Home Chittaranjani Chittaranjani Ch4 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch4 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

72
0
Chittaranjani Ch4 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch4 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch4 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 4 வெண்ணிற மோகினி! விளைந்த விபரீதம்!

Chittaranjani Ch4 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

காரிருள் எங்கும் சூழ்ந்திருந்த நிலையில், கால்களுக்கும் தளைகள் பூட்டப்பட்டதாக ஏற்பட்ட பிரமையில், கழுத்தையும் யாரோ இறுகப் பிடித்த சமயத்திலும் சிறிது சிந்தனையை ஓட்டிய கௌதமிபுத்ரன், கழுத்தைப் பிடித்த கைகளின் மெல்லிய விரல்கள் ஓரளவுக்குமேல் நெரிக்க முயலாததையும், மெல்லிய விரல்களில் வலுவிருந்தும், அந்த வலுவோடு ஒரு மென்மையும் கலந்திருந்ததையும் எண்ணிப் பார்த்து, கழுத்தைப் பிடித்தது யாராயிருந்தாலும் தன்னைக் கொல்ல இஷ்டப்படவில்லையென் பதைப் புரிந்துகொண்டதால் சற்று நிதானப்பட்டு மூச்சை மட்டும் நன்றாக இழுத்துப் பிடித்துக் கொண்டான். அத்துடன் கால்களுக்குத் தளையிட்டவர்கள் தனது கைகளைக் கட்டாததையும் நினைத்துப் பார்த்து, தன்னை பயமுறுத்தி ஓடச்செய்வதே அவர்கள் நோக்கமென்பதையும் நிர்ணயித்துக் கொண்டதால் தனது கைகளைச் சட்டென்று இருபுறத்திலும் செயலற்று விழும்படிச் செய்தான். அப்படி அவன் கைகள் செயலற்று விழுந்தவுடன் கழுத்தைப் பிடித்த கைகளிலொன்று கழுத்தை விட்டு அவன் நாசியில் நிலைத்தது ஒரு விநாடி. மூச்சு எதுவும் வராதிருக்கவே சட்டென்று எழுந்த அந்த உருவம் அவன் கால் தளைகளையும் நீக்கிவிட்டு அவனை ஒருமுறை சுற்றி வந்தது. அப்படி அது சுற்றி வந்த சமயத்தில் விசிறிய அதன் ஆடையிலிருந்து மனோகரமான சுகந்தமொன்று நாசியில் புகுந்ததையும் கவனித்த கௌதமிபுத்ரன் அடுத்து நடப்பதை அறிய அசைவற்றே கிடந்தவண்ணம் ஒரு கண்ணையும் அரைவாசி திறந்து பக்கவாட்டில் பார்வையை ஓடவிட்டான்.

முதல் நாளிரவில் பார்த்த அதே பெண்ணுருவந்தான் கோவில் வாயில் தூணைப் பிடித்துக்கொண்டு சிறிது நேரம் நின்றது. பிறகு படிகளில் இறங்கிச்சென்று அவன் பார்வையிலிருந்து மறைந்து விட்டது சில விநாடிகள். கௌதமிபுத்ரனைத் தவிர வேறு யாராவது அந்த நிலையில் இருந்தால் உடனடியாக வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்திருந்து அந்தப் பெண்ணைத் தொடர முற்பட்டிருப் பார்கள். ஆனால் அவசரப்பட்டு எதையுமே செய்யாதவனும், நிதானத்தாலும் மிகுந்த சூஷ்மத்தாலும் பெரிய காரியங் களைச் சாதித்திருப்பவனுமான கௌதமிபுத்ரன் இருந்த இடத்தைவிட்டுச் சிறிதும் நகராமலும் அசையாமலும் அப்படியே கிடந்தான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் வெளியே யாரோ இரண்டு மூன்று பேர் நடமாடும் சத்தம் கேட்கவே, தனது பக்கத்தில் இருந்த வாளைச் சிறிது தடவிப் பார்த்துக்கொண்டதன்றித் தனது கச்சையிலிருந்த சிறு கோடாரியையும் சிறிது தளர்த்திக் கொண்டான். அவசியமானால் வேகமாக எடுத்து வீச. ஆனால் எந்தவித அவசியமும் ஏற்படவில்லையென்பதை நீண்ட நேர நிசப்தத்தால் உணர்ந்த கௌதமிபுத்ரன் மெள்ள எழுந்து உட்கார்ந்து சுற்றுமுற்றும் நோக்கினான். வாயிலில் நடமாட்ட சத்தம் நின்றாலும் இருவர் பேசும் ஒலிகள் மட்டும் கேட்டன.

தடித்த ஆண் குரலொன்று கேட்டது. “அவன் இறந்து விட்டானா. இல்லையா?” என்று.

“இல்லை” பெண் குரல் பதிலளித்தது.

“எப்படித் தெரியும் உங்களுக்கு?” இன்னொரு ஆண் குரல் கேட்டது.

“மூக்கில் கை வைத்துப் பார்த்தேன். மூச்சு வரவில்லை” பெண் குரல் ஒலித்தது இன்பமாக.

“அப்படியானால் இறந்துதானே இருக்கவேண்டும்?”

“இல்லை. அவனை நான் சுற்றி வந்தபோது கால்களில் லேசாக அசைவிருந்தது. மூச்சை இழுத்துப் பிடித்ததால் அவன் என்னை ஏமாற்றிவிட்டதாக நினைக்கிறான்.”

“அப்படியானால் நாங்கள் அவனை வெட்டிப் போடட்டுமா?”

“அப்படிச் செய்தால் நம்மைப்பற்றிய சந்தேகம் அதிகமாகும்” என்ற அந்தப் பெண் குரல், “பயமுறுத்தல் தான் நமது நோக்கமே தவிர கொல்வது நோக்கமில்லை. தவிர இவனைக் கொல்வதும் அவ்வளவு சுலபமல்லவென்று நினைக்கிறேன்” என்றும் கூறிற்று.

“ஏன் சுலபமல்ல? அத்தனை பெரிய வீரனா அவன்?” என்று வினவியது முதலில் பேசிய ஆண் குரல்.

உடனடியாகப் பெண் குரல் ஒலிக்கவில்லை. நீண்ட மௌனத்துக்குப் பிறகு பேசியபோது அதன் குரலில் ஒரு கௌரவம் தெரிந்தது. “உள்ளே படுத்திருப்பவன் இங்கு வந்து இரண்டு நாளாயிற்று. இரண்டு நாளும் இந்தக்கோவிலிலேயே படுத்திருக்கிறான். அவன் தைரியத்துக்குச் சான்று இதுவே போதும். அவன் வீரனா அல்லவாவென்பதை அறியக் கோவிலுக்குள்ளே போக வேண்டும். அப்படிப்போவது உசிதமில்லையென்று நினைக்கிறேன்” என்று அந்தப் பெண் குரல் கூறிற்று. அடுத்து ஒலி ஏதுமில்லை. நள்ளிரவில் சற்றுமுன்பு ஒலித்த சங்கீதம் மீண்டும் ஒலித்தது வெளியே.

அதற்குமேல் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்று முடிவு செய்த கௌதமிபுத்ரன் எழுந்திருந்து வாளைக் கச்சையில் கட்டிக்கொண்டு மெதுவாகப் புறப்பட்டுக் கோவிலின் உட்புறத்தை விட்டு வெளியே வந்தான் மிகுந்த எச்சரிக்கையுடன். அன்று மேகமூட்டம் எதுவுமில்லாததன் காரணமாக, ஐந்தாம் பக்ஷத்து சந்திரன் தனது மங்கலான ஒளியை எங்கும் பரப்பிக்கொண்டிருந்ததால், அந்த மலைக்காடு ஆங்காங்கு மரங்களின் இடைவெளிகளில் காணப்பட்ட நிலாத்தட்டுகளுடன் இருளும் ஒளியும் கலந்த சூழ்நிலையை சிருஷ்டித்திருந்தது. இத்தனையிலும் தாபிலே சுவரர் ஆலயத்தின் அமைப்பின் காரணமாக அதற்குள்ளே அப்பொழுதும் காரிருள் சூழ்ந்து கிடந்ததைக் கண்ட கௌதமிபுத்ரன், ‘தாபிலேசுவரர்தமது பிசாசு பூதகணங்களுக் காகவே இந்த இடத்தை இப்படி அமைத்திருக்கிறார் போலும்!’ என்று உள்ளூரச் சொல்லிக் கொண்டான்.

இந்த எண்ணங்களுடன் வெளியே வந்த சாதவாகன அரசகுமாரன் கோவிலுக்கு வெளியே யாருமில்லாததையும் வெளிப்புறம் வெறித்துக்கிடந்ததையும் கவனித்துக் கோயிற் படிகளை விட்டிறங்கித் தரையில் காலடிகளைப் பார்வை யிட்டான். அங்கிருந்த பாறைகளின் வழவழப்பில் காலடிச் சுவடுகள் ஏதும் தெரியாமல் போகவே சற்றுத் தலை நிமிர்ந்து பார்த்த அந்த வாலிபன் தூரத்தே மரங்களுக்கிடையிலிருந்த பாறைமீது வெளேரென்ற ஓர் உருவம் தெரியவே அதை நோக்கி ஓசைப்படாமல் மெள்ள நடந்தான். ஆனால் அந்த உருவம் பழையபடி மெல்லிய குரலில் இனிமையான இசையை எழுப்பியது. சித்தத்தை ஈர்க்கும் அதே சித்தரஞ்சனி! ஏழு ஸ்வரங்களை விட்டு அப்புறமோ இப்புறமோ அசையாமல் அந்த சப்தஸ்வரங்களுக்குள்ளேயே புரண்ட சுழல் கீதம், திரும்பத் திரும்ப அலைகளாக அவன் காதில் விழுந்தது! அந்தச் சங்கீதத்தால் சித்தம் கலங்கிய அந்த மகாவீரன், தனது வீரத்தை மறந்தான். வந்த காரியத்தை மறந்தான். வெண்ணிலவில் இன்னொரு வெண்ணிலாவாக நின்ற அந்த வெண்ணிற ஜோதியைப் பார்த்துக்கொண்டு சொப்பனத்தில் நடப்பது போல் நடந்தான். அவன் அப்படி நடந்து கொண்டே இருக்கையில் அந்த உருவம் மெதுவாகத் தரையில் இறங்கிக்கொண்டிருந்தது. முழுதும் மறையுமுன்பு அதைப் பிடிக்க முயன்று வேகமாக நடந்த கௌதமிபுத்ரன் அந்தப் பாறையை அணுகுவதற்கு முன்பாக அந்த மோகினி மறைந்து விட்டாள் மலைப்பாறைக்குள். ஓடி அந்தப் பாறையை நோக்கிய அந்த வாலிபன் பாறைக்கு அருகில் சுரங்கமோ வழியோ இருப்பதற்கான அறிகுறிகள் எதையும் காணாதிருக்கவே அந்த சூஷ்மத்தை எப்படியும் மறுநாள் கண்டுபிடித்து விடுவதென்ற உறுதியுடன் திரும்பிக் கோவிலை நோக்கி நடந்தான். கோவிலை அவன் கிட்டு முன்பே விண்ணில் மேகங்கள் சூழ்ந்தன. மதி மறைந்தான். காரிருள் எங்கும் மண்டியது. இது கர்ப்போட்ட காலம். இப்படித்தான் அடிக்கடி மேகங்கள் வரும் போகும். இதில் எந்த மந்திரமோஜால வித்தையோ இல்லை’ என்று தனக்குள் சொல்லிக்கொண்ட கௌதமிபுத்ரன் கோவிலை நோக்கி நடந்தவன் திடீரென்று கடற்கரையை நோக்கித் திரும்பினான். அதுவரை எங்கோ மறைந்து கொண்டிருந்த அவன் புரவியும் அவனைத் தொடர்ந்து சென்றது. இப்படி சாதவாகன மன்னனும் புரவியும் நடந்து ஓர் அடர்ந்த மரக்கூட்டத்தருகே வந்ததும் புரவி பெரிதாகக் கனைத்தது. அடுத்த விநாடி இரண்டு வாட்களின் நுனிகள் கௌதமி புத்ரன் கழுத்தில் ஊன்றப்பட்டன. “உன் வாளைத் தொட்டால் பிணமாகி விடுவாய்” என்ற எச்சரிக்கைக் குரலொன்று பக்கத்திலிருந்து ஒலித்தது. கௌதமிபுத்ரன் பதிலுக்குப் பெரிதாக நகைத்தான். அந்த நகைப்பையொட்டி அவன் பின்னால் யாரோ பெரிதாக அலறினார்கள். அந்த அலறல் எழுந்த அதே சமயத்தில் சரேலென்று தனது கட்டாரியை எடுத்துப் பக்க வாட்டில் வீசிய கௌதமிபுத்ரன் அதன் விளைவைப்பற்றிச் சந்தேகப் படாமல் தன் கழுத்தில் ஊன்றிய வாளொன்று அகன்று விடவே இன்னொரு வாளின் பிடி மீதும் தனது கையை நீட்டி இழுத்தான். பிறகு துரிதமான செயல்கள் மின்னல் வேகத்தில் விளைந்தன. வாட்களை உருவிய இருவரில் ஒருவன், அலறிக்கொண்டு ஓடிவிட இன்னொருவன் மீது வாளை வீசினான் கௌதமிபுத்ரன். அடுத்து யாரும் போரிடக் காணோம். யாரோ சட்டென்று தரையில் விழும் அரவம் கேட்டது. இன்னொருவன் வேகமாக ஓடும் காலடி ஓசையும் கேட்டது.

தன்னைப்பிடிக்க வந்த இருவரில் ஒருவன் ஓடிவிட்டான் இன்னொருவன் வீழ்ந்து விட்டதையும் உணர்ந்த கௌதமி புத்ரன் திரும்பி விழுந்தது யாரென்று பார்த்தான். விழுந்தவன் சடலம் அசையவில்லை. அவன் கழுத்தின் பின்புறத்தில் புரவியின் பற்கள் அழுந்தியிருப்பதைப் பார்த்து அது தனது புரவியின் வேலையாயிருக்க வேண்டுமென்று தீர்மானித் தான். அடுத்து அங்கு நிற்காமல் புரவிமீது ஏறிக்கொண்டு புரவியை மலைச்சரிவில் இறங்கும்படி செலுத்திக் கடற் கரைக்கு வந்து சேர்ந்தான். கடல் அன்றும் முதல் நாள் போலவே கொந்தளித்து அலைகளைப் பெரிதாகப் பாறைகள் மீது மோதிக்கொண்டிருந்தது. அங்கு வந்ததும் புரவியிலிருந்து இறங்கிய கௌதமிபுத்ரன் ஆகாயத்தை நோக்கினான். ஆகாயத்தில் சந்திரன் மேகக்கூட்டத்தில் பூர்ணமாக மறைந்து விட்டது. எங்கும் இருள் சூழ்ந்ததாலும் பேய்க் காற்றாலும் பயங்கரமான சூழ்நிலை உருவாகி இருந்ததாலும் சற்று எட்ட மறைவாயிருந்த பாறையொன்றில் உட்கார்ந்து கொண்ட கௌதமிபுத்ரன் வாசிஷ்டி நதியின் முகத்துவாரத்தில் படகு ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்ததையும் கவனித்தான். சங்கமத்துறையில் அந்தப் படகிலிருந்து இறங்கிய பூர்ண ஆயுதம் தரித்த பெரிய வீரனொருவன் தனது இடையிலிருந்த சிறு குழலை எடுத்து மெதுவாக ஊதிவிட்டுச் சிறிதுநேரம் படகின் அருகிலேயே தயங்கி நின்றதையும் பார்த்தான். அவன் முகத்தில் ஏதோ பெரும் குழப்பம் ஏற்பட்டதைக் கண்ட கௌதமிபுத்ரன், ‘இவன் மோகினியைத்தான் எதிர்பார்க்கிறான்’ என்று தனக்குள் கூறிக் கொண்டதுடன், ‘இங்கு நடப்பது எனக்குப் புரிகிறது’ என்றும் சொல்லிக் கொண்டான். இத்தகைய சிந்தனையில் அவன் இறங்கியிருக் கையிலே கடற்கரை அலைகளில் அந்த வெண்ணிற மோகினி நடந்து வந்தாள். அவளைச் சந்தித்துத்தடுத்து விடுவது என்று தீர்மானித்து எழுந்த கௌதமிபுத்ரன் எந்தச் செயலிலும் இறங்கவில்லை , அடுத்து நடந்த, அவன் முற்றும் எதிர்பாராத, நிகழ்ச்சியால் கௌதமிபுத்ரன் சிலையென நின்று விட்டான் பல விநாடிகள். அவன் கண்முன்னே நடந்தது ஒரு விபரீதம்.

Previous articleChittaranjani Ch3 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch5 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here