Home Chittaranjani Chittaranjani Ch5 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch5 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

79
0
Chittaranjani Ch5 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch5 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch5 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 5 மகரந்தச் செய்தி

Chittaranjani Ch5 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

வானில் மேகங்கள் விலகி மூன்றாவது ஜாமமும் கடந்து விடவே, ஐந்தாம் பிறைச் சந்திரன் தனது லேசான ஒளியை எங்கும் பரப்பித்தாபோல் துறைமுகத்தில் சித்தத்தை மயக்கும் மங்கிய நிலவைப் பரப்பிவிட்டதால், கடற்கரையில் நடப்பதைத் தனது மறைவிடத்திலிருந்து நன்றாகப் பார்க்க முடிந்தது கௌதமிபுத்ரனுக்கு. வாசிஷ்டி நதியில் படகில் வந்து அதன் முகத்துவாரத்தில் தாபோல் துறைமுகத்தில் இறங்கிய மனிதன் சற்றுக் குழப்பத்தை முகத்தில் காட்டியதையும் பிறகு குழலை எடுத்து ஊதியதையும் கண்ட சாதவாகன வாலிபன், வந்த மனிதன் எதிர்பார்த்தபடி காரியங்கள் நடக்கவில்லையென்பதைப் புரிந்துகொண்ட தன்றி, அப்படி அவன் எதிர்பார்ப்பை உடைத்ததற்குத்தானே காரணமென்பதையும் ஊகித்துக் கொண்டதால் சிறிது புன்முறுவல் கொண்டு வந்தவனை உச்சி முதல் உள்ளங்கால் வரையில் அலசிப் பார்க்க முற்பட்டான்.

வந்தவன் திடகாத்திரமாக ஆறடி உயரத்துக்குக் குறையாமலும் கெட்டியான சதைப்பிடிப்பு உள்ளவனாகவும் காணப்பட்டதாலும், அவன் மார்பில் தரித்திருந்த உலோக கவசமும் நல்ல எஃகால் செய்யப்பட்டதாகப் புலப்பட்ட தாலும், அவன் இடையில் தரித்திருந்த பெரிய அகன்ற வாளும் நல்ல கனமாக இருப்பதாகத் தெரிந்திருந்ததாலும், அவன் சாக வம்சத்தவனாகவோ க்ஷத்ரபனாகவோ இருக்க வேண்டுமென்று ஊகித்தான் கௌதமிபுத்ரன். அந்த மனிதனின் அகன்ற மார்புக் கவசத்தில் பெரிதாகக் காணப்பட்ட *சக்ரம், வில், அம்பு, இலச்சினை சாகர்களையும், க்ஷத்ரப இனத்தையும் குறிக்குமாகையால் அவன் க்ஷத்ரபனாகவோ சாகனாகவோ இருக்கலாமென்று திட்டமான முடிவுக்கும் வந்தான் அந்த வாலிபன். அவனுடைய கண்கள் அந்த மங்கிய நிலவிலும் பெரிதாகவும் பளிச்சென்றும் ராட்சதக் கண்களாகத் தெரிந்ததைக் கவனித்த சாதவாகனன் அந்த மனிதன் எந்த ஆபத்தையும் அலட்சியமாக எதிர்நோக்க வல்லவனென் பதையும், சற்றுக் குரூரமானவனாகக்கூட இருக்கக் கூடியவ னென்பதையும் உணர்ந்து கொண்டான். கடற்கரையில் உறுதியுடன் உலக்கைகள் போல் நின்ற கால்கள் அந்த மனிதனின் உரமான மனத்திற்குச் சான்றுகளாயிருந்தன.

படகிலிருந்து இறங்கியதும் அவன் சற்றுக்குழம்பி இருபுறமும் நோக்கிவிட்டுக் குழல் எடுத்து ஊதியபோது சற்றே கால்களை அசைத்ததைக் கவனித்த கௌதமிபுத்ரன் அவன் குழப்பத்தில் சிறிது கோபமும் கலந்திருப்பதைப் புரிந்துகொண்டான்.

இத்தகைய எண்ணங்களில் கௌதமிபுத்ரன் திளைத்திருந்த சமயத்தில் வாசிஷ்டி முகத்துவாரத்தின் நேர் எதிர்த்திசை யிலிருந்து அந்த வெள்ளை மோகினி அலைகளில் தோன்றினாள். மலைக்காட்டிலிருந்து தான் இருந்த சற்றுத் தூரத்தில் அவள் பாறைகளில் இறங்கிக் கடற்கரையை அடைந்திருக்க வேண்டுமென்று ஊகித்தான். அப்படிப் பாறைகளில் தாவி இறங்கி வந்து கடற்கரை அலைகளை அடைந்ததும் அலை ஓரமே நடந்து வந்ததையும் அந்தச் சமயத்தில் அவள் அழகு யார் சித்தத்தையும் கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்திருந்ததையும் கண்ட வாலிபன் பிரமையின் உச்சத்தை அடைந்தான். நிலவின் வெளிச்சத்தில் அப்பொழுதுதான் அவளை நன்றாகப் பார்க்க முடிந்தது அவனால். அவள் நல்ல உயரத்துடன் கொடி போலிருந் தாலும் அவள் உடலில் காணப்பட்ட எழுச்சிகள் அது மலர்க்கொடி என்பதை வலியுறுத்தின. கடலின் வேகமான காற்றில் அவள் வெண்ணிற ஆடை உடலில் நன்றாக ஒட்டி விட்டதாலும், காலை அலம்பிய அலை சற்று அதிகமாகக் காலின் மேற்பகுதிகளை நனைத்துவிட்டதாலும், சற்று விளக்கமாகவே தெரிந்த அவள் பருவ உடலின் அழகுகள் கௌதமிபுத்ரன் சித்தத்தை ஈர்க்கவே செய்தன. கடற்காற்றில் நன்றாகவே பின்னால் பறந்த அவள் குழல்கள் அந்தச் சந்திர வெளிச்சத்திலும் அதிக கருமையைக் காட்டின. கன்னங்களில் புஷ்டியை மதியின் கிரணங்கள் அழகுபடுத்தின. வசீகர தீட்சண்யமான கண்களைத் தாக்கி எதிரொளி கிளப்பின. காற்றால் தேகத்தில் ஒட்டப்பட்ட ஆடையையும் திமிறிக் கொண்டு முறைத்த மார்பு முகடுகள் அவள் நடையின் வேகத்தில்கூட அசைய மறுத்தன. அவள் பருவத் தொடை களைப் புலப்படுத்தவும் மறைக்கவும் உட்புகுந்த ஆடையைப் பார்க்க இஷ்டப்படாமல் கண்களை ஒரு விநாடி மூடிக்கொண்டான் கௌதமிபுத்ரன்.

அவன் கண்களைத் திறந்தபோது, அந்தச் சித்தினி படகில் வந்தவனை நெருங்கிக் கொண்டிருந்தாள். கால்களில் அலைகள் தாக்கியும் அலட்சியம் செய்து நடந்துவந்த அவளுடைய மலர்ப் பாதங்கள் ஏதோ அலைமீது ஊர்ந்து வருவது போன்ற பிரமையை அளித்தன. அந்த ஊர்ந்து வந்த முறையிலும் ஓர் அழகிருந்தது அவள் கால்களில், அப்பொழுது அவள் தலையில் சொருகியிருந்த ஓர் புஷ்பம் அத்தனை காற்றிலும் தலையிலிருந்து நகராமல் அவள் அழகிய வலது காதின் மேல் ஆபரணமெனக்காட்சியளித்தது. அப்படி பிரமிக்கும் அழகுடன் வேகமாக வாசிஷ்டி சங்கமத்துறையின் இடத்துக்கு வந்த அந்த மோகினியைத் தடுத்து விடுவதென்றும் அவசியமானால் வந்த க்ஷத்ரபனையும் மடக்குவதென்றும் தீர்மானித்த கௌதமிபுத்ரன் தனது புரவியைத் தட்டிவிட முற்பட்ட சமயத்தில் ஏற்பட்ட அந்த விபரீத நிகழ்ச்சி அவன் முயற்சிக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தது.

அந்தப் பெண் அவனை அணுகித் தனது இரு கைகளையும் நீட்டிக்கொண்டு சென்றாள். அந்தக் கைகளை அந்த க்ஷத்ரபன் தனது கையால் பலமாக அடித்தான். “சித்தரஞ்சனி!” என்று வெறிக்குரலில் அவளை அழைக்கவும் செய்தான். அந்தக் குரல் மலைப்பாறைகளில் தாக்கி, “சித்தரஞ்சனி! சித்தரஞ்சனி!” என்று பலமுறை எதிரொலி செய்து மலையே அபயக்குரல் கொடுப்பது போன்ற விசித்திரத்தை சிருஷ்டித்தது.

அடுத்து அவன் நன்றாக இரைந்தே பேசியதால் அவன் சொற்கள் நன்றாக வாலிபன் காதுகளில் விழுந்தன. “நான் குழலூது முன் ஏன் வரவில்லை நீ?” என்று கேட்டான் அந்த மனிதன்.

சித்தரஞ்சனி அவன் முன் அடிமைபோல் தலைகுனிந்து நின்றாள். பிறகு நிலத்தை நோக்கிய வண்ணம் ஏதோ மிக மெதுவாகச் சொன்னதால் கௌதமிபுத்ரன் காதில் ஏதும் விழவில்லை. ஆனால் அந்த மனிதன் மீண்டும் இரைந்தான். “உன்னுடன் நான் அனுப்பியவர்கள் எங்கே?” என்று.

இம்முறை அவள் பதிலேதும் சொல்லவில்லை. ஆனால் அவனுக்குப் பதில் கிடைக்கவே செய்தது. கௌதமிபுத்ரனிட மிருந்து தப்பி ஓடிவிட்ட வீரன் பாறைகளிலிருந்து எழுந்து க்ஷத்ரபனை நோக்கி ஓடி அவன் கால்களில் விழுந்து ஏதோ சொன்னான். அதைக்கேட்ட க்ஷத்ரபன் அந்த வீரனைக் காலால் உதைக்க வீரன் சற்று எட்டப்போய் விழுந்தான். இனி தான் வாளாவிருப்பதில் பயனில்லை என்று முடிவு செய்த கௌதமிபுத்ரன் தனது புரவியைக் காலால் உதைத்த விநாடியில் இன்னொரு விபரீதம் நேர்ந்தது சித்தரஞ்சனியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். அந்த அறையால் துவண்டு விழப்போன அந்தக்கொடியை அந்தக் கொடியவன் கைகளால் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு தான் வந்த படகில் ஏற, படகோட்டி துரிதமாகப்படகைச் செலுத்தினான் வாசிஷ்டி நதியில்.

அதற்குமேல் தான் அந்த மனிதனைத் தொடருவதில் அர்த்தமில்லையென்பதை உணர்ந்துகொண்ட கௌதமிபுத்ரன், கரையில் நின்ற அந்த வீரனையாவது பிடிக்கலா மென்று எண்ணிய சமயத்தில் அந்த வீரனும் திடீரென வாசிஷ்டி நதியில் குதித்து மறைந்துவிடவே கௌதமிபுத்ரன் தீர்க்க சிந்தனையுடன் புரவியைத் திருப்பிக்கொண்டு நடந்தான். ‘எப்படியும் இந்த விடுகதைக்கு, ராட்சதத் தனத்துக்கு, பிசாசு நாடகத்துக்கு, நாளை விடை கண்டு பிடிக்கிறேன்’ என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டே புரவியைத் திருப்பிக்கொண்டு தாபிலேசுவரர் ஆலயத்துக்கு வந்து சேர்ந்தான். அப்பொழுது கிட்டத்தட்ட விடியும் சமயம் நெருங்கிக் கொண்டிருந்ததால் புரவியின் சேணத்தை நீக்கி அதை ஓட்டிவிட்டுத் தான்மட்டும் ஆலயத்திலிருந்து சிறிது தூரத்திலிருந்து அழகு பிசாசு நிற்கும் பாறையை நோக்கி நடந்தான். பாறைக்கு அருகில் வந்ததும் அதன் மீது குவியலாகக் கிடந்த புஷ்பங்களைக் கையால் தொட்டுப் பார்த்தான். அந்தக் காட்டு வாசமலர்களின் சுகந்தம் அவன் நாசியில் புகுந்து மயக்கவே, ‘இது அவள் குவித்த மலர்க் கூட்டம். அது சித்தத்தை மயக்குவதில் என்ன ஆச்சரியம்?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.

அந்தப் பாறையில் அவள் கால்கள் பட்ட இடங்களைத் தொட்டுப் பார்க்க எண்ணி அந்தப் பாறையின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அந்தப் புஷ்பக் குவியலை எடுத்து எடுத்து மலர்களை மடியில் போட்டுக்கொண்டான். புஷ்பங்கள் பூராவும் மடிக்கு வந்ததும் பாறையைக் கையொன்றால் தடவினான். சித்தரஞ்சனியின் கால்களையே தடவுவதுபோல், கைகளில் ஏதோ மழமழவென்று படவே கைகளைப்பார்த்தான். மடியின் மலர்கள் மீது விழுந்த நிலவு கைகளில் ஏதோ வழுவழுப்பான மஞ்சள் கறை பட்டிருப்பதைப் புலப்படுத்தவே உள்ளங்கைகளை முகர்ந் தான். வாசனை உணர்ச்சிகளை அள்ளவே சற்றுக்குனிந்து பாறையை உற்று நோக்கினான். பாறை மீது மகரந்தப் பொடியில் நன்றாக அழுத்தமாக இரண்டு சொற்கள் தெரிந்தன. “அபாயம்! ஓடிவிடு” என்று பொருள் கொள்ளக் கூடிய சொற்கள் மகரந்தப் பொடிகொண்டு வடமொழியில் தீட்டப்பட்டிருந்தன.

தீட்டியது சித்தரஞ்சனிதான் என்பதை கௌதமிபுத்ரன் சந்தேகமற உணர்ந்து கொண்டான். தன்மீது அவளுக்கு ஏதோ அன்பிருப்பதாகவும் நினைத்தான். பிறகு சற்று இரைந்து நகைத்தான். “இது புருஷனின் பலவீனம். எந்தப் பெண்ணும் தன்மீது காதல் கொள்வாள் என்ற பைத்தியம் ஆணுக்கு இருக்கிறது. இந்தச்செய்தியை அவள் ஏன் அனுதாபத்தால் எழுதியிருக்கக்கூடாது?’ என்றும் தன்னைக் கேட்டுக் கொண்டான். இருப்பினும் அவள் தன்மீது அன்பு கொண்டிருப்பதாகவே முடிவு செய்தான். அதற்கான காரணங்களையும் சிருஷ்டித்துக்கொள்ள முயன்றான். எனது கழுத்தைப் பிடித்த அவள் ஏன் என்னைக் கொல்லவில்லை? என் கால் தளைகளை ஏன் அவிழ்த்தாள்? நான் இறப்பதை அவள் விரும்பவில்லை?’ என்று கேள்வி கேட்டுப் பதிலும் சொல்லிக்கொண்டான். இந்தச் சிந்தனைகளுடன் அவன் மடியிலிருந்த மலர்களை அள்ளி மீண்டும் அந்தப் பாறைமீது குவித்தான். பிறகு எழுந்து தாபிலேசுவரர் ஆலயத்தை நோக்கி நடக்க முற்பட்டவன் சற்றுத் திரும்பி கடற்கரையை நோக்கி நடக்க முற்பட்டுத் தன்னைத் தாக்க முற்பட்ட வீரர்கள் இருந்த இடத்தை அடைந்தான். எந்த இடத்தில் தான் ஒருவனைக் கொன்று விட்டதாக நினைத்தானோ அந்த இடத்தில் ரத்தக்கறை தரையில் நன்றாகப் படிந்திருந்தது. தான் வீசிய கோடரியும் அருகே கிடந்தது. ஆனால் காயப்பட்ட மனிதனைக் காணவில்லை. அவனைத்தான் கொல்லவில்லை என்றும் அவன் பிழைத்துவிட்டானென்றும் தீர்மானித்துக் கோடரியை எடுத்துக்கொண்டு கோவிலை எய்தினான். அப்பொழுது பூர்ணமாகப் பொழுது புலர்ந்துவிட்டதால் வாசிஷ்டி நதியில் நீராடச் சென்று உடைகளைக் களைந்து தரையில் வைத்துவிட்டு நீரில் இறங்கி நீந்த முற்பட்டான். கைகளை மாற்றிப்போட முயன்ற சமயத்தில் அவன் மார்பில் கட்டையொன்று தாக்கவே அதன்மீது நீந்திக் கரைக்கு வந்து கட்டையை இழுத்துத் தரையில் போட்டான். அவன் இழுத்துப் போட்டது கட்டையல்ல, மனித உடல்!

Previous articleChittaranjani Ch4 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch6 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here