Home Chittaranjani Chittaranjani Ch26 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch26 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

70
0
Chittaranjani Ch26 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch26 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch26 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 26 மரக்கல அறை நாடகம்

Chittaranjani Ch26 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனியின் இசையால் ஈர்க்கப்பட்ட இரு வீரர்கள் இரு பக்கமும் வர அவர்களுடன் சென்ற காஷ்டானன், தான் உண்மையில் படைத்தலைவனா அல்லது சிறைப் பறவையா என்பதை உணராமலே பயணம் செய்தான். இரு வீரர்களும் மலையின் மறுபக்கச் சரிவில் சிறிது தூரம் சென்றதும் அடர்த்தியான ஒரு காட்டுக்குள்ளே நுழைந்து அக்காட்டின் மத்தியிலிருந்த ஒரு பெரிய சதுக்கத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அந்தச் சதுக்கத்தில் புரவிப்படைகளும், காலாட்படைகளும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுச் சதுக்கத்தை ஒட்டியிருந்த மரக்கூட்டங்களின் அடியில் தங்க வைக்கப்பட்டிருந் ததையும், அவ்வப்பொழுது புரவி வீரர்கள் வேகமாக வந்து வந்து தூரத்திலிருந்து மரக்குறிகள்மீது வேல்களை எறிந்து எறிந்து திரும்பிச் சென்றதையும், மரத்தண்டுமீது தாக்கி விழுந்து விட்ட ஈட்டிகள் அவ்வப்பொழுது அங்கிருந்த காலாட் படையினரால் அப்புறப்படுத்தப்பட்டதையும், இடையிடையே காலாட் படையினர் சதுக்கத்தில் நுழைந்து வாட்போர் புரிந்ததையும் கண்ட காஷ்டானன், அங்கு தங்கியிருந்தது மலைவாசிகள் கூட்டமல்லவென்பதையும் நன்றாகப் பயிற்சி பெற்ற படையே என்பதையும் புரிந்து கொண்டான். எங்கோ மறைவில் சாதவாகனன் படைகள் இருக்கின்றனவென்று நாகபாணன் சந்தேகித்தது எத்தனை சரியென்பதையும் எண்ணிப் பார்த்து இரண்டு தரப்புகளும் எந்த நேரத்திலும் கை கலக்கலாம் என்று தீர்மானித்துக் கொண்ட காஷ்டானன், “இந்தப் படைக்கு என்னை எதற்காகத் தலைவனாக நியமித்தார் கௌதமிபுத்ரர்?” என்றும் வினவிக் கொண்டான்.

“இப்படி அவன் சிந்தனை வசப்பட்டு நிலைத்துச் சதுக்கத்தின் முகப்பில் நின்றுவிட்டதை கவனித்த வீரர்கள் இருவரில் ஒருவன் காஷ்டானனை நோக்கி, “படைத் தலைவரே! தங்கள் படைகளைப் பார்க்க ஆசைப்படுவீர்கள் என்று நினைக்கிறேன்” என்றான்.

“தாங்கள் அனுமதித்தால் படைகளின் அமைப்பையும் இப்பொழுதே பார்வையிடலாம்” என்று பணிவுடன் கூறினான் இன்னொரு வீரன்.

“இந்தப் படையில் எத்தனை புரவிப்படை? எத்தனை காலாட்படை? யானைப்படை ஏதாவது உண்டா?” என்று வினவினான் காஷ்டானன்.

“புரவிப் படை மூவாயிரம். காலாட்படை இரண்டா யிரம். யானைப்படை ஏதுமில்லை” என்று விளக்கினான் முதலில் பேசிய வீரன்.

காஷ்டானன் மேலும் விவரம் கேட்கத்துவங்கி, “காலாட் படையில் வில்லவர் எத்தனை பேர்? சாதாரணமாக வாளும் வேலும் தாங்கிப் போரிடுவோர் எத்தனை பேர்?” என்று வினவினான்.

“வில்லவர் ஐநூறு பேர்தான் இருக்கிறார்கள். மற்றவர் வாளும் வேலும் தாங்கிப் போரிடுபவர்கள். ஆனாலும் புயல் வேகத்தில் முன்னேறித் தாக்கக் கூடியவர்கள்” என்று இரண்டாவது வீரன் கூறினான்.

“மலைவாசிகள் என்ன ஆனார்கள்?” என்று காஷ்டானன் கேட்டான்.

“அவர்களில் சிலரை இந்தப் படையில் சேர்த்துப் பயிற்சி அளித்திருக்கிறோம். மீதி மக்களைச் சேர்க்கவில்லை. அவர்களை இந்த ரத்தக் களரியில் ஈடுபடுத்த மன்னருக்கு இஷ்டமில்லை” என்றான் முதல் வீரன்.

இப்படி விவரங்களைக் கேட்டுக்கொண்டே காஷ்டானன் அந்த இரு வீரர்களையும் முன்னால் செல்லவிட்டுத் தான் பின்னால் நடந்து படைகளைப் பார்வையிட்டான். ஆங்காங்கு சப்தித்த சின்னஞ்சிறு முரசுகள் மூலம் அவன் வரவு அறிவிக்கப்படவே படை வீரர்கள் அவனைத் தலை வணங்கி வரவேற்றனர். ஒவ்வொரு பிரிவினரிடமும் காஷ்டானன்தான் இனிதலைவன் என்பதை இரு வீரர்களும் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அந்த அறிமுகத்தை மறு வார்த்தை பேசாமல் படைப் பிரிவுகள் ஏற்றுக்கொண்டதைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்த காஷ்டானன், சாதவாகன வாலிபனுக்குத் தனது வீரர்கள் மீதிருக்கும் பிடிப்பைக் கண்டு பிரமித்தான்.

படைகளைக் கிட்டத்தட்ட ஒரு ஜாமம் பார்வையிட்டதும் காஷ்டானனை அவனது இருப்பிடத்திற்கு வீரர்கள் இருவரும் அழைத்துச் சென்று ஒரு குடிசையைக் காட்டி, “இதுதான் படைத்தலைவர் தங்கும் பாசறை” என்று கூறினார்கள். குடிசை ஓரளவு பெரிதாகவே இருந்ததையும், பெரிய புரவியொன்று பக்கத்திலிருந்த மரத்தில் கட்டியிருந்ததையும் காஷ்டானன் கவனித்தான். குடிசைக்குள் ஆயுதங்கள் பல இருந்ததையும், வாள், பரசு, பிண்டிபலம் முதலிய ஆயுத வகைகள் குடிசைக்கு உள்ளே வரிசையாகச்சாத்தப்பட்டிருந் ததையும், ஒரு மூலையில் சிறு கயிற்றுக்கட்டில் இருந்ததையும் பார்த்த காஷ்டானன், ‘மாளிகையில் கூட இத்தனை சௌகரியங்கள் இருக்க முடியாது’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

பிறகு குடிசையில் நுழைந்து தனது வாளைக் கச்சையி லிருந்து அவிழ்த்துக்கட்டிலில் வைத்துத்தானும் அமர்ந்தான். உடனடியாக எங்கிருந்தோ இரு பெண்மணிகள் வந்து அவனுக்கு உணவு பரிமாறினார்கள். அதற்குப் பிறகு, அவனிடம் உத்தரவு கேட்ட வீரர்களிடம், “நீங்கள் சென்று வாருங்கள். நமது தலைவி உத்தரவு ஏதாவது இடும் பட்சத்தில் எனக்கு வந்து சொல்லுங்கள்” என்று விடைகொடுத்து அனுப்பினான். பிறகு கட்டிலில் காலை நன்றாக நீட்டிப் படுத்துச் சிந்தனையில் இறங்கினான். அவன் எண்ண மெல்லாம் சித்தரஞ்சனியை நாடியே ஓடியது. தனக்கு மனைவியாக நிச்சயிக்கப்பட்ட சித்தரஞ்சனி இன்னொருத் தனுக்கு மனைவியாகி அவள் கணவனே தனக்கு வேலை தரும்படியான துர்பாக்கியத்தை எண்ணிப் பெருமூச்சு விட்டான். தான் கைப்பிடித்துத் தனது உத்தரவுப்படி நடக்க வேண்டிய சித்தரஞ்சனியை இன்னொருவன் கைப்பிடித்து அவளைத் தனக்குத் தலைவியாக நியமித்ததை நினைத்துப் பார்த்து, ‘இதைவிட வெட்கக் கேடு ஏதுமில்லை’ என எண்ணித் துக்கம் கலந்த மந்தகாசமும் செய்தான். எப்படியும் தான் மாலையில் கிளம்பிச் சாதவாகனன் சொன்னபடி புதிதாக வரும் மூன்று கப்பல்களைக் கவனிக்கக் கோவில் பக்கம் போகவேண்டிய அவசியத்தையும் நினைத்தான்.

இத்தகைய எண்ணங்களால் காலம் வெகு துரிதமாக ஓடவே மாலையும் நெருங்கி வந்தது. காஷ்டானனும் தனக்கென நிறுத்தப்பட்டிருந்த புரவிக்குச் சேணமிடச் சொல்லி, தன்னை அழைத்து வந்த வீரர்களில் ஒருவனை உடன் வரக் கட்டளையிட்டுப் பழையபடி மலையின் கடற்புற முகப்புக்கும் பயணமானான். அவனும் அந்த இன்னொரு வீரனும் தாபிலேசுவரர் கோவிலுக்கு வந்தபோது கோவிலில் பூஜை நடந்து கொண்டிருந்தது. சந்நிதிக்கெதிரே சித்தரஞ்சனி மண்டியிட்டு முகம் நிலத்தில் தொட ஈசுவரனை வணங்கிக் கொண்டிருந்தான். ”ஆபத்தை நோக்கிச் சென்றிருக்கிறார். அவர் நலமாக வந்து சேர உன் அனுக்கிரக மிருக்கட்டும்” என்று வாய் விட்டுப் பிரார்த்தித்தாள்.

காஷ்டானனும் ஈசுவரனுக்குத் தலை வணங்கி, “உங்கள் பிரார்த்தனை நிறைவேறும், கவலை வேண்டாம்” என்று ஆறுதல் சொன்னான்.

சித்தரஞ்சனி சரேலெனத் திரும்பினாள் சினத்துடன், காஷ்டானனைப் பார்த்ததும், “நீயா?” என்று அலட்சியம் ஒலித்த குரலில் கேட்டாள்.

“ஆம் சித்தரஞ்சனி” என்றான் காஷ்டானன்.

“இங்கிருப்பவர்கள் என்னைத் தலைவி என்று அழைக்கிறார்கள்” என்று உஷ்ணத்துடன் சுட்டிக் காட்டினாள் சித்தரஞ்சனி.

“தலைவியாரே!” என்று மிகுந்த மரியாதையுடன் அழைத்தான் காஷ்டானன்.

சித்தரஞ்சனியின் முகத்திலிருந்த சீற்றம் மறைந்து அதன் இடத்தை மந்தகாசம் ஆக்ரமித்துக் கொண்டது. “மகிழ்ச்சி படைத் தலைவரே!” என்ற சித்தரஞ்சனி, “இங்கு எதற்காக வந்தீர்?” என்று வினவினாள்.

“நாகபாணனுக்கு மூன்று புது மரக்கலங்கள் இன்று வரக்கூடுமென்று தலைவர் சொன்னார். அவற்றைக் கண் காணிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார்” என்று அறிவித்தான் காஷ்டானன்.

“நல்லது. அப்படியே செய்யுங்கள். உதவி ஏதாவது தேவையாயிருந்தால் இதை ஊதுங்கள் மெதுவாக” என்று கூறித் தனது மடியிலிருந்த சின்னஞ்சிறு வெண் சங்கை எடுத்துக் கொடுத்தாள். அதற்குப் பிறகு அங்கு நிற்க வில்லை சித்தரஞ்சனி, கோவில் படிகளில் இறங்கிக் காட்டுக்குள் மறைந்து விட்டாள்.

அவள் பேச்சின் தோரணையையும் அவள் சென்ற மிடுக்கையும் கவனித்த காஷ்டானன், க்ஷத்ரபரே! உமது வளர்ப்புப் பெண்ணை இப்பொழுது பார்த்தால் என்ன சொல்வீர்கள்?’ என்று உள்ளுக்குள் கேட்டுக் கொண்டான். ‘பெண்ணை அடக்கத் தகப்பனுக்கு சக்தியில்லை. மாலை சூட வேண்டிவனும் அவளைக் கோட்டை விட்டான். மாப்பிள்ளையாக வேண்டிய நான் மதம் மாறி எதிரியின் கையாளாக ஆகிவிட்டேன். கௌதமிபுத்ரன் இங்கு தலை காட்டிய சில நாட்களுக்குள்ளாக எத்தனை திடீர் மாறுதல்கள்!’ என்று எண்ணங்களை ஓட்டினான். பிறகு கோவிலிலிருந்து புரவியில் கிளம்பிக் கடற்கரைக்கு முன்பு பெரிதாக எழுந்திருந்த ஒரு பாறையின் மறைவில் புரவியை நிறுத்தி விட்டுக் கீழே இறங்கி மலைப் பாறையி லிருந்து கடலைக் கவனித்தான்.

நாகபாணன் மரக்கலம் தன்னந்தனியே நின்றிருந்தது கடலில், அதன் ஒற்றை விளக்கு வீசிய வெளிச்சத்தில் கோட்டையிலிருந்து அடிக்கடி படகுகள் வந்து போவதையும் அவற்றிலிருந்த வீரர்கள் சிலர் மரக்கலத்திலேயே தங்கி விட்டதையும் பார்த்தான். கிட்டத்தட்ட நடுநிசி நெருங்கிய சமயத்தில் மூன்று புது மரக்கலங்கள் வடக்கிலிருந்து வருவதையும் அவை மகாக்ஷத்ரபர் மரக்கலத்திலிருந்து சிறிது எட்டவே நங்கூரம் பாய்ச்சி நின்றுவிட்டதையும் கவனித் தான். அந்த சமயத்தில் நாகபாணன் மரக்கலத்திலிருந்து இரண்டு பந்தங்கள் எழுந்து குறுக்கும் நெடுக்குமாக மும்முறை ஆடின. அதைக் கண்டதும் மூன்று மரக்கலங் களிலிருந்தும் ஒவ்வொரு படகு இறக்கப்பட்டுக் கரையை நோக்கி வந்து அதிலிருந்த சிலர் கரைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களில் ஆஜானுபாகுவான ஒரு மனிதன் மலைக் காட்டுக்குள் புகுந்தான். அங்கிருந்த ஒரு பெரிய பாறையில் ஏறி நின்று கைகளை ஆட்டினான். அடுத்த சில விநாடிகளில் அவன் மறைந்தான் காஷ்டானன் கண்களிலிருந்து. பிறகு கரைக்கருகே தோன்றிப் படகொன்றை எடுத்துக் கொண்டு நாகபாணன் மரக்கலத்தை நோக்கிச் சென்றான்.

இதுவரையில்தான் காஷ்டானன் கண்டது. அவன் காணாதது பெரும் நாடகம். அந்த நாடகம் நாகபாணன் மரக்கலத்தில் அவன் அறையில் நடந்து கொண்டிருந்தது. மரக்கலத்தின் அறையிலிருந்த சாளரத்தின் மூலம் புதிதாக வந்த மரக்கலங்களையும், அவற்றிலிருந்து கரைக்குச் சென்றவர்களையும் பார்த்த நாகபாணன் அறைக்குள்ளே யாரோவந்த அரவம் கேட்டு. “உன்னுடன் எத்தனை வீரர்கள் வந்திருக்கிறீர்கள்?” என்று வினவினான் தலையைத் திருப்பாமலே. கேள்விக்குப் பதிலேதும் வராமற் போகவே சினத்துடன் திரும்பியவன் முகத்தில் உணர்ச்சிகள் உறைந்து போயின. கௌதமிபுத்ரன் கதவை மூடி முதுகை அதில் சாய்ந்த வண்ணம் புன்முறுவல் தவழ நின்றிருந்தான்.

Previous articleChittaranjani Ch25 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch27 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here