Home Chittaranjani Chittaranjani Ch22 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch22 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

47
0
Chittaranjani Ch22 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch22 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch22 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 22 இரண்டு ஓலைகள்!

Chittaranjani Ch22 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சந்தியா கால பூஜைக்குத் தனது பட்டு வேஷ்டிகளை எடுத்து வைக்குமாறு சித்தரஞ்சனிக்கும் பாத்திரங்களைச் சுத்தப்படுத்துமாறு சேனாதிபதி வஜ்ரபாகுவுக்கும் உத்தர விட்டுக் கோவில் மண்டபத்திலிருந்து வெளிப் போந்த கௌதமிபுத்ரன், வாசிஷ்டி நதியின் முகத்துவாரத்தை நோக்கிச் செல்லாமல் மலையின் செங்குத்தான பாறைகளின் மறைவிலும் மரங்களின் மறைவிலும் நடந்து அஞ்சன்வேல் கரைக்கு நேர் இக்கரைக்கு வந்து நதியில் இறங்கி நீராடத் துவங்கினான். மலையின் புதர்களால் மறைக்கப்பட்ட ஓரிடத்தில் இறங்கிய சாதவாகனன் நீராடும் முகாந்திரத்தில் எதிர்க் கரையையும் கவனித்தான். அக்கரையில் கரையோர மாகச்சாக, யவன வீரர்களின் நடமாட்டம் மும்முரமாயிருப் பதையும், கோட்டைக்குள் சென்றும் மீண்டும் வெளி வந்தும் வீரர் பலர் அணி வகுத்துச் சித்தமாயிருப்பதையும் பார்த்து ஏதோ பலமான திட்டத்தை நாகபாணன் வகுக்கிறா னென்பதையும் புரிந்து கொண்டான். சிறிது நேரத்துக் கெல்லாம் நாகபாணன் அக்கரையில் தோன்றிப் படகொன்றை எடுத்துக் கொண்டு நதியின் முகத்துவாரத்தை நோக்கிச் செல்வதையும் பார்த்து ஏதோ கடுமையான ஏற்பாட்டைச் செயலாற்றுவதில் இறங்கியிருக்கிறா னென்பதையும் புரிந்து கொண்டதால் அதைப்பற்றிச் சிந்தித்த வண்ணமே அந்த மறைவான இடத்தில் நீராடியவன் நீண்ட நேரம் நீராட்டத்தை முடிக்காமலே நீரில் அமிழ்ந்து கிடந்தான். கடைசியில் அவன் நீராட்டத்தை முடித்துக் கொண்டு உடல் துவட்டிப் பட்டுகளை அணிந்து விபூதியும் தரித்துக் கொண்டவன், நாகபாணன் படகை நோக்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தான். நாகபாணன் மரக்கலத்தில் ஏறியதையும், சிறிது நேரத்திற்கெல்லாம் படகில் இறங்கிக் கோட்டையை நோக்கித் திரும்பி வரத் துவங்கியதையும் பார்த்தான். அதனால் ஏற்பட்ட தீர்க்க சிந்தனையுடன் கோவிலுக்குத் திரும்பினான்.

அவன் முகத்தில் காணப்பட்ட கவலை கலந்த சிந்தனையைக் கவனித்த சித்தரஞ்சனி, “ஏதாவது விசேஷம் உண்டா ?” என்று வினவினாள்.

“விசேஷம் இருப்பதாகத்தான் தெரிகிறது. எதையும் இரவு ஏறியதும் புரிந்து கொள்ளலாம்” என்று பதில் சொன்ன சதகர்ணி நேராகத் தாபிலேசுவரர் கர்ப்பக் கிருகத்துக்குச் சென்று பூஜையைத் துவங்கினான். சேனாதிபதி துலக்கி வைத்திருந்த பாத்திரங்களிலிருந்து தீர்த்தத்தால் தாபிலேசு வரருக்கு அர்க்யம், பாதம், இத்யாதிகளைச் சமர்ப்பித்து விட்டுக் கனி வர்க்கங்களையும் நிவேதனம் செய்தான். அவன் விளக்கு தீபமெடுத்து ஆரத்தி சமர்ப்பித்த சமயத்தில் சேனாதிபதி மணியைக் காடே அதிரும்படி அடித்தான். தீபாராதனை செய்து கொண்டிருந்த சதகர்ணி, “சேனாதிபதி! மணியை அடித்துக் கொண்டே இரு, அது அஞ்சன்வேலில் கேட்க வேண்டும்” என்று உத்தரவிட, சேனாதிபதி தனது பலம் கொண்ட மட்டும் மணியைப் பிளந்து கட்டினான். பூஜையை முடித்து எல்லோருக்கும் பிரசாதத்தைக் கொடுத்த பிறகு, “சேனாதிபதி! நீ சித்தரஞ்சனியை அழைத்துக் கொண்டு போய் சண்டிகை குகைக்கு அருகில் இருக்கும் மலைவாசிகளிடம் விட்டு, பத்துப் பதினைந்து மலை வீரர்களை அழைத்து கொண்டு வா. அஞ்சன்வேல் கோட்டையை நான் கண்காணிக்கிறேன். தேவையிருந்தால் செயல்பட மலைவாசிகள் சிலரைச் சித்தப்படுத்தி வை” என்று உத்தரவிட்டான்.

அதுவரை பேசாமலிருந்த சித்தரஞ்சனி, “நான் எதற்காக மலைவாசிகள் இருப்பிடத்திற்குப் போக வேண்டும்?” என்று வினவினாள்.

கௌதமிபுத்ரன் முகத்தில் கவலை படர்ந்தது. அந்தக் கவலை குரலிலும் ஒலிக்கச் சொன்னான் சாதவாகனன், “அஞ்சன்வேல் கோட்டைக்குப் போகாதிருக்க” என்று.

“நான் அங்கு போகப் போவதாக யார் சொன்னது?” என்று கேட்டாள் சித்தரஞ்சனி.

“யாரும் சொல்ல வேண்டாம். உன்னைத் தூக்கிப் போக இன்றிரவு முயற்சி நடக்கும். அந்த முயற்சியை முறியடிக்கவே உன்னைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்புகிறேன். நீ போசீக்கிரம். நானும் வருகிறேன். சண்டிகாதேவி குகைக்கு” என்று திட்டவட்டமாகக் கூறினான் சாதவாகனன். மேலும் தொடர்ந்தான். “உன்னைத் தூக்கிப் போய் என்னைப் பிடிக்கும் தூண்டில் மீனாக உன்னை உபயோகப்படுத்து வார்கள்” என்று.

அதற்குமேல் அலட்சியத்துக்கு இடங்கொடாத கௌதமி புத்ரன் சேனாதிபதியுடன் சித்தரஞ்சனியை அனுப்பி வைத்தான். பிறகு தாபிலேசுவரர் கோவில் கதவை மூடி விட்டுத் தனது புரவியில் ஏறி முகத்துவாரத்தை நோக்கிப் பயணம் செய்தான். முகத்துவாரத்துக்குச் சிறிது முன்பாகவே இருந்த ஒரு பெரிய பாறையின் அருகில் வந்ததும் புரவியைப் பாறை மறைவில் நிறுத்திவிட்டுத் தான் மட்டும் பக்கத்திலிருந்த மரமொன்றின் மீது ஏறி அக்கரையைக் கவனிக்கலானான்.

இரவு முற்றி வெண்மதியும் விண்ணில் வலம் வரத் துவங்கியும் எந்தவித நடவடிக்கையும் கோட்டைப் பகுதியில் இல்லாததைப் பார்த்த சாதவாகனன் மரத்திலிருந்து இறங்க முற்பட்ட சமயத்தில் கோட்டைப் பகுதியில் திடீரென நடமாட்டம் ஏற்பட்டதையும், படகுகள் சில சித்தப்படுத்தப் பட்டதையும் கவனித்ததும் அங்கேயே சிறிது நேரம் உட்கார்ந்து கவனிக்கலானான். சாக வீரர்களைத் தாங்கிய இரு படகுகள் கிளம்பியதையும், ஒரு படகில் காஷ்டானனும் இன்னொரு படகில் க்ஷத்ரபனும் இருந்ததையும் பார்த்து அடுத்து நடப்பதை எதிர்பார்த்திருந்தான்.

நேரம் ஓடிக் கொண்டிருந்தது. மலைப்பகுதியில் எங்கும் நிம்மதி குடிகொள்ளத்துவங்கியது. கோட்டையிலிருந்து வந்த படகுகளிலிருந்தவர்கள் இரண்டு பிரிவாகப் பிரிக்கப் பட்டதும் திட்டத்தை ஓரளவு புரிந்துகொண்ட சாதவாகனன் மரத்தின் மீதிருந்து இறங்கிப் புரவியில் ஏறிச் சண்டிகா தேவியின் குகையை நோக்கி விரைந்தான். அவன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் மலையில் ஏறத் துவங்கிய காஷ்டானனும் க்ஷத்ரபனும் அரவம் ஏதும் செய்யாமலும் மிகுந்த எச்சரிக்கையுடனும் தங்கள் தங்கள் பணிகளை நிறைவேற்றப் பிரிந்து சென்றார்கள்.

மகாக்ஷத்ரபனான நாகபாணன் கட்டளைப்படி மலைக் காட்டில் தீவைக்க, தீ பரவாத தனித்த ஓர் இடத்தைத் தேர்ந் தெடுக்கக்கால்ஜாமமானாலும், இடத்தை நிர்ணயித்தவுடன் காய்ந்த நிலையில் தீ வைக்கத் தனது வீரர்களை ஏவினான். பந்தம் கொளுத்தப்பட்டுத் தீயைப் பட்டுப்போன கிளையில் அந்த வீரன் வைத்த பிறகு தீ திகுதிகுவென அந்தப் பகுதியில் பரவலாயிற்று. தீ நன்றாகப் பிடித்தவுடன் அந்தப் பகுதியில் தனது வீரர்களுடன் அகன்று சாதவாகனை எதிர்பார்த்து நின்றிருந்தான் க்ஷத்ரபன். ஆனால் தீ நன்றாகப் பரவியும் சாதவாகனனோ மலைவாசிகளின் கூட்டமோ அந்தப் பக்கம் வராதுபோகவே பெரும் குழப்பத்திற்குள்ளானான். அந்தக் குழப்பத்தின் விளைவாக என்ன செய்வதென்று அறியாமல் தனது வீரர்களுடன் தாபிலேசுவரர் கோவிலை நோக்கிச் சென்றான். அங்கிருந்து தாபிலேசுவரர் கோவிலை அடையக் கிட்டத்தட்ட நடுநிசியாகி விட்டதால் கோவில் பகுதியில் நிசப்தம் நிரம்பிக் கிடந்தது. அதன் முன்பாக வீசிக் கிடந்த நிலவில் கூட ஒருவித பயங்கரமிருப்பதாக க்ஷத்ரபனுக்குத் தோன்றியதேயொழிய நிலவில் அழகிருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. ஏதோ தன்னையும் மீறிப் பயங்கரம் உருவாகியிருப்பதாக நினைத்த க்ஷத்ரபன் ஒருமுறை கோவிலைச் சுற்றி வந்தான். அப்படியும் ஏதும் விளங்காது போகவே. “காஷ்டானன் என்ன ஆனான்? சித்தரஞ்சனியைச் சிறை செய்து கோட்டைக்குக் கொண்டு போய் விட்டானா?” என்று கேள்விகளை எழுப்பிக் கொண்டான். விடை ஏதும் கிடைக்காது போகவே தனது வீரர்களில் ஒருவனை அழைத்து, “கோவிலுக்குள் யாரிருப்பது பார்,” என்று உத்தரவிட்டான்.

க்ஷத்ரபன் உத்தரவுப்படி வீரனும் கோவில் கதவைத் தட்டவே உள்ளிருந்து பதிலேதும் கிடைக்காததால் திரும்பி நோக்கினான் க்ஷத்ரபனை. க்ஷத்ரபன் அடுத்த உத்தரவு இடுவதற்குப் பதிலாகத் தானே படிகளில் ஏறிச் சென்று கதவில் தோளைக் கொடுத்துத் தள்ளினான். கதவு தாளிடாதிருந்ததால் திடீரென வேகத்துடன் திறக்கவே கோவிலின் முன் மண்டபத்தில் தடாலென விழுந்த, க்ஷத்ரபன், மெள்ள சமாளித்து எழுந்த பிறகு அங்கு யாரும் இல்லாததைக் கண்டு ஏதும் புரியாததால். “இந்தச் சனியன் பிடித்த காஷ்டானன் எங்கே?” என்று கூவினான். அவன் கூவலைக் கோவில் சுவர்கள் எதிரொலி செய்தன பயங்கரமாக. அதனால் சற்று பீதியடைந்த க்ஷத்ரபன் மெள்ள கர்ப்பக்கிரகத்தை நோக்கிச் சென்றான். அங்கு இருந்த சிவலிங்கத்தின் ஆவுடையாரில் ஒரு பெரிய ஓலையிருந்தது. அதை எடுத்துக் கர்ப்பக்கிரக விளக்கில் படித்த க்ஷத்ரபன் ஏது செய்வதென்றறியாமல் திகைத்து நின்று விட்டான். ஓலையைப் பிடித்த கைகள் நடுங்கின. “அடப்பாவி! படு மோசம் செய்துவிட்டாயே” என்று துன்பத்துடன் கூவினான் க்ஷத்ரபன்.

காஷ்டானனும் அவனுடன் வந்த வீரர்களும் மாயமாய் மறைந்து விட்டனர். அவர்கள் ஒருவேளை அழிக்கப் பட்டார்களா என்பது தெரியவில்லை க்ஷத்ரபனுக்கு. என்ன செய்வதென்று அறியாமல் ஓலையைக் கையில் ஏந்திய வண்ணம் கோவிலுக்கு வெளியே வந்தான். எங்கிருந்தோ பறந்து வந்த அம்பு ஒன்று அவன் காலடியில் விழுந்ததும், அதிலும் ஒரு ஓலை கட்டப்பட்டிருந்ததையும் கவனித்த க்ஷத்ரபன் சுயநினைவை அடியோடு இழந்தான். பிறகு சமாளித்துக் கொண்டு அந்த ஓலையை எடுத்தான் அம்பிலிருந்து. அதில் முத்திரை வைக்கப்பட்டிருந்தது. நாகபாணனுக்கு விலாசமிடப்பட்டிருந்தது. முத்திரைகளை உடைத்து அதையும் படித்தான். வெகு சீக்கிரம் விபரீதம் மூளக்கூடிய நிலை சூழ்ந்து வருவதை உணர்ந்து கொண்டான் க்ஷத்ரபன்.

Previous articleChittaranjani Ch21 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch23 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here