Home Chittaranjani Chittaranjani Ch6 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch6 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

80
0
Chittaranjani Ch6 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch6 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch6 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 6 வர்ணமெட்டு வேறு!

Chittaranjani Ch6 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

வாசிஷ்டி நதியில் நீராடப் போய், அதன் குளிர் நீரில் நீந்துகையில் கட்டையொன்று மார்பில் உந்த அந்தக் கட்டையின் மீதே நீந்திக்கரைக்கு வந்து அதை இழுத்துக்கரையில் போட்டதும் அது மனித உடல் என்பதை அறிந்ததால், அதிர்ச்சியையும், அருவருப்பையும் ஒருங்கே அடைந்த கௌதமிபுத்ர சதகர்ணி, தலைக்குழலிலிருந்தும், இடையில் உடுத்தியதுண்டிலிருந்தும் நீர் சொட்டச்சொட்ட நீண்ட நேரம் அந்த மனித உடலைப் பார்த்துக் கொண்டே நின்றான். அந்தச் சடலத்தின் கழுத்தில் ஆழ்ந்து வெட்டிக் குருதி வந்து உறைந்து போனதைப் பார்த்த அந்த வாலிபன், அந்தக் காயம் தனது கோடரியால் ஏற்பட்ட தென்பதையும், கழுத்திலிருந்து தலைக்கு ஓடும் நரம்பு வெட்டப்பட்டிருந்த தால் மரணம் மிகத் துரிதமாக ஏற்பட்டிருக்க வேண்டு மென்றும் நிர்ணயித்தான். அவ்விதம் இறந்தவன் யாரென்பதைத் தான் அறியக் கூடாது என்பதற்காகவே எதிரிகள் இந்தச் சடலத்தைப் பின்னால் இழுத்து வந்து வாசிஷ்டியில் தள்ளியிருக்க வேண்டுமென்றும், தனது கோடரியால் யாரும் இறக்கவில்லையென்பதைச் சுட்டிக்காட்டவே கோடரி மட்டும் தனித்து எடுத்துப் போடப்பட்டிருக்க வேண்டு மென்றும் ஊகித்தான். “ஆனால் ரத்தக் கறைகளை ஏன் அவர்கள் அகற்றவில்லை?” என்றொரு கேள்வியும் எழுப்பிக் கொண்ட கௌதமிபுத்ரன், ‘அந்த ரத்தக் கறையைப் பிசாசு விளைவித்ததாக நான் நினைக்க வேண்டுமென்று அந்த ராட்சஸ க்ஷத்ரபன் எண்ணியிருக்கலாம்’ என்று தனக்குச் சமாதானம் சொல்லிக் கொண்டான். இன்னொரு சந்தேகமும் ஏற்பட்டது சாதவாகன வாலிபனுக்கு. தாபோலுக்கு வந்த இரு வீரர்களில் ஒருவன் இறக்க இன்னொருவன் வாசிஷ்டி நதியில் குதித்து மறைந்துவிட வேறு யார் பிணத்தை எடுத் திருக்க முடியும் என்று தன்னைத்தானே வினவிக்கொண்டு, ‘நதியில் குதித்தவன் திரும்பி வந்து இந்த உடலை நதிக்கு இழுத்துச் சென்று மறைந்திருக்க வேண்டும்’ என்று பதிலும் சொல்லிக் கொண்டான். முந்திய இரவில் கடைசிப்பகுதியில் எத்தனை துரிதமாக இத்தனை காரியங்கள் நடந்திருக்கின்றன என்பதை எண்ணிப் பார்த்த கௌதமிபுத்ரன், பிசாசுக் கதையைக் கூடிய வரையில் நிரந்தரமாக வைத்திருக்கவே அந்தத் தில்லுமுல்லுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதையும், தான் ஒருவன் மட்டும் பிசாசுக் கதையை உடைத்தாலும் பெருவாரியான மக்கள் நம்பமாட்டார் களாதலால் அந்தப் பகுதியிலிருந்து ஓடிவிட்ட குடிமக்கள் திரும்புவது துர்லபம் என்பதையும் சந்தேகமறப் புரிந்து கொண்டான். அதைப்பற்றிச் சில விவரங்களை விசாரிக்கத் தீர்மானித்து சடலத்தை இழுத்துப் பாறைகளின் நடுவில் மறைத்துவிட்டு மீண்டும் நதியில் நீராடாமல் கடலில் நீராடித் தலைதுவட்டி உடல் துடைத்து ஈர ஆடைகளுடன் தாபிலேசு வரர் ஆலயத்துக்குச் சென்றான். அங்கு வைத்திருந்த தனது தோல்பையிலிருந்து மாற்றுடைகளை அணிந்து திலகம் தீட்டிக் கச்சையில் வாளும் கோடரியும் புனைத்துக்கொண்டு புரவியை அழைத்தான். புரவிக்குச் சேணமிட்டு ஏறிக் கொண்டு அதைப் பூஜாரியிருந்த கிராமத்தை நோக்கி நடக்க விட்டான்.

வழியெங்கும் அடர்ந்த பெரிய மரங்களும், புஷ்பச் செடிகளும் கொடிகளும் மலைப் பகுதியை அலங்கரித்ததையும், மலையை ஒட்டி வந்த கடல் அந்த மலையில் தாபிலேசுவரரும் சண்டிகாதேவியும் இருக்கிறார்களென்ற காரணத்தால் தனது திரைகளை மலைப்பாதைப் பாறைகளில் தாக்கி அர்ச்சனை செய்வதையும் பார்த்து, ‘இத்தகைய ரமணியமான புனித இடத்தை மனிதன் தனது சுயநலத்துக் காகவும், நாட்டாமைக்காகவும், எத்தனை பாழ் படுத்து கிறான்? ஈசனிருக்கும் புண்யபூமியைப் பிசாசு இருக்கும் இடமாக மாற்றிவிட முயலும் மனித மூளை கேடுகளை விளைவிக்க எத்தனை கூர்மையாக வேலை செய்கிறது?’ என்று சிந்தனையில் இறங்கித் துன்பப் பெருமூச்சும் விட்டான். இப்படிப் பற்பல எண்ணங்களுடன் பயணம் செய்த கௌதமிபுத்ரன் பூஜாரியின் குடிசையை அடைந்ததும், “பூஜாரி, பூஜாரி!” என்று இருமுறை குரல் கொடுத்ததும் பூஜாரி வெளியே வராததால் புரவியிலிருந்து இறங்கிக் குடிசைக்குள் நுழைந்தான். அங்கும் பூஜாரியைக்காணாததால் சுற்றுமுற்றும் மலைப்பகுதியிலும், மற்றக் குடிசைகளிலும் தேடினான். அவன் எங்கும் காணவில்லை என்று எண்ணித் திரும்ப முயன்ற சமயத்தில், சற்று எட்ட இருந்த புதரில் யாரோ முனகும் சப்தம் கேட்கவே அங்கு விரைந்து புதரை அகற்றிப் பார்த்தான். அந்தப் புதருக்குள் பூஜாரி நடுக்கத்துடன் படுத்துக்கிடந்தான். அவன் உடலில் ஓரிரு இடங்களில் ரத்தக் கறையும் இருந்தது. அவனருகில் உட்கார்ந்து அவன் உடலைப் பரிசோதித்த கௌதமிபுத்ரன் பூஜாரியின் உடலில் காயம் ஏதுமில்லாததைப் பார்த்துப் பூஜாரியைப் பயமுறுத்தவே இந்த ரத்தக்கறை பூசப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான்.

அந்த முடிவின் விளைவாகப் பூஜாரியை அகற்றி, “உம் எழுந்திரும், உமக்குக் காயம் ஏதுமில்லை ” என்று அழைத்தும் பூஜாரி மூடிய கண்ணைத் திறக்காமல், “இங்கிருந்து ஓடிவிடு, இன்றிரவு எப்படியும் பிசாசு உன்னையும் என்னையும் கொன்றுவிடும்” என்று உளறினார்.

“பயப்பட வேண்டாம் பெரியவரே! எழுந்திரும், நானிருக்கிறேன்” என்று தைரியம் சொன்னான் சாதவாகன வீரன்.

“உன்னால்தான் எல்லாம் வந்தது. நேற்றுக்கு முன்பு பிசாசின் தூதர்கள் யாரும் எனது குடிசைக்கு வந்ததில்லை” என்று நடுக்கத்துடன் சொன்னார் பூஜாரி.

“பிசாசுக்குத் தூதர்களா!” வியப்புடன் வினவினான் கௌதமிபுத்ரன்.

“ஆம்……ஆம்……ம்ம்……” குலை நடுக்கத்துடன் கூறினான் பூஜாரி.
“எப்பொழுது வந்தார்கள் உம்மிடம்?”

“நேற்றிரவு இரண்டாவது ஜாமத்தில்”

“எப்படியிருந்தார்கள்?”

“மனிதர்கள் மாதிரி”

“உம்… என்ன செய்தார்கள் உம்மை?”

“ஒரு பிசாசு தனது கையிலிருந்து ரத்தத்தை என் மீது பூசியது. இன்னொன்று இந்த ரத்த அடையாளத்துக்கும் பிறகு நீயும் உன் நண்பனும் இங்கிருந்தால் நாளை உங்கள் இருவரையும் கொன்று போடுவோம். இப்பொழுதே ஓடிவிடு என்று எச்சரித்தது. நான் உடனடியாக இங்கு வந்து மறைந்து கிடந்தேன்.”

“ஏன் மறைந்து கிடந்தீர்?”

“உன்னையும் அழைத்துப் போவதற்காக.”

“நான் வராவிட்டால்?”

“நான் மட்டும் போய்விடுகிறேன்.”

“எங்கு?”

“இங்கிருந்த அனைவரும் போயிருக்கும் எட்ட இருக்கும் கிராமங்களுக்கு.”

இதைக்கேட்ட கௌதமிபுத்ரன் மெல்லப் புன்முறுவல் கொண்டு, “பெரியவரே! நானில்லாமல் வேறு கிராமத்துக்குப் போனால் பிசாசு அங்கு வராதா?” என்று கேட்டான்.

“வரும்” என்று நடுங்கும் குரலில் சொன்னார் பூஜாரி.

“நான் இங்கிருந்து கிளம்பப் போவதில்லை. எதற்கும் நீராடி வாரும். தாபிலேசுவரருக்கு பூஜை செய்துவிட்டுப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிப்போம்” என்று சொல்லியும் பூஜாரி நகர மறுக்கவே, “பூஜாரி! நீராக நீராடி பூஜைப் பிரசாதத்துடன் வருகிறீரா அல்லது உம்மைக் கட்டித்தூக்கிப் போகட்டுமா?” என்று அதட்டினான்.

வேறு வழியில்லாமல் பூஜாரி தமகு குடிசைக்குப் பின்னா லிருந்து ஒரு கிணற்றில் நீராடினார். அவர் உடலிலிருந்த ரத்தக்கறைகளை கௌதமிபுத்ரன் துடைத்துவிட்டான். பூஜாரி நீராடி ஆசார உடை அணிந்து அடுப்பு மூட்டி நிவேதனப் பிரசாதம் தயாரித்து எடுத்துக்கொண்டு கௌதமிபுத்ரனுடன் கிளம்பினார். கௌதமிபுத்ரன் புரவியின் கழுத்தில் சேணத்தைச் சுற்றிவிட்டு பூஜாரியுடன் நடந்தே சென்றான். வழியில் பேச்சுக் கொடுத்துத் தைரியமும் சொன்னான். “பூஜாரி! தாபிலேசுவரருக்கு பூஜை செய்யும் உம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது. இங்கு பிசாசு எதுவும் கிடையாது. மனிதர்கள்தான் இந்த நாடகம் ஆடுகிறார்கள். ஆனால் பிசாசைவிட மனிதன் மிகக் கெட்டவன். பிசாசு எப்பொழுதாவது யாரையாவது கொல்லும். மனிதன் நாட்டுக்காகப் போர் செய்து பெரும்பான்மையோரைக் கொல்கிறான். நேற்று வந்தவர்கள் சாக வீரர்கள். அவர்களில் ஒருவனை நான் கொன்று விட்டேன். அவனை உமக்குக் காட்டுகிறேன்” என்று கூறினான்.

ஆனால் இத்தனைக்கும் பூஜாரி பதில் சொல்லவில்லை. பலிக்குச் செல்லும் ஆடுபோல் தாபிலேசுவரர் ஆலயத்துக்குக் கௌதமிபுத்ரனுடன் நடந்தார். அங்கு சென்றதும் வழக்கப்படி தாபிலேசுவரருக்கு அபிஷேகம் செய்து பிரசாத நிவேதனமும் செய்தார். பிறகு பிரசாதத்தைக் கௌதமிபுத்ரனுக்கு அளித்துத் தாமும் உண்டார்.

சுவாமி பிரசாதத்தை உண்டதாலோ அல்லது தெய்வ சந்நிதியிலிருக்கும் காரணத்தாலோ சிறிது அச்சம் நீங்கப் பெற்ற பூஜாரி நிதானமாகப் பேசலானார். “இங்கு நடமாடும் சித்தரஞ்சனிப் பிசாசும் மக்கள் சித்தப் பிரமையில் ஏற்பட்ட தல்ல. பலர் அதைப் பார்த்த பின்பு இங்கிருந்து ஓடி விட்டார்கள். சிலர் அதன் சங்கீதத்தைக் கேட்டு ஓடிவிட்டார்கள்…” என்று துவங்கியவரை இடைமறித்த கௌதமிபுத்ரன், “பிசாசின் சங்கீதம் அத்தனை மட்டமா?” என்று கேட்டான்.

“இல்லை, செவிக்கு இனியதுதான். ஆனால் பிராணனுக்கு அபாயத்தை விளைவித்திருக்கிறது. அதைக் கேட்ட ஓரிருவரை அந்த மோகினி கழுத்தைத் திருகிப்போட்டு விட்டது” என்றார் பூஜாரி.

“அப்படி இறந்தவர்களை நீர் பார்த்தீரா?” கௌதமிபுத்ரன் வினாவைத் திட்டமாகத் தொடுத்தான்.

“இல்லை.”

“எப்படி உமக்குத் தெரியும்?”

“கேள்விப்பட்டேன்.”

“கேள்வி ஞானமா?”

“ஆம்”

“அது அஞ்ஞானம் பெரியவரே! நமது மக்கள் கதை கட்டுவதிலும் வதந்தியைப் பரப்புவதிலும் கைதேர்ந்தவர்கள். அதை நம்பித்தான் சமுதாயம் கெட்டுப் போகிறது.”

இதற்குப்பதில் சொல்லவில்லை பூஜாரி. கௌதமிபுத்ரனும் பதிலை எதிர்பார்க்கவில்லை. பூஜாரியைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்று தான் பாறை களில் மறைத்திருந்த சடலத்தைக் காட்டினான். “இவன் உம்மைச் சந்தித்த பிசாசுகளில் ஒருவனா?” என்றும் விசாரித்தான்.

“ஆம்” என்று ஒப்புக்கொண்டார் பூஜாரி.

“உங்களைச் சந்தித்த பின்புதான் இவர்கள் என்னைச் சந்தித்தார்கள். ஒருவன் என் கோடரியால் இறந்தான். இன்னொருவன் ஓடிவிட்டான். பிசாசாயிருந்தால் கோடரியால் இறக்குமா?” என்று கேட்டான் பூஜாரியை நோக்கி.

பூஜாரிக்கு எதுவும் விளங்காவிட்டாலும் பிசாசு பயம் மட்டும் போகாததால், “சித்தரஞ்சனியைப் பற்றி என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார்.

“நல்ல அழகி” என்றான் வாலிபன்.

“அவள் சங்கீதம்?”

“சித்தத்தை மயக்குகிறது!”

“ஆம். மயக்கும். அதனால்தான் சித்தரஞ்சனி என்று பெயர்.”

”அதில் தவறில்லை” என்ற கௌதமிபுத்ரன். “பூஜாரி! அந்த மோகினிப்பிசாசை இன்னொரு ராட்சஸப் பிசாசிடமிருந்து நாம் காப்பாற்றப் போகிறோம்” என்று கூறினான்.

“நாம் என்றால்…?” என்று கேட்டார் பூஜாரி.

“நாம் இருவரும்” என்று பதில் சொன்ன கௌதமிபுத்ரன் மேலும் சொன்னான்: “பூஜாரி! இந்தப் பகுதியிலிருந்து மக்களெல்லாம் ஓடிவிட்ட பிறகும் உமது பரம்பரைக் கடமையை, தாபிலேசுவரர் பூஜையை நீர்கைவிட வில்லை, இனிமேலும் கைவிட அவசியமில்லை. இத்தனை நாள் உறுதியை இனி மேலும் கைவிடவேண்டாம். உம்மைக் காக்க நானிருக்கிறேன்” என்று தைரியம் சொன்னான்.

“பிசாசிடம் நீ என்ன செய்ய முடியும்?” என்று பூஜாரி கேட்டார்.

“பிசாசு என்னைக் காதலிக்கிறது” என்றான் கௌதமிபுத்ரன்.

“மோகினி அப்படித்தான் காதலிக்கும், பிறகு கழுத்தைப் பிடிக்கும்” என்றார் பூஜாரி நடுக்கத்துடன்.

“நேற்றிரவு பிடித்தது…”

“நினைத்தேன்.”

“ஆனால் என்னைக் கொல்லவில்லை.”

“ஏன்?”

“என்னிடம் காதலால்”

இதைக் கேட்டதும் ஏதுமே புரியாத பூஜாரி, “அடுத்து என்ன செய்ய உத்தேசம்?” என்று கேட்டார்.

“இன்றிரவு மோகினியைச் சந்திக்கப் போகிறேன்” இதை அழுத்தந்திருத்தமாகச் சொன்னான் சாதவாகனன்.

கௌதமிபுத்ரன் தைரியம் பூஜாரியின் அச்சத்தையும் ஓரளவு தவிர்த்திருக்கவேண்டும். “எப்படிப் பார்ப்பதாக உத்தேசம்?” என்று கேட்டார்.

பூஜாரி வியந்து பிரமித்துப் போகும்படியான திட்டத்தைச் சொன்னான் கௌதமிபுத்ரன். அந்த பயங்கரத்திட்டத்தைக் கேட்ட பூஜாரி நடுங்கினார். இருப்பினும் கௌதமிபுத்ரன் சொற்படியெல்லாம் கேட்டார். முதலில் கௌதமிபுத்ரன் சித்தரஞ்சனி செய்தி எழுதிவைத்த பாறையைக் காட்டினான். அதன் அருகில் உட்கார்ந்து பழைய செய்தி எழுதியிருந்த இடத்தில் மகரந்தப்பொடி கொண்டு தானும் ஒரு செய்தியை எழுதினான். “குகை வழியை மூடாதே” என்று இரு சொற்களைத் தீட்டினான் பாறையில். அந்தச் செய்திமீது புஷ்பங்களையும் குவித்தான்.

அந்த இரு சொற்களும் மந்திரம் என்பதை அன்றிரவு பூஜாரி புரிந்து கொண்டார். இரவு மூண்டதும் புரவியைப் பிணைக்காமல் காட்டுக்குள் துரத்திவிட்டு பூஜாரியுடன் எதிரேயிருந்த புதரில் மறைந்து கொண்டான் கௌதமிபுத்ரன். நள்ளிரவும் வந்தது. பிரமிக்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. சித்தரஞ்சனி வந்தாள். பாறையைப் பார்த்துக் குழப்பத்துடன் நின்றாள். பூக்குவியலைக் கலைத்தாள். லேசாக நகைத்தாள். பிறகு பாடினாள். அதே சித்தரஞ்சனி ராகம்தான். வர்ணமெட்டு மட்டும் வேறு.

Previous articleChittaranjani Ch5 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch7 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here