடியாது. ஆகவே இன்று நாளைக்குள் நாம் திட்டமான முடிவுகளைக் காணவேண்டும். சில வீரர்களுடன் க்ஷத்ரபர் சென்று மலைக்காட்டின் தனிப் பகுதி ஒன்றில் தீ வைக்கட்டும். அதை அணைக்க மக்கள் கூட்டமாக வருவார்கள். அப்பொழுது அவர்களை மடக்கி அழித்து விடுவோம். அந்தத் தீயைச் சமாளிக்கவும் மக்களைக் காப்பாற்றவும் கௌதமிபுத்ரன் விரைந்து வருவான். அந்த நேரத்தில் கோவிலுக்கு காஷ்டானன் சில வீரர்களுடன் சென்று சித்தரஞ்சனியையும் சேனாதிபதியையும் பிடித்து வரட்டும். ஒருவேளை கௌதமிபுத்ரன் தப்பினால் சித்தரஞ்சனியை வைத்து அவனைப் பிடிக்கலாம், ஆட்டை வைத்துப் புலியைப் பிடிப்பது போல” என்று மகாக்ஷத்ரபன் கூறினான், குரூரமான புன்முறுவலும் கொண்டான்.

அவன் திட்டப்படியே க்ஷத்ரபர் இருபது வீரர்களுடனும் காஷ்டானனுடனும் கிளம்பினான் அக்கரைக்கு. அக்கரையில் இறங்கியதும் பத்து வீரர்களைக் காஷ்டான னுடன் கோவிலை நோக்கி அனுப்பிவிட்டு தான் பத்து வீரர்களுடன் மலைக்காட்டின் ஒதுக்குப்புறமான ஒரு பகுதிக்குச் சென்றான்.

தாபோல் மலையின் ஒரு தனிப்பகுதி அது. மரங்களில் மிக அடர்த்தியாயிருந்ததாலும் இரண்டு மூன்று பெரும் பாறைகள் மீது அவை தனிப்பட முளைத்திருந்ததாலும் காடு முழுவதும் தீப்பிடிக்காது என்ற முடிவுக்கு வந்தான் க்ஷத்ரபன். “காடு முழுவதும் தீப்பிடிக்க விடாதே. அப்படி தீப்பிடித்தால் பேரழிவு ஏற்படும். பிறகு மக்கள் நம்மைத் தூற்றுவார்கள். அக்கம் பக்க நாடுகளும் இந்த மாதிரி நாசத்தைச் சகிக்க மாட்டார்கள்” என்று எச்சரித்திருந்தான் நாகபாணன்.

அதை மனத்தில் கொண்ட க்ஷத்ரபன் பெரும் அக்னியை ஏற்படச் செய்வதும், பீதியை அளிக்க வல்லதும், ஆனால் மலைக்காடு முழுவதையும் கொளுத்தாததுமான அந்த தனிப் பகுதியைத்தனது திட்டத்துக்குத் தேர்ந்தெடுத்தான். அடுத்து பந்தங்களைக் கொளுத்த உத்தரவு பிறப்பித்தான். நான்கு பந்தங்களைக் கொளுத்திய நான்கு வீரர்களை நோக்கி, “உம் வையுங்கள் தீயை, சற்று பட்ட கிளைகளாகப் பார்த்து” என்று உத்தரவிட்டான்.

பந்தங்களை வீரர்கள் ஏந்தி உலர்ந்து கிடந்த சில கிளைகளை நோக்கி நடந்தார்கள். முதல் பந்தத்தின் ஜ்வாலை உலர்ந்த ஒரு கிளையுடன் சம்பந்தப்பட்டது. அடுத்து அந்தக் காட்டில் பிரளயாக்கினி பரவும் என்று நினைத்த க்ஷத்ரபன் குதூகலித்தான்.

Previous articleChittaranjani Ch20 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch22 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here