Home Chittaranjani Chittaranjani Ch28 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch28 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

46
0
Chittaranjani Ch28 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch28 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch28 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 28 உணர்ச்சியின் வினை

Chittaranjani Ch28 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சாதவாகனனைச் சிறை செய்யத்தான் உத்தரவிட்டதைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் வீரர்கள் பதுமைகள் போல நின்றுவிட்டதையும், தனது உத்தரவில்லாமல் வீரர்கள் இயங்க மாட்டார்களென்று கூறிக்கொண்டு காஷ்டானன் வெளியே வந்ததையும், தன்னைச் சிறை செய்யப் போவதாக அந்தக் கோழை சொல்லித் தனது வாளைக் கொடுத்து விடும்படி கேட்டதையும் பார்த்த மகாக்ஷத்ரபனான நாகபாணன், அதிர்ச்சியைவிட வியப்பை அதிகமாக அடைந்த தால், தன்னைக் கண்டாலே நடுங்கி வந்த காஷ்டானனுக்கு அத்தனை துணிவு எப்படி வந்தது என்பதைக் கேட்டதற்கு, சாதவாகனன் சொன்ன பதில் மிகவும் பொருத்தமாயிருந் ததைப் புரிந்து கொண்டான். கௌதமிபுத்ரனிடம் இருப்பது தான் அந்தத்துணிவு வந்ததற்குக்காரணம் என்பதை உணர்ந்து கொண்ட நாகபாணன் வாளைக் கொடுக்கும்படி இரண்டாவது முறை காஷ்டானன் கை நீட்டியதும் பெரிதாக நகைத்தான். காஷ்டானன் அழைத்து வந்துள்ள இருபது பேரைவிடப் பன்மடங்கு அதிகமான வீரர்கள் புதிய மரக்கலங்களிலிருந்து வந்து காட்டுக்குள் பதுங்கியிருக் கிறார்களென்ற நினைப்பால், “காஷ்டானனா! சிறைப்படப் போவது நானல்ல, நீயும் இந்தச்சாதவாகனனுந்தான்” என்று கூறித் தனது ஒரு கையைத் தலைக்கு மேலே தூக்கி ஆட்டினான். தனது மடியிலிருந்து ஒரு சங்கை எடுத்து பலமாகவும் ஊதவும் செய்தான்.

அவன் செய்கை எதையும் தடை செய்யாத கௌதமி புத்ரன், “மகாக்ஷத்ரபரே! இந்தச் செய்கை எதுவும் பயனளிக் காது. உமது வாளைக் காஷ்டானனிடம் கொடுத்து விடுவது நல்லது” என்று சர்வசாதாரணமாக உபதேசம் செய்தான்.

நாகபாணன் தனது எதிரியை வியப்பு ததும்பிய கண்களால் நோக்கி, “ஏன் பயனளிக்காது? மூன்று மரக்கலங்களிலும் வந்த வீரர்களில் ஒரு பகுதியினர் காட்டுக்குள் ஒளிந்திருக்கிறார்கள். எதற்கும் எந்த விநாடியிலும் செயல்பட அவர்களுக்குச் சைகையும் செய்யப்பட்டிருக்கிறது” என்று அவன் சுட்டிக்காட்டுவதற்கும், காட்டிலிருந்து வீரர்கள் பலர் விரைந்து வருவதற்கும் சமயம் சரியாயிருக்கவே, “பார்த்தாயா கௌதமிபுத்ரா! எந்த ஏற்பாட்டுக்கும் ஓர் எதிர் ஏற்பாடு உண்டு! அதுவும் நாகபாணன் புத்தி சற்று எச்சரிக்கையாக எதையும் முன் கூட்டியே சிந்திக்கவல்லது” என்று சற்றுப் பெருமிதத்துடன் கூறினான். “அதோ வரும் வீரர்களின் தலைவனிடம் உன் வாளைக் கொடுத்து விடு. இந்தப் பைத்தியம் காஷ்டானனையும் அடங்கி நடக்கச் சொல். உங்களிருவரையும் கோட்டையில் விசாரிக்கிறேன்” என்றும் சொன்னான்.

நாகபாணனின் வீராப்புக்கு கௌதமிபுத்ரன் பதிலேதும் சொல்லவில்லை. “நாகபாணரே! உமது விருப்பம்போல் செய்கிறேன். ஆனால் நீர் தப்புக் கணக்குப் போடுகிறீர். வரப்போவது தலைவனல்ல…” என்று இழுத்தான்.

“வேறு யார்?” சினத்துடன் எழுந்தது நாகபாணனின் கேள்வி.

“தலைவி” என்றான் சாதவாகன வாலிபன்.

அடுத்து நாகபாணன் பேசவில்லை. விரைந்து வந்த வீரர்களை அடுத்து சித்தரஞ்சனி பெரியதொரு புரவியில் வேகமாக வருவதையும், அவள் கையில் நீண்ட வாளொன்று இருப்பதையும் பார்த்துப் பிரமை பிடித்து நின்ற மகாக்ஷத்ரபன், “யார்! சித்தரஞ்சனியா?” என்று வினவினான் பிரமிப்பு குரலிலும் விரிய.

அவன் கேள்வியைத் தொடுத்து முடிக்கு முன்பாகப் புரவியை அவன் எதிரே நிறுத்தித் தரையில் குதித்த சித்தரஞ்சனி, எதிரே நின்ற மூவரையும் மாறி மாறிப் பார்த்தாள். கடைசியில் காஷ்டானனை நோக்கி, “எதற்காகச் சங்கை ஊதி என்னை அழைத்தீர்கள்? நாகபாணர் ஒருவரைச் சிறை செய்ய உங்களால் முடியாதா?” என்று சீற்றத்துடன் கேட்டாள்.

“படைத் தலைவர்மீது கோபித்துப் பயனில்லை சித்த ரஞ்சனி. சங்கை ஊதி உன்னை அழைத்தவர் நாகபாணர்” என்ற கௌதமிபுத்ரன், “மகாக்ஷத்ரபர் உன்னிடந்தான் வாளைக் கொடுப்பேனென்று பிடிவாதம் செய்கிறார். அதற்காகத்தான் சங்கை ஊதி உன்னை வரவழைத்தார். வாளை வாங்கிக்கொள்” என்றான். மரியாதைக்கு அறிகுறியாக நாகபாணனை நோக்கித் தலையையும் தாழ்த்தினான்.

நாகபாணன் புத்தியில் நடந்த விஷயம் மிகத்தெளிவாக விளங்கலாயிற்று. தங்கள் சங்கைப் போலவே கௌதமிபுத்ரன் தனது படைத்தலைவர்களுக்கும் சங்குகளைக் கொடுத்திருக் கிறானென்றும், தனது படையைத் தான் அழைக்கும்போ தெல்லாம் எதிரிப்படை வருகிறதென்றும் புரிந்து கொண்ட தால் உடனடியாக ஏற்படும் எந்தச் சண்டையிலும் குழப்பம் ஏற்படுமென்பதை உணர்ந்து கொண்டான். ஆனால் இத்தனை ஆபத்திலும் அவன் சிறிதும் கலங்காமல் தனது வாளை எடுத்து, “சித்தரஞ்சனி! இந்தா வாளைப் பெற்றுக் கொள்” என்று கூறித் தனது வாளை உறையிலிருந்து எடுத்து நீட்டினான். அவள் கையில் வாளைப் பெற்றுக் கொண்ட பிறகும் மிக நிதானமாகவே நின்றாள். “அடுத்து என்ன சாதவாகனா!” என்று வினவினான் கௌதமிபுத்ரனை நோக்கி.

“நாகபாணா! வீரனான உன்னைக் கொல்லவோ, சிறையில் அடைத்துச்சித்திரவதை செய்யவோ எனக்கு மனம் இடங்கொடுக்கவில்லை. சித்திரவதை செய்வது எங்கள் தர்மமும் அல்ல. உனது படைகளை அழைத்துக் கொண்டு இந்தப் பகுதியிலிருந்து இரண்டு நாட்களில் நீ போய் விடுவதாகப் பிராமணம் செய்தால் நீ இப்பொழுதே செல்லலாம். இல்லையேல் உன்னைச் சிறைசெய்து அழைத்துப் போவதைத் தவிர வேறு வழியில்லை” என்று சாதவாகனன் கூறினான்.

நதிக்கரையில் படகின் அருகிலிருந்தே இந்த உரையாடல் நடந்து கொண்டிருந்ததாலும், விடியும் நேரமும் மெதுவாக நெருங்கிக் கொண்டிருந்ததால் சந்திர வெளிச்சமும் மிகவும் மங்கிவிட்டதாலும் நதியின் முகத்துவாரத்தில் புகுந்த கடலலைகள் மெதுவாக அடங்கத் தொடங்கியிருந்தன. நதியின் அலைகளும் மிக மந்தமாயிருந்தன. எங்கும் பக்ஷி ஜாலங்கள் உதயகால ராகத்தைப் பலபடி ஒலிக்கத் தொடங்கின. அந்த கீதங்களைச் சித்தரஞ்சனி அனுபவித்துக் கொண்டிருந்த சமயத்தில் நாகபாணன் சரேலென்று திரும்பிக் கரையிலிருந்து நதியில் வேகமாகக் குதித்துவிட்டான். நதிக்கரையை நோக்கி ஓடிய காஷ்டானனையும் மற்ற வீரர்களையும் தடுத்த கௌதமிபுத்ரன், “நாகபாணன் தப்பிச் செல்லட்டும்” என்றான். “ஏன்?” காஷ்டானன் குரல் சினத்துடன் ஒலித்தது.

“அவனிடம் வாளில்லை, நிராயுதபாணியை வேட்டை யாடுவது தர்மமல்ல” என்றான் கௌதமிபுத்ரன்.

“இந்த தர்மத்தை நாகபாணன் பார்க்கமாட்டான்” என்றான் காஷ்டானன்.

“நாகபாணன் தர்மமல்ல நமது தர்மம். தவிர இனி உடனடியாகப் போர் ஏற்படும். அதற்கு நம்மைச் சித்தம் செய்து கொள்வது நல்லது” என்று கூறிக்கொண்டே திரும்பி ஆற்றுப் பகுதியை கவனித்தான்.

ஆற்றின் கோட்டைப் பகுதியிலிருந்து சுமார் நாற்பது படகுகள் முகத்துவாரத்தை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு படகிலும் பத்து வீரர்களுக்குக் குறையாமல் இருந்ததையும், அவர்கள் பூரண ஆயுதங்களை ஏந்தியிருந்ததையும் கௌதமிபுத்ரன் கவனித்தான். அதே சமயத்தில் நாகபாணனின் மரக்கலத்திலிருந்தும் வீரர்களைத் தாங்கிய படகுகள் கரையை நோக்கி வரத் தொடங்கின. கௌதமிபுத்ரன் புதிதாக உருவாகிய அந்தச் சூழ்நிலையைக் கவனித்து, “நாகபாணன் போருக்குச் சன்னத்தமாகி விட்டான். சித்தரஞ்சனி, நாகபாணன் வாளை என்னிடம் கொடுத்துவிடு. நீ உன் வீரர்களுடன் தாபிலேசுவரர் கோவிலுக்குப் போய்விடு. காஷ்டானனா! உன் வீரர்களில் நான்கு பேர் மட்டும் என்னுடன் இங்கு இருக்கட்டும். நீ சண்டிகாதேவி ஆலயத்துக்கருகில் நமது புரவிப் படையுடன் காத்திரு. நான் அழைக்கும்போது வேகமாகப் புரவிகளைச் சரிவில் செலுத்தி வா” என்று உத்தரவிட்டான். சித்தரஞ் சனியின் கையிலிருந்த நாகபாணனின் வாளைத் தனது இடது கையில் வாங்கிப் பிடித்துக் கொண்டான். வலது கையில் தனது வாளை ஏந்தி இரண்டு கைகளிலும் வாட்களுடன் எதிரிகளை எதிர்பார்த்து நின்றான்.

அவனைத் தனியே விட்டுச் செல்ல மனமில்லாத சித்த ரஞ்சனி சிறிது தாமதித்தாள். பத்து வீரர்களைக் கொண்டு நாகபாணனைச் சமாளிக்க உன்னால் முடியுமா?” என்று கவலையுடன் கேட்டாள்.

“இந்தப் பத்து வீரர்கள் கூடத் தேவையில்லை. நீ போ சித்தரஞ்சனி! நான் சில நாழிகைகளில் திரும்பி விடுவேன்” என்று கூறினான் கௌதமிபுத்ரன்.

இருப்பினும் கவலையுடன் நின்றாள் சித்தரஞ்சனி. “நீ போ சித்தரஞ்சனி! இப்பொழுது எந்த ஆபத்துமில்லை. சண்டை இன்று பிற்பகலுக்கு மேல்தான் துவங்கும். அதோபார்” என்று நதியைச் சுட்டிக் காட்டினான்.

கோட்டையிலிருந்து வந்த படகுகள் திடீரெனத் திரும்பிக் கோட்டையை நோக்கிச் சென்றன. நாகபாணன் கப்பலிலிருந்து வந்த படகுகள் முகத்துவாரத்தை நோக்கி வராமல் கடலின் கரையை நோக்கி வடக்குத் திசையில் சென்றன. நாகபாணன் இருந்த இடம் தெரியவில்லை. கரையில் நின்ற வண்ணம் ஆற்றுப் பகுதியை உற்று நோக்கிக் கொண்டிருந்த கௌதமிபுத்ரன் திடீரென மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டான். இக்கரையிலிருந்து பாதி தூரத்தில் திடீரென நாகபாணனின் உடல் நீர்மட்டத்துக்கு மேல் எழுந்து மீண்டும் சுழன்று நீரில் மூழ்கியது. அடுத்து பெரும் சுறா மீன் ஒன்று மேலெழுந்தது. அதன் வாய் முழுவதும் ரத்தமாயிருந்தது. அடுத்து அதுவும் நீரில் அமிழ்ந்து மறைந்தது. நீரின் மேற்பகுதியில் குருதி குமிழியிட்டு வந்து கொண்டிருந்தது. அருணோதயத்தின் சிவந்த கதிர்கள் அந்தக் குருதிக்குத் தனி மெருகைக் கொடுத்தன. கௌதமிபுத்ரன் பிரமை பிடித்துத் தலை குனிந்து கரையிலேயே நின்றான். பின்னால் வந்த சித்தரஞ்சனி அவனது தோளின் மீது ஆதரவாகக் கையை வைத்ததுகூட அவனுக்கு எந்தவித உணர்ச்சியையும் அளிக்கவில்லை. “நாகபாணனைப் போரிட்டு முடிக்க வந்தேன். என்னை அவன் ஏமாற்றி விட்டான்’ என்று முணுமுணுத்த கௌதமபுத்ரன் துன்பப் பெருமூச்சு விட்டான்.

சித்தரஞ்சனி இருமுறை அவனை அழைத்தும் அவன் பதில் ஏதும் சொல்லவில்லை. நாகபாணனின் துர்மரணத்தைக் கேட்டால், வீரமாதாவான தனது தாய் என்ன நினைப்பாள் என்று எண்ணி உள்ளூரப் பொருமினான். இந்த உணர்ச்கி வெள்ளத்தில் சூழ்நிலையை அறவே மறந்தான். அவன எண்ணமெல்லாம் பிரதிஷ்டானாவிலிருந்த கௌதமி பாலஸ்ரீயை வட்டமிட்டுக் கொண்டிருந்தன. “மகனே! உன்னைப் போரில் வெற்றிவாகை சூடிய வீரனாக எதிர்பார்த்தேன். சந்தர்ப்பத்தால் வெற்றி கிட்டிய சாதாரண மனிதனாக உன்னை எதிர்பார்க்க வில்லை” என்று பாலஸ்ரீ தன்னை நோக்கிக் குற்றம் சாட்டுவதாகத் தோன்றியது சாதவாகனனுக்கு. இதனால் தளர்ந்த மனத்துடன் மலையேறத் திரும்பியவன் செயலற்று நின்று விட்டான். அவன் நிலைமை தலைகீழாக மாறியிருந்தது.

Previous articleChittaranjani Ch27 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch29 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here