Home Chittaranjani Chittaranjani Ch33 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch33 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

98
0
Chittaranjani Ch33 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch33 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch33 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 33 வெற்றி மணி

Chittaranjani Ch33 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனியின் அழகிய உடல் மீது தனது போர்த் திட்டத்தை விளக்கிக் காட்டிய கௌதமிபுத்ரன் தனது கைவிரலால் அவளது கழுத்திலிருந்து வயிறுவரை ஒரு கோட்டை இழுத்துக் காட்டி, “இப்படி ஒரு சிறு படையை மலைமீதிருந்து கீழே இறக்கப் பார்க்கிறான் நாகபாணன். இன்னொரு படை உன் காலிலிருந்து அதாவது கடற்புறத் திலிருந்து மேலே ஏறிவரும். இன்னொரு பகுதி உன் இடையி லிருந்து குறுக்கே வந்து வயிறு இருக்கும் பகுதியுடன் இணையும். இந்த மூன்று பகுதிகளுக்குள் நம்மை சிக்க வைப்பது நாகபாணன் திட்டம்’ என்று கூறினான்.

அவன் ஆள்காட்டி விரல் தனது உடலில் பல பகுதிகளில் பட்டதால் சிறிது உணர்ச்சி வசப்பட்டாலும் அடுத்து வரும் போரிலிருந்த சிரத்தையின் காரணமாக, “நாகபாணன் மனத்திலிருக்கும் திட்டம் உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று வினவினாள்.

“நாகபாணனிடம் நம்மைவிட படைபலம் அதிக மிருக்கும். ஏற்கனவேயுள்ள படையைத் தவிர மரக் கலங்களில் புதுப்படைகளை வரவழைத்திருக்கிறான். அவற்றை மலைச்சரிவின் வடக்குப் பகுதியில் நிறுத்தியிருக் கிறான். இன்னொரு பகுதி கோட்டையிலிருக்கிறது. கோட்டைப் படைகள் நேராக நதிக்குக் குறுக்கில் வந்தால் மலைவாசிகள் அம்பும் வேலும் எறிந்து கொன்றுவிடுவார்கள். ஆகவே அப்படை சிறிது சிறிதாக இரவு நேரத்தில் ஆற்றின் ஓட்டத்தோடு ஓட்டமாக முகத்துவாரத்துக்கு அனுப்பப்படும். அங்கிருந்து பல பிரிவுகளாக மலைமீது ஏறிவரும். அப்பொழுது வடக்குப் பகுதியிலிருக்கும் யவனர் படை மலை மார்க்கத்தில் குறுக்கே வந்து இணையும், அதற்கு நடுவில் நாம் சிக்கினால் இருபக்கங்களிலும் கத்தரிக்கப் படுவோம். அதே சமயத்தில் நாகபாணன் ஒரு சிறு படையை மலை மீது நாம் அறியாமல் பின்புறமாக ஏற்றி உச்சியிலிருந்து இறக்கி பின்புறமாகத் தாக்குவான். அனுபவசாலியான ஒரு படைத்தலைவன் செய்யக்கூடியது இதுதான்” என்று எதிரியின் திட்டத்தை எடுத்து விளக்கினான்.

இதைக் கேட்ட சித்தரஞ்சனி பிரமித்தாள். சிறிதும் அப்பழுக்கில்லாத இந்தத்திட்டத்தை எதிர்ப்பதும் தடுப்பதும் அத்தனை சுலபமல்ல வென்றும் நினைத்தாள். அதனால் கேட்டாள், “இந்தத் தாக்குதலை நாம் எப்படிச் சமாளிப்பது?” என்று.

“எதிரி எதிர்பார்ப்பதை நாம் செய்யக்கூடாது. அவன் முற்றும் எதிர்பாராத விதத்தில் அவன் படைகளை நாம் சமாளிக்க வேண்டும்” என்றான் சாதவாகனன்.

“எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள்?” என்று வினவினாள் சித்தரஞ்சனி. அவள் குரலில் கவலை பெரிதும் ஒலித்தது.

சாதவாகனன் அவள் கவலையைக் கண்டு புன்முறுவல் செய்தான். “சித்தரஞ்சனி: என்னிடம் உனக்கு நம்பிக்கை யில்லை போல் தெரிகிறது” என்றான் புன்முறுவலின் ஊடே.

“எதிரியின் படை பலம்…” என்று நீட்டினாள் சித்தரஞ்சனி.

“அதிகம்” நகைப்பொலி தோன்ற பதில் சொன்னான் சாதவாகனன்.

“அதனால்தான் கவலையாயிருக்கிறது.”

“சித்தரஞ்சனி! படைபலம் மாத்திரம் போர்களில் வெற்றியளிப்பதில்லை. புத்தி பலமும் வேண்டும். அதற்கு இங்கு குறைவில்லை.”

அவன் ஏதோ தற்பெருமை பேசுகிறான் என்று நினைத்த சித்தரஞ்சனி அன்று அவன் அவளைத் தழுவிய போது அவனை இரும்புப் பிடியாகத் தழுவினாள். அன்றிரவில் அடிக்கடி பெருமூச்சும் விட்டாள். மறுநாள் முதற்கொண்டு அவன் காட்டிய அலட்சியமும் அவள் கவலையைப் பன்மடங்கு அதிகப்படுத்தியதால் வேதனை நிரம்பிய உள்ளத்துடன் நாட்களைக் கழித்தாள்.

மறுநாள் காலையிலிருந்து படையெடுப்பைப்பற்றி சாதவாகனன் அடியோடு மறந்துவிட்டதுபோல் தோன்றியது அவளுக்கு. மறுநாட்காலை எழுந்து நீராட்டத்தை முடித்துக் கொண்ட சாதவாகனன் பூஜாரிக்குச் சொல்லியனுப்பி அவருடன் ரகசியமாகப் பேசினான். அன்று முதல் தாபிலே சுவரருக்கு அபிஷேக ஆராதனைகள் தடபுடலாக நடந்தன. சாதவாகனன் உத்தரவுப்படி காஷ்டானன் ஆலயமணியைப் பெரிதாக அடித்தான். சண்டிகா தேவிக்கும் பூஜைபுனஸ் காரங்கள் அமர்க்களமாக நடந்தன. இதையெல்லாம் கவனித்த நாகபாணன் ஒற்றர்கள் விஷயத்தை நாகபாணனுக்குச் சொல்ல, “சாதவாகனன் தெய்வ பலத்தால் நம்மை முறியடிக்கப் பார்க்கிறான் போலிருக்கிறது!” என்று ஏளனமாகக் கூறினான்.
எப்படியும் இந்தப் பூஜைகள் இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்காதென்றும் படை அணிவகுப்பு நடக்குமென்று நினைத்த நாகபாணன் ஏமாற்றமே அடைந்தான்.

நாள் செல்லச் செல்ல பூஜை மணிதான் அதிகமாகக் கேட்டதேயொழிய போர்ச் சங்குகளோ தாரைகளோ ஒலிக்கவில்லை. இரவிலும் தாபிலேசுவரர் கோவிலுக்கருகில் பூர்ண நிம்மதி நிலவியதை கவனித்த நாகபாணன், ‘போர் நடக்குமா? சாதவாகனன் சித்தரஞ்சனியை அழைத்துக் கொண்டு ஓடிவிடுவானா?’ என்று சந்தேகமும் கொண்டான். ‘சே சே! ஒரு நாளும் அவன் ஓடமாட்டான். மகாவீரன். தன்னந்தனியாக இங்கு வந்தவன்’ என்று சாதவாகனனுக்கு அனுகூலமாக சமாதானமும் சொல்லிக் கொண்டான். இருப்பினும் சாதவாகனன் போக்கு அவனுக்குப் புரியாத புதிராகவே இருந்தது.

அவனுக்கு மட்டுமல்ல. அவனது படைவீரரும் ஏதும் புரியாமல் திண்டாடினார்கள். சாதவாகனன் அடிக்கடி மலைக்குப் பின்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது படைப் பிரிவுக்குச் சென்று அங்கிருந்த தலைவர்களுடன் அதிக நேரத்தைக் கழித்து வந்தான். சில வேளைகளில் சித்தரஞ் சனியையும் அழைத்துச் சென்று, “நீ இந்தப் படைகளுக்குத் தலைவியானதால் இவர்களை நடத்துவது உன் பொறுப்பு” என்று கூறினான்.

“படைகளை நடத்தி எனக்குப் பழக்கமில்லையே” என்றாள் சித்தரஞ்சனி.

“பௌர்ணமியன்று போர் துவக்கத் திட்டமிட்டிருக் கிறான் நாகபாணன். அன்று நள்ளிரவில் நீ பழையபடி பிசாசாகிவிடு. பழைய சப்த ஸ்வர ராகத்தை இறைந்து பாடு. மும்முறை பாடு. அது முடிந்ததும் உனது புரவியில் ஏறித் தாபிலேசுவரர் கோவிலுக்கு வந்து கதவை மூடித்தாளிட்டுக் கொள்” என்று கூறினான்.

அவன் போக்கு அவளுக்கு அடியோடு புரியவில்லை யென்றாலும் காஷ்டானன் மந்த புத்திக்கு அது விளங்கியது. காஷ்டானனை மறுநாள் சந்தித்து, “தளபதி! நமது படைகளை நான்காகப் பிரித்துவிடு. எதிரி படைகள் வரும் போது அவை நான்கு பிரிவுகளாக எதிரியைத் துண்டிக்கட்டும். நான் ஒரு சிறு பிரிவுடன் தாபிலேசுவரர் கோவிலுக்கு அருகில் இருப்பேன். நான் சங்கு எடுத்து ஊதும்போது பொழுது புலரும். போரும் முடிந்துவிடும்” என்று தனது திட்டத்தைத் தெரியப்படுத்தினான்.

பௌர்ணமி தினமும் நெருங்கிக் கொண்டிருந்தது. கோட்டைப்பகுதியிலும் கடற்பகுதியிலும் எதிரி நடமாட்டம் அதிகமாயிருந்தது. எதிரி வீரர்கள் அணிவகுத்து நடந்தார்கள். வீரர்களுடன் கூடிய படகுகள் நதியின் முகத்துவாரத்துக்கும் மரக்கலங்களுக்கும் போய் போய் வந்து கொண்டிருந்தன. பௌர்ணமி தினமும் வந்தது. முதல் ஜாம முடிவிலேயே எதிரியின் படகுகள் முகத்துவாரத்துக்குத் துரிதமாக வரத் தொடங்கின. அவற்றிலிருந்து இறங்கிய வீரர்கள் மலையடிவாரத்தில் மறைந்தனர். வடக்குப் பகுதியிலிருந்த யவனர் படை அணிவகுத்துப் பெரும் சுவர்போல் சித்தமாக நின்றிருந்தது. இரண்டாவது ஜாமம் முடிந்து நடுநிசியும் வந்தது. பூர்ண சந்திரன் ஜகஜ்ஜோதியாக வானவீதியிலும் வலம் வரத் தொடங்கினான். மலையிலும் கடலிலும் அவன் வெண்மை ஒளி படர்ந்தாலும் அன்று என்னமோ ரம்மியமான சூழ்நிலைக்குப் பதில் ஒரு பயங்கரத்தையே சிருஷ்டித்திருக்கிறது. அந்த சமயத்தில் சித்தரஞ்சனியின் மென்மையான குரல் இசைக்கத் தொடங்கிவரவர அதன் ஒலி வன்மை பெற்று மலைப்பகுதி முழுவதும் ரீங்காரம் செய்தது.

அந்த ரீங்காரம் விளைவித்ததையொட்டி இரு சங்கங்கள் ஒலிக்க நாகபாணன் படை மலையடிவாரத்திலிருந்து க்ஷத்ரபன் தலைமையில் மலைமீது ஏறத் துவங்கியது. பாதிப் புரவிப்படையும் பாதி காலாட்களாகவுள்ள படையை க்ஷத்ரபன் நடத்திச் சென்றான். முதலில் காலாட்களை ஏறச் சொல்ல அவர்களுக்குப் பின்புறத்தில் புரவிப் படையின் வேலெறிவோரைப் பாதுகாப்பாக ஏவினான். அதே சமயத்தில் மலையின் வடக்குப் பகுதியிலுள்ளயவனர் படை யவனன் தலைமையில் குறுக்கே புகுந்தது. சற்று தூரம் எந்த இடைஞ்சலின்றி இரு படைகளும் முன்னேறின. இரண்டும் சந்திக்க சிறிது தூரமே இருந்த சமயத்தில் சித்தரஞ்சனி மூன்றாம் முறை தனது குரலைப் பெரிதாக உரத்திப் பாடினாள்.

அந்தப் பாட்டு முடியுமுன்பாகவே எங்கிருந்தோபடைகள் மலைமீதிருந்து இறங்கும் ஒலி கேட்கவே யவனன் தனது படையைச் சிறிது நிறுத்தினான். நிறுத்தி அவன் ஒழுங்காக அணிவகுப்பதற்குள்ளாகவே சாதவாகனின் படை நான்காகப் பிரிந்து அவன் படையை மூன்று இடங்களில் மூன்று பகுதிகள் ஊடுருவ, ஒரு பகுதி மட்டும் மலையேறி வந்த க்ஷத்ரபன் படைமீது பாய்ந்தது.

மலைமீதிருந்து வந்த புரவிப் படைகளின் வேகத்தாலும் உக்கிரத்தாலும், இத்தகைய தாக்குதலை எதிர்பாராததாலும் யவனன் படை சிறிது திணறினாலும் சமாளித்துக் கொண்டு திரும்பித் தாக்கியது. யவன வீரர்களில் பெரும் கேடயங் களும் கனமான வாட்களும் ஓரளவு சேதத்தை விளைவித் தாலும் சாதவாகனர்களின் வேல்களுக்கும் வில்லவர்கள் தொடுத்த கணைகளுக்கு இலக்கானதால் யவனர்களைக் கலைத்துப் பிரித்து நாசமாக்கத் தொடங்கின. பிரிக்கப்பட்ட படை திரும்பவும் சேர முடியாததால் தனித்தனியே போரிட்டன. மலைமீது ஏறிவந்த காஷ்டானன் படையும் தங்கள் மீது திடீரெனப் பாய்ந்த காஷ்டானன் படையால் சிறிது தடைப்பட்டாலும் காஷ்டானன் மீதிருந்த கோபத்தில் க்ஷத்ரபன் தனது உத்தேச மாப்பிள்ளையைக் கொல்லும் நோக்கத்துடன் தனது புரவிமீது வாளைப் பெரிதாக ஓங்கிக்கொண்டு வந்தாலும் திடீரென எங்கிருந்தோ பாய்ந்த வேல் அவன் மார்பில் தைக்க அவன் புரவியிலிருந்து சாய்ந்து விட்டான்.

இப்படித் தனது படை கலகலத்துப் போனதை மலை மீதிருந்த தனது சிறிய படையுடன் பார்த்த மகாக்ஷத்ரபனான நாகபாணன் சித்தரஞ்சனி தாபிலேசுவரர் ஆலயத்தை நோக்கித் தன்னந்தனியாக ஓடி வருவதைக் கண்டு தனது படையுடன் அவளை மறித்துத் தூக்கிப் போக இறங்கினான். சித்தரஞ்சனி வெகுவேகமாகக் கோவிலுக்குள் ஓடிக்கதவைச் சாத்தித் தாளிட்டுக் கொண்டாள். “அந்தக் கதவை உடையுங்கள். நமது திட்டங்களுக்கு யமனாக வந்த அந்தப் விடுகிறேன்” என்று இரைந்த வண்ணம் கோவிலுக்கு முன்பு தோன்றினான் நாகபாணன். அவன் வீரர்களில் இருவர் இறங்கி அவன் ஆணையை நிறைவேற்ற முற்பட்டபோது எங்கோ இருந்து, “கோவிலை நாசம் செய்பவன் நாசமாகிவிடுவான்” என்று ஒரு குரல் எழுந்தது. அடுத்த கணத்தில் தனது பெரிய புரவிமீது கௌதமிபுத்ரன் போர்க்கோலம் பூண்டு நாகபாணனை நோக்கி வந்தான். அடுத்த விநானடி தாபிலேசுவர் கோவில் ரணகளமாயிற்று சாதவாகனன் வீரர்கள் நாகபாணன் வீரர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். சாதவாகனனை நோக்கி நாகபாணனே எதிர்த்து வந்தான். அவன் வேகமான வாளை தனது வாளால் அனாயாசமாகத் தடுத்தான். கௌதமிபுத்ரன் தனக்கு உதவ வர முயன்ற வீரர்களை, “இந்தச் சண்டையில் எங்கள் மத்தியில் யாரும் வரவேண்டாம்” என்று உத்தரவிட, மற்ற வீரர்கள் அகலவே இருவரும் உக்கிரமாகப் போரிட்டார்கள். பல போர்களில் வாகை சூடிய நாகபாணன் தனக்கு இணையாக ஒரு வீரனைச் சந்தித்துவிட்டதால் உற்சாகத் துடனும் உக்கிரத்துடனும் போராடினான். அவன் உக்கிரம் அனைத்தையும் நிதானத்துடன் போரிட்ட சாதவாகனன் சந்தித்தான். சாதவாகனன் வாள் தனது வாளின் பாதுகாப்பை மீறி அடிக்கடி தனது கண்முன் தோன்றுவதைக் கண்டான் நாகபாணன். மிகத் தந்திரமும் சாமர்த்தியமும் கொண்ட எதிரியைத்தான் சந்தித்துவிட்டதை உணர்ந்து கொண்டான் மகாக்ஷத்ரபன். அந்த ஆத்திரத்தில் மும்முரமாக வாளைச் சுழற்றியவன் இரண்டாவது முறை சாதவானகன் வாள் தனது வாளை அந்தரத்தில் பறக்கவிட்டதைக் கண்டதும், “சாதவாகனா! முடித்துவிடு என்னை ” என்று கூவினான்.

பதிலுக்கு சாதவாகனன் தனது சங்கை எடுத்து ஊதவே மலைவாசிகள் சாரி சாரியாக வந்தனர். மலையெங்கிலும் ஆங்காங்கு நடந்த போர் மெள்ள குறையத் தொடங்கின. மலை பல இடங்களிலும் செவ்வாடை புனைந்து நின்றது.

காஷ்டானன், யவனன் படைப் பிரிவுகள் பெரும் சேதத்துடன் பின்வாங்கிக் கொண்டிருந்தன. “நாகபாணா! போர் முடிந்து விட்டது. மீதிப் படைகளை அழைத்துக் கொண்டு நீ போய்விடு. இங்கு உன் தளத்துக்குப் பதில் நான் தளம் அமைக்கிறேன். இங்குள்ள மலைவாசிகள் இனி சுதந்திரமாக வாழ்வார்கள்” என்று கூறினான் சாதவாகனன்.

போர் நிறுத்தத் தாரைகள் எங்கும் சப்திக்க சித்தரஞ்சனி கோவில் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். நாகபாணன் அவளை ஒரு முறை நோக்கினான் உஷ்ணத் துடன். பிறகு நிராயுதபாணியாக மலைச்சரிவில் இறங்கிச் சென்றான். கோவிலின் படிகளில் ஏறிச் சென்ற சாதவா கனனைப் பெருமிதத்துடன் நோக்கினாள் சித்தரஞ்சனி. அடுத்த கணம் நாகபாணன் வாளால் காயப்படுத்தப் பட்டிருந்த அவன் உடலை அனைவர் முன்னிலையிலும் தழுவினாள்.

பொழுது மெதுவாகப் புலர்ந்தது. முண்டங்களும் குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடந்த சடலங்களும் நிரம்பி குருதியால் சிவந்த ஆடை பூண்ட தாபோல் மலையை அருணனும் தனது சிவந்த கிரணங்களால் தழுவி அதிகச் சிவப்பை எங்கும் பரப்பினான்.

போரின் கோலம் எங்கும் விரிந்து கிடந்தது. படகுகள் துறைமுகத்தில் யாருமில்லாத அனாதைகளாக ஆடிநின்றன. மலையில் காயமுற்றோரின் அவலக் குரல் எங்கும் கேட்டது. படுகாயமடைந்த புரவிகள் இட்ட ஓலம் பயங்கரத்தை விளைவித்தது. சற்று நேரத்திற்கெல்லாம் தாபிலேசுவரர் ஆலயமணி அடித்தது. எது நின்றாலும் பூஜை நிற்கக் கூடாது என்று பூஜாரி பூஜாதிரவியங்களுடன் ஆலயத்துக்குள் நுழைந்தார். அடுத்து பூஜை மணியை அடித்தார். அதுவே தங்கள் வெற்றிமணி என்று சித்தரஞ்சனி நினைத்தாள், பூரித்தாள்.

Previous articleChittaranjani Ch32 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch34 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here