Home Chittaranjani Chittaranjani Ch23 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch23 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

54
0
Chittaranjani Ch23 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch23 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch23 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 23 காஷ்டானனுக்கு இரு வழிகள்!

Chittaranjani Ch23 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

தாபிலேசுவரர் கோவில் கர்ப்பக்கிரகத்தில் லிங்கத்தின் பக்கத்திலிருந்த ஓலையைக் கண்டதும் க்ஷத்ரபன் சின மடைந்து காஷ்டானனைப் பற்றிய எரிச்சலுடன் கூவினா னென்றால், வாயிலுக்கு வந்ததும் தனது காலடியில் அம்பு மூலம் பறந்து வந்து கிடந்த ஓலையைப் படித்ததும் பெரும் பிரமிப்புக்குள்ளானானென்றால், அவற்றுக்கெல்லாம் காரணம் இருக்கவே செய்தது. முதல் ஓலையைக் காஷ்டானனே எழுதி இருந்ததையும். அதில், “எதிரிகளிடம் சிக்கிக் கொண்டேன், தப்ப வழியில்லை” என்று செய்தி பரம சுருக்கமாயிருந் ததையும் கண்ட க்ஷத்ரபன், இரண்டாவது ஓலையில் செய்தி விவரமாகவே தீட்டப்பட்டிருந்ததைப் பார்த்தான். “மகாக்ஷத்ரபரே! நீர் இந்தப் பகுதியை விட்டுச் செல்ல நான்கு நாட்கள் தருகிறேன். அதற்குள் நீர் அஞ்சன்வேல் கோட்டையைவிட்டுச் செல்லாவிடில் நானே எனது வீரர்களுடன் வந்து அதைத் தாக்குவேன்- கௌதமிபுத்ரன்.” என்ற வாசகத்தைப் படித்ததும் தான் அஞ்சன்வேல் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொண்டான்க்ஷத்ரபன். அப்படிப் புரிந்து கொண்டது பெரும் திகிலை அளித்தது க்ஷத்ரபனுக்கு. காரியத்தைச் சாதிக்காமல் தான் திரும்பினால் தன்னைத் தூக்குப் போட்டுவிடுவதாக மகாக்ஷத்ரபன் எச்சரித்தது நினைவிருந்ததாலும் மகாக்ஷத்ரபன் சொல்வது வீண் பயமுறுத்தல் இல்லையென்பதை க்ஷத்ரபன் உணர்ந்திருந்ததாலும் திரும்பிச் செல்லத் தயங்கவே செய்தான். அப்படி தான் திரும்பிச் செல்லா விட்டாலும் உடன் வந்திருக்கும் வீரர்கள் தன்னைக் கட்டித் தூக்கிப் போய்விடுவார்களென்றும், தோல்வியை அவர்கள் வாயால் மகாக்ஷத்ரபரிடம் சொல்லும் பயத்தில் எதையும் அவர்கள் செய்யச் சித்தமாயிருப்பார்களென்றும் தீர்மானித்ததால் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத் தீர்மானித்துக் கொண்டான். அப்பொழுது ஒரு புது யோசனையும் க்ஷத்ரபன் மூளையில் உதயமாகவே அவன் தனது வீரர்களை நோக்கி, “வீரர்களே! காஷ்டானன் நம்மை மோசம் செய்து விட்டான். ஆனால் நாம் அஞ்சப் போவதில்லை. நீங்கள் காட்டுக்குள் சென்று எதிரியின் நிலையையும் காஷ்டானன் சிறை வைக்கப்பட்டிருக்கும் இடத்தையும் கண்டுபிடியுங்கள். அவனைச் சிறை மீட்டுச் செல்வோம்” என்று உத்தரவிட்டான்.

க்ஷத்ரபன் மிக கம்பீரமான அதிகாரக் குரலில்தான் உத்தரவிட்டான். ஆனால் அவன் எதிரே நின்ற வீரர்கள் அசையாமல் பதுமைகள்போல் நின்றார்கள். அவர்கள் கற்சிலைகளைப் போல் நிற்பதைக் கண்ட க்ஷத்ரபன் சினம் அதிகமாகவே, “நான் சொன்னது உங்கள் காதில் விழவில்லை?” என்று சீறினான்.

அதற்கும் வீரர்கள் பதில் சொல்லாமல் இடித்த புளியைப் போல் நிற்கவே, “ஏன், உங்களுக்கு வாயில்லையோ பேச? பதிலாவது சொல்லுங்கள். இல்லையேல்?” என்று தனது வாட்பிடியின் மீது கையை வைத்தான். அப்பொழுது ஒரு வீரன் மட்டும் பேசினான். “படைத் தலைவரே! எங்களை விரட்டிப் பயனில்லை. காஷ்டானனையும் அவருடன் சென்ற முதல் பத்து பேரையும் பிடித்த எதிரிக்கு நம்மை அழிப்பது பெரும் காரியமல்ல. இது சாதாரண பூமியல்ல, நாம் எதிருக்கு எதிர் போராடுவதற்கு. மலைக்காடு. எதிரி எங்கு பதுங்கியிருப்பானென்று தெரியாது. நாங்கள் காட்டுக்குள் புகுந்தவுடன் மறைவிலிருக்கும் எதிரி, நம்மை ஒவ்வொருத் தராகவும் கொல்லலாம். பத்துப் பேரையும் ஒரே வழியாகவும் சூழ்ந்து தீர்த்துக் கட்டலாம். தவிர மலைவாசிகள்…” என்று வாசகத்தை முடிக்கவில்லை அவன்.

முடிக்காத வார்த்தைகளையும் அவற்றின் பொருளையும் உண்மையையும் கூட க்ஷத்ரபன் புரிந்து கொண்டான். ஏற்கெனவே மரங்களின் மறைவுகளிலிருந்து, கற்களையும் கட்டைகளையும் வீசித்தனது வீரர்கூட்டத்தைச் சிதற அடித்த மலைவாசிகள், மலைக்காட்டின் ஒரு பகுதி எரிக்கப் பட்டதால், பழி வாங்கச்சித்தமாயிருப்பார்களென்பதையும் உணர்ந்து கொண்டதால் தனக்கு இரு பாதைகளே உண்டென்பதைச் சந்தேகமறப் புரிந்து கொண்டான். ‘ஒன்று இங்கேயே சண்டையிட்டுச்சாகலாம், அல்லது அஞ்சன்வேல் சென்று தூக்கிலாடலாம். இந்த இரண்டைத்தவிர வேறு வழி கிடையாது’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். விளைவு எதுவாயிருந்தாலும் வீரனான தனதுகடமை நிச்சயமாகத் தெரிந்தது அவனுக்கு. திரும்ப அஞ்சன்வேல் சென்று தோல்வியை அறிவிப்பதே தனது கடமை என்று தீர்மானித்துக் கொண்டு, “சரி வாருங்கள், போகலாம்” என்று வீரர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.

தாபிலேசுவரர் கோவிலிலிருந்து க்ஷத்ரபன் தனது வீரர்களுடன் புறப்பட்டுச் சென்றதைச் சற்று எட்ட இருந்து மரத்தின் மறைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கௌதமிபுத்ரன் தனது அருகில் நின்றிருந்த காஷ்டானனை நோக்கி, “நீயும் அவர்களுடன் போவதானால் போகலாம்” என்று கூறினான்.

காஷ்டானன் முகத்தில் கிலி முற்றும் படர்ந்து கிடந்தது. “நான் எங்கிருந்தாலென்ன? அங்கு மகாக்ஷத்ரபர் தூக்கில் போடுவார். இங்கு நீங்கள் என்னை வெட்டிப் போடலாம். எங்கு செத்தால் என்ன? சாவில் வித்தியாசம் என்ன வேண்டிக் கிடக்கிறது?” என்று வெறுப்பும் கிலியும் கலந்த குரலில் பேசினான் காஷ்டானன்.

“காஷ்டானனா! சாவிலும் வித்தியாசங்கள் இருக் கின்றன” என்று கௌதமிபுத்ரன் சுட்டிக் காட்டினான்.

“உயிர் போவதுதானே சாவு?” என்று கேட்டான் காஷ்டானன்.

“இருந்தாலும் எப்படிப் போவது என்பதில் வித்தியாசங்கள் உண்டு.”

“என்ன வித்தியாசமோ?”

“காஷ்டானனா! போரில் உயிர் துறப்பது ஒருவகை. குற்றவாளியாகத் தண்டிக்கப்பட்டு வாளால் துண்டிக்கப் பட்டோ அல்லது கயிற்றில் தொங்கியோ சாவது ஒரு வகை. நாட்டுக்காக உயிர்த் தியாகம் ஒரு வகை. எதற்கும் பயனில்லாமல் உண்டு காலம் கழித்து இறப்பது ஒரு வகை. இந்தச் சாவுகளில் ஒரு வகை மீளாப் புகழ் அளிக்கும். இறந்த பின்னும் இறவா நிலையை அளிக்கும். மற்ற வகைச்சாவு புழு பூச்சிகள் சாவதைப் போல் பயனற்ற சாவு” என்று மரண காரணங்களை விளக்கினான் கௌதமிபுத்ரன்.

ஆனால் காஷ்டானன், அந்தக் காரணங்களை ஒப்புக் கொண்டதாகத் தெரியவில்லை. அதைரியமுள்ளவர்களுக்கு இயற்கையாக இருக்கும் குயுக்தி வேலை செய்ய ஆரம்பித்த தால் அவன் பதில் சொன்னான், “சாதவாகனரே! போர்களில் யார் பக்கம் நாம் போரிடுகிறோம் என்பதையும் பொறுத்தது புகழும் அபவாதமும். துரியோதனன் பக்கத்தில் மடிந்த சகுனி, துச்சாதனன் முதலிய எல்லா வீரர்களையும் உலகம் இன்னும் தூஷித்துக் கொண்டிருக்கிறது. பாண்டவர் பக்கத்திலிருந் தவர்கள் எல்லோருமே வாழ்த்தப்படுகிறார்கள். இராவணன் பக்கத்திலிருந்த மகாவீரர்களையெல்லாம் உலகம் தூற்றுகிறது. ஆகவே எல்லாச் சாவும் புகழை அளிக்காது. அதற்குச் சரியான பக்கத்திலும் சேர வேண்டும்” என்று.

காஷ்டானன் புத்திக்கூர்மையையும் கோழைத்தனத்துக்கு அவன் சப்பைக் கட்டுக் கட்டுவதையும் கவனித்த கௌதமி புத்ரன் புன்முறுவல் கொண்டு, “காஷ்டானனா, அப்படியா னால் சாதவாகனர் சாகர் போரில், நீ யார் பக்கம் இருக்க விரும்புகிறாய்?” என்று வினவினான்.

“இதில் என் விருப்பம் என்ன இருக்கிறது?” என்று வினவினான் காஷ்டானன்.

“ஏன் இல்லை? என் பக்கம் இருக்கலாம் அல்லது மகாக்ஷத்ரபன் பக்கமிருக்கலாம். வேறு இங்கு பக்கங்கள் ஏதுமில்லையே! சுலபமாக முடிவுக்கு வரலாமே” என்றான் சதகர்ணி.

“நான் உங்கள் பக்கம் சேர்ந்தால்?” என்று வினவினான்.

“சேரலாம்.”

“இல்லாவிட்டால்?”

“உனக்கு விடை தருகிறேன். பழைய பக்கம் போகலாம்.”

“உங்கள் பக்கம்தான் நான் இனி” என்று முடிவாகச் சொன்னான் காஷ்டானன்.

“அப்படியானால் உனக்கு ஒரு பணி கொடுக்கிறேன். செய்வாயோ?” என்று வினவினான் கௌதமிபுத்ரன்.

“கட்டளையிடுங்கள்” என்றான் காஷ்டானன்.

”மறுக்காமல் செய்வாயா காஷ்டானனா?” என்று கேட்டான் சாதவாகனன்.

“உயிர் போனாலும் செய்வேன்” என்று சொன்னான் காஷ்டானன்.

“அப்படிப்பட்ட ஒரு பணிதான் இது” என்ற கௌதமிபுத்ரன் புன்முறுவல் கொண்டான்.

கௌதமிபுத்ரன் தன்னை ஏதோ பெரும் சோதனைக் குள்ளாக்கப் பார்க்கிறான் என்று முடிவு செய்து கொண்ட காஷ்டானன், “என்னதான் சொல்லுங்கள்” என்றான்.

“காஷ்டானனா! அதோ போகும் க்ஷத்ரபன் வீரர்கள் அக்கரை அடைந்தவுடன் நீயும் இங்கிருந்து கிளம்பிக் கடலில் நிற்கும் மரக்கலத்துக்குச் செல்.”

“உம்.”

“அங்கு நாகபாணன் இருக்கிறான்.”

”அஞ்சாதே, அவனை நான் அதே மரக்கலத்தில், நாளை இரவில் சந்திப்பதாகச் சொல். நீ என் தூதனென்று சொல். உன்னை ஏதும் செய்யமாட்டான்.”

“உங்களுக்கு மகாக்ஷத்ரபரைத் தெரியாது.”

“நன்றாகத் தெரியும் காஷ்டானனா! மகாவீரன். க்ஷத்திரிய தர்மம் அறிந்தவன். தூதனைத் தொட மாட்டான். தவிர என் தூதனைத் தொடத் துணியமாட்டான்” என்ற கௌதமி புத்ரன், “வா காஷ்டானனா! வாசிஷ்டியின் முகத்துவாரத் துக்குப் போவோம்” என்று காஷ்டானன் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.

காவுக்குச் செல்லும் ஆடுபோல் சென்றான் காஷ்டானன். சென்றபோது தீர்க்க சிந்தனையுடன் சென்றான். ‘மகாக்ஷத்ரபர் எங்களை அஞ்சன்வேல் கோட்டைக்குத் தானே வரச்சொன்னார். அப்படியிருக்க மரக்கலத்திலிருப்பதாக இவர் சொல்வது எப்படிச் சரியாகும்?’ என்று சிந்தித்த வண்ணம் சென்றான்.

இத்தகைய சிந்தனைகளுடன் சென்ற காஷ்டானன் படகில் ஏறி, வந்தது வரட்டும் என்று படகை மரக்கலத்தை நோக்கிச் செலுத்தினான். மரக்கலத்தை அடைந்ததும் ஏற்கெனவே தொங்கிக் கொண்டிருந்த நூலேணியில் ஏறிய காஷ்டானனை நாகபாணனே கையைப் பிடித்துத் தூக்கி மரக்கலத்துக்குள் இறக்கினான். “வா, என்னுடன்!” என்று கூறி மரக்கலத்தின் நடுவிலிருந்த அறையை நோக்கி நடந்தான். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காஷ்டானனும் மகாக்ஷத்ரபனைப் பின்பற்றினான்.

Previous articleChittaranjani Ch22 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch24 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here