Home Chittaranjani Chittaranjani Ch35 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch35 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

58
0
Chittaranjani Ch35 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch35 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch35 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 35 நாகபாணன் பிரமை

Chittaranjani Ch35 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

பரம கோழையும் தன்னைப் பார்த்தாலே நடுங்கிக் கொண்டிருந்தவனுமான காஷ்டானன் தன்னை விலகி நிற்கும்படி அதிகார தோரணையில் கட்டளையிட்டதைக் கண்ட நாகபாணன் அதிர்ச்சியின் எல்லையை அடைந்த தன்றி, தான் நின்ற இடத்தைவிட்டு இம்மிகூட நகராமல் காஷ்டானனை உற்று நோக்கி, ”உனக்குப் பைத்தியம் ஏதுமில்லையே?” என்று வினவினான் ஏளனம் நிரம்பிய குரலில்.

காஷ்டானன் அந்த ஏளனத்தைப்பற்றிச் சிறிதும் கவலைப் பட்டதாகவோ, நாகபாணனைக் கண்டு அஞ்சியதாகவோ தெரியவில்லை. ஆகவே மிக நிதானமும் கண்டிப்பும் நிறைந்த குரலில், “பைத்தியம் எனக்கில்லை . உங்களுக்கு இருக்கக் கூடாதென்று எண்ணுகிறேன். தவிர உங்களுக்கு ஓரளவு நன்றியறிவும் நாகரிகமும்கூட இருப்பதால் தவறில்லை” என்று பேசினான்.

நாகபாணன் நிதானத்தை மெல்ல இழக்கலானான். “நன்றியறிவா! நாகரிகமா! என்ன உளறுகிறாய்?” என்று வினவினான் நாகபாணன்.

அப்பொழுதும் நிதானத்தை இழக்காமலே பேசிய காஷ்டானன், “நீங்கள் தோல்வியுற்ற பிறகு உங்களைச் சாதவாகனர் சிறை செய்திருக்கலாம். கொன்றுகூட இருக்கலாம். ஆனால் ஆயுதமிழந்து துர்ப்பலமாகிவிட்ட எதிரியைக் கண்ணியமாக நடத்தினார். சுதந்திரமாகப் போகவும் அனுமதித்தார். அதற்கு உங்களுக்குச் சிறிது நன்றியிருக்கலாமென்று நினைத்தேன். இதோ நாங்கள் கொண்டுவந்திருக்கும் சடலம் தங்கள் படைத்தலைவர் க்ஷத்ரபருடையது. அவரது கடைசி வேண்டுகோளின்படி அவரை இங்கு அடக்கம் செய்ய வந்திருக்கிறோம். அதைத் தடை செய்யாதிருப்பதுதான் நாகரிகம். அது தங்களுக்கு இருப்பதாக நம்பித்தான் சாதவாகனர் எங்களை இங்கு அனுப்பியிருக்கிறார். உங்களுக்காகப் பிசாசாக நடித்தவளும் சாதவாகன மகிஷியுமான சித்தரஞ்சனி தனது வளர்ப்புத் தந்தையின் இஷ்டத்தை நிறைவேற்ற வந்திருக்கிறாள். இவற்றையெல்லாம் தாங்கள் சிந்திப்பது நல்லது” என்று புத்தி சொல்லும் முறையில் பேசினான்.

காஷ்டானன் அறிவுரைகளை வழங்க வழங்க நாகபாணன் சினம் உச்சநிலையை அடைந்ததால், “காஷ்டானனா! நீ பேசுவது யாருடன் என்று புரிந்து கொண்டு பேசுவது நல்லது. இந்தக் கோட்டை இன்னும் என் வசம் இருக்கிறது” என்று சுட்டிக் காட்டினான்.

“அதனால்?” காஷ்டானன் கேட்டான்.

“நான் இஷ்டப்பட்டாலொழிய இந்தச் சடலத்தை இங்கு அடக்கம் செய்ய முடியாது” என்றான் நாகபாணன்.

“அப்படியானால் உங்களை இங்கிருந்து வெளியேற்றிய பிறகு க்ஷத்ரபர் சடலத்தை அடக்கம் செய்கிறேன். அதுவரை இந்தப் பழைய வழக்கப்படி தைலக்காப்பிட்டு வைக்கிறோம்” என்று கூறிவிட்டு, “மகாராணி! திரும்புங்கள். வீரர்களே திரும்புங்கள் மீண்டும் எதிர்க்கரைக்கு” என்று உத்தரவிட்டுத் தானும் நதிக்கரையை நோக்கித் திரும்பினான்.

க்ஷத்ரபர் சடலத்தைத் தாங்கிய நால்வரும் காஷ்டானன் உத்தரவுப்படி திரும்ப முயன்றனர். அந்தச் சமயத்தில் மகாக்ஷத்ரபர் முற்றும் எதிர்பாராத நிகழ்ச்சியொன்று ஏற்பட்டது. நான்கு படகுகளில் யவன வீரர்களை அழைத்துக்கொண்டு யவனர் தலைவன் அஞ்சன்வேல் கோட்டைத் துறையில் வந்து இறங்கினான். தனக்குப் பலம் வலுத்துவிட்டதைக் கண்ட நாகபாணன் “காஷ்டானனா! ஒருவிதத்தில் எனது நாகரிகத்தைக் காட்டுகிறேன். நீயும் உன் வீரர்களும் திரும்பிச் செல்லலாம். க்ஷத்ரபன் சடலத்தைக் கீழே வைத்துவிட்டுச் செல்லுங்கள். அதை நான் அடக்கம் செய்கிறேன்” என்று கூறினான் தைரியம் சொற்களில் உதிர்க்க.

அதுவரை ஏதும் பேசாமல் மௌனமாயிருந்த சித்த ரஞ்சனி தனது முக்காட்டை நீக்கி, ”நாகபாணா! உன் பாவக்கரங்களால் என் தந்தைக்கு சமாதி வேண்டாம். என்னை அவர் வளர்த்ததற்கு என் கையால் நானே அவரை அடக்கம் செய்கிறேன்” என்று கூறிக் கனல் கக்கிய விழிகளால் நாகபாணனை நோக்கினாள்.

அவளைப்பற்றிச் சிறிதும் அஞ்சாத நாகபாணன், “உன்னைத் திரும்பி அனுப்பப் போவதாக யார் சொன்னது?” என்று வினவினான்.

“பெண்ணை உபயோகப்படுத்தி இங்கு வெற்றி சம்பாதிக்க முயன்ற வீரனென்று உன்னை அறிவேன். ஆனால் இந்த மாதிரிதுக்க சமயத்தில் ஓர் அபலையிடம் வீரம் காட்டும் கயவனென்று உன்னை நான் இதுவரை நினைக்கவில்லை. காஷ்டானனரே! வீரர்களே! வாருங்கள் என்னுடன்” என்று உத்தரவிட்டுத் திரும்பினாள்.

“அவனை நகரவிடாதீர்கள்” என்று நாகபாணன் அங்கு வந்துவிட்ட யவனத் தலைவனுக்கு உத்தரவிட்டான்.

யவனர் தலைவனின் முகத்தில் தெரிந்தது அதிர்ச்சியா வியப்பா என்று புரியவில்லை நாகபாணனுக்கு. தான் உத்தரவிட்ட பிறகும் யவனனோ அவனது வீரர்களோ சற்றும் அசையாமல் நிற்பது மட்டும் புரிந்ததால், “ஏன் நிற்கிறீர்கள்? நான் இட்ட உத்தரவு காதில் விழவில்லை ?” என்று சீற்றம் மிகுந்த சொற்களை உதிர்த்தான்.

யவனன் முகத்தில் சற்று குழப்பம் உதயமாயிற்று. “மகாக்ஷத்ரபரே! நாம் தோல்வியுற்றோமா வெற்றி பெற்றோமா?” என்று வினவினான் குரலில் ஒலிக்க.

“ஏன்? அதிலும் சந்தேகமிருக்கிறதா?” என்று கேட்டான் நாகபாணன்.

“இங்கு வரும்வரையில் இல்லை.”

“இங்கு வந்தபிறகு?”

“சந்தேகம் வந்துவிட்டது?”

“என்ன சந்தேகம்?”

“யார் உத்தரவை நிறைவேற்றுவது என்று தெரிய வில்லை.”

“இங்கு என்னைத் தவிர உத்தரவிட வேறு யார் இருக்கிறார்கள்?” என்று கறுவினான் நாகபாணன்.

“இங்கு இல்லை ….” என்று இழுத்தான் யவனன்.

“வேறு எங்கு இருக்கிறார்கள்?”

“அக்கரையில் …” இதைச் சொன்ன யவனன், “மகா க்ஷத்ரபரே! என்னை இங்கு அனுப்பியது சாதவாகனர். நம் இருவர் படைகளையும் முறியடித்த மகாவீரன்” என்றும் சொன்னான்.

நாகபாணன் சிறிது குழம்பினான். “என்ன உத்தர விட்டான் சாதவாகனன்?” என்று கேட்டான் சினம் சொற்களில் கொந்தளிக்க.

“நமது படைத்தலைவர்… இந்த க்ஷத்ரபர், இவர் உடலை அடக்கம் செய்ய தடை யாராவது செய்தால் அவர்களைச் சிறை செய்து கொண்டு வருமாறும், இந்த மகாராணிக்கு யாராவது தீங்கு செய்ய முயன்றால் அவர்களைக் கொன்று விடுமாறும் கௌதமிபுத்ரர் உத்தரவிட்டிருக்கிறார்…” என்று இழுத்தான் யவனன்.

“உத்தரவை நிறைவேற்றாவிட்டால், இங்கு வந்திருக்கும் இந்த எனது அடிமை, புது மகாராணியை நாம் சிறை செய்து இங்கு வைத்துக் கொண்டால்?” என்று நாகபாணன் கேட்டான். மேலும் சொன்னான்: “யவனர் தலைவரே! இது நமக்கு நல்ல சமயம். சமரில் எதுவும் நியாயம். தானாக வந்த இவளையும் கோழை காஷ்டானனையும் நாம் சிறை செய்து எதிரியுடன் சமரசம் பேசினால்…?”

வார்த்தையை முடிக்கவில்லை மகாக்ஷத்ரபனான நாகபாணன். இடிஇடி என்று பெரிதாக நகைத்தான் யவனர் படைத்தலைவன். “நாகபாணரே! உம்மைப் புத்திசாலி யென்று நினைத்தேன். எதிரிகளை எடை போடக்கூடிய சாமர்த்தியசாலியென்று நினைத்தேன். தோல்வி உமது புத்தியை மழுங்க அடித்துவிட்டது” என்று யவனன் கூறினான் நகைப்பின் ஊடே. பிறகு நாகபாணனைக் கவனிக்காமல், ”சாதவாகனர் படைத்தலைவரே! நீங்கள் க்ஷத்ரபரை அடக்கம் செய்யுங்கள். மகாராணி! மகாக்ஷத்ரபரின் அபராதத்தை மன்னித்து விடுங்கள்” என்று காஷ்டானனை நோக்கிக் கூறினான். “உம், சடலத்தை எடுத்து வாருங்கள்” என்று சடலம் தாங்கிய வீரர்களுக்கும் உத்தரவிட்டுக் கோட்டைப் பகுதியை நோக்கி நடக்க முற்பட்டான்.

“நில் யவனா!” என்று ஏகவசனத்தில் பேசிய நாகபாணன், “இங்கு எனது உத்தரவின்றி எதுவும் நடக்க முடியாது. இந்தக் கோட்டை இன்னும் என் வசத்தில் இருக்கிறது” என்று சீறி, “டேய்! யாரங்கே?” என்று கோட்டை மாளிகைப் புறத்தை நோக்கிக் கூறினான். அடுத்த விநாடி யவன வீரர்களின் பிடியில் இருந்தான் நாகபாணன். “மகாக்ஷத்ரபரே! உமது படையில் மீதியுள்ள பகுதியும், எனது படையின் பாதியும் சாதவாகனரின் பெரும்படையிடம் சிக்கியிருக்கிறது. இங்கு ஏதாவது முறைகேடாக நடந்தால் அந்தப் படைகளை அழித்து விடுவதாக சாதவாகனர் சொல்லச் சொன்னார்” என்று ஒரு பெரிய அதிர்வெடியை எடுத்து வீசினான் யவனர் தலைவன். “பேசாமல் வாரும். உமது பிடிவாதத்தால் உமது படைகளைக் காவு கொடுப்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எனது யவனர்கள் அழிவதை நான் விரும்பவில்லை” என்று அதிகாரத்துடன் கூறிவிட்டு நடந்தான். காஷ்டானனும் சடலத்தைத் தாங்கியவர்களும் சித்தரஞ்சனியும் யவனனைத் தொட்ர்ந்தார்கள்.

சித்தரஞ்சனி தனது வளர்ப்புத் தந்தையின் சடலத்தைக் கோட்டை நந்தவனத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தாள். வீரர்கள் தோண்டிய குழியில் சடலம் இறக்கப் பட்ட பிறகு சித்தரஞ்சனிதனது மடியிலிருந்து பிடி அரிசியை எடுத்து அதன் மீது தூவினாள். காஷ்டானன் வீரர்கள் ஆயுதங்களைத் தாழ்த்திக் காலமான தலைவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். யவனனும் பழைய தலைவனுக்குத் தலை வணங்கினான்.

அடுத்து சித்தரஞ்சனி கண்களில் நீரை உகுத்த வண்ணம் ஆற்றங்கரையை நோக்கி நடந்தாள். காஷ்டானன் அவளைப் பின்தொடர வில்லை. யவனனும் நின்ற இடத்திலேயே நின்றான்.

“ஏன் நிற்கிறீர்கள்?” என்று சீறினான் நாகபாணன்.

“இன்னும் ஒரு விஷயம் அறிந்துவரச் சொன்னார் சாதவாகனர்” என்றான் காஷ்டானன்.

“என்னிடமும் சொன்னார்” என்றான் யவனன்.

“இன்னும் எதை அறியவேண்டும்?” என்று வெறுப்பும் கோபமும் கலந்த குரலில் கேட்டான் நாகபாணன்.

காஷ்டானன் தேவையை மெதுவாகச் சொன்னான் நாகபாணன் முகம் மிஞ்சிய திகிலாலும் அதிர்ச்சியாலும் பிரமையை அடைய அவன் கல்லென சமைத்து நின்று விட்டான் பல விநாடிகள். “இதைவிட சாதவாகனன் என்னைக் கொன்று போடலாமே” என்று வெறுப்புடன் கூறினான்.

Previous articleChittaranjani Ch34 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch36 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here