Home Chittaranjani Chittaranjani Ch29 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch29 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

49
0
Chittaranjani Ch29 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch29 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch29 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 29 சமரும் சங்கீதமும்!

Chittaranjani Ch29 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

நாகபாணன் சுறாவினால் கடிக்கப்பட்டு துர்மரண மடைந்து விட்டார் என்ற நினைப்பில், தனது வெற்றி அர்த்தமற்றதாகி விட்டதென்ற எண்ணத்தில், இதற்கு வீர மாதாவான தனது தாய் என்ன சொல்வாளோ என்ற துன்பத்தில் சிக்கி உணர்ச்சி வசப்பட்ட கௌதமிபுத்ரன், மலையில் சிறிது ஏறித் திரும்பி நோக்கியதும் நிலைமை தலைகீழாக மாறிவிட்டதென்பதைப் புரிந்து கொண்டா னென்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. நதியின் மத்தியப் பகுதியில் குமிழியிட்டுக் குருதியும் நதியின் நீருமாகக் கலந்து வெந்நீரைப் பரப்பவிட்ட சமயத்தில் சரேலென்று நாகபாணன் நீர்மட்டத்துக்கு மேலே கிளம்பியதையும், அவன் கையில் பிடித்திருந்த குறுவாளில் ரத்தமும் சதையும் கலந்திருந்ததையும் கவனித்த கௌதமி புத்ரன் மரணமடைந்தது சுறாவே என்பதையும் சூரனான நாகபாணன் அல்லவென்பதையும் புரிந்து கொண்டதால், நதியின் அந்தப் பகுதியை உற்றுப் பார்த்துக் கொண்டே நின்றான் நீண்ட நேரம். இருமுறை நீருக்கு மேல் சுறாவின் பெரிய வாலைக் கட்டிப் பிடித்து எழுந்த நாகபாணன் இருமுறை அதன் முதுகுப் பகுதியில் குறுவாளால் திரும்பத் திரும்பக் குத்தினான். பிறகு மீண்டும் நீரில் மூழ்கி அதன் அடிப் பகுதியிலும் அவன் அடுத்தடுத்துக் குத்தியிருக்க வேண்டும். உடலின் இருபுறத்திலும் குத்தப்பட்ட அந்தப் பெரிய சுறா திடீரென நீர்மட்டத்தில் மிதக்கலாயிற்று. ஆயினும் அத்துடன் எழுந்து அதைக் கையால் அணைத்துக் கொண்ட நாகபாணன் மீண்டும் நதியில் அழுந்தத் துவங்கி யதைக் கண்டதும் கௌதமிபுத்ரன் தனது மேலங்கியைக் சுழற்றிச் சித்தரஞ்சனியிடம் கொடுத்துவிட்டு, “இரு, நான் நாகபாணனைக் கரைக்குக் கொண்டு வருகிறேன். அவன் கை களைத்துவிட்டது. இப்பொழுது உதவாவிட்டால் இறந்து விடுவான்” என்று கூறிவிட்டு அவள் பதிலுக்குக் காத்திராமல் நதியின் நீரில் குதித்து மூழ்கி நீந்தினான். குதித்தபோதே நாகபாணன் மறைந்த இடத்தைக் குறி வைத்துக் கொண்டானாதலால் அந்தத் திக்கில் வேகமாக நீந்தி அதனருகில் வந்ததும் தலையைத் தூக்கி இருபுறமும் பார்த்தான். மீண்டும் சரேலென மூழ்கி நாகபாணன் அமிழ்ந்த இடத்தை அணுகி அவன் உடலைத் தனது கையில் பற்றி மேல்மட்டத்துக்குக் கொண்டு வந்து அவனை இழுத்துக் கொண்டே எதிர்க்கரையை நோக்கி நீந்திச் சென்றான். கரையை அணுகியதும் தான் கரையிலேறி நாகபாணனையும் இழுத்துக்கரையில் கிடத்தினான்.

நாகபாணன் உடலில் பல இடங்களில் சுறாவின் பற்கள் பட்டிருந்ததால் காயம் பலமாயிருந்தது. கையொன்றிலும் தொடைகளிலும் காயங்கள் பலமாயிருந்தன. அந்தக் காயங்களில் கரையிலிருந்த மணல் கலந்ததால் பெரிதும் ஏற்பட்ட எரிச்சல் காரணமாக ஒரு முறை நாகபாணன் முனகினான். பிறகு அசைந்து வேதனை நிறைந்த ஒலிகளை வாயிலிருந்து எழுப்பினான். கடைசியாக மெதுவாகக் கண் விழித்துப் பார்த்து பிரமையடைந்து, “இது கனவு, கனவு தான்” என்று சொல்லி மறுபடியும் கண்களை மூடிக் கொண்டான்.

அவன் முகத்தைத் தனது கையொன்றால் துடைத்த கௌதமிபுத்ரன், “மகாக்ஷத்ரபர் அஞ்ச வேண்டியதில்லை. மெள்ள எழுந்திருந்தால் உங்கள் வீரர்களிடம் ஒப்படைக் கிறேன்” என்று கூறி மெதுவாக அவனை எழுப்பித் தனது கையால் உடலை அணைத்துத் தலையைத் தோளில் சாத்திக் கொண்டு நடக்கலானான். பாதி நடையும் பாதி இழுத்தும் நாகபாணனை அழைத்துச் சென்ற கௌதமிபுத்ரனைக் கோட்டைப் பகுதியிலிருந்து விரைந்து வந்த சுமார் பத்து வீரர்களின் தலைவன். “மகாக்ஷத்ரபருக்கு என்ன நேரிட்டு விட்டது? இத்தனை காயங்கள் விளைத்தது யார்?” என்று வினவினான்.

கௌதமிபுத்ரன் தலையைத் தூக்காமலே நிலத்தை நோக்கிய வண்ணம், “மகாக்ஷத்ரபருக்கு இத்தனை காயங்களை விளைவிக்கக் கூடியவன் பிறந்திருக்கிறானா? விளைவித்த பின் அவன் உயிருடன்தான் இருக்க முடியுமா?” என்று கேள்விகளைத் தொடுத்தான்.

வீரர்கள் தலைவன் முகத்தில் குழப்பம் தெரிந்தது “அப்படியானால் இந்தக் காயத்தை விளைவித்தவர் யார், எங்கிருக்கிறார்?” என்று வினவினான் அவன்.

“நதியின் அடியிலிருக்கிறானோ அல்லது முகத்துவாரத் துக்கு அலைகளால் உருட்டப்பட்டானோ, சொல்ல முடியாது” என்றான் கௌதமிபுத்ரன்.

“நீ யார்?” என்று அடுத்த கேள்வியைத் தொடுத்தான் வீரர்கள் தலைவன்.

தலையை நிமிர்ந்து பார்த்த கௌதமிபுத்ரன் கேள்வி கேட்ட தலைவனும் மற்ற வீரர்களும் நடை, உடை, தோற்றம் எல்லாவற்றிலும் புதிதாக இருப்பதைக் கண்டு அவர்கள் வெளியூரிலிருந்து நாகபாணனால் வரவழைக்கப் பட்டவர்களாக இருக்க வேண்டுமென்று தீர்மானித்தான். ஆகவே சொன்னான்: “நான் யாரென்பது இப்பொழுது முக்கியமல்ல. முதலில் மகாக்ஷத்ரபரை கவனிக்க வேண்டும். இவரைக் கோட்டைக்கு அழைத்துச் செல்ல ஒரு புரவியைக் கொடுங்கள்” என்றான். வீரர்கள் தலைவன் நாகபாணன் இருந்த நிலையைக் கண்டதும் பதிலேதும் பேசாமல் தன் வீரர்கள் ஒருவனுக்குக் கண்காட்ட அவன் விரைந்து பக்கத்திலிருந்த தோப்புக்குச் சென்று அதிலிருந்து புரவி யொன்றை இழுத்து வந்தான். புரவிமீது நாகபாணனை மெதுவாக ஏற்றி அதன் முதுகில் படுக்க வைத்த கௌதமி புத்ரன், ”நாகபாணரை ஜாக்கிரதையாக அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறிவிட்டுச் சற்றே திரும்பத் தொடங்கினான். அந்தச் சமயத்தில் சுரணை அடைந்துவிட்ட நாகபாணன் சாதவாகனன் தோளைத் தனது கையால் பிடித்தான். அதனால் திரும்பி நோக்கிய சாதவாகனனை உடன் வரும்படி சைகையும் செய்தான். பிறகு வீரர்கள் தலைவனை நோக்கி ஏதோசைகை செய்ய, மற்ற வீரர்களைச் செல்லும்படி கட்டளையிட்டான் வீரர்களின் தலைவன். கௌதமிபுத்ரன் வீரர்கள் தலைவனைப் புரவியின் ஒரு புறத்தில் இருக்கச் சொல்லித் தான் மறு பக்கம் வந்து புரவி மீதிருந்த நாகபாணனை பத்திரமாகப் பிடித்துக் கொண்டான். அடுத்து அந்தப் புரவி பக்கத்திலிருந்த தோப்பில் நுழைந்தது. தோப்பின் ஊடே சிறிது தூரம் சென்றது. சற்று வேதனைப் பெருமூச்சு விட்டான் நாகபாணன். கௌதமிபுத்ரன் நாகபாணனை மெதுவாகத் தடவிக் கொடுத்து ரத்தத்தை நிறுத்திச் சில நரம்புகளை அழுத்திவிட்டு மெதுவாகப் புரவியை நடத்திச் சென்றான். இப்படி ஒரு நாழிகை பயணம் செய்ததும் கோட்டையின் பின்புறத் திட்டி வாசல் கதவுக்கருகில் வீரர்கள் தலைவன் நின்று, “இனி புரவி உள்ளே போக முடியாது. நாம்தான் மகாக்ஷத்ரபரைத் தூக்கிச் செல்ல வேண்டும்” என்று கூற, கௌதமிபுத்ரன் மெதுவாக நாகபாணனைப் புரவியிலிருந்து இறக்கிப் பாதி உடலைத் தான் பிடித்துக்கொண்டு மீதிப் பாதையை வீரர்கள் தலைவனைப் பிடித்துக் கொள்ளச் சொல்லித் திட்டி வாசல் கதவை இருமுறை தட்டக் கதவு திறந்தது. நாகபாணன் உடலை இருவர்தாங்கி வருவதைக் கண்டதும் திட்டி வாசல் காவலர் கலவரமடைய, அவர்களைப் பேச வேண்டா மென்று கௌதமிபுத்ரன் சைகை செய்து வீரர்கள் தலைவன் உதவியால் கோட்டையிலிருந்த மகாக்ஷத்ரபனின் அறைக்கு அவனைக் கொண்டு போய் அங்கிருந்த கட்டிலில் கிடத்தினான். பிறகு வீரர்கள் தலைவனை நோக்கி, “மகாக்ஷத்ரபர் காயமடைந்திருப்பது யாருக்கும் தெரிய வேண்டாம். மருத்துவம் எனக்குத் தெரியும். சிறிது சுடுநீரும், ஒரு துண்டும், மருத்துவரிடமிருந்து காயக்களிம்பும் கொண்டு வா” என்று உத்தரவிட்டான். அவன் செல்லத் தொடங்கியதும், ”அறையை மூடிவிட்டுச் செல். யாரும் நாகபாணரைப் பார்க்க முடியாதென்று திட்டம் செய்து வை” என்று உத்தரவிட்டான்.

அவன் சொற்படி சகலமும் நடந்தது. கதிரவனும் தனது இளங்கதிர்களை எங்கும் பரப்பினான். கௌதமிபுத்ரன் வீரன் கொண்டு வந்த சுடுநீரால் நாகபாணனின் காயங்களுக்கு ஒத்தடம் கொடுத்தான். பிறகு களிம்பைக் காயம் பட்ட இடங்களில் மெதுவாகத் தடவினான். இருப்பினும் களிம்பு தனது சுபாவத்தைக் காட்டியதால் சற்றே எரிச்சல் எழவே, நாகபாணன் இம்சைப்பட்டு அசைந்தான். இம்சை சுரணையை முற்றும் திரும்பக் கொணர்ந்துவிட்டதால் கண்களை நன்றாகவே திறந்தான். அப்பொழுதும் களிம்பைத் தடவிக் கொண்டிருந்த கௌதமிபுத்ரனை நோக்கிப் புன்முறுவல் செய்தான். கௌதமிபுத்ரன் நாகபாணனைப் பார்க்காமலேயே தனது பணியில் ஈடுபட்டிருந்ததால் எதிரியின் முகத்தில் மாறுபட்டு எழுந்திருந்த உணர்ச்சிகளை கவனிக்கவில்லை. களிம்பைப் பூசி முடித்ததும் துண்டில் கைகளைத் துடைத்துக் கொண்டு நாகபாணன் கண்களைத் திறந்திருப்பதைக் கண்டு மனச் சாந்தியை முகத்திலும் புன்முறுவலை உதடுகளிலும் பரவ விட்டுக் கொண்டான்.

நாகபாணன் மெல்லத் தனது கையொன்றைத் தூக்கி எட்ட இருந்த ஒரு பெரிய பெட்டியைக் காட்டினான். அதைத் திறந்து பார்த்த கௌதமிபுத்ரன் அதில் புத்தம் புது உடைகள் பல இருந்ததைப் பார்த்து நாகபாணன் கருத்தை அறிந்து தனது ஈரச்சராயை அவிழ்த்து அதிலிருந்த புது உடைகளிலொன்றை அணிந்து கொண்டான். நாகபாணன் மறுபடியும் வேறு ஓர் இடத்திலிருந்த தலைப்பாகையைக் காட்டினான். அதையும் அணிந்து கொண்ட கௌதமி புத்ரன் அறைக் கோடியிலிருந்த நிலைக் கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்த்தான். உடை அவனது தோற்றத்தை அறவே மாற்றியிருந்தது. தலைப் பாகை பாதி முகத்தை மறைத்துவிட்டதால் பழையகால மருத்துவன் போல் காட்சியளித்தான் கௌதமிபுத்ரன்.

நாகபாணனின் கருத்து நன்றாகப் புரிந்து விட்டது கௌதமிபுத்ரனுக்கு. ஆயினும் நாகபாணனை அணுகி, “இது எதற்கு?” என்றான்.

“நீ இங்கிருந்து தப்பித்துச் செல்ல” என்ற நாகபாணனின் குரல் தழுதழுத்துக் கிடந்தது.

அவன் உணர்ச்சிகளின் எழுச்சியைக் கவனித்த சாதவாகனன் எந்த மனிதனிடமும் நல்ல குணங்கள் இருக்கத் தான் செய்கின்றன என்று உள்ளூர சொல்லிக்கொண்டான். அடுத்து நாகபாணன் சாதவாகனனை அழைத்து, “இன்று பகல் இங்கேயே இருந்துவிடு, இரவில் போகலாம்” என்றான்.

கௌதமிபுத்ரன் புன்முறுவல் செய்து, “முடியாது நாகபாணரே! நான் பகலுக்குள் திரும்பாவிடில் விபரீதம் விளையும்” என்று கூறிவிட்டு, “என்னைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். என்னுடன் வந்த வீரர் தலைவனை அழைத்துப் போகிறேன்” என்றான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் முழு மருத்துவ வேடத்துடன் வீரர்கள் தலைவனுடன் புறப்பட்டான் சாதவாகனன். நாகபாணன் முன்னதாக இட்ட கடுமையான உத்தரவால் அவனை யாரும் தடை செய்யவில்லை. அவனைத் தன்னைப்போல பாவித்து நடக்க வேண்டுமென்று நாகபாணன் திட்டம் செய்திருந்ததால் கௌதமிபுத்ர மருத்துவன் அனைவராலும் வணங்கப்பட்டான். நாகபாணன் அறையிலிருந்து புறப்படு முன்பாக, “நாகபாணரே! நாம் எப்பொழுது சந்திக்கலாம்?” என்று கேட்டான்.

“பௌர்ணமி தினத்தில் ” என்றான் நாகபாணன்.

“நல்லது” என்றான் கௌதமிபுத்ரன்.

“அன்றும் சித்தரஞ்சனி பாடட்டும்” என்றான் நாகபாணன்.

“ஏன்?”

“பௌர்ணமி அன்றுதான் பாடத் துவங்கினாள். அந்தப் பாட்டிலேயே இந்தக் கதைக்கு முடிவு கட்டுவோம்?”

புரிந்ததற்கு அறிகுறியாகத் தலையசைத்தான் கௌதமி புத்ரன்.

அவன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் உள்ளே நுழைந்த க்ஷத்ரபன், மகாக்ஷத்ரபர் சாளரத்தருகே நின்றிருப்பதையும் அவர் தூரத்தே எதையோ பார்ப்பதையும் கவனித்து உள்ளே நுழைந்து, “மகாக்ஷத்ரபர் எதையோ பார்க்கிறார்” என்று சொல்லிக் கொண்டே நாகபாணனை அணுகி வெளியே தனது கண்களை ஓட்டினான்.

தூரத்தே ஆற்றங்கரையை நோக்கி மருத்துவர் ஒருவர் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து, “இந்த மருத்துவர் உங்களுக்கு முன்னமே பழக்கமா?” என்று கேட்டான் க்ஷத்ரபன்.

“நம் எல்லோருக்கும் பழக்கம்’ என்றான் நாகபாணன். ”அவன் நடையைப் பார்த்தால் போர் வீரன் நடை போலிருக்கிறது.”

“ஆம். வீரர்களான மருத்துவர்கள் இல்லையா?”

“இருப்பார்கள். ஆனால் இந்த மருத்துவரை நான் எங்கோ பார்த்திருக்கிறேன்.”

இதைக் கேட்ட மகாக்ஷத்ரபன் நகைத்தான். “க்ஷத்ரபா, உன் மூளையும் வேலை செய்யத்துவங்கி விட்டது!” என்றும் கூறினான், நகைப்பின் ஊடே.

அடுத்து ஏதோ புரிந்ததற்கு அறிகுறியாகத் துடித்து வெளியே செல்ல முயன்ற க்ஷத்ரபனைத் தடை செய்த நாகபாணன், “அவனை யாரும் தடை செய்ய வேண்டாம்” என்றான் கடுமையாக.

“அவன்….”

“மகாவீரன்…”

“ஆனால் எதிரி.”

“என் உயிரைக் காப்பாற்றியவன்.”

“அவனா?”

“ஆம். பகைவனிடமும் கருணை காட்டுபவன். லட்சத்தில் ஒருவன்.”

“நமது வீரம்.?” என்று எதையோ சொல்ல முற்பட்ட க்ஷத்ரபனைத்திரும்பிப் பார்த்த நாகபாணன், “பௌர்ணமி யன்று தீர்மானிக்கப்படும்” என்றும் சொன்னான்.

பௌர்ணமி அன்றா?” என்று வினவினான் க்ஷத்ரபன் ஆவலுடன்.

“ஆம். அன்று சங்கீதத்துடன் சமர்துவங்கும், சங்கீதம் உன் மகளுடையது. சமர் உன் சமர்த்தைப் பொறுத்தது” என்ற நாகபாணன் இகழ்ச்சி நகை கொண்டு க்ஷத்ரபனை நோக்கினான்.

Previous articleChittaranjani Ch28 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch30 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here