Home Chittaranjani Chittaranjani Ch3 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch3 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

56
0
Chittaranjani Ch3 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch3 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch3 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 3 அவன் அதிர்ஷ்டம்

Chittaranjani Ch3 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

இரவு முற்ற முற்ற, சுக்ல பட்ச நான்காம் பிறைச்சந்திரனின் அற்ப ஒளியையும், கடல்மீது ஊர்ந்து வந்த மேகங்கள் மறைத்துவிட்டன.

அது காரணமாக, இலேசாகப் பளிச்சிட்ட கடல் அலைகள் கருப்பு மயமாகி ஒரு பயங்கரத்தை நிறுவி விட்டதாலும், அப்படி அடுக்கு அடுக்காக வந்த மேகங்கள் கடலிலிருந்து விண்ணை நோக்கிக் கிளம்பித்திரண்டு, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒரு தூணை சிருஷ்டித்து விட்டதாலும், ஏதோ உற்பாதம் நிகழப் போவதற்கு அத்தாட்சியைச் சுட்டிக் காட்டியதாலும், தாபிலேசுவரர் மண்டபத்தூணில் சாய்ந்து உட்கார்ந்திருந்த கௌதமிபுத்ரன் சிறிதும் கலங்கினானில்லை. பிசாசைப் பற்றிய கதைக்கும் மேகங்கள் விளைவித்த தூணுக்கும் மேலைக்கடலைப்பற்றி விஷயமறியாதவர்கள் ஏதாவது முடிச்சுப் போட்டு அதுவும் பிசாசின் வேலையாயிருக்குமென்று பயந்தாலும் மேலைக்கடலில் பலமுறை பயணம் செய்தவனான அந்த வாலிபன், ‘இப்படி மேகம் திரளுவதும் திடீர் மழை பெய்வதும், இடிகள் மலையைத் தாக்கித் திக்பிரமையடையச் செய்வதும் மலைக் கடலோரப் பகுதிகளின் இயற்கை. இதைப்பற்றி அச்சப்பட ஏதுமில்லை’ என்று மனத்தில் சொல்லிக்கொண்டான். “பிசாசென்பது மனப்பிரமை. மனிதனைவிடப் பெரிய பிசாசு எங்கிருக்க முடியும்?” என்றும் தன்னைக் கேட்டுக்கொண்டு நள்ளிரவை எதிர்பார்த்திருந்தான்.

நள்ளிரவு நெருங்குவதற்கு நான்கைந்து நாழிகைகளுக்கு முன்பாகவே கடலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு, அலைகள் பனை மர உயரத்துக்குக் கிளம்பி, மலைச்சரிவுப் பாறைகளில் வேகமாக மோதத் தொடங்கியதன் விளைவாக, பேரிரைச்சல் கொண்ட பயங்கரச் சூழ்நிலை அந்தப் பகுதியில் உருவாகிக்கொண்டிருந்ததால், கௌதமிபுத்ரன் தனது புரவியை ஆலயத்தின் உட்புறத்தூணொன்றில் பிணைத் தாலும், அந்தப் புரவியும் வெளியே எட்டிப் பார்த்துப் பெரிதாகக் கர்ஜனை செய்தது. திடீரெனப் பெருங்காற்று ஒன்று கிளம்பி மரங்களைப் பேயாட்டம் ஆட்டினாலும் அந்த உறுதியான மரக்கிளைகளில் ஒன்று கூட விழவில்லை யென்றாலும், மரத்தின் இலைகளும் புஷ்பங்களும் ஏராளமாக உதிர்ந்து, மலைத்தரையை புஷ்ப வேலை செய்யப்பட்ட கம்பளமாக அடித்திருந்தது. மரங்களின் அந்தப் பேயாட்டத்தைக் கவனித்த கௌதமிபுத்ரன் அதைப்பற்றி எந்த அக்கறையும் காட்டாமல் கோவிலுக்கு வெளியிலேயே நின்று ஆகாயத்தை நோக்கினாலும் ஆகாயத்தில் நக்ஷத்திர மேதுமில்லாததாலும் கருமேகம் மூடியிருந்ததாலும் நாழிகைகளைக் கணக்கிட முடியாததால் ‘நள்ளிரவு வந்திருக்குமா?’ என்று சிந்தித்தான். எப்படியும் நள்ளிரவு நிகழ்ச்சியைக் கவனித்து மோகினியின் மாயக்கதையை உடைக்க வேண்டுமென்று தீர்மானத்துடன் தாபிலேசுவரர் முகப்பு மண்டபத்திலே உட்கார்ந்திருந்தான், காலைக் கீழே தொங்கவிட்டு ஆட்டிய வண்ணம்.

நாழிகைகள் ஓடினவேயொழிய, இருளையும், காற்றையும், கடலலைகளின் இரைச்சலையும், தவிர வேறு எந்த மாற்றமும் இல்லாததால், ஒருவேளை நான் வருகிறேனென்று தெரிந்த பிசாசு வரவில்லையோ? என்னிடம் பிசாசே பயப்படுகிற தென்றால் சாகர்கள் பயப்படாதிருக்க முடியுமா?’ என்று தனது நிலையைப் பற்றியும் நினைத்துப் புன்முறுவல் கொண்டான். அப்படி அவன் நினைத்துக்கொண்டிருக் கையிலே ஊழிக்காற்று ஒன்று ‘ஊ’ என்று ஊதிக்கொண்டு வாசிஷ்டி நதிப்பகுதியிலிருந்து எழுந்தது. பெரிதாக வானில் இடித்த பேரிடியொன்றை அடுத்து, கண்ணைப் பறிக்கும் மின்னலொன்றும் அந்த வனப்பகுதியின் இருளைக் கிழித்தது.

மின்னலை மட்டும் அவன் கண்டிருந்தால் அத்தனை அதிர்ச்சியடைந்திருக்க மாட்டான். அவன் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து முப்பது அடிதள்ளியிருந்த ஒரு சிறு பாறைமீது வெள்ளை வெளேரென ஒரு பெண்ணுருவம் நின்று கொண்டிருந்தது அவன் கண்களுக்குப் புலனாயிற்று. திடீரெனப்பளிச்சிட்ட மின்னல் கண்ணிமைக்கும் நேரத்தில் நீங்கிவிட்டதால் அந்தப் பெண்ணுருவமும் மறைந்து விட்டது. அடுத்து ஒரு பெரிய இடி வானத்தே இடித்தது. அதை அடுத்து இன்னொரு இடியும் பெரிதாக இடித்து மலைச்சாரலில் எதிரொலி செய்யுமுன்பாக மற்றுமொரு முறை ஏற்பட்ட மின்னலில் அந்தப் பாறையைக் கூர்ந்து நோக்கினான் கௌதமிபுத்ரன். அந்தப் பாறையில் பாதி தூரம் பூமிக்குள் இறங்கியிருந்த அந்தப் பெண்ணுருவம் இடுப்பு வரையிலுமே தெரிந்தது. அந்த வாலிபன் அடுத்து மற்றொரு மின்னலுக்காகக் காத்திராமல் அந்தப் பாறையை நோக்கி ஓடினான். அந்த இடத்தை அவன் அடைந்தபோது அங்கு அந்த மலைப்பாறையே இருந்தது. பாறையைக் காலால் உதைத்துப் பார்த்த கௌதமி புத்ரன் அங்கு எந்த மாறுதலுமில்லாததையும் மின்னலில் தோன்றிய மின்னல் கொடி சுவடு தெரியாமல் மறைந்து விட்டதையும் உணர்ந்து, பெரும் குழப்பத்துடன் மண்டபத்தை நோக்கித் திரும்புகையில் வானத்திலிருந்து பெரும் தூறல்கள் மலைச்சரிவின் மீது சடசடவென விழவே மண்டபத்தை நோக்கி விரைந்தவன் என்றுமில்லாத குழப்பத்துடன் பழையபடி ஆலயத்தூணில் சாய்ந்து உட்கார்ந்தும் கொண்டான்.

அவன் சிந்தனை பலவிதமாக ஓடிக்கொண்டிருந்ததால் தாபிலேசுவரர் ஆலயத் தூணிலேயே தனது தலையைப் புரட்டிய வண்ணம் உறக்கம் பிடிக்காமல் மோகினி மறைந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பிசாசுகளைப் பற்றி அவனுக்கு அடியோடு நம்பிக்கையில்லையென்றாலும் தனது கண்ணால் கண்டதைப் புறக்கணிக்க முடியாமல் திண்டாடினான். ‘அப்படியொன்றும் நான் மனப்பிரமை பிடித்தவனல்லவே? பெண்ணைப் பார்க்கத் தானே செய்தேன்’ என்று தன்னைத்தானே கேட்டும் கொண்டான். எப்படியும் அந்த மாயத்துக்கு விடை கண்டுபிடிக்காமல் ஊருக்குத் திரும்புவதில்லையென்று சங்கல்பமும் செய்து கொண்டு கண்களை லேசாக மூடினான். மூடிய கண்களைத் திடீரெனத் திறக்க வைத்தது மெல்லிய ஒலியொன்று. அது என்னவாயிருக்கும் என்று அவன் நினைத்துக் கொண்டிருக் கையிலேயே சுண்டிவிடப்பட்ட வீணையின் நாதத்தைப் போன்ற ஒரு மெல்லிய நாதம் தாபிலேசுவரர் கோவிலை நாடி வந்தது. அதிக உச்சத்துக்கும் போகாமல் அதிகமாகக் கீழேயும் போகாமல் ஸப்தஸ்வரங்களுக்கிடையே மாறி மாறி இழைத்த அந்தக் கீதம் அவன் சித்தத்தைப் பெரிதும் பாதித்தது. எந்தவிதமான கரகரப்போ பிசிறோ இல்லாமல் இழைந்து, காற்றிலே மிதந்து வந்த அந்த இசையின் மென்மை, சித்தத்தை மட்டுமின்றி அவன் ஆத்மாவிலும் பாய்ந்ததால் அதில் லயித்துக்கிடந்தான் கௌதமிபுத்ர சதகர்ணி. இப்படி சுமார் மூன்று நாழிகைகளுக்குமேல் அந்த மலைக் கோட்டையையே மயக்கிவிட்ட அந்த இசையினால் மெய்மறந்த அந்த வாலிபனும் அதன் இனிமையில் உணர்ச்சிகள் சுழலக் கண்களை மூடி நித்திரை வசப்பட்டான்.

அவன் கண் விழித்தபோது அருணனின் கிரணங்களால் கடல் செவ்விய ஆடையை அணிந்திருந்தது. அலைகள் முந்திய இரவின் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு அதிக சலனமில்லாமல் மெல்லிய அலைகளை மலையடிவாரத்துக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. கடலில் கலந்த வாசிஷ்டி நதியும் இரவு சங்கமத்தால் சளைத்த பெண்ணைப்போல மந்தகதியுடன் கடலில் பாய்ந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய சுழல் காற்று, இடி, மின்னல், மழை, பிறகு களைப்பு, அமைதி; இயற்கையின் இந்த நியதி சிருஷ்டியில் யாரை எதை விட்டது என்று நினைத்த கௌதமிபுத்ரன் முதல்நாள் இரவின் நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்றான்.

கையில் ஒரு சிறு மூட்டையுடன் வேகமாக வந்து கொண்டிருந்த தாபிலேசுவரர் கோவில் பூஜாரி கோவிலை அணுகுமுன்பாகச் சற்று எட்டவே நின்று சந்நிதிக்கு முன்பாக நின்று கொண்டிருந்த கௌதமிபுத்ரனைப் பார்த்துப் பெரும் பிரமிப்படைந்தார். அவர் பிரமிப்புக்குக் காரணத்தைப் புரிந்து கொண்ட கௌதமிபுத்ரன் லேசாக நகைத்து, “வாருங்கள், அஞ்ச வேண்டாம். நான் சாகவில்லை” என்று அழைப்பு விடுத்தான்.

அவன் அழைப்பை ஏற்று அருகில் வந்த பூஜாரி. “அதிசயம், அதிசயம்” என்று சொற்களை உதிர்த்தார் கௌதமிபுத்ரனை நோக்கி.

“என்ன அதிசயம்?” கௌதமிபுத்ரன் கேட்டான் அவர் வியப்புக்குக் காரணத்தை அறிந்து.

“நீ உயிருடனிருக்கிறாய்” என்றார் பூஜாரி.

“தங்களை ஏமாற்றியதற்கு வருந்துகிறேன்” என்றான் கௌதமிபுத்ரன் லேசாக நகைத்து.

“இது நகைப்புக்குள்ள விஷயமில்லை” என்று பூஜாரி கடிந்து கொண்டார்.

“ஏன் நான் உயிருடனிருப்பது உங்களுக்கு இஷ்ட மில்லையா?”

“என் இஷ்டம் இருக்கட்டும் ஒருபக்கம். நீ உயிருட னிருப்பது தெரிந்திருந்தால் நான் இத்தனை சீக்கிரம் வந்திருக்க மாட்டேன். நடுப்பகலில் வந்திருப்பேன்!” “ஏன்?” ”இந்தா இதைப்பார்” என்று பூஜாரி தமது மூட்டையி லிருந்த சாமக்கிரியைகளை எடுத்து மண்டபத்தரையில் வைத்தார். அதில் தர்ப்பம், எள்ளு, அரிசி, சிறுசட்டி இத்தனையும் இருப்பதைப் பார்த்துத்தனது ஈமக்கிரியைக்குச் சாமான்களை அவர் கொண்டு வந்து விட்டதைப் பார்த்துச் சற்று பெரிதாகவே சிரித்தான் கௌதமிபுத்ரன்.

“வாலிபனே! சிரிக்காதே. ஏதோ உன் நல்ல காலம் நேற்று மோகினி வரவில்லை …..” என்று இழுத்தார்.

“யார் சொன்னது?”

“நான் சொல்கிறேன். வராததற்கு ருசு நீதான்?”

“நானா?”

“ஆம். வந்திருந்தால் நீ எப்படி உயிருடனிருப்பாய்?” ” “பூஜ்யரே! நேற்று அந்த மோகினி வந்தது” என்று சிறிது உறுதியாகச் சொன்னான் அந்த வாலிபன்.

“வந்ததா!” பூஜாரி சந்தேகத்துடன் பார்த்தார் வாலிபனை.

“வந்தது. நான் பார்த்தேன்” அழுத்தந்திருத்தமாகச் சொன்னான் கௌதமிபுத்ரன்.

“நீயே பார்த்தாயா?”

“ஆம்”

“எப்பொழுது?”

“நள்ளிரவில் வானம் மின்னிய போது”

“எங்கே?”

”அதோ அந்தப் பாறைமீது” என்று எட்ட இருந்த இடத்தைச் சுட்டிக்காட்டினான்.

“அடுத்து என்ன நடந்தது?”

“மறுபடியும் மின்னியது.”

“அப்பொழுது?”

“மோகினியின் உடல் பகுதி தெரிந்தது. மீதிப் பாதி மறைந்துவிட்டது பூமிக்குள்.”
“அதையும் பார்த்தாய்?”

“ஆம்”

பூஜாரி சந்தேகப் பார்வையாக அவனைப் பார்த்தார். “அந்தப் பிசாசைப் பிடிப்பதுதானே?” என்று கேட்டார்.

“பிடிக்கத்தான் போனேன். அதற்குள் மறைந்து விட்டது.”

“பிறகு என்ன நடந்தது?” என்று பூஜாரி கேட்டார்.

“பிறகு திடீரென ஒரு சித்தத்தை மயக்கும் சங்கீதம் கேட்டது. அப்படியே தூங்கி விட்டேன்” என்றான் கௌதமிபுத்ரன்.

“தூங்கும்போது யாரும் உன் கழுத்தைப் பிடிக்கவில்லை?” என்று விசாரித்தார் பூஜாரி.

“இல்லை” என்றான் கௌதமிபுத்ரன்.

பூஜாரி ஏதும் புரியாமல் திகைத்து உட்கார்ந்து விட்டார். பிறகு கௌதமிபுத்ரனுக்காகக் கொண்டு வந்திருந்த சடங்குச் சாமான்களை மறுபடியும் எடுத்துக்கட்டி வைத்துவிட்டு நடுப்பகல் வருவதாகச் சொல்லிப் போனார். நடுப்பகலில் வழக்கம் போல் வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து நைவேத்யம் முடித்து, பிரசாதத்தைத் தானும் உண்டு வாலிபனுக்கும் கொடுத்தார்.

இருவரும் உணவருந்தி முடிந்ததும் பூஜாரி சொன்னார். “அப்பனே! நேற்று தாபிலேசுவரர் கோவிலில் படுத்துத் தாயின் பிரார்த்தனையை நிறைவேற்றிவிட்டாய். இனி நீ கிளம்பு. தாய்க்குப் பிள்ளையாக ஊருக்குப் போய்ச் சேர்” என்று கெஞ்சினார்.

கௌதமிபுத்ரன் அதற்கு இணங்கவில்லை. “இன்னொரு பிரார்த்தனை இருக்கிறதே” என்றான்.

“அது என்ன?”

“சண்டிகாதேவியைத் தரிசிக்க வேண்டும்.”

”அது இன்னும் ஆறு மாதங்களுக்கு முடியாது. அந்தப் பாதாளக் கோவிலை இப்பொழுதுதான் மூடினார்கள். அடுத்து திறக்க ஆறு மாதம் ஆகும்” என்றார் பூஜாரி.

“இடத்தைக் காட்டுங்கள். நான் போய்த் தரிசித்து வருகிறேன்” என்று சாதவாகன நம்பி பிடிவாதம் பிடித்தான்.

பூஜாரி அவனைக் கடுமையுடனும் கருணையுடனும் நோக்கினார். “நேற்று அதிர்ஷ்டம் என்றும் நீடிக்குமென்று நினைக்காதே. பேசாமல் ஊருக்குப் புறப்படு’’ என்றும் சொன்னார்.

“இன்றிரவு மோகினி வருகிறாளா பார்க்கிறேன்” என்றான் கௌதமிபுத்ரன்.

“விஷப்பரீட்சை செய்யாதே” என்றார் பூஜாரி.

அவர் சொன்னதைக் கேட்கவில்லை கௌதமிபுத்ரன். அன்றும் தாபிலேசுவரர் கோவிலில் தங்கினான். இரவு நீண்ட நேரம் கழித்து உறங்கினான் மண்டபத்தில். நள்ளிரவில் சங்கீதம் ஒலித்தது. முதல்நாள் போல்! எழுந்திருக்க முயன்றான். முடியவில்லை. அவன் கழுத்தை வலிய மெல்லிய கையொன்று இறுக்கிக் கொண்டிருந்தது. கால்களில் ஏதோதளைகள் மாட்டப்பட்டிருந்தது போன்ற ஒரு பிரமை! மூச்சுவிடுவதுகூடச் சிறிது கஷ்டமாயிருந்தது அவனுக்கு. அதிர்ஷ்டம் நீடிக்காது என்று பூஜாரி சொன்ன சொற்கள் அவன் காதில் ஒலித்தன.

Previous articleChittaranjani Ch2 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch4 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here