Home Chittaranjani Chittaranjani Ch30 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch30 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

54
0
Chittaranjani Ch30 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch30 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch30 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 30 பதினேழு நாட்கள்!

Chittaranjani Ch30 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

மகாக்ஷத்ரபனான நாகபாணன் சொற்களைக் கேட்டும் இகழ்ச்சிப் புன்முறுவலைக் கண்டும் எந்தவித சமாதானத் தையும் அடையாத க்ஷத்ரபன், கட்டிலில் ரணகாயங்களுடன் கிடந்த தனது தலைவனை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே நின்றான். பிறகு மெதுவாக, “மகாக்ஷத்ரபர் இரும்பு மனம் இளகிக்கொண்டு வருவதாகத் தெரிகிறது” என்று சொன்னான்.

நாகபாணன் லேசாக நகைத்து, “தன்னந்தனியாக வந்து தானாகவே சிக்கிக்கொண்ட எதிரியைத் திரும்பிச் செல்ல அனுமதித்தது தவறு என்கிறீர்?” என்று வினவினான்.

“சிக்கிய எதிரியைத் தப்ப விடுவதால் எந்த அனுகூலம் கிடைக்கும்?” என்று க்ஷத்ரபன் வினவினான்.

“திடீர் படையெடுப்பு ஏற்பட்டிருக்காது” என்றான் நாகபாணன் சிரித்துக் கொண்டே.

“திடீர் படையெடுப்புக்கு ஏற்பாடு செய்யச் சாதவா கனனுக்கு அவகாசம் ஏது?”

“எந்த ஏற்பாடும் செய்யாமல் நம்மிடம் தலையைக் கொடுக்கச் சாதவாகனனை முட்டாள் என்று நினைக் கிறீரா?”

இதற்குச் சில விநாடிகள் பதில் சொல்லாத க்ஷத்ரபன், ”சிக்கிய எதிரியைக் கொன்றிருந்தால் என்ன ஆகும்?” என்று வினவினான் கொடுமை நிறைந்த குரலில்.

“சரித்திரம் நம்மைக் கொன்றுவிடும்” என்று நாகபாணன் பெருமூச்செறிந்தான். மேலும் சொன்னான்: “நான் சரித்திரத்தில் எப்படியும் ஜீவிப்பேன். எப்படி ஜீவிப்பேன் என்பதுதான் கேள்வி. சிக்கிய எதிரியைப் போகவிட்டுச் சமரில் நேருக்கு நேர் சந்தித்து வெற்றியடைந்த, அல்லது களத்தில் வீர மரணமடைந்த, வீரனாக ஜீவிக்கலாம். அல்லது என்னைக் காப்பாற்றிய எதிரி தனியாகச் சிக்கிய போது கொலை செய்து நன்றி கெட்ட கொலைகாரனாகச் சரித்திரத்தில் இடம் பெறலாம். பிந்திய நிலையை அடைய நான் விரும்பவில்லை. இது உமக்குப் புரியாது க்ஷத்ரபரே! ஆகையால் போர் வரும்போது அதற்குச் சித்தமாக இரும்… இன்னும் இரண்டு நாட்களில் அமாவாசை வருகிறது. ஆகவே உமக்குப் பதினேழு நாட்கள் இருக்கின்றன. அதற்குள் ஆற்றைக் கடக்கவும் எதிரியைச் சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யும்” என்றும் உத்தரவிட்டான்.

க்ஷத்ரபன் நீண்ட நேரம் சிந்தனை வசப்பட்டுச் சாகர்களின் தலைவன் முன்பே தலை குனிந்து நின்றான். கௌதமிபுத்ரன் தனது பிடியிலிருந்து தப்பிச் சென்றதையும், தப்பிச் செல்ல மகாக்ஷத்ரபன் அனுமதித்ததையும் அவனால் ஜீரணிக்க முடியவில்லை. போரில் தர்மா தர்மங்களைப் பார்ப்பது கெட்டிக்காரத்தனமல்லவென்று உண்மையாகவே நம்பினான்க்ஷத்ரபன். சிந்து நதி தீரத்தில் நடந்த போர்களில் தயை தாட்சண்யம் பார்க்காமல் ஆயிரக்கணக்கானவர் களைக் கொன்ற க்ஷத்ரபனுக்கு, மன்னிப்பு, கருணை முதலிய குணங்களைப் புரிந்து கொள்வது மிகவும் கஷ்டமாயிருந்தது. பல பயங்கரமான போர்களை நடத்தி சாம்ராஜ்யத்தை அமைத்த மகாக்ஷத்ரபனான நாகபாணன் குணம் பெரும் மாறுதலுக்கு உட்பட்டு விட்டதை நினைத்து உள்ளூர பொருமிக் கொண்டு நின்ற க்ஷத்ரபனை நோக்கிய நாகபாணன், “க்ஷத்ரபரே! நான் சிறிது உறங்குகிறேன். நீர் போய்ப் படைகளை நிலப் பாதுகாப்புக்கும் கடல் பாதுகாப்புக்கும் வகுத்து அமைத்து நிறுத்தும், மீண்டும் நாளைக்காலையில் பேசுவோம்” என்று கூறிக் கண்களை மூடினான். க்ஷத்ரபன் அதற்குமேல் அங்கு நிற்கவில்லை. திடீரென்று அவன் மனத்தில் ஒரு யோசனை பளிச்சிடவே அதை நிறைவேற்றத் தீர்மானம் செய்து கொண்டு வெளியே சென்றான்.

அவன் வெளியே சென்றதும் சாக இன மருத்துவர் இரு பணிப் பெண்களுடன் உள்ளே நுழைந்து நாகபாணன் காயங்களைப் பரிசோதித்தார். “ஏற்கனவே காயங்களுக்கு மருத்துவம் நடந்திருக்கிறது. வெறும் களிம்புதானே கேட்டார்கள் என்று நினைத்தேன். கோட்டையில் இன்னொரு மருத்துவர் இருக்கிறாரா?” என்று வியப்புடன் வினவினார் நாகபாணனை நோக்கி.

“இங்கு உங்களுக்குப் போட்டி யாரும் கிடையாது. மருத்துவம் பார்த்தவர் எதிர்க்கரையிலிருந்து வந்தார்” என்றான் நாகபாணன் இதழ்களில் இளநகை கூட்டி.

“இங்கு நானிருக்க அங்கிருந்து மருத்துவரை வரவழைப் பானேன்?” என்று கேட்ட மருத்துவரின் முகத்தில் வருத்தம் தெரிந்தது.

“நான் வரவழைக்கவில்லை. அவராகத்தான் வந்தார்” என்றான் நாகபாணன்.

“நீங்கள் காயமுற்றிருப்பது அவருக்கு எப்படித் தெரியும்?” மருத்துவர் விசாரித்தார்.

“அவர்தான் என்னைத் தூக்கி வந்தார்.”

“உங்களைத் தூக்குவதானால் நல்ல பலசாலியாயிருக்க வேண்டும்.”

“நல்ல பலசாலிதான்.”

“வீரனாகவும் இருக்க வேண்டும்”

“வீரன்தான்.”

“வீரமும் மருத்துவமும் எப்படிச் சேர முடியும்?” என்ற மருத்துவர், “சரி, எப்படியிருந்தாலென்ன? உங்களைப் பிழைக்க வைத்துவிட்டான்” என்றும் சொன்னார். அவர் குரலில் வருத்தம் ஒலித்தது.

“கவலைப்பட வேண்டாம். வெகு சீக்கிரம் உங்கள் மருத்துவத்துக்கு நிரம்ப வேலை இருக்கும்” என்ற நாகபாணன், “பதினேழு நாட்கள் பொறுத்திருங்கள்” என்று கூறினான்.

மருத்துவருக்கு ஏதும் புரியாததால் குழப்பமடைந்தார். “பதினேழுநாட்களில் என்ன விசித்திரம் ஏற்பட்டு விடும்?” என்று கேட்டார் குழப்பத்துடன்.

“போர் நடக்கும். கையிழந்தவர், காலிழந்தவர், எலும்பு முறிந்தவர் இப்படிப் பலவிதமான பேர்கள் தங்களுக்குக் கிடைப்பார்கள். காயமுற்றவர் தொகையும் கணிசமா யிருக்கும். போதும் போதுமென்னும் வரையில் நீங்கள் மருத்துவம் செய்யலாம். குற்றுயிரும் குலை உயிருமாகப் பலர் கிடைப்பார்கள்” என்றான் நாகபாணன்.

அதைக் கேட்ட மருத்துவர் முகத்தில் சந்துஷ்டி நிலவியது. “நன்று நன்று’ என்று மருத்துவர் கொக்கரித்து, “அனை வரையும் நான் கவனித்துக் கொள்கிறேன். அப்புறம் நீங்கள் கவலைப்பட அவசியமிருக்காது” என்று குதூகலித்தார்.

“மருத்துவரே…” என்று மெள்ள அழைத்தான் நாகபாணன்.

“பிரபு!”

“நமது வீரர்கள்!”

“என்னிடம் வந்த பிறகு யாரும் கவலைப்பட அவசியமில்லை.”

“கைகால் முறிந்தவர்களை என்ன செய்வீர்?”

“கைகால் போனவர்கள் இருந்தாலென்ன, போனா லென்ன? இருப்பதால் அவர்களுக்கும் கஷ்டம், நமக்கும் தொல்லை” என்று எரிச்சலுடன் பேசினார் மருத்துவர்.

நாகபாணன் உள்ளூர நகைத்துக் கொண்டான். “இதற்கு முன்பு போர் முனைகளில் இருந்திருக்கிறீர்களா?” என்று வினவினான்.
“அங்கு எனக்கென்ன வேலை?” என்று மருத்துவர் வினவினார்.

“வேறெங்கு வேலை?”

“போர் முனையிலிருந்து தப்பி வந்தவர்களை நான் கவனித்துக் கொள்வேன்.”

“அப்படியா?”

“ஆம். வெகு காயமுற்று வந்தால் இரும்பைப் பழுக்கக் காய்ச்சிக் காயத்தில் சொருகுவேன்.”

இதைக் கேட்ட நாகபாணனே அச்சமுற்று, “ஐயோ!” என்று குரலெழுப்பினான்.

“குருதியை நிறுத்த காயத்திலுள்ள ரத்தக் குழாய்களைத் தீய்த்துவிட வேண்டும். அதற்கு வழி நான் சொன்னதுதான், ரண சிகிச்சையின் முதல் படியே இது தான்” என்று மருத்துவர் விளக்கினார்.

“மருத்துவரே! ஒரு சந்தேகம்” என்றான் நாகபாணன்.

“கேளுங்கள் பிரபு” என்றார் மருத்துவர்.

“மருத்துவரே…!”

“உம்?”

“போரில் இறப்பது நல்லதா, ரணசிகிச்சையில் பிழைப்பது நல்லதா?”

மருத்துவர் நாகபாணன் கட்டிலின் முகப்பில் உட்கார்ந் தார். “பிரபு! எனது சொந்தக் கருத்தைச் சொல்லட்டுமா?” என்று மெதுவான குரலில் ரகசியம் பேசுபவர் போல் கேட்டார்.

நாகபாணன் கண்கள் நகைத்தன. “சொல்லுங்கள் மருத்துவரே” என்று உதடுகள் பேசின.

மருத்துவர் நாகபாணனை நோக்கிக் குனிந்து, “பிரபு! ரண சிகிச்சையில் பிழைப்பதை விட போரில் இறந்து விடுவதே மேல். நானாயிருந்தால் அந்தக் காய்ச்சின இரும்புக்குப் பலியாவதை விட தற்கொலை செய்து கொள்வேன். இதையெல்லாம் உத்தேசித்துதான் நமது பெரியவர்கள் வீர சொர்க்கமடைய, அதாவது போரில் மடிந்துவிட, உபதேசம் செய்திருக்கிறார்கள்” என்று மருத்துவ இம்சையையும், வீர தத்துவத்தையும் இணைத்து விளக்கம் கொடுத்தார்.

நாகபாணன் அத்துடன் உரையாடலை முடித்து, “மருத்துவரே! எது எப்படியிருந்தாலும் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவம் பார்ப்பது நமது கடமை. அதற்கு வேண்டிய இட வசதி மருந்து வசதி சகலத்தையும் செய்து கொள்ளுங்கள்” என்று உத்தரவிட்டான்.

மகாக்ஷத்ரபனுக்குத் தலைவணங்கி வெளியே சென்ற மருத்துவர், போர் என்றால் சண்டையில் பிராணன் போகாதவர்களெல்லாம் தனது பிராணனை வாங்குவார்க ளென்பதை அறிந்திருந்ததால் அதற்காக ஏற்பாடுகளைப் பெரிய அளவில் செய்யத் தமது மருத்துவத்தைக் கோட்டையின் பெரிய மாளிகையொன்றில் வைத்துக் கொள்ள முடிவு செய்தார். அதைப்பற்றி க்ஷத்ரபரைச் சந்தித்துப் பேசவும் செய்தார். மகாக்ஷத்ரபர் சொன்னதைப் பற்றி விளக்கி, “நமது தரப்பில் காயப்படுபவர் கணிசமாக இருக்குமோ?” என்று வினவினார்.

“யார் சொன்னது அப்படி?” என்று சீறினான் க்ஷத்ரபன்.

”யாரும் சொல்லவில்லை, சிகிச்சைக்கு மருந்து சித்தம் செய்ய வேண்டுமே என்பதற்காகக் கேட்டேன்” என்றார்.

“அதிகமாகக் காயமடைந்தவர் இருக்க மாட்டார்கள்” என்றான் க்ஷத்ரபன்.

“ஏன்? போய்விடுபவர் அதிகமாக இருக்குமோ?” என்று வினவினார் மருத்துவர்.

“அதைப் பற்றி உமக்கென்ன கவலை?” என்று சீறினான் க்ஷத்ரபன்.

“போகிறவர்களைப் பற்றி யாருக்குத்தான் கவலை? இருந்தால்தான் தொல்லை” என்று அலுத்துக் கொண்ட மருத்துவர், “எதற்கும் மருந்துகளையும் மருத்துவ மனையையும் நான் சித்தப்படுத்துகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.

அவர் சென்றதை வெறுப்புடன் பார்த்த க்ஷத்ரபன் ஆற்றங் கரையை நோக்கி நடந்தான். அங்கிருந்த படகொன்றை எடுத்துக்கொண்டு எதிர்க்கரைக்குச் சென்று கரையை அடைந்ததும் முந்திய இரவில் வந்து கடற்கரையை அடைந்த மலைப்பகுதியில் பாசறை அமைத்திருந்த படைகளை நோக்கிச் சென்றான். அங்கு படைகள் தங்கியிருந்த இடத்தில் படைகளைக் காணோம். பாசறை இருந்த இடமும் சூன்யமாயிருந்தது. அங்கு நின்ற வண்ணமே சுற்றுமுற்றும் நோக்கினான் க்ஷத்ரபன். எங்கும் யாரும் தென்படவில்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் எட்ட இருந்த மலைச்சரிவில் இரு புரவிகள் வேகமாக வந்து மரங்களின் மறைவில் நின்றன. அதிலிருந்து குதித்த இருவர் யாரென்று தெரியாததால் மெள்ள அவர்கள் இருந்த மறை விடத்தை நோக்கிச் சென்றான். ஒரு புதரின் மறுபுறத்திலிருந்து இருவர் பேசும் குரல் கேட்டது. “ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுக்கக் கூடாதா?” என்று ஒலித்தது சித்தரஞ்சனியின் குரல்.

“இன்னும் பதினேழு நாட்கள் இருக்கின்றன. அத்தனை நாள் எப்படிப் பொறுக்க முடியும்?” என்று ஒலித்தது சாதவாகனன் குரல்.

அவர்களுக்குத்தானிருப்பதை அறிவுறுத்த ஓர் அடி எடுத்து வைத்த க்ஷத்ரபன் சட்டென்று நின்று விட்டான். அதே சமயத்தில் மரக்கலங்களை இயக்கி வந்த யவனன் கடல் மணலில் நடந்து வந்துகொண்டிருந்தான். என்னதான் சாதவாகனனிடம் தனக்குப் பகையிருந்தாலும் தனது வளர்ப்பு மகளும் ஆபத்திலிருக்கிறாள் என்ற நினைப்பால் சட்டென்று இன்னொரு மறைவுக்குச் சென்றான் க்ஷத்ரபன். தன்னை எதிர்நோக்கி இருக்கும் ஆபத்தை உணராமல் பாழுங்கிணற்றை நோக்கி வரும் யானைபோல் நடந்து மதோன்மத்தமாக நடந்து வந்தான் யவனன்.

Previous articleChittaranjani Ch29 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch31 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here