Home Chittaranjani Chittaranjani Ch31 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch31 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

76
0
Chittaranjani Ch31 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch31 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch31 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 31 சபலமும், சபதமும்!

Chittaranjani Ch31 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

ஸஹ்யாத்ரி மலைத் தொடரின் தாபோல் மலைப் பகுதி மாலைக் கதிரவனின் மஞ்சள் கதிர்களால் ஊடுருவப்பட்டு மயக்கமான நிலையை சிருஷ்டித்திருந்தது. காட்டுமர இலைகளின் இடுக்குகளில் புகுந்த கதிர்கள் சிலை பாறைகளுக்கும் மரத்தின் புஷ்பங்களுக்கும் தனி மெருகைப் பூசியதால் புஷ்பங்களும் பாறைகளும் தங்கள் இயற்கை வண்ணங்களை லேசாக மாற்றிக் கொண்டாலும் அந்த மாற்றமே அவற்றுக்குத் தனிச் சிறப்பை அளித்திருந்தது. கடலின் அலைகள்கூட அந்த மஞ்சள் நிறக் கதிர்களை ஏற்று நீல நிறத்தை லேசாக மாற்றிக் கொண்டதல்லாமல் தரையில் மோதிய தங்கள் திரைகளையும் முழு வெளுப்பிலிருந்து மஞ்சளும் வெளுப்பும் கலந்த புது மெருகைக் கூட்டியதால், மஞ்சள் பூசி அரைவாசி குளித்துவிட்ட பருவ மங்கையின் உடல் நிறத்தைப் பெற்றிருந்தன அலை ஓரத்திரைகள்.

இந்தச் சமயத்தில் வெகுவேகமாகப் புரவிகளில் வந்திறங்கிய சித்தரஞ்சனியும் கௌதமிபுத்ரனும் நன்றாக மறைக்கப்பட்டிருந்த ஒரு புதரின் அருகாமைக்கு வந்ததும் சாதவாகன வாலிபன் அந்தச் சித்தினியைத் தனது வலிய கைகளால் மிக முரட்டுத்தனமாகக் கட்டினான். அந்த முரட்டுத் தழுவலால் தனது உடல் வலியெடுத்த போதிலும் அந்த வலியும் தனக்குத் தேவையாயிருப்பதை உணர்ந்த சித்தரஞ்சனி. “சற்றுப் பொறுங்கள்” என்று கூறி அவன் கைகளிலிருந்து விலக முயல்வதுபோல் பாசாங்கு செய்தாள்.

அந்தப் பாசாங்கை உணரவே செய்த சாதவாகனன், “எதற்காகப் பொறுக்க வேண்டும்?” என்று கேட்டு அவள் கழுத்தில் தனது உதடுகளைப் புதைத்தான்.

அவள் உடலெங்கும் விவரிக்க இயலாத உணர்ச்சிகள் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்றதாலும், கௌதமி புத்ரன் கைகள் மேலும் அவள் உடலைப் பல இடங்களில் ஆராய்ச்சி செய்யத் தொடங்கியதாலும் அவள் உணர்ச்சி வேகத்தில் திணறிக்கொண்டே, “ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுக்கக் கூடாதா?” என்று மெதுவாகக் கேட்டாள். அப்படிக் கேட்டாளேயொழிய அவனை ஆறப் பொறுக்க விடாமல், தனது இடது கையால் தனது தோளில் புதைந்து கிடந்த அவன் தலையின் குழல்களைக் கோதினாள். குழலின் ஒரு பகுதியைத் தூக்கி அவன் பின் கழுத்தில் தனது இதழ்களையும் ஊன்றினாள்.

அந்த நிலையில் முகத்தை அவள் கழுத்தில் புரட்டிய அந்த வாலிபன், “பொறுக்கவா சொல்கிறாய் சித்தரஞ்சனி!” என்று மெதுவாகக் கேட்டான். காதுக்கருகில் ஒலித்த அந்தச் சொற்கள் அவள் வேகத்தைத் தூண்டவே செய்ததால் அவள் பதிலேதும் சொன்னாளில்லை. அவள் கைகள் அவன் கழுத்தை இறுக வளைத்தன. பிறகு தலையைப் பிடித்துக் கழுத்திலிருந்து கீழே இழுத்தன வேகமாக. இப்படி மார்புக்கருகில் இழுக்கப்பட்ட அவன் தலை அவள் மீது புரண்டது. “சித்தரஞ்சனி! சித்தரஞ்சனி!” என்று உதடுகள் முணுமுணுத்தன.

“என்ன?” என்ற ஒற்றைச் சொல் மந்திரத்தை மோகனா ஸ்திரமாக வீசினாள் சித்தரஞ்சனி.

அந்தக் கேள்வியே அழைப்பு என்பதைப் புரிந்து கொண்ட கௌதமிபுத்ரன், “நமக்குத்தான்…” என்று ஏதோ துவங்கினான்.

“உம்?” தழுதழுத்த குரலில் கேட்டாள் அவள்.

“திருமணம் ஆகிவிட்டதே?” என்றான் அவன் ஏதோ புதிய விஷயத்தைச் சொல்பவன்போல்.

“ஆம்.”

“ஆகவே… ஏன்…”

“என்ன … ஏன்?”

“காக்க வேண்டும்?”

இதற்கு அவள் பதில் சொல்லவில்லை. அவளை அப்படியே கௌதமிபுத்ரன் கைகளில் தூக்கிக் கொண்டான். நிதானமற்ற புத்தியுடன் அவளைப் பாறையில் கிடத்தி அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.

“இன்னும் வெளிச்சம் இருக்கிறது” என்றாள் அவள் வேறு திக்கில் பார்வையைச் செலுத்தி.

அவன் அவள் முகத்தைத் தன்னை நோக்கித் திரும்பி, “இருந்தாலென்ன?” என்று கேட்டான்.

அவள் நகைத்தாள். “இது சரியல்ல” என்றாள் மெதுவாக.

“எது சரியல்ல?” என்று முரட்டுத்தனமாய்க் கேட்ட சாதவாகனன் அவள் கச்சையைக் சிறிது தளர்த்த முயன்றான்.

அவள் அவனது கைகளை இறுகப் பிடித்தாள். “இங்கு யாராவது வரலாம்” என்று சுட்டிக்காட்டினாள்.

“யாரும் வரமாட்டார்கள்.”

“ஏன்?”

“நாகபாணன் தனது படைகளை மலையின் வடபுறத்துக்கு அனுப்பிவிட்டான்.”

இதைக் கேட்ட சித்தரஞ்சனி நகைத்தாள். “உங்களுக்கு நன்றாக உதவியிருக்கிறார் நாகபாணர்!” என்று ஏளனக் குரலில் சொன்னாள் சித்தரஞ்சனி நகைப்பின் ஊடே.

இந்த உரையாடலைப் புதரின் மறுபுறத்திலிருந்து கேட்ட க்ஷத்ரபன் திகைத்தான். தங்கள் படைகள் எதுவும் அங்கில்லாத காரணத்தைப் புரிந்து கொண்டதால், “நாகபாணர் இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை?” என்றும் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். அதனால் பக்கத்திலிருந்த செடியைச் சற்று அழுத்திப் பிடித்ததால் அதன் கிளையொன்று பட்டென்று உடையவே இன்னொரு பக்கத்திலிருந்த சித்தரஞ்சனி, “அதைக் கேட்டீர்களா?” என்று வினவி எழுந்திருக்கவும் முயன்றாள்.

அவளை மெதுவாக எழுந்திருக்கவிட்ட சாதவாகனன் தானும் மெதுவாக எழுந்திருந்து புதரைச் சற்றே விலக்கிப் பார்த்தான். கடற்கரையில் யவனன் வேகமாக நடந்து கொண்டிருப்பதைக் கவனித்ததும், “நாகபாணனுக்குப் புது மரக்கலங்களைக் கொண்டு வந்த யவனன் வருகின்றான்” என்று சித்தரஞ்சனியிடம் சுட்டிக்காட்டினான்.

“இவனைத்தானே நீங்கள் கட்டிப் போட்டு இவன் உடையில் மகாக்ஷத்ரபரின் மரக்கலம் சென்றீர்கள்?” என்று கேட்டாள் சித்தரஞ்சனி.

“ஆம். இவனேதான்.”

“எப்படித்தப்பினான்?”

“நானே அவனைத் தப்பவைத்தேன்.”

“ஏன்?”

“அசந்திருப்பவனுடன் போரிடுவதும் கொல்வதும் அதர்மம் என்ற காரணத்தால்.”

“நீங்கள் நாகபாணரிடம் சிக்கியிருந்தால் என்ன ஆகும் தெரியுமா?” என்று சித்தரஞ்சனி வினவினாள்.

“தெரியும். இன்று என்னைத் தப்ப வைப்பதே நாகபாணர்தான்” என்றான் சாதவாகனன்.

இதைக் கேட்ட சித்தரஞ்சனி பிரமை பிடித்த கண்களைச் சாதவாகனன் மீது திருப்பினாள். நாகபாணன் அப்படி யாருக்கும் தயை காட்டுபவன் அல்லவென்பதை உணர்ந்திருந்த சிவரஞ்சனிக்குச்சாதவாகனன் சொன்னதை நம்பவே முடியவில்லை. அவள் கண்களிலிருந்த அவநம்பிக்கையைக் காணவே செய்த சாதவாகனன், ”சித்தரஞ்சனி! எந்த வீரனிடத்திலும் நல்ல குணம் உண்டு. மனித சிருஷ்டியே நல்லதும் பொல்லாததும் கலந்ததுதான். நாகபாணன் கொடுமைகள் பல இழைக்கலாம். ஆனால் மகாவீரன். சிக்கிய எதிரியை அழிக்க அவன் இஷ்டப்படவில்லை. ஆகவே என்னைப் போக விட்டான்” என்று நடந்த விவரங்களைச் சொன்னான்.

அவன் விவரித்ததைக் கேட்ட சித்தரஞ்சனி பெரும் வியப்புக்குள்ளானாள். “சரி, வாருங்கள். நாம் போவோம்” என்று தனது புரவியை நோக்கி நடந்தாள்.

“இரு போகலாம். அதோ வரும் யவனனுடன் பேசி விட்டு வருகிறேன்” என்றான் சாதவாகனன்.

“என்ன பேசப் போகிறீர்கள்?” என்று சித்தரஞ்சனி கேட்டாள்.

“அவனைத் திருப்பி மரக்கலத்துக்கு அனுப்பி விடுகிறேன்.”

“ஏன்?”

“நாகபாணர் என்னுடன் தர்மப் போர் நிகழ்த்த விரும்புகிறார். அதற்கு நான் இடைஞ்சலாக இருக்கக்கூடாது. அவருடைய தலைவர்களை அழித்து அவரை பலவீனப் படுத்தக் கூடாது” என்று அவன் சொல்லிக் கொண்டேயிருக் கையில் புதரை விலக்கிக் கொண்டு, க்ஷத்ரபன் அவர்கள் முன்பு தோன்றினான்.

“க்ஷத்ரபா!” என்று வியப்புடன் கேட்டான் சாதவாகனன்.

“தந்தையா!” என்றாள் சித்தரஞ்சனி.

ஆம் என்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்த க்ஷத்ரபன், “சாதவாகனரே! மகாக்ஷத்ரபருக்குச் சமதையான எதிரி நீர். நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் அதர்மமாக அழிக்க இஷ்டப்படவில்லை. நீங்கள் சொல்லுங்கள். நான் யவனனை அழைத்துச் செல்கிறேன்” என்று கூறிக்கொண்டேயிருக் கையில் மலைச்சரிவு கடல் மணலைத் தொடுமிடத்தில் ஒரு விபரீதம் நடந்து கொண்டிருந்தது. எந்த எதிர்பார்ப்பையும் எதிர்பார்க்காமல் மதோன்மத்தனாய் நடந்து கொண்டு வந்த யவனனை அக்கம்பக்கங்களிலிருந்து நான்கு வீரர்கள் தாக்கினார்கள். எதிர்பாராத அந்தத் தாக்குதலால் யவனன் ஒரு விநாடி திகைத்தானானாலும், அடுத்த விநாடி தன்மீது பாய்ந்த வீரர்களை உதறிவிட்டு, கையில் வாளை உருவிக் கொண்டு நாலைந்து வீரர்களையும் ஒருவனாகச் சமாளிக்க முயன்றான். சிறிது நேரத்தில் இரண்டு மூன்று வீரர்கள் காயமடைந்த பின்னும் சண்டை ஓயவில்லை. யவனன் தனது வீரர்கள் அந்த இடத்தை வீட்டு அகற்றப்பட்டார்க ளென்பதை அறியாததால், “யாரங்கே! வாருங்கள். இந்தக் கொசுக்களை அடித்துப் போடுங்கள்” என்று கூவினான். அவன் சொற்களைக் கேட்டதுபோல் பத்துப் பதினைந்து வீரர்கள் வரத்தான் செய்தார்கள். அவர்கள் தலைவனும் பெரிய ஒரு புரவியை மலைச்சரிவில் துரத்தி வந்தான். யவனன் இருந்த இடத்தை அணுகியதும் பெரிதாக நகைத்த தலைவன், ‘யவனர் தலைவனே! வாளைக் கீழே போட்டுவிடு” என்று உத்தர விட்டான்.

வந்தவீரர்களை நோக்கித் தனது கண்களைச் சுழல விட்ட யவனன் தனது வீரர்கள் அல்லவென்பதைப் புரிந்து கொண்டதால் தலைவனை நோக்கி, “காஷ்டானனா! இவர்கள் யார்?” என்று வினவினான்.

“எனது வீரர்கள்.”

“அப்படியானால் நமது வீரர்கள் தானே?”

“இல்லை.”

“இல்லையா?” யவனன் குரலில் பிரமிப்பு உச்ச ஸ்தாயியிலிருந்தது.

“இல்லை!”

“நீ யார்?”

“நான் சாதவாகனர் படைகளுக்குத் தலைவன்.”

“கட்சி மாறிவிட்டாயா?”

”ஆம். நல்ல கட்சிக்கு மாறிவிட்டேன்” என்ற காஷ்டானன் தனது வீரர்களை நோக்கி, “ஏன் நிற்கிறீர்கள்? இவனைப் பிடித்துக் கட்டுங்கள்” என்று கூவினான்.

அடுத்த உத்தரவுக்கு வீரர்கள் காத்திருக்கவில்லை. யவனன் மீது பாய்ந்து அவனைக் கீழே தள்ளினார்கள். காஷ்டானன் கீழே விழுந்து கிடந்த எதிரி மீது தனது கையிலிருந்த பெரிய வேலை உயர்த்தினான்.

யவனன் தனது உயிர் போய்விட்டது என்று எண்ணிய சமயத்திலும் பயங்கரமாக நகைத்தான். அந்த நகைப்பை அடுத்துக் காஷ்டானன் கையிலிருந்த ஈட்டி பலமான ஒரு வாளால் அகற்றப்பட்டது. அதை அகற்றியவண்ணம் புரவியில் அமர்ந்திருந்த சாதவாகனன். “காஷ்டானனா! தனிப்பட்ட எதிரியைக் கொல்வது அதர்மம். அவனை விட்டு விடு” என்று கூறிவிட்டு க்ஷத்ரபனை நோக்கி, க்ஷத்ரபரே! யவனனை அவன் படைகளிருக்குமிடம் அழைத்துச் செல்லுங்கள். பௌர்ணமியன்று சந்திப்போம்” என்று கூறி விட்டுத் தனது புரவியைத் திருப்பிக்கொண்டு சித்தரஞ்சனி பின்தொடர மலைக்காட்டுக்குள் ஏறிச் சென்றான். வேண்டாவெறுப்பாக க்ஷத்ரபனையும் யவனனையும் விட்டுத் தனது வீரர்களுடன் திரும்பினான் காஷ்டானன்.

அவர்கள் அனைவரும் சென்றபிறகு தனிமையில் விடப் பட்டக்ஷத்ரபனும் யவனனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றனர். “இந்தப் போர் முறை எனக்குப் புரியவில்லை” என்றான் யவனன்.

“உமக்குப் புரியாது, இது பாரதத்தின் போர்முறை” என்றான் க்ஷத்ரபன். மதிப்பு நிறைந்த கண்களுடன் மலை மீது சென்று கொண்டிருந்த சாதவாகனனைப் பார்த்தான். யவனன் பிரமித்து நின்றான்.

இதற்குள் இருளும் நன்றாக மூண்டுவிடவே சித்த ரஞ்சனியின் புரவியோடு தனது புரவியை இணைத்த சாதவாகனன், “சித்தரஞ்சனி! உன் தகப்பன் சமயத்தில் வந்து சேர்ந்தான்” என்றான் எரிச்சலுடன்.

“உங்களுக்கொரு உதவி புரிந்தார்.”

“என்ன உதவி?”

“உங்கள் தாயிடம் அனுமதி பெற்ற பிறகுதான் என்னை அடைவதாகச் சபதம் செய்திருப்பதாகச் சொன்னீர் களல்லவா?”

“ஆம் சொன்னேன்.”

“அதை மீற இருந்தீர்களா…?”

“உம்!”

“என் தந்தை வந்து உங்கள் சபதத்தைக் காப்பாற்றினார்” என்ற சித்தரஞ்சனி நகைத்தாள். அடுத்த விநாடி புரவியிலிருந்து இரு வலிய கைகளால் தூக்கப்பட்ட அந்த வனதேவதை சாதவாகனன் புரவி மீது சாதவாகனனுக்கு முன்பு உட்கார்ந்திருந்தாள். புரவி தனது முழு வேகத்தைக் காட்டியது. புரவி மட்டுமல்ல, அவளுக்குப் பின்னால் அவள் உடலுடன் ஒட்டி உட்கார்ந்திருந்த சாதவாகனனும் ஒரு கையில் கடிவாளத்தை ஏந்திய வண்ணம் இன்னொரு கையால் அவளை இறுக்கித் தனது வேகத்தையும் காட்டினான். புரவி வாயு வேகத்துடன் மலைக் காட்டினூடே விரைந்தது. சாதவாகனன் உணர்ச்சிகளும் எல்லை மீறி விரைந்து கொண்டிருந்தன. அவன் சபலம் சபதத்தைச் சுக்குநூறாக உடைத்துக் கொண்டிருந்தது.

Previous articleChittaranjani Ch30 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch32 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here